வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

கலித்தொகை - அறிமுகம்

ஆ.மணவழகன், இணைப் பேராசிரியர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 113. ஆகஸ்ட் 02, 2012.

 

எட்டுத்தொகை அக நூல்களுள் ஒன்று கலித்தொகை. இந்நூல், கலிப்பாவல் இயன்ற பாடல்களைக் கொண்டதும், துள்ளல் ஓசையால் பாடப்பெற்று பாவகையால் பெயர் பெற்றதுமாகும். கலித்தொகை காலத்தால் பிந்தியது என்பர். இந்நூலிலுள்ள ஐந்திணைகளைச் சார்ந்த 149 பாடல்களையும் ஐந்து புலவர்கள் பாடியுள்ளனர். நல்லந்துவனார் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியுள்ளார். புலவர்களின் பெயர்களும் பாடிய திணைகளும் பின்வருமாறு. 

பெருங்கடுங்கோன் பாலை, கபிலன் குறிஞ்சி,
மருதனிள நாகன் மருதம், - அருஞ்சோழன்
நல்லுருத்திரன் முல்லை, நல்லந்துவன் நெய்தல்
கல்விவலார் கண்ட கலி. 

குறிஞ்சித் திணைப் பாடல்கள்      – கபிலர்

முல்லைத் திணைப் பாடல்கள்     – சோழன் நல்லுருத்திரன்

மருதத் திணைப் பாடல்கள்         – மதுரை மருதனிளநாகனார்

நெய்தல் திணைப் பாடல்கள்       - நல்லந்துவனார்

பாலைத் திணைப் பாடல்கள்       - பெருங்கடுங்கோன் 

திணைக்குரிய பாடல்களின் எண்ணிக்கை 

குறிஞ்சிக்கலி                        - 30 பாடல்கள்  

முல்லைக்கலி                       - 16 பாடல்கள்

மருதக்கலி                          - 35 படல்கள்

நெய்தற்கலி                          - 33 பாடல்கள்

பாலைக்கலி                          - 35 பாடல்கள் 

        கலித்தொகை முழுமைக்கும் நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார். கலித்தொகையின் ஒவ்வொரு பாடலின் கீழும் அவ்வப் பாடலுக்குரிய கூற்று விளக்கம் பற்றிய பழைய குறிப்பு உள்ளது. மற்ற தொகை நூல்கள் அன்பின் ஐந்திணையை மட்டுமே பாடுகின்றன. அன்பின் ஐந்திணையுடன் கைக்கிளையையும் பெருந்திணையையும் பாடும் நூல் கலித்தொகை மட்டுமே. கலித்தொகையின் பாடல்கள் இருவர் உரையாடுவதைப் போன்ற நாடகத் தன்மையைப் பெற்றும், கதை சொல்லும் பாங்கிலும் அமைந்தவை. வழக்குச் சொற்கள் பலவற்றையும் இதனுள் காணலாம். இத்தொகை நூலில் நகைச்சுவைக் காட்சிகள் பல இடம்பெற்றுள்ளன. 

தமிழரின் வீர விளையாட்டான ஏறு தழுவுதலை அழகான காட்சிகளாகக் கலித்தொகையின் முல்லைக்கலி பாடல்கள் படம் பிடிக்கின்றன. இந்நூலில் பாண்டிய நாட்டைப் பற்றிய குறிப்புகள் மிகுதியும் காணப்படுகின்றன. மகாபாரதக் கதை நிகழ்ச்சியான அரக்கு மாளிகை தீப்பிடித்தல், பீமன் காப்பாற்றுதல், திரௌபதியின் கூந்தலை துச்சாதனன் பற்றியிழுத்தல், பீமன் வஞ்சினம், துரியன் தொடையை பீமன் முறித்தல் போன்ற பல செய்திகள் கலித்தொகையில் இடம்பெற்றுள்ளன. ‘காமன் வழிபாடு' பற்றியும் கலித்தொகை கூறுகிறது. இது பிற தொகைநூல்களில் இல்லாத ஒன்று. முருகனின் படைவீடுகள் பற்றிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ள. 

பாடல் சிறப்புகள்

தலைவனுடன் உடம்போக்குச் சென்ற தலைவியைத் தேடி செவிலித்தாய் செல்கிறாள். எங்கு தேடியும் தலைவியைக்  காணாமல் அலைந்து சோர்ந்து வழியில் வந்த சான்றோர்களை நோக்கி, எம்மகளைக் கண்டீர்களா எனக் கேட்டுப் புலம்புகிறாள். அப்பெரியோர்களோ ஓர் வீட்டில் பிறந்த பெண் வேறொரு வீட்டில் சென்று வாழும் உலக இயல்பையும், காதல் வாழ்வின் எதார்த்த நிலையையும் பின்வருமாறு உணர்த்துகின்றனர்.   

பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை

மலையுளே பிறப்பினும் மலைக்கு அவைதாம் என்செய்யும்

நினையுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கனையளே

சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை

நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதான் என்செய்யும்

தேருங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கனையளே

ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை

யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவைதான் என்செய்யும்

சூழுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே 

மலையிலே பிறக்கிறது சந்தனம். அச் சந்தனத்தால் மலைக்கு என்ன பயன்? அதைப் பூசிகொள்வோர்க்கு அல்லவா பயனைத் தருகிறது! கடலிலே பிறக்கிறது முத்து. அம்முத்தால் அக்கடலுக்கு என்ன பயன்? அது அணிபவர்க்கு அல்லவா அழகு தருகிறது! யாழிலே பிறக்கிறது இசை; அந்த இசையால் யாழுக்கு என்ன பயன்? அது கேட்பவர்க்கு அல்லவா இன்பத்தைத் தருகிறது! என்ற உலக உண்மையைக் காட்டி, தலைவியும் பருவம் அடைந்ததும் பிறத்த வீட்டைப் பிறிந்து வேறோர் இடத்தில் வாழ்க்கைப் படுவதே இயல்பு என்பதை அறிவுறுத்துகின்றனர். 

        அதேபோல, ‘கற்றறிந்தார் ஏத்தும் கலி என்று சிறப்பித்துச் சொல்லப்படும் கலித்தொகையில், மனித வாழ்க்கையின் உயர் விழுமியங்களாகக் கருதப்படும் ஆற்றுதல், போற்றுதல், அன்பு, பண்பு, அறிவு, செறிவு, நிறைவு, முறை, பொறை என்பனவற்றிக்கு அழகான விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருப்பது சிறப்பு. 

              ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தார்க்கு உதவுதல்
                போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை          

                பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகுதல்

                அன்பெனப் படுவது தன்கிளை செறாஅமை

                அறிவெனப் படுவது பேதையர் சொல்நோன்றல்

                செறிவெனப் படுவது கூறியது மறாஅமை

                நிறையெனப் படுவது மறைபிறர் அறியாமை

                முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்
                பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல் 

பதிப்புகள் 

    எட்டுத்தொகை நூல்களுள் முதன் முதல் பதிப்பிக்கப் பெற்ற நூல் கலித்தொகையேயாகும். சி. வை.தாமோதரனார் பதிப்பித்த இந்நூலில் நச்சினார்க்கினியர் உரையும் உள்ளது. இதைத்தொடர்ந்து இ.வை. அனந்தராமையரவருடைய பதிப்பு  மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ளது (1925). முதல் தொகுதியில் பாலைக்கலியும், குறிஞ்சிக்கலியும் (1925) இரண்டாம் தொகுதியில் மருதக்கலியும், முல்லைக்கலியும் (1925) வெளியிடப்பட்டுள்ளன. நெய்தற்கலியை மட்டும் 1931 இல் தனியாகப் பதிப்பித்து வெளியிட்டார். இவரே 1930இல் மூலத்தையும் பதிப்பித்துள்ளார். இவருடைய பதிப்பினைத் தஞ்சைத் தமிழ்ப்  பல்கலைக்கழகம் 1984இல் வெளியிட்டுள்ளது.  காழி. சிவ. கண்ணுசாமி, தமிழ்மலை இளவழகனாரின் முதற்பதிப்பு 1938இல் பாகனேரி காசி விசுவநாதன் செட்டியார் வெளியீடாக வந்துள்ளது. இவருடைய மறுபதிப்புகள் 1943, 1949, 1955, 1958, 1962, 1967 ஆகிய ஆண்டுகளில் வெளிவந்துள்ளன.  1937-இல் கை.ஆ.கனகசபாபதி முதலியார் அவர்கள் பாலைக்கலியினை வெளியிட்டுள்ளார். 1958இல் கலித்தொகை மூலமும் விளக்கமும்சக்திதாசன் அவர்களால் வெளியிடப்பட்டது. சைவசித்தாந்தக் கழக வெளியீட்டில் பொ.வே.சோமசுந்தரனாரின் உரை 1969 மற்றும் 1970இல் வெளிவந்துள்ளது. தற்போது மலிவு விலை பதிப்புகள் பல வெளிவந்துள்ளன.

பரிபாடல் – அறிமுகம்

 முனைவர் ஆ.மணவழகன், உதவிப் பேராசிரியர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை-113. மார்ச்சு 15, 2012.

 

எட்டுத்தொகை நூல்களுள் அகமும் புறமும் கலந்த நூல் பரிபாடல். எட்டுத்தொகை நூல்களைப் பட்டியலிடும் பழம்பாடல் இதனை ‘ஓங்கு பரிபாடல் என்று சுட்டுகிறது. இதனால் இதன் சிறப்பு விளங்கும். பரிந்து செல்லும் ஓசையுடைய பாக்களால் அமைந்த ஒருவகைச் செய்யுளே பரிபாடலாகும். அதாவது, வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களுக்கும், பலவகை அடிகளுக்கும் பரிந்து இடம் கொடுக்கும் பாட்டு என்று பொருள்படும். பரிபாடலின் இலக்கணத்தைக் குறிப்பிடும் தொல்காப்பியர், ‘அது நான்கு வகைப்பட்ட வெண்பா இலக்கணத்தை உடையது. ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா மருட்பா என்று கூறப்படும் எல்லாப் பாவினுடைய உறுப்புகளைப் பெற்று வரும்; அது காமப் பொருள் பற்றிப் பாடப்படும் என்கிறார். அதாவது, தமிழின் சிறந்த பாடல்களான அகப்பொருள் பாக்களைக் கலிப்பாவினாலும் பரிபாடலாலும் பாடவது வழக்கம் என்பது தொல்காப்பியர் கருத்து. 

ஆயினும் பரிபாடல் நூலில் முருகன் பற்றியும், திருமால் பற்றியும் இறையுணர்வுப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. எனவே தொல்காப்பியர் காலத்திற்குப் பிந்தைய வழக்கமாக இதனைக் கருதலாம்.  

பழம்பாடலொன்று,

                 திருமாற்கு இருநான்கு; செவ்வேட்கு முப்பத்

                தொரு பாட்டுக் காடுகிழாட் கொன்று – மருவினிய

                வையை இருபத்தாறு மாமதுரை நான்கென்ப

                செய்ய பரிபாடல் திறம்

என்று பரிபாடலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கையைப் பட்டியலிடுகிறது. இதில், திருமாலுக்கு எட்டுப் பாடல்களும், முருகனுக்கு முப்பத்தொரு பாடல்களும், காடுறை தெய்வமாகிய கொற்றவைக்கு ஒரு பாட்டும், வைகை ஆற்றுக்கு இருபத்தாறுப் பாடல்களும், மதுரைக்கு நான்கு பாடல்களுமாக எழுபது பாடல்கள் இருந்தன என்பது அறியப்படுகிறது. 

ஆனால் தற்போது இருப்பத்திரண்டு பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இவற்றுள் திருமாலைப் பற்றிய பாடல்கள் ஆறு (1, 2, 3, 4, 13, 15); முருகனைப் பற்றியப் பாடல்கள் எட்டு (5, 8, 9, 14, 17, 18, 19, 21); வைகையைப் பற்றிய பாடல்கள் எட்டு (6, 7, 10, 11, 12, 16, 20, 22). கிடைத்திருக்கும் இந்த 22 பாடல்களில் முதற் பாடலையும் இறுதிப் பாடலையும் பாடிய புலவர்கள் யாரென்று தெரியவில்லை. மீதமுள்ள 20 பாடல்களை 13 புலவர்கள் பாடியுள்ளனர். 

இதில், நல்லந்துவனார் நான்கு பாடல்களையும், கடுவன் இள எயினனார் மூன்று பாடல்களையும், குன்றம் பூதனார் மற்றும் நல்லழுசியார் ஆகியோர் தலா இரண்டு பாடல்களையும் பாடியுள்ளனர். இளம்பெருவழுதியார், கரும்பிள்ளைப் பூதனார், கீரந்தையார், கேசவனார், நப்பண்ணனார், நல்லச்சுதனார், நல்லெழுனியார், நல்வழுதியார், மையோடக் கோவனார் ஆகியோர் தலா ஒரு பாடல் பாடியுள்ளனர். 

பரிபாடலில் உள்ள ஒவ்வொரு செய்யுளின் இறுதியிலும் துறை, இயற்றிய ஆசிரியர் பெயர், இசை வகுத்தோர் பெயர், பண்ணின் பெயர்  போன்ற குறிப்புகள் உள்ளன. ஆனால்முதல் பாடலுக்கும் 22ஆம் பாடலுக்கும் இக்குறிப்புகள் தெளிவாக இல்லை. மேலும் முதல் பாடலில் 14 முதல் 28ஆம் அடிவரை உள்ள பகுதி தெளிவின்றி உள்ளது. பரிபாடலின் சிற்றெல்லை 25 அடிகளென்றும் பேரெல்லை 400 அடிகளென்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. 

நூற்சிறப்பு 

பரிபாடலில் உள்ள பாடல்கள் அனைத்தும் மதுரையையும் பாண்டிய நாட்டையும் அதன் வளத்தையும், முருகன், திருமால் ஆகியோரின் சிறப்புகளையும், இருப்பையும், வையை ஆற்றையுமே பாடுகின்றன. 

இசை பொருந்திய பாடல்களே பரிபாடல். பிற்காலத்தில் திவ்வியப் பிரபந்த நூல்கள் தோன்றக் காரணமானவை பரிபாடல்களே என்பர். 

முருகப் பெருமானின் தோற்றத்தை பற்றி இந்நூல் கூறும் செய்தி குறிப்பிடத்தக்கது. 

சிறந்த உவமைகள், சிறந்த தொடர்கள், சிறந்த கருத்துகள் போன்றவை இந்நூலிற்கு இலக்கியச் சுவை கூட்டுவன. 

இந்நூலின் உரையாசிரியர் பரிமேலழகர் என்பது இதன் கூடுதல் சிறப்பு. 

ஐம்பூதங்கள் மற்றும் உலகத்தின் தோற்றம்

பரிபாடலின் செய்யுளொன்று, ஐம்பூதங்களின் தோற்றம், உலகின் தோற்றம் பற்றி அறிவியல் அடிப்படையில் எடுத்தியம்புகிறது. இது பண்டைத் தமிழரின் அறிவு நுட்பத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. பாடல் வருமாறு. 

தொல்முறை இயற்கையின் மதியொ....
... ... ... ... ... ... ... ...
மரபிற்று ஆக.
 
பசும் பொன்னுலகமும் மண்ணும் பாழ்பட,
விசும்பில் ஊழி ஊழ்ஊழ் செல்ல,
கரு வளர் வானத்து இசையின் தோன்றி,
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும்;
செந் தீச் சுடரிய ஊழியும்; பனியொடு
தண் பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு,
மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும் (பரி.2;1-12)

        இப்பாடலில், பழங்காலம் தொட்டு ஒன்றுக்கு ஒன்று மாறிவரும் இயல்புடைய திங்கள் மண்டிலமும் ஞாயிற்று மண்டிலமும் அழிந்திட்டதால், அழகற்ற இயல்பை உடையதாய் மாறியதோடு, தன்னிடமிருந்த வான் உலகும் நிலவுலகும் பாழ்பட்டு ஒழிந்தன. ஒழிய, அந்த வானமும் இல்லையாய் ஒழிந்தன. இந்நிலையில் ஊழிகள் முறைமுறையே பல கழிந்தன. 

        ஊழிகள் பல கழிந்த பின்பு, மூல அணுவிலிருந்து தன் குணமான ஒலியுடன் தோன்றி, காற்று முதலான மற்ற பூதங்களின் நுண் அணுக்கள் வளர்தற்கு இடமாகி, எத்தகைய வடிவமும் காணப்படாத வானத்தின் முதல் ஊழிக்காலமும், அந்த வானத்தினின்று பொருள்களை இயக்கும் காற்று தோன்றி வீசிய முறைமுறையான இரண்டாம் பூதத்து ஊழியும், அந்தக் காற்றினின்று சிவந்த தீயானது தோன்றிச் சுடர்வீசித் திகழ்ந்த மூன்றாம் பூதத்து ஊழியும், அத்தீயினின்று நீர் தோன்றிப் பனியும், குளிர்ந்த மழையும் பெய்த நான்காம் பூதத்து ஊழியும், அந்த நான்கு பூத அணுக்களினூடே பின்னர் பண்டு முறையாக வெள்ளத்தில் முழுகிக் கரைந்து, அழிந்த நில அணுக்கள் அங்கு இருந்து மீண்டும் தம் சிறப்பான ஆற்றல் மிக்குச் செறிந்து, திரண்டு முன் சொல்லப்பட்ட நான்கு பூதங்களின் உள்ளீடாகக் கொண்ட ஐந்தாவது பெரிய நிலத்து ஊழியும் என்று ஐம்பூதங்கள் ஒன்றிலிருந்து ஒன்றும், அவற்றின் வழி உலகமும் தோன்றின என்று அண்டத்தின் மாற்றமும், ஐம்பூதங்களின் தோற்றமும், உலகின் உருவாக்கமும் விவரிக்கப்பட்டுள்ளன். 

        அதேபோல,

                      செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு

                        தண்பெயல் தலைஇய ஊழியும் (பரி.2.5,6) 

என்பதில், உலகம் உருண்டை வடிவினது; அது மாபெரும் நெருப்புக்கோளமான சூரியனிலிருந்து தெறித்து விழுந்த அனற்பிழம்பு; நெருப்பு உருண்டையாக ஒரு ஊழிக்காலம் விண்ணில் சுழன்று கொண்டிருந்தது; நாளடைவில் மேற்பகுதி வெப்பம் குறைந்து பனிப்படலமாகப் படிய ஒரு ஊழிக்காலம் எடுத்துக்கொண்டது. அதன்பின் பனி உருகி நீராக மாற, தரைப்பகுதி தலைதூக்க, அதில் உயிரினங்கள் உருவாகலாயின என்று உலகத்தின் உயிரனத் தோற்ற (பரிணாம) வரலாற்றையே திருக்குறள்போல, ஒன்றேமுக்கால் அடிகளில் கூறியுள்ளது பரிபாடல் என்பர் இன்றைய அறிவியலாளர். 

*****

பதிற்றுப்பத்து - அறிமுகம்

 ஆ. மணவழகன், உதவிப் பேராசிரியர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை-600113.  பிப்ரவரி 20, 2012.

சங்க இலக்கிய நூற்தொகுப்பான எட்டுத்தொகையின் புறம் சார்ந்த நூல்களுள் ஒன்று பதிற்றுப்பத்து. இது சேர அரசர்களைப் பற்றி மட்டுமே பாடக்கூடிய சிறப்பினைக் கொண்டது. இதில், பத்து சேர அரசர்களைப் பற்றிப் பத்துப் பத்துப் பாடல்களாக நூறு பாடல்கள் பாடப்பட்டுள்ளன. பதிற்றுப்பத்தின் கடின நடை காரணமாக இலக்கிய ஆசிரியர்கள் இதனை ‘இரும்புக்கோட்டை’ என்று வழங்குவர்.

அமைப்பு முறை

பத்து சேர மன்னர்களைப் பற்றிப் பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பத்துப் பாக்களின் தொகுப்பு ‘பதிற்றுப்பத்து’ எனப்படுகிறது (பத்துப்பத்து=பதிற்றுப்பத்து). இதிலுள்ள ஒவ்வொரு பத்தும் முதல் பத்து, இரண்டாம் பத்து என எண்ணால் பெயரிட்டு வழங்கப்படுகிறது. பத்துப் பத்தாகப் பிரிக்கப்பட்டுள்ள இவற்றில் முதல் பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. எனவே எண்பது பாடல்கள் மட்டுமே பதிப்பிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் பத்து முதல் ஒன்பதாம் பத்து வரை பாடிய புலரும், பாடப்பட்ட மன்னனும் பின் வருமாறு:

 

பத்து

பாடிய புலவர்

பாடப்பட்ட மன்னன்

2

குமட்டூர் கண்ணனார்

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்

3

பாலைக் கௌதமனார்

பல்யானைச் செல்கெழுகுட்டுவன்

4

காப்பியாற்றுக் காப்பியனார்

களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல்

5

பரணர்

கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்

6

காக்கைப் பாடினியார்

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

7

கபிலர்

செல்வக்கடுங்கோ வாழியாதன்

8

அரிசில்கிழால்

தகடூர் எறிந்த பெருஞ்சேரலாதன்

9

பெருங்குன்றூர்க்கிழார்

இளஞ்சேரலிரும்பொறை

 

நூல் சிறப்புகள்

சங்க இலக்கிய எட்டுத்தொகையுள் புறநானூறு மற்றும் பதிற்றுப்பத்து இரண்டும் புறநூல்களாக இருந்தாலும் சேர அரச பரம்பரையை மட்டுமே பாடும் புறநூல் பதிற்றுப்பத்து மட்டுமே. சங்க இலக்கியத்தில் வேறு எந்த நூலும் இதுபோல் ஒரு அரச பரம்பரையைக் கால முறைப்படி பாடவில்லை. எனவே பதிற்றுப்பத்து ஒரு வரலாற்றுப் பெட்டகமாகத் திகழ்கிறது.

ஒவ்வொரு பாட்டிற்கும் அப்பாட்டில் அமைந்த சிறந்த தொடர் ஒன்றே தலைப்பாக அமைந்துள்ளது. எ.கா. தசும்புதுளங்கு இருக்கை, சுடர்வீ வேங்கை, ஏறா ஏணி, நோய்தபு நோன்றொடை என்பன.

ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் ஆசிரியர் பெயர், பாட்டுடைத் தலைவன், பாட்டுடைத் தலைவனின் சிறப்புகள், பாடல் ஆசிரியருக்கு மன்னன் வழங்கிய பரிசில்கள், செய்வித்த சிறப்புகள் போன்ற வரலாற்றுச் செய்திகளைச் சொல்லக்கூடிய பதிகம்இடம்பெற்றுள்ளது.

 

புலவர்களுக்குச் செய்யப்பட்ட சிறப்புகளும் வழங்கப்பட்ட பரிசில்களும்

          பதிற்றுப்பத்து பாடிய புலவர்கள்களுக்குச் செய்யப்பட்ட சிறப்புகள் வியப்பில் ஆழ்த்துவன. சங்க இலக்கியத்தில் பதிற்றுப்பத்து தவிர வேறு எவ்விலக்கியம் பாடிய  புலவருக்கும் இத்தகைய உயர் சிறப்பு செய்யப்பட்தை அறிய முடியவில்லை.

            இரண்டாம் பத்து பாடிய குமட்டூர் கண்ணனாருக்கு, உம்பர் காட்டு ஐந்நூறு ஊர்களையும், முப்பத்தெட்டு ஆண்டுகள் தென்னாட்டு வருவாயில் பாதியையும் பரிசிலாக வழங்கியிருக்கிறான் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். மூன்றாம் பத்து  பாடிய பாலைக் கௌதமனாருக்கு, அவர் விரும்பிய வண்ணம் பத்துப் பெருவேள்விகள் செய்து அவர்தம் மனைவியுடன் விண்ணுலகம் புக வழி செய்திருக்கிறான் பல்யானைச் செல்கெழுகுட்டுவன். நான்காம் பத்து பாடிய காப்பியாற்றுக் காப்பியனாருக்கு, நாற்பது நூறாயிரம் பொன், மற்றும் ஆளுவதில் பாதியையும் கொடுத்திருக்கிறான் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல். ஐந்தாம் பத்து பாடிய பரணருக்கு, உம்பற்காட்டு வருவாயோடு தன் மகன் குட்டுவன் சேரலையும் பரிசாக வழங்கியிருக்கிறான் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன். ஆறாம் பத்து பாடிய காக்கைப்பாடினியாருக்கு. ஒன்பது துலாம் பொன் மற்றும் நூறாயிரம் பொற்காசுகளைப் பரிசாக வழங்கியிருக்கிறான் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன். ஏழாம் பத்து பாடிய கபிலருக்கு, நூறாயிரம் பொற்காசுகள் மற்றும் நன்றா என்னும் குன்றில் நின்று கண்ணுக்கெட்டிய தூரம்வரை எடுத்துக்கொள்ளச் சொல்லியிருக்கிறான் செல்வக் கடுங்கோவாழியாதன். எட்டாம் பத்து பாடிய அரிசில்கிழாருக்கு, ஒன்பது நூறாயிரம் பொன்னும் அரசு கட்டிலும் வழங்கியிருக்கிறான் தகடூரெறிந்த பெருச்சேலரிரும்பொறை. ஒன்பதாம் பத்து பாடிய பெருங்குன்றூர் கிழாருக்கு 32,000 பொற்காசுகள், ஊரும் மனையும் ஏரும் பிறவும், அருங்கலன்கள் பன்னூறாராயிருமும் வழங்கியிருக்கிறான் இளங்சேரல் இரும்பொறை. 

பாடல்

   பதிற்றுப்பத்தின் பாடல் சிறப்புகளுக்குக் கபிலரின் பாடல் ஒன்று இங்கு எடுத்துக்காட்டாகக் கொடுக்கப்படுகிறது. தன் நண்பனான பாரி இறந்தபின்னர் சேர அரசனைக் காண அவனுடைய பாசறைக்குச் செல்கிறார் கபிலர். அங்கு அவனைக் கண்டு பாடிய பாடல்கள் பதிற்றுப்பத்தின் ஏழாம்பத்தாக இடம்பெற்றுள்ளன.   

கபிலர், பெரு வேந்தனைக் காணச் செல்லும் போதும் சிற்றரசனான தன் நண்பனின் வீரம், கொடைதன்மை போன்ற சிறப்புகளையும் அவன் நாட்டின் வளத்தையும் பெருமைபட பேசுகிறார். மேலும், ‘என் அரசன் இறந்துவிட்டான் அதனால் என்னைக் காப்பாயாக என்று இரந்து நிற்க உன்னிடத்தில் வரவில்லை, பரிசில் பெறுவதற்காக உன் புகழை மிகைப்படுத்தியோ குறைத்தோ கூற மாட்டேன்’ என்றும் கூறுகிறார். கபிலர் பேரரசனின் முன்னால் இப்படிக் கூறுவது அவர் உள்ளத்தின் தன்மையையும்,  புலவர்களின் சிறப்பையும் உணர்த்துவதாக உள்ளது. புலாம் அம் பாசறை (புலால் நாற்றும் வீசும் பாசறை) எனும் தலைப்பில் அமைந்த அப்பாடல் வருமாறு.

             பலாம்அம் பழுத்த பசும்புண் அரியல்

            வாடைதூக்கு நாடுகெழு பெருவிறல்

            ஓவத்தன்ன வினைபுனை நல்லில்

            பாவை அன்ன நல்லோள் கணவன்

            பொன்னின் அன்ன பூவிற் சிறியிலைப்

            புன்கால் உன்னத்துப் பகைவன் எங்கோ

            புலர்ந்த சாந்தின் புலரா ஈகை

            மலர்ந்த மார்பின் மாவண்பாரி

            முழவுமண் புலரஇரவலர் இனைய

            வாராச் சேட்புலம் படர்ந்தோன் அளிக்கென

            இரக்கு வாரேன் எஞ்சிக் கூறேன்

            ஈத்ததிரங்கான் ஈத்தொறு மகிழான்

            ஈத்தொறு மாவள்ளியன் என நுவலுநின்

            நல்லிசை தரவந்திசினே - ஔ¢வாள்

            உரவுக்களிற்றுப் புலாஅம் பாசறை

            நிலவின் அன்னவௌ¢ வேல்பாடினி

            முழவில் போக்கிய வெண் கை

            விழவின் அன்னநின் கலிமகிழானே

                                                -ஏழாம் பத்து, கபிலர்

பொருள்

     பலா மரத்திலே பழுத்து வெடித்த பழத்தின் வெடிப்பிலிருந்து ஒழுகும் சாற்றை வாடைக்காற்று எடுத்து எங்கும் தூற்றும் பறம்பு நாடு. அந்நாட்டில் தொன்றியவன் ஆற்றல் படைத்தவன். அவன் ஓவியத்தில் வரையப்பட்டதுபோன்ற அழகும் நல்ல இல்லில் இருக்கும் பாவை போன்ற நலமும் உடையவளின் கணவன். பொன்னிற மலரையும் சிறிய இலைகளையும் அழகற்ற அடியையும் உடைய உன்ன மரத்துக்குப் பகைவன். அவன் எம் மன்னன் பாரி. பூசி உலர்ந்த சந்தனத்தை அணித்த மார்பையும் ஈகையால் பெரிய வள்ளல் தன்மையையும் உடையவன். முழவில் (இசைக்கருவி) பூசிய மண் உலர்ந்து போகவும், ஈபவர் இல்லாமையால் இரவலர் வருந்தவும், மீண்டு வரவியலாத மேல் உலகத்துக்குச் சென்றான் அவன் (இறந்துவிட்டான்).

            ஒளியுடைய வாளையும் வலிமையுடைய களிறுகளையும் உடைய புலால் நாற்றம் வீசும் பாசறை. அதில், நிலவின் ஒளியைப் போன்று வெண்மையான ஒளியை வீசும் வேல்படையைப் புகழ்ந்து தாளத்திற்கேற்ப பாடுவாள் பாடினி. அதனால் விழாக்கோலம் போல் காணப்படும் அந்நாளில், ‘எம்மைப் போற்றிக் காத்துவந்த பாரிவள்ளல் இறந்தான், ஆதலால் எம்மை ஆதரிப்பாயாகஎன்று யாசிப்பை மேற்கொண்டு உன்னிடத்தில் நான் வரவில்லை. நின் புகழைக் குறைவாகவும் மிகுதியாகவும் கூறமாட்டேன். செல்வக் கடுங்கோ வாழியாதன் ஈவதால் ஏற்படும் பொருள் செலவு குறித்து உள்ளம் வருந்தமாட்டான்; இடைவிடாமல் ஈவதால் வரும் புகழ் குறித்து மகிழவும் மாட்டான்; ஈயும் போதெல்லாம் பெரிய வள்ளன்மை உடையவன்என்று உலகோர் கூறும் நின் நல்ல புகழ் எம்மை நின்னிடம் ஈர்த்தது. அதனால் உன்னைக் காணவே வந்தேன். 

பதிற்றுப்பத்து உரைகள்

பதிற்றுப்பத்தைப் பழைய உரையோடு  சேர்த்து முதன்முதலாக உ.வே.சா. அவர்கள் 1920இல் பதிப்பித்து வெளியிட்டார். இதன் மறு பதிப்புகள் பல வந்துள்ளன. உ.வே.சா.வை அடுத்து ஔவை சு.துரைசாமிப் பிள்ளை 1950இல் பதிப்பித்தார். இவ் உரையும் பல பதிப்புகள் வெளிவந்துள்ளது. உரை இன்றி மூலத்தை மட்டும் 1957இல் மர்ரே பதிப்பகத்தார் வெளியிட்டனர். ஈழத்துப் புலவர் அருளம்பலனாரின் ஆராய்ச்சி உரையுடன் கூடிய பதிப்பு 1960இல் ஈழத்தில் வெளியிடப்பட்டது. இதன் இரண்டாம் பாகம் 1963இல் வெளியிடப்பட்டது. புலியூர்க் கேசிகனின் தெளிவுரை 1974இல் வெளிவந்தது. இதுவும் பல பதிப்புகள் கண்டது. அதன் பின்னர் இன்றளவும் எண்ணற்ற உரைகள் வெளிவந்தவண்ணம் உள்ளன.