வியாழன், 13 ஆகஸ்ட், 2020

பயன்பாட்டு நோக்கில் கணினித் தமிழ்

 முனைவர் ஆ.மணவழகன், முனைவர் பட்ட ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை – 113.

(தமிழ் இணையம் - 2004, சிங்கப்பூர், திசம்பர் 11,12,2004.)

      ஒவ்வொரு காலகட்டத்திலும்  ஒவ்வொரு ஊடகத்தின்  வழி தமிழ் தம் பயணத்தை இனிதே மேற்கொண்டுள்ளது. தமிழர்களின் 'பொற்காலம்' என்று சான்றோர்களால் போற்றப்படக்கூடிய சங்ககாலம் தவிர்த்த ஏனைய எக்காலத்திற்கும் இத்தன்மை பொருந்துவதாகும். தர்க்கத்தின் தோளேறியும், சமயத்தின் தோளேறியும் காலத்தைக் கடந்துவந்துள்ளது தமிழ். இன்றைய காலகட்டமோ, ‘'நாளும் இன்னிசையால் நல்ல தமிழ் வளர்ப்போம்' என்ற நிலை மாறி, நாளும் இணையத்தால் இணைந்து தமிழ் வளர்ப்போம்' என்ற நிலை இன்று உருவாகியுள்ளது.

            ஒரு சமூகத்தின் பண்பாட்டு மேன்மையை, நாகரிக வளர்ச்சியைக் காட்டுவது அச்சமூகத்தின் மொழி என்றால், அம்மொழியின் பண்பாட்டை, நாகரிகத்தைக் காட்டுவது அதன் மரபுக்கட்டும், புதுமையை ஏற்கும் நெகிழ்வுமே! இத்தகைய தன்மைகளே தமிழை ஊடகத்தின் மொழியாக உயர்த்தியுள்ளது.  ஊடகம் என்பதை கணினி என்று கொண்டால், இன்று தமிழின் பயணம்  இணையத்தில் எனலாம்.

     இணையத்தில் தமிழை இயக்க எவருடைய முன்அனுமதியும் தேவையில்லை. அதனாலேயே நாளும் புற்றீசல்போல் இணையத்தில் தமிழ்ப் பக்கங்கள் தோன்றியவண்ணம் உள்ளன.  இந்நிலை தமிழின் எதிர்காலத்திற்கு வளம் சேர்க்கும் என்றாலும், கணினி மொழிநடை, மொழியின் தன்மை, பயன்பாட்டு நிறைவு - நிறைவின்மை, ஆவணமாக்கலின் தேவை ஆகியவை கண்காணிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. காரணம், இணையப் பக்கங்களை உருவாக்க எந்தவொரு கட்டுப்பாடோ, விதிமுறையோ இதுவரை இல்லாமையே! இந்நிலையில்,  தமிழ் இணைய பக்கங்களைத் தணிக்கை செய்வதும், இணைய பக்கங்களை ஒரு வரம்பிற்குள் கொண்டுவருவதும் மொழி வளத்தினைப் பாதுகாக்க மேற்கொள்ளவேண்டிய இன்றியமையாத செயல்களாகின்றன.

      மேற்கண்ட நோக்கத்தின் அடிப்படையில் அமைக்கப்படும் இக்கட்டுரையானது, கணினித்தமிழ், இணையப் பக்கங்களும் இலக்கியப் பகுதிகளும், கணினி மொழிநடை, பயன்பாட்டு நிறைவு - நிறைவின்மை, ஆவணமாக்கலின் தேவை, முடிவு என்ற பகுதிகளைக் கொண்டதாக அமைக்கப்படுகிறது.

      இவற்றில், கணினித்தமிழ் என்ற பகுதியில், கணினியும் தமிழும், தமிழ் இணையப்பக்கங்கள், மொழியின் நெகிழ்வுத்தன்மை போன்றவை நோக்கப்படுகின்றன. இணையத்தமிழ் இதழ்கள் என்ற பகுதியில், இணையத்தமிழ் இதழ்கள் சுட்டப்பட்டு அதன் தன்மை, வெளிப்பாட்டு உத்தி முறைகள், பெருக்கம், உள்ளடக்கம், பயன் - பயனின்மை ஆகியவை நோக்கப்படுகின்றன. இலக்கியப்பகுதிகள் என்ற தலைப்பு, இணையப் பக்கங்களில் இலக்கியச் சேவைக்கான இடம், பயனாளர் சேவைக்கான வெளிப்பாட்டு உத்தி, வகைப்பாடு, புதிய நடை போன்றவை சுட்டப்படுகின்றன.  கணினி மொழிநடை என்ற பகுதி, இணையத்தில் தகவல் வெளிப்பாட்டு உத்திமுறை, மொழியின் நெகிழ்வுத்தன்மை, நடை, ஊடகத்திற்கான மொழியின் கட்டமைப்பில் பாதிப்பு, போன்றவை நோக்கப்படுகின்றன.  பயன்பாட்டு நிறைவு - நிறைவின்மை என்பதில் அறிமுகமின்மை, தேடல் பிரச்சனைகள், எழுத்துரு சிக்கல்கள் போன்றவை எடுத்தாளப்படுகின்றன.  ஆவணமாக்கல் என்பதில் இலக்கியங்கள் கணினிமயமாதல் என்ற நிலையில் இருந்து, இணையத்தின் தமிழ்ப்பகுதிகள் ஆவணமாதலின்(அச்சு வடிவம்) தேவை சுட்டப்படுகிறது.

கணினித் தமிழ்

   ‘ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றினை உடைய தொல்காப்பியம் பேசப்படுவதுபோல் அதன் பின்பு தோன்றிய எந்தத் தமிழ் இலக்கணமும் பேசப்படவில்லை.’ இதுவே தொல்காப்பியத்தின் பெருமை என்போர் உளர்.  இந்தனை ஆண்டுகால பழமைவாய்ந்த இலக்கணமே இன்னும் பயன்பாட்டில் உள்ளது என்றால் தமிழ்மொழியில் புதிய புதிய சொற்கள் தோன்றவில்லை, மொழி வளர்ச்சியடையவில்லை என்போரும் உளர். இவ்விரு  கருத்துகளையுமே நாம் இன்று சிந்தித்தல் நலம். ஆனால், உண்மை என்னவெனில் தொல்காப்பியத்தில் கடினமான இலக்கணக் கூறுகளும் உள்ளன. அதே வேளையில் நெகிழ்ந்து கொடுக்கக்கூடிய பகுதிகளும் உள்ளன. நெகிழ்ந்து கொடுக்கக்கூடிய அந்தப் பகுதிகளில் உள்நுழைந்து நிலைபெறுபவையே பிறமொழிச் சொற்களும், தமிழில் தோன்றும் புதிய புதிய சொற்களும். அந்த நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையே ‘அறிவியல் தமிழ்’ உருவாகவும், அறிவியல் தமிழின் ஒரு பகுதியாகத் தோன்றி, இன்று தனியொரு பகுதியாக அசுர வளர்ச்சிக் கண்டிருக்கும் ‘கணினித் தமிழ்’ என்பதாகும்.

            அறிவியல் தமிழை நான்காம் தமிழ் என்றால், கணினித் தமிழை ‘ஐந்தாம் தமிழ்’ என்றே வழங்கலாம். சென்னை, அண்ணாபல்கலைக் கழகத்தில் இயங்கும் ‘ இந்திய மொழிகளுக்கானத் தொழில்நுட்பத் தீர்வு வளமையம் - தமிழ்’ என்ற அமைப்பு, தம்முடைய முத்திரையில்  ‘கணினித் தமிழால் காலத்தை வெல்வோம்’ என்று பொறித்துள்ளமை இங்குச் சுட்டத்தக்கது.  எழுத நினைக்கும் அனைவருக்கும் இருக்கை அமைத்துக் கொடுக்கும் இணையத்தின் இதயத்தால் இவ்வளர்ச்சி இன்று எட்டப்பட்டுள்ளது. ‘தமிழின் எதிர்காலத்தை, தமிழரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க கூடிய ஒரு மாபெரும் சக்தியாக இன்றைய நிலையில் இணையம்  உருப்பெற்று வருகிறது. தமிழின் செம்மொழி ஆக்கத்திற்கு இவ்வகைத் தன்மைகளும் ஒருவகை காரணம் எனலாம்.

இணைய பக்கங்களும் இலக்கியப் பகுதிகளும்

      இணையத்தில் இன்று எண்ணிடலங்கா தமிழ் இணைய இதழ்கள் தோன்றியுள்ளன. ஆங்கிலத்திற்கு அடுத்த நிலையில் தமிழில்தான் அதிக இணையப் பக்கங்கள் வெளிவந்துள்ளன என்பது தமிழிற்குப் பெருமை சேர்க்கும் செய்தியாகும்.   அம்பலம், இன்தாம், திண்ணை, ஆறாம்திணை, திசைகள், பதிவுகள், மதுரை மின் திட்டம், அமுதசுரபி, தமிழ்மணம், தெட்ஸ்தமிழ், களஞ்சியம், தமிழருவி, வார்ப்பு, வானவில், தமிழன் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இவற்றில், அமுதசுரபி போற்றவை அச்சு வடிவிலும் வெளிவருகின்றன. (இங்கு, வெகுசனப் பத்திரிகைகளாக செயல்பட்டுக்கொண்டு  இணையம் ஏறியவை சுட்டப்படவும், இக்கட்டுரைக்குக் களமாகவும் தேர்வு செய்யப்படவில்லை.) இவற்றில் பெரும்பான்மையானவை இலக்கியத்திற்கென்று தனிப்பகுதியை ஒதுக்கியுள்ளன. இப்பகுதியில், கவிதை,  சிறுகதை போன்றவற்றை வெளியிட்டு வருகின்றன. பழந்தமிழ் இலக்கியங்களை மட்டுமே வெளியிடும் பக்கங்களும் உள்ளன (களஞ்சியம் போன்றவை) சில பக்கங்கள் கவிதைத் தொகுப்பையும் வெளியிடுகின்றன. சோதனை  முயற்சியாக சில பக்கங்கள் நாவல்களையும் (பா.ராகவன்- அலகிலா விளையாட்டு) வெளியிடுகின்றன. இப்போக்கு  தமிழ் இணையபக்கங்களின் படிநிலை வளர்ச்சியினையும், பன்முக நீட்சியினையும் காட்டுவதாக அமைகிறது.

வெளிப்பாட்டு உத்திமுறை

     இணைய பக்கங்களின்  இலக்கியப் பகுதிகளில் பெரும்பான்மையானவை வெளிப்பாட்டு உத்திமுறைகளைப் பெரிதும் கையாள்வதில்லை என்பது உண்மை. இணையம் என்பது மிகச்சிறந்த ஊடகம், பத்திரிகைகளின் வெளிப்பாட்டு உத்திமுறைகளைவிட இணையத்தில் வெளிப்பாட்டு உத்திமுறை மேம்பாடுடையதாக அமைதல் வேண்டும். அதற்கான வாய்ப்புகளும் இணையத்தில் அதிகம். வெளிப்பாட்டு உத்திமுறைகள் என்பதை இரண்டு வகையாகப் பிரிக்கலாம், ஒன்று உட்பொருள் உருவாக்கம் (content) மற்றொன்று, வெளிப்பாட்டு  வடிவம் இந்த இரண்டிலும் கையாளப்படும் உத்தி முறைகளைக் கொண்டே இணையத்தில் இலக்கியப் பகுதிகளின் பயன் பயனின்மை சீர்தூக்கப்படுகிறது. ஆனால், இவ்விருவகை உத்திகளும் இணைந்திருப்பது அரிதிற்காணக்கூடிய ஒன்றாகவே உள்ளது. காரணம், இணையபக்கங்களின் வடிவமைப்பாளர்கள் கணினி வல்லுநர்களாக இருந்தும், உட்பொருள் உருவாக்கத்தில்(content creation)  தமிழரிஞர்களின் பங்கு அவ்வளவாக இல்லாமையே.  தற்போதைய நிலையில், உட்பொருள் உருவாக்கத்தில் முனைந்திருப்போர் பெரும்பாலும் தமிழ் ஆர்வலர்களும், கணினியோடு தொடர்புடையவர்களுமே அன்றி தமிழரிஞர்கள் இல்லை என்பதே உண்மை. மேலும், இணையத்தில் வெளியிடப்படும் சில கட்டுரைகள், இலக்கியப்பகுதிகள் பத்திரிகைக்காக எழுதப்பட்டு அதிலிருந்து எடுத்தாளப்படுபவையே அன்றி, இணையத்திற்காக எழுதப்படுபவை அல்ல.

            மேலும், இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள பல்வகை பழந்தமிழ் இலக்கியங்களுக்குச் சரியான வரையறை இன்மையும், அதாவது, வைப்புமுறையில் ஒழுங்கின்மை,  இணையத்தில் கொடுக்கப்படும் இலக்கியத்தின் அறிமுகம், பதிப்பு ஆண்டு, ஆசிரியர், உரையாசியர் பற்றியக் குறிப்பு போன்ற எத்தகவலும் இல்லாமையும் ஆகும். இவ்வகைச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதும், இவ்வகை குறைபாடுகளைத் தீர்ப்பதும் இணைய பக்கங்களின் தரத்தினை உறுதிப்படுத்துவதாகவும், மொழி வளத்தினைப் பேணுவதாவும்  அமையும்.

கணினி மொழிநடை

       எழுத்தாளர்கள் என்று அடையாளம் காணப்படாத,  எழுதும் திறமையைப் பெற்ற  பலரும் இணையத்தின் வரவால், வரவேற்பால், தங்கள் படைப்புகளை, சிந்தனைகளை, அனுபவங்களைத் தடையின்றி பிறரோடு பகிர்ந்துகொள்கிறார்கள். இந்நிலை வரவேற்கத்தக்க  ஒன்றேயாகும். அதே வேளையில்,  இணைய பக்கங்களுக்கு எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாதிருப்பதால் மொழியின் வளமையில் சீர்கேட்டை உண்டாக்கும்  சூழலும் இன்று உருவாகியிருக்கிறது என்பதையும் நாம் மறுத்தல் கூடாது.

        தமிழ் மொழியானது காலந்தோறும் பல போராட்டங்களை எதிர்கொண்டே வளர்ந்து வந்துள்ளது. வடமொழியின் தாக்கத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள பலமுறை போராடியுள்ளதை வரலாறு சுட்டும். ஆனால், இன்று வடமொழி மட்டுமல்லாது, ஆங்கிலம், உருது எனப் பல உலக மொழிகளின் பல்முனைத் தாக்குதலுக்குத்  தமிழ் ஆளாகியுள்ளது. இந்நிலைக்கு இணையமும் ஒருவகையில் காரணமாக அமைகிறது. உலகின் பல பகுதிகளிலும் இருந்து இணையம் இயக்கப்பட்டு, அவற்றிற்கு உள்ளீடு வழங்கப்பட்டு வெளிவரும் வேளையில், சாறோடு சக்கைகளும் கலந்து விடுவதே இந்நிலைக்குக் காரணம்.

      இங்கு, ‘இணையம் என்பதை கட்டற்ற சுதந்திரம் உள்ள ஒரு பிராந்தியமாகப் பார்க்கிறார்கள். அதுவும் அபாயம்தான். சுதந்திரம் என்பதே நமக்கான வேலிகளை வேண்டிய தூரத்தில் தள்ளி வைத்துக்கொள்வதுதான். ஆனால் வேலியென்று ஒன்று இருந்தே தீரவேண்டும்.(பா.ராகவன். தெட்ஸ்தமிழ்.காம்) என்ற கருத்தை நோக்குதல் தேவையாகிறது. இணைய பக்கங்களின் எல்லைகள் வரைமுறைப்படுத்தப்பட்டால், ஒரே கட்டுரையில், ‘ஸ்திரிகள், புருஷர்கள், லஷ்ணம், ஒருவள், க்ஷேமம், கேந்திரம், தூஷனை, அபிசேஷகம், விசேஷ, ப்ரபாவம், ரஸம், ஸ்ரேஷ்டமாக, சாஸ்திரங்கள், பூஜை, பஜனை, வஸ்திரங்கள், கைங்கர்யம்’ (கட்டுரை-அலங்காரம் பார்க்க மட்டுமா கோயிலுக்கு, தமிழர்பக்கம்.காம்) போன்ற இத்துனை பிறமொழிச் சொற்களின் தாக்கத்தினை தவிர்க்கலாம். தமிழில் வெளியிடப்படும் கட்டுரைக்கு ஆங்கிலத்திலேயே பெயர் வைக்கும் அவல நிலையினையும் தவிர்க்கலாம்.

      மேலும், தமிழர்களின் மரபினையும் பண்பாட்டினையும் பதிவுசெய்யக்கூடிய நாட்டுப்புறக் கலைகள் போன்றவற்றை இணையத்தில் ஏற்றும்பொழுது, கரகாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம் , மஞ்சுவிரட்டு போன்ற பண்பாட்டுக் கூறுகளைத் திரைப்படங்களில் இருந்து எடுத்துச் செறுகும் வெளிப்பாட்டு உத்திமுறையைத் தவிர்த்தல் நலம். இவ்வகையானபோக்கு,  உலகிற்கு,  தமிழரின் முகத்தை விட்டுவிட்டு முகம்பார்க்கும் ஆடியை மட்டும் காட்டும் சிறிய செயலாகிவிடும். இவ்வகைச் சிறிய செயல்களில் பெரிய பணியில்  ஈடுபட்டிருக்கும் சில இணைய பக்கங்களும் ஈடுபடுவது தவிர்க்கப்படவேண்டிய ஒன்றாகும்.

பயன்பாட்டு நிறைவு - நிறைவின்மை

      இணையமானது அரசியல், ஆன்மீகம், கல்வி, தொழில்நுட்பம், பொருளாதாரம், இலக்கியம் என்ற எல்லா நிகழ்வுகளையும் தன்னுள் பதிவு செய்கிறது. இப்பதிவு உலகில் எந்த மூலையில் இருப்போரும் எளிதில் பார்க்கக்கூடியது. அதேவேளையில், இணையத்தின் இப்பயன்பாடு சென்று சேர வேண்டிய அனையவருக்கும் சேர்கிறதா? என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். தமிழ் இணையபக்கங்களின் பயனை இரு வகைகளில் சுட்டலாம். ஒன்று, பயனாளரைச் சார்ந்தது. மற்றொன்று, இணையத்தில் இருக்கும் தகவலைச் சார்ந்தது. அன்றைய நிகழ்வு முதல், அரிய நிகழ்வு வரை அனைத்தையும் அலசும் இணையமானது அதைப் பயன்படுத்தும் ஒரு பகுதியினர்க்கு மட்டுமே அதன் பயனைத் தருகிறது. உண்மையில் இப்பயனை அடையவேண்டிய ஒருபகுதியினர் இணையத்தின் இத்தகைய செயல்பாட்டினையே உணராமல் இருப்பது சிந்திக்கத்தக்கது. இணையத்தை வடிவமைப்போர் பெரும்பாலும் கணினி வல்லுநர்களே. இணையத்தைப் பயன்படுத்துவர் பெரும்பாலும் வெளிநாட்டு வாழ் தமிழர்களே. ஆக, இலக்கியப் பகுதிகளின் பயன் தமிழ் ஆர்வலர்களில் ஒரு பகுதியினர்க்கும், கணினியைக் கையாளும் வாய்ப்புள்ளவர்களுக்குமே சென்று சேர்கிறது என்பது சிந்தனையில் கொள்ளவேண்டிய ஒன்றாகும்.

             மற்றொன்று கணினி மொழிநடை. தேவையான தணிக்கை இல்லாமல், சுயகட்டுப்பாடு இல்லாமலும், எண்ணியதைத் தனக்குள்ளே மறுபரிசீலனை செய்யாமலும் வெளியிடப்படும் பல உள்ளீடுகள் குப்பைகளாக சேமிக்கப்பட்டு, இணையத்தில் இடத்தை மட்டுமே நிரப்புகின்றன. இவை பயனாளரின் நேரத்தை வீணடிக்கின்றனவே அல்லாமல் வேறொருபயனையும் கொடுத்தல் இல்லை.

            மேலும், பழந்தமிழ் இலக்கியங்கள் போன்றவற்றை உள்ளீடு செய்யும்போது, ஆசிரியர், பதிப்பு, உரையாசிரியர் பற்றிய குறிப்பு எதுவும் இல்லாமை, சில நூல்களின் மூலம் மட்டும் வழங்குதல்,  இலக்கியப் பகுப்பு(கால அடிப்டை) இல்லாமை போன்றவை பயனாளருக்கு மருட்சியைத் தோற்றுவிப்பதாக அமைகிறதே அன்றி பயன்பாட்டு நிறைவாக அமையவில்லை. இதற்குக் காரணம் தமிழ் அறிஞர்கள் அல்லாதவர்களும் தமக்குக் கிடைத்து நூலினை எந்த ஒரு ஆய்வுக்கண்கொண்டும் பார்க்காமல் அப்படியே வலையேற்றுவதுதான். அதே வேளையில் சில இணையபக்கங்கள், அன்றாட நிகழ்ச்சிகளை வழங்குவதில் நாளிதழ்களையும் விஞ்சிவிட்டன என்பதை மறுத்தல் இயலாது. இவற்றின் பயன் அளவிடற்கரியது.

   பயன்பாட்டின் நிறைவின்மைக்கு மற்றொரு காரணமாக காணக்கிடைப்பது, இணையப்பக்கங்களின் முகவரி அறியப்படாமையும், எந்த இணையபக்கத்தில் எவ்வகை தகவல்கள் கிடைக்கின்றன என்பன போன்ற தகவல்கள் அறிய தேவையான வழிமுறைகள் இல்லாமையுமாகும். இவ்வகைக் குறுபாடுகள் நீக்கப்படும் வேளையில் இணைய பக்கங்களின் பயன்பாடும் மிகவும் போற்றுதலுக்குரியதாகும்  என்பதில் ஐயமில்லை.

ஆவணமாக்கலின் தேவை

            நாளது நிகழ்ச்சிகள் முதல் அத்துனையும் தம்முள் கொண்டு விளங்குகிறது இணையம். பல நுண்கலைகள் பற்றிய கட்டுரைகளும் , அறிவியல் சார்ந்த செய்திகளும், விவாதங்களும், புத்தக மதிப்புரைகளும், நிகழ்ச்சிகளின் தொகுப்புகளும் இணையத்தில் வெளிந்தவண்ணம் உள்ளன. இவைபோன்ற பயன்தரு தகவல்களை இணையத்திலிருந்து  இறக்குமதி செய்து அவற்றை நூலாக்கி ஆவணப்படுத்துதல் காலத்தின் தேவையாகிறது. இணையத்தைப் பயன்படுத்த வாய்ப்பில்லாதவர்களுக்கும் இம்முறை மிகுந்த பயனளிப்பதாக அமையும்.

            மேலும், ஏராளமான இணைய எழுத்தாளர்கள் வெளியுலகம் அறியாமமே உள்ளனர். அவர்களை இனங்காட்டுவதும் இன்றியமையாததாகும். உலகத் தமிழர்களுக்கு இவர்கள் நன்கு அறிமுகமாகி இருந்தும், தமிழ்நாட்டில் இவர்களின் முகங்களுக்கு இன்னும் முகவரி எழுதப்படவில்லை. இவர்களைப் போன்றவர்களை இனங்கண்டு ஊக்குவிப்பது தமிழின் வேருக்கு நீரூற்றுவது போன்றதாகும். கவிதை மட்டுமின்றி, இலக்கியத்தின் அத்தனைக் கூறுகளையும் இவர்கள் ஆட்கொள்கின்றனர. ஆனால், அதன் பயன் இணையத்தோடு இயங்குபவர்களுக்கு மட்டுமே என்பது  ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாக உள்ளது. இணையத்தில் வெளிவரும் சிறந்த கவிதைகள், கதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் போன்றவற்றை நூல்வடிவிலேற்றி அனைவருக்கும் எட்டச் செய்தல்  தேவையாகிறது.

 

முடிவுரை

    இணைய இதழ்களையும், இணையம் தொடர்பான கட்டுரைகளையும் ஆய்ந்து எழுதப்பட்ட இக்கட்டுரையானது, கணினித் தமிழின் பயன்பாட்டு நோக்கில் மொழி வளத்தின் எதிர்காலம் கருதி, கீழ்க்கண்ட  சில ஆலோசனைகளையும் முடிவுகளையும் முன்னிறுத்துகிறது.

Ø  தமிழ் இணைய பக்கத்தின் ஆக்கத்திலும் செயல்பாட்டிலும்  தமிழறிஞர்கள் மற்றும் கணினி வல்லுநர்களின் இணைவை வலியுறுத்துதல்

Ø  இணைய பக்கங்களின் வெளியிடப்படும் குறிப்பிட்ட தகவல்களைத்  தணிக்கைப் படுத்துதல்

Ø  கணினி மொழிநடை மொழியின் சீர்மையைப் பாதிக்காதவகையில் கையாள்வதை  வலியுறுத்துதல்.

Ø  இணையதள ஒருங்கிணைப்பு தளத்தினை ஏற்படுத்துதல். அதில், இணையதளம் தொடங்குமுன் பதிவு செய்தல்,  தமிழ் இணைய பக்கங்கள் பற்றிய அகரவரிசை பட்டியலை உள்ளீடுசெய்தல், பட்டியலிலுள்ள இணைய பக்கங்களின் உள்ளீட்டுத் தகவல்களின் குறிப்புகளைக் கொடுத்தல் ஒவ்வொரு பக்கமும் பயன்படுத்தும்  எழுத்துரு பற்றிய விவரங்களைக் கொடுத்தல்.

Ø  தரப்படுத்தப்பட்ட எழுத்துருவை எல்லா இணைய பக்கங்களும் பயன்படுத்த  வழிவகை செய்தல்.

Ø  அச்சு ஊடகத்திருந்து சற்றே மாறுபட்ட உட்பொருள் அமைப்பையும், வெளிப்பாட்டு உத்திமுறையையும்  கணினிமொழி கையாள வலியுறுத்தல்

Ø  பயன்பாட்டு நோக்கில் சில குறிப்பிட்ட தகவல்களை இணையத்திலிருந்து இறக்குமதி செய்து அவற்றை நூலாக்கம் செய்ய வழிவகுத்தல்.