வியாழன், 13 ஆகஸ்ட், 2020

சமூகத் தொலைநோக்கு அன்றும்-இன்றும்

 

சமூகத் தொலைநோக்கு அன்றும்-இன்றும்

(ஐங்குறுநூறு - இந்தியா 2020)

.மணவழகன், முனைவர் பட்ட ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

(இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், 34-ஆம் கருத்தரங்கம், பொன்னையா இராமஜெயம் கல்லூரி, தஞ்சாவூர், மே 24-25, 2003)

ஆய்வின் நோக்கம்

தொலைநோக்கு என்பதுதனி ஒருவருக்கோ, ஒரு குழுவிற்கோ, ஒரு இனத்திற்கோ, ஒரு சமூகத்திற்கோ, ஒரு நாட்டிற்கோ என்றில்லாமல், எல்லா நாட்டினர்க்கும், எல்லா மதத்தவர்க்கும், எல்லா இனத்தவர்க்கும் பொதுவானதாக, உகந்ததாக, ஏற்றுக்கொள்ளக் கூடியதாக அமைவது. உலக உயிர்கள் அனைத்தும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கையே  மையமாகக்  கொண்டது.

சமூகத் தொலைநோக்கு பற்றிய சிந்தனை தனி ஒருவருக்குச் சொந்தமானாலும், அதன் பயன் உலகிற்கே பொதுவானதாக அமைகிறது.  ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்'(புறம்.192)  என்ற கணியன் பூங்குன்றனாரின் சிந்தனையையும், ‘நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்'(புறம்.195)  என்ற நரிவெரூஉத்தலையாரின் சிந்தனையையும் இதற்குச் சான்று கூறலாம்.

தொலைநோக்கு என்பதற்கு இன்றும் எதிர்காலத்திலும் அமைகின்ற அரசாங்கங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தேசத்தின் பகுதி என்றே பொருள்'(.30)  என்கிறார் டாக்டர் அப்துல் கலாம். மேலும் அவரே, சமூகத்தொலைநோக்கின் இன்றியமையாமையைக் குறிப்பிடும் போது, ‘ஒரு தீர்க்கமான தொலைநோக்குப் பார்வை இல்லாத எந்த ஒரு நிறுவனமோ, சமுதாயமோ அல்லது தேசமோ என்றாலும் கூட திக்குத் தெரியாத கடல் நடுவே பொங்கியெழும் அலைகள் மத்தியில் இலக்கு இன்றித் தவிக்கும் கப்பல் போன்றது. தேசிய தொலைநோக்கு பற்றிய தெளிவே மக்களைக் குறிக்கோள் நோக்கி உந்துவிக்கும் சக்தி ஆகும்’(.28) என்கிறார். ஆக, தொலைநோக்கு என்பது சமுதாயத்தின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாகிறது.

இப்படி, காலத்தின் கட்டாயத்தால் எங்கோ  சிலருக்கு அரிதாகத் தோன்றும் சமுதாயத் தொலைநோக்கு  பற்றிய சிந்தனைகள் சங்க இலக்கியங்களில் எவ்வாறு இடம்பெற்றுள்ளனஎன்பதையும்அப்படியாயின்அச்சிந்தனைகள் இன்றைய சமூகத் தொலைநோக்கு பற்றிய சிந்தனைகளோடு எவ்வகையிலேனும் இயைந்து போகின்றனவா? என்பதையும் காண விழைவதே இவ்வாய்வின் நோக்கமாகும். இதற்கான ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நூல்கள், சங்க இலக்கியத்தில் 'ஐங்குறுநூறும்',  தற்காலத்தில் எழுந்துள்ள அப்துல் கலாமின்  'இந்தியா 2020'  என்ற நூலுமாகும்.

வறுமை இல்லா உலகம்

                         ‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

                          கெடுக உலகியற்றி யான் (குறள்-1062)

பசி, பிணி, இல்லாத உலகைக் காண நம் முன்னோர் விரும்பினர். எல்லா உயிர்க்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதில் பேரவா கொண்டிருந்தனர். ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவள்ளலாரைப் போலதனி ஒருவனுக்கு உணவில்லையெனில் சகத்தினை அழித்திடத்துணிந்த பாரதியைப் போல, வறுமைக்கு வறுமை வரவேண்டும் என்று எண்ணம் கொண்டவர் பலர். ஆனால் இன்றுவரை வறுமை ஒழிந்ததா? என்றால்அதற்கு, ‘மனித சமுதாயத்தின் மற்றொரு முக்கிய பகுதி - மக்களின் வறுமைக் காட்சி’(.21) என்ற  அப்துல் கலாமின் வரிகைளையும், ‘இந்தியாவில் 100கோடி மக்கள் உள்ளனர். அதே நேரத்தில் பசியில் வாடும் மக்களும் உலகிலேயே இங்குதான் மிக அதிக அளவில் உள்ளனர்.’-1 என்ற புள்ளி விவரத்தினையும்தான் விடையாகக் கூறவேண்டும். வறுமை இன்றுவரை ஒழிக்கப்படமுடியாத ஒன்றாக நம்முன் உருவெடுத்துள்ளது.

நாம் பெற்ற பெருவளம் எல்லோரும் பெறவேண்டும் என்ற நோக்கோடு சிந்திப்பது ஒருவகை. பெரும்பாலோர் பெற்றுவிட்ட ஒன்றினை  நாமும் பெறவேண்டும் என்று ஆவல் கொள்வது மற்றொரு வகை. முந்தையதைச் சங்ககாலத்திற்கும், பிந்தையதைத் தற்போதைய நிலைக்கும் பொருத்திப்பார்க்கலாம். ஆனால் இரண்டின் நோக்கமும் வறுமையற்ற சமூதாயத்தை எதிர்நோக்கியதே.

உலகில் அனைத்து தீய செயல்களுக்கும் காரணமாக அமைவது வறுமையே. வறுமையே பசிக்கும், பிணிக்கும் தாயாகிறது. அதுவே சமூதாயத்தில் தீய செயல்களுக்கு வழிவகுக்கிறது. ஆக, ஒரு நாடு சிறந்தோங்க, மக்கள் நல்வாழ்வு வாழ, பசி, பிணியை இல்லாது செய்தல் வேண்டும். இந்த உண்மையைத்தான்,

பசியில் ஆகுக பிணிசே ணீங்குக(பா.5)

என்கிறது  ஐங்குறுநூறு.

இதையேஇந்தியா 2020 நூலின் ஆசிரியரும், ‘நம் உடன்பிறந்த இலட்சோப இலட்சம் சகோதர, சகோதரிமார் வறுமையில் வாடி வதங்குவதை இனிமேலும் நாம் அனுமதிக்க மாட்டோம். 2010ஆம் ஆண்டுக்குள் நம் நாட்டில் வறுமை அடியோடு அகற்றப்பட வேண்டும்’(.62) என்று முன்மொழிகிறார். மேலும் அவரே,

நடுத்தர மக்களின் வறுமையை ஒழிப்பதிலும், இந்தியர் அனைவருக்கும் கணிசமான சமுதாய பொருளாதார, வாய்ப்புகள் வழங்குதலும், அவர்தம்  வாழ்க்கைக்குரிய போதிய பாதுகாப்பு அளிப்பதுமே இன்று நம் முன் எதிர் நிற்கும் மிக முக்கியப் பிரச்சனை’(.67) என்றும், நம்முடைய  பிரச்சினையைத் தெளிவாக்குகிறார்.

உலகில் பசுமைப் புரட்சி தோன்றிய காலத்தில் நாம் சற்று விலகி இருந்துவிட்டதன் விளைவே, இன்று பட்டினிச் சாவுகளைப் பார்க்கும் அவல நிலைக்குச் சமுதாயம் தள்ளப்பட்டதுஆம், வறுமை ஒழிய நாம் எடுக்க வேண்டிய முதல் ஆயுதம் வேளாண்உற்பத்தியே. இதோ, அதற்கான அடிக்கல்லை,

                     ‘விளைக வயலே(பா.2)

                    'நெற்பல பொலிக'(பா.1)

என்ற அடிகளில் நாட்டுகிறது ஐங்குறுநூறு.

வேளாண் உற்பத்தியைப் பெருக்கினால், மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையானதாகிய  உணவுத்தட்டுப்பாடு ஒழிந்து போகும்.

முதல் ஆயுதத்தை எறிந்தாயிற்று, அடுத்து எடுக்கும் ஆயுதம்  'தொழில்நுட்பம்' தானே. பொருளாதார மேம்பாட்டின் முதல் படி தொழில்நுட்பமேஇதைத்தான்,

                        'பொன் பெரிது சிறக்க'(பா.1)

என்கிறது  ஐங்குறுநூறு. ' பொன் பெரிது சிறக்க' என்பதை, நாட்டில் பொருளாதாரம் தழைத்தோங்க வேண்டும் என்பதாகவும்உலோகவியல் தயாரிப்பு நுட்பங்களில் வளர்ச்சியடைய வேண்டும் என்பதாகவும் கொள்ளலாம். தொழில்நுட்ப வளர்ச்சியே ஒரு நாட்டினைப் பொருளாதாரத்தில் வளர்ந்த நாடாக மாற்றும் என்பதில் ஐயமில்லை. மேலே கூறப்பட்ட வேளாண் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய இரண்டு துறைகளின் முக்கியத்துவத்தையே, 'வேளாண் பிரிவு' மற்றும் 'தயாரிப்பு நுட்பப் பிரிவு' ஆகிய இரண்டு துறை வலிமையின் அடிப்படையில்தான் மற்ற துறைகளின் முன்னேற்றம் அமைந்துள்ளது'(.220) என்கிறார் இந்தியா 2020 நூலின் ஆசிரியர்.

அதுமட்டுமன்றுதயாரிப்பு நுட்பத்தினை வேளாண்மைத் துறையிலும் கூடநம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர். கரும்பைப் பிழிந்து சாறு எடுக்க இயந்திரத்தைப் பயன்படுத்தி வந்தனர் என்ற உண்மையை,

                        'கரும்பின் எந்திரம் களிற்றெதிர் பிளிற்றும்'(பா.55)

என்ற ஐங்குறுநூற்று அடி  உணர்த்துகிறது.

            பகைமை இல்லா உலகம்

                     'உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

                      சேராது இயல்வது நாடு'(குறள்-734)

ஒரு சமுதாயம் வளமானதாக உருமாறபசி, பிணி நீங்கவேண்டும். அடுத்து பகையில்லாத சமுதாயத்தைப் படைக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து ஏவப்படுவதை வெளிநாட்டுப் பகையென்றால், பசியும், பிணியுமே உள்நாட்டுப் பகையாகும்.

ஒரு நாடு, அண்டை நாடுகளுடன் பகைமைப் போக்கைக் கையாண்டால், அந்நாட்டு மக்கள் நிம்மதியான வாழ்வினைக் கனவில்தான் வாழ்ந்தாக வேண்டும். எப்போதும் ஒரு அச்ச  உணர்வே அவர்களிடம் விஞ்சி நிற்கும்.     மேலும், நாட்டின் வருவாயின்  பெரும்பகுதியை நாட்டின் பாதுகாப்பிற்குச் செலவிட்டுவிட்டால், ஒரு  நாட்டின் பொருளாதாரம் எப்படி மேம்படும? இன்றைய நிலையில் ஒவ்வொரு நாடும் தம் வருவாயில் மூன்றில் இரண்டு பங்கைப் பாதுகாப்பு வலிமையைப் பெருக்கிக் கொள்ளச் செலவிடுகிறது என்பது தானே உண்மை. இந்நிலைமை உலக அமைதிக்கு உகந்தது அல்லவே. இந்நிலை மாற என்ன செய்யவேண்டும்? இதோ  ஐங்குறுநூறு அதற்கான தீர்வாக,

                         'வேந்து பகை தணிக' (பா.6)

என்பதைச் சுட்டுகிறது.

ஆம், பகை உணர்வே அனைத்து அழிவிற்கும் காரணமாக அமைகிறது. பகை தணிந்தால் உலகம் அமைதிப் பூங்காவாகத் திகழும் என்பதில் ஐயமில்லை. இந்த அடிப்படையில்தான்,  'வளமான, ஒளிமயமான இந்தியாவை உருவாக்க ஆரம்பக்கல்வி, வறுமை ஒழிப்பு, 'ஆன்மீகப் பாதையை நோக்கி மதங்கள் செல்லுதல்' இந்த மூன்றும் கட்டாயம் '-2  என்கிறார்  அப்துல் கலாம். பகைமை எண்ணத்தை மனதில் இருந்து விரட்ட ஆன்மீகம் அடிப்படையாகிறது என்பது இவரின் கருத்து.

            அரசின் கடமை

                        'முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

                        இறையென்று வைக்கப் படும்' (குறள்.388)

ஒரு நாட்டில் எல்லா வளங்களும் இருந்தும், பசி, பிணியை மக்கள் அனுபவித்திடாத போதும், பகையில்லாத வாழ்வினை மக்கள் வாழ்ந்தும், அரசு சக்கரம் முறையின்றி சுழன்றால், அந்நாட்டு மக்கள் நரகத்தில் வாழ்வதைப் போலத்தான் உணர்வர். மக்களின் தேவைகளை, அவர்கள் உணர்வுகளைப் புரிந்துமுறைசெய்து காப்பதே நல்லரசாக அமையும்அரசு மக்களின் தேவைகளை உணர்ந்து செயலாற்றாத நிலையில்,  அவரவர் தேவைகளை அவரவர் வழியில் பெற முயல்வர். இந்நிலையே சமுதாயச் சீர்கேட்டின் தொடக்கம் எனலாம். திருட்டு, கொலை போன்ற குற்றங்கள் இந்நிலையில்தான் துளிர்விட ஆரம்பிக்கின்றன. இந்நிலைக்குச் சமுதாயம் தள்ளப்பட்டுவிடக் கூடாது  என்பதைத்தான்,

                          'அரசு முறை செய்க களவில் ஆகுக' (பா.8)

என்கிறது ஐங்குறுநூறு.

இக்கருத்தை மையமாக வைத்தே 'அரசாங்கத்தின் பங்கு'(.406) என்ற ஒரு தனித் தலைப்பையே தன்னுள் கொண்டுள்ளது   இந்தியா2020 நூல்இத்தலைப்பில் ஒரு நாடு வல்லரசாக மாற அரசாங்கத்தின் பங்கு என்ன என்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

            அறச்சிந்தனை

                        'மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

                         அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு' (குறள்-204)

உலகம் இன்று தொழில்நுட்ப வாகனத்தின் மீது பயணம் செய்து கொண்டிருக்கிறது.  'இணையதளவசதியால் உலகையே நம் முன் நிறுத்துகிறோம். 'குளோனிங்' என்ற பெயரில் உயிர்களை நகல்  எடுக்கிறோம். செயற்கை முறை கருவூட்டத்தால் குழந்தையை உருவாக்குகிறோம்அதே வேளையில் அண்டத்தையே அழிக்கவல்ல அணுகுண்டுகளையும்நாசம் விளைவிக்கும்  நச்சு உயிர்களையும்  தயாரிக்கிறோம். ஏறக்குறைய எல்லா நாடுகளும் இத்திறமைகளை வளர்த்துக்கொண்டுள்ளன. படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழிலையும் மனிதன் இன்று கையில் எடுத்துள்ளான். இந்நிலையில், உலகின் எந்த ஒரு நாடு, தீய எண்ணத்தின் வலிமையாய் 'நாச சக்திகளைப்' பயன்படுத்தினாலுமஅது உலகிற்கே பேராபத்தாக அமையும் என்பதில் ஐயமில்லை, என்ற இச் சூழ்நிலையில், அறச்சிந்தனைகள்/கருத்துக்கள் மக்களிடையே வலுப்பெற வேண்டும் என்ற ஆவல் அனைவர் உள்ளத்திலும் தோன்றுவது இயல்பே. ஆனால், நாட்டில் அறச்சிந்தனை நிலைபெற்றிருந்த ஒரு சமுதாயச் சூழலில், உலகெங்கும் அறச்சிந்தனை ஒளிபெறவேண்டும் என்ற தொலைநோக்கோடு சங்கத்தமிழன் சிந்தித்திருப்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அந்தப் பெருமையினை  ஐங்குறுநூற்றின்,

                        'அறநனிசிறக்க வல்லது கெடுக' (பா.7)

என்ற அடி நமக்கு  அளிக்கிறது. இதே கருத்தினைத்தான்,

'ஒரு பொருள் அல்லது தயாரிப்பு முறையை மேம்படுத்தும் போது ஒரு விஞ்ஞானி அல்லது விஞ்ஞானக் குழுவின் தரப்பில் அறச்சிந்தனை மீறிய தீய விளைவுகள் கண்டறியப்பட்டால், அந்தச் செயல்பாடு அறவே கைவிடப்படும்'(.165) என்கிறார், இந்தியா 2020 நூலில் ஆசிரியர்அறச்சிந்தனை என்பதுஅன்றும் இன்றும் வலியுறுத்தப்படும் தொலைநோக்குச் சிந்தனைகளில்  ஒன்றாக அமைகிறது.

முடிவு

                'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

                மெய்ப்பொருள் காண்பது அறிவு' (குறள்-423)

எந்த ஒரு இலக்கியத்தின் தன்மையும், அதன் படைப்புக்காலத்தில் முழுமையாக வெளித்தெரிவதில்லை. அவ்விலக்கியத்தின் வாழ்நாள் கூடும் ஒவ்வொரு நாளும், அவ்விலக்கியத்தின் புகழ் கூடிக்கொண்டே இருக்கிறது. சரியாகக் கணிக்க இயலாத காலத்தில் தோன்றிய இலக்கியங்களில், இன்றளவும் ஏற்புடைய கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன என்றால், அவ்விலக்கியங்கள் இறவா வரம் பெற்றவையேஆனால், இவை போன்ற இலக்கியங்களில் இலக்கியச் சுவையும், வாழ்வியல் சிந்தனைகளும் வெளிக்கொணரப்பட்ட அளவிற்கு, அதில் மறைந்துள்ள சமூகத் தொலைநோக்குத் தொடர்பான கருத்துகள் வெளிக்கொணரப்படவில்லை.

'தனது கடின உழைப்பின் வெற்றிக் கனிகளை ஒரு தலைமுறை மற்றொரு தலைமுறைக்கு விட்டுச் செல்கிறது'(.27) என்கிறார்  அப்துல் கலாம். வாழ்நாளை வளம்பெறச் செய்யும் எத்தனையோ கருநெல்லிக் கனிகள் பழந்தமிழ் இலக்கியங்களில் இலைமறையாகப் பொதிந்து கிடக்கின்றன. இவ்வகைக் கனிகளுக்கான தேடலில்ஐங்குறுநூற்றின் பங்குதான் மேலே கூறப்பட்ட சமூகத் தொலைநோக்குத் தொடர்பான சிந்தனைகள்பழந்தமிழ் இலக்கியம் ஒவ்வொன்றிலும் இவைபோன்ற கருத்துகள் இடம்பெற்றுள்ளன என்பது துணிபு.

அடிக்குறிப்பு

  1. தினமலர், 24.10.2002 (உலகஉணவு திட்ட அமைப்பும், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி  அறக்கட்டளையும் இணைந்து    மேற்கொண்ட ஆய்வின்முடிவு)
  2. தினமலர்,17.12.2002 ('உலகளாவிய மனிதநேயம் மூலம்அனைத்து வாழ்க்கைக்கும் மதிப்பளித்தல்என்ற    மாநாட்டில் - தில்லி )

துணையானவை

  1. இந்தியா2020, .பி.ஜெ அப்துல்கலாம் உடன் .சு.ராஜன், நியூசென்சுரி புக்ஹெஸ் (பி) லிட், சென்னை- 98.
  2. ஐங்குறுநூறு, டாக்டர் .வே. சாமிநாதையர், டாக்டர் .வே. சாமிநாதையர் நூல் நிலையம்.

தமிழியல்.காம்

Dr.A.Manavazhahan