முனைவர் ஆ. மணவழகன், தமிழ்த்துறைத் தலைவர், அறிவியல்
(ம) மானுடவியல் புலம், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர் 603 203.
(சங்க இலக்கிய ஆய்வு மன்றம் (ம) எத்திராஜ் மகளிர் கல்லூரி, சென்னை. திச.09, 2011.)
புவியின் இயற்கை நிலைகள் அனைத்தும்
‘சுற்றுச்சூழல்’ என்பதில் அடக்கப்படுகின்றன. ‘உயிரினங்கள் வாழும் பகுதியில் உள்ள காற்று,
நீர் போன்றவை அடங்கிய இயற்கை நிலை (Environment)’ (க்ரியாவின்
தற்காலத் தமிழ் அகராதி, ப.462) என்றும், ‘சூழல் மண்டலத்தில் (Eco
System)
உள்ள உயிரற்ற (A
biotic)
காற்று, நீர், வெப்பம், ஒளி, இன்ன பிறவும், உயிருள்ள (Biotic) தாவரங்கள்,
உயிரினங்கள் போன்றவற்றையும் உள்ளடக்கியதே சுற்றுச்சூழலாகும்’ (சுற்றுச் சூழல் பாதுகாப்பு,
ப.401) என்றும் சுற்றுச் சூழலுக்கு விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. மேலும் ‘சுற்றுச்சூழல்
என்பது மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள நுண்மையான, சமன்படுத்தப்பட்ட மென்மையான உறவாகும்’
(சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ப.415) என்றுள்ள விளக்கம், மனிதனுக்கும் சுற்றுச்சூழலுக்குமிடையேயான
உறவைச் சுட்டுகிறது.
மனிதன் மேற்கொள்ளும் எந்த ஒரு செயலும்
மனிதனுக்கும் சுற்றுச்சூழலுக்குமான உறவில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சூழலோடு
இயந்து இயங்கும் வாழ்வே நிம்மதியையும் வளத்தையும் தரும். எதிர்திசையில் மனிதன் பயணிக்கும்போது
இயற்கையின் சீற்றங்களுக்கு அவன் ஆளாக நேரிடுகிறது. இயற்கையைப் புறந்தள்ளும் பொழுது
இயற்கை அவனைப் புறந்தள்ளுகிறது. ‘உயிர்ப் பொருள்களின் வாழ்வியக்கத்திற்குத் தேவையான
நீர், நிலம், காற்று போன்ற பொருள்கள் மாசடையாமல் பாதுகாத்துக் கொள்ளும் உணர்வே சுற்றுச்சூழல்
பாதுகாப்பு உணர்வு’ (சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ப.295) என்று, உலகின் உயிர் மூலங்களான
நீர், நிலம், காற்றின் பாதுகாப்புச் சுட்டப்படுகிறது. இம்மூன்றின் தன்மைகளே உலகச் சுகாதாரத்தை
உறுதிப்படுத்துகின்றன. இன்றைய நிலையில், இவ்வகை சூழலியல் குறித்த சிந்தனைகளை இக்கால
இலக்கியப் பதிவுகளின் வழிக் காண்பதாக இக்கட்டுரை அமைகிறது.
நீர்
‘நீர்இன்று
அமையாது உலகு’ என்றும்(குறள்.20), ‘விசும்பின்
துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே - பசும்புல் தலைகாண்பு அரிது’ என்றும்(குறள்.16)
நீரின் மேன்மையை உலகிற்கு உணர்த்துவார் வள்ளுவர். உடலின் செந்நீர் போல உலகிற்குப் பற்றுக்கோடாக
விளங்கும் நீரின் தேவை குறித்தும், நீரினைப் பாதுகாக்கவேண்டியதன் தேவை குறித்தும் பழந்தமிழ்
இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. அதேபோல, போர்க்காலங்களில் எதிரி நாட்டின் நீர்நிலைகள்
யானைகளைக் கொண்டு அழிக்கப்பட்ட பதிவுகளும் சங்க இலக்கியங்களில் உண்டு. காரணம், ஒரு
நாட்டின் வளத்தை உறுதிபடுத்துபவை அந்நாட்டின் நீர் நிலைகளே. இன்றைய இலக்கியங்கள் நீர்நிலைகள்
மாசுபடுத்தப்படுவதையும், அழிக்கப்படுவதையும் பதிவு செய்கின்றன. இவ்வகைப்பதிவுகள் இன்றைய
சூழலைப் பதிவுசெய்து, எதிர்காலச் சமூகம் எதிகொள்ளவிருக்கும் சிக்கல்களை உணர்த்துவதாக
உள்ளன.
நவீன கண்டுபிடிப்புகள் மனித வாழ்வின் ஓட்டத்தை
விரைவுபடுத்தியதென்பது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு இயற்கைக்கு எதிரான ஓட்டத்தையும்
விரைவுபடுத்தியதென்பதில் ஐயமில்லை. வேளாண் துறையில் நவீனக் கண்டுபிடிப்புகளின் விளைவும்
இதுவே. மின் இறைப்பான்கள் வந்த பிறகு நீரின் நிலத்தடி மட்டம் வெகு விரைவாக உள்வாங்கியதையும்
வற்றியதையும் நிலம் வறண்டு வேளாண் வளம் குன்றியதையும் இன்றைய இலக்கியங்கள் பதிவுசெய்கின்றன.
‘இரவு பகலாக போட்டி போட்டுக்கொண்டு மோட்டார்கள்
ஓடுகின்றன. ஒவ்வொரு கமலைக் கிணறாக உயிர்விடத் தொடங்கின’ (தும்பிகள் மரணமுறும் காலம்,
ப.27) என்று மின் இறைப்பான்கள் விவசாயத்துறையில் நுழைந்ததன் விளைவு சுட்டப்படுகிறது. மேலும், ‘ஏரியை யாரும் நம்புவதில்லை. எல்லாம் மோட்டார்தான்.
பதினைந்து கஜம் இருபது கஜம் என்று தலை கிறுகிறுக்கும் ஆழக்கிணறு கொண்டவர்கள் பாக்கியவான்கள்.
பாறைக் கிணறு வாய்த்தவர்கள் கொஞ்ச காலத்தில் தோற்றார்கள். சிலர் ‘ஆழ்துளை’க் கிணறு
பார்த்தார்கள். தண்ணீர்ப் போட்டி உச்சத்திற்குப் போனது. ----- ஏரியில் கருவை மண்டின. மோட்டாங்கால் நிலமெல்லாம்
கருவை மண்டின. ---- மலைமலையாய் கிணற்று மேடு தோன்றியது. சம்சாரிக்குப் பிடிபடாமல் தண்ணீர்
ஒரு மண்புழுவைப் போல் ஓடி ஒளிந்து கொண்டே இருந்தது. மின்சாரக் கம்பங்களின் சிமென்ட்
உதிரத் தொடங்கின. மின்சாரப் பெட்டிகளில் அணில் கூடுகட்டத் தொடங்கியது. மயக்கங்கொண்ட
ஒரு பிச்சைக்காரனைப் போல கிணறு புதர் மண்டிக் கிடக்கிறது. (தும்பிகள் மரணமுறும் காலம்,
ப.27) என்று இன்றைய நிலை பதிவுசெய்யப்படுகிறது. இதில் அறிவியல் கண்டுபிடிப்புகள் இயற்கைக்கு
எதிராகிப்போன நிலை சுட்டப்படுகிறது. முறைப்படுத்தப்படாத தொழில்நுட்பங்களும் அறிவியல்
கண்டுபிடிப்புகளும் நீண்டகாலப் பயனை விளைவிக்காது என்பது இங்கு உணரத்தக்கது.
‘பயன்பாட்டிற்குப் பாதகம் விளைவிக்கக்
கூடிய வகையில் நீரின் வேதியியல், இயற்பியல், உயிரியல் நிலைகளில் ஏற்படும் மாற்றம் நீர்
மாசுபாடு எனப்படுகிறது. இவ்வாறு மாற்றமடைந்த நீர் மக்களின், பிற உயிர்களின் பயன்பாட்டிற்குப்
பொருத்தமற்றதாக மாறிப்போய்விடுகிறது’ (சுற்றுச் சூழலியல் நோக்கில் சங்கத் தமிழகம்,
ப.36) என்று நீர் மாசு சுட்டப்படுகிறது. இவ்வகையில், மனிதனால் மாசுபடுத்தப்படும் நீர்
நிலைகளை,
தூண்டிலேந்திய சிறுவர்கள்
திட்டுகளில் அரும்பியிருக்கின்றனர்
கரையோரம் குப்பைகளைக்
கவிழ்த்துவிட்டுப் போகிறது
நகராட்சி வண்டி (தேவதை அல்ல பெண்கள், ப.51)
என்று
நன்னீர் நிலைகள் குப்பை கொட்டும் பள்ளங்களாகிப் போகும் அவலம் பதிவு செய்யப்படுகிறது.
குப்பைகளால் நன்னீர் சாக்கடையாதலும், கொசுக்களுக்குக் கூடாரமாதலும் சுற்றுச்சூழல் பாதிப்பாகும். அதேபோல, நீர் நிலையைப் பற்றிக் குறிப்பிடும் புதுக்கவிதை
ஒன்று, ஒரு ஏரியைப் பின்வருமாறு காட்டுகிறது. விருந்தாளிகள் நிறைந்த வீடுபோல தாத்தா
காலத்தில் ஏரியாக இருந்தது; அதனைச் சுற்றி நாரைகள், கொக்குகள் இருந்தன; மரங்கள் பூத்து
மணம் பரப்பின; வண்ணத்துப் பூச்சிகள் எங்கும் சுற்றித் திரிந்தன; நுறைபொங்கக் குதித்தோடும்
நீரின் மதகுகளிருந்தன; ஏரிகள் சிற்றலைகளை எழுப்பின. இத்தன்மைகளைக் கொண்ட ஏரி மனிதனின்
முறையற்ற செயல்களால் நினைவு தப்பிய பாதையோரப் பிச்சைக்காரனைப்போல உருமாறிப் போனதைப்
பின்வரும் பதிவு காட்டுகிறது.
சித்திரைக் காலத்தில்/ ஒரு நண்பகலில்/சருகுகளை விலக்கியபடி/
கால்வாயில்/கழிவுநீர்/ஒரு பாம்பைப்போல் ஊர்ந்து வந்தது/
புதுவௌ¢ளம் என்றெண்ணி/எதிரோடிய மீன்களின்/
செவுள்கள் ரணமாயின/மிதந்த மீன்களை/விழுங்கிய கொக்குகள்/
பட்டுப்போன/மரக்கிளைகளில் இருந்து/மயங்கிச் சரிந்தன/
--------
-------------- --------------- -------------
உடல் பரந்த ஏரி/குட்டையென்று/பெயர் மாற்றிக் கொண்டிருந்தது/
வீடுகள் முற்றுகையிட/கழிவு நீரும் அற்றுப்போன/ஒருநாள்/
குட்டை/குப்பைகொட்டும் பள்ளமாயிற்று/ஒரு மத்தியான
வேளையில்/
தூசுகள் எழுப்பியபடி வந்த/லாரியொன்று/சுமந்து வந்த/
கப்பிகளைக் கொட்டி/பள்ளத்தை நிரப்பிவிட்டுச் சென்றது/
பின்பொருநாள்/குழிபோட்டுக்/கம்பிகள்
நட்டு எழுப்பிய/
அடுக்குமாடி ஒன்றில் அமர்ந்தபடி/என் மகனுக்கு/
விளக்கம் /சொல்லிக் கொண்டிருக்கிறேன்/
‘மருதமெனில்/வயலும் /வயல் சார்ந்த நிலமும்’என்று! (கல்லாலமரம்,
பக்.30-31)
புதுவௌ¢ளத்தில்
நிரம்பிய நீர்நிலை; ஆம்பலும், தாமரையும் முகம் மலர்ந்த நீர்நிலை; பனையும், வேம்பும்;
புங்கையும் அணிசெய்த நீர்நிலை. இன்று மனிதர்களால் கொல்லப்படுதல் அதிர்ச்சி. ‘காப்புடைய கயம்’ (புறம்.15;10), ‘கடிதுறை நீர்’ (புறம்.16;6) என்று பழந்தமிழர்
நீர்நிலையினைப் பாதுகாத்தது இங்கு எண்ணத்தக்கது.
நிலம்
உலக நிலப்பரப்பில் இந்தியா 2.42%தான்
(32,87,263 ச.கி.மீ) உள்ளது. இதில் 41 மி.ஹெ. உபயோகமற்ற நிலமாகவும், 66 மி.ஹெ. காடுகளாகவும்,
23மி.ஹெ. விளைநிலங்களாகவும், 175மி.ஹெ. நிலம் மண்வளம் பாதிக்கப்பட்ட நிலையில் அதாவது
அரைகுறை விவசாயம், உவரப்¢புத் தன்மை, நீர்த் தேக்கங்கள் போன்ற நிலைகளில் உள்ளன. எனவே
நம்மிடம் இருக்கின்றன 23 மி.ஹெ. விளைநிலத்தின் மூலமாகத்தான் நமது மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப
உணவு உற்பத்தி செய்ய முடியும். வேளாண் துறை வளர்ச்சி மட்டும் சரியாக இருந்தால், இந்தியாவின்
வளர்ச்சிப் பாதை மிகவும் பாதுகாப்பாக இருக்கும் (திட்டம், ஏப்ரல்2007, ப.12) என்பது
வேளாண் அறிஞர்கள் சுட்டும் புள்ளிவிவரம். கருத்து. நல்ல நிலையில் உள்ள 23மி.ஹெ. விளைநிலத்தையும்
மனிதன் தன் தொலைநோக்கில்லா செயல்பாடுகளால் மாசுபடுத்தி வீணடித்து வருகிறான். மனிதச்
செயல்பாடுகளால் மண்ணின் தன்மை நாளுக்கு நாள் மாசடைந்து வருகிறது. இருக்கின்ற குறைந்தளவு
விளைநிலங்களும் தொழிற்சாலைகளாக, தொகுப்பு வீடுகளாக, பன்னாட்டு நிறுவனங்களாக உருமாறி
வளர்ந்து நிற்கின்றன. இன்றைய இச்சூழலை இக்கால இலக்கியங்கள் பதிவு செய்ய தவறவில்லை.
இந்தியாவில் ஏற்பட்ட பசுமைப்புரட்சியின்
நோக்கம் உடனடி உற்பத்திப் பெருக்கம் என்பதில் இருந்த அளவிற்கு, மண்வளப் பாதுகாப்பு,
சீரான வளர்ச்சி, நிரந்தர உணவு உற்பத்தி என்பதில் இல்லாமல் போனது நற்பயனின்மையே. அதன்
விளைவே மண் மாசுபாடு, உற்பத்தி முடக்கம், விளைநிலம் தரிசாதல், சிறப்புப் பொருளாதார
மண்டத்தின் பெயரால் விவசாயிடமிருந்து நிலம் பறித்தல் போன்றவை. பசுமைப் புரட்சியால் ஏற்பட்ட மற்றொரு நலக்கேடு வேளாண்
உற்பத்தியில் இரசாயனப்(வேதிப்பொருள்) பொருள்களின் மிகுபயன்பாடு. நிலத்தின் வளம் வற்றிப்போனதற்கு
இந்த இரசாயனப் பயன்பாட்டின் மிகுதியே முதல் காரணம் என்பதையும், அதனால், இயற்கையாக உள்ள
பூச்சிகள், புழுக்கள் கூட இல்லாமல் போனதும் இக்கால இலக்கியப் பதிவுகளில் காணமுடிகிறது.
‘எருவையும் தழைகளையும் தேடித்தேடி வயலில்
கொட்டி நடவு நட்டதை இப்போது கதையாகத்தான் கேட்கலாம். விதவிதமான மருந்துகள். நாற்று
நடும் முன்பே ‘காம்ப்ளெக்ஸ்’ இட வேண்டும் என்கிறார்கள். நாற்றங்காலிலேயே மருந்து. நாற்று
விடும்போதும் மருந்து. நட்ட பத்தாநாள் யூரியா. ஒருமாதத்தில் பொட்டாஸ் டி.ஏ.பி. காம்ளக்ஸ்
கலவை அவ்வப்போது. இடையிடையே பூச்சி மருந்துவேறு. ---- உரக்கடை வைத்திருப்பவன் பெரிய
பாக்கியவான். ---- மூடை மூடையாக வயலில் நஞ்சை வாரி இறைத்தாயிற்று. சீக்கு வந்தவனின்
உடம்புபோல் வெளுத்துக் கிடக்கின்றன வயல்கள். ஒரு நண்டு நத்தையில்லை. ஒரு தவளை கூக்குரலில்லை.
ஒரு சில் வண்டில்லை. ஒரு நாக்கு பூச்சியில்லை.’ (தும்பிகள் மரணமுறும் காலம், ப.35)
என்பதில், மண்வள மாசுபாடு படம்பிடிக்கப்பட்டுள்ளது.
இராசயன வேதிப்பொருள்களின் வரவால் மண் வளம் மாசுபட்டதோடு, மண்ணிற்கும் மனிதனுக்கும்
நன்மைபயக்கும் உயிரனங்களும் அழிக்கப்பட்டுவிட்டதை இப்பதிவு உணர்த்துகிறது. அதேபோல,
‘தலைமுறை தலைமுறையாய்க் காப்பாற்றிய நிலம் தாயைப்போல் சோறுபோட்ட நிலம் உடைந்த பானையாய்க்கிடக்கிறது.
வந்த விலைக்கு நிலத்தை விற்று விட்டோ, அல்லது விற்க ஆள் பார்த்தோ பேருந்து நிறுத்தத்தில்
நிற்கும் ஒரு உழவரை எல்லா ஊரிலும் நீங்கள் சந்திக்கலாம்’ (தும்பிகள் மரணமுறும் காலம்,
ப.59) என்ற பதிவு எல்லாம் முடிந்துபோன கையறு நிலையினைக் காட்டுகிறது. இது, வேளாண் தொழிலை
மேம்படுத்த, மண்ணை மேம்படுத்த எடுக்கவேண்டிய உடனடித் தொலைநோக்குத் தேவையை வலியுறுத்துவதாகவும்
உள்ளது. ‘இரண்டாவது அல்லது நிரந்தர பசுமைப்புரட்சி தேவை. பண்ணை உற்பத்தி திறனை சுற்றுச்சூழல்
உயிரின பாதிப்பு ஏதுமின்றி மேம்படுத்துவதே நிரந்தர பசுமைப்புரட்சிகளின் அடிப்படை.’
(திட்டம், ஏப்ரல்2007, ப.20) என்ற வேளாண் அறிஞர்களில் கருத்து இங்குச் சுட்டத்தக்கது.
‘தரிசு நிலமானது 1950-இல் 17.65 லட்ச எக்டராக இருந்தது. தற்பொழுது 24.35 லட்ச எக்டராக
உயர்ந்துள்ளது’ (திட்டம், ஏப்ரல்2007, ப.43) என்ற புள்ளிவிவரக் கணக்கை குறைக்க முடியுமோ
இல்லையோ உயராமல் காத்தல் சமூக நலனிற்கு இன்றியமையாத உடனடித்தேவையாகும்.
தாவரங்களின்
அழிவு - காற்று மாசுபாடு
‘நீர்ப்பிரச்சனைக்கு ஒரு நிலையான தீர்வு
ஊர்க்காடு வளர்ப்பு திட்டமே. தமிழ்நாட்டின் புவியியல் பரப்பில் குறைந்தது 30% காடுகள்
இருக்க வேண்டும். ஆனால் உள்ளதோ 8%காடுகளே. ஆகவே ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது ஐந்து ஏக்கர்
நிலத்தில் காடு வளர்க்க ஒதுக்க வேண்டும். அதில் பால்வடியும் (Latex Tress) மரங்களுக்கு
முக்கியம் தர வேண்டும். இலுப்பை, ஆல், நாட்டு சப்போட்டா, ரப்பர், பெருங்காயம், நந்தியாவர்த்தம்,
மருதம், பாலை, செம்மரம், அழிஞ்சி, அயினிப்பலா, நாவல், காட்டுமா, ஆனைப்புளி போன்ற மரங்கள்
சிறப்பிடம் பெறவேண்டும். பால்வடியும் மரங்கள் மேகங்களைச் கனியச் செய்து மழையை இழுக்கும்
தன்மையுள்ளவை. ஆகவேதான் தமிழ் நாட்டில் ஆலமரமும், இலுப்பை மரமும் சிறப்பாக கவனிக்கப்பட்டன.
இன்று அவை வெட்டப்பட்டுவிட்டன.’ (திட்டம், ஜூலை, 2004. ப.31) என்பது இன்றைய தாவரவியல்
வல்லுநர்கள் சுட்டும் சூழலியல் சிந்தனை. தாவரங்களைக் குறிப்பாக மரங்களை உறவுகளாக, தெய்வங்களாக,
அரசின் கௌரவச் சின்னங்களாக, வாழ்வோடு இணைந்த அனைத்துமாகப் பார்த்தவர்கள் பழந்தமிழர்கள்.
ஆனால் இன்றைய நிலையோ நெகிழி(பிளாஸ்டிக்) ஈச்சமரங்களைப் பாதையோரங்களில் நட்டுவைத்து
அழகு படுத்துகிறது நகரங்கள். கூடுகட்ட எத்தனிக்கும் பறவைகள் ஏமாந்து போகின்றன. இந்நிலையில்
வனங்களின், மரங்களின் அழிவு பற்றியதான பதிவுகள் இக்கால இலக்கியங்களில் மிகுதியும் காணப்படுகின்றன.
‘மரங்கள் என்றால் வெறும் மழைக்காக மட்டுமா?
மரம் பூச்சி புழுக்களுக்காக; மரம் பறவைகளுக்காக; மரம் விலங்குகளுக்காக; மரம் மனிதருக்காக;
மரம் எல்லாருக்காகவும்தான். சரக்குந்துகளில் பென்னம்பெரிய மரங்களை ஏற்றிச் செல்கிறார்கள்.
எத்தனையோ பறவைகளைக் கொன்று எத்தனையோ புழு பூச்சியைக் கொன்று,’ (தும்பிகள் மரணமுறும்
காலம், ப.55) என்பதில் மரங்களின் சிறப்பும் இன்று அவை அழிக்கப்படுவதும் சுட்டப்படுகிறது.
மரங்களோடு சேர்ந்து உயிரனங்களும் அழிக்கப்படுவது சுற்றுச்சூழல் அழிவைக் காட்டுகிறது.
‘மரம் வைத்துதான் நிலத்தையும் அடையாளப்படுத்துவார்கள்.
--- ஏற்றம் இருந்தது மரங்களால்; கமலையாய் இருந்தது; வண்டியாய் இருந்தது; செக்காய் இருந்தது;
தேராய் இருந்தது; தெய்வச் சிலையாய் இருந்தது; ஏராய், நுகத்தடியாய், மோட்டுக் குச்சியாய்,
இப்படி திரும்பின பக்கமெல்லாம் மரங்கள்.----- இன்று வெட்டி வெட்டிச் சரக்குந்தில் பட்டணத்திற்கு
ஏற்றுகிறார்கள். ‘சாமில்’லின் இராட்சத வாய்க்குள் அரைபடுகின்றன மரங்கள். ஒவ்வொரு மரமும்
சாயும்போதும் கேட்கிற பெருமூச்சால் காற்று விம்முகிறது.’(தும்பிகள் மரணமுறும் காலம்,
ப.55) என்பதில் மரங்களின் அழிவும் காற்றின் மாசுபாடும் சுட்டப்படுகிறது.
சுற்றுச்சூழல்
சீர்கேட்டின் - விளைவுகள்
சுற்றுப்புறச் சூழல் என்ற புவியின் மிகப்பெரிய
பாதுகாப்பு அரணை, மனிதன் என்ற சமூகப் பொறுப்புள்ள காரணி பாதிப்பிற்கு உள்ளாக்காமல்
வாழ்தல் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நற்பயனை விளைவிக்கும். தன்னுடைய தற்காலிகத் தேவைகளுக்காகவோ,
ஆடம்பரத்திற்காகவோ மனிதன் மேற்கொள்ளும் சுற்றுச்சூழலுக்கு எதிராகச் செயல்பாடுகள் மனித
குலத்தை மட்டுமல்லாது ஒட்டுமொத்த உயிரினத்திற்கே கேடு விளைவிப்பதாக அமையும்.
‘இதுவரை
இந்த மண்டலத்தில்(இந்தியாவின் தெற்கு கடற்கரை பகுதி), இயற்கை பேரழிவுகளால் மடிந்தவர்கள்
எண்ணிக்கை 3-லட்சத்திற்கு மேலாகும். இந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட சொத்து சேதம்
200 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேற்பட்டது என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த
மண்டலம் படுவேகமாக, நகர் மயமாகி வருவதாலும், சுற்றுப்புற சூழல் சீர்குலைவதாலும் மற்றும்
முன்னேற்பாடுகள் இல்லாததாலும் முறையான திட்டமிடப்படாதலாலும், இது போன்ற பேரழிவுகளுக்கு
எளிதில் இந்த மண்டலத்து நாடுகள் இலக்காகின்றன.’ (திட்டம், பிப்ரவரி 2005. ப.17) என்பது
நமக்கான எச்சரிக்கையாக அமைகிறது.
எச்சரிக்கை, முன் ஏற்பாடுகள் என்று எவ்வகைச்
செயல்பாடுகளை நாம் மேற்கொண்டாலும், புறநானூற்றுப் புலவன் சுட்டுவதைப்போல (பா.2) ஐம்பூதங்களை
விஞ்சக்கூடிய ஆற்றல் மனிதனுக்கு இல்லை என்பதை உணர்தல் வேண்டும். அவை தன்நிலை திரிந்தால்
அவற்றைக் கட்டுப்படுத்துதல் இயலாத ஒன்று என்ற அனுபவ உண்மையை மறத்தல் கூடாது. அறிவியல்
வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம் என்ற விரைவுப் பயணத்தில் இயற்கை அன்னையைப் பலியாக்கிவிடக்
கூடாது. சுற்றுச்சூழலுக்கு எதிரான செயல்பாடுகள் எவையும் மனிதகுலத்திற்கு எதிரான செயல்களே
என்பதை ஒவ்வொரு தனி மனிதனும் உணர்தல் வேண்டும்.
மனித வாழ்வில் மகிழ்ச்சியும் நிறைவும் அவன் வாழும் சூழலைப் பொறுத்து அமைகிறது.
அதனை வடிவமைத்துக் கொள்பவனும், வளமாக்கிக்கொள்பவனும் மனிதனே. இதை உணர்ந்து, சுற்றுச்சூழலைப்
பாதுகாத்து, சூழலோடு இயைந்து வாழ்தல் தனக்கு மட்டுமல்லாது எதிர்கால சமூகத்திற்கும்
நற்பயன் விளைவிப்பதாய் அமையும்.
பயன் நூல்கள்
1.
கல்லால மரம், இரா. பச்சியப்பன், வைகறை பதிப்பகம், சென்னை.
2.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இராம சுந்தரம், நே.ஜோசப் (பதி), தமிழ்ப்பல்கலைக்கழகம்.
3.
சுற்றுச் சூழலியல் நோக்கில் சங்கத் தமிழகம், மகிழேந்தி, பார்க்கர் பதிப்பகம், சென்னை.
4.
திட்டம் - மாத இதழ், சாஸ்த்ரி பவன், சென்னை.
5.
தும்பிகள் மரணமுறும் காலம், இரா. பச்சியப்பன், பொன்னி பதிப்பகம், சென்னை.
6.
தேவதையல்ல பெண்கள், யாழினி முனுசாமி, உயிர்மை பதிப்பகம், சென்னை.
தமிழியல்
www.thamizhiyal.com