வியாழன், 13 ஆகஸ்ட், 2020

சிலம்பு காட்டும் சமூகத் தொலைநோக்கு

 

சிலம்பு காட்டும் சமூகத் தொலைநோக்கு

ஆ. மணவழகன், முனைவர் பட்ட ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

(உலகத் தமிழ்க் கல்வி இயக்கம், 6ஆம் கருத்தரங்கு, தமிழூர், திசம்பர் 2003.)

சமூகத் தொலைநோக்கு

            சமூகத் தொலைநோக்கு என்பது ஒரு துறைக்கோ, ஒரு சமூகத்திற்கோ, அல்லது ஒரு நாட்டிற்கோ  என்றில்லாமல் எல்லாச் சமூகத்திற்கும் எல்லா நாட்டினர்க்கும் பொதுவானதாக, ஏற்றுக்கொள்ளக்கூடியதாக அமையும் நற்சிந்தனைகளும் செயல்பாடுகளுமாகும். இச்சிந்தனைகள், எச்சமூகத்திற்குப் பொருத்திப் பார்ப்பினும் அச்சமூகத்திற்கும் பொருந்துவனவாய் அமைவன. மேலும், சமூகத்தொலைநோக்கு மொழி, இனம், நாடு என்ற வட்டங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு எல்லா மொழிகள், இனங்கள், நாடுகளையும் தன் வட்டத்திற்குள் அடக்கியது.

             எண்ணங்களும் அதன் வழிச் சிந்தனைகளும் சமூகத்திற்குச் சமூகம், இனத்திற்கு இனம், நாட்டிற்கு நாடு மாறுபடுகின்றன. இவ்வெல்லைகளைக் கடந்து எப்பொழுதும், எல்லோருக்கும் உகந்ததாக, ஏற்றுக்கொள்ளக் கூடியதாக அமைவனவே ‘சமூகத் தொலைநோக்கு’ என்ற வட்டத்திற்குள் வருகின்றன. தொலைநோக்கு என்பதற்கு, ‘எதிர்காலத்தில் ஏற்படவேண்டிய நலனைக் கருத்தில் கொண்ட கணிப்பு; முன்யோசனை நிறைந்த பார்வை’.-1 என்று விளக்கம் அளிக்கிறது க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி.

        இவைபோன்ற தொலைநோக்குச் சிந்தனைகள் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு காலகட்டத்தில் தோன்றியிருக்கின்றன. ஆனால், அவற்றைச் செயல்படுத்தும் முறையிலேயே அச்சிந்தனைகளின் தாக்கம் அமைகிறது. குறிப்பாக அச்சிந்தனைகளை வெளிக்கொணரும் முறையிலேயே அச்சிந்தனைகளின் சிறப்புமட்டுமல்லாது அச்சிந்தனைகள் தோன்றிய சமூகத்தின் சிறப்பும் அடங்கியிருக்கிறது எனலாம்.

 எதிர்காலவியலும் சமூகத்தொலைநோக்கும்

           எதிர்காலவியல் என்பது எல்லோருமறிந்த ஒரு துறையாக இன்று விளங்குகிறது. சமூகத் தொலைநோக்கு என்பதும், எதிர்காலவியல் என்பதும் ஒன்று போலவே தோன்றிடினும் இரண்டும் ஒன்றல்ல. ‘எதிர்காலவியல் என்ற கலைச் சொல்லுக்கு முன்னறிதலுக்கான புதிய அறிவியல் என்பது பொருள்’-2 என்கிறது, ‘தமிழ் இலக்கியத்தில் எதிர்காலவியல்’ என்ற நூல்.    

             எதிர்காலவியல் என்பது, எதிர்காலத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை, சில வரையறைகளின் மூலம் புள்ளிவிவரங்களோடு பட்டியலிடுவதாகும். இம்மாற்றங்கள் நன்மையைப் பற்றியதாகவும் இருக்கலாம், தீயதைப் பற்றியதாகவும் இருக்கலாம். இதன் அடிப்படையில், இவ்வகையான மாற்றத்தினை இத்தனை ஆண்டுகளில் சமுதாயம் அடையும் என்பதாகவே எதிர்காலவியல் அமைகிறது. சமூகத் தொலைநோக்கு என்பதோ, நிகழ்காலத்தையும், தனி மனிதரையும் கருத்தில் கொள்ளாது, எதிர்காலத்தில் சமுதாயம் இப்படியான நன்மைகளை அடையவேண்டும் என்பதன் அடிப்படையில் சிந்தித்து, அச்சிந்தனைகளுக்குச் செயல்வடிவம் கொடுப்பதாக அமைகிறது. தொலைநோக்குத் திட்டங்களும், செயல்பாடுகளும் நிகழ்காலப் பயனை நினைவிற்கொள்ளாது,   எதிர்காலப் பயனை எதிர்நோக்கியே அமைவன.

 இன்றைய நிலையில் சமூகத் தொலைநோக்கின் தேவை

            இன்றைய நிலையில் சமூகத் தொலைநோக்கின் அடிப்படையில் பல துறைகளிலும், பலரும் தங்கள் கருத்துகளை, கட்டுரைகளாகவும், நூல்களாகவும், செய்திகளாகவும், ஆய்வுகளாகவும் அவ்வப்போது  வெளியிட்டு வருகின்றனர். வளர்ந்த நாடுகளின் நிலைப்புத் தன்மைக்கும், வளரும் நாடுகளின் மேன்மைத் தன்மைக்கும் இத்தகையத் தொலைநோக்குப் பார்வை இன்றையச் சூழலில் இன்றியமையாததாகிறது.

             தொலைநோக்கு என்பதைப் பற்றி இந்திய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் கூறுகையில், 'தொலைநோக்கு என்பதற்கு, இன்றும் எதிர்காலத்திலும் அமைகின்ற அரசாங்கங்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு தேசத்தின் பகுதி என்றே பொருள்' -3 என்றும், 'ஒரு தீர்க்கமான தொலைநோக்குப் பார்வை இல்லாத எந்த ஒரு நிறுவனமோ, சமுதாயமோ அல்லது தேசமே என்றாலும் கூட திக்குத் தெரியாத கடல் நடுவே பொங்கியெழும் அலைகள் மத்தியில் இலக்கு இன்றித் தவிக்கும் கப்பல் போன்றது. தேசிய தொலைநோக்குப் பற்றிய தெளிவே மக்களைக் குறிக்கோள் நோக்கி உந்துவிக்கும் சக்தி ஆகும்'-4 என்றும்  குறிப்பிடுகிறார்.  இவரின் இக்கருத்துகளின் மூலம் இன்றைய நிலையில் தொலைநோக்குச் சிந்தனைகள் பற்றிய தெளிவையும், தேவையையும் நன்குணரலாம்.

 சிலம்பில் தொலைநோக்கு

            சிந்தனை என்பது எல்லோருக்கும் பொது. எந்த ஒரு சிந்தனையும் வெளிப்படுத்தும் வரையில் தனியொருவருக்கும், வெளிப்படுத்திய பின்பு சமூகத்திற்கும் உடைமையாகிறது. அவ்வகையில், தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டினை, பழக்க வழக்கங்களை, நீதி நெறிகளை, அரசியல் அணுகுமுறைகளை, இயற்கை வளங்களை, பெண்களின் நிலைகளை, பாதுகாப்பு தன்மைகளை, தனிமனித ஒழுக்கங்களை, சமுதாய வளர்ச்சிக்குத் தேவையான அணுகுமுறைகளைத் தெளிவாகவும், ஆழமாகவும் வெளிப்படுத்தி நிற்பது இளங்கோவின் சிலப்பதிகாரமாகும். பழமைக்கும் பழமையாய், புதுமைக்கும் புதுமையாய் விளங்கும் இக்காப்பியத்தின் சிறப்புகள் எண்ணிலடங்கா.  இச்சிறப்பிற்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் சிலம்பில் சிதறிக்கிடக்கும் சமூகத் தொலைநோக்குத் தொடர்பான சிந்தனைகளை வெளிக்கொணர்ந்து, அவற்றை இன்றைய நிலையில்  உலகப் பொதுமையாக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

 அரசியல்

            சமூகத் தொலைநோக்குத் தொடர்பான எண்ணங்களின் அடிப்படையில் முதலில் அமைவது அரசு சார்ந்த எண்ணங்களும், செயல்பாடுகளுமே. காரணம், ஒரு சமூகம் அல்லது ஒரு நாடு அதன் பொருளாதாரம், மக்கள் வளமை, நீதி, இயற்கை வளம் பேணுதல், பாதுகாப்பு, தனிமனித உரிமை மற்றும் செயல்பாடுகள், கல்வி, பெண்ணுரிமை ஆகியவற்றில் காட்டும் அணுகுமுறையே அந்நாட்டின் வளமைக்கும் மேலும், அந்நாட்டை பொருளாதார வல்லரசாக உயர்த்தவும் அடிப்படையாக அமைகிறது. இத்தன்மைகளின் அடிப்படையிலேயே ஒரு நாடு உலக அரங்கில் இனங்காணப்படுகிறது. இவ்வடிப்படையில் சிலம்பின் ஆசிரியர் தமிழ்ச்சமுதாயம் மட்டுமல்லாது எல்லா சமுதாயத்திற்கும் பொருந்துவனவாக கூறியுள்ள அரசியல் தொடர்பான தொலைநோக்குச் சிந்தனைகள் முதலில் சுட்டப்படுகின்றன.

           அரசியல் பிழையாமை

            சிலப்பதிகாரம் இயற்றப்படுதற்கு ஆசிரியர் கூறும் மூன்று காரணங்களில் முதலாவதாகவும், முதன்மையானதாகவும் வைத்துச் சுட்டப்படுவது அரசியல் பிழையாமையாகும். அரசு தன்னிடம் உள்ள அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தினாலோ, அல்லது ஆராய்ந்து பாராது நீதி உரைத்தாலோ, குடிமக்களை வரிகளால் வறுத்தினாலோ அவ்வரசு செங்கோன்மை கொண்டதாக  இருக்கமுடியாது. மக்களுக்குத் தாய்போல வேண்டியன வேண்டும் நேரத்தில் கொடுக்கும் அரசே நல்லரசாக அமைய முடியும். அப்படிப்பட்ட அரசையே சிலம்பின் ஆசிரியர் வலியுறுத்துகிறார். அரசியில் பிழையாமையே சிலம்பின் அடிப்படை நோக்கமாக அமைகிறது. இதனை, சிலம்பு இயற்றப்படுவதற்கான காரணங்களில் முதலாவதாக ஆசிரியர் சுட்டும்,

             அரைசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம் (பதிகம், 55-56)

 என்பதில் உணரலாம். அரசியல்  பிழையாமையின் முக்கியத்துவத்தையும், அரசியல் பிழைத்தால் அறமே அவர்களைக் கொல்லும்  என்ற ஆசிரியரின் எச்சரிக்கையும்  உலக அரசியல் அனைத்திற்கும் பொதுவான தொலைநோக்குப் பார்வையாக  அமைகிறது. சமூக முன்னேற்றத்தின் இன்றியமையாமைக்கு, அடிப்படைத் தடைகள் முதலில் அகற்றப்படுதல் வேண்டும்.  அரசியல் என்பது முழுமையாகச் சமூதாயத்தைப் பாதிக்கும் காரணி என்பதால், அரசியல் அறம் பேணுதல் என்பது இங்கு முதலாவதாக வலியுறுத்தப்படுகிறது.  வலியுறுத்தலோடு, பாண்டிய மன்னன் மூலம் செயல்வடிவப் படுத்தியும் காட்டுகிறார் ஆசிரியர்.

 பெண்களைப் பேணுதல்

            நாட்டில் பெண்கள் அச்சமற்று இருப்பதில் காவலும், மன்னனின் ஆட்சி சிறப்பும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.  ஒரு நாட்டில் பெண்கள் சுதந்திரமாக எந்தவித அச்சமும் இன்றி அவர்கள் கடமைகளை அவர்கள் ஆற்ற வேண்டும். அந்நாடே மகாத்மா காண விழைந்த சுதந்திர நாடாக இருக்க முடியும். ஒரு நாட்டின் பெண்கள் நிலையினையும், சுதந்திர தன்மையையும் அடிப்படையாகக் கொண்டே அந்நாட்டின் மதிப்பு பிற நாடுகளில் போற்றப்படுகிறது. சிலம்பில் காவேரியை மாதவி வாழ்த்திப் பாடும் கானல் வரி, காவேரியைப் பெண்ணாக உருவகித்து அந்தப் பெண் மகிழ்ந்து துள்ளித்திரிந்து இன்பமுற்றிருக்க காரணம் மன்னனின் ஆட்சி சிறப்பே என்பதாக அமைகிறது. இதன் மூலம் மேற்சுட்டிய வரையறையைக் கொடுக்கிறார் ஆசிரியர் இவ்வுண்மையை,

                   மருங்குவண்டு சிறந்தார்ப்ப மணிப்பூஆடை அதுபோர்த்துக்      

                   கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தாய்வாழி காவேரி

                   கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தவெல்லாம் நின்கணவன்

                   திருந்துசெங்கோல் வளையாமை அறிந்தேன்வாழி காவேரி

                                                                        (கானல் வரி (வேறு) 25-29)

என்பதிலும்,

                    பூவர்சோலை மயிலாலப் புரிந்துகுயில்கள் இசைபாடக்

                   காமர்மாலை அருகசைய நடந்தாய் வாழி காவேரி

                   காமர் மாலை அருகசைய நடந்த எல்லாம் நின்கணவன்

                    நாம வேலின் திறங்கண்டே அறிந்தேன் வாழி காவேரி (கானல் வரி, 29-32)

என்பதிலும் அறியலாம்.

 

            மேலும், அரிய வலிமையுடைய அரசர் செங்கோல் முறைப்படி அட்சி செய்தாலன்றிப் பெரும் புகழ் மகளிர்க்குக் கற்பு நிலை சிறப்புறாது என்பதை,

                    அருந்திற லரசர் முறைசெயி னல்லது 

                   பெரும்பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாதென

                                                (நடுகற் காதை, 207-208)

என்ற அடிகளில் வலியுறுத்துகிறார்.

             பெண்களின் தேவைகளை நிறைவு செய்து, அவர்களின் நலன் பேணி, அவர்களையும் சமுதாய வளர்ச்சியில் பங்கு பெறச் செய்தல் என்பது, வளரும் நாடுகளின் இன்றியமையாத தேவையாகிறது. பெண்களைச் சிறப்பு செய்தல் வேண்டும் என்ற  இளங்கோவின் நோக்கமே சிலப்பதிகாரம் தோன்ற வழிவகுக்கிறது.

 இதனை,

                        உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோ ரேத்தலும் (பதிகம், 56-57)

என்று   காப்பியம் படைக்க அடிப்படைக் காரணங்களில் ஒன்றாக அவர் கூறுவதிலிருந்து உணரமுடிகிறது.

 உள்நாட்டு வளத்தைப் பெருக்குதல்   

            நல்லரசின் தன்மையாவது, நாட்டு  மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதாகும். மக்கள் தங்களின் பொருளாதார மேம்மாட்டிற்காக வேற்றுநாடு செல்லலாமே அன்றி, அன்றாடப் பிழைப்பிற்காகவே வேற்றுநாடு செல்லும் அவலநிலைமைக்கு ஆளாகிவிடக் கூடாது. அந்நிலை வராது காத்தல் அரசின் கடமையாகும். இக்கருத்தை,  வலியுறுத்தி மதுரை மாநகரில் இத்தகையதொரு அவலநிலை இல்லை என்று பெருமை பாராட்டுகிறார் ஆசிரியர். மேலும், நாட்டுக்குப் பல செல்வத்தைத் தருவதும் மக்களுக்கு நிழலாக விளங்குவதும் ஆகிய அருளாட்சி முறையைக் கடமையாகக் கொண்டு சிறிதும் வழுவாது அரசாள்வது முக்கியம் என்கிறார் ஆசிரியர். இச்சிந்தனையை,

            நிலந்தரு திருவின் நிழல்வாய் நேமி

                   கடம்பூண் டுருட்டுமங் கௌரியர் பெருஞ்சீர்க்

          கோலின் செம்மையும் குடையின் தன்மையும்

                   வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கைப்

          பதியெழு வறியாப் பண்புமேம் பட்ட

                   மதுரை மூதூர்          (அடைக்கலக் காதை, 1-10)

என்ற மதுரை குறித்த புகழுரையில் முன்வைக்கிறார். பிழைப்புத் தேடி வேற்றுநாடு செல்லாதிருக்க தன் நாட்டின் உள்வளத்தைப் பெருக்குதல் அரசின் தலையாய கடமையென்பதை ஆசிரியர் குறிப்பால் உணர்த்துகிறார். மேலும், நாட்டில் குடிமக்களை வருத்தி வரி வசூலித்தல் கொடுங்கோன்மைக்கு வழி வகுக்கும் என்பது சிலம்பு ஆசிரியரின் கருத்து. இதன் வெளிப்பாடே மாடலமறையோனின் அறிவுரையால், இனி ‘குடிமக்களிடம் வரிவசூலிக்க வேண்டாம், நம் எல்லைக்கு உட்பட்டிருக்கும் சிற்றரசுகளும் நமக்குத் திறைப்பொருள் செலுத்த வேண்டாம்’ இதை இன்றே எல்லோருக்கும் தெரிவியுங்கள் என்று சேரன் செங்குட்டுவன் உத்தரவிடுதலாகும். வரிச்சுமையால் நாட்டை வளமையாக்குதல் இயலாது என்பதே ஆசிரியரின் எண்ணம் (நடுகற்காதை, 203-209).

 காட்சிக்கு எளிய தன்மை

            அரசன் என்பவன் காட்சிக்கு எளியனாக, கடுஞ்சொல் அற்றவனாக இருத்தல் வேண்டும். இத்தன்மையே அரசர் மக்கள் நல்லுறவை வளர்க்க அடிப்படையாகிறது. இப்பண்பே தலைமையோடு மக்களை இயைந்து போகச் செய்கிறது. மக்களின் தேவைக்கு ஏற்ப, தேவைப்படும் நேரங்களில் அரசனைச் சென்று காணும் வாய்ப்பினை வழங்குதல் வேண்டும். அரசனிடம் தம் குறைகளைச் சொல்லி நியாயம் பெற குடிமக்களுக்கு வழிவகைச் செய்து தருதல்  வேண்டும். இவ்வகையான அமைப்பு முறைகளை அரசாங்கம் கொண்டிருத்தல் வேண்டும் என்ற ஆசிரியரின் எண்ணவெளிப்பாடே கண்ணகி பாண்டியனிடம் நேரடியாக தன் குறைகளைச் சொல்ல அரண்மனை புகுவதும், பாண்டியனும் தடையேதும் கூறாது, கண்ணகியை அழைத்துவர உத்தரவிடுவதுமாகும். இவ்வகை அரசாங்க அமைப்பு இருந்தால், நாட்டில் எவ்விதமான குற்றங்களும் நிகழவாய்பில்லை என்பதும், அப்படியே நிகழ்ந்தாலும் தலைமையின் பார்வைக்கு நேரடியாக எடுத்துச்செல்லப்படும் என்பதும் இதன் மூலம் உணர்த்தப்படுகிறது.

 ஒற்றுமையின்  தேவை

            அரசு என்பது தன்நாட்டு மக்களை மட்டுமல்ல தனக்குக் கீழுள்ள சிற்றரசுகளையும் ஒற்றுமையாக, பூசலில்லாது வைத்திருக்கும் திறம் கொண்டதாக இருத்தல் வேண்டும். இன்றைய மத்திய மாநில அரசுகளுக்கும்கூட இதனைப் பொருத்திப் பார்க்கலாம். அடக்கி ஒன்றுபடுத்த முடியாது சிதைந்து போன ரஷ்யாவை இதன் எதிர்மறை விளைவிற்கு உதாரணம் கூறலாம். இவ்வுண்மையை, தனக்குக் கீழுள்ள ஆயிரத்தெட்டு சிற்றரசர்களையும் தன் ஆணைக்குக் கட்டுப்படுத்தி வைத்திருந்தான் திருமாவளவன் என்ற செய்தியால் அறியலாம். அவர்கள் அனைவரும் ஒருங்கு கூடி இருந்த அரிய காட்சியைச் சிலம்பின்,

                    ஆயிரத் தோரெட் டரசுதலைக் கொண்ட

                   தண்ணுறுங் காவிரித் தாதுமலி பெருந்துறை

                                    (இந்திர விழவூரெடுத்த காதை ,164-165)

என்ற அடிகள் காட்டுகின்றன. தன் குடிகளையும், தன் ஆட்சி அதிகாரத்தின் கீழுள்ள வேற்றரசர்களையும் தன் ஆணைக்குக் கட்டுப்படுத்தி, ஒன்றுபடுத்தி வைத்திருத்தல் தன்நாட்டு வளர்ச்சிக்கு மட்டுமல்லாது, எதிரிகளை எந்நேரத்திலும் எதிர்கொள்ளும் வலிமையையும் நாடு பெறுகிறது.

             மூவேந்தர்களையும் ஒன்றுபடுத்த எண்ணும் இளங்கோவின் தொலைநோக்கும்¢, ஒன்றுபட்ட தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற அவரின் எண்ணமும், செங்குட்டுவனின் வடதிசைப் படையெடுப்பின் போது வெளிப்படுகிறது. தமிழ் மன்னர்கள் அனைவரின் சார்பாகவும் செங்குட்டுவன் வடவர் மீது போர்த்தொடுத்தான் என்பதை,

                    காவா நாவின் கனகனும் விசயனும்

                   விருந்தின் மன்னர் தம்மொடுங் கூடி

                   அருந்தமிழாற்றல் அறிந்தில ராங்கெனக்

                   கூற்றம் கொண்டுஇச் சேனை செல்வது

                                                            (கால்கோட் காதை, 159-162)

என்பதன்வழி அறியலாம். கனகனும், விசயனும் செங்குட்டுவனை மட்டும் ஏளனம் செய்யவில்லை. ஒட்டுமொத்த தமிழ் மன்னர்களையே ஏளனம் செய்கின்றனர். இதனாலேயே செங்குட்டுவன் போர்த்தொடுக்கிறான். இவ்விடத்தில் தமிழக மன்னர்கள் ஒற்றுமையாக இருத்தல் வேண்டும். ஒரு குடையின் கீழ் நாடு ஆளப்படுதல் வேண்டும். அப்பொழுதுதான் நாடு வலிமைபெற முடியும் என்ற ஆசிரியரின் தொலைநோக்குப் பார்வை தெளிவாகிறது.

 போரில்லா உலகம்

            தமிழக மன்னர்கள் தங்களுக்குள் வேறுபட்டு ஒருவரோடு ஒருவர் போர்ச்செய்து நாட்டின் வளத்தைச் சீரழிக்கக் கூடாது என்பது இளங்கோவின் தொலைநோக்கில் உதித்த சிந்தனை. இதனை மாடலமறையோன் மூலம் வெளிப்படுத்துகிறார். செங்குட்டுவன் வடவர் மீது போர்த்தொடுத்துத் திரும்பிய வேளையில், சோழர் மற்றும் பாண்டிய மன்னர்கள், செங்குட்டுவனின் வடபுல வெற்றியை எள்ளி ஏளனம் செய்தனர். இதனால் சினங்கொண்ட செங்குட்டுவன் அவர்கள் மீது போர்தொடுக்க ஆயத்தமாகிறான். தம் படைகட்கும் ஆணையிடுகிறான். அவ்வேளையில் மாடலமறையோன் குறுக்கிட்டு போரின் ஆபத்தையும், அதனால் மக்கள் படும் துன்பத்தையும், நாடு அடையும் பொருளாதாரச் சீர்கேட்டையும் விரிவாக எடுத்துச் சொல்லி, போரைத் தவிர்த்து நல்லவற்றை நாட்கள் கடத்தாது இன்றே ஆற்றுக என்று அறங் கூறிப் போரைத் தடுத்துவிடுகிறான் (நடுகற் காதை, 129-188). இந்நிகழ்ச்சி, இளங்கோவின் போரில்லா உலகைக் காண விளையும் தொலைநோக்குப் பார்வையையும்¢, ஒன்றுபட்டால் தான் சமுதாயம் உயர  முடியும் என்ற உயரிய நோக்கையும் வலியுறுத்தி நிற்கிறது.

 வெள்ளிடை மன்றமும் - தொலைநோக்கும்

            களவு - ஒருவன் களவாடினால் அவன் களவாடிய பொருளை அவன்  தலையிலேயே சுமத்தி ஊரைச் சுற்றிவரச் செய்யவேண்டும். இது களவிற்கு ஆசிரியர் காட்டும் தண்டனையாகும். இதனால் திருடனை மக்கள் எளிதில் அடையாளம் காண்பதோடு, அவனும் நாணமடைவான். மறுமுறை அக்குற்றதைச்  செய்ய அவன் அஞ்சுவான் என்ற நோக்கத்தில்,

            உடையோர் காவலும் ஒரீஇய வாகிக்

          கட்போ ருளரெனிற் கடுப்பத் தலையேற்றிக்

          கொட்பி னல்லது கொடுத்த லீயாது   

          உள்ளுநர்ப் பனிக்கும் வெள்ளிடை மன்றமும்

                                                            (இந்திரவிழவூரெடுத்த காதை, 114-116)

 என்று கூறுகிறார் ஆசிரியர். இத்தண்டனை எந்நாட்டு கள்வர்களுக்கும் பொருந்தும் வகையில் அமைந்துள்ளது.

 பூதசதுக்க மன்றமும் - தொலைநோக்கும்

            தவ வேடத்தில் மறைந்து தீய ஒழுக்கத்தில் ஈடுபடும் போலி வேடதாரிகள், மறைந்து தீய நெறியில் செல்லும் ஒழுக்கமிலா மகளிர், அரசனுக்குக் கேடு சூழும் அமைச்சர், பிறர் மனைவியை விரும்புவோர், பொய் சாட்சி புகல்வோர், புறங்கூறுவோர் போன்றவர்களைக்  கொடிய குற்றவாளிகளாகக் கருதி இக்குற்றங்களுக்கு மரணதண்டனை வழங்கலாம் என்கிறார் ஆசிரியர். இக்கருத்து,

                    அவமறைந் தொழுகும் தன்மை யிலாளர்

                   அவமறைந் தொழுகும் அலவர் பெண்டிர்

                   அறைபோ கமைச்சர் பிறர்மறை நயப்போர்

                   பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளரென்

                   கைக்கொள் பாசத்துக் கைப்படு வோரென

                                    (இந்திர விழவூரெடுத்த காதை, 128-132)

என்பதில்  வலியுறுத்தப்படுகிறது. சிலம்பில் பூதசகுக்க மன்றத்தின் செயல்பாட்டில் ஆசிரியர் தீவிரம் காட்டுகிறார் என்பதை,  வேறு எம்மன்றத்தின் செயல்பாட்டிற்கும் சான்றுகள் காட்டாது, பூதசதுக்க மன்றத்தின் செயல்பாட்டிற்கு மட்டும் ‘பத்தினி ஒருத்தி மீது பழி சுமத்தியவனை கோவலன் எவ்வளவோ மன்றாடியும் பூதம் அடித்துக்கொன்றது’ (அடைக்கலக் காதை 76-90) என்று சான்று காட்டியமையை மாடலமறையோன் கூற்றில்  உணரலாம். இவை போன்ற குற்றங்களுக்கு மன்னிப்பு வழங்கப்படுதல் கூடாது என்பது ஆசிரியரின் கருத்து. சமுதாயத்தில் குற்றம் குறைய இத்தீவிரத் தன்மை தேவைப்படுகிறது.

 பாவை மன்றமும் - தொலைநோக்கும்

            அரசின் செங்கோலாட்சி மாறுபடினும், அறங்கூறும் அவையில் நீதியுரைப்போர், நீதி தவறினும் அதனைச் சுட்டிக் காட்டி நீதியை நிலைநாட்டும் அமைப்பு வேண்டும் என்ற ஆசிரியரின் எண்ண வெளிப்பாடே சிலம்பில் சுட்டும் ‘பாவை மன்றம்’ ஆகும். அரசனது செங்கோலாட்சி சிறிது மாறுபடினும், அறங்கூறும் அவையில் நீதியுரைப்போர், நீதிநூலுக்கு மாறுபட்ட ஒருபால் சார்ந்து நீதி உரைக்கினும், நாவால் ஒன்றும் கூறாது துன்பக் கண்ணீர் சொரிந்து அழும் பாவை நிற்கும் ‘பாவை மன்றம்’ ஒன்றும் புகாரில் இருந்தது என்கிறார். பாவை என்பதை நீதி தேவதை என்றே கொள்ளலாம். இதனை,

                      அரைசுகோல் கோடினும் அறங்கூ றவையத்து

உரைநூல் கோடி ஒருதிறம் பற்றினும்

நாவொடு நவிலாது நவைநீர் உகுத்துப்

பாவைநின் றழூஉம் பாவை மன்றமும்

                                                            (இந்திர விழவூரெடுத்த காதை, 135-137)

என்ற அடிகளில் உணர்த்துகிறார் ஆசிரியர். நாவொடு நவிலாது என்றமை அரசாங்கத்தைத் தூற்றி அதன் மூலம் மக்கள் மனதில் மாறுபாட்டினை  விளைவிக்காது, அரசாங்கத்தின் தவற்றைச் சுட்டிக்காட்டி திருத்துதல் என்று கொள்ளல் வேண்டும். இவை போன்ற பாவை மன்றங்களின் செயல்பாடுகள் அரசாங்கத்தின் கட்டுப்பாடின்றி, நீதியை நிலைநாட்ட சுதந்திரமாக இயங்குதல் வேண்டும் என்ற ஆசிரியரின் தொலைநோக்கு, நன்னெறியை விரும்பும் அனைத்துச் சமுதாயமும் ஏற்றுக்கொள்ளும் ஒன்றாகும்.

 கல்வி

      கல்வியின் அருமை சிலம்பில் சுட்டப்படுகிறது. மனம் என்பது இளம் யானையைப்  போன்றது. அது தனக்குத் தோன்றிய வழிகளில் செல்ல எத்தனிக்கும். அந்த மனம் என்னும் யானைக்குப் பாகன் போன்றது கல்வி.  அந்தக் கல்வியானது மனமென்னும் யானையைத் தன் வலியால் அடக்கி செலுத்துதலே சிறப்பைத் தரும். அப்படிப்பட்ட கல்வியைப் பாண்டியர் பெற்றிருந்தனர் என்பதை,

                   மடங்கெழு நோக்கின் மதமுகந்  திறப்புண்டு

                   இடங்கழி நெஞ்சத்து இளமை யானை

                   கல்விப் பாகன் கையகப் படாஅது

                   ஒல்கா வுள்ளத்தோடு மாயினும்

                   ஒழுக்கொடு புணர்ந்த விவ்விழுக்குடிப் பிறந்தோர்க்கு

                                                                        (கட்டுரைகாதை, 35-40)

என்ற அடிகள் சுட்டுகின்றன. இதன்மூலம் கல்வியின் பெருமையும், இன்றியமையாமையும் சிந்தனைகளோடு செயல்வடிவிலும் ஆசிரியரால் காட்டப்படுகிறது.

 வளமை

            ஒரு நாடு தன்னுடைய அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யவும், பொருளாதார மேம்பாடு அடையவும் அந்நாடு வேளாண்மை பெருக்கம், தொழில் புரட்சி மற்றும் தொழில் நுட்பம்,  வெளிநாட்டு வாணிகம் மற்றும் மூலதனம், மக்கள் ஆரோக்கியம் ஆகியவற்றில் வளமை பெற்றதாக இருத்தல் வேண்டும். இவற்றோடுகூடி இயற்கை வளமும் (காடு, மலை, கடல்) அமையப்பெற்றால் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் இலக்கு எளிதில் கிட்டும். இத்தகையதொரு நிலை பண்டை தமிழகத்தில் இருந்தமையைச் சிலம்பில் காணமுடிகிறது.

 மக்கள் வளம்

            ஒரு சமுதாயம் எல்லாவகையான வளங்களும் பெற்று சிறப்புற அங்கு வாழும் மக்கள் பசி, பிணி, பகை இன்றி வாழ்தல் அவசியமாகிறது. சமுதாயம் மேம்பாடு அடைய முதலில் மக்களை உடல், மனம் இரண்டிலும் வளமானவர்களாக ஆக்குதல் வேண்டும்.

             பசியும், பிணியுமே ஒரு நாட்டின் உள்நாட்டுப் பகையாகிறது. இவை களையப்படுதல் வேண்டும். பசியும் பிணியும் நீங்கினால், பகை நீங்க வழி பிறக்கும். இதன் அடிப்படையிலேயே,

பசியும் பிணியும் பகையும் நீங்கி

வசியும் வளனுஞ் சுரக்கென வாழ்த்தி             

                                    (இந்திர விழவூரெடுத்த காதை, 71-73)

            என வாழ்த்துகிறார் ஆசிரியர். பிணி என்பதை இரண்டாகக் கொள்ளலாம். ஒன்று உடலில் வெளிப்படையாகத் தோன்றும் பிணி. மற்றது வெளியில் தெரியாமல் மன அளவிலும், உள்ளும் பாதிப்பினை ஏற்படுத்தும் பிணி. இந்த இரண்டு வகையான பிணிகளையுமே களைதல் வேண்டும் என்பது ஆசிரியரின் எண்ணம். மக்களின் வளமான வாழ்விற்கு இவையே இன்றியமையாதனவாகின்றன.

             கூனர், குறளர் (குள்ளர்), ஊமையர், செவிடர், உடல் அழுகும் தொழு நோயாளர் ஆகியோர் முழுகி நீராடிய அளவிலே பழுதில்லாத நல்ல தோற்றத்தைப் பெற்று வலம் செய்து தொழுது நீங்குதற்குரிய பொய்கையினையுடைய ‘இலஞ்சி மன்றம்’ ஒன்று புகாரில் இருந்தது என்பதை,

                     கூனும் குறளும் ஊமும் செவிடும்

அழகுமெய் யாளரும் முழுகின ராடிப்

பழுதில் காட்சி நன்னிறம் பெற்று

வலஞ்செயாக் கழியும் இலஞ்சி மன்றமும்

                        (இந்திர விழவூரெடுத்த காதை, 118-121)

என்றும்,

            வஞ்சனையாகச் சிலர் மருந்து தர உண்டு பித்தேறினாரும், நஞ்சை உண்டு நடுங்குதுயர் உற்றாரும், அழலும் விடத்தையுடைய பாம்பின் கூரிய பற்கள் அழுந்திக் கடியுண்டாரும், பிதுங்கிய கண்ணையுடைய பேயால் கடுந்துன்பமுற்றாரும், சுற்றி வந்து தொழுத உடனே, அவர்தம் துன்பமெலாம் நீங்குகின்ற, ஒளி சொரியும் நெடிய கல் நாட்டி நிற்கும் ‘நெடுங்கல் மன்றம்’ ஒன்றும் புகாரில் இருந்தது என்பதை,

 

வஞ்ச முண்டு மயற்பகை யுற்றோர்

நஞ்ச முண்டு நடுங்குதுய ருற்றோர்

அழல்வாய் நாகத் தாரெயி றழுந்தினர்

கழல்கண் கூளிக் கடுநவைக் பட்டோர்

                      கழல வந்து தொழத்துயர் நீங்கும்

                      நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றமும்

                                    (இந்திர விழவூரெடுத்த காதை, 122-127)

என்றும் குறிப்பிடுவதின் மூலம் இவை போன்ற குறையாடுகள் நீக்கப்பட வேண்டியதன் இன்றியமையாமையை வெளிப்படுத்துகிறார் ஆசிரியர். மக்கள் நலனில் அக்கறை கொண்ட எந்த ஒரு சமுதாயமும் இக்கருத்தில் மாறுபாடு கொள்ளாது என்பது திண்ணம். மக்கள் வளமையே ஒரு நாட்டின் வளமை. அவர்கள் உடல், மனம் இரண்டிலும் வளமானவர்களாக இருத்தல் வேண்டும். அதற்கு ஆசிரியர் காட்டியுள்ள இலஞ்சி மன்றம், நெடுங்கல் மன்றம் போன்றவை இருந்திருக்குமா? என்ற ஐயம் தோன்றினும்,  இது போன்ற பிணிகளுக்குத் தீர்வு காண மருந்துகளும், மனைகளும் தேவை என்ற ஆசிரியரின் தொலைநோக்குப் பார்வை சிந்திக்கத்தக்கது.

 தொழில் வளம்

            சிலம்பில் அக்கால தொழில் வளர்ச்சியின் உச்சத்தை ஆசிரியர் பல இடங்களில் விளக்கமாகவே காட்டியுள்ளார். தானியம், பொன், நவரத்தினங்கள், துணிகள், போன்றவற்றிற்குத் தனித்தனி வீதிகள் அமைத்து அவற்றிற்கென தனித்தனி கொடிகள் அடையாளங்களாக விளங்கின என்பதை இந்திரவிழவூரெடுத்த காதையில் காண முடிகிறது. புகார் மட்டுமல்ல மதுரையிலும் இது பொன்ற வளமையை  ஆசிரியர் காட்டுகிறார். ஊர்க்காண் காதையில்  வெவ்வேறு வகையான பொருளுக்கு வேறுவேறு தெருக்கள் இருந்தமையைச் சுற்றிக் காட்டுகிறார்  ஆசிரியர்.  ஒரு நாடு பொருளாதார தன்னிறைவு அடைவதில் தொழில் வளத்தின்  பங்கினை இதன் மூலம் உணரலாம்.

      சிலம்பின்  இந்திர விழவூரெடுத்த காதை மற்றும் ஊர்காண் காதை இரண்டிலும் நாட்டின் தொழில் வளத்தோடு  வாணிகத்தின் சிறப்பும்  உணர்த்தப்படுகிறது. மேலும், கடல் வாணிகத்தின் முக்கியத்துவம் இப்பகுதிகளில் காணப்படுகிறது. இந்திரவிழவூரெடுத்தகாதையின் மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் ஆகிய இரு நகரங்கள் தொழில் வளத்தை, வாணிகத்தின் சிறப்பை உணர்த்துவனவாக அமைந்துள்ளன.  நாட்டின் பொருளாதார வலிமைக்குத் தொழில் வளத்தின் இன்றியமையாமையை இதன் மூலம் உணரலாம். இதே போல் ஊர்காண் காதையில் ஆசிரியர் மதுரையின் தொழில்வளத்தைக் காட்டுகிறார். இங்கு மதுரையின் தொழில் வளமும், வணிகத்தின் சிறப்பும் காட்டப்படுகிறது. வளர்ச்சியுற்ற நாடுகளின் நிலைப்புத் தன்மைக்கும், வளரும் நாடுகளின்  வீச்சுக்கும் தொழில் வளமை அடிப்படையாவது இங்குத் தெளிவாகிறது.

 இயற்கை வளம்

    சிலம்பில் மலை வளத்தின் சிறப்பும், மழை வளத்தின் அருமையும் உணர்த்தப்படுகின்றன.  வஞ்சிக்காண்டதின் காட்சிக் காதையில் செங்குட்டுவனைக் காணவரும் வேட்டுவர்கள் கொண்டுவரும் பொருட்களாக, யானையின் தந்தங்கள், அகிற்கட்டைக் குவியல், மான் மயிர்க்கவரி, தேன்குடங்கள், சந்தனக்கட்டை, சிந்தூரக் கட்டி, அஞ்சனத்திரள், கஸ்தூரி, ஏலக்கொடி, மிளகுக்கொடி, கூவைக் கிழங்கின் பொடி, கவலைக்கொடிக் கிழங்குகள், தென்னையின் நெற்றுக்கள், இனிமையான மாம்பழங்கள், பச்சிலை மாலை, பலாப் பழங்கள், வெள்ளுள்ளி, கரும்பு, கமுகின் குலைத்தாறுகள், வாழைப்பழக் குலைகள், ஆளிக்குட்டிகள், சிங்கக் குட்டிகள், யானைக் குட்டிகள், குரங்குக் குட்டிகள், வளைந்த காலையுடைய கரடிக்குட்டிகள், வரையில் விளையாடும் ஆடுகள், வருடை மான்கள், மான் குட்டிகள், கஸ்தூரி மானின் குட்டிகள், காட்டுக்கோழி, தேன்போலும் இனியமொழி பேசும் கிளி ஆகிவற்றை மலைமேல் வாழும் குறவர்கள் தம் தலைமேல் கொண்டவராக வந்து நின்றனர் என்று குறிப்பிடுகிறார்(காட்சிக்காதை,33-55).

      இதன்மூலம்,மலைவளத்தின் இன்றியமையாமையையும், அதன் பயன்பாட்டையும், மலைகள் பெற்றிருக்க வேண்டிய பொருள்களையும்  சுட்டி, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அதன் பங்களிப்பினை உணர்த்துகிறார்.

மழைவளம்

            நாட்டு வளம் குறித்த பல்வேறு ஒலிகளைக் குறிப்பிடும் இடத்து, கரு முற்றிய பருவ மேகமானது பெயலாகிய மழை வளத்தை நிரம்ப வழங்கும். அதனால் அக்குட மலையில் பிறந்த கொழுவிய பல்வேறு பண்டங்களுடன் விரைந்து வந்து, கடல் தன் வளங்களோடு எரிரும் வண்ணம், புகு முகத்தைத் குத்தியிடிக்கும் காவிரி புதுநீர், மதகில் இட்ட கதவின் மீது வீழ்தலால் எழும் ஒலியே எங்கும் கேட்கும். பன்றிப் பத்தரும் பூட்டைப் பொறியும் ஒலி மிகு ஏத்தமும் நீரை முகந்து கொண்டு உயர்கின்ற இறை கூடையும் எனக் கூறப்படும் நீர் இறைக்கும் கருவிகள் எங்கும் ஒலித்தல் இல்லை!

             இவ்வாறு ஏற்பட்ட மழை வௌ¢ளத்தின் ஒலியால், செந்நெற் பயிரும் கரும்பும் சூழ்ந்த மருத நிலத்தில், பசுமையான தோற்றத்துடன் கூடிய பூவையுடைய தாமரைக் காட்டில் சம்பங்கோழியும், மிக்கொலிக்கும் குரலையுடைய நாரையும், சிவந்த காலையுடைய அன்னமும், பசிய காலையுடைய கொக்கும், கானக் கோழியும், நீரிலே நீந்தும் இயல்புடைய நீர்க் காக்கையும், உள்ளானும் குளுவையும், கணந்துட் புள்ளும், பெருநாரையும் வெல்லும் போர்க் களத்தில் எழும் ஒலி போல, பல்வேறு வகைப்பட்ட திறத்தால் ஒலிக்கும் ஓசை இடையறாது எங்கும் கேட்கும். என்று மழை வளத்தால் எல்லா உயிர்களும் இன்பமுற்றிருந்தன என்பதை உணர்த்துகிறார். ஒரு நாட்டின் வளத்தில் மழைபொழிவு என்பது முக்கியப் பங்காற்றுகிறது. அம்மழை வளத்தினைப் பெருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்பதும், மேலும், இயற்கை செல்வங்களான பறவைகள், விலங்குகள், மரங்கள் போன்றவற்றைப் பாதுகாக்க வேண்டும்  இங்கு வலியுறுத்தப்படுகிறது. (நாடுகாண் காதை 102-139)

 பரத்தமை ஒழிப்பு

            பரத்தமை ஒழிப்பில் ஆசிரியர் தனிக்கவனம் செலுத்தியுள்ளார் என்பது தெளிவு. காரணம்  சிலம்பின் பல இடங்களில் பரத்தமைக்கு எதிரான கருத்துகளும்¢ சொற்களும் இடம்பெறுவதே. கணிகையர் ஒன்று திருமண வாழ்வில் ஈடுபட வேண்டும்  இல்லையேல்  துறவறம் பூணுதல் வேண்டும். பரத்தையராக வாழ்ந்து சமுதாய நலனுக்குத் தீங்கு விளைவித்தல்¢ கூடாது என்பதே ஆசிரியர் கருத்தாக அமைகிறது. இதனை மாதவி வாழ்க்கையின் வழியும், அவள்தம் வார்த்தையின் வழியும் உணர்த்துகிறார் ஆசிரியர்.

             மாதவியானவள் கோவலனுக்கு உரிமையாகி அவன் ஒருவனுக்காகவே வாழ்கிறாள். இங்கேயே கணிகையருக்கான வரையறையைத் தகர்த்து விடுகிறார் ஆசிரியர்.  இவ்வாழ்க்கையிலும்  தோல்வியுற, மணிமேகலையைக் கணிகையாக வளர்க்காதே என்று தன் தாயிடம் கட்டளை இடுகிறாள் மாதவி. இதனை ,

                   மணிமே கலையை வான்துயர் உறுக்குங்¢

                   கணிகையர் கோலங் காணா தொழிகென   

                                                (நீர்ப்படைக் காதை,105-106)

என்ற அடிகள் தெளிவாக்குகின்றன. இவ்விடத்தில் இது மாதவி கூற்றாக அமையினும் ஆசிரியரின் தீர்க்கமான முடிவாகவே கொள்ளப்படுகிறது. ஆசிரியரின் இவ்வெண்ணத்திற்கு வலு சேர்க்க,

                   மேலோ ராயினும் நூலோ ராயினும்

                   பால்வகை தெரிந்த பகுதியோ  ராயினும்

                   பிணியெனக் கொண்டு பிறக்கிட்டு ஒழியும்

                   கணிகையர் வாழ்க்கை கடையே போன்மெனச்

                                                (காடுகாண் காதை, 180-183)

என்று கானுறை தெய்வம் மூலமும்,

‘கடைகழி மகளிர் காதலஞ் செல்வரொடு’ (ஊர்காண் காதை,71)

என்று ஆசிரியர் வாய்மொழியாகவும்,

போற்றா ஒழுக்கம் புரிந்தீர்’ (கொலைக் களக் காதை, 81)

என்று கண்ணகி கூற்றின் மூலமும்,  நூலின் தொடக்கம் முதலே பல இடங்களிலும் தம் கருத்தை நேரடியாகவும், கதாபாத்திரத்தின் வழியும்  வலியுறுத்தி வருகிறார் என்பது புலப்படுகிறது. இதன் வழி பரத்தமை ஒழுக்கம் சமுதாய நலனிற்குக் கேடாக அமையும் என்பதும், இவ்வொழுக்கம் அறவே அகற்றப்படுதல் வேண்டும் என்ற கருத்தில் ஆசிரியர் காட்டும் தீவிரமும் உணர்த்தப்படுகிறது. பரத்தையருக்காக தனியே தெருக்களே இருந்துள்ள ஒரு காலகட்டத்தில் அவ்வகையான ஒழுக்கம் கூடாது என்று சிந்தித்து, அதை சிலம்பில் செயல்படுத்திக் காட்டிய இளங்கோவின் தொலைநோக்குப் போற்றற்குரியது.

 தொகுப்பு

  • அரசியல் பிழையாமை, அரசியல் மதிநுட்பம்,  பெண்கள் முன்னேற்றம், உள்நாட்டு வளத்தினைப் பெருக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துதல்
  • ஒற்றுமையே சமூதாய வளர்ச்சியின் அடிப்படைத் தேவை என்பதை வலியுறுத்தல்
  • போரில்லா சமுதாயம் உருவாக வேண்டியதன் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்துதல்
  • சமுதாய முன்னேற்றத்தைப் பாதிக்கும் களவு போன்ற குற்றங்கள் களையப் படுதல் வேண்டியதன் இன்றியமையாமையைத் தெளிவாக்கல்.
  • பொய்சாட்சி சொல்லுதல், பிறர் மனை நயத்தல், புறங்கூறுதல், மறைந்து நின்று தீய நெறியில் செல்லும் மகளிர், தவ வேடத்தில் இருக்கும் பொய் வேடதாரிகள் போன்றோரின் குற்றங்கள் சமுதாய நலனுக்குக் கேடு என்பதால் அவற்றை அடியோடு களைய வேண்டியதன் அவசியத்தை உணர்த்துதல்
  • அரசனது செங்கோலாட்சி சிறிது மாறுபடினும், அறங்கூறும் அவையில் நீதியுரைப்போர், நீதிநூலுக்கு மாறுபட்ட ஒருபால் சார்ந்து நீதி உரைக்கினும் அவற்றையும் சுட்டிக்காட்ட அரசாங்கங்களுக்கு அப்பாற்பட்ட அமைப்புகள் வேண்டும் என்ற  கருத்தை வலியுறுத்தல். 
  • கல்வியின் முக்கியத்துவத்தையும், அக்கல்வி பொதுமையாக்கப்பட வேண்டியதன் இன்னியமையாமையையும் முன்வைத்தல்
  • நாடு இயற்கை வளம், மழை வளம், தொழில்வளம், மக்கள் வளம் போன்றவற்றைப் பெற்றிருத்தலின் தேவையை உணர்த்துதல்
  • சமுதாய வளர்ச்சிக்கு நாட்டின் உள்நாட்டு மூலதனத்தைப் பெருக்குவதோடு, மக்களின் மனவலிமை, உடல் வலிமை இரண்டையும் வளமானதாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தைச் சுட்டுதல்.
  • சமூகச் சீர்கேட்டில் பரத்தமை ஒழுக்கத்தின் பங்கினைச் சுட்டி, அதனால்            அப்பரத்தமை ஒழுக்கம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துதல்
  • நாட்டின் தலைமையையும் கடைநிலை குடிமக்களும் நேரடியாகச் சந்தித்துத் தம் குறைகளைச் சொல்லி நீதி பெறும் வண்ணம் அரசன் காட்சிக்கு எளியனாக இருத்தலின் இன்றியமையாமையை உணர்த்துதல்

 போன்ற சமூகத் தொலைநோக்குச் சிந்தனைகள் சிலம்பில் இளங்கோவடிகளால்  சிந்தித்துச் செயல்படுத்தப்படுகின்றன.

    நற்சிந்தனை என்பதும், நன்னெறி புகட்டுதல் என்பதும் எல்லாச் சமூகத்திற்கும் உரியதென்றாலும், அச்சிந்தனைகளை உலகப் பொதுமையாக்கிப் பார்ப்பதென்பது அச்சிந்தனைகளின் தெளிவையும், செறிவையும் பொறுத்தே அமைகிறது. அவ்வகையில் சிலம்பில் இளங்கோ உணர்த்தும் சிந்தனைகளும், தொலைநோக்குப் பார்வையும், அவற்றின் செயல்பாடுகளும் உலக சமூகத்திற்குப் பொருத்திப் பார்க்கும் அளவில் அமைந்திருப்பது, தமிழர்களின் அறிவு நுட்பத்தினையும், உலகப் பொதுமைநோக்கையும், சிந்தனைச் செறிவையும் , சீர்தூக்கிப் பார்க்கும் திறனையும் வெளிக்காட்டுவனவாக அமைகின்றன.

   பழந்தமிழ் இலக்கியங்கள் ஒவ்வொன்றிலும் காணப்படும் இவைபோன்ற தொலைநோக்குச் சிந்தனைகளையும், செயல் திட்டங்களையும் வெளிக்கொணர்வது உலக சமுதாயம் முழுமைக்கும் வழிகாட்டுவதாக அமையும் என்பது திண்ணம்.

 அடிக்குறிப்பு

1. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, தமிழ்-தமிழ்-ஆங்கிலம், முதல் பதிப்பு 1992

 2. தமிழ் இலக்கியத்தில்     எதிர்காலவியல் - முனைவர் ச. சிவகாமி                                                    உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்    சென்னை - 600 113.

3. இந்தியா 2020. ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் உடன் ய.சு.ராஜன்           

          நியூசென்சுரிக்ஹெஸ்(பி) லிட்,   சென்னை-98

4. இந்தியா 2020. ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்  உடன் ய.சு.ராஜன்          

           நியூசென்சுரி புக்ஹெஸ்(பி) லிட், சென்னை-98

 

முதன்மை நூல்கள்:

1. சிலப்பதிகாரம், ந.மு. வேங்கடசாமி நாட்டார், திருநெல்வேலி தென்னிந்திய சைவசிந்தாந்த நூற்பதிப்புக் கழகம், 154, டி.டி.கே. சாலை,சென்னை.

2. சிலப்பதிகாரம் மூலம் தெளிவுரையும் , ஜெ.ஸ்ரீசந்திரன் எம்.ஏ, வர்த்தமானன் பதிப்பகம், ஏ.ஆர்.ஆர். காம்ப்ளக்ஸ், 141, உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை.