திங்கள், 17 ஆகஸ்ட், 2020

பதிற்றுப்பத்தில் பல்துறைத் தொழில்நுட்பம்

ஆ. மணவழகன், முனைவர் பட்ட ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
சென்னை.113.

(இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாய்வு மன்றம், கருத்தரங்கம், மே, 22,23-2004)

 

            ஒரு நாட்டின் வளமைக்கும் வளர்ச்சிக்கும் அந்நாடு தொழில்நுட்ப அறிவினைத் தம்முள் கொண்டிருப்பதும், பல்துறைகளிலும் தொழில்நுட்ப உத்திகளைக் கையாள்வதும் அடிப்படையாக அமைகிறது. தொழில்நுட்பக் கூறுகளைப் பயன்படுத்தாத எந்த ஒரு நிறுவனமோ, துறையோ அல்லது நாடோ தன்னிறைவு பெறுதலும் வளர்ச்சி காண்பதும் அரிதாகிறது. இன்றைய நிலையில் வளர்ந்த நாடுகள் வரிசையில் உள்ள அனைத்து நாடுகளுமே, தங்கள் வளர்ச்சிக்குத் தொழில்நுட்பத்தினையே மூலதனமாக்கியுள்ளன என்பது கண்கூடு. வளர்ந்துவரும் நாடுகளும் அவ்வழியைப் பின்பற்றியே தங்களை வளர்த்துக் கொள்வதைக் காணமுடிகிறது.

             நாட்டில் பல்வேறு மூலப்பொருள்கள் மண்டிக்கிடப்பதாலேயே அந்நாடு தன்னிறைவு பெற்றதாகவோ, வளர்ச்சியடைந்ததாகவோக் கொள்ள முடியாது. மூலப்பொருட்களை அதிகம் பெற்றிறாத, அதே வேளையில் தொழில்நுட்ப வல்லமை கொண்ட அமெரிக்க ஐக்கிய நாடுகள்  இன்று வல்லரசுகளில் முதன்மையானதாக  விளங்குவதில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை நன்குணரலாம். இவ்வகையில், வல்லரசுகளின் பட்டியலில் இடம்பிடிக்க நம்நாடு முனைந்துவரும்  இவ்வேளையில்,  சங்க இலக்கியங்களின் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான பதிற்றுப்பத்தின் வழி, நம்முன்னோர்கள் தன்னிறைவு பெற்ற சமுதாயத்திற்கு வித்திடும் தொழில்நுட்ப வல்லமை பெற்றிருந்தனர் என்பதை விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

  வேளாண் தொழில்நுட்பம்

                         ‘சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்

                         உழந்தும் உழவே தலை’ - குறள். 1031

 என்றார் வள்ளுவர். ஒரு நாடு பல்வேறு தொழில்களில் வளமை பெற்று, சிறந்தோங்கினாலும்,  அவ்வெல்லாவற்றிற்கும் அடிப்படையாக அமைவது வேளாண்துறையே. வேளாண்துறையைச் சார்ந்தே நாட்டின் அத்துனை செயல்பாடுகளும் அமைகின்றன. பசியில்லா உலகையும், நோயில்லா வாழ்வையும் அளித்தல் அரசின் கடமையாகிறது. இந்நோக்கில் வேளாண்துறையை மேம்படுத்த, வேளாண் உற்பத்தியைப் பெருக்க அத்துறையில் பழந்தமிழர் பயன்படுத்திய நுட்பங்களைப் பதிற்றுப்பத்து காட்டுகிறது. ‘அகல உழுதலை விட ஆழ உழுதல் நன்று’ என்பது தமிழர்களின் வாக்கு.  இந்த உண்மையைப் பதிற்றுப்பத்தும் காட்டுகிறது. நிலத்தில் மணிகள் தோன்றும் அளவிற்கு ஆழ உழுகின்ற காட்சியை,

             ‘புன்புலம் வித்தும் வன்கை வினைஞர்

            சீருடைப் பல்பக டொலிப்பப் பூட்டி

            நாஞ்சி லாடிய கொழுவழி மருங்கின்

            அலங்குகதிர்த் திருமணி பெறூஉம்’-பதி. 58:15-18

 என்ற பாடலடிகள் காட்டுகின்றன. சிறந்த பல கடாக்களை அவற்றின் கழுத்தில் கட்டப்பட்ட மணிகள் ஒலிக்கும்படி பூட்டி உழுவர். அங்ஙனம் உழுத கலப்பையின் கொழுச் சென்ற படைச் சாலின் பக்கத்தில் ஒளிக்கதிரையுடைய  அழகிய மணிகளைப் பெறுவர் என்கிறது இவ்வடிகள்.

 அதேபோல பன்றிகள் தம் கூறிய முகத்தால் நிலத்தை ஆழ உழுது மண்ணைப் புரட்டிப் போட்டதால், அந்நிலம் கலப்பை கொண்டு உழ வேண்டா நிலையை எய்தின என்பதை,

             ‘ஏறுபொருதசெறு வுழாதுவித்துநவும்’-பதி.13:2

 என்ற அடியும்,

             ‘களிறா டியபுல நாஞ்சி லாடா’-பதி.26:2

 என்ற அடியும் காட்டுகின்றன.

 மேலும், வேளாண்தொழிலில் பலவிதமான  விதைகளைப் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்கினர் என்பதை,

                 ‘பல்விதை யுழவிற் சில்லே ராளர்’-பதி.76:11

 என்ற அடி குறிப்பிடுகின்றது.

 நிலத்தை ஆழ உழுதலும், பல்வேறு வித வித்துக்களைப் பயன்படுத்துதலும் சிறந்த தொழில்நுட்பமாக அமைவதைப் போலவே, வேளாண்மைக்குத் தேவையான நீரினைப் பெரும் வழிமுறைகள் குறித்து ஆலோசிப்பதும் அவசியமாகிறது. காட்டாற்று வௌ¢ளம் கரைபுரண்டு ஓடி கடலில் கலப்பதால் நன்மை இல்லை. அந்நீரைத் தடுத்து அணைகள் பல கட்டி, நீரினை முறையாக சேமித்து பாசனத்திற்குப் பயன்படுத்துவதென்பது சிறந்த தொழில்நுட்ப அறிவின் வெளிப்பாடாக அமைகிறது. அவ்வகையில், ஆற்றுநீரைத் தடுத்து அணைகள் பல கட்டப்பட்ட செய்தியினைப் பதிற்றுப்பத்துக் காட்டுகிறது. பெருக்கெடுத்து வரும் புனலை அடைக்கும் உழவர்களின் ஓசை கேட்கும் என்பதை,

             ‘போர்த்தெறிந்த பறையாற்  புனல்செறுக் குநரும்’-பதி.22-28

 என்ற அடியும். கட்டப்பட்ட அணைகளில் நீர் நிரம்பி வழிந்து ஓடும் காட்சியை,

             ‘பொய்கை வாயிற்  புனர்பொரு புதவின்’-பதி 27:9

           என்ற அடியும் சுட்டுவதைக் காணலாம். இதைப் போலவே, பெருக்கெடுத்து வரும் வௌ¢ளத்தை வைக்கோற் புரிகொண்டும் மணற்கொண்டும் தேக்கினர் என்பதை,

             ‘சிறைகொள் பூசலிற் புகன்ற வாயம்’-பதி.30:19

 என்ற பதிற்றுப்பத்தின் அடியும் உணர்த்துவதைக் காணலாம்.

             நிலத்தைப் பண்படுத்துதல், பல்வித வித்துக்களைப் பயன்படுத்துதல், நீரினைத் தேக்கி வைத்தல் போன்ற நுட்பமான செயல்களில் வேளாண் உற்பத்தியைப் பெருக்கியதோடு, விளைபொருளில் இருந்து வேற்றுபொருளைப் பிரித்தெடுக்க இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட நுட்பத்தையும் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.

             ‘கரும்பின் எந்திரம் களிற்றெதிர் பிளிற்றும்’ -ஐங்குறு. 55

 என்கிறது ஐங்குறுநூறு.  இவ்வெந்திரத்தினைப் பற்றிப் பதிற்றுப்பத்தும் சுட்டுகிறது. இதனை,

              ‘தீம்பிழி யெந்திரம் பத்தல் வருந்த’பதி.19:23

 என்பதில் காணலாம்.

 நெசவுத்தொழிலில் நுட்பம்

             பழந்தமிழர் வேளாண்மைக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றிய தொழில் நெசவுத்தொழிலாகும். பழந்தமிழர் பலவண்ண ஆடைகளையும், ஆடைகளில் பல வேலைப்பாடுகளையும் செய்தனர். அத்தோடு மிக மெல்லிய துணிவகைகளை வேற்றுநாட்டிற்கு ஏற்றுமதியும் செய்தனர் என்பன போன்ற உண்மைகளைச் சங்க இலக்கியங்களிலும், சிலபதிகாரம் போன்றவற்றிலும் காணமுடிகிறது. கையில் நூற்கப்படாத துணையைப் பற்றி பதிற்றுப்பத்து,

             ‘நூலாக் கலிங்கம் வாலரைக் கொளீஇ’-பதி.12:21

 என்று மொழிகிறது. நூலாக் கலிங்கத்திற்கு, நூற்கப்படாத பட்டால் ஆன ஆடை என்று பொருள் கொள்வர்.  கந்தலான ஆடையை நீக்கி இது போன்ற உயரந்த ஆடையினை வழங்கினர். இதன்வழி நெசவுத்தொழிலில் பயன்படுத்தப்பட்டு தொழில்நுட்பம் புலனாகிறது. மேலும், மிக நுண்ணிய நூலினை நெய்தனர் என்பதை,

                       ‘நுண்ணூற் சிரந்தை’-பதி.க.வா

 என்ற தொடர் வலியுறுத்துகிறது.

 பிறதுறை தொழில்நுட்பங்கள்

             ஆ.சிமெண்ட் உற்பத்தி

             சிறந்த நகர அமைப்பையும், நகரத்தில் ஆறு கிடந்ததைப் போன்ற சிறந்த வீதி ஒழுங்கையும் கொண்டிருந்த பழந்தமிழர் நாகரிகத்தை, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை போன்ற சங்க இலக்கியங்களும், சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்களும் காட்டுகின்றன. சிலம்பில் கோட்டையின் அமைப்புமுறை நன்கு விளக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. இவைபோன்ற சிறந்த நகர அமைப்பினை உருவாக்க, சிறந்த கட்டிடங்கள் கட்ட, சிறந்த தொழில்நுட்பம் அவசியமாகிறது. இடிபாடுகளுக்கு இடந்தராத வகையில், உறுதியாக கட்டிடங்களை உருவாக்க மண்ணை சில கலவைகளோடு சேர்த்து அரைத்து, இன்றைய சிமெண்ட் போன்று பயன்படுத்திய தொழில்நுட்பக் குறிப்பினை,

             ‘அரைமண் இஞ்சி நாட்கொடி நுடங்கும்’-புறம்.341:5

 என்கிறது புறநானூறு.(ப.341)

 இதைப் போல, மண்ணைக் கொண்டு கட்டப்பட்ட கோட்டையை,

             ‘மண்புனை இஞ்சி மதில்கடந்தல்லது’-பதி.58:6

 என்கிறது பதிற்றுப்பத்து.

 இ. கப்பல் கட்டுமானம்

     முந்நீர் வழக்கம் பெண்களோடு இல்லை என்கிறது தொல்காப்பியம். சங்க இலக்கியங்களின் பெரும்பாலானவை தமிழரின் கடல்வாணிகத்தினைப் போற்றுகின்றன. இத்தகைய கடல் வணிகத்திற்குத் தேவையான கப்பல்கள், கலன்கள் போன்றவற்றை  உள்நாட்டிலேயே உற்பத்தி செய்த தமிழர்களின் தொழில்நுட்ப வளத்தைப் பதிற்றுப்பத்துக் காட்டுகிறது. கப்பல் கட்டுமானப் பணிகளோடு, பழுதுபட்ட கப்பல்களைச் செப்பனிடும் பணியும் நடைபெற்றது என்பதும் கீழ்க்கண்ட  அடிகளில் தெளிவாகிறது.

                 ‘பெருங்கட னீந்திய மரம்வலி யுறுக்கும்

                பண்ணிய விலைஞர் போல’-பதி.4-5

 இதற்கு, பெருங் கடலைக்கடந்து சென்று மீளுதலால் பழுதுற்ற மரக்கலத்தின் பழுது போக்கிப் பண்டுபோல வலியுடைத்தாக்கும் கடல் வணிகர் போல என்று பொருள் கொள்வர் உரையாசிரியர்.

 ஈ. மருத்துவமத் தொழில்நுட்பம்

       மருத்துவத்தில் அறுவைசிகிச்சை என்ற தொழில்நுட்பம் ஆங்கில மருத்து முறைக்கே உரியது என்பது பொதுவான கருத்து. இருந்தும், மருத்துவத்தில் அறுவை சிகிச்சைமுறையை அக்காலத்திலேயே தமிழர்கள் பயன்படுத்திய உண்மையைப் பதிற்றுப்பத்துக் காட்டுகிறது. சிரற்பறவை குளிர்ந்த குளத்துட் பாய்ந்து மூழ்கி மேலே யெழுகின்ற காலத்து அதன் வாயலைகை யொப்ப; மார்பிற் புண்களைத் தைக்குங் காலத்து அப்புண்ணின் குருதியிலே மூழ்கி மறைந்தெழுகின்ற நெடிய வெண்மையான ஊசியினாலாகிய நீண்ட தழும்பை உடைய வீரர்கள் என மொழிகிறது கீழ்க்கண்ட அடிகள்,

             மீன்றேர் கொட்பிற் பனிக்கய மூழ்கிச்

            சிரல்பெயர்ந் தன்ன நெடுவள் ளூசி

            நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின்’-பதி.42:2-4

 முடிவு.

   ஒரு சமுதாயத்தின் பண்பாட்டுக் கூறுகளை, பழக்க வழக்கங்களை, நாகரிக நடைமுறைகளைப் பிரிதொரு காலத்திற்கு எடுத்துச் செல்பவை இலக்கியங்களே. இவ்வகையான இலக்கியங்களே வரலாற்று ஆதாரங்களாகத் திகழ்கின்றன. ஒருநாட்டின்  மொழிவளர்ச்சியும், இலக்கிய வளர்ச்சியும் அந்நாட்டின் பண்பாட்டு வளர்ச்சியோடு இரண்டறக்கலந்தே  வந்துள்ளன.

     தமிழக வரலாறும் பண்பாட்டு வளர்ச்சியும் குறித்து ஆய்வோர்க்கு முதன்மை ஆதாரமாகத் திகழ்பவை சங்க இலக்கியங்களே. அவையே பழந்தமிழரின் பண்பாட்டு பான்மை, பழக்க வழக்க மேன்மை, நாகரிக வளமை ஆகியவற்றை உலக்கிற்கு வெளிக்காட்டி நிற்கின்றன. அவ்வகையில், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் பழந்தமிழர் சிறந்தோங்கிய பாங்கினை மேற்கண்ட ஆதாரங்கள் உணர்த்துகின்றன.

 முதன்மை நூல்கள்

1.பதிற்றுப்பத்து, ஔவை. சு.துறைசாமிப்பிள்ளை, கழக வெளியீடு, மார்ச். 1995.

2.பதிற்றுப்பத்து மூலமும் உரையும், அ. மாணிக்கனார், வர்த்தமானன் பதிப்பகம், 1999.

 துணைமை நூல்கள்

1.ஐங்குறுநூறு, மூலமும் உரையும், அ.மாணிக்கனார், வர்த்தமானன் பதிப்பகம்,

   சென்னை, 017, 1999

2.சிலப்பதிகாரம், மூலமும் உரையும், ஜெ.ஸ்ரீசந்திரன், வர்த்தமானன் பதிப்பகம், 2001

3.திருக்குறள், பரிமேலழகர் உரை, பூம்புகார் பதிப்பகம், சென்னை 108, 2001

4.தொல்காப்பியம், தொல்காப்பியம், பொருளதிகாரம், நச்சினார்க்கினியர் உரை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1986

5. பத்துப்பாட்டு,மூலமும் உரையும், அ. மாணிக்கனார், வர்த்தமானன் பதிப்பகம்,

சென்னை, 017. 2000

6.புறநானூறு, மூலமும் உரையும், அ. மாணிக்கனார், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை,017, 2001