முனைவர் ஆ.மணவழகன், முதுநிலை ஆராய்ச்சியாளர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். தரமணி, சென்னை 113.
(கேவி மகளிர்க் கல்வியியல் கல்லூரி (ம) செம்மொழித்
தமிழாய்வு மத்திய நிறுவனம், சேலம்,
26.12.2012)
ஒரு சமூகம் அதற்கேயுரிய பண்பாடு, பழக்க வழக்கங்கள்,
நாகரிகக் கூறுகள் போன்றவற்றால் மற்ற சமூகங்களிலிருந்து தன்னை
வேறுபடுத்திக் கொள்கிறது. இவ்வகை பிரித்தறியும் நோக்கிற்கு அச்சமூகத்தின் பழம்
பண்பாடு, பழக்கவழக்கம், நாகரிகம்
போன்றவற்றைப் பாதுகாக்கும் பழம்பெரும் இலக்கியங்கள் அளவுகோல்களாக அமைகின்றன. மொழி
வளர்ச்சி, இலக்கிய வளர்ச்சி, சமூக
வளர்ச்சி இவை மூன்றும் ஒன்றோடொன்று தொடர்பற்றவையோ, அல்லது
திடீரென முளைத்தெழுந்தவையோ அல்ல. இவற்றின் பெருக்கத்திற்கான, வளர்ச்சிக்கான கூறுகளை மொழியும் அதைச் சார்ந்த இலக்கியங்களும் தம்முள்
கொண்டுள்ளன. அவ்வகையில், பழந்தமிழர் நாகரிகம், பண்பாடு, பழக்கவழக்கம் போன்றவற்றின் விழுமியங்களான
உயர் மதிப்பீடுகளையும் பாதுகாக்கும் கலைப் பெட்டகங்களாக விளங்குபவை பழந்தமிழ்
நூல்களாகும்.
இவற்றில், ‘மக்களின் திரள்’ என்னும்
முதற் பொருளில் ‘சமுதாயம்’ என்னும்
சொல் இப்பொழுது வழங்கப்படுகிறது. சமுதாயம் என்னும் சொல் சங்க இலக்கியங்களில்
சுட்டப்பெறவில்லை. ஆனால், ‘மன்பதை’ என்னும்
சொல்லைச் சமூகம் என்ற பொருளில் சங்க இலக்கியங்கள் ஆட்சி செய்துள்ளமையைக் காணமுடிகிறது.
‘மன்பதை காக்கும்நின் புரைமை’ (புறம்.210:1),
‘உலகத்து மன்பதைக் கெல்லாம்’(புறம். 358),
‘மன்பதை யெல்லாம் மடிந்த இருங்கல்குல்’ (கலி.65)
என்பனவற்றில், மன்பதை என்னும் சொல் ‘மக்கட்பரப்பு’ ‘மக்கள் கூட்டம்’ அல்லது ‘உயிர்க்
கூட்டம்’ என்னும் பொருளில் அறியப்படுகிறது.
உயிரின வளர்ச்சிக்கும் அவற்றின் பாதுகாப்பிற்கும் சார்ந்து வாழ்தலும் கூடி வாழ்தலும் இன்றியமையாததாகிறது. கூடி வாழ்தலால் உயிர்கள் (மனிதன் உட்பட) தங்கள் தேவைகளை எளிதில் பெற முயல்கின்றன. இவ்வெற்றியின் பயனாகவே மனிதன் பண்டைக் காலம் முதல் இன்றுவரை கூட்டு வாழ்க்கையை ஏற்று வாழ்ந்து வருகிறான் என்பது மனித இன வரலாற்றின் வாயிலாக அறியப்படுகிறது. இவ்வகை இனக்குழுவையும் இனக்குழுவின் தலைவனையும் சங்கப்பாடல்கள் பலவற்றில் காண முடிகிறது. பெருவேந்தருக்கு நிகராக இவ்வகை இனக்குழுத் தலைவர் போற்றப்பட்டுள்ளனர். ‘சமுதாயம் என்னும் சொல் இன்றைய சமுதாயத்தை விளக்குகின்றது; குழு என்னும் சொல் பண்டைக் காலச் சமுதாயத்தை (primitive society) ஓரளவு எடுத்து விளக்கியுள்ளது’ (சமூகவியல்,ப.11). எனவே, தனிமனிதர், குடும்பர், அரசு என்ற பல்வகை நிலைகளிலிருந்தும் வெளிப்பட்டு நிற்கும் விழுமியங்களான சமூக மதிப்பீடுகளை இனங்காண்பது ஏற்புடையதாகிறது.
தனிமனிதர்
‘ஒரு தேசத்தின் முன்னேற்றம் என்பது, அந்நாட்டு மக்கள் எவ்விதம் சிந்திக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அமையும். சிந்தனைகளே செயல்பாடுகளாக உருமாறுகின்றன’ (இந்தியா 2020, ப.186) என்பார் அ.ப.ஜெ.அப்துல்கலாம். இக்கருத்து, ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது நாடு என்றில்லாமல் உலகின் எந்தவொரு நாட்டிற்கும், சமூகத்திற்கும் ஏற்புடையதாகும். ஆக்கப்பூர்வமான சிந்தனைகளுக்கு உடைமையாளர்களாக விளங்கும் மக்களைக்கொண்ட சமுதாயமே தம்முடைய வெற்றிப்பாதையில் தொய்வின்றி வீறுநடை போடுகிறது. எல்லாக் காலங்களிலும் ஏற்கக் கூடிய மனிதனின் பொதுவான அடிப்படைத் தத்துவங்களை ஏற்றால்தான் சமுதாயம் முன்னேற்றமடையக் கூடும். அஃதாவது ‘ஒவ்வொரு தனி மனிதனும் அவனுடைய எண்ணம், செயல் ஆகியவற்றால் எல்லா மக்களுக்கும் நன்மை பயக்க வேண்டும் என்பதை எண்ணினால் சமுதாயம் முன்னேற்றமடைவதில் ஐயம் இல்லை’ என்பது சமூகவியலின் தனிமனிதக் கோட்பாடாக அமைகிறது (சமூகவியல், ப.170).
தனிமனிதன், ஒரு குடும்பம்-குழு-அரசு
போன்றவற்றில் இணைந்தே செயல் படுகின்றான். சமுதாயம் தனிமனிதனைச் சமுதாய உறுப்பினனாக்கப்
பெருமளவிற்குத் தொண்டு புரிகின்றது. பொதுவாகச் சமூக இயல்பு தனிமனிதன் இயல்பு ஆகிய
இரண்டும் ஒருங்கே வளர்கின்றன (சமூகவியல், ப.64). அவ்வகையில், தனிமனிதர், குடும்பம் மற்றும் தலைமையின் விழுமியங்களுள்
முக்கியக் கூறுகளாக, விருந்தோம்பல், உடை
வழங்கல், கொடை, உடைமையைப் பங்கிட்டுக்
கொடுத்தல், பெற்ற பெருவளம் பெறாதோர்க்கு அறிவுறுத்தல் -
வழங்கல், இருப்பிடம் அளித்தல், அருளுணர்வு,
உயிரிரக்கம் போன்றவை அமைகின்றன. இவற்றின் செயலாக்கக் காரணிகளுள்
(தனிமனிதர், குடும்பம், அரசு)
ஒன்றிலிருந்து ஒன்றும் ஒன்றுக்குள் ஒன்றுமாக அமைவதைக் காணமுடிகிறது. மேலும்,
சமூக அமைப்பிலிருந்து விலகி நிற்க முயலும் தனிமனிதனையும் சமூகத்தோடு
இணைக்கும் கருத்தாக்கங்களும் பழந்தமிழகத்தில் வெளிப்பட்டு நிற்கின்றன.
சமூகத்திலிருந்து விலகி நிற்கும் இவ்வகைத் தனி மனிதச் செயல்களை, ‘தானும் உண்ணான் உலகமும் கெடுமே’(புறம்.184:11)
என்று கண்டிக்கும் குரலும் ஒலிக்காமலில்லை.
தனிமனிதனும் சமூக மதிப்பீடும்
இல்வாழ்க்கையின் தன்மையே ஒருவரை சமுதாயத்தில் அடையாளப்படுத்துகிறது. மனங்கள் ஒத்து வாழ்வதற்குத் தேவையான குணங்களைச் சுட்டுவதோடு, வேண்டாத குணங்களாக, ‘நேயமின்மை, இரக்கமின்மை, தன்னை வியத்தல், புறமொழி கூறுதல், வன்சொல், மறவி, சோம்பியிருத்தல், தன் குடியுயர்வை எண்ணி மகிழ்தல், பணிவுடமையை மறத்தல், ஒப்பிட்டு நோக்கல்’(தொல்.1220) என்பவற்றையும் தொல்காப்பியர் பட்டியலிடுகிறார். மனிதநேயம் போற்றும் எச்சமுதாயத்திற்கும் இத்தன்மை ஏற்புடையதாவது இயல்பு.
பொன்னாலும், முத்தாலும் மணியாலும் செய்யப்படும் அணிகலன்கள் கெடுமானால் தொழில் வல்லோரால் சீர்படும். சால்பும் இயல்பும் வியப்பும் குன்றினால் மாசற்ற தம் புகழினை நிறுத்தல் முற்றத்துறந்த முனிவர்க்கும் ஆகாமையினைக் கபிலர் வலியுறுத்துவார் (குறிஞ்சி.13-18). மனிதப்பண்புகளை மற்றை எல்லாவற்றிலும் உயர்வாக மதித்த நிலையினைப் பழந்தமிழ்ப் பாடல்கள் காட்டுகின்றன. தனி வாழ்க்கையில் அறக்கோணல் ஏற்படுமாயின், அது சமுதாயத்திற்கு ஊறு பயக்குமென்ற நம்பிக்கை அக்காலத்திலிருந்தது. தம் பெற்றோர் தன்னை நொதுமலர்க்கு வரைந்தால் அவ்வறமில் செயலால் வள்ளிக் கிழங்கும் கீழ்வீழா; மலைமிசைத் தேனுந்தொடா என்று எண்ணுகிறாள் தலைமகள்(கலி.39:11-14). இதனால், தனிமனித வாழ்க்கைக்கும் சமூகத்திற்குமான பிணைப்பு அறியப்பெறும். தனிமனிதப் பயனோடு, சமூகப் பயனையும் பழந்தமிழ்ச் சமூகம் முன்னிறுத்தியது. ‘ஒரு சமூகம் என்பது செயற்பாடுடைய ஒரு குழுவாகும். தனி மனிதர் பலரால் உருவாக்கப்பட்டிருப்பினும், சமூகம் என்ற நிலையிலேயே அது தொழிற்படுகிறது. சமூக அமைப்பில் தனிமனிதர்களின் நலன்கள் சமூக நலன்களுக்குக் கீழாகவே அமைகின்றன’(ச.இ.ச.அ.ப.1).
அற உணர்வும் சமூக நலம் நாடலும்
வாழ்க்கையில் பொருள் தேடலும் இன்பம் துய்த்தலும் அறத்தின் வழி செய்யப்பெறல் வேண்டும் என்ற குறிக்கோளை அற்றைச் சமூகம் கொண்டிருந்தது. தமக்கு வரும் பயன்பாடு கருதாது, பிற உயிர்க்கு விளையும் நன்மை கருதுதலே அறத்தின் அடிப்படை. பயன்மரமும் ஊருணியும் மருந்து மரமும் போல் செல்வத்துப் பயனே ஈதலென வாழ்ந்த அறவோரைச் சங்க இலக்கியம் காட்டும். முல்லைக்குத் தேரீந்தவனும், மயிலுக்குப் போர்வையளித்தவனும், தாதுண் பறவை பேதுறல் அஞ்சி மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரனும், அஃறிணைக்கும் அறம் செய்த அறவோர். கொடையறத்திற்கு இரக்கமும், புகழ் வேட்கையுமே அடிப்படையாக இருந்தனவேயன்றி இம்மைச் செய்தன மறுமைக்காகும் என்ற நோக்கு காரணமாகவில்லை. ‘செய்குவம் கொல்லோ நல்வினை’ (புறம்.214), என்று இம்மையில் அறத்தை முன்னிறுத்தியது பழந்தமிழ்ச் சமூகம். புகழுக்குத் தலை நிமிர்தலும், பழிக்குத் தலையிறைஞ்சுதலும் சான்றவர் இயற்கை பண்புகள். பழி படர்ந்த நெறியிற் செல்லாமையும், பழியொடு வரும் செல்வம் வெஃகாமையும், செல்நெறி, குறிக்கோள் இரண்டிலும் பண்டைச் சான்றோர் தூய தன்மை உடையவராயிருந்தார். ‘பழியெனில் உலகு உடன் பெறினும் கொள்ளலரா’கவும் (புறம்.182.5), ‘கழியக் காதலர் ஆயினும், சான்றோர் பழியொடு வரூஉம் இன்பம் வெஃகா’ ராகவும் (புறம். 112:11-12) தம் திறத்தில் உறுதியாயிருந்தனர்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்தலே வீடுபேறு நல்குமெனக் கருதினர். தத்தம் கடமையைப் புறக்கணியாது செய்வோர்க்குத் தொய்யா நல்லிசைத் துறக்கம் வந்தெய்தும் என்ற கருத்து அக்காலத்துச் சான்றோரால் பரப்பப்பட்டது. பேரெயின் முறுவலார், நம்பிநெடுஞ்செழியன் இறந்த போது ‘அவன் செய்ப எல்லாம் செய்தனன், ஆதலின் அவனை வாளான் அடுக அல்லது சுடுக. யாது வேண்டுமானாலும் செய்க’ என்ற பொருள் படப் புகழ்வார்(புறம்.239). மற்றவர்க்கு ஏற்படும் துன்பத்தைக் கண்டால் நல்லோர், தாங்கள் பிறரே ஆனாலும் வருந்தி அத்துன்பத்தைப் போக்க முயல்வர். தமக்கு உற்ற துன்பத்தைத் தமக்குப் பெரிதாய்க் கொள்ளாமல் அதனை எளிதாகக் கொள்ளும் இயல்பினராய் இருந்தனர் (அகம்.382:1-2). சமூக இன்னல் களைய ஏற்றதொரு பண்பாக இது விளங்குகிறது. இல்லோருக்கு இல்லை என்று சொல்லும் வன்நெஞ்சம் படைத்தவரைப் பழந்தமிழ்ச் சமூகம் பெற்றில(அகம்.53:14,15).
வினையை உயிரெனப் போற்றுதல்
தன் முயற்சியால் உழைத்துப் பொருள் தேடலை வற்புறுத்தும் இடங்கள் இலக்கியத்தில் பல உண்டு(புறம் 160:1-5, அகம் 29, நற் 110:10,11). பெற்றோரின் இல்லத்தையே பிறர் இல் எனப் பழித்து, பொருள் தேட அறிவுறுத்தலையும் காணமுடிகிறது. ‘பிறர் செய்த இல்லிருப்பாய்’ (கலி.111:10) என்று பெற்றோரை நம்பிப் பிழைப்போனைப் பகடி செய்கிறது. கணவன் வறுமையிலிருப்பினும், தன் பெற்றோரின் கொழுஞ் செல்வத்தில் ஒரு சிறு பகுதியும் எதிர் நோக்காத தலைவியின் வழியே, முயன்று வாழ வேண்டுமென்ற அறக்கோட்பாட்டைக் காணலாம் (குறு.295, அகம் 93:1-7). அதே போல, ‘எலி முயன்றனை யராகி’ வாழும் வாழ்வை வெறுத்தனர் (புறம்.160:3). புலிபோல் தம் முயற்சியால் கிட்டும் செல்வத்தைப் போற்றினர். ‘வினையே ஆடவர்க்கு உயிர்’( குறு.135:1) என்றும் வலியுறுத்தினர். சமூகத்தில் அவரவர் கடமையில் பிறழாமல், தத்தம் உழைப்பால் உயர்வு பெற அறிவுறுத்தப்பட்டனர். ‘தமது செய் வாழ்க்கையின் இனியது உண்டோ’(நற்.130:5) என, தம் தேவையைத் தாமே உழைத்து நிறைவேற்றிக் கொள்ளும் வினை ஆளுமை போற்றப்பட்டது. வினையாற்றாது சோம்பியிருத்தல் பிழையெனப் பழிக்கப்பட்டது.
இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்
அசையுநர் இருந்தோர்க்கு அரும் புணர்வு ஈன்ம் (நற்.214:1-2)
என்று, புகழும் இன்பமும் கொடையும் மூன்றும் சோம்பலோடு இருப்பவர்க்குப்
பொருந்துவதில்லை என அறிவுறுத்தப்பட்டது.
மடியில்லா பொருளாக்கம்
‘அரும் பொருட் கூட்டம்
இருந்தோர்க்கு இல்’ (252:4) என நற்றிணை வலியுறுத்தும்.
அறநெறியினின்று நீங்காத இல்வாழ்க்கை நடத்துதலும், சிறந்த
சுற்றத்தவரின் துன்பத்தைப் போக்கித் தாங்குதலும் ஆகிய இவை எஞ்ஞான்றும் முயற்சியை
மேற்கொண்டு வருந்தாது மடிந்த உள்ளத்துடன் இருப்பவர்க்கு இல்லையாகும் என்று
முள்ளியூர்ப் பூதியாரும் (அகம்.173:1-3) சொல்லுவார். எனவே,
ஈதல் இன்பம் கருதிய செய்பொருளுக்காகத் தம் இல்லம் துறந்தும்(அகம்.12; 69:5,6), தம் உறவினரைத் துன்பம் போக்கித்
தாங்கிடவும், மேலும் சுற்றத்தார் பெருகவும் உறவினர்
அல்லாதவரும் உறவினர் போலப் பொருந்தியிருக்கவும் காரணமான முயற்சிக்குப் பொருந்திய
ஊக்கத்தினோடும், விருப்பினால் சிறந்தும், பொருள் ஈட்டும் தொழிலைச் செய்து முடிந்த ஆடவரைச் சமூகம் போற்றியது(அகம்.93:1-7).
பொருள் ஈட்டி வருதலையும், இல்லார்க்கு
வழங்குதலையும் இவர்கள் உயிரினும் மேலாகக் கருதினர் (அகம்.245:1,2).
தனக்கும் தன் மனைவி மக்களுக்கென்றும் வாழ்ந்த தனி வாழ்க்கையிலிருந்து, ஊரும் நாடும் சமூகமும் தன்னால் பயன் பெறுவதற்குரிய ஒரு வாழ்வை மேற்கொள்ளும் நிலையைக் கோப்பெருஞ்சோழன்-பொத்தியார் பாடல்கள் காட்டுகின்றன (புறம். 214, 216, 220, 221, 222, 223). தனக்கென முயலாமல், பிறர்க்கென முயலும் சான்றோர் சங்கச் சமுதாயத்தில் பலராக அமைந்தனர். ஊரமைதிக்கு அத்தகு ஆன்றவிந்த கொள்கைச் சான்றோர், காரணமென்பர் பிசிராந்தையார்(புறம்.191). ‘செல்வத்துப் பயனே ஈதல்’ என்பார் நக்கீரர்(அகம்.389, புறம்.189). இவ்வுலகம் அழியாமல் நிறைபெற்று இருப்பதற்கு, தனக்கென வாழாமல் பிறக்கென வாழும் உயர்ந்தேர் இருப்பதே காரணம் என்பார் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி (புறம்.182).
நல்வினையின் விளைவும் தீவினையின் தீதும்
ஒருவன் நன்மை செய்தால் அவனுக்கு நன்மையும், தீமை
செய்தால் தீமையும் விளையுமெனச் சுட்டிய
சான்றோர், அதன்வழிச்
சமூகத்தை நெறிப்படுத்த முயன்றனர். இதனால், தனிமனித
ஒழுங்கு தவறுதல் சமூகக் குற்றமாகக் கருதப்பட்டது. இவ்வகை நன்னெறியினின்று
விலகுவோரிடமிருந்து சமுதாயம் விலகி நிற்கவும் துணிந்தது. இவ்வகைக் குணத்தாரிடம்
சேர்தல் தகாது என்கிறார் புலவர்.
நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
இல்லை என்போர்க்கு இனன் ஆகிலியர்
(புறம்.29:11-12)
என்பது அவர்தம் வாக்கு. இம்மைக்கும் மறுமைக்கும் வாழ்வுதரும் நல்வினையை ஒருவரால் செய்ய இயலாது போயினும், தீமை செய்யாது ஒழிதல் பேரறமென்று வலியுறுத்தப்பட்டது. தீங்கின்றி வாழ்ந்தால் உலகத்தோர் மகிழ்வர். நல்ல வழிக்குக் கொண்டு செல்லும் ஒரு தூண்டுதலும் தீவினை செய்யாமையேயாகும்.
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்
எல்லாரும் உவப்பது அன்றியும்
நல் ஆற்றுப்படூஉம் நெறியுமார் அதுவே (புறம்.195:6-9)
என்று அறிவுரை கூறுகிறார் நரிவெரூஉத்தலையார்.
தனிமனித
ஒழுக்கம்
நயனும் நண்பும் நாணு நன்கு உடைமையும்
பயனும் பண்பும் பாடு அறிந்து ஒழுகலும்
(நற்.160:1-2)
என்கிறது இலக்கியம். ஒரு நாட்டின் நில அமைப்போ, இயற்கையில் அமையப்பெற்ற வளங்களோ அந்நாட்டை நல்லநாடாக முன்னெடுத்துச் செல்வதில்லை. அந்நாட்டில் வாழும் மனிதச் செயல்களே அச்சமூகத்தை முன்னேற்றுகின்றன என்பதை,
நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையோ கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே (புறம். 187)
என்று வலியுறுத்துவார்
ஔவையார். அதேபோல,
தனிமனிதன் எதிர்கொள்ளும் இன்ப துன்பங்களுக்குச் சமூகமோ, பிறரோ காரணமன்று; அவன் செயல்களே காரணிகளாகின்றன
என்பார் கணியன் பூங்குன்றனார். இதனை,
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன (புறம்.192:3,4)
என்பதில் அறியலாம்.
குடும்பமும்
சமூக மதிப்பீடும்
குற்ற மறைப்பான் உடம்பு (குறள்.1029)
சமுதாயம் தன்னுடைய பண்பாடு மரபுகளைக் குடும்ப அமைப்பு
மூலமாகத்தான் மனிதர்களுக்கு அளிக்கிறது. எனவே சமுதாயத்தில் குடும்பத்தின் பங்கு
இன்றியமையாத தாகிறது. மனிதனைச் சமுதாயஞ் சார்ந்தவனாக - சமூக இயல்பினனாக மாற்ற
உதவும் ஓர் இயக்கமாகவும் குடும்ப அமைப்பு செயல்படுகிறது (சமுதாயத் தத்துவம், ப.61) என்று குடும்பத்தின் இயல்பும், தேவையும், கடமையும் சுட்டப்படும். பழந்தமிழகம்
இவ்வகைக் குடும்ப அமைப்பினைப் பெற்றிருந்தது. குடும்பத்தில் ஒவ்வொருவருக்கென்றும்
தனித்தனிக் கடமைகள் இருந்தன. பிள்ளையை ஈன்று புறந்தருதல் மட்டுமல்லாது, சமுதாயத்திற்குப் பயன்படும் சான்றோனாக்கலும் குடும்பத்தின்
கடமையாயிற்று(புறம்.312:1,2) .
இல்லற வாழ்க்கையில் இன்பத்திற்கும், பொது வாழ்க்கையில் புகழுக்கும், தனிமனித ஒழுக்கத்துக்கும், தலைமைக்குத் தேவையான தன்மைக்கும் இலக்கணம் வகுத்த தொல்காப்பியர், இல்வாழ்வானின் சமூகக் கடமையையும் சுட்டுவார். துறவறம் என்பது தமிழர் பண்பாடு அல்ல என்பதை உணர்த்துவதோடு, நல்வாழ்வு வாழ்ந்து முடித்தவரின் முதுமைக்காலச் செயல்பாடுகளாக,
காமம் சான்ற கடைக் கோட் காலை
ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே (தொல்.1138)
என்பதை வலியுறுத்துகிறார். இல்லற வாழ்க்கையின் இறுதிக் காலத்து, பெருமை பொருந்திய மக்களுடன் நிறைந்து, அறத்தினைப் புரிகின்ற சுற்றத்தோடு தலைவனும் தலைவியும் சிறந்ததாகிய வாழ்க்கை முறையினையும், நன்னெறியினையும் சமூகத்திற்குப் பயிற்றுவித்தல், அவர்கள் வாழ்ந்ததன் பயனாகும் என்கிறார்.
இல்வாழ்வின் நோக்கம்
தலைவன் ஒருவன், தான் காதலிக்கும் தலைவியைத் தவறாது
மணக்க உறுதி கூறும் பொழுது,
வருநர்க்கு வரையா வளநகர்
பொற்ப
மலரத் திறந்த வாயில்
பலருணப்
பைந்நிணம் ஒழுகிய
நெய்ம்மலி அடிசில்
வசைவில் வான்திணைப்
புரையோர் கரும்பொடு
விருந்துண்டு எஞ்சிய
மிச்சில் பெருந்தகை
நின்னொடு உண்டலும்
புரைவது என்று ஆங்கு
அறம்புணை யாகத் தேற்றிப்
பிறங்குமலை
மீமிசைக் கடவுள்
வாழ்த்திக் கைதொழுது (குறிஞ்சி.201-209)
தனிமனிதன் ஒருவனின் நற்சிந்தனைகள் என்பவை, நல்ல
குடும்ப உறவை வேராகக் கொண்டு கிளைத்தெழுகின்றன. அதேவேளை, தனிமனிதச்
சிந்தனை, நல்ல குடும்ப அமைப்பு, சிறந்த
உறவு முறை, பாதுகாப்பு உணர்வு என்பனவற்றில் அரசின் செயற்பாடு
முக்கியப் பங்கினை வகிக்கிறது. மக்களின் சுய சிந்தனைக்கும், அரசின்
தவறுகளைச் சுட்டிக்காட்டும் சுதந்திரத்திற்கும்
இடமளிக்காத சட்ட திட்டங்களைக்
கொண்டுள்ள அரசு ‘கொடுங்கோலாக’க்
கருதப்படும். எனவே, ஒரு நாட்டின் அல்லது சமுதாயத்தின்
முன்னேற்றத்தில், அவற்றின் முதன்மை காரணியாகிய தனிமனிதர்,
நிறுவனங்களான குடும்பம் மற்றும் அரசு ஆகியவற்றின் செயல்பாடுகள்
முதன்மை பெறுகின்றன. அவற்றிலும், குறிப்பாக அரசு என்று சொல்லக்கூடிய சமூகத் தலைமையின்
பொறுப்பு மற்ற எல்லாவற்றையும் தன் கட்டுக்குள் அடக்கியதாக அமைகிறது. எனவே, சமூக முன்னேற்றத்தில் அரசின் பங்கு முதன்மையானதாகக் கருதப்படுகிறது. இதனை
உணர்ந்தே,
நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் (புறம்.186:1,2)
பண்டைய
மன்னர்
தலையாய
பண்புகள்
அற
நோக்கு
அருளும் அன்பும் நீக்கி நீங்கா
நிரயம் கொள்பவரொடு ஒன்றாது காவல்
குழவி கொள்பவரின் ஓம்புமதி (புறம்.5:5-7)
என்று அரசர்க்குரிய நெறிமையின் நீங்காதிருக்குமாறு நரிவெரூஉத்தலையார் அறிவுறுத்துவார். படைவலிமையும், கோட்டை, கொத்தளங்களும், வலியுடைய அரண்களும் அமையப்பெற்ற செல்வவளம் மிக்கதாகச் சமூகத் தலைமை இருந்தாலும் அறநெறியின்பால் செல்லுதலே முதன்மையாக்கப்பட்டது.
வேந்துமேம் பட்ட பூந்தார் மாற
கடுஞ்சினத்த கொல்களிறுங் கதழ்பரிய கலிமாவும்
நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய புகன்மறவருமென
நான்குடன் மாண்ட தாயினும் மாண்ட
அறநெறி முதற்றே யரசின் கொற்றம் (புறம்.55:6-10)
அறிவுடைமை
இருமுந்நீர்க் குட்டமும்
வியன்ஞாலத்து அகலமும்
வளிவழங்கு திசையும்
வறிதுநிலைஇய காயமும்,
என்றாங்கு
அவையளந்து அறியினும் அளத்தற்கு அரியை
அறிவும் வீரமும் பெரும் கண்ணோட்டமும் (புறம். 20:1-5)
என்கிறது புறநானூறு. இதில், பெரிய கடலின் ஆழமும் , அகன்ற உலகத்தின் பரப்பும், உலவும் திசையும், உருவம் இல்லாத நிலையான வானமும் எனக் கூறப்படுவனவற்றை இன்னவை என வரையறுத்து அறிந்து கொண்டாலும், அவன் அறிவு, வீரம், மிக்க கண்ணோட்டம் ஆகியவற்றை அறிவதற்கு இயலாது என்று புகழ்கிறார் புலவர்.
அருளுடைமை
வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி
அருள வல்லை யாகுமதி
(புறம்.27:15-17)
என்று வலியுறுத்துவார் உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
காட்சிக்கு எளிமை
அரசன் என்பவன் காட்சிக்கு எளியவனாக, கடுஞ்சொல்
அற்றவனாக இருத்தல் வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டது.
அறம்புரிந் தன்ன செங்கோல் நாட்டத்து
முறைவேண்டும்
பொழுதின் பதன் எளியோர் ஈண்டு
உறை வேண்டு பொழுதில் பெயல்பெற் றோரே (35:14-16)
என்கிறது புறநானூறும். இதில், நீதிகேட்கும் நிலையில் காட்சிக்கு எளிய தன்மையாய் இருத்தலால், கேட்பவர் இங்கு மழை வேண்டிய காலத்தில் மழையைப் பெற்றவர் ஆவர் என்கிறார் வள்ளைக்குடி நாகனார். மேலும், தம் மக்களுக்குக் காட்சிக்கு எளியனாகவும், பகைவர்க்கு அருமையானவனாகவும் விளங்கிய அதியமானை,
ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை பெரும எமக்கே மற்றதன்
துன்னரும் கடாஅம் போல
இன்னாய் பெருமநின் ஒன்னா தோர்க்கே (புறம்.94)
என்று புகழ்வார் ஔவையாரும்.
சமூக
நீதி
அரசு முறை செய்க! களவில் ஆகுக! (ஐங்குறு.8)
அச்சம் பொய்ச் சொலல் அன்புமிக உடைமை
தெறல் கடுமையொடு பிறவும் இவ்வுலகத்து
அறந் தெரி திகிரிக்கு வழியடையாகும் (பதி.22:1-4 )
என்பதில், மிக்கசினமும், மிக்க காமமும், மிக்க கண்ணோட்டமும், பகைவர்க்கு மிக அஞ்சுதலும், வாய்மையுடன் பொருந்தாத பொய் சொல்லுதலும், தொடர்பு கொண்டவரிடம் அளவற்ற அன்புடைமையும், அளவற்ற தண்டத்தைச் செய்தலும் இவை போன்ற பிறவும் இவ்வுலகத்தில் அறம் வழி நின்ற அரசியலுக்குத் தடைகளாகச் சுட்டப்பட்டன. எனவே,
முறை வேண்டுநர்க்கும் குறை
வேண்டுநர்க்கும்
வேண்டுப வேண்டுப வேண்டினர்க்கு அருளி (பெரும்பாண்.443-444)
என, தம்மிடம் முறையிட்டோருக்கும், குறை வேண்டுநர்க்கும் தேவையான பொழுது தேவையானதை அருளி சமூக நீதியைப் பழந்தமிழ் மன்னர்கள் நிலைநாட்டினர்.
நடுவுநிலை
தவறாமை
நடுவு இகந்து ஒரீஇ நயன் இல்லான் வினை
வாங்க
கொடிது ஓர்த்த மன்னவன் கோல் போல ஞாயிறு
கடுகுபு கதிர் மூட்டிக் காய்சினம் (கலி. 8:1-3)
என்ற கலித்தொகையின் அடிகள், நடுவுநிலையைக் கைவிட்ட, அருட்குணம் இல்லாத அமைச்சன் தன் மனத்தில் எழுந்த தீசெயலை வெளிப்படுத்த, அதை அப்படியே கேட்டுக் கொடிய செயலைச் செய்யும் மன்னனின் செயலாம் மக்கள் துன்புறுவர். என்கிறது. மேலும்,
தெரிகோல் ஞமன் போல ஒருதிறம்
பற்றல் இலியரோ நின்திறம் சிறக்க (புறம்.6: 9-10)
என்பதில், அரசர்கள் துலாக்கோலில் உள்ள நாபோல ஒரு பக்கத்தில் பொருந்தாது இருக்கவேண்டுமென்றும், நடுநிலையுடன் விளங்கவேண்டுமென்றும் வலியுறுத்துகிறார் காரி கிழார்.
சமத்துவம்
தொழில் அடிப்படையில் சமூகப் பாகுபாடு அமைவதைக் காணமுடிகிறது. அதேவேளையில், ஒருவனுக்குச் சேரவேண்டிய அடிப்படை உரிமைகள் எவ்வகைக் காரணத்திற்காகவும் மறுக்கப்படவில்லை என்பதும் தெளிவாகிறது. விருந்தோம்பலில் எளியோராகிய வழிப்போக்கருக்கு வழங்கப்பட்ட உணவே நாடாளும் மன்னன் வந்தாலும் வழங்கப்படும் என்பதிலே(புறம்.333) சமூகச் சமத்துவம் சுட்டப்பட்டது. அதேபோல,
தென்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே (புறம்.189:1-6)
என்பதில், நாடாளும் மன்னனாக இருந்தாலும், வேட்டையாடி உண்ணும்
வாழ்க்கையை உடைய கீழ்நிலையிலுள்ள கல்லாத ஒருவனானாலும் இருவருக்கும் பொதுவானது நாழி
அளவு உணவும், இடைக்கும் மேலுக்குமான இரண்டு உடையுமே என்பார்
நக்கீரனார். இதில் சமூகப் பாகுபாடு கருதாத சமத்துவப் பண்பு
புலப்படும். மேலும், சமூகத்தில் எளியவன் ஒருவனின் நல்லறிவைப்
புறந்தள்ளுதலோ, வலியவன் ஒருவனின் சிற்றறிவைப் போற்றுதலோ தவறு
என்பதையும், அத்தகைய செயல்பாடுகள் பழந்தமிழகத்தில் இல்லை
என்பதையும் இப்பாடல் அறிவிக்கும்.
துணை நூல்கள்
1. சங்க
இலக்கியத்தில் சமூக அமைப்புகள், கு.வே.பாலசுப்பிரமணியன்,
தமிழ்ப்பல்கலைக்கழம், தஞ்சாவூர். 1994.
2. சங்க இலக்கியம் தொகுப்பு
(எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு) , நியூ சென்சுரி புக் ஹவுஸ், சென்னை. 2004
3. சங்க இலக்கியம்
தொகுப்பு (எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு), வர்த்தமானம்
பதிப்பகம், சென்னை.1999
4. சங்கத் தமிழர் வாழ்வியல், மு.சண்முகம்
பிள்ளை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. 1997
5. சமூகவியல், இரா.கல்பகம்,
தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை. 1973.
6.
தமிழக வரலாறு சங்ககாலம் – வாழ்வியல், தமிழ்நாட்டு வரலாற்றுக் குழு, தமிழ்நாட்டுப்
பாடநூல் நிறுவனம், சென்னை. 1983
7.
தொல்காப்பியம்-பொருளதிகாரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1986
8. தொலைநோக்கு, ஆ.மணவழகன், அய்யனார் பதிப்பகம், சென்னை, 2010
தமிழியல்
Dr.A. Manavazhahan,
Asst. Professor, Sociology, Art & Culture, IITS, Chennai.
www.thamizhiyal.com