திங்கள், 17 ஆகஸ்ட், 2020

புறநானூற்றில் நீர் மேலாண்மை

 முனைவர் ஆ.மணவழகன், தமிழ்த்துறைத் தலைவர், அறிவியல் (ம) மானிடவியல் புலம், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம் - 603 203.

 (தமிழில் உலகப் பொதுமை, பன்னாட்டுக் கருத்தரங்கம், தமிழ் மரபு மையம், ஆரோவில், புதுச்சேரி, திசம்பர் 9, 2007)


       ‘நீரின்று அமையாது உலகு’(குறள்.20) என்பார் வள்ளுவர். மிகினும், குறையினும் தீங்காகும் நீரினை, மழை வழிப் பெறுதல் தொடங்கி அதனை முறையாகச் சேமித்துப் பல் வகையினும் பயனுறுவது வரையிலான பன்முகச் செயல்பாடுகள் நீர் மேலாண்மை என்றாகிறது. ஒரு நாட்டின் வளமும் வளர்ச்சியும் அதனை அடிப்படையாகக் கொண்டே அமைவதறிய முடிகிறது.   ‘உலக நீர் ஆதாரத்தில் 97.5 விழுக்காடு கடல் நீராகும். மீதமுள்ள 2.5 விழுக்காடு மட்டுமே நல்ல நீராக உள்ளது. மேற்பரப்பு நீராக உள்ள 1.9 விழுக்காடு உலகத்தில் பரவலாக இருந்தாலும் பனிப்பிரதேசத்தில் உள்ள நீர் நமக்குப் பயன்படுவதில்லை’ (திட்டம், மார்ச்சு2005, ப.94) என்பது இங்கு எண்ணத்தக்கது. மொத்த நீர் ஆதாரத்தில் 0.6 விழுக்காடு மட்டும் உள்ள நிலத்தடி நீரானது மனித வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் அடைந்துள்ளதை இதன் வழி அறியலாம்.

            நீர் மேலாண்மையைப் பற்றிக் குறிப்பிடுமிடத்து, ‘நீர்வள மேலாண்மை கடைபிடிக்கும் பண்பு நம்மிடையே இல்லாததால் நீர்வளங்கள் இங்கு வீணாக்கப்படுகிறது. ஒருபுறம் வறட்சியையும் மறுபுறம் வௌ¢ளப் பெருக்கையும் ஒவ்வொரு ஆண்டும் நாடு எதிர் நோக்கியுள்ளது. மத்திய அரசு வறட்சி மற்றும் வௌ¢ள நிவாரணப் பணிகளுக்காக நாட்டின் மொத்த வருவாயில் பெருந்தொகையை ஒதுக்க வேண்டியுள்ளது. நமது நாட்டின் பொருளாதாரப் பின்னடைவுக்கு இதுவுமொரு காரணமாகும். நமது நாட்டில் 1880 கன கிலோமீட்டர் நீரை மட்டுமே நாம் உபயோகப்படுத்துகிறோம். மீதமுள்ள 1190 கன கிலோ மீட்டர் நீரை பயன்படுத்திக் கொள்ளத்தக்க திட்டப்பணிகள் மேற்கொள்ளாததால் வீணாகிக் கடலில் சேர்கிறது. தற்போதைய சூழ்நிலையில் நீர்வளத்தை வீணாக்காமல் பயன்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்றாகும்’ (திட்டம், டிசம்பர் 2005, ப.27) என்ற அறிவுறுத்தல் இங்குச் சுட்டத்தக்கது. நீர் மேலாண்மையின் தேவை இங்கு வலியுறுத்தப்படுகிறது.

       தமிழகத்திற்கு விவசாயத்திற்காக சுமார் 5 மில்லியன் ஹெக்டேர் மீட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கும், குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கும் சுமார் 2 மில்லியன் ஹெக்டேர் மீட்டர் நீர் தேவைப்படுகிறது. ஆக மொத்தம் நீர் தேவையானது சுமார் 7 மில்லியன் ஹெக்டேர் மீட்டராகும். இதிலிருந்து மொத்த நீர்ப்பற்றாக்குறை சுமார் 2.16மி.ஹெக்டேர் மீட்டராகக் கணிக்கப்படுகிறது. இது மொத்த நீர்த்தேவையில் 31 சதவீதமாகும். இந்த நீர்ப் பற்றாக்குறையை, நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதன் மூலமும், நீர் மறு சுழற்சி மற்றும் மழை நீரைச் சேகரித்து பயன்படுத்துவதன் மூலமும் பூர்த்தி செய்ய வாய்ப்புள்ளது என்கிறது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழ ஆய்வு முடிவு (திட்டம், ஏப்ரல் 2004, ப.35).  இத்தேவையின் அடிப்படியில், இவ்வகை நீர் மேலாண்மை என்ற சிந்தனை, மேலாண்மையியல் செயல்பாடுகள் பழந்தமிழரிடத்து காணப்பட்டனவா என்பதன் அடிப்படையில், வருங்காலத்திற்குத் தமிழ் என்பதன் அடிப்படையில், புறநானூற்று இலக்கியவழித் தேடலாக, ‘புறநானூற்றில் நீர் மேலாண்மை’ என்ற இக்கட்டுரை அமைகிறது.

 நீர்நிலைகளின் தேவைகளை வலியுறுத்துதல்

  இவ்வுலகம் தன்நிலை திரியாமல் இருக்க, நீர்ப்பதத்தோடு கூடிய மண் இன்றியமையாததென்பதைப் பழந்தமிழர் உணர்ந்திருந்தனர். உயிர்கள் வாழ உணவு எவ்வளவு இன்றியமையாத் தேவையோ அதைப்போல, இந்நிலம் வளமாக இருக்க நீர் இன்றியமையாத மூலமாகும்  என்பதை உணர்த்தினர்.  இதனை,

                    நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்

                   உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே

                   உண்டி முதற்றே உணவின் பிண்டம்

                   உணவெனப் படுவது நிலத்தோடு நீரே (புறம்.18:18-21)

என்ற அடிகள் அறிவிக்கின்றன. மேலும், இவ்வகையான சிறப்பு வாய்ந்த நீரினையும், நிலத்தையும் ஆங்காங்கே நீர்நிலைகளை ஏற்படுத்துவதன் மூலம் ஒன்றாகக் கலக்கச் செய்பவரே, இவ்வுலகத்தில் உடலையும் உயிரையும் படைத்தவர் என்ற பெருமையைப் பெறுவர் என்பதனை,

                             நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு

                             உடம்பும் உயிரும் படைத்திசி னோரே           (புறம்.18:22,23)

என்ற அடிகள் சுட்டுகின்றன.

அதோடு, நெல் முதலானவற்றை விதைத்து மழையை எதிர்பார்த்திருக்கும்  மானாவாரி புன்செய் நிலம் நிறைய இருப்பினும் அதனால் யாதொரு பயனும் இல்லை. அதனால், நிலம் பள்ளமான இடத்தில் எல்லாம் நீர்நிலை பெருகும்படி நீரைக் கூட்டவேண்டும். அவ்வாறு  செய்தலே,  இவ்வுலகத்தில் தம் பெயரினை நிலைநிறுத்துவதாகும் என்பதை,

                    வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன்

                   வைப்பிற்று ஆயினும் நண்ணி ஆளும்

                   இறைவன் தாட்குஉதவாதே அதனால்

                   ------ ------ ------ ------- ------ ------

                   நிலன்நெளி மருங்கில் நீர்நிலை பெருகத்

                   தட்டோர் அம்ம, இவண்தட் டோரே

                   தள்ளாதோர் இவண்தள்ளா தோரே     (புறம்.18:27-29)

என்று உலகிற்கு உணர்த்தினர். இவ்வகை அறிவுறுத்தலால், நாட்டில் தேவைப்படும் இடங்களனைத்தும் நீர்நிலைகளால் நிரம்பியிருந்தன என்பதை இலக்கியங்கள் சுட்டுகின்றன. [மடு, குளம் (பெரும்பாண்.288-89, மதுரை.710-11, குறிஞ்சி.63, மலைபடு.47, 213, திருமுருகு.224, பொருநர்.240, மதுரை.244-6), குட்டம் (பெரும்பாண்.269-71), கேணி(சிறுபாண்.172) என்று, பலபெயர்களுடனும், பல தன்மையுடனும் கூடிய, பல்வேறு பயன்பாட்டிற்கான நீர்நிலைகள் ஆங்காங்கே உருவாக்கப்பட்டன].

நீர்த்தடுப்பு /  மழைநீர் சேமிப்பு

            ‘உலகிலேயே அதிகமாக மழைபொழியும் வரிசையில் பிரேசிலுக்கு அடுத்து இந்தியா (ஆண்டுக்கு 1,150 மி.மீ) இரண்டாம் இடத்தில் உள்ளது. சுமார் 4,000 கன கி.மீ. பெய்யும் இந்நீரில் 690 கன கி.மீ. அளவிற்கு நாம் பயன்படுத்துகிறோம். மீதமுள்ள நீர் முறையான சேமிப்பின்றி வீணாக கடலில் கலக்கின்றது’ (திட்டம், மார்ச் 2005, ப.94) என்கிறது மழைநீர் தொடர்பான ஆய்வு. வீணாகும் நீரினைத் தடுத்துநிறுத்தி முறையாகப் பயன்படுத்தினால் நீரின் தேவையும், அதனால், உணவு மற்ற பிற தேவைகளும் நிறைவுறும். தொழில்களும் சிறந்து விளங்கும் என்பது தெளிவு. பழந்தமிழர், இவ்வகை நீரின் தேவையினை உணர்ந்திருந்ததால், அந்நீரினைப் பலவகையிலும் சேமித்து, அதனைப்  பலவகைத் தேவைகளுக்கும் பயன்படுத்தினர். காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடி கடலில் கலப்பதால் நன்மை இல்லை. இதனை உணர்ந்து, ஓடிவரும் மழைநீரினைத் தடுத்து நிறுத்த நீரோட்டங்களின் இடையே நீர்த்தேக்கங்களை ஏற்படுத்தி, மழைநீர் சேமிப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்திவந்த பழந்தமிழர் நீர் மேலாண்மையை அவர்தம்  நூல்கள் காட்டுகின்றன.

பாசனத்திற்கான நீர் நிலைகள்

      ·    நீர்த்தேக்கம்

            ஓடிவரும் மழைநீரினைத் தேக்கிவைத்து வேளாண்மைக்குப் பயன்படுத்த அறையும், பொறையும் அமைந்த பகுதிகளை இணைத்து, வளைந்த வடிவிலான நீர்த்தேக்கத்தினைக் அமைத்தனர். இதனை, 

                          அறையும் பொறையும் மணந்த தலைய

                       எண்நாள் திங்கள் அனைய கொடுங்கரை                                                                             தெண்ணீர்ச் சிறுகுளம் ----------    (புறம்.118:1-3)

என்பதில் அறிய முடிகிறது. இதில், பாறைகளையும், சிறிய குவடுகளையும் இணைத்துக் கட்டப்பட்ட, எட்டாம் நாள் தோன்றும் பிறை நிலவைப் போன்று வளைந்த கரையையுடைய குளம் சுட்டப்படுகிறது. மேலும்,

                             வேட்டச் சிறாஅர் சேட்புலம் படராது

                             படமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின் (புறம்.326:4,5)

என்பதில், நீர் வெளியேறும் வழிகளுடன் கூடிய அணைக்கட்டுப் பகுதியும், அணையில் காணப்பட்ட இடுக்குகளில், சிறுவர்கள் உடும்பு பிடித்த காட்சியும் விளக்கப்படுகிறது.

     · புதவு மற்றும் மடுகு

            அணைகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளில் தேக்கி வைத்த நீர், புதவின் வழியே திறக்கப்பட்டு, அமைக்கப்பட்ட கால்வாய்களின் வழியாக வேளாண்மைக்குப் பயன்படுத்தப்பட்டது. இதனை,   

ஓம்பா ஈகை மாவேள் எவ்வி

புனல் புதவின் மிழலையொடு கழனி   (புறம்.24:18-19)

என்ற அடிகள் காட்டுகின்றன. நீர் வெளியேற்றும் வாயில்களில் பாசனத்திற்காகத் திறந்துவிட்ட நீரின் ஓசையை, ‘இழுமென வொலிக்கும் புனலம் புதவில்’(புறம்.176:5) என்ற அடி காட்டுகிறது.  அதேபோல இதன் தொடர்ச்சியாக, அணைகளிலிருந்து நீர் வெளியேற்றும் வாயிலில் பூம்பொய்கை அமைந்திருந்ததையும், புனல்வாயிலில் பாசனத்திற்கு நீர் வெளியேற்றப்பட்டதையும் (பதி.13:1-3; 27:9), குளம் முதலியவற்றில் நீர் புகும் வாயில் அமைக்கப்பட்டிருந்ததையும் (மலைபடு.449, அகம்.237:14) இலக்கியங்கள் காட்டுகின்றன.

            மேலும், அணைகளில் வழிந்தோட அமைக்கப்பட்ட போக்கு மடையினையும், அதில் வழிந்தோடும் நீரின் ஓசையினையும் (புறம்.24:19, புறம். 176:5) புறநானூறு  காட்டுகிறது.  அதோடு, மதகில் நீர் எப்போதும் அழுத்தம் கொடுத்துக்கொண்டிருந்ததை,

                             உள்ளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன்

                             நிறைக்குளப் புதவின் மகிழ்ந்தனென் ஆகி (புறம்.376:19-20)

என்ற அடிகள் சுட்டுகின்றன.

குடிநீர்த் தேவைக்கான நீர்நிலைகள்

            வேளாண்மை தவிர்த்த குடிநீர்த் தேவைகளுக்கான தனியான நீர்நிலைகளையும் பழந்தமிழர் அமைத்தனர். இவ்வகை நீர் நிலைகளிலிருந்து பெறப்படும் நீரினைத் தூய்மைப்படுத்திப் பயன்படுத்தினர்.  ‘நீர் சேகரிப்பு அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட வேண்டும். நீர் ஆதாரங்களை மேம்படுத்தும் வகையில் தடுப்பணைகள் கட்டப்படுவதும், நீர் பிடிப்பு அமைப்புகளை மேம்படுத்துவதும், குளங்களையும் ஆறுகளையும் தூர்வாருவதும், நீர் நிலைகளையும், கிணறுகளையும் புதுப்பிப்பதும் அவசியமாகும். முற்றிலும் தொழிலாளர் சார்ந்த இப்பணிகள் வாயிலாக அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு 60 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியும்’ (திட்டம், மார்ச்சு2005 ப.48) என்று, நீர்நிலைகளின் மேம்பாடும் அதன் வழி பெறும் வேலைவாய்ப்பும்  சுட்டப்படுகிறது.  இச்சிந்தனையைப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைப்படுத்திய பழந்தமிழர் செயல் நுட்பத்தினை அக்கால இலக்கியங்கள் காட்டுகின்றன.

           நீருண்துறை

            உண்துறை என்பதற்கு, ‘உண்ணும் நீர் கொள்ளும் நீர்த்துறை’ என்று பொருள் வழங்குகிறது சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம்(ப.332). இவ்வகை, உண்துறையை இலக்கியங்கள் பரவலாகக் காட்டுகின்றன. நீரின் பயன்பாடு கருதி, இயற்கை நீர்நிலைகளான அருவி போன்றவற்றிலிருந்து  நீர் பெறும் தொழில்நுட்பத்தோடு இந்நீருண்துறைகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. தேவைக்கேற்ப நீர் பெறப்பட்டது. இத்துறையில் தெள்ளிய நீரினையும், பாசிபடர்ந்த நீரினையும், அருவியில் அடித்துவரப்படும் மலைபடுபொருள்களோடும் கூடிய நீரினையும் காணமுடிகிறது. இந்நீருண்துறையால் குடிநீரின் தேவையை நிறைவு செய்தனர். உண்துறைக்கு மலையிடத்துத் பூத்த பூக்களைத் தலைநீர் கொண்டுவந்து ஒதுக்குதலையும்(புறம்.390:23,24) காணமுடிகிறது.

       ·   கூவல்

     உவர்மண் நிலத்தில் நீருக்காகத் தோண்டிய நிலைகள் ‘கூவல்’ என அழைக்கப்படுகின்றன. அக்கிணற்றில் ஊறிய கலங்கிய சிலவாகிய நீரை, முற்றத்தில் வைக்கப்பட்டுள்ள பழமை வாய்ந்த அகன்ற வாயினையுடைய சாடியில் பெய்து வைப்பர். இதனை,

                             பூவற் படுவில் கூவல் தோண்டிய       

                             செங்கண் சில்நீர் பெய்த சீறில்

                             முன்றில் இருந்த முதுவாய்ச் சாடி

                             யாம் கஃடு உண்டென வறிது மாசு இன்று (புறம்.319:1-4)

என்பதில் அறிய முடிகிறது. அதேபோல, வன்னிலத்தில் பாறைகளை உளியால் இடித்துக் குழியாக அமைத்த பொது நீர் நிலையினை,

                             பார்உடைத்த குண்டு அகழி

                             நீர்அழுவ நிவப்புக் குறித்து                    (புறம்.14:5-6)

என்ற அடிகள் காட்டுகின்றன. குடிநீர்த் தேவைக்காக பாறைகளையும், வன்னிலத்தையும்கூட தோண்டும் வகையிலான கருவிகளைக் கொண்டிருந்தனர் என்பதும் இதில் பெறப்படுகிறது.  இவ்வகைக்  கூவல், புலத்தி   துணி   வெளுப்பதற்கான   தொழிற்சார்   நீர்நிலையாகவும்    அறியப்படுகிறது.    வன்புலத்தில் பாறைகளை உடைத்து, தோண்டப்பட்ட கூவலை, ‘கல்லறுத்து இயற்றிய வல்லுவர்க் கூவல்’ (புறம்.331:1-2) என்பதில் காணலாம். உவர்நிலத்தில் கூவல்  தோண்டப்பட்டதையும், அதில் புலத்தி நாள்தோறும் ஆடையை வெளுத்ததையும்,

                             களர்ப்படு கூவல் தோண்டி நாளும்

                             புலத்தி கழீஇய தூவௌ¢ அறுவை                  (புறம்.311:1-2)

என்ற அடிகளும் குறிப்பிடுகின்றன. இவ்வகை நீர் நிலைகளிலிருந்து பெறும்  நீரினை அப்படியே பயன்படுத்தாமல்,  தேற்றா மரத்தின்  கொட்டையைக் கொண்டு,  கலங்கிய நீரினைத் தெளிய வைத்துப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தினை அறிந்திருந்தனர் என்பதையும் அறியமுடிகிறது(கலி.142:63-65).

·         நீர்நிலைப் பாதுகாப்பு

            ஒரு நாட்டின் நீர்நிலைகள் என்பவை அந்நாட்டின் உயிர் நாடியாக அமைகின்றன. அவ்வகை நீர்நிலைகளை உருவாக்கினால் மட்டும் போதாது, அவற்றை இயற்கைச் சீற்றங்களிலிருந்தும், எதிரிகளிடமிருந்தும், விலங்குகளிடமிருந்தும் பாதுகாத்தல் வேண்டும். நீர்நிலைகளை உருவாக்குதலும், அவற்றைக் காத்தலும் நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ற செயலாக அமைகிறது. அவ்வகையில், இயற்கை சீற்றத்திடமிருந்து நீர்நிலைகளைக் காக்க, காவலர் அமர்த்தப்பட்டனர்(புறம்.15:9-10).

கயம் என்பது குளத்தையும் ஏரியையும் குறிப்பதாகும். இந்நீர்நிலை பொதுமக்களுக்கும்,  கால்நடைகளுக்கும் குடிநீரின் தேவைக்காக உருவாக்கப்பட்டதாகும். பொதுமக்களின் குடிநீர்த்தேவையினை நிறைவு செய்யும் இவை, போர்க் காலங்களில் எதிரிகளால் அழிவுக்கு உட்பட்டன. யானைகளை விட்டு இந்நீர்நிலைகளை அழித்தல் என்பது பண்டை போர் முறைகளில் ஒன்றாக அறியப்படுகிறது. ஆகவே, இவ்வகை நீர்நிலைகளுக்குப் பாதுகாப்பு தேவையாகியது. இதனைப் பண்டைத் தமிழர் அமைத்தனர்  என்பது பெறப்படுகிறது(புறம்.15:9-10).

 மழைவளம் பெருக்கும் வழிகள்

            மழை வளத்தைப் பெருக்க உதவும் வழிகளுள் முதன்மையானது இயற்கை வளங்களாகிய மலைவளத்தையும், வனங்களையும் காத்தலும்,  அதோடு, நீர்நிலைகளை ஆங்காங்கே ஏற்படுத்தி நீர்ச் சுழற்சிக்கு வழிவகுத்தலுமாகும்.  அடுத்ததாக, செயற்கை வளங்களை உண்டாக்குதல். இதில், மரங்களை வளர்த்து, இயற்கைச் சமநிலையைப் பேணுதல் குறிப்பிடத்தக்கது. இவ்வறிவியல் உண்மையைப் பழந்தமிழர் உணர்ந்திருந்தனர். அதனால், மரங்களைக் காக்கவும், மரங்களை மக்களைவிட உயர்வானதாக உணரவும்/உணர்த்தவும், சாலையோரங்களில்  மரங்களை வளர்க்கவும் செய்தனர்.

மன்னன் பிறநாட்டின் மீது போர்த்தொடுத்துச் செல்லுங்கால், ‘அந்நாட்டில் உள்ள விளைநிலங்களைக் கவர்ந்தாலும், ஊர்களை எரியூட்டினாலும், எதிரிகளை அழித்தாலும், அந்நாட்டில் உள்ள மரங்களை மட்டும் அழிக்காது விடுக’ என்று அறிவுறுத்துகிறார் பழந்தமிழ்ப் புலவரான காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் (புறம்.57:5-11). அவ்வகையில் வளர்க்கப்பட்ட மரங்கள், ‘கால மன்றியும் மரம்பயம் பகரும்’ (புறம்.116:13) தன்மையதாய் விளங்கின.

மழை

மண்ணின் நீர்  நிலைகளிலிருக்கும் நீர், ஆவியாகி மேகமெனத் திரண்டு,  குவிந்து, குளிர்ந்து, மேகம் இருண்டு மழையாகப் பொழிகிறதென்பதைப் பழந்தமிழர் அறிந்திருந்தனர். அதனால்,   நீர் நிலைகளை ஆங்காங்கே பெரிதும் ஏற்படுத்தினர்.

                                      நீண்டு ஒலிஅழுவம் குறைபட முகந்து கொண்டு

                                      ஈண்டு செலல்கொண்மூ வேண்டுவயின் குழீஇ

                                      பெருமலை அன்ன தோன்றல் சூல்முதிர்பு

                                      உரும்உரறு கருவியொடு பெயல்கடன் இறுத்து

                                      வளமழை மாறிய என்றூழ்க் காலை

                                      மன்பதை எல்லாம் சென்று உண கங்கைக்

                                      கரைபொரு மலிநீர் நிறைந்து தோன்றியாங்கு (புறம்.161:1-7)

என்பதில் கடல்நீரிலிருந்து ஆவியான மேகம், மலையெனக் குவிந்து, இருண்டு மழையாகப் பொழிந்தமை சுட்டப்படுகிறது. அதேபோல,

                                     கடல்வயின் குழீஇய அண்ணல்அம் கொண்மூ

                                      நீர்இன்று பெயரா வாங்கு           (புறம்.205:11,12)

என்பதில், கடல்நீரினை முகந்துசெல்லும் மேகம் காட்சிப்படுத்தப்படுகிறது. இவ்வகை மேகங்கள், பெருமலையால் தடுக்கப்பட்டு, குளிர்ச்சியடைந்து மழையெனப் பெய்கிறது(பதி.31:15-17; புறம்.103:7). இவ்வாறு, நீர்நிலைகளிலிருந்து நீரினைக் குடித்து  உருவான மேகம், மீண்டும் அந்நீர்நிலைகளை மழைநீரால் நிரப்பிற்று (புறம்.142:1-3).

இவ்வகை நீர் மேலாண்மை, ‘நீர் நிலை நிர்வாகம்’ ஆகும். நீர்நிலை நிர்வாகத்தின் தேவையையும்,  இவற்றில் மக்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் குறித்தும் இன்றைய தொலைநோக்குச் சிந்தனையாளர் வலியுறுத்துகின்றனர். ‘நீர்நிலை நிர்வாகமானது, ஒவ்வொரு வயலுக்கும் பாசன நீர் கிடைத்தல், பசிப்பிணியைப் போக்குதல், வறுமையை அகற்றுதல், இயற்கைச் சமநிலையை மீட்டெடுத்தல் ஆகிய முக்கிய நோக்கங்களைச் சாதிக்கவல்லது. வனப்பரப்பை அதிகரித்தல், மழைப்பொழிவை மேம்படுத்துதல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் ஆகியவற்றில், நீர்நிலை நிர்வாகம், முக்கியப் பங்கு வகிக்கிறது. ‘நீர்நிலை நிர்வாகம்’ என்னும் சொற் பிரயோகத்தில் ‘நீர்நிலை’ என்பது ஆறு அல்லது ஓடைகளுக்கு நீர்வழங்கும் ஓர் நீர்ப்பிடிப்புப் பகுதியைக் குறிக்கிறது. இத்தகைய நீர்நிலைப் பகுதியில், நீர் மட்டுமின்றி, மண், மரம், புல், பயிர், கால்நடைகள் ஆகியனவும் உள்ளன. எனவே, ‘நீர்நிலை நிர்வாகம்’ என்பது, இந்த அனைத்து இயற்கை ஆதாரங்களின் ஒட்டு மொத்தப் பாதுகாப்பைக் குறிப்பதாகும் (திட்டம், அக்டோபர் 2004, பக்.16-17) என்று, நீர் நிலை நிர்வாகம் குறித்தும், அதன் தேவை குறித்தும் விளக்கம் அளிக்கப்படுகிறது.

     மேலும், ‘நீர்நிலை நிர்வாகம் பிரபலமடைய வேண்டுமானால், அதாவது மக்கள் இயக்கமாக மாறவேண்டுமானால், இதற்கான தொழில்நுட்பங்கள் எளிமையாகவும், விலை மலிவாகவும், கண் கூடான பலன்களைக் கொடுக்க வல்லதாகவும் இருக்க வேண்டும்’  (திட்டம், அக்டோபர் 2004, பக்.16-17) என்றும் இன்று அறிவுறுத்தப்படுகிறது. அதே வழி, இவ்வகை நீர்நிலை மேலாண்மையானது, இன்றுபோலல்லாது பழந்தமிழகத்தில் மக்கள் இயக்கமாக விளங்கிற்று என்பதும், பழந்தமிழர்ப் பயன்படுத்திய நீரியல் தொடர்பாட தொழில்நுட்பம் எளிமையானதாகவும், பயன் நிறைந்ததாகவும், பொதுமக்கள் கையாளக் கூடியதாகவும் இருந்ததென்பதும் மேற்கண்ட புறநானூற்றச் சான்றுகள் வழி அறிய முடிகிறது. இவ்வகை மேலாண்மை நுட்பங்கள் இன்றும் கருத்தில்கொள்ளத் தக்க ஒன்றாக, வருங்காலத்திற்குத் தமிழ் நல்கிய கொடையக அமைவதை அறியமுடிகிறது.

*****

www.thamizhiyal.com

Dr.A.Manavazhahan