புதன், 19 ஆகஸ்ட், 2020

பழந்தமிழர் பொறியியல் நுட்பம்

 முனைவர் ஆ. மணவழகன், உதவிப் பேராசிரியர்,சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். சென்னை-113.

 (ஏ.வி.எம். அரசு மகளிர் கல்லூரி (ம) செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், திண்டுக்கல், பிப். 1,2,3.2012)

 

பல்வேறு அறிவியல் துறைகளின் அடிப்படையில் இயந்திரங்கள், கட்டடங்கள், சாலைகள், விமானங்கள், கப்பல்கள் போன்றவற்றை உருவாக்குதல், பராமரித்தல் ஆகியவை குறித்த தொழில்நுட்பத்துறை பொறியியல் எனப்படுகிறது (க்ரியா, ப.10380). பழந்தமிழரின் பொறியியல் தொழில்நுட்பக் கூறுகளை வேளாண்மை, பாதுகாப்பு, கட்டுமானம், கைவினைப் பொருள்கள் உற்பத்தி போன்ற பல நிலைகளில் காணமுடிகிறது. வேளாண்மைத் துறையில் பயன்பாட்டுக் கருவிகள், உற்பத்திப் பொருள்களைப் பிரித்தெடுக்கும் எந்திரங்கள், விலங்குகளிடமிருந்து விளைபொருள்களைப் பாதுகாக்கும் பொறிகள் என்பனவாகவும்,  பாதுகாப்புத் துறையில், மதிலுறுப்புகள், எந்திரப் புழைகள், தானியங்கி எந்திரப் பொறிகள் என்பனவாகவும் காணப்படுகின்றன. அதேபோல, கட்டுமானத் துறையில் அரண்களில் கருவிகளை ஏவப் பயன்படுத்தப்படும் எந்திர மேடைகள், அணைகளில் பயன்படுத்தப்பட்ட தானியங்கி நீர் இயக்கிகள் என்பனவும், கப்பல் கட்டுமானம், ஊர்திகள், தானியங்கி எந்திரப் பாவை போன்ற பலவும் பழந்தமிழரின் பொறியியல் தொழில்நுட்பத்திற்குச் சான்றுகளாய் அமைகின்றன. இவ்வகையான பதிவுகளைக் குறித்துக் காண்பதாக இக்கட்டுரை அமைகிறது. 

வேளாண்மைத் துறையில் பொறியியல் நுட்பம்

          கலப்பை

          வேளாண்துறையின் பயன்பாட்டுக் கருவிகளுள் இன்றியமையாதது கலப்பை. ‘உறுதியான மண்ணை கீழ்மேலாகக் கலப்பது கலப்பை’ என்கிறது அபிதான சிந்தாமணி. இவ்வகை கருவியை உருவாக்கிப் பயன்படுத்தும் நுட்பத்தைப் பழந்தமிழர் அறிந்திருந்தனர். இக்கருவி ஏர், நாஞ்சில் (அகம்.26;23) என்று வழங்கப்படுகிறது. கலப்பையின் உறுப்பாகிய கொழு (அகம்.26;24) பல இடங்களில் சுட்டப்படுகிறது. 

            தளம்பு

            விளைநிலத்தைப் பண்படுத்தும் கருவிகளுள் ஒன்றாக ‘தளம்பு’ அறியப்படுகிறது. நன்செய் நிலத்தில் உள்ள கட்டிகளை உடைக்க, நிலத்தைச் சமன்படுத்த இக்கருவி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை,

                             மலங்குமிளிர் செறுவில் தளம்புதடிந் திட்ட

                             பழன வாளை                                                          (புறம்.61;3-4) 

என்பதில் அறியலாம். இதில், நன்செய் நிலத்தில் உள்ள வாளை மீன்கள் தளம்பிடை மாட்டி வெட்டுப்பட்டன என்று சுட்டப்படுகிறது. எனவே, தளம்பு என்பது எஃகினாலான தகடுகளைக் கொண்டு, பொறியியல் நுட்பத்தோடு சுழலும் அமைப்பில் உருவாக்கப்பட்ட வேளாண் கருவி என்பது பெறப்படுகிறது.  

     நீர் ஏற்றக் கருவிகள்

     வேளாண் நிலங்களுக்கு நீர்பாய்சுவதற்கு இயற்கையான ஆறு, உருவாக்கப்பட்ட குளம், ஏரி போன்ற நீர் நிலைகளைப் பயன்படுத்தினர். இந்நீர் நிலைகளில் இருந்து நீர் பாய்ச்சுவதற்கு நீர் ஏற்றக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. இவை பட்டை, பன்றிப்பொறி, ஆம்பி, சால், தொப்பரை, துலா, பூட்டைப்பொறி போன்ற பெயர்களால் இலக்கியங்களில் வழங்கப்படுகின்றன. இவை நீரை முகக்கவும், இறைக்கவும் ஏற்ற வகையில் பொறியியல் நுட்பத்தோடு வடிவமைக்கப்பட்டிருந்தது தெரியவருகிறது.  

  பயிர்ப்பாதுகாப்பு மற்றும் வேட்டை

விளை பயிர்களை விலங்குகளிடமிருந்து காக்கவும், ஊன் உணவுகளைப் பெறவும், விலங்குகளை வீழ்த்தவும், பிடிக்கவும் விலங்குப் பொறிகள் போன்றவற்றை உருவாக்கியிருந்த பொறியியல் நுட்பம் அறியப்படுகிறது. விலங்குகளின் தன்மைக்கேற்ப பொறிகளின் செயல் திறனும், வடிவமைப்பும் மாறுபட்டிருந்தை அறியமுடிகிறது. அதேபோன்று, பறவை போன்றவைகளிடமிருந்து விளைச்சலைக் காக்க, சிறிய அளவிலான கைக் கருவிகள் பயன்படுத்தப்பட்டதையும் காணமுடிகிறது.

 பெரிய பொறிகள்

எய்யும் முள் போன்ற பருத்த மயிருடைய பிடரியைக் கொண்டதும், சிறிய கண்களைக் கொண்டதுமான, நிலத்தில் மேயும் முள்ளம்பன்றி உயர்ந்த மலையையடுத்த பரந்த தினைப்புனம் நோக்கி வரும்போது, அதனைப் பிடிக்க வைக்கப்பட்ட பெரிய துவாரத்தினை உடைய எந்திரத்தை நற்றிணை காட்டுகிறது(98:1-4). தினைப் புனத்தை அழித்து விடுவதால், பன்றிகட்கு அஞ்சி, அவை வரும் வழியில் வைக்கப்பட்ட எந்திரப் பொறியை மலைபடுகடாம்(193-195) சுட்டுகிறது.

அதே போல, தினையை உண்ணும் பன்றி அஞ்சி ஓடும்படி, புனத்திற்குரியவன் அமைத்திருந்த பொறியாக பெருங்கல் அடாஅர்என்பதில் வலிய புலி அகப்பட்ட காட்சியை,

                          தினை உண் கேழல் இரிய புனவன்

                        சிறு பொறி மாட்டிய பெருங் கல் அடாஅர்

                        ஒண் கேழ் வயப் புலி படூஉம் (நற்.119:1-3) 

என்பதில் அறியமுடிகிறது. இதில், வலிமை மிகுந்த புலி மாட்டும் என்பதால் எந்திரத்தின் தொழில்நுட்பமும் செயல்திறமும் விளங்கும்.

சிறிய கருவிகள்

· தழல் மற்றும் தட்டை

தினைப்புனம் காக்கப் பயன்பட்ட சிறிய கருவிகளாக தழல், தட்டை ஆகியவை அறியப்படுகின்றன. மலைப் பக்கத்தே கட்டிய பரண்மீது ஏறித் தழலும் தட்டையுமாகிய கிளிகளைக் கடியும் கருவிகளைக் கையிலே வாங்கிக் கிளிகளை ஓட்டினர்(குறிஞ்சி.41-44). தலைவி, வேங்கை மாலை சூடி, ஆயத்துடன் அழகுற நடந்து தழலினைச் சுற்றியும், தட்டையினைத் தட்டியும் தினைப்புனம் காத்தாள்(அகம்.188:1-13). தழலும் தட்டையுமாகிய கிளிகடிகருவிகளைத் தந்தும், தழையாடையைக் கொடுத்தும் இப்பொருள்கள் உனக்கு ஏற்புடையன என்று புனைந்துரைகளைக் கூறி தலைவியின் நலத்தைத் தலைவன் கொள்ளை கொண்டான்(குறு.223:4-7) என்பன போன்ற குறிப்புகளிலிருந்து வேளாண்மைத் துறையில் பாதுகாப்புக் கருவிகளாகத் தழலும், தட்டையும் விளங்கியமை தெரிகிறது. இவை விலங்குப் பொறிகளைப் போலல்லாது, சிறிய வடிவில் கையால் இயக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டன என்பது அறியப்படுகிறது. இரண்டு வடிவங்களும் ஒலிகளை அதிகப்படியாக எழுப்பும் தன்மையில் உருவாக்கப்பட்டிருந்தது பெறப்படுகிறது. 

கரும்புபிழி எந்திரம்

நிலத்தைப் பண்படுத்துதல், பலவித விதைகளைப் பயன்படுத்துதல், நீரினைத் தேக்கி வைத்தல் போன்ற நுட்பமான செயல்களின் மூலம் பழந்தமிழர் வேளாண் உற்பத்தியைப் பெருக்கியது அறியப்படுகிறது. விளைபொருள்களாகிய உற்பத்திப் பொருள்களிலிருந்து  இரண்டாம்நிலை உருவாக்கப் பொருள்களைப்¢ பிரித்தெடுக்க எந்திரங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. அவ்வகையில், விளைபொருளாகிய கரும்பிலிருந்து தேவையான இரண்டாம் நிலை பொருளாகிய கரும்புச் சாற்றினைப் பிரித்தெடுத்து வெல்லக்கட்டிகள் தயாரிக்க கரும்புபிழி எந்திரம்பயன்படுத்தப்பட்ட செய்தி பல இடங்களில் காணப்படுகிறது.

இவ்வெந்திரம் ஆண் யானை முழங்கும் முழக்கத்திற்கு மாறாக ஒலித்ததை,கரும்பின் எந்திரம் களிற்றெதிர் பிளிற்றும்’(ஐங்குறு. 55:1) என்றும், இவ் எந்திரத்தின் மிக்கொலியை,கரும்பின் எந்திரம் கட்பி னோதை’(மதுரைக்.258) என்றும் இலக்கியங்கள் காட்டுகின்றன. மேலும், மருதநிலத்து  நீர் நிலைகளில் உள்ள வாளை மீன்கள் அஞ்சி துள்ளிப் பாயும் அளவிற்கு ஒலி எழுப்பிய கரும்பு பிழி எந்திரத்தை,

                         கரும்பின் எந்திரம் சிலைப்பின் அயலது

                        இருஞ்சுவல் வாளை பிறழும்              (புறம்.322:7-8) 

என்ற அடிகளில் அறியமுடிகிறது. 

அதேபோல, கரும்புச்சாறு பிழியும் எந்திரத்திலிருந்து கருப்பஞ்சாற்றைச் சாலுக்கு எடுத்துச் செல்லும் தூம்பு, சாறு ஓடுதலால் நனைந்து கெடுதலை, ‘தீம்பிழி எந்திரம் பத்தல் வருந்த’(பதி.19:23) என்று பதிற்றுப்பத்தும்,  யானைகள் கலங்கிக் கதறியதைப் போல் ஆலைகள் ஆரவாரிக்கும் மாறாத ஓசையை உடைய கொட்டிலில், கரும்புச் சாற்றைக் கட்டிகளாகக் காய்ச்சுவதால் தோன்றும் புகையை,

                         கணஞ்சால் வேழங் கதழ்வுற் றாஅங்கு

                        எந்திரஞ் சிலைக்குந் துஞ்சாக் கம்பலை

                        விசய மடூஉம் புகைசூழ் ஆலை      (260-262) 

என்று பெரும்பாணாற்றுப்படையும் காட்டுகின்றன. அதேபோல, பசிய கரும்பைப் பிழிந்து, பாகை அடும் கொட்டிலில் காய்ச்சுதலை,

                         கார்க்கரும்பின் கமழாலைத்

                        தீத்தெறுவிற் கவின்வாடி      (9-10) 

என்று காட்டுகிறது பட்டினப்பாலை. 

மேலும், கரும்பு ஆலையில் சென்று, பயனுற அசைந்த கரும்பினையும், மழை பெய்வதைப் போல் கருப்பஞ் சாற்றை மிகவும் பெய்யும் கருப்பாலைகளில், விரைந்து   கரும்புகளின் கணுக்களை எந்திரம் பிழிவதால் அந்தக்கரும்பினின்று எழும் ஆராவாரத்தையும்,ஆலைக் கலமருந் தீங்கழைக் கரும்பு’(மலைபடு.119)என்பதிலும்,

மழை கண்டன்ன ஆலைதொறும் ஞெரேரெனக்

கழை கண் உடைக்கும் கரும்பின் ஏத்தமும்   (மலைபடு.340-341) 

என்பதிலும் அறியமுடிகிறது. இவ்வாறு கரும்பு பிழிவதாலும், ஆலையில் காய்ச்சப்படுவதாலும் ஊர்களின் தோற்றப் பொலிவானது, கரும்பாலைப் புகையினால் பரப்பப் பெற்று, இருண்ட மேகம் சூழ்ந்த பெருமலை போலத் தோன்றியதை,

                              பொங்கழி ஆலைப் புகையொடும்  பரந்து

மங்குல் வானத்து மலையில் தோன்றும்          (சிலம்பு.10:151,152)

என்று காட்டுகிறது சிலம்பு. இச்சான்றுகளின் வழி, கரும்பு பிழி எந்திரம் பெரிதாக ஒலிக்கும் தன்மையுடையதாகவும்,  இடைவிடாமல் இயங்கும் ஆற்றல் கொண்டதாகவும், அதிகப்படியான கரும்புகளைப் பிழிந்தெடுக்கும் வன்மை வாய்ந்ததாகவும் உருவாக்கப்பட்டிருந்த தொழில்நுட்பம் பெறப்படுகிறது. 

கட்டுமானத் துறையில் பொறியியல் நுட்பம்

பாதுகாப்புத் துறையில் பழந்தமிழர் கட்டுமானப் பொறியியல் நுட்பம் மிகுதியும் காணப்படுகிறது.  குறிப்பாக அரண்களின் கட்டுமானத்தில் பதவிதமான மதிலுறுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை மிகவும் நுட்பமான வேலைபாடுகளுடன் காணப்படுகின்றன. 

மதிலுறுப்பு

பதப்பாடு, எந்திரம், சோசம், தோணி, விதப்பு, ஞாயில், நாஞ்சில் மதிலுறுப்பே(ப.318) என்று மதிலுறுப்பின் பெயர் ஏழினைச் சுட்டுகிறது சேந்தன் திவாகரம். இவற்றுள் பதப்பாடு, சோசம், விதப்பு எனும் பெயர்கள் பழந்தமிழ் நூல்களில் வழக்குப் பெறவில்லை. 

  எந்திரம்

மதிலுறுப்புகளில் எந்திரமும் ஒன்று. எய்தல் எனல் வீசுதல்; எடுத்தல் எனல் வஞ்சித்தல். எட்டுதல் எனல் கிட்டுதல், அகப்படுதல் (செந்தமிழ் அகராதி, ப.93&95). எய்யும் திரமும், எத்தும் திரமும், எட்டும் திரமும் உடைய பொறி எந்திரம் எனப்பட்டது. வாழ்வில் பிற செயல்களுக்குப் பயன்படுத்திய எந்திரநுட்பங்களை நாளடைவில் போரியலுக்கும் பயன்படுத்த முற்பட்டனர் என்பது அறியப்படுகிறது. தானே அம்பெய்யும் பொறியியல் நுட்பத்துடன் கட்டப்பட்ட எந்திய முகப்பை,

செம்பொறிச் சிலம்பொடு அணித்தழை தூங்கும்

எந்திரத் தகைப்பின் அம்புடை வாயில்  (பதி.53:6-7) 

 

அமர் எனின் திங்களும் நுழையா

எந்திரப் படுபுழை                  (புறம்.177:4-5) 

என்பனவற்றால், அமர் காலங்களில் அயலவர் படைகளைத் தாக்க, அழிக்கப் பயன்படும் வகையில் அரண்களில் பல்வேறு பொறிகள் பொருத்தப்பட்டிருந்தன என்பது தெரிகிறது. புழை என்பது துளை, வாயில், ஒடுக்க வழி, மதிலில் அம்பெய்யுமிடம் (ஏவறை) என பொருள்படும் (செந்தமிழ் அகராதி, ப.534).

பகை வீரர்களின் பார்வைக்குச் சிறுவழி போலத்தோன்றும் மதிலின்கண் உள்ள, இருள் சூழ்ந்த ஒடுக்க வழிகளில் பல்வேறு எந்திரப் பொறிகள் பொருத்தப்பட்டிருந்தன. இருளில் இடம் பெற்றிருந்த இவ்வெந்திரப் பொறிகள் பகை வீரர்களின் கண்ணுக்கு எளிதில் புலப்படாது; பகை வீரர்கள் புழைகளைக் கடக்கும் பொழுது கட்டாயமாக அந்த எந்திரப் பொறிகளில் சிக்கித் துன்புற்று அழிதல் உறுதி. இத்தகு பொறிகளுடன் கோட்டை மதில்மேல் பல எந்திரப் பொறிகளும் இடப்பெற்றிருந்ததை, 

                        மிளையும் கிடங்கும் வளைவில் பொறியும்

                        கருவிரல் ஊகமும் கல்லுமிழ் கவணும்

                        பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும்

                        காய்பொன் உலையும் கல்லிடு கூடையும்

                        தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை அடுப்பும்

                        கவையும் கழுவும் புதையும் புழையும்

                        ஐயவித் துலாமும் கைபெயர் ஊசியும்

                        சென்றுஎறி சிரலும் பன்றியும் பணையும்

                        எழுவும் சீப்பும் முழுவிறல் கணையமும்

                        கோலும் குந்தமும் வேலும் பிறவும்      (15:207-16) 

என்று தொகுத்துரைக்கிறது சிலப்பதிகாரம். இதில், வளைவிற் பொறியானது வளைந்து தானே அம்பெய்யும் இயந்திரவில என்பது பெறப்படுகிறது (ந.மு. வேங்கடசாமி நாட்டார், சிலம்பு.15:211, உரை). அதோடு, கருவிரலுடைய கருங்குரங்கு போன்ற பொறிகளும், கல்லினை வீசும் கவணும், மதிலைப் பற்றுவார் மீது சொரிவதற்காக எண்ணெய் கொதிக்கும் மிடாக்களும், செம்பினை உருக்கும் மிடாக்களும், இரும்பினைக் காய்ச்சி உருக்குதற்கு அமைத்த உலைகளும், கல் இடப் பெற்ற கூடைகளும், தூண்டில் வடிவாக அமைந்த கருவிகளும், கழுத்தை முறுக்கும் சங்கிலிகளும், பறவை தலை போன்ற அடுப்புகளும், மதிலைப் பற்றி ஏறும்போது தள்ளுகிற கவறுபட்ட கொம்புகளும், கழுக்கோலும், அம்புக் கட்டுகளும், மறைந்து கொண்டு போரிடும் ஏவறைகளும், நெருங்கினார் தலையைத் திருகும் மரங்களும், மதிலின் உச்சியைப் பற்றுவார் கையைத் துளைத்துத் துன்புறுத்தி அப்புறப்படுத்தும் ஊசிப் பொறிகளும், பகைவர் மீது பாய்ந்து தாக்கும் மீன்கொத்திப் பறவை போன்ற பொறிகளும், மதிலில் ஏறியவரைக் கோட்டால் கிழித்தெறியும் பன்றிப் பொறிகளும், கதவிற்கு வலிமை சேருமாறு கதவின் குறுக்கே உட்பக்கத்தில் அமைக்கப்படும் கணையம் போன்ற பொறிகளும், களிற்றுப்பொறி, புலிப்பொறி ஆகிய பிற எந்திரப் பொறிகளும் சுட்டப்படுகின்றன.

 அதேபோல, பகைவன் வந்து முற்றுகையிட்டபோது மறைவிடத்திலிருந்து முன் வந்து, அவர்கள் மீது படைக் கலங்களை எறியும் தானியங்கிப் பொறிகள் பொருத்தப்பட்ட கோட்டையை,

                         வந்தெறி பொறிகள் வகைமாண் புடைய

                        கடிமதில் ஓங்கிய இடைநிலை வரைபு    (28:23-24) 

என்று காட்டுகிறது மணிமேகலையும். மேலும், உயர்ந்து வளர்ந்த கோபுரங்களிடத்தே, வில்விசையைவிட விரைந்து உயரே எழுதலும், தாழ்தலும் ஆற்றும் எந்திரப் பாலமாம் ஐயவி துலாமையும், அம்பு உமிழ்கின்ற வேல் நிறைந்த காப்பிடத்தையும்,

நெடு மதில் நிறை ஞாயில்

அம்பு உமிழ் அயில் அருப்பம்     (65-66) 

என்று சுட்டுகிறது மதுரைக்காஞ்சி. காவற்காடு, கிடங்கு, உயர்ந்த கோபுரங்கள், வரிசையான வாயில்கள், நெடிய மதில், நிரல்பட்ட சூட்டுகள் ஆகியற்றை உடைய வேல், அம்பு வீசும் அரண்கள் இதில் சுட்டப்படுகின்றன. பெருமளவில் பகை வீரர்கள் வரும் முக்கிய பெரு வழிகளை நிலையான தொலை இலக்காகக் கொண்டு அம்பு எய்யவும், அவ்வழிகளைக் கடக்கும்போது வீரர்கள் மேல் வீழ்ந்து வீழ்த்தவும் பொருத்தப்படுவன வளைவில் பொறிகள். அம்பு உமிழ் அயில் அருப்பம்எனும் தொடர் இத்தகு பொறிகள் அரண்களில் பொருத்தப்பட்டிருந்தமையைக் குறிக்கிறது. இவை,  இக்காலப் போரியல் நிலைக்காப்பிடங்களில் படைகளை எதிர் நோக்க பொருத்தப்பட்டிருக்கும் தொலை இலக்கு நிலைப்படைக் கருவிகளை ஒத்தன(போரியல் அன்றும் இன்றும்,  ப.132) என்பது பெறப்படுகிறது. 

 ஞாயில்

ஞாயில் என்பது கோட்டையின் ஏவறை (செந்தமிழ் அகராதி,ப.32). ஞா+இல்=ஞாயில் ஆயிற்று. ஞாலுதல் எனில் தொங்குதல் (செந்தமிழ் அகராதி,322). ‘எய்தால் மறைதற்கு உயரப்படுப்பதுஎனவும் ஏப்புழைக்கு நடுவாய் எய்து மறையுஞ் சூட்டுஎனவும் ஞாயிலை விளக்குவர் நச்சினார்க்கினியர் (மதுரைக்.66, உரை; சிந்தாமணி. 105, உரை). எனவே, தொங்குதல் போன்று அமைக்கப்படும் உயர் சூட்டுடன் கூடிய ஏவறைகள் ஞாயில் என்பது பெறப்படுகிறது.

                         வாயிலொடு புழை அமைத்து

                        ஞாயில் தொறும் புதை நிறீஇ   (பட்டினப்.287-288) 

எனும் தொடர்கள் ஞாயிலின் இயல்பு உணர்த்தும். புதை என்பது  மறைவு, மறைவிடம், அம்புக் கட்டு, புதுமை என்றும் குறிக்கப்படுகிறது (செந்தமிழ் அகராதி, ப.527). பெரிய வாயில்களுடன் சிறிய வழிகளையும் அமைத்துச் சூட்டுதொறும் அம்புக் கட்டுகளைக் கட்டி வைத்தலுக்கு உரியது ஞாயில் என்பதாகிறது. 

மேலும், ஞாயில் தோறும் பகைவர் காட்சியினின்றும் - கருவிகளின் தாக்குதலினின்றும் மறைவும், காக்கவும், தாக்கவும் அமைப்புகள் உண்டு என்பது விளங்கும். குறுந்தாள் ஞாயில்’ (பதி.71:12) என்பதால் குறுகியிருக்கும் படிகளையுடைய ஞாயில் எனவும், நெடுமதிலின்கண் வரிசையாக இருக்கும் சூட்டுகள்நிரைஞாயில்’ (மதுரைக்.66), ‘நிரை நிலை ஞாயில்’ (அகம்.124:16) எனவும் குறிக்கப்படுகின்றன.

மதிலின் மேல் விளங்கும் ஞாயில்கள் வானில் விளங்கும் விண்மீன்களை ஒத்துத் தோன்றின (புறம்.21:3-4). ‘மதிலும் ஞாயிலும் இன்றே (புறம்.355:1) எனும் தொடரால் மதிலின்கண் விளங்கும் ஓர் உறுப்பு ஞாயில் என்பது விளங்கும். ஞாயில் என்பதற்கு மதிலின் மேலுள்ள ஏப்புழைக்கு நடுவாய் எய்து மறையும் சூட்டுஎன பொருளுரைப்பார் உ.வே.சாமிநாதையர் (புறம்.355:1, உ.வே.சா., பாடல் குறிப்புரை). இக்குறிப்புகளின் வழி, மதிலின் முக்கிய உறுப்பாகிய ஞாயிலின் கட்டமைப்பில் காணப்படும் தொழில்நுட்பம் பெறப்படுகிறது. 

 புழை

புழை என்பது துளை, வாயில், ஒடுக்க வழி, மதிலில் அம்பெய்யுமிடம்(ஏவறை) எனும் பொருளுடையதாகும்(செந்தமிழ் அகராதி, ப.534). ‘வாயிலொடு புழை அமைத்து’ ¢(பட்டினப்.287)  எனும் தொடரால் கோட்டைகளில் பெருவாயிலொடு சிறுவழிகளையும் அமைத்திருந்தனர் என்பது விளங்கும். அம்பெய்வதற்கு என அமைக்கப்பட்ட சிற்றிடம் ஏப்புழை எனப்பட்டது.

தானே எய்யக் கூடியதும், தொடர்ச்சியாகத் தாக்கவல்ல  ஆயுதங்களை  வெளியிடக் கூடியதுமான பலவித எந்திரப் பொறிகளையும் இதில் பொருத்தினர். அதற்கான எந்திரங்களை வடிவமைக்கும் நுட்பத்தினையும் பெற்றிருந்தனர். இத்தன்மை வாய்ந்த அரண்கள், குன்றுகள் போல அருகருகே காட்சியளித்தன. போர்க்காலங்களில் நிலவின் ஒளியும் நுழைய முடியாதவாறு அமைக்கப்பட்ட பலவகை எந்திரப் பொறிகள் நிறைந்த புழைகளை,

தமரெனின் யாவரும் புகுப அமரெனில்

                        திங்களு நுழையா எந்திரப் படுபுழைக்

                        கணமாறு நீட்ட நணிநணி இருந்த

                        குறும்பல் குறும்பின்                (பா.177:4-7) 

என்கிறது புறநானூறு. 

படைக் கருவிகளோடு கூடிய அரண்கள்

வீரர்களால் எடுத்துச் செல்லக்கூடியவை, ஒரே இடத்தில் நிலையாக இருந்து எய்தக் கூடியவை என வேறுபட்ட படைக்கருவிகளும், படைக் கருவிகளோடு கூடிய அரண்களின் அமைப்பும்  அறியப்படுகிறது. படைக் கருவிகளில் அம்பின் வகைகளை,

                        பகழி, வாளி, வண்டு, பாணம்,

                        நிகழ்சரம், பத்திரி சிலீ¦முகம், பல்லம்,

                        புங்கம், கணை, குதை, கங்கபத்திரம்,

                        அத்திரம், தோணி, கோல், விசிகம், அம்பே (ப.138) 

எனச் சேந்தன் திவாகரமும்,

                         பகழி, வாளி, தோணி, வாணம்,

                        கதிரம், பல்லம், கணை, கோல், சரமொடு,

                        வண்டு, பத்திரம், சீலிமுகம், விசிகம்,

                        அம்பின் பெயர் உருவாகலும் உரித்தே     (ப.1539) 

எனப் பிங்கல நிகண்டும்  தொகுத்துரைக்கின்றன. அம்புகளில் மட்டும் இத்தனை வகைகளை உருவாக்கிப் பயன்படுத்திய பழந்தமிழரின் தொழில்நுட்ப அறிவினை இதில் அறியலாம்.

ஆழமான அகழிகளையும், நீண்ட மதில்களையும், வலிமையான கோட்டைகளையும் வடிவமைத்ததோடு,  அம்புகள் பொருத்தப்பட்ட காவல் மிக்க அரண்களையும் அமைத்தனர். இவ்வரண்,அம்புதுஞ்சும் கடியரண்’ (புறம்.20:16) எனப்பட்டது. கோட்டைகள் மிகவும் பாதுகாப்பானதாகவும், எதிரிகளைத் தாக்கும் எந்திரங்களையும்,  ஆழமான அகழிகளையும், நீண்ட மதில்களையும் கொண்ட தொழில்நுட்பத்தோடு விளங்கின. இவ்விதமான எல்லாவகை படைக்கலன்களையும் தன்னகத்தே கொண்டு விளங்கும் அரணை முழுமுதல் அரணம்என்கிறார்  தொல்காப்பியர் (தொல். 1011).

கணையமரம் செறிக்கப்பட்ட உயரிய நிலையினையுடைய மதில் வாயிலிடத்தே, வில்லினது அம்பு செலுத்தும் வன்மையோடு பொருந்திய, சிறப்புடைய ஐயவித் துலாமும், காவற்காடும், ஆழ்ந்த கிடங்கும், நெடிய மதிலிடத்தே நிரல்படவமைத்த பதணமும் கொண்டு விளங்கிய எந்திரப் பொறிகளமைந்த கோட்டையை,

                         துஞ்சுமரந் துவன்றிய மலரகன் பறந்தலை

                        ஓங்கு நிலை வாயில் தூங்குபு தகைத்த

                        வில்லிசை மாட்டிய விழுச்சீர் ஐயவிக்

                        கடிமிளைக் குண்டு கிடங்கின்

                       நெடுமதில் நிரைப் பதணத்து

                       தண்ணலம் பெருங்கோட்டகப்பா எறிந்த

                       பொன்புனை உழிஞை வெல்போர்க் குட்டுவ (பதி.22:21-25) 

என்ற பாடலடிகள் காட்டுகின்றன. இதில், ஐயவி துலாம் என்பது, மதிலில் பொருத்தப்படும் ஒருவகை போர்க்கருவி என்பதும், இதனை வாயிலில் தொங்கும்படி அமைப்பர் என்பதும், அப்பொறியைப் பகைவர் மீது விசையம்பு செலுத்தும் விற்பொறியுடன் பொருந்த வைத்திருப்பர் என்பதும் பெறப்படுகிறது. அதனால் வில்விசை மாட்டிய விழுச்சீர் ஐயவிஎன்கிறார் ஆசிரியர். தகைந்தஎன்பது கட்டியஎனப் பொருள்படும் என்றும், விசை வில் என்பதை, தானே வளைந்து அம்பை எய்யும் வில் என்றும், நிரைப்பதணம் என்பதை, கவண், கூடை, தூண்டில், துடக்கு, ஆண்டலை அடுப்பு, சென்றெறி சிரல், நூற்றுவரைக்கொல்லி, தள்ளி வெட்டி என்பவை பொருந்திக் காவல் செய்பவர் தேவையில்லாத நொச்சி மதில் என்றும் (பதி. அ.மாணிக்கனார் உரை) உரையாசிரியர் சுட்டவர்.

எந்திரப் பொறிகளும், எய்யப்படும் அம்பும், பகைவரைத் தடுக்கும் வளைவில் பொறி, கருவிரல் ஊகம் முதலிய பலவகையான பொறிகளும் அமைக்கப்பட்ட மதிலும், கொலைவல்ல முதலைகளையுடைய ஆழ்ந்த இடத்தையுடைய அகழியும், வளைவு வளைவாகக் கட்டப்பட்டு வானளாவ உயர்ந்த மதிலும் கொண்ட எயிலை,

                        செம்பொறிச் சிலம்பொடு அணித்தழை தூங்கும்

                       எந்திரத் தகைப்பின் அம்புடை வாயில்

                       கோள்வன் முதலைய குண்டுகண் அகழி

                       வானுற ஓங்கிய வளைந்துசெய் புரிசை           (பதி.53:6-9) 

என்ற அடிகள் காட்டுகின்றன. மேலும், மலைச் சிகரங்களுடன், மாறாக எடுத்த வளைந்த இடத்தையுடைய புற மதிலும், அகன்ற நாட்டைக் கண்டாற் போலப் பேரிடத்தை அகத்தேகொண்ட, அம்புக்கட்டுகள் பொருந்திய இடைமதிலும், கதவிடத்தே கிடக்கும் கணையமரங்கள் பல செறிந்து, ஈன்றணிமை கொண்டவள் அரைத்துப் பூசிக் கொள்ளும் ஐயவியாகிய வெண் சிறு கடுகல்லாத ஐயவித்துலா மரங்களும் நாலவிடப்பட்ட மதிலை,

                             கோடுறழ்ந்து எடுத்த கொடுங்கண் இஞ்சி

                                  நாடுகண் டன்ன கணைதுஞ்சு விலங்கல்

                                  துஞ்சு மரக்குழாந் துவன்றிப் புனிற்றுமகள்

                                  பூணா ஐயவி தூக்கிய மதில்                (பதி.16:1-4) 

என்ற அடிகளும் காட்டுகின்றன. 

ஊர்திகளும் சக்கரங்களும்

          பழந்தமிழகத்தில் பலவிதமான ஊர்திகளின் பயன்பாடு காணப்படுகிறது. பொறியியலின் நுண்மையான படைப்பாக சக்கரங்கள் கருதப்படுகின்றன. பிற்காலத்தில் உருவான பலவகையான தொழில்நுட்பங்களுக்குச் சக்கரங்களின் உருவாக்கமே அடிப்படையாக அமைந்ததை அறியலாம். பழந்தமிழ் இலக்கியங்களில் இச்சக்கரங்கள் பொதுமக்கள் பயன்படுத்திய ஊர்திகள், வணிக வண்டிகள், தேர்கள், அரசர்கள், தலைவர்கள் போன்றோர் பயன்படுத்திய தேர்கள் போன்றவைகளில் காணப்படுகின்றன. இவை தேவைக்கும், பயன்பாட்டிற்கும் ஏற்ப பலவகை பொறியியல் நுட்பங்களோடு உருவாக்கப்பட்டன.   

   மேலும், சக்கரத்தின் பயன்பாடு மண்பாண்டத் தொழிலிலும் அறியப்படுகிறது. மண்பாண்டங்கள் வனைதற்குச் சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டன. இவ்வகை சக்கரங்களின்மீது சுழலும் குமிழி பொருத்தப்பட்டிருந்ததை மலைபடுகடாம்(247) காட்டுகிறது. 

கப்பல் கட்டுமானம்

            கடல் வாணிகத்தில் தலைசிறந்து விளங்கியவர் பழந்தமிழர். துறைமுகங்களில் கப்பல்கள் சுற்றித்திரிந்த காட்சியைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. இக்கடல் வாணிகத்திற்காக, கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் நுட்பத்தினைப் பெற்றிருந்தனர். தமிழரின் கடல் வாணிகம் குறித்தும், கடல் பயணம் குறித்தும் பல்வகையான இலக்கியப் பதிவுகளும், வெளிநாட்டுக் கடல் பயணிகளின் குறிப்புகளும் பகர்கின்றன. இலக்கியங்களிலும், நிகண்டுகளிலும் காணப்படும் கடல்போக்குவரத்திற்கான கலன்கள் குறித்த பல்வேறு பெயர்கள் பழந்தமிழரின் கடல்போக்குவரத்தினையும், கலன்களின் கட்டுமானத் தொழில்நுட்பத்தினையும் உறுதிசெய்கின்றன.

                                       வங்கம் பாதை தோணி யாணம்

                                       தங்கு மதலை திமில் பாறு அம்பி

                                       பஃறி சதாவே பாரதி நவ்வே

                                       போதம் தொள்ளை நாவாய் என்றிவை

                                       மேதகு நீர்மேல் ஓடும் மரக்கலம் (ப.418) 

என்று மரக்கலன்களின் வகைகளையும், அவற்றிலும் தோணியின் வகைகளை, 

                                    பஃடு பஃறி யம்பி யோடம்

                                  திமிலை தோணி யெனச் செப்பினரே (ப.419) 

என்றும், தெப்பத்தின் வகைகளை, 

                                    பகடு பட்டிகை யானம் அம்பி

                                   படுவை தொள்ளை புணை மிதவை தெப்பம் (ப.419) 

என்று தொகுத்துரைக்கிறது திவாகரம். நீர்ப்போக்குவரத்தில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு கலன்களின் பயன்பாடும், பல்வேறு பயன்பாட்டிற்கேற்ற பல்வேறு வடிவங்களில்  அவற்றை உருவாக்கிய பழந்தமிழரின் நுட்பமும் இதில் அறியமுடிகிறது. 

துறைமுகங்களில் கப்பல்கள் சுற்றித்திரிந்த காட்சியை இலக்கியங்கள் படம்பிடிக்கின்றன. இத்தகைய கடல் போக்குவரத்திற்குத் தேவையான கலன்களை தயாரித்த பழந்தமிழரின் தொழில்நுட்பவளத்தை, அவர்தம் இலக்கியச் சான்று காட்டுகின்றன. கடல் வாணிகத்தில் ஈடுபடும் களங்களுக்கு, பயணத்தின் இடையில் பழுது ஏற்பட்டால் அவற்றை நீக்குதற்காக கப்பல் பொறியாளர் பயணக் களத்தில் பணி அமர்த்தப்பட்டனர். கடல்வாணிகத்தில் ஈடுபட்டு, சுற்றித் திரிந்து பழுதுபட்டுவிட்ட கப்பலைப் பழுதுநீக்குவோரை, 

பெருங்கட னீந்திய மரம்வலி யுறுக்கும்

பண்ணிய விலைஞர் (பதி.76:4-5)

 

என்கிறது பதிற்றுப்பத்து. இதற்கு, பெருங் கடலைக்கடந்து சென்று மீளுதலால் பழுதுற்ற மரக்கலத்தின் பழுது போக்கிப் பண்டுபோல வலியுடைத்தாக்கும் கடல் வணிகர் போல என்று பொருள் கொள்வர்  (அ.மாணிக்கனார், பதி. உரை). கப்பல் கட்டுமானக் கூடத்தின் ஒரு பகுதியாக, பழுதுபட்ட கலன்களைச் செப்பனிடும் தொழிற்கூடம் (பணிமனை) அமைந்திருந்ததையும் அறியமுடிகிறது. அதேபோல, பேரொலி எழும் நீரையுடைய கடல் துறைகளில் கப்பல் தொழில் புரிவோரை, ‘முழங்கு நீர் முன்றுறைக் கலம்புணர் கம்மியர் (மணி.7:70) என்று மணிமேகலை சுட்டுகிறது. கப்பல் தொழில் புரிவோர் கம்மியர் என அழைக்கப்பட்டனர். கடல் பயணத்தில் மரக்கலம் செய்யும்/பழுதுபார்க்கும் கம்மியரை உடன் அழைத்துச் செல்லும் வழக்கத்தினை, ‘கலஞ்செய் கம்மியர் வருகென’(மணி.25:124)என்ற அடி உறுதிசெய்கிறது.

 வானவூர்தி

ஓட்டுநர் தேவையில்லாத வான ஊர்தியைச் சிந்தித்துப்பார்த்த பழந்தமிழர் தொழில்நுட்ப அறிவினை, ‘வலவன் ஏவா வான ஊர்தி(புறம். 27:7,8) என்ற பாடலடி கோடிட்டுக் காட்டுகிறது.  அதேபோல, உம்பர் உறையும் ஒளிகிளர் வானத்தின்கண், வைமானிகர் ஊர்ந்து திரியும் விமானங்களின் நிழல் வைகை ஆற்று நீரில் விழுந்து ஒளிவிட்டதை,

உம்பர் உறையும்  ஒளிகிளர்வா னூர்பாடும்

                                    அம்பி கரவா வழக்கிற்றே           (பரி.15:70, 71) 

என்ற அடிகள் சுட்டுகின்றன.

இல்லப்பயன்பாட்டுப் பொருள்கள்

திரிகை (அரைக்கும் எந்திரம்)

இல்லப் பயன்பாட்டுப் பொருள்களில், உழுந்து, அரிசி, தினை போன்ற தானியங்களை அரைக்க திரிகை பயன்படுத்தப்பட்டது. அரிசியை இட்டுச் சுழலும் திரிகையின் ஒலி போன்று, தேரின் சக்கரம் மணலை அறுத்துக் கொண்டு வந்ததை,

                              ஐதுஉணங்கு வல்சி பெய்துமுறுக்கு உறுத்த

                            திரிமரக் குரல்இசை கடுப்ப         (அகம்.224:12,13) 

என்ற அடிகள் காட்டுகின்றன. அதேபோல, முல்லை நில மக்கள் உறையும் இல்லின் முன், யானையின் காலை ஒத்த திரிமரம் நிறுத்தப்பட்டிருந்த பந்தரும் காணப்படுகிறது(பெருபாண்.185-187).

எந்திரப் பாவை

மகளிர் பாவை வைத்து விளையாடுதல் பழந்தமிழர் பழக்க வழக்கங்களில் ஒன்றாகும். மண்பாவை, மரப்பாவை போன்றவை இவ்விளையாட்டில் இடம்பெற்றிருந்ததைப் போல, எந்திரத்தினாலான பாவையும் பயன்பாட்டிலிருந்தது தெரியவருகிறது. இவ்வெந்திரப் பாவை, தானே இயங்கும் எந்திரத் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருந்தது.  இதனை, 

                                   ----- ---- நல் வினைப்

                                  பொறி அழி பாவையின் கலங்கி            (பா.308:6,7)                      

என்கிறது நற்றிணை. இதில், நல்ல வேலைப்பாடமைந்த, தானே இயங்கும் எந்திரப் பாவை அதிலுள்ள எந்திரம் அழிந்துபட்டதால் இயங்காமல் கிடந்தது உவமையாக்கப் பட்டுள்ளது.

 எந்திரவாவி

எந்திரவாவி எனப்படும் எந்திரம் பொருத்தப்பட்ட நீர்நிறைதொட்டி பழந்தமிழகத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது தெரியவருகிறது. இவ்வெந்திர நீர்த்தொட்டியில், இளைஞரும் மகளிரும் குளித்ததையும், எந்திரத் தொட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட நீரினையும்,

                                   எந்திர வாவியில் இளைஞரும்  மகளிரும்

                                  தந்தமில் ஆடிய சாந்துகழி நீரும்         (28:7,8) 

என்கிறது மணிமேகலை. இவ் எந்திரவாவியை, வேண்டும் பொழுது நீர் நிறைத்தற்கும், வேண்டாதபொழுது போக்குதற்கும் உரிய எந்திரங்களுடைய நீர்நிலை என்று விளக்குகிறார் உ.வே.சாமிநாதையர் (மணி. உ.வே.சா. உரை. ப.326). 

மேற்கண்ட சான்றுகளின் வழி

      பழந்தமிழர், அடிப்படை வாழ்வாதாரமான வேளாண் உற்பத்தியில் அதிக பலனை ஈட்டவும், கால மேலாண்மைக்கும், இரண்டாம் நிலை உற்பத்திப் பொருள்களைப் பெறுவதற்கும் பலவிதமான பொறியியல் நுட்பங்களைப் பயன்படுத்தியது தெரியவருகிறது.

நாட்டின் பாதுகாப்பு என்கிற நிலையில், பலவிதமான தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய எந்திரங்களையும், மதில்களையும், அரண்களையும் அமைத்ததும், தானியங்கி எந்திரக் கருவிகளைப் பயன்படுத்தியதும் அறியப்படுகிறது.

அடுத்த நிலையில், நீர்நிலை கட்டுமானங்கள், நீர் ஏற்றக்கருவிகள், வாகனங்கள், இல்லப் பயன்பாட்டுப் பொருள்கள், சிறுவர் விளையாட்டுப் பொருள்கள் போன்றவற்றிலும் பொறியியல் நுட்பம் பயன்படுத்தப்பட்டது அறியப்படுகிறது.

எனவே, இவ்வகையான எந்திரப் பொறிகளும், கட்டுமான அமைப்புகளும இன்றைய நவீன போர்க்கருவிகளுக்கு முன்னோடியாக விளங்கியதையும், இவையனைத்தும் இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், பொறியியல் நுட்பங்களுக்கும் அடித்தளமாக அமைந்தவை என்பதையும் இதன்வழி உணரமுடிகிறது.

******

 

தமிழியல்

Dr.A. Manavazhahan, Asst. Professor, Sociology, Art & Culture, IITS, Chennai.

www.thamizhiyal.com