முனைவர் ஆ.மணவழகன், இணைப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
(அகில இந்திய வானொலி நிலைய
உரை, சென்னை. அக்டோபர் 13, 2017)
பண்பாடு
என்பதும் அறிவியல் என்பதும் கூழாங்கற்களைப் போலத்தான். தொடக்கம் கரடுமுரடாகத்தான் இருக்கும்.
காட்டாற்றின் ஓட்டத்தில் கூழாங்கற்கள் செம்மையுற்ற வடிவத்தைப் பெருவதைப்போல, காலமும்
பட்டறிவுமே பண்பட்ட சமூகத்தையும் வடிவமைக்கும். உலகின் எந்தவொரு முன்னேறிய சமூகத்திற்கும்
இது பொருந்தும்.
பொதுவாக,
அடிப்படைத் தேவைகளில் ஓரளவு நிறைவுபெற்ற ஒரு சமூகம், தம்முடைய அறிவுத் தேடலின் விளைவால்
புதிய புதிய துறைகளில் தம் எண்ணத்தையும், தேடலையும் தொடங்குகிறது. அதனடிப்படையில்,
உலோகவியல் முதலான பல புதிய துறைகள் கண்டறியப்படவும், அதனோடு தொடர்புடைய இன்னபிற துறைகள்
தோன்றவும், வளர்ச்சி அடையவும் ஏதுவாகிறது. அவ்வகையில் பழந்தமிழ்ச் சமூகம், தம் மரபு
அறிவியலை வாழ்வியல் தேவைகளுக்குப் பயன்படுத்திய திறத்தை, சங்க இலக்கியங்கள் முதலான
பழந்தமிழ் இலக்கியங்கள் காட்டுகின்றன. அகப்-புற பாடல்
மரபுகளுக்கிடையே இச்செய்திகள் புதைந்துகிடக்கின்றன.
இயற்கையோடு
இயைந்த இவர்களின் மரபு அறிவியல்நுட்பங்கள், அவர்தம் தேவைகளை நிறைவுசெய்துகொள்ளவும்,
வருவதை முன் உணரவும், தம் ஆளுமைகளைப் பல நிலைகளிலும் விரிவுபடுதிக்கொள்ளவும் பயன்பட்டன.
தமிழர்
மரபு அறிவியலில் பாதுகாக்கபட வேண்டியவையும், மீட்டுறுவாக்கம் செய்யப்பட வேண்டியவையும்
இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டியவையும் ஏராளம். நண்பர்களே, இந்த சிற்றுரையின்
நோக்கமும் அதுவே.
பழந்தமிழர்
அறிந்துகொள்ள முயன்ற துறைகளும், அறிந்திருந்த துறைகளும் எண்ணற்றவை. அளந்தறிய முடியாதவற்றையும்
அளந்தறிய முயன்ற அவர்தம் அறிவின் வெளிப்பாடு இலக்கியத்தில் புலனாகிறது. அவ்வகையில்,
ஐம்பெரும் பூதங்கள், உலகத் தோற்றம், வானியல், உயிரியல், உலோகவியல், வேளாண்மையியல்,
மருத்துவம், கட்டடக்கலையியல், நீர் மேலாண்மை, பொறியியல் முதலான பல துறைகளிலும் பழந்தமிழர்
தம் கருத்தினைச் செலுத்தினர் என்பதை இலக்கியச் சான்றுகள் நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றன.
இவற்றிலுள்ள ஒவ்வொன்றையும் மிக விரிவாகவும் ஆழமாகவும் பேசமுடியும் என்றாலும், காலம்
கருதி சிலவற்றை மட்டும் இப்பகுதியில் அறிமுகம் செய்ய விழைகிறேன்.
ஐம்பூதங்கள்
ஐம்பூதங்களான
நிலம், நீர், தீ, வளி, விசும்பு என்பனவற்றைப் பற்றிப் பழந்தமிழர் நன்கு அறிந்திருந்தனர்.
நிலம் முதலிய ஐந்தும் கலந்த மயக்கமே உலகமென்பதைக் தம் இயற்கை அறிவால் கண்டனர். இவை
ஒவ்வொன்றின் தன்மையையும் தனித்தனியே கண்டறிந்து, எல்லாவற்றிற்கும் இவையே அடிப்படை என்பதையும்
உணர்ந்தனர். எனவே, அளப்பரிய பிற பொருட்களுக்கு இவற்றை உவமைகளாக எடுத்தோதுவதை மரபாகக்
கொண்டனர். இலக்கண நூலான தொல்காப்பியத்தில்,
நிலம்
தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும்
கலந்த
மயக்கம் உலகம் (தொல்.1589)
என்று தெளிவுபடுத்துகிறார் தொல்காப்பியர்.
மண்திணிந்த நிலனும் / நிலன் ஏந்திய விசும்பும்
என்ற புறநானூற்றின் 2வது பாடலில், நிலம் பல அணுக்களால் செறிந்தது என்றும், ஆகாயம்
அந்நிலத்தில் உயர்ந்து பரந்து விளங்குவது என்றும், காற்று அவ்வாகாயத்தைத் தடவிக்கொண்டு
வரும் என்றும், காற்றினின்று தீ பிறக்கும் என்றும், தீயொடு மாறுபட்டு நீர்விளங்கும்
என்றும் முரஞ்சியூர் முடிநாகராயர் விளக்குகிறார்.
அதேபோல, இந்த உலகத்தின் தோற்றம் பற்றிய தமிழரின் அறிவியல்
வியப்பை ஏற்படுத்தக்கூடியது. இன்றைய நவீன அறிவியலும் ஏற்றுக்கொண்டது. ஒளிப்பிலம்பான
கதிரவனிலிருந்து சிதறிய பெருந்துகளான இந்த பூமியில், பல ஊழிக்காலங்கள் கழிந்த பின்பு
உயிர்கள் தோன்றும் சூழல் உருவாயிற்று என்பதை மிக நுட்பமாகப் பதிவு செய்துள்ளது பரிபாடல்
(பரி.2:5,6).
செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு / தண்பெயல் தலைஇய ஊழியும் - எனும் பாடலில் இச்செய்தி குறிக்கப்படுகிறது. இப்பாடல் அடிகளில், உலகம் உருண்டை வடிவானது; அது மாபெரும் நெருப்புக்கோளமான சூரியனிலிருந்து தெறித்து விழுந்த அனற்பிழம்பு; நெருப்பு உருண்டையாக, ஒரு ஊழிக்காலம் விண்ணில் சுழன்று கொண்டிருந்தது; அக்கோளத்தில் காற்று வழங்க ஒரு ஊழிக்காலம் ஆனது; நாளடைவில் மேற்பகுதி வெப்பம் குறைந்து பனிப்படலமாகப் படிய ஒரு ஊழிக்காலம் எடுத்துக்கொண்டது. அதன்பின், பனி உருகி நீராக மாற, தரைப்பகுதி தலைதூக்க, அதில் உயிரினங்கள் உருவாயின என்ற அறிவியல் உண்மை சுட்டப்படுகிறது. இச்செய்தி தமிழர் மரபு அறிவிலின் உச்சமாகும்.
வானவியல்
பழந்தமிழர்,
நிலப் பகுதிகளை ஆய்ந்து உணர்ந்ததைப் போலவே, வானத்தையும், அதில் விளங்கும் ஞாயிறு, திங்கள்,
நட்சத்திரக் கூட்டங்கள் முதலியவற்றின் தன்மைகளையும ஆய்ந்து
அறிந்தனர். கதிரவனது வீதியையும், அதன் இயக்கத்தையும், இயற்கை ஒளிபெற்ற கோள்களையும்
கதிரவனிலிருந்து ஒளிபெறும் மீன்களையும், காற்று இயங்குகின்ற திக்குகளையும், காற்று
இல்லா அண்ட வெளியையும், ஓர் ஆதாரமும் இன்றித் தானே நிற்கிற ஆகாயத்தையும் ஆய்ந்தறிந்தனர்.
இவற்றையெல்லாம் அங்கங்குச் சென்று அறிய முயன்றனர். இதனை,
செஞ்ஞாயிற்றுச்
செலவும்
அஞ்ஞாயிற்றுப்
பரிப்பும்
பரிப்புச்
சூழ்ந்த மண்டிலமும்
வளிதிரிதரு
திசையும்
வறிது
நிலைஇய காயமும் என்றிவை
சென்று
அளந்து அறிந்தார் போல (30:1-5)
என்கிறது புறநூனூறு.
‘தமிழரின்
வானநூலறிவு மிகவும் சிறப்பு மிக்கது என சிலேட்டர் போன்ற அறிஞர்களும் பாராட்டியுள்ளனர்’
(த.நா.ப., ப.44). வானவியல் குறித்து பழங்காலத்தில் இருந்த தனிநூல்கள் கிடைக்கவில்லை
எனினும், சங்க இலக்கியங்களில் இதுகுறித்து பல்வேறு நுட்பமான செய்திகள் பதிவிடப்பட்டுள்ளன.
வானவியல் அறிவைக் கொண்டு, இயற்கையின் மாற்றத்தினை அறிந்தனர். வான்நிலையின் தன்மைகளுக்கேற்ப
பூமியல் நடைபெறும் மாற்றங்களை, நிகழ்வுகளை முன்பே உணர்ந்தனர். கோள்கள், விண்மீன்களின்
அமைப்பினையும், தன்மையினையும் எரிகற்களின் செயல்பாடுகளையும் கொண்டு, நாட்டில் நிகழவிருக்கும்
நன்மை-தீமைகளையு கணித்தனர். வானில் இயற்கைக்கு மாறாக நிகழும் மாற்றங்களுக்கு ஏற்ப,
நாட்டின் நடப்பிலும் மாற்றம் ஏற்படும் என்பதைக் அறிந்தனர்.
மழை
பெய்வதற்குரிய கோள்நிலை தெளிவாகச் சுட்டப்படுகிறது. வெள்ளி என்னும் மீன் வடப்பக்கத்தே
தாழ்ந்தால் மழை பெய்யும் என்றும், தெற்கே சாய்ந்தால் மழை பெய்யாது என்பதையும் பதிற்றுப்பத்து(24:23-28),
புறநானூறு(3:6-8, 117:1-3) முதலிய இலக்கியங்கள் சுட்டுகின்றன.
அதுமட்டுமல்ல,
வானில் செவ்வாயும், வெள்ளியும் கூடினால் மழைபெய்யாது என்றும், இவ்விரண்டும் தனித்தனியே
இருந்ததால் மழை பொழியும் என்றும் பதிற்றுப்பத்துத் தெரிவிக்கிறது (பதி.13:25-26). வெள்ளி
என்கிற மீன் குறிப்பாக மழை மீனாகவே காட்டப்படுகிறது. இம்மீனின் தன்மை, அது சேர்ந்திருக்கிற
கோள்நிலை ஆகியவற்றைப் பொருத்து மழைப் பொழிவு கணிக்கப்பட்டது.
பழந்தமிழர்,
வானியலின் நாள் நிலையும் கோள் நிலையும் மக்கள்
வாழ்வியலை தாக்கத்திற்கு உள்ளாக்கும் என்பதையும் கண்டறிந்தனர். நாள்
கோள்களின் நிலையை ஆய்ந்து அதற்கேற்ப வினை புரிந்தனர். கோள் நிலையில் தீமை விளையாத நல்ல
நாளினைக் கணித்து, அந்நாளிலே திருமணச் சடங்கைச் செய்தனர் (அகம்.86:6-7).
விண்மீன்களை
வகைப்படுத்தியும், அவற்றின் மாற்றங்களை அறிந்தும் தம் அன்றாட செயல்பாடுகளை முறைப்படுத்திக்
கொண்டனர். வானில் மீன்கள் முறை திரிந்ததனால் நாட்டின் தலைமைக்குத் தீமை விளையும் என்று
மக்கள் வருந்தியிருக்க, அவர்கள் வருந்தியபடியே மன்னனும் இறந்துபட்ட வரலாற்றுச் செய்தியை
கூடலூர் கிழாரின் புறநானூற்றுப் பாடல் (புறம்.229:1-23) பதிவு செய்கிறது. இப்பாடல்
பல நுட்பமான வானியல் நிகழ்வுகளையும் நாள்மீன் கோள்மீன் போன்றவன்றின் தன்மைகளையும் விவரிக்கிறது.
புறநானூற்றில் காணப்படும் இப்பாடல் மிகுந்த ஆராய்ச்சிக்கு உட்பட்டது.
தமிழர்
வானவியல் அறிவின் உச்சமாக, வானத்தில் காற்று இல்லாதப் பேரிடத்தைப் பற்றிய பதிவைக் குறிப்பிடலாம்.
அண்ட வெளியில், குறிப்பிட்ட உயரத்துக்கு மேலே காற்று இல்லாத நிலையினை, ‘வளியிடை
வழங்கா வழக்கரு நீத்தம்’ (புறம்.365:3) என்கிறார் சங்கப் புலவர் மார்க்கண்டேயனார்.
இன்றைய ஏவுகணைக் தொழில்நுட்பங்கள் இந்த காற்று வழங்கா வளியையும் கணக்கில் கொண்டே வடிவமைக்கப்படுகின்றன
என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல்,
இப்பெருவெளியில் வீசுகிற காற்றைக் கட்டுப்படுத்தித் தமக்குத் துணையாகப் பயன்படுத்தினர்
என்ற செய்தியும் காணமுடிகிறது.
சோழன் கரிகாற் பெருவளத்தானைக் குறிப்பிடும்
இடத்து, வளிதொழில் ஆண்ட உரவோன் மருக (புறம்.66:2) என்கிறார் வெண்ணிக்குயத்தியார்.
உயிரியில்
துறை
பழந்தமிழர்,
தாவரவியல், விலங்கியல் தொடர்பான உயிர் அறிவியலிலும் தேர்ச்சிப் பெற்றிருந்தனர் என்பதை
சங்க இலக்கியங்களும் தொல்காப்பியம் முதலான இலக்கணங்களும் காட்டுகின்றன. தமிழர்களின்
உயிரியல் அறிவு மிக நுட்பம் வாய்ந்தது. குறிப்பாக, உயிர்களின் அறிவு அடிப்படையிலான
வகைப்பாடு வேறு எம்மொழி இலக்கிய இலக்கணங்களிலும் காணப்படாத ஒன்று. ஆறறிவு உயிர்களை
வகைப்படுத்தும்போது,
ஒன்று
அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு
அறிவதுவே அதனொடு நாவே
மூன்று
அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு
அறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து
அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு
அறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே (தொல்.1526)
என்று சிறப்பாக வகைப்படுத்திக் காட்டுகிறார்
தொல்காப்பியர். மேலும், புல், மரம் போன்ற தாவர இனங்களை ஓர் அறிவு கொண்டவையாகவும் (தொல்.1527),
நத்தை, சிப்பி போன்ற கடல்வாழ் உயிரினங்களை இரண்டு அறிவு கொண்டவையாவும் (தொல்.1528),
வண்டு, தும்பி இனங்களை மூன்று அறிவு கொண்டவையாகவும் (தொல்.1529), விலங்கினங்களையும்,
மனிதர்களில் விலங்கியல்பாய் இருப்போரையும் ஐந்து அறிவு கொண்டவையாகவும் பகுப்பார் (தொல்.1531).
இவ்வகையில், பகுத்தறியும் ஆற்றல் கொண்ட மனிதனை ஆறறிவு உடையவற்றில் அடக்குகிறார் (தொல்.1532)
தொல்காப்பியர். அறிவியல் அடிப்படையிலான இப்பகுப்பு உலக உயிர்கள் அனைத்திற்கும் பொதுவானதாகவே
அமைகிறது.
விலங்குகளின்
இயல்புகளையும், அவற்றைப் பயிற்றுவிக்கும் முறைகளையும் விளக்கும் நூல்கள் இருந்தன. பாதுகாப்புத் துறையில்
ஈடுபடுத்தப்பட்ட குதிரைக்கென்று தனி இலக்கண நூல் இருந்ததை, ‘நூல் நெறி நுணங்கிய கால் நவில் புரவி’ (அகம். 314:8) என்று அகநானூறு காட்டுகிறது.
அதேபோல, யானைகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுப் போரில் ஈடுபடுத்தப்பட்டன. அதற்கான பயிற்சியை
வழங்குவோர் ‘விரவு மொழி பயிற்றும் பாகர்’
என்று அழைக்கப்பட்டனர் (மலைபடு.327; முல்லை.35-36). குதிரை, யானை போன்றற்றோடு, நாய்
மற்றும் பறவைகளுக்கும் பயிற்சிகள் கொடுக்கப்பட்ட செய்திகளும் காணக்கிடைக்கின்றன.
விலங்குகளின் செயல்பாடுகளைக் கொண்டு, அவற்றின் உடல்நிலை
மாற்றங்களையும் அறிந்தனர். வன்மையையுடைய யானை தன் தும்பிக்கையை நிலத்திலே ஊன்றி உறங்கினால்,
உடல்நலம் குன்றியிருக்கிறது என்பதை, ‘மைந்துடை
யானை கைவைத்து உறங்கவும்’ (புறம்.229:18) என்கிறது புறநானூறு. அதேபோல, கருவுற்ற
யானைக்கு வயா என்னும் நோய் வந்ததைப்பற்றி அகநானூறு பேசுகிறது.
மருத்துவ
அறிவியல்
மனித வளம் நாடும்
ஒரு சமூகம் மருத்துவ அறிவினைக் கைகொண்டிருப்பது இன்றியமையாதது. இன்றைக்கும் பயன்கொள்ளக்கூடிய
பல அரிய மருத்துவச் செய்திகளையும் உடல் நல மேலாண்மைச் சிந்தனைகளையும் பழந்தமிழர் நூல்கள்
கொண்டுள்ளன. தொல்காப்பியர் மருத்துவரை, ‘நோய் மருங்கு அறிநர்’ (தொல்.1447) என்கிறார். சித்தமருத்துவம் தமிழர்களுக்கு உரியது என்றாலும்,
மருத்துவத் துறையின் உயர் தொழில்நுட்பமான அறுவைச் சிகிச்சை மருத்துவமும் கையாளப்பட்டதை
பதிற்றுப்பத்துக் (பதி.42:2-4) காட்டுகிறது.
முதலில் நோய் இன்னதென்பதை ஆராய்ந்து, நோயின் காரணம்
எது என்பதை அறிந்து, அதனைத் தணிப்பதற்குரிய வழியைக் கண்டு, அந்த வழியையும் நோயாளியின்
உடலுக்குப் பொருந்தும் வகையில் மேற்கொள்ள வேண்டும் என மருத்துவத்திற்கு இலக்கணத்தை வகுக்கிறார் திருவள்ளுவர் (குறள்.948). மேலும்,
உற்றான் அளவும் பிணிஅளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல் (குறள்.949)
என்பதில், மருத்துவனைக் கற்றான் குறிப்பிடுகிறார்.
இம்மருத்துவத் துறையில் மருந்தாளும் செவிலியும் முக்கிய இடம் பெறுகிறார்.
மருத்துவர்கள்,
நோயாளி விரும்புகிற யாவற்றையும் அளிக்காது, நோய்க்குத் தகுந்த நன்மருந்தினை ஆய்ந்து
கொடுத்து, உடலைப் பிணியிலிருந்து காத்தனர் என்பதை,
அரும்பிணி
உறுநர்க்கு வேட்டது கொடாஅது,
மருந்து
ஆய்ந்து கொடுத்த அறவோன் போல (நற். 136: 2-3)
என்கிறது நற்றிணை. தாவரத்திலிருந்து
மருந்து பெறும் செயல்பாட்டிலும் அறநோக்கு இருந்தது. மரத்தை அழித்து மருந்தைப் பெருதல்
கூடாது என்பதை ‘மரம்சா மருந்தும் கொள்ளார்’
(226:1) என்று அறிவுறுத்தினர்.
இவை மட்டுமல்லாமல்
நான் முன்பே கூறியதைப்போல, பழந்தமிழர் உலோகவியல், கட்டட கலையியல், நெசவுத் தொழில்நுட்பம்,
வேளாண் தொழில்நுட்பம், நீர் மேலாண்மை போன்றவற்றையும் தனித்தனியே மிக விரிவாகவும் நுட்பமாகவும்
காணமுடியும். இவற்றிற்கான செய்திகள் பழந்தமிழ் இலக்கியம் முழுவதும் நிரம்பவே கிடைக்கின்றன.
இவ்வகையான
தமிழர் அறிவு மரபை இளைய தலைமுறையினர்க்கும் எடுத்துச் செல்வதும், மரபைக் காக்கவேண்டியதன்
தேவையை அவர்களுக்கு உணர்த்துவதும் நம் கடமை. இன்னும் சொல்லப்போனால் இன்றைக்கும் ஏற்புடையதாக
விளங்கும் தமிழர் மரபு அறிவியல் நுட்பங்களை மீட்டுறுவாக்கம் செய்து பயன்கொள்வதும் இன்றைய
தேவையாகும். இவ்வகையான நோக்கங்களுக்காகவும் தமிழர் மரபு அறிவியலை உலகறியச் செய்வதற்காகவும்
சென்னை, தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம்
என்ற ஒன்று தமிழக அரசால் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
இக்காட்சிக் கூடத்தின் அரங்குகளில் பழந்தமிழரின்
வாழ்வியல் சிறப்புகள், பண்பாட்டு விழுமியங்கள், அறிவு நுட்பங்கள், கலைக் கூறுகள், தொழில்நுட்பத்
திறன்கள், அரசியல் மேலாண்மை போன்றவை ஓவியங்களாக, மரம்-கல்-சுடுமண்-உலோகச் சிற்பங்களாக,
புகைப்படங்களாக, சுதை வடிவங்களாக, புடைப்புச் சிற்பங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
காட்சிக்கூடத்தில், நவீனத் தொழில்நுட்பங்களுடன் கூடிய திரையரங்கு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திரையரங்கில், பழந்தமிழர் வாழ்வியல், பழந்தமிழர் மருத்துவம், தமிழர் நீர்மேலாண்மை,
ஆட்சித்திறன், பழந்தமிழர் போரியல் போன்ற குறும்படங்கள் பார்வையாளர்களுக்குத் திரையிட்டுக்
காண்பிக்கப்படுகின்றன.
இந்தியாவிலேயே
செவ்வியல் நூல்கள் மற்றும் தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள
முதல் காட்சிக்கூடமும் இதுவே. இவற்றைப் பொதுமக்களும்
பள்ளி-கல்லூரி-ஆய்வு மாணவர்களும் இளைய தலைமுறையினரும் வெளிநாட்டினரும் கண்டு பயன்பெற
வேண்டும்.
அன்பர்களே,
நம் மரபின் சிறப்பை நாம் உணர்வோம்! உலகிற்கும் உணர்த்துவோம்!
*****
Dr. A. Manavazhahan,
Associate Professor, Sociology, Art & Culture, International Institute of
Tamil Studies, Chennai -113.
தமிழியல்
www.thamizhiyal.com