புதன், 19 ஆகஸ்ட், 2020

கலித்தொகையில் சமூக அறக் கோட்பாடுகள்

 முனைவர் ஆ. மணவழகன், இணைப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 600113.

(பன்னாட்டுக் கருத்தரங்கம், சுவாமி விவேகானந்தா அறக்கட்டளை, கேரளா. ஏப்ரல் 26, 2014)

 

அறம் என்னும் சொல்லிற்கு ஒழுக்கம், வழக்கம், நீதி, கடமை ஈகை, புண்ணியம், அறக்கடவுள். சமயம் என்ற எட்டுவகையான பொருள்கள் பெருவழக்காக வழங்கப்பட்டு வருகின்றன (திருக்குறள் நீதி இலக்கியம், ப.48). ‘அறம் என்பது மனித வாழ்வின் உயர் மதிப்பீடான விழுமியங்களை உருவாக்குவதாக அமைகிறது. அது மரபினருக்குத் தொடர்ந்து வழிவழி கற்பிக்கப்படுகிறது. அறத்தை மீறுவது சமூகக் குற்றமாக, தெய்வக் குற்றமாக கருதும் சூழல் உருவான நிலையில் ‘சட்டம்’ என்ற ஒழுங்குமுறைமை உருவானது’ (தமிழ்ச்செவ்வியல் நூல்களில் அறம்-அறிவியல்-சமூகம், ப.93). எனலாம். 

மேலும், தனி மனிதனுடைய உரிமைகளும், கடமைகளும், சமூகப் பிணைப்பும் குடும்ப இணைப்பும், பழக்க வழக்கங்களும், விருப்பு வெறுப்பு என்னும் இயல்புகளுமாகிய அனைத்தும் அறத்தின் கோட்பாட்டினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன (திருக்குறள் நீதி இலக்கியம், ப.49) ப-156-157 என்பது சமூகவியலார் கருத்து. 

கலித்தொகையில் இடம்பெற்றுள்ள பெரும்பான்மை அறக்கருத்துகள் இயற்கையோடு இயந்த அறிவுறுத்தலாகக் காணப்படுகின்றன. இவ்வகை அறக்கருத்துகளைத் தனிமனிதன், இல்வாழ்க்கை, சமூகம், அரசியல் என்ற நிலைகளில் பாகுபடுத்திக் காணமுடியும்.

 

தனிமனித அறம்

 தனிமனித அறங்களைக் குறிப்பிடும் இடத்து, தாம்வளம்பட வாழ்தலும், தம் கேளிரைத் தாங்குதலும், இரந்தோர்க்கு இல்லையென்னாது ஈதலும் ஆகிய இம்மூன்றினையும் உயிரினும் மேலாகக் கொள்ளுதல் வேண்டும்(2:11, 15,19) என்கிறது கலித்தொகை.  அதேபோல, தீதிலான் செல்வமும்(27:2) மடியிலான் செல்வமும்(35:1) தழைத்துப் பெருகும். நிலையாமையை உணர்ந்தவருடைய கொடை எல்லோருக்கும் பயன்படும்(32:11) என்று தனிமனித நன்னெறிகள் அறிவுறுத்தப்படுகின்றன. மேலும், அருள்வல்லான் ஆக்கமும்(38:16), திறஞ்சேர்ந்தான் ஆக்கமும்(38:20) பொலிவு பெறும். சான்றோக்கு இயல்பு ‘தம்புகழ்களைக் கேட்டுத் தலைசாய்தல்(119:6) என்றும் சுட்டப்படுகிறது. 

அதேபோல, ஆகாத குணங்களைச் சுட்டும்பொழுது, கிளையழிய வாழ்பவன் ஆக்கம் பொலிவு பெறாது(34:18). பொருளில்லான் இளமையும்(38:15) அறஞ்சாரான் மூப்பும்(38:19) பொலிவழியும் என்கிறது கலித்தொகை. ஒருவருடன் நட்பாக இருக்கும் பொழுது தெரிந்த இரகசியத்தை அவரை விட்டுப் பிரிந்த பிறகு பிறரிடத்தில் உரைப்பவர் பீடிலார் ஆவார் (கலி.25;23-24) என்று அறம் வலியுறுத்தப்பட்டது. 

இல்வாழ்க்கை அறம்

 கலித்தொகையில் தாவரங்கள், மாந்தர்களின் உடல் உறுப்புகள் போன்றவற்றின் செயல்பாடுகள், தன்மைகளை ஒப்பிட்டு அறங்கள் வலியுறுத்தப்படுவதைப் போன்று விலங்குகளின் தன்மைகள் மற்றும்  செயல்பாடுகளைக் காட்டி இல்வாழ்வின் அன்பு நெறிகள் அறங்களாகச் சுட்டப்படுவதையும் காணமுடிகிறது. 

 

                     துடி அடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்

                     பிடி ஊட்டி பின் உண்ணும் களிறு (கலி.11;8-9)

 

                     அன்புகொள் மடப்பெடை அசைஇய வருத்தத்தை

                     மென் சிறகால் ஆற்றும் புறவு (கலி.11;12-13)

 

                     இன் நிழல் இன்மையான் வருந்திய மடப் பிணைக்குத்

                     தன் நிழலைக் கொடுத்து அளிக்கும் கலை (கலி.11;1-17)

      

ஆகிய அடிகளில் இல்வாழ்வின் உயர்நெறி உணர்த்தப்படுகிறது. இதில், யானைக் கன்றுகள் கலக்கிய சின்னீரைப் தன்னுடைய இணையாகிய பிடிக்கு ஊட்டி பின்னர் எஞ்சிய நீரைப் உண்ணும் களிறு; பெண்புறா வெம்மைக்கு ஆற்றாது வருந்திய வருத்தத்தை தன்னுடைய மென்சிறகால் ஆற்றும் ஆண்புறவு; இன்னிழல் இல்லாது வருந்திய பெண்மானிற்கு தன்னிழலைக் கொடுத்து காத்த ஆண் மான் ஆகியவை காட்சிகளாகக் காட்டப்படுகின்றன. இல்வாழ்வில் கணவன்-மனைவிக்கு இடையேயான அன்புநெறியும் புரிந்துணர்வும் இதன்வழி வலியுறுத்தப்படுகின்றன.

 

சமூக அறம்

 மரம் தழைத்தல், வாடுதல், மரத்தின் கிளைகளில் தோன்றும் அரும்புகள், மலர்கள் ஆகியவற்றை வருணிக்கும்போது உயர்ந்தோர் தாழ்ந்தோர் ஆகிய மக்களியல்புகளை உணர்த்தும் சமூக அறக்கருத்துகள் கூறப்பெறுகின்றன.

 

வறியவன் இளமைபோல் வாடிய சினையவாய்ச்

சிறியவன் செல்வம்போல் சேர்ந்தார்க்கு நிழலின்றி

யார்கண்ணும் இகழ்ந்துசெய்து இசைகெட்டான் இறுதிபோல்

வேரோடு மரம்வெம்ப விரிகதிர் தெறுதலின்

அலவுற்றுக் குடிகூவ ஆறின்றிப் பொருள்வெஃகிக்

கொலையஞ்சா வினைவரால் கோல்கோடி அவன் நிழல்

உலகுபோல் உலறிய உயர்மர வெஞ்சுரம்   (பாலைக்கலி, 10:1-7)

 

இதில், இளமையில் வறுமையால் உழன்றவன் வாடியிருப்பதுபோல மரங்களின் தளிர்கள் வாடித் தோற்றமளிக்கின்றன. பிறருக்கு உதவும் பெருந்தன்மை இல்லாத சிறியவனின் செல்வம் தன்னைச் சேர்ந்தவரைப் பாதுகாவாததைப் போல, மரங்களிருந்தும் நிழலில்லை. எவரிடமும் வரம்புமீறி வம்பு செய்பவன் தனக்கு மட்டுமின்றித் தன்புகழுக்கும் கேடுசூழ்ந்து கொள்வதுபோல, வெப்பத்தின் கொடுமையால் மரக்கிளைகள் மட்டுமல்லாது வேர்களும் வெம்பி நிற்கின்றன என்று காட்சிகள் உவமை படுத்தப்படுத்தப்பட்டன. இவ்வாறு பொலிவிழந்த மரங்கள் பல சேர்ந்த காடோ, கொடுங்கோல் மன்னன் வாழும் நாட்டில் மக்கள் எவ்வாறு பொலிவிழந்து தென்படுவரோ அத்தகைய சோர்ந்த தோற்றத்தைத் தந்தது என்று வருணிக்கப்படுகிறது.

 

அதேபோல, உடன் போகிய மகளைத் தேடும் செவிலித்தாயின்,

 

                     என் மகள் ஒருத்தியும் பிறன் மகன் ஒருவனும்

                     தம்முளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்

                     அன்னார் இருவரைக் காணிரோ? (கலி.9;6-9)

 

என்னும் வினாவிற்கு, மலையுளே பிறப்பினும் பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கே பயன்படும்; நீருளே பிறப்பினும் சீர்கெழு வெண் முத்தம் அணிபவர்க்கே அழகூட்டும்; யாழுளே பிறப்பினும் ஏழ்புணரின்னிசை முரல்பவர்க்கே பயன்படும். அதுபோலவே நின் மகளும் (கலி.9;12-20) என்று சமூக அறத்தை வலியுறுத்துகின்றனர் சான்றோர். 

அரசியல் அறம்

 கலித்தொகையில் மன்னர்களின் செங்கோன்மையும் கொடுங்கோன்மையும் உவமைகளாகக் குறிக்கப்படுகின்றன. இறை, மன்னவன், வேந்தன் போன்றவை அரசனைக் குறிக்கும் சொற்களாக உள்ளன. பொதுமோழி பிறர்க்கின்றி முழுதாளுஞ் செல்வர் (கலி.68;1) என்பது பேரரசனைக் குறிக்கிறது. வேந்தன் செம்மையால் மாரி சுரக்கும்(99-6-7) என நம்பிக்கை இருந்தது. எனவே வேந்தன் முறைசெய்தல் அறமாக வலியுறுத்தப்பட்டது. போர்க்களத்தில் வீழ்ந்தவன் மேல் செல்வது வீரமன்று(38:16) என்று போர் அறம் சுட்டப்பட்டது. .

             மேலும், செங்கோன்மை உடைய அரசனைச் சுட்டும்போது,

                                 தன்னுயிர் போலத் தழீஇ யுலகத்து

மன்னுயிர் காக்கும் மன்னன் (கலி.143;52-53)

 

              நல்லற நெறி நிறீஇ யலகாண்ட அரசன் (கலி.129;4)

               புரைதவ நாடிப் பொய்தபுத்தினிதாண்ட அரசன் (கலி.130;3-4) 

என்று புகழ்கிறது கலித்தொகை. அதேபோல, கொடுங்கோன்மை அரசனைக் குறிப்பிடும்பொழுது,

 பீடிலா அரசன் (கலி.27;7), முறை தளர்ந்த மன்னவன் (கலி.34;14), கொடி தோர்த்த மன்னவன் (கலி.8;2), செருமிகு சினவேந்தன் (கலி.13;1), கோல் கோடியவன் (கலி.10;6), தெறன் மாலை அரசன் (கலி.146;2), அறநெறி நிறுக்கல்லா மெல்லியான் (கலி.129;5) என்று இகல்கிறது.

 அறவுரைகள் 

அறவுரைகளை, கீழ்க்கணக்கு நூல்களைப் போன்று முதன்மையாக வலியுறுத்தாமல் பாடல் ஓட்டத்தில் இயைந்த அறிவுறுத்தல்களாக வழங்கும் பொதுப் பாங்கு சங்க இலக்கியங்களுக்குரியது. இதற்கு மாறாக, கீழ்க்கணக்குப் அறப் பாடல்களைப் போன்று, அறவுரைகளை நிரல்பட தொகுத்து வழங்கி, கீழ்க்கணக்கிற்கு வழி அமைத்துக்கொடுத்திருக்கும் நல்லந்துவனாரின் நெய்தற்கலி பாடல் இங்கு குறிப்பிடத்தக்கது. 

              ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்

              போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை

              பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்

              அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை

              அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்

              செறிவு எனப்படுவது கூறியது மாறாஅமை

              நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை

              முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்

              பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல் (133:6-14)

 பழந்தமிழரின் மேற்கண்ட அறக் கோட்பாட்டுச் சிந்தனைகள் எச்சமூகத்திற்கும் எக்காலத்திற்கும் பொருந்துவதாக, போற்றத்தக்கதாக உள்ளதை அறியமுடிகிறது.

 ***** 

Dr. A. Manavazhahan, Associate Professor, Sociology, Art & Culture, International Institute of Tamil Studies, Chennai -113.

தமிழியல்

www.thamizhiyal.com