முனைவர் ஆ.மணவழகன், இணைப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை – 600 113.
புழங்குபொருள்
பண்பாடு
பண்பாட்டினைப் பொருள்சார் பண்பாடு (Material Culture), பொருள்சாராப் பண்பாடு (Non-Material Culture) என மானிடவியலாளர் வகைப்படுத்துவர். மக்கள், தங்கள் தேவைகளுக்குகாக உருவாக்கும் அனைத்துப் பொருட்களும் பொருள்சார் பண்பாட்டினுள் அடங்கும். பொருள்சாராப்பண்பாட்டில் பொருள் வடிவம் பெறாத அனைத்துக் கூறுகளும் இடம்பெறுகின்றன. இவற்றில், ‘புழங்குபொருட்கள் அனைத்தும் பொருள்சார் பண்பாட்டினை அடையாளப்படுத்துவனாக விளங்குகின்றன’(பு.ப., ப.2) என்கின்றனர் அறிஞர்கள்.
புழங்கு என்பது பயன்படுத்துதல்; மக்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்காகப் பயன்படுத்துகிற பொருட்கள் புழங்குபொருள்கள் ஆகின்றன. இப்புழங்குபொருட்கள் மானிட அறிவின், கலைத் திறனின் வெளிப்பாடுகளாகத் திகழ்கின்றன. கைவினைப் பொருட்கள் மட்டுமல்லாது இயந்திர உற்பத்தியும் இதனை அடியொற்றியே அமைகிறது.
புழங்குபொருட்களின் தன்மைகளைக் கொண்டு ஒரு சமூகத்தின் தொன்மையை, உற்பத்தித் திறனை, அறிவு நுட்பத்தை, கலைத் திறத்தை, தொழில்நுட்ப உத்திகளை அடையாளப்படுத்த முடியும். அவ்வடிப்படையில் பண்டைத் தமிழரின் வேளாண் அறிவு, வேளாண் தொழில்நுட்பம், வேளாண் மேலாண்மை, திணைசார் பண்பாடு போன்றவற்றை வேளாண்சார் புழங்குபொருட்கள் அடையாளப்படுத்துகின்றன என்பது இந்த ஆய்வுக்கட்டுரையின் கருதுகோளாக அமைகிறது.
நாஞ்சில்
வேளாண் குடியினர் உழவர் என்று அழைக்கப்பட்டனர்.
பலமுறை உழுது விதைப்பதற்குத் தேவையான அளவில் நிலத்தைப் பண்படுத்தியதால் இவர்கள் ‘செஞ்சால்
உழவர்’(நற்-340:7) என்றழைக்கப்பட்டனர்.
கடியோர் பூட்டுநர் கடுக்கை
மலைய (பதிற்று-43;16)
என்கிறது பதிற்றுப்பத்து.
மண்ணின் ஈரப்பதம் மாறும்முன் நிலத்தை உழுதுவிட
வேண்டும் என்ற நிலையில் தன்னிடம் உள்ள ஒற்றை ஏரைக் கொண்டு மிகவிரைவாக உழுதுகொண்டிருக்கும்
உழவனை,
ஓரேர் உழவன் போல (குறு.131:5)
என்று
உவமையாக்குகிறது குறுந்தொகை. அதேபோல், விதைத்தற்கேற்ப மிகுதியான, பரந்த உழுநிலங்களுடைய சிலவாகிய ஏர்களையுடைய உழவரை,
பல்விதை யுழவிற் சில்லேராளர்
(பதிற்று-76:11)
என்று பதிற்றுப்பத்தும் காட்டுகிறது.
நாஞ்சிலின் வடிவம் சங்க இலக்கியப் பாடல்கள்
பலவற்றுள் சுட்டப்படுகிறது. இதன் வளைந்த வடிவத்தையும் கூர்மையான முன் பகுதியையும்,
வாய் வாங்கும் வளை நாஞ்சில் (பரி.திரி.1:5)
நிறன் உழும் வளை வாய் நாஞ்சில்
(பரி.திரு-13:33)
வள் அணி வளை நாஞ்சிலவை (பரி.திரு-15:57)
ஆகிய பாடலடிகள் காட்டுகின்றன.
மழைபொழியாது வறண்ட காலங்களில் ஈரமற்ற நிலத்தை
உழுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கலப்பைகளை,
வறன் உழு நாஞ்சில் போல் (கலி.8:5)
என்பதிலும்,
நாடு வறட்சியுற்றதால் கலப்பைகள் யாவும் தொழிலற்றுக் முடங்கிக் கிடந்ததையும் உழவர் ஏரான்
உழுதொழிலைச் செய்யாதிருந்த நிலையினையும்,
நாடு வறம் கூர, நாஞ்சில் துஞ்ச (அக.42:5)
உலகுதொழில் உலந்து, நாஞ்சில்
துஞ்சி (அக.141:5)
என்பனவற்றிலும் காணமுடிகிறது.
இயற்கை அழிவு மட்டுமல்லாது செயற்கை அழிவாகிய போர்க்காலங்களில் தேர், யானை, குதிரைப் படைகளால் சிதைக்கப்பட்ட விளைநிலங்களிலும் உழுதொழிலை மேற்கொள்ளமுடியாத சூழல் இருந்தமையையும் சங்க இலக்கியப் பாடல்கள் பதிவு செய்கின்றன (பதிற்று.19:17; 25:1; 26:1; 26:2)
நாஞ்சில் உறுப்புகள்
நாஞ்சிலின் உறுப்புகளாகிய நுகத்தடி, கொழு
ஆகியவை குறித்தும் அவற்றின் வடிவம் குறித்தும் சங்கப் பனுவல்கள் சுட்டுகின்றன. உழவர்கள்
வீட்டின் வாயிலிலேயே எருதுகளை நுகத்தில் (நுகத்தடி) பூட்டுவர். பூட்டிச் சென்று, பெண் யானையின் வாயைப்
போன்று வளைந்த வடிவையுடைய கலப்பையின்(நாஞ்சில்) உடும்பு
முகம் போன்ற கொழு முழுவதும் மறையும்படி ஆழ
உழுவர் என்பதை,
குடி நிறை வல்சிச் செஞ் சால் உழவர்
நடை நவில் பெரும்
பகடு புதவில் பூட்டி
பிடி வாய் அன்ன மடி
வாய் நாஞ்சில்
உடுப்பு
முகமுழுக்கொழு மூழ்க ஊன்றி
(பெரும்பாண்.197-200)
என்ற அடிகள் பதிவு செய்கின்றன.
எருதுகளைக் கலப்பையில் பூட்டும் பகுத்திக்கு
துகத்தடி என்று பெயர். இது சற்று வளைந்த வடிவில் காணப்படும். வளைந்த நுகத்தடியில் கட்டப்பட்ட
தலையினைக் கொண்ட, விரைந்த நடையினையுடைய எருதுகளை,
கொடு
நுகத்து யாத்த தலைய, கடுநடை (அக.224:4)
என்ற
அடியும்,
கொடுநுகம் பிணித்த ……. (அக.329:6)
என்ற அடியும் காட்டுகின்றன.
எந்திரம்
நன்செய் நிலத்தை உழுத பிறகு அதில் உள்ள
கட்டிகளை உடைத்துச் சமன் செய்யவும், தழைகளையும், கோடுகளையும் உரமாக சேற்றில் புதைக்கவும்
‘உருள் பொறி’ என்ற கருவி பயன்படுத்தப்பட்டுள்ளது.
உருள் பொறி
போல எம்முனை வருதல் (நற். 270:4)
என்பதில்
நிலத்தில் உருளும் எந்திரமாகிய உருள் பொறி சுட்டப்படுகிறது.
தளம்பு
தளம்பு
என்பது நன்செய் நிலமாயின் சேற்றுக் கட்டிகளைக்
களைய, சேறாக்கப் பயன்படுத்தப்படும் கருவியாக அடையாளம் காணப்படுகிறது.
மலங்குமிளிர்
செறுவில் தளம்புதடிந் திட்ட
பழன வாளை (புறம்.61:3-4)
என்ற அடிகளில் வாளைமீன்கள் தளம்பிடை மாட்டி வெட்டுப்பட்டன என்ற செய்தி இடம்பெறுகிறது. இதன்வழி, ‘தளம்பு’ என்பது இரும்பு அல்லது உறுதியான மரத்தினால் உருவாக்கப்பட்ட, உருளை வடிவ வேளாண் கருவி என்பது பெறப்படுகிறது. தளம்பையே எந்திரம் என்று சுட்டுவதற்கும் இடமுண்டு.
வட்டி
உழுது பண்படுத்திய நிலத்தில் விதைப்பதற்கான விதைகளை
எடுத்துச் செல்ல வட்டி எனப்படும் கூடை பயன்படுத்தப்பட்டது.
இதனைப் பனையோலைப் பெட்டிகள் என்று உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இவ்வட்டிகள்
குறித்து,
வித்தொடு சென்ற வட்டி பற்பல (நற்.210:3)
விதைக்குறு வட்டி போதொடு பொதுள (குறு.155:2)
ஆகிய அடிகள் பகர்கின்றன.
துளர்
துளர் என்பது விளைநிலத்தில் பயிர்களினூடே முளைத்திருக்கும்
களைகளை நீக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட சிறிய வகை வேளாண் கருவி. இது களைக்கொட்டு என
வழங்கப்படும். உழுது விதைத்த பயிர்களில் முளைத்த களைகளைத் துளர்கொண்டு நீக்கிய நுட்பத்தை,
தொடுப்பு எறிந்து உழுத துளர் படு துடவை
(பெரும்பாண்.201)
என்ற
அடி காட்டுகிறது. மேலும்,
துளர் எறி நுண்துகள் களைஞர் தங்கை (குறு.392:5)
என்பதில்,
களை எடுக்கக் களைக்கொட்டை வீசி வெட்டுவதால் புழுதி எழும் காட்சி காட்டப்படுகிறது. அதேபோல,
தொய்யாது வித்திய துளர்படு துடவை (மலைபடு.122)
என்பதில்,
வன்நிலத்தில் களைக்கொட்டால் அடிவரைந்து கொத்தும் கொல்லை இடம்பெறுகிறது.
மேலும், களைக் கொட்டினைக் கையிற் கொண்டு களை பறித்து எறியும் வேளாண் தொழிலாளர்,
கோடுடைக் கையர்
துளர் எறி வினைஞர் (அக.184:13)
என்பதில் காட்டப்படுகின்றனர்.
கூர்வாள்
அறுவடை காலத்தே நெல்லை அரிவதற்குக் கூரிய வாள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது அரிவாள் என்று அழைக்கப்படும். இக்கூர்வாளினை,
நெல் அரி தொழுவர் கூர்வாள் உற்றென (நற்.195:6)
என்கிறது
நற்றிணை. வறட்சி காலத்தே, நெற்கதிரை அரிவாரது கொய்யும் வாள் செயலற்று
தம் வாய் மடங்கிப் போயின என்ற செய்தியை,
அரிநர் கொய்வாண் மடங்க வளைநர் (பதிற்று.19:22)
என்ற
அடி பதிவு செய்கிறது.
கரும்பு எந்திரம்
சிறிய வகை கருவிகளோடு கரும்பைப் பிழிந்தெடுக்கும்
பெரிய வகை எந்திரங்களும் உருவாக்கப்பட்டிருந்தன. இவ்வெந்திரங்கள் இயக்கும் பொழுது யானைகள்
பிளிறுவதைப் போன்ற ஒலிகள் எழுந்தன.
கரும்பி னெந்திரங் களிற்றெதிர் பிளிற்றும்(ஐ.நூ.55:1)
இவ்வெந்திரங்கள், இரவு பகல் பாராமல் இயங்கும் ஆற்றல் கொண்டனவாகவும், வானை மறைக்கும் புகையினை வெளியிடுவனவாகவும், ஆறுபோல் கரும்புச் சாற்றினைப் பிழிந்து வெளியேற்றுவனவாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தன (ஐ.நூ. 55:1; பதிற்று.19:23; மதுரைக். 258, புறம். 322:7-8; பெரும்பாண். 260-262; பட்டினப். 9-10; மலைபடு. 119; மலைபடு. 340-341).
நிறைவு
அடிப்படைத் தேவையான உணவுப் பொருட்களின் உற்பத்தியில் வேளாண் தொழில் முதன்மைப் பெறுகிறது. இத்தொழிலில், நீர் ஏற்றக்கருவிகள், பறவை மற்றும் விலங்கு கடியும் கருவிகள் ஆகியவை தவிர்த்து நாஞ்சில், எந்திரம், தழம்பு, வட்டி, துளர், கூர்வாள், கரும்பு எந்திரம் முதலான கருவிகள் நேரடிப் பயன்பாட்டில் இருந்தன. நன்செய், புன்செய், மானாவாரிப் பயிரிடுமுறை முதலிய மண்ணின் தன்மைக்கு ஏற்பவும், உழுதல், பண்படுத்துதல், சமன் செய்தல், விதைத்தல், களையெடுத்தல், அறுவடை செய்தல் முதலிய தொழில்நிலைகளுக்கு ஏற்பவும் இக்கருவிகள் வடிவமைக்கப்பட்டன. இவற்றின் தன்மை, அளவு, பயன்பாடு போன்றவை பல்வேறு தொழில்நுட்ப உத்திகளைக் கொண்டிருந்தன. வேளாண் புழங்குபொருட்களுள் நாஞ்சில் எனப்படும் கலப்பை முதன்மைப் பெறுகிறது.
தனக்கான எருதுகளையும் கலப்பையையும்
கொண்டிருந்த உழவர் சிறப்பு பெற்றார். அதனால், உழவர்கள் தங்கள் தேவைகளுக்கான எருதுகளையும் கலப்பைகளையும்
தாங்களே வைத்திருந்தனர். குறிப்பிட்ட நாளில் உழவர்கள் ஒன்றிணைந்து ‘புத்தேர்’
பூட்டினர். அதனால் எழும் ஆரவாரம் திருவிழாப் போல் ஒலித்தது. புத்தேர் பூட்டும் உழவர்கள் கொன்றைப் பூவைச் சூடிக்கொள்ளும் மரபுக் கொண்டிருந்தனர்.
ஒற்றை ஏரை மட்டும்
கொண்டிருந்த உழவர் ஏழ்மை நிலையினராகக் கருத்தப்பட்டார். உழவர்,
தங்கள் தேவைக்கும், செழுமைக்கும் ஏற்ப ஏர்களின் எண்ணிக்கையைக் கொண்டிருந்தனர்.
- அபிதான
சிந்தாமணி
- சங்க
இலக்கியத் தொகுப்புகள்
- சங்க இலக்கியத்தில் மேலாண்மை, ஆ.மணவழகன்
- பண்பாட்டு மானிடவியல், பக்தவத்சல பாரதி
- புழங்குபொருள் பண்பாடு, த.ரெசித்குமார்
- பழந்தமிழர் தொழில்நுட்பம், ஆ.மணவழகன
Dr. A. Manavazhahan,
Associate Professor, Sociology, Art & Culture, International Institute of
Tamil Studies, Chennai -113.
தமிழியல்
www.thamizhiyal.com