புதன், 19 ஆகஸ்ட், 2020

செந்தமிழ் இதழில் சேர அரசர் - சேர நாடு - சேரர் இலக்கியம்

 முனைவர் ஆ.மணவழகன், உதவிப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை 600113.

 (செந்தமிழ்க் கல்லூரி (ம) செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், மதுரை. 02.02.2013)

               

     பாண்டித்துரை தேவரால் மதுரையில் நிறுவப்பட்ட நான்காம் தமிழ்ச்சங்கத்தின் நோக்கங்களைக் கீழ்க்காணுமாறு வரையறுத்துச் சுட்டுகிறது செந்தமிழின் முதல் இதழ்.

 

1. தமிழ்க் கலாசாலை உளவாக்குதலானும்

2.இறவாதுள்ள தமிழேடுகள் பலவற்றையும் அச்சிட்டு தமிழ் நூல்கள் அனைத்தையும்  தேடிப்பெற்றுப் பிறர்க்குப் பயன்படுமாறு ஒருவழித் தொகுத்து வைத்தலானும்

3. வெளிவராத அரிய தமிழ் நூல்களைப் பரிசோதித்து அச்சிட்டுப் பரவச்    செய்தலானும்

4. வடமொழி ஆங்கிலம் முதலிய பிற பாடைக்கண்ணுள்ள அரிய நூல்களைத் தமிழின்          மொழிபெயர்த்துப் பதிப்பித்தலானும்

5. தமிழ்க்கல்வியே பற்றிய பத்திரிகை வெளியிடலானும்

6. தமிழிற் பரீக்ஷை பல வைத்து உயர்தரத்தே தேறியோர்க்குப் பட்டம் பரிசு முதலிய      அளித்தலானும்

7. தமிழறிஞரான் உபந்நியாஸங்கள் புரிவித்தலானும்

8. இக்காலத் தமிழறிவு மிக்கார் பலரையும் ஒருங்கு கூட்டித் தமிழாராய்தலானும்

9. வேண்டும் நூல் உரை முதலியன செய்வித்தலானும்

10. பிறர் செய்த நூல் உரைமுதலியவற்றை அரங்கேற்றுவித்தலானும்

தமிழனை வளர்த்தலாகும் எனத் தேர்ந்து மதுரையில் ‘மதுரைத் தமிழ்ச்சங்கம்’ உருவாக்கப்பட்டது. 

                இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை, 1. சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை 2. பாண்டியன் புத்தகசாலை 3. தமிழ்ச்சங்க முத்திராசாலை ஆகியவை. இம்மூன்றனுள், தமிழ்ச்சங்க முத்திராசாலை வழி செந்தமிழ் இதழ் வெளிவந்தது. முதல் இதழ் – 1902, டிசம்பர் 7ஆம் நாள் ரா.இராகவையங்கார் அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு வெளிவந்துள்ளது. முதல் இதழில் செந்தமிழ் இதழின் பெயர்க்காரணங்களாக, 

1. இஃது தமிழின் செம்மையினையே உலகிற்கு நன்கறிவுறுத்தலானும்

2. செய்தமிழ் வளர்ச்சியே செய்தலானும்

3. செவ்விதாய தமிழானே நடத்தலானும்

4. செந்தமிழ்நாட்டுத் தலைநகர்க்கண்ணே தோற்றமுடைத்தாகலானும்

5. ‘செந்தமிழ்’ எனப் பேர்பெற்று விளங்கும். 

என்பவை சுட்டப்படுகின்றன. 

                இதழ் நோக்கத்தைக் காணும்போது, ‘இதுகாறும் அச்சிடப்படாத செந்தமிழ் நூல்களும் தமிழ் நாட்டுப்புராதான சரிதங்களும் சானங்களும் வடமொழியிலும் ஆங்கிலத்தினும் தமிழிற்கு வேண்டுவனவாகக் கருதப்படும் நன் மொழிபெயர்ப்புகளும், தமிழின் அருமைபெருமை அடங்கிய வியங்களும் தமிழாராய்ச்சியைப் பற்றியனவாகப் கருதப்படும் நூன் மொழிபெயர்ப்புக்களும் தமிழாராய்ச்சியைப் பற்றியனவும், தமிழ் வளர்ச்சிக்கு வேண்டுவன பிறவும் இதன் வாயிலாக வெளிவரும்என்ற பெரும் தமிழ்ப்பணியை முன்னெடுக்க முயன்ற சிறப்பு தெரியவருகிறது. இவ்வுயரிய நோக்கங்களைக் கொண்டு தொடங்கப்பட்ட செந்தமிழ் இதழில் ‘சேர அரசர் - சேர நாடு - சேரர் இலக்கியம் பற்றிய செய்திகளைக் காண்பதாக இக்கட்டுரை அமைகிறது. 

சேர நாடு

     செந்தமிழ் இதழில் சேர நாடு குறித்த கட்டுரைகள் பல வெளிவந்துள்ளன. குறிப்பாக, ‘சேரநாடு, சேரநாட்டின் தொன்மைஎன்ற தலைப்புகளில் ஔவை சு.துறைசாமிப்பிள்ளை அவர்கள் கட்டுரைகள் எழுதியுள்ளார். இத்தனிக் கட்டுரைகளோடு, தனது பிற ஆராய்ச்சிக் கட்டுரைகளிலும் சேரநாடு குறித்து ஆங்காங்கு குறிப்பிட்டுள்ளார். மேலும், சேரர் தலைநகரங்கள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளும் ஔவை. சு.துறைசாமிப்பிள்ளை, மு. ராகவையங்கார், ரா. இராவகவையங்கார் போன்றோர்களால்  எழுதப்பட்டுள்ளன. சேர நாடு குறித்த கட்டுரைகள் இருவேறு வாதத்தை முன்வைக்கின்றன. ஒன்று, சேரநாடு மூன்று பிரிவுகளாக இருந்த பழந்தமிழகத்தின் ஒரு பகுதி என்பது; மற்றொன்று, சேரநாடு பலராமனால் கடலிலிருந்து தோற்றுவிக்கப்பட்டது, அதன் முன்னோர் தமிழர்கள் அல்ல  என்ற பிற்காலச் கேரள வரலாற்றை உண்மையென்று முன்னெடுப்பது.

     ஔவை சு.துறைசாமிப்பிள்ளை அவர்களின் ‘சேரநாடு’ என்ற கட்டுரை ‘பண்டைநாளில் இத்தமிழகம் சேர-சோழ-பாண்டியரென்ற வேந்தர்க்கு உரியதாய் சேரநாடு சோழநாடு பாண்டியநாடு என மூன்று பெரும்பிரிவுற்று விளங்கிற்று’ என்பதை மையக் கருத்துரையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இதற்குச் சான்றுகளாக, பண்டைத் தமிழாசிரியர் சுட்டிய ‘பொதுமை சுட்டிய மூவருலகு (புறம் 357), ‘வண்புகழ் தண்பொழில் வரைப்பு (தொல்.செய்.78) என்பன போன்ற பழந்தமிழ் நூற் கருத்துகளைக் கொடுக்கிறார். 

எல்லை 

       சேரநாட்டின் எல்லைகளைக் குறிப்பிடும்பொழுது, மேலைக் கடலுக்கும் மலைத்தொடருக்கும் இடையிலுள்ள நிலப்பகுதி சேரநாடாகும். தெற்கில் கொல்லத்துக்கும், வடக்கில் கோகரனத்துக்கும் இடையில் குட்டம், குடம் என இரு பெரும் பகுதியாகத் தோன்றும் சேரநாட்டுக்குத் தெற்கில் வேணாடும் வடக்கில் கொண்கானமும் எல்லைகளாய் விளங்கின. இந்த சேரநாட்டை ஏனைத் தமிழ் மன்னின்றும் பிரித்து வைப்பது மேற்குமலைத் தொடர் என்கிறார். 

வரலாற்றுப் போலி

       சோழர்களைப் பற்றியும் பாண்டியர்களைப் பற்றியும் வரலாறுகள் உண்டானதுபோல சேரநாட்டுக்கு வரலாறோன்றும் தோன்றவில்லை. சேரநாடு பிற்காலத்தே கேரளநாடென வழங்கப்பட்டது. அதன்பின் ‘கேரளோற்பத்தி, ‘கேரளமகாத்மியம் என்ற வரலாற்றுப் போலிகள் உண்டாயின என்பது இவர்தம் கருத்து.                                         

       அதேபோல, ‘சேரநாட்டின் தொன்மை’ என்ற தனது கட்டுரையில், கேரள வரலாற்றைச் சொல்ல பிற்காலத்தில் எழுந்த ‘கேரளோற்பத்தி, ‘கேரளமகாத்மியம் என்ற இரண்டு நூல்களின் கருத்துகளை மறுத்து எழுதுகிறார். தம் கருத்துக்கு பழைய இலக்கணம், இலக்கியம், மேலைநாட்டார் குறிப்புகள் போன்றவற்றைச் சான்றுகளாகக் கொள்கிறார். 

தொன்மைச் சான்றுகள்

       சேரநாட்டின் தொன்மை நிலையை உணர்வதற்குப் பண்டை நாளைச் சங்கத் தொகை நூல்கள் ஓரளவு துணைசெய்கின்றன. ஆனாலும் அவற்றால் சேர வேந்தர்களையும் சேரநாட்டுக் குறுநிலத் தலைவர்களையும் முறைப்படுத்திக் காண்பதற்குப் போதிய வாய்ப்பு இல்லை. இந்நூல்களில் சேரநாட்டு மலைகளிற் சிலவும் ஆறுகளிற் சிலவும் ஊர்களில் சிலவும் தெரிகின்றன. நூல்களில் பதிற்றுப்பத்தும் புறநானூறும் சேர வேந்தர்களையும் சேரநாட்டையும் சிலபல பாட்டுகளில் சிறந்தெடுத்துப் கூறுகின்றன. ஏனையவை ஆங்காங்குச் சிற்சில குறிப்புக்களையே வழங்குகின்றன. சங்கத் தொகை நூல்களை அடுத்துப் பின்னர்த் தோன்றிய சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சேரநாட்டைப் பற்றிச் சிறிது விரிவாக கூறுகின்றன என்கிறார் ஔவை சு.துறைசாமிப்பிள்ளை. சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகியவற்றின் ஆசிரியர்கள் சேரநாட்டவராதலால் அவர் கூறுவதைத் தமது ஆராய்ச்சிக்குப் பெரிதும் துணையாகக் கொள்கிறார். 

கேரள வரலாற்று புதிய நூல்கள்

       இப்போது சேரநாட்டின்கண் அதன் தொன்மை கூறும் வகையில் வரலாற்று நூல்கள் இரண்டு நிலவுகின்றன. அவை, கேரளமான்மியம், கேரளோற்பத்தி என்பனவாம். அவற்றுள் மான்மியன் வட மொழியிலும் கேரளோற்பத்தி மலையாள மொழியிலும் உள்ளன. இரண்டும் காலத்தால் பிற்பட்டவையாயினும் நாட்டு வரலாறாக கூறப்படுவதால் கேரள நாட்டு வரலாறு பற்றி ஆராய இவற்றை எடுத்துக்கொண்டு உண்மை நிலையை ஆராய முற்படாக கூறுகிறார் ஔவை சு.துறைசாமிப்பிள்ளை.

 நூலில் உள்ளவை

       வேந்தர் குலத்தை வேரறுத்துவந்த பரசுராமன் புதிதாக நாடு ஒன்று படைக்க விரும்பி தன் தவவன்மையால் கடலிலிருந்து மலையாள நாட்டை வெளிப்படுத்தி, அதன்கண் பிராமணர்களை வாழச் செய்தான். அவர்களுக்குச் சில காலத்துக்குப்பின நாகர்களால் பெருந்துன்பம் உண்டாயிற்று. அதனால் அவர்கள் அனைவரும் அந்நாட்டின்றும் போய்விட்டனர். பின்னர்ப் பரசுராமன் வடக்கில் உள்ள ஆரிய நாட்டில் அறுபத்துநான்கு ஊர்களில் வாழ்ந்த பிராமணர்களைக் கொணர்ந்து குடியேற்றினான். நாகர்களாலுண்டான இடுக்கண் நீங்க நாக வழிபாடும் நாகர்கட்குக் கோயில்களும் ஏற்படுத்தினான். அச்செயலால் நாகர் துன்பம் குறைந்தது. அதனையறிந்த பழைய பிராமணர்கள் தங்களைப் பழந் துளுவரென்றும் துளு பிராமணர்கள் என்றும் கூறிக்கொண்டு திரும்பி வந்தனர். பரசுராமன் அவர்களுக்கு நாகர் இடுக்கன் தொலையும்பொருட்டு மந்திரங்கள் கற்பித்து கோயில்களிற் பணிபுரியுமாறு ஏற்பாடு செய்தான். மருமக்கள் தாய முறையினை முதற்கண் ஏற்படுத்தியவனும் பரசுராமனே. நாளடைவில், அப்பிராமணர்களிடையே பூசல்களும் போர்களும் ஏற்பட்டன. அதனால் நான்கு பேரூர்களில் வாழ்ந்த பிராமணர்களை வரவழைத்து ஊருக்கு ஒருவராக நால்வரைத் தேர்ந்தெடுத்து அவர்களை அரசியலை நடத்துமாறு பரசுராமன் ஏற்பாடு செய்தான். நால்வரில் ஒருவன் தலைவனாக வேண்டும் என்றும் அவன் மூன்று ஆண்டுகளுக்குமேல் தலைமை தாங்குதல் கூடாதென்றும் அவர்கள் தங்களுக்குள் வகுத்துக்கொண்டனர். 

       பின்னாளில் மக்களுக்கும் இவர்களுக்கும் பிரச்சினைகள் ஏற்பட்டன. இவர்களால் மக்களுக்கு இன்னல்கள் ஏற்பட்டன. பிராமணர்கள் ஒன்றுகூடி தங்கள் நாட்டுக்குத் தலைவனாகிறவன் தங்கள் நாட்டவனாக இருத்தல் கூடாதென்று தீர்மானித்தனர். ‘கேயபுரம் என்னும் இடத்திலிருந்து ஒருவனைத் தேர்ந்தெடுத்து கேயபெருமான் என்று சிறப்புப் பெயர் நல்கித் தங்கட்குப் பன்னிராண்டு வேந்தனாக இருக்குமாறு ஏற்பாடு செய்தனர். அவனுக்கு முடிசூட்டும்பொழுது ‘சேரமான் பெருமான் என்று பெயர் கூறப்பட்டது. இவனுக்குப் பின் சோழன் பெருமாளும், அவன்பின் குலசேகரனான பாண்டிப் பெருமாளும் ஆட்சி செய்தனர். அதன்பின் பலர் ஆட்சி செய்தனர். அவர்களின் தலைநகர்கள் மாறின.

 கேரளம் – பெயர்க் காரணமாக நூலில் சுட்டப்படுவது

       கேரளோற்பத்தி நூல் வழி – மலையாள நாட்டு வேதியர்கள் ஒருகால் சோழமண்டலம் சென்று தங்கட்கொரு வேந்தன் வேண்டுமென்று ஒருவனை வேந்தனாகக் கொணர்ந்தனர். அவன் பெயர் கேரளன். அவன் பெயராலேயே கேரளம் என்று அழைகப்படுகிறது என்கிறது கேரள வரலாற்று நூல். இதனைத் ஔவை சு.துறைசாமிப்பிள்ளை அவர்கள் புனைவு என்கிறார். 

       ‘உண்மைக்கு மாறாகப் பொய் நிறைந்த கதை செறிந்த இந்நூல்களை இந்நாட்டு வேதியர்கள் தங்கள் நலமே பெரிதும் பாதுகாக்கப்பட்டு நிலைபெறும் பொருட்டு வெறிதே பொய் புனைந்து அமைத்துக்கொண்ட புளுகு மூட்டை என மனவெதும்பிக் கூறியிருக்கிறார்’ என்ற மேலாட்டு அறிஞர் வில்லியம் லோகன் கூற்றை கட்டுரை ஆசிரியர் முன்வைக்கிறார். 

       மேலும், சங்கவிலக்கியங்கள் யாவும் சேரநாட்டைச் சேரநாடென்றும் நாட்டு வேந்தர்களைச் சேரரென்றும் தெளியக் கூறுகின்றன. பிற்காலத்துத் தமிழ் நூல்களும் அந்நெறியில் வழுவியது கிடையாது. வடநாட்டு வடமொழி நூல்களுள் வேதங்களும் இதிகாசங்களும் சேரர்களைச் சேரரென்றே குறிப்பதைக் காண்கிறோம். மேலைநாட்டார் மெகசுதனி என்பார் கங்கைக்கரை பாடலிபுரத்திலிருந்து எழுதிய குறிப்பும் சேரர்களைச் சேரமான்களென்றே குறித்துள்ளது என்கிறார். 

அதேவேளையில், அசோக மன்னனுடைய கல்வெட்டுக்கள் சேரர்களைக் கேரளப்புத்திரன் என்று கூறுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டி,  கல்வெட்டுகளைப் படித்தோர் சேரளப்புத்திரன் என்பதைக் கேரளப்புத்திரன் என்று படித்திருக்கவும், அதுவே வழக்கமாகியிருக்கவும் வாய்ப்பு உள்ளது என்கிறார். மேலும், கி.பி. ஏழாம் நூற்றாண்டின் திருஞான சம்பந்தர் பாடல்களில் சேரர் என்றே காணப்படுவதையும் எடுத்துக்காட்டுகிறார் 

பெயர் மாற்றக் காரணங்கள்

       சேரர், கேரளர் என்று பெயர் மாறியதற்கான காரணங்களையும் ஔவை சு.துறைசாமிப்பிள்ளை அவர்கள் தம் கட்டுரையில் தெளியவைக்கிறார். பெயர் மாற்றத்திற்கான மூன்று காரணங்களைச் சுட்டுகிறார். ‘வேதகாலத்துக்குப் பின்வந்த வடமொழியாளர் தாங்கள் புதியவாய்க் காணும் நாடு நகரங்களின் பெயர்களையும், ஆறுகள் ஊர்கள் முதலியவற்றின் பெயர்களையும் மக்களினத்தின் பெயரையும் தாங்கள் கலந்து வழங்கும் வகையில் மூன்று நெறிகளை மேற்கொண்டனர். முதலாவது எதிர்ப்படும் பெயர்களைத் தம்முடைய மொழியில் மொழிபெயர்துக் கொள்வது; இரண்டாவது திரித்துக்கொள்வது; மூன்றாவது ஒரு திரிபுமின்றி ஏற்றுக்கொள்வது’ என்கிறார்.   

       ஆக, கேரள வரலாறு என்ற பெயரில் எழுந்துள்ள இரண்டு நூல் கருத்துகளும் புனைவுகளும் பொய்களும் நிறைந்தவை. சேரநாடு என்பதே தொன்மை. அதற்கான சான்றுகள் பழந்தமிழ் இலக்கியங்களில் பரவிக் கிடக்கின்றன. மூவேந்தர்களுள் ஒருவரான சேர வேந்தர்களே சேர நாட்டை ஆண்டனர் என்பது இவர் துணிபு. 

      ஔவை சு.துறைசாமிப்பிள்ளை அவர்களின் மற்றொரு கட்டுரை ‘சேர மன்னர்’ என்பது.  இக்கட்டுரையில் சேர நாடு, எல்லை, தலைநகரங்கள், சின்னங்கள், அரசர்கள், சிறப்புப் பெயர்கள், பொதுப்பெயர்கள், அரசமுறை போன்றவற்றை விளக்கியுள்ளார்.  இக்கட்டுரையில், சேரநாட்டில் வாழ்ந்த மக்கள் சேரநாட்டு செந்தமிழ் பேசுபவர். பாண்டியநாட்டுத் தமிழர்க்குப் பாண்டியரும் சோழநாட்டுத் தமிழர்க்குச் சோழரும் வேந்தராயினது போலச் சேரநாட்டுத் தமிழர்க்குச் சேரர் வேந்தராவார். இந்நாட்டுக்குக் கிழக்கெல்லையாகச் சுவர் போல் தொடர்ந்து நிற்கும் மேற்கு மலை தொடர். இது தெற்கே பொதியமலை முதல் வடக்கே தபதி நதிக்கரை வரையில் நிற்கும்.  சோழநாட்டுக்கு உறையூரும் பாண்டிநாட்டுக்கு மதுரையும் போல சேரநாட்டுக்கு வஞ்சிமாநகர் தலைநகராகும். சேரநாட்டின் இரு பகுதிகள் குட்டநாடு, குடநாடு. குட்டநாட்டுக்கு – வஞ்சி;  குடநாட்டுக்கு – தொண்டி ஆகியவை தலைநகரங்கள். மேலும், சேரநாடு – குட்டநாடு, பொறைநாடு, குடநாடு, கடுங்கோநாடு எனப் பிரிந்திருந்தது என்பன போன்ற செய்திகள் காணப்படுகின்றன. 

       மேலும், சேரநாட்டுக் கடற்கரை நகரங்களைக் குறிப்பிடும் பொழுது, பாண்டியநாட்டுக்குக் கொற்கையும் சோழநாட்டுக்கு காவிரிப்பூம்பட்டினமும் போல சேரநாட்டிற்கு முசிறியும் தொண்டியும் கடற்கரை நகரங்களாக விளங்கின என்கிறார். சேர அரசர்களின் சின்னத்தைப்பற்றி குறிப்பிடும் பொழுது, ‘இச் சேரமன்னர் மலைநாட்டில் வாழ்ந்தமையின் மலைகளிலும் சரிவுகளிலும் மண்டியிருந்த பெருங்காடுகளில் வேட்டம் தொழில் தொடக்கத்தில் மேற்கொண்டிருந்தனர். அதனால் இவர்களுடைய கொடியில் வில்லே பொறிக்கப்பட்டிருந்தது. கடற்கரையோரங்களில் பனைமரங்கள் காடுபோல் செறிந்திருந்தன. அதனால் அவர்களின் அடையாள மாலையாகப் பனந்தோட்டால் மாலை தொடுத்து கொண்டனர்’ என்கிறார். சேர அரசர்களின் சிறப்புப்பெயர்களாக, வானவரம்பன், வானவன், குடக்கோ, பொறையன், இரும்பொறை, கடுங்கோ போன்றவை விளங்கியதையும், பொதுப்பெயர்களாக, சேரலர், சேரல், சேரமான் ஆகியவை வழங்கப்பட்டதையும் சுட்டிக்காட்டுகிறார். 

அரசர் முடிசூடும் முறை

       சேர அரசர்கள் முடிசூட்டிக்கொள்ளும் முறைமையில் மாறுபட்ட கருத்துகள் சுட்டப்படுகின்றன. ‘பண்டைநாளைத் தமிழர்கள் அரசெய்திய முறை ஒரு சிறப்பு முறையாகும். ஒருவேந்தனுக்கு மூன்று புதல்வர்களென்றால் அவர் ஒருவர்பின் ஒருவராக முடிசூட்டிக்கொள்வர். முன்னவன் முடிவேந்தனாக பின்னோர் இருவரும் இருவேறு பகுதிகளிற் சிற்றரசர்களாக முடிவேந்தற்குத் துணைபுரிவர். இம்மூவரும் முடிசூடி வாழ்ந்தபின்பே இவர்மக்களுள் மூத்தவன் எவனோ அவன் முடிசூடுவான். இம்முறை இடைக்காலச் சோழவேந்தரிடத்தும் இருந்திருக்கிறது’ என்பது ஔவை சு.துறைசாமிப்பிள்ள அவர்களின் கருத்தாக உள்ளது.   

       சேரர் தலைநகர் பற்றி, வி.வெங்கடராம சர்மா அவர்களும் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். சேரர் தலைநகர் முசிறி என்பது இவர் கருத்து. முரஸி என்னுஞ் சொல் ஆற்றிற்குப் பெயராவது உணரப்படும். இப்பெயரே அவ்வூர்க்கும் (கொடுங்கோளூர்) வழங்கி வரலாயிற்று என்பதற்குச் சான்றுகள் உள்ளன என்கிறார். 

       அதேபோல, சேரநாட்டின் பரப்பு, தலைநகர் போன்ற கருத்துகளை மையமாகக் கொண்டு கவிராச பண்டித இராமசுப்பிரமணிய நாவலர்(மான் முருகனார்)  அவர்கள் ‘சேர மரபு’ என்ற கட்டுரையை எழுதியுள்ளார். இக்கட்டுரையில் சேரநாட்டின் பரப்பைப் பற்றிக் குறிப்பிடும் இடத்து,      ‘சேரநாடு மிகப் பரந்ததொன்று. போர்வகையால் அது பலபோது மிகுந்தும் குறைந்தும் வந்திருக்கிறது. பழைய சேரநாடு கருவூர்ப்பிரதேசமுட்பட கோயம்புத்தூர், சேலம், நீலகிரி, சில்லாக்களும் மைசூர் நாட்டின் தென் பகுதியும் மேற்குத் தொடர்ச்சிமலை நெடுக உள்ள பக்கங்களுமாம் எனச் சேரன் செங்குட்டுவன் என்றொரு ஆராய்ச்சி நூல் கூறுகிறது’ என்று அவர் காலத்து வெளிவந்த ஆராய்ச்சி நூலினைச் சான்று காட்டுகிறார்.   

சேரர் தலைநகர்

       சேரர் தலைநகர் பற்றிய விவாதங்களும் செந்தமிழ் இதழில் தொடர்ச்சியாக வெளிவந்துள்ளன. குறிப்பாக வஞ்சிமாநகர் பற்றிய ஆராய்ச்சிகள் கட்டுரைகளாக வெளிவந்து விவாதங்களாகவும் மாறியுள்ளதைக் காணமுடிகிறது.

        வஞ்சிமாநகர் – திருச்சிக்கருகில் உள்ள கரூர் என்றும்,  இல்லை கொடுங்கோளூரே என்றும் இருவித கருத்துகள் சுட்டப்படுகின்றன. செந்தமிழ் இதழில் ‘வஞ்சிமாநகர் பற்றிய செய்திகளும், வஞ்சிமாநகர் எது என்பது பற்றிய ஆய்வுக் கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. மு. இராகவையங்கார் அவர்கள் தன்னுடைய கட்டுரைகளில் திருச்சி ஜில்லாவில் உள்ள கருவூரே வஞ்சி மாநகர் என்று பல இடங்களில் சுட்டிச் செல்கிறார். இக்கருத்தை ஏற்றும் மறுத்தும் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.     

    மதுரைத் தமிழ்ச்சங்கத்துத் தலைவரான சேது மன்னரின் கட்டளைக்கிணங்க பத்திராதிபர் திரு நாராயணையங்கார் அவர்களும் வஞ்சிமாநகர் குறித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளார். 

       ‘வஞ்சி என்பது கருவூர் என்றும் அதுவே திருவஞ்சைக்களம் என்றும் பலர் கூறுகின்றனர். சேரர் தலைநகரம் திருவஞ்சைக்களம் என்றே பெரியபுராணம் கூறுகின்றது. வஞ்சி சேரரது தலைநகம் எனச் சங்க நூல்களும் பரவக்கூறும்’ என்கிறார் கவிராச பண்டித இராமசுப்பிரமணிய நாவலர். 

       சு.ஸ்ரீநிவாசையங்கார் அவர்கள் தனது ‘வஞ்சிமாநகர்ப் பெயர்காரணம்’ என்ற கட்டுரையில், ‘வஞ்சுளாரணியம் என்னும் வடமொழிப் பெயர் தமிழில் வஞ்சி என்று வந்ததாகக் கூறுவர். வஞ்சுளாரணியம் என்னும்சொல் ஓர்வகை மரத்திற்கும் கொடிக்கும் பெயராம். எனவே அவை, மிகுதியாகக் காணப்படும் நாடு வஞ்சுளாரணியம் என்பதாம் என்றும், அதன் சுருக்கம் வஞ்சி என வந்தது என்றும் கூறுப்படுகிறது என்று கூறுகிறார். மேலும் ஒரு காரணமாக,  சேரமான் வஞ்சன் என்னும் அரசன் இந்நகரை முதன் முதல் சேரனாட்டிற்குத் தலைநகராகக்கொண்டு ஆண்டிருத்தல் வேண்டும் என்று ஊகித்தறியலாம். அக்காரணத்தால் அந்நகரம் வஞ்சியென்று பெயர்பெற்றது போலும் என்கிறார். 

       வஞ்சி என்பது பேரியாற்றங் கரைக்கண் உள்ள கரூர் என்று சிலரும் திருச்சிராப்பள்ளி சில்லாவைச் சார்ந்த கருவூர் எனச் சிலரும் கூறுவர். திரு.ரா. இராகவையங்கார் கருத்து திருச்சி சில்லாவின் குள்ளக் கருவூர் என்பது. திரு ஐயங்கார் அவர்கள் கூறும் பிற ஆராய்ச்சி நுட்பங்கள் அவராற் கூறப்படும் கருவூரே சேரர்க்குப் பழைய தலைநகரமாக இருந்திருத்தல் வேண்டும் என்பதை வற்புறுத்தும். மிகப் பரந்த சேரநாட்டிற்குச் சோழ நாட்டையடுத்த கருவூர் தலைநகராக இருப்பது வியப்பும் அன்று. கருவூரைப் பிற்காலத்துச் சோழர்க்கு உரிமைப்படுத்திப் பலநூல்கள் கூறுவதற்குக் காரணம் சேர்ர்தம் பழைய தலைநகரை மாற்றிக்கொண்டதேயாகும் என்கிறார் கவிராச பண்டித இராமசுப்பிரமணிய நாவலர்

 

       அதே நேரத்தில், சி.எஸ். செலுவைய்யர் அவர்கள் வஞ்சி மாநகரம் கொங்கு குடபுலமன்று என்கிறார். இவ்விவாதங்களை முடித்து வைக்கும் முகமாக பத்திராதிபர் திரு நாராயணய்யங்கார் எழுதிய ‘வஞ்சிமாநகராராய்ச்சி’ என்ற கட்டுரை தனமு முடிபாக, ‘இதுகாறும் செய்த வாதக்க்ஷி முடிவுரையின் ஏகதேசமான ‘கொங்கு குடபுலம் என்பதன் வாக்கியார்த்த விசாரணையாலேயே கொங்கு குடபுலமாகதென்பது பெறப்பட்டமையால், கொங்குவஞ்சி குடபுல வஞ்சியாகாதென்பதும் கூறவேண்டாதாயிற்று’ என்று கூறுகிறது. 

சேர அரசர்கள் 

       செந்தமிழ் இதழில் சேர அரசர்கள் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் பல வெளிவந்துள்ளன. இக்கட்டுரைகள், சேர பெருவேந்தர்கள், சிற்றரசர்கள், வேளிர்கள், தாயமுறை, முன்னோர்கள், வீரதீரச் செயல்கள் பற்றிப் பேசுகின்றன. சேர அரசர்கள் சிலரை முன்வைத்த கட்டுரைகள், அவ்வரசன் பெருவேந்தரா? சிற்றரசரா? என்ற ஆய்வினையும் முன்னெடுக்கின்றன. 

       ‘சேர மன்னர் என்ற ஔவை சு.துறைசாமிப்பிள்ளை அவர்களின் கட்டுரையும் அதன் தொடர்ச்சியாக வெளிவந்த அவரின் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல்கெழு குட்டுவன் ஆகிய கட்டுரைகளும் சேர அரசர்கள் பற்றிய விரிவாகப் பேசுகின்றன. பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதனைப் பற்றிக் குறிப்பிடும் இடத்து,  ‘புறநானூற்றுப் பழையயுரைகாரர் இப்பாட்டின் உரையில் ‘பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோன் என்பது பெருஞ்சோற்றுதியற்கு முன்னோன் என்றும், முன்னோன் செய்தது இவ்வுதியஞ்சேரல்மேல் ஏற்றிக் கூறப்படுகிறதென்பதும் கூறாமையால் இதனைக் கண்டோர், இச்சேரலாதன் பாரத காலத்தவனென்றும் பாரதவீர்ர்களுக்கு பெருஞ்சோறு அளித்தவன் இவனே என்றும் இவனது இச்சயலைப் பாராட்டிப் பாடும் இம்முடிநாகனாரும் இவரது காலத்தவரென்றும் கருதி யுரைப்பாராயினர் என்கிறார். மேலும், இருவரும் வேறு வேறு என்று மு. இராகவையங்கார் சுட்டியதையும் எடுத்துக்காட்டுகிறார். 

       மேலும், அவர்கள் கூறுமாறு பாட்டவ-கௌரவர் செய்துகொண்ட போரைத் ‘தென்னாட்டில் ஒரு மூலையில் வாழும் சேரவேந்தர் பாரட்டி அப்போரில் இறந்தோர் பொருட்டுப் பெருஞ்சோற்று விழாவை செய்தற்கு ஒரு தொடர்பும் இல்லை. அந்நாளில் வடவாரியர்களுக்கும் தென் தமிழர்க்கும் சிறந்த நட்புரிமை இருந்ததாக எண்ணுதற்கும் இடமில்லை. இனி, பிற்காலத்தே தென்னாட்டு ஊர்களில் பாரதம் படிப்பதும் அது குறித்துத் தென்னாட்டுச் செல்வர்கள் பாரதவிருந்தி யென்னும் நிவந்தங்கள் விடுவதும் உண்யேயன்றி சங்க்காலத்தே இந்நிகழ்ச்சிகள் நடந்தன என்று கொள்வதற்குச் சங்க நூல்களில் ஆதரவு சிறிதும் இல்லை என்கிறார். ‘இத்துணையும் கூறியதனால் பெருஞ்சோற்றுதியன் கொங்குநாட்டிற் பெற்ற வெற்றிவிழாவில் மேற்கொண்டு மகிழ்ந்த பெருஞ்சோற்று நிலையென்னும் புறத்துறைச்செயல், அவனுக்கே சிறப்பாய் அமைந்தமையின் அவன் பெருஞ்சோற்றுதியன் எனச் சிறப்பிக்கப் பெற்றான் என்பதும், அதனைப் பாராட்டவந்த முடிநாகனார் ஒப்புமை கருதி முன்னோன் ஒருவன் செயலை இவன் மேலேற்றிக் கூறினாரென்பதும் தெளியப்படும்’ என்பது இவர் ஆய்வு முடிவாக உள்ளது. 

       செந்தமிழ் இதழில் ‘ஒரு மாணவன்’ என்ற பெயரில் சில கட்டுரைகள் வெளிவந்துள்ளன. யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறை, சேரமான் பெருஞ்சேலராதன் என்ற தலைப்புகளில் வெளியான இக்கட்டுரைகள் இவ்விரு அரசர்களையும் பேரரசர்கள் என்பதை நிறுவுவனவாக உள்ளன. இவ்வாய்வு முடிவுகளுக்கு இலக்கியங்களிலிருந்தும் கல்வெட்டுகளிலிருந்தும் சான்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. 

       இக்கட்டுரைக்குப் பார்க்கப்பட்ட இதழ் தொகுதிகளில், வித்துவான் சு.குமாரஸ்வாமி ஆச்சாரி என்பவர் மட்டுமே சேர அரசர்களைப் பற்றி ஆறு கட்டுரைகள் எழுதியுள்ளார் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. ‘சங்க கால மன்னர்கள் – சேரமரபினர்’ என்ற தனது கட்டுரையில், சேர நாடு, சேர அரசர், சேர மன்னர்களைப் பற்றி விரிவாகப் பேசுகிறார். பிற்காலத்தில் சேர நாடு பற்றி எழுதப்பட்ட வரலாற்று நூல்களின் கருத்துகளை முழுமையாக ஏற்றுக்கொண்டு, அதற்கு வலுசேர்க்கும் வகையில் இவருடைய கட்டுரைகள் அமைகின்றன. பரசுராமரால் சேரமரபின் உருவாயினர் என்ற பிறகால சேர வராற்று நூல் கருத்தை கட்டுரை ஆசிரியரும் வலியுறுத்துகிறார். 

       ‘நம் பைந்தமிழ்நாடு பம்பெருநாடு; தண்டமிழ் வேந்தர் மூவரால் ஆளப்பட்டு வந்தது. அவ்வேந்தர்கள் சேர சோழ பாண்டிய மரபினர் ஆவர். அவர்களேயன்றி வேறுபல குறுநில மன்னர்களும் இருந்தனர். சேர்ர் மேல்கடற்கரைப் பகுதியையும் அதையடுத்த உள்நாட்டுப் பகுதியையும் ஆண்டுவந்தனர். நெய்தல் நிலத் தலைவனைச் சேர்ப்பன் என்பது வழக்காதலின், கடற்பகுதியை நாடாக்கி வாழ்ந்த மரபினர் சேரர் என வழங்கப்பட்டனர் போலும். இம்மரபினரை வானவர் என்றும் குறிப்பதுண்டு’ என்று குறிப்பிடும் ஆசிரியர், ‘பரசுராமரால் வடக்கிருந்து கொணரப்பட்ட தெய்வத்தன்மை பொருந்திய மரபினர் இவர் எனக் கேரளவரலாற்று நூல்கள் குறிப்பது உண்மையாகலான் என நினைத்திற் கிடனளிக்கிறது. இவ்வானவர் என்னும் சொல் இன்றும் சேரநாட்டில் தெய்வநம்பிக்கையும் தெய்வவழிபாடும் சிறந்து விளங்குகின்றன’ என்றும் சுட்டுகிறார். 

       சேர அரசர்கள் சங்க இலக்கியங்களில் எங்கெங்கு பாடப்பட்டுள்ளனர் என்ற குறிப்புகளை எடுத்துக்காட்டுகிறார். சேர அரசர்களின் பெயர்களான, உதியன் சேரலாதன், குடக்கோ நெடுஞ்சேரலாதன், கடலோட்டிய வேல்கெழு குட்டுவன், அந்துவன் சேரலிரும்பொறை, கடுங்கோ, ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், செல்வக்கடுங்கோ வாழியாதன், பல்யானைச் செல்கெழு குட்டுவன், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், பெருஞ்சேரலிரும்பொறை, கோதை, இளஞ்சேரலிரும்பொறை, ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், பெருஞ்சேரலாதன், யானைக்கட்சேய் மாந்தரன்சேரலிரும்பொறை, வானவன் போன்ற பெயர்களைப் பட்டியலிடுகிறார்.  பிற சேர அரசர்களாக, சேரமான் எந்தை, சேரமான் இளங்குட்டுவன், சேரமான் வஞ்சன், சேரமான் முடங்கிக்கிடந்த நெடுஞ்சேரலாதன், கணைக்காலிரும்பொறை, சேரமான் கருவூரேறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேர லிரும்பொறை ஆகியோர்களையும் குறிப்பிடுகிறார். சேர அரசப் புலவர்களாக சேரமான் எந்தை, சேரமான் இளங்குட்டுவன், சேரமான் முடங்கிக்கிடந்த நெடுஞ்சேரலாதன் ஆகியோர் விளங்கியதை எடுத்துக்காட்டுகிறார். 

       அதேபோல, தனது சேரர் மரபு’ என்ற கட்டுரையில், கதம்பர்கள், கங்கங்கள், சாளுக்கியர்கள் தங்களை நாகர் மரபினர் எனக் கூறிக்கொள்கின்றனர். துளுநாட்டு ஆளுபர் (ஆள்வார்)களும் நாகமரபினர் எனக் கூறப்படுகின்றனர். ஆதலில் மலையாளப்பகுதி நாகர்கள் வாழ்ந்த இடம் என்பதில் சிறிதும் ஐயமில்லை. நாகர்கள் இன்பம் நிறைந்த வாழ்க்கையினர் என்பதை நம் நாட்டுப் புராணங்களும் கூறுகின்றன. நாகர்கள் இந்தியாவில் பெரும்பான்மையான பகுதிகளில் வாழ்ந்தவர். மன்னர்களாக நாடாண்டவர் என்ற கருத்தை முன்வைக்கிறார். மேலும், முண்டாமரபினரான செரு(cheru) குலத்தவரே- கச்சாரிகளே – நாகர்களே சேரர்கள் என்பது நன்குபுலனாகும். (சேர என்னும் மையாளச் சொல் பாம்பெனப் பொருள் படும்). வானவன், வானவரம்பன் என்பன சேரர் மரபினைக் குறிக்கும் சொற்களே என்பதும் புலனாகும். நாகர்மரபின் ஒரு பிரிவினரான மாரன் என்பவர்கள் பாண்டிய மரபினராவர் என எண்ணுவதற்கிடனுண்டு. மலையாளத்து மாரன்மார் பாண்டியர்கள் எனக் கூறப்படுகின்றனர். இது ஆய்விற்குரியது என்கிறார். 

        அதேவேளையில், ‘சேர மரபு’ என்ற தலைப்பிலேயே கட்டுரை ஒன்றை எழுதியுள்ள கவிராச பண்டித இராமசுப்பிரமணிய நாவலர் அவர்கள் பிற்கால சேர வரலாற்று நூல் கருத்துகளை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை.  இவர் தனது கட்டுரையில், தமிழ்நாட்டை மூவேந்தர்களே நெடுங்காலம் புகழும் புண்ணியமும் வாய்ப்ப ஆண்டு வந்தமையாலும் அவர் மொழி தமிழ் என்னும் ஒரு மொழியாகவே இருந்தமையாலும் தரமுள்ளனவும் பிறர் வந்து ஆளுவதற்கு இடங்கொடாமையாலும் தாம் தமிழர் என்ற ஒரு சாதியாராகவே இருந்தமையாலும் அம்மூவரும் மூவேந்தர் எனச் சிறப்பித்துக் கூறப்பட்டார்கள் என்கிறார்.      

       சேரநாடு பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்டது என்ற கருத்திற்கு, ‘பரசுராமர் காலத்துச் சேரநாட்டில் பார்ப்பார் செல்வாக்கு மிகுதியாயிருந்தது என்பதும் அரசரை வயப்படுத்தித் தம் அதிகாரங்களை நிறுவினார் என்பதும் வேண்டுமேல் கொள்ளப்படல் ஆகும். கேரளத்தைப் பரசுராமர் பார்பார்க்குத் தானம் செய்தார் என்பதற்கு ஆங்குப்பார்ப்பார் சிலரைக் குடியிருத்தி அவர்க்கு இடங்களும் அதிகாரங்களும் அரசர் உடன்பாட்டுடன் அளித்தார் என்பதே பொருளாகல் வேண்டும். கேரளத்தைத் ‘தருமராச்சியம் என்பது பரசுராமர் அந்நாட்டைப் பார்ப்பார்க்குத் தானம் செய்ததுபற்றி அன்று; கேரளவரசர் தருமங்காத்து வருவது பற்றியே ஆகும்’ என்றும் விளக்கம் அளிக்கிறார். 

அதேபோல, சேரநாட்டுப் பெயர்க் காரணம் பற்றிக் குறிப்பிடும்பொழுது, ‘சேரல் எனபது, ‘அலங்கல் தொடையல் என்பன போலத் தொழிலாகுபெயராய் மலைசேர்ந்த நாட்டின் பெயராயிற்று. சிலபோழ்து இச்சொல் இருமடியாகு பெயராய்ச் ‘சேரன் என்ற பொருளிலும் நார்முடிச்சேரல் என்பது காண்க. சேரல் என்னும் மலைநாட்டை உடையவன் சேரலன் எனப்படுவான். சேரர்க்கு இப்பெயரே நூல்களில் மிகுதியும் வழங்கப்பட்டு வருகின்றது. ‘ச’ என்னும் எழுத்திற்கு நேராக ‘க’ என்னும் எழுத்து பல சொற்களில் வருகின்றது. சீரை கீரை என்பது காண்க’ என்கிறார். இம்முறை பற்றியே சேரலன் என்பது சேரலன், கேரளன் எனத் திரிந்து வழங்கப்பட்டது என்பது இவர் முடிவு. 

சேர அரசர் தாயமுறை      

   ‘செந்தமிழ் இதழில் சேர அரசர்களின் தாயமுறை குறித்து முதன்முதலில் ச.சோமசுந்தரபாரதியார் கட்டுரை எழுதியுள்ளார். இக்கட்டுரையைத் தொடர்ந்து ஏற்பும் மறுப்புமாக பல கட்டுரைகள் வெளிவந்துள்ளன.  சோமசுந்தரபாரதியாரின் கட்டுரை செந்தமிழ் இதழ் தொகுதி 27 பகுதி 4இல் வெளிவந்துள்ளது. இவருடைய இக்கட்டுரை, சேரரின்  அரச மரபு மருமக்கட்தாயமுறை மரபு என்பத்தையும், இம்மரபு சங்க காலத்திற்குப் பின் தோன்றியிருக்க வேண்டும் என்பதையும் சுட்டுகிறது. 

       ‘சேரநாடு தமிழகதின் பகுதியென்றும், சேரர்பரம்பரையிலும் மற்றைத் தமிழ்வேந்தர் குடிமரபாம் மக்கட்தாயமே பண்டைநாளில் அடிப்பட்ட பழவக்காய் ஆட்சி பெற்றிருந்த்தென்றும் நாம் நம்புகின்றோம். எப்படியானாலும் சங்ககாலத்துக்கு பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரே சேரநாட்டில் மருமக்கட்டாய முறை புது வாழக்காய்ப் புகுந்திருக்கவேண்டுமெனக் கொள்கின்றோம்’ என்பது இவர் கருத்தாக உள்ளது. 

       மருமக்கட் தாயமுறை என்பதற்கு, 1. ஆண்வழியிலன்றிப் பெண்வழியிலேயே உறவுமுறையும் கிளைமரபும் ஆட்சிபெறும். தாய்மாரே குடிபேணும் அடிமரமாய்க் கருதப்படுவர். கிளைவளமும் குடிநிதியும் பெண்வழியே தழையும்வகை முறைவகுத்துக் குடியறங்கள் நிற்பதாகும். 2. மக்களெல்லாம் தாய்க்குடியின் கிளைஞராவர். அக்குடியில் தம் மாமன்மார்க்குரிய வழித்தோன்றல்களாய் வரன்முறையே உரிமை பெறுவர். மருகருள்ளே வயது நிரல்வரிசையிலே வரன்முறையாய்த் தனித்தனியே குடியாளும் தலைமை கொள்வர் என்று விளக்கம் தருகிறார். இக்கட்டுரையில் முடிவாக, ‘தற்பொது மேல்புலத்தில் வழங்கிவரும் மருமக்கட்டாயமுறை புதியதொன்றில்லை என்பதும், தொலைச் சங்காலப் பழஞ்சேர்ர் குடிகளிலும் அடிப்பட்டதொன்மரபாய் ஆட்சிபெற்றது தொன்றுதொட்டே வழங்கி வருவதாய்த் தெரிகிறது என்பதுமே இவ்வாராய்ச்சியால் நாம் காணக் கிடைக்கும் பொருளாகிறது’ என்பதை வைக்கிறார். 

       அதேபோல, சேர அரசர்களின் தாய வழக்கு குறித்து மு.இராகவையங்கார் இரண்டு கட்டுரைகள் எழுதியுள்ளார். அக்கட்டுரைகள் சேர வேந்தர் தாய வழக்கு என்ற தலைப்பில் தொகுதி 27; பகுதி 10-திலும், தொகுதி 27; பகுதி 11-றிலும் வெளிவந்துள்ளன. இவர் தனது கட்டுரைகளில் மருமக்கட்தாயமுறை என்பதற்குச் சான்றாக சுட்டியுள்ள எட்டுக் காரணங்களை வரிசைப்படுத்துகிறார். பின்னர் மருமக்கட்டாய பொருளாராய்ச்சி என்று தலைப்பில் ஒவ்வொரு காரணத்தையும் சான்றுகளோடு மறுக்கிறார். முதல் கட்டுரைகளில் மருமக்கட்தாய முறை என்பதை வலியுறுத்தும் கருத்துகளில் ஏழு கருத்துகளை எடுத்துச்சொல்லி அதற்கு மறுப்பு விளக்கமும், இரண்டாவது கட்டுரையில் எட்டாவது காரணத்தைச் சொல்லி அதற்கு விரிவான மறுப்பும், மக்கட் தாயமுறைக்கு இன்னபிற சான்றுகளும் காட்டி முடிவு கூறியுள்ளார். 

       ஆய்வு முடிவாக, ‘மருகட்கட்டாயம் பழையசேரர்க்கு உரியதாகாமை, மேலேயான் விவிவாகக் கூறியப்போந்தவற்றால் தெளிவாக அறியப்பட்டமையின், அத்தாய முறை வழங்கிய மலையாளக் கொடுங்கோளூரே பழைய தலைநகராதல்வேண்டும் என்ற கூற்றும் வலியற்றதாதல் காணலாம். கொங்குக் கருவூரே சேரரிருந்தாண்ட பழைய தலைநகரன்றி வேறெதனைக் கூறினும் அது முன்னூல் வழக்குக்களுடன் பெரிதும் முரணுவதாம். இதனைச் சேரன் செங்குட்டுவன் என்ற நூலின் இரு பதிப்புகளினும் விளங்க விருத்தெழுதியுள்ளேன்’ என்று கூறுகிறார்.   

       அதேவேளை, மு. இராகவையங்கார் அவர்களின் ஆய்வு முடிவிற்கு மறுப்பாக எல். கிருஷ்ணசாமி, அட்வகேட் அவர்கள் ‘சேரர் தாயமுறை’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றினை எழுதியுள்ளார் (தொகுதி 28, பகுதி 7). மு.இராகவையங்கார் கருத்தை மறுக்கும் இவர், ‘சரிதநூலறிஞர் அனைவருக்கும் இது பொருந்தாவாதம் என்பது ஒருதலை. மக்கட்சமுதாயமெல்லாம் முதலில் தாய்வழித் தாயம் மேற்கொண்டிருந்து, பின் நாளடைவிற் பலவகுப்பினர் தந்தைவழித்தாயிகளாகியுள்ளனர் என்பதே தற்காலம் மதிநுட்பம் நூலோடுடைய ஆராய்ச்சியாளரனைவர்க்கும் ஒப்பமுடிந்த்தோர் சரித்திர உண்மையாகும். ஆகவே, தமிழரும் மக்கட்சமுதாயத்தில் அடங்குவதால் அவருள்ளும் ஆதியில் மருமக்கட்டாயமே பழவழக்காய்நின்று, பிறகே மக்கட்டாயம் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டுமென்பது சரித நூன்முறையிற் போதருவதாகும் என்ற கருத்தை முன்வைக்கிறார். 

       இந்நிலையில் மு.இராகவையங்கார் கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் பண்டித இராமசுப்பிரமணிய நாவலர் அவர்கள் ‘சேர மரபு’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றினை எழுதியுள்ளார். அக்கட்டுரையில், ‘சேரர் தமிழ்நாட்டு மூவேந்தருள் ஒரு மரபினர். சேர சோழ பாண்டியர் என வேந்தரைக்கூறும்பொழுது முதலில் வைத்துத் கூறுவதனாலேயே அவர்களது தொன்மை உணரப்படும்’ என்றும், ‘சேரவரசர் மருமக்கட் தாயத்தினர் எனச் சேரநாட்டில் இப்பொழுது சிலர் கூறி வருகின்றார்கள். ‘மருமக்கள் தாயம் பின்வந்ததாகும். குலத்தில் மைந்தர்களும் மைந்தர்கள் இல்லாவிடில் தம்பியருமே அரசாண்டு வந்திருக்கின்றனர் என்பது ‘பதிற்றுப்பத்து என்னும் நூலால் தெரியலாகின்றது’ என்றும் சுட்டுகிறார். 

       மேலும், ‘ஒரு பொருளை நாம் உறுதியாக்க் கருதலாம். மக்களிருக்கும் பொழுது, அரசுரிமை மருமக்கடுகுச் செல்லாது. ஆதலால், பிற்காலத்தில் சேர்ர் குலத்தில் மக்கள் இலராயினாரென்றோ மக்களிருந்து அரசியலைத் துறந்தாரென்றோ கொள்ள வேண்டும். அவ்வாறான பின்னர் சேரகுல அரசியல் முந்தையரசருடைய உடன் பிறந்தாள் மக்களுக்குச் சென்றிருக்க வேண்டும். மூதாதையின் செல்வத்தை மகளுக்கு மகள் இல்லாதவிடத்து மகளுக்கு மகன் ஆள்வது முறைமையே ஆகும்’ என்பதும் அவரின் ஆய்வு முடிவாக உள்ளது. 

 

சேரர் இலக்கியம் 

                சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று பதிற்றுப்பத்து. இந்நூல் சேர அரசர்களைப் பற்றி மட்டுமே பாடப்பட்ட தனி நூலாகும். தமிழக அரச மரபினருள் வேறு எந்த அரச மரபினருக்கும் பதிற்றுப்பத்துபோல் தனி நூல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பதிற்றுப்பத்து என்பது பத்து சேர அரசர்களைப் பத்துப் புலவர்கள் பத்துப் பத்துப் பாடலில் பாடிய தொகுப்பு. இந்நூலில் முதல் பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. இரண்டாம் பத்து முதல் எட்டாம் பத்துமுடிய உள்ள எட்டுப் பத்துகளே கிடைக்கின்றன. 

       இப்பதிற்றுப்பத்து நூல் குறித்து ‘பதிற்றுப்பத்து என்ற தலைப்பிலேயே செந்தமிழ் இதழில் மூன்று கட்டுரைகள் வெளிவந்ததாக குறிப்பு இருக்கிறது. முதல் கட்டுரை, தொகுதி 31; பகுதி 8-இல் வெளிவந்துள்ளது. மற்ற கட்டுரைகள் தொகுப்பில் காணக்கிடைக்கவில்லை. 

       இக்கட்டுரைகள் தவிர, செந்தமிழ் இதழில் வெளியான சேர நாட்டு வரலாறு, வஞ்சிமாநகர், சேரர் தாயமுறை, சேர நாட்டு தொன்மை, சேர அரசர்கள் போன்ற கட்டுரைகளில் பதிற்றுப்பத்துப் பாடல்கள் வழியும், அதன் பாயிரச் செய்திகள் வழியும், சேர மன்னர்கள்,  அரசமா தேவியர், புலவர்கள், புலவர்கள் பெற்ற பரிசில்கள், தலைநகர் குறித்து ஏராளமான செய்திகள் சான்றுகளாக எடுத்தாளப்பட்டுள்ளன. சேர அரசர்கள், தாயமுறை, தலைநகர், நிலப்பரப்பு குறித்த ஆய்விற்கு முதன்மைச் சான்றாக இப்பதிற்றுப்பத்து திகழ்வது நோக்கத்தக்கது. இதனை அடுத்து புறநானூறும், சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலைக் காப்பியங்களும் சேரர்கள் பற்றிய தரவுகளைக் கொண்டு திகழ்கின்றன. 

       செந்தமிழ் இதழில் பதிற்றுப்பத்து குறித்த கட்டுரையை  மதுரைத் தமிழச்சங்கக் கலாசாலை, பண்டித வகுப்பு மாணவன் ஆர். வீரராகவன் அவர்கள் எழுதியுள்ளார். கட்டுரை, பதிற்றுப்பத்தென்பது புலவர் பதின்மர் சேரவரசர் பதின்மர்மீது ஒவ்வொருவருக்குப் பப்பத்துப் பாக்களாகப் புறத்துறையமைத்துப் பாடிய நூலாகும். இதில் முதற் பத்தும் பத்தாம் பத்தும் நீங்க, மற்றை யெட்டுப்பத்துமே இப்பொழுது வழங்குகின்றன என்ற குறிப்போடு தொடங்குகிறது. 

       இந்நூலில் நயமிக்க பல தொடர்கள் பல்கிக்கிடக்கின்றன. இது, ஆண்டாண்டுவந்துள்ள தொடர்களது நயத்தைக்கருதி, அத்தொடர்களையே அவ்வச்செய்யுள்கட்குப் பெயராக வழங்குதலானே விளங்கும். இதில் பல அரிய இலக்கண மரபுகளும், அரும்பதங்களும் பயின்றுவந்துள்ளன; ஆதலால் தமிழ் மொழி கற்கப்புகுந்த மாணாக்கர்கட்கு இந்நூல்கற்றல், அரிய இலக்கண முடிபுகட்கு ஆட்சியிடமறிதற்கும், அரும்பதப்பொருளை அறிந்து கொள்வதற்கும் இன்றியமையாததாகும். சங்க நூல்களுள்ளே, அந்நூலிலும் அகநானூற்றிலும் கூறியது கூறலென்னும் குற்றந்தங்குமாறு கூறுவதுபோற் கூறி உய்த்துணர்வார்க்கு வேறொன்பொருள் சிறக்கவைத்திருப்பது, பயில்வோர்க்கு உய்த்துணர்வை உண்டாக்குமென்பது ஒருதலை. ஆகவே, இந்நூல்களில் இடர்ப்பட்டுப் பொருள் கண்டுய்த்துணர்வுமிக்காருக்குப் பிற நூற்குக் குறிப்புரையாயமைந்த பழையவுரையொன்றுள்ளது. அதன் உதவியின்றேல் அரும்பதம்நிறைந்த இந்நூற்பொருள் காண்டல் அரிதேயாம். ஆயினும், அது விளக்கவேண்டிய பகுதி பலவற்றை விளக்காது விடுத்தமையான் அதனுதவியைக்கொண்டு பொருள்காண்டலும் நுண்ணறிவினார்க்கன்றி என்போன்ற மாணாக்கர்கட்கு அரிதேயாகும். ஆதலால் யான் ஆசிரியரிடம் பாடங்கெட்டவற்றுள் என் சிற்றறிவிற் கெட்டியவற்றை என்போன்ற மாணாக்கர் பிறருக்கும் உபகாரப் படுமெக்கருதி ஓருரையாக எழுதி வெளியிடலானேன் என்ற விளக்கத்தோடு இரண்டாம் பத்தின் முதல் பாடலை அறிமுகப் படுத்தப் புகுகிறார் கட்டுரை ஆசிரியர். 

       விளக்கமுறை

        பாடல் பகுதி பகுதியாக பிரித்து பொருள் சுட்டப்பட்டுள்ளது. இலக்கணக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. தனிச்சொல்லுக்கான சிறப்பு விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.

        இலக்கணக் குறிப்பு

        பாடலில் பயின்று வந்துள்ள சொற்களுக்கு இலக்கணக் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. எ.கா.

       ஈண்டுக் காவன்மரமாகவென்றது இசையெச்சம்; கமமென்றது நிறைதற்பொருட்டு. கடலென்னும் இடப்பொருட்கு அக்கடல்நீர் சூல்போ லகத்துள்ளிட்டிருத்தலால், சூலெனப் பட்டது, உவமவாகுபெயர்

  

       சொற்பொருள் விளக்கம்

        தேவையான சொற்களுக்கு பொருள் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.

       (எ.கா)

       ‘முரண்மிகு சிறப்பி னுயர்ந்த வூக்கலை (கக)

 உயர்ந்த ஊக்கலை என்றது மிக்க ஊக்குதலையுடையாய் என்ற வாறு. ஈண்டு உயர்ச்சி மிகுதிப்பொருளுணர்த்தி நின்றது. ஊக்கலென்பது உள்ளவெழுச்சி.

        அணங்குதல் – வருத்துதல்

        சூரென்றது சூரவன்மாவென்னும் அசுரனை.

        மனாலமென்பது குங்குமம்; சாதிங்குலிகமெனினும் அமையும். சாதிங்குலிகமென்பது சாதிலிங்கமென இக்காலத்து வழங்கப்படுகிறது.

        அரணென்பது ஆகுபெயராய் அரணின்கணுள்ளாரைக் குறித்து நின்றது என்பன போன்றவை.

*****

 

கட்டுரைக்குப் பயன்பட்ட செந்தமிழ் இதழ்கள்

 

1. உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூலகத்தில் தொகுத்து வைக்கப்பட்டுள்ள இதழ்       தொகுதிகள்

 

1, 3, 5, 15, 16, 17, 18, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 36, 36, 49, 50, 51, 52, 55, 62, 63, 64, 66, 67, 68, 70, 71, 73, 74, 75, 95     

 

2. உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூலகத்தில் தொகுத்து வைக்கப்பட்டுள்ள தனி இதழ்கள்,     2004 முதல் 2012 வரை

 *****

தமிழியல்

Dr.A. Manavazhahan, Asst. Professor, Sociology, Art & Culture, International Institute of Tamil Studies, Chennai -113.

www.thamizhiyal.com