செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

பழந்தமிழ் நூல்களில் மருத்துவம் - மருத்துவர் - மருந்துப் பொருட்கள்

 முனைவர் ஆ.மணவழகன், உதவியப் பேராசிரியர், சமூகவியல், கலை(ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,சென்னை 113. 

(தமிழியல் - பன்னாட்டு ஆய்விதழ், ஜூன்-டிசம்பர், 2011.)

 

            உலகில் அதிக மக்கள்தொகையைக் கொண்டிருக்கக் கூடிய நாடுகளின் தரவரிசையில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்பதும், முதல் இடத்தை அடைவதற்கான காலம் வெகுதொலைவில் இல்லை என்பதும் அறிந்ததே. ‘மக்கள்தொகைப் பெருக்கம்’ என்பது, மனிதவள மூலதனமாக அமைவதும் அடிப்படைத் தேவைகளின் பற்றாக்குறைக்கான ‘காரணியாக’ மாறுவதும் அரசு மேற்கொள்ளும் ‘மனிதவள மேலாண்மை’ திட்டங்களைப் பொறுத்தே அமைகிறது. மனிதவள மேலாண்மை என்பது, அடிப்படைத் தேவைகளின் நிறைவு, சுகாதாரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இவற்றுள் அடிப்படைத் தேவைகள் என்பதை உணவு, உடை, உறையுள் ஆகியவற்றின் தன்னிறைவு என்று கொண்டால், சுகாதாரம் என்பது நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் மருத்துவ வசதிகள் போன்றவற்றை அடியொற்றியதாக அமைகின்றது. எனவேதான், மனித ஆற்றலை நம்பியிருக்கிற இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மருத்துவப் பயன்பாடும் மருத்துவத் தொழில்நுட்பமும் இன்றியமையாததாகின்றன. இந்நிலையில், மருத்துவத்துறையில் தீய விளைவுகளை ஏற்படுத்தாத நவீனத்தைக் கைகொள்கிற அதேவேளையில், மரபுசார்ந்த மருத்துவ அறிவினையும் தொழில்நுட்பங்களையும் மீட்டுருவாக்கம் செய்தல் கட்டாயத் தேவைகளாகின்றன. அவ்வகையில், பழந்தமிழகத்தில் மருத்துவ முறைகள், மருந்துப் பொருட்கள், மருத்துவர் இயல்புகள், உடல்நலத்திற்கான வாழ்வியல் நெறிகள் ஆகியன குறித்துப் பழந்தமிழ் நூல்களின்வழி காண்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

 மருத்துவ முறைகள்

 பழந்தமிழரின் மருத்துவத்தை உடல் நலத்திற்கான மருத்துவம், மன நலத்திற்கான மருத்துவம் என இரு கூறுகளாக்கிப் பார்க்க முடிகிறது. இவற்றுள், உடல் நலத்திற்கான மருத்துவத்தை இயற்கை மருத்துவம் அல்லது கை மருத்துவம், இசைமருத்துவம், நுண் மருத்துவம் (தொழில்நுட்பம் சார்ந்தது) என்று வகைப்படுத்தலாம். மன நலத்திற்கான மருத்துவ முறைகள் தேற்றுதல், ஆற்றுப்படுத்துதல், சந்து செய்வித்தல், வெறியாட்டுதல் போன்ற முறைகளில் அமைகின்றன. இவற்றுள் உடல் நலத்திற்கான மருத்துவ முறைகள் குறித்து மட்டும் இங்கு நோக்கப்படுகின்றது.

இயற்கை மருத்துவம் (அ) கை மருத்துவம்

 இயற்கை மருத்துவம் (அ) கை மருத்துவம் என்பது, இயற்கையாக எளிதில் கிடைக்கக் கூடிய மருந்துப் பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்படுவது. இவ்வகை மருத்துவ முறைகள், வீட்டில் பெண்கள் முதல் அனைவராலும் எளிதில் கையாளப்பட்டு வந்ததால் இதனைக் ‘கை மருத்துவம்’ என்றும் அழைக்கலாம். வேம்பைப் பயன்படுத்துதல், ஐயவிப் புகைத்தல், அத்திப்பாலினைப் பூசுதல் போன்றவை இவ்வகை மருத்துவ முறைகளுள் அடங்கும்.

 வேம்பு

 பழந்தமிழரின் இயற்கை மருத்துவத்தில் முதன்மை இடத்தினைப் பெற்ற பொருள் வேம்பு. இது, தமிழர் வாழ்விலும் வழிபாட்டிலும் கலந்து, தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்ட புனித மருந்துப் பொருளாகும்.

 வேம்பும், கடுவும் தமிழரின் ஆதி மருந்துகளாக, கற்ப மருந்துகளாகத் திகழ்ந்தன’ என்பார் முனைவர் வே.நெடுஞ்செழியன் (தமிழர் கண்ட தாவரவியல் பக்.50). வேம்பு ஒரு கிருமிநாசினி என்பது இன்று நவீன மருத்துவத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. கிருமிகள் மூலம் பரவக்கூடிய நோய்களைத் தடுக்கும் ஆற்றல் வேம்பிற்கு உண்டு. இன்றும் கிராமங்களில் நோய்வாய்ப்பட்டாலோ, அம்மை போன்றவை ஏற்பட்டாலோ, தொற்றுநோய் அறிகுறிகள் தென்பட்டாலோ நோய்த் தடுப்பு முறையாக, மனையையும் மனையைச் சுற்றியுள்ள பகுதிகளையும் தூய்மைப்படுத்தி, வேம்பின் இலைகளை அரைத்து மஞ்சள் போன்றவற்றுடன் கலந்து தெளிப்பதைக் காண்கிறோம். மேலும், வெளிப்புறமிருந்து நோய்க்கிருமிகள் மனைக்குள் புகாமல் பாதுகாக்கும் பொருட்டு, மனையின் முகப்பில் வேம்பின் தழைகள் கொத்துக் கொத்தாகச் செருகியும் வைக்கப்படுகின்றன. பழந்தமிழர் மருத்துவ முறைகளின் தொடர்ச்சியாகவே இச்செயல்பாடுகள் அமைவதைக் காணமுடிகிறது.

 மருத்துவத்திற்கு வேம்பு பயன்படுத்தப்பட்டதை,

 

---------- வேம்புசினை ஒடிப்பவும் (296:1)

 என்றும், வீட்டின் முகப்பில் வேம்பு செருகி இருந்ததை,  

தீங்கனி இரவமொடு வேம்பு மனைச் செரீஇ (281:1)

என்றும் சுட்டுகிறது புறநானூறு. ‘இனிப்பான பழங்களைத் தரும் இரவ மரத்தின்
தழையுடன் வேப்பிலைகளையும் வீட்டில் செருகி...’  என்று இதற்குப் பொருளுரைக்கப்படுகிறது.

வீட்டின் முற்றத்திலும், பலர் கூடுகின்ற பொது மன்றங்களிலும் வேம்பினை வளர்த்தல் உடல் நலத்திற்கு நன்மை பயக்கக்கூடியது. பலர்வந்து கூடுகின்றபோது நோய்வாய்ப் பட்டோரிடமிருந்து கிருமிகள் பிறருக்கும் பரவ வாய்ப்புகள் உள்ளன. வேம்பு கிருமிநாசினி ஆதலால் இச்செயல்பாடு கட்டுப்படுத்தப்படும். அதனாலேயே சங்ககாலத்தில் பலர் கூடுகின்ற ஊர்ப் பொதுமன்றங்களில் வேம்புகள் வளர்க்கப்பட்டுள்ளன. இதனை,

 

மன்ற வேம்பின் மாச்சினை ஒண்டளிர் (76:4)

மன்ற வேம்பின் ஒண்குழை மலைத்து (79:2)

மன்ற வேம்பின் ஒண்பூ வுறைப்ப (371:7)

போன்ற புறநானூற்று அடிகள் காட்டுகின்றன.

வேம்பின் இலை, பட்டை, விதையிலுள்ள தைலம் போன்றவை பலவகையான பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்தும் திறன் உள்ளவை எனவும், ஸ்டெப்டொமைசின் (Streptomycin) போன்ற மருந்துக்கும் கட்டுப்படாத காசநோய்க் கிருமிகள் வேப்ப எண்ணெய்க்குக் கட்டுப்படுவதாகவும் இன்றைய ஆய்வு அறிக்கைகள் சொல்லுகின்றன. லக்னோவிலுள்ள கிங் ஜார்ஜ் மருத்துவக் கல்லூரியில் செய்த ஆய்வின் மூலம் வேப்பிலை பலவித தோல் நோய்களையும் கட்டுப்படுத்துவதோடு, குடல் புழுக்களையும் அகற்றும் ஆற்றல் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. வேப்பிலையிலுள்ள குயிர் சிடின் என்னும் சத்து பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது என்று தற்காலத்தில் கண்டறியப்பட்டுள்ளது. அதே வேளையில், வேம்பின் இம் மருத்துவக் குணங்களையும், மருத்துவ முறைகளையும் பன்னெடுங்காலத்திற்கு முன்பே தமிழர் அறிந்திருந்தனர் என்பதே உண்மை. மரபுவழி பெற்ற மருத்துவ அறிவால், கிராமங்களில் இன்றும் குடற் புழுக்களை அழிக்க வேப்பம் பட்டைச் சாறு அருந்தப்படுவதைக் காணலாம்.

 வேம்பையும் கடுகையும் பற்றிக் குறிப்பிடுமிடுத்து,

                    வேம்பும் கடுவும் போல வெஞ் சொல்  (தொல்.செய்.111 

என்கிறது தொல்காப்பியம். இந்நூற்பாவிற்கு, முற்பருவத்துக் கைத்துப் பிற்பருவத்து உறுதி பயக்கும் வேம்பும் கடுவும் போல வெய்யவாய சொல்லினைத் தடையின்றிப் பிற்பயக்குமெனக் கருதிப் பாதுகாத்து' என்று பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் உரை வகுக்கின்றனர். 

            ஐயவி

             வேம்பு, கடுகு போலவே ஐயவி(வெண்சிறுகடுகு) என்ற பொருளையும் காயம்பட்ட வீரர்களைக் குணப்படுத்தும் மருந்தாகப் பயன்படுத்தியதைக் காணமுடிகிறது. ஐயவியிலிருந்து புகையினை உண்டாக்கி நோய் எதிர்ப்புப் பொருளாகப் பயன்படுத்தியுள்ளனர். இச்செயல்பாடுகளை,

                 நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும் (புறம்.296:2)

 என்றும்,ஐயவி சிதறி’(புறம்.281:4) என்றும் இலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன. மேலும், ஐயவி பற்றிய செய்திகளைப் சங்க இலக்கியங்களின் பல பாடல்கள் பதிவுசெய்துள்ளன. 

            மிளகு

 வேம்பு, வெண்சிறுகடுகு, இரவம் இவைகள் போல, மிளகும் மிகச்சிறந்த மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மருந்துப் பொருட்களில் மிளகு முதலிடம் பெறுகிறது. 

யவனர் தந்த வினைமான் நன்கலம்

பொன்னொடு வந்து கறியொடு பெயரும்

வளங்கெழு முசிறி (149:9-11) 

என்கிறது அகநானூறு. யவனர்கள், அழகிய வேலைப்பாடமைந்த கலங்களில் பொன்னைக் கொண்டுவந்து கொடுத்து, அதற்கு ஈடாக மிளகினைப் பெற்றுச் சென்றதை இப்பாடலடிகள் காட்டுகின்றன.  மிளகின் மருத்துவ குணங்களை யவனர்கள் அறிந்ததாலேயே பண்டமாற்றில் பொன்னிற்கு ஈடாக மிளகைப் பெற்றனர் என்பது தெளிவு.

            தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட மருந்துப் பொருட்களைக் குறிப்பிடுமிடத்து, ‘பழந்தமிழ்ப் பட்டினத் துறைமுகங்களிலிருந்து ஏற்றுமதியான பொருள்களில் குறிப்பாக, இலவங்கம், மிளகு, இஞ்சி, அரிசி, ஏலம், தேக்கு, கருங்காலி, நூக்கு, சந்தனம், யானைத்தந்தம் போன்றவை குறிப்பிடத் தகுந்தவை. இவற்றுள் மிளகு, இஞ்சி ஆகிய இரண்டும் மருந்துப் பொருள்கள். மருந்துக்கென்றே பெறப் பெற்றவை. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘இப்போ கிரேசு' (Hippocrates) என்ற புகழ் பெற்ற கிரேக்க மருத்துவர் இந்திய மருத்துவ முறைகளையும், மருந்து வகைகளையும் கையாண்டு வந்துள்ளார். மிளகை இந்திய மருந்து' என்றே குறிப்பிட்டிருக்கிறார். பண்டைய தமிழர் உணவுப் பொருள்களில் ஒன்றான நல்லெண்ணெயின் பயனையும் அவர் அறிந்திருக்கிறார்’ என்கிறார் முனைவர் இரா வாசுதேவன் (தமிழில் மருத்துவ இலக்கியங்கள்). இவற்றின்வழி, தமிழக மருந்துப் பொருள்கள் உலகப் புகழ் பெற்றவையாகத் திகழ்ந்ததையும், ஏற்றுமதி வணிகத்தில் முக்கியப் பொருள்களாகி, பண்டமாற்று முறையில் பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்ததையும் அறியமுடிகிறது. 

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி ஆகிய மூன்றும் மருந்துகளின் பெயர்களால் தலைப்பினைப் பெற்றிருப்பது சிறப்பு. மேலும், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பலவற்றிலும் உடல் நலம் குறித்த கருத்துகளும், மருந்து, மருத்துவர், நோய்கள் குறித்த செய்திகளும் காணப்படுகின்றன. உடல்நலக் குறைவு மனநலத்தையும் பாதிக்கும் என்பதால் உடல் நலத்தைப் பேணவேண்டியதன் தேவையை வலியுறுத்தினர். அவ்வகையில், உடலின்கண் மூப்பு தோன்றின் இளமை நலம் கெடும் என்பதை,

                                         ----------- மெய்த்தாக

                                       மூத்தல் இறுவாய்த்த                     (நாண்.19:1-2) 

என்று அறிவுறுத்தினர். மேலும், குழந்தைகளுக்கு நோய் வந்தால் மிகுந்த துன்பத்தைக் கொடுக்கும் என்பதை,

குழுவிகள் உற்ற பிணி இன்னா (இன்னா.35:3)

என்று சுட்டினர்.

                                    பொய் சிதைக்கும் பொன்போலும் மேனியை           (நாண்.23:2) 

என்று, தீய ஒழுக்கத்தினால் ஏற்படும் நோய்(உடற்தேய்வு நோய்) பொன் போன்ற அழகிய மேனியைப் சிதைக்கும் என்று எச்சரிக்கப்பட்டது. இந்நோய் பெரும்பிணி எனப்பட்டது. கள்வரைவிட அஞ்சக்கூடிய, உடம்பைக் கரையச் செய்து வருத்துகின்ற தீராத நோய் இது என அடையாளப்படுத்தப்பட்டது(எயிட்ஸ் என்னும் உயிர்க்கொல்லி நோயாக இருக்கலாம்). இதனை,

 

----------------- உருவினை

                             உள்ளுருக்கித் தின்னும் பெரும்பிணியும் (18:2-3) 

என்கிறது திரிகடுகம். 

இதைப்போலவே, கொடிய நோய்களாக, சிக்கர் (தலை நோயுடையவர்);       திதடர்(பித்தர்); சிதலை (புற்று-சிதலைபோல் வாயுடையார்-வாய் புற்று); துருநாமர்(மூலநோய்) ஆகியோர் சுட்டப்பட்டனர். இவற்றிற்கு வினைப்பயன் காரணமாகச் சொல்லப்பட்டது. மேலும், பிணியுடையோர்க்கு உலகத்தில் இன்பம் எதுவுமில்லை என்றும்(சி.மூ.84), இளமையில் நோயின்றி வாழ்தல் நன்று என்றும் வலியுறுத்தப்பட்டது (நாலடி.219:1-2). 

இசை மருத்துவம்

 இசையால் உண்டாகும் ஒலியலைகள் மூளையில் தூண்டுதலை உண்டாக்கி,  உடலில் உள்ள உயிர்வேதி நிகழ்வுகளில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்கிறது இன்றைய அறிவியல். அதனாலேயே, திணைவாழ்விற்கு ஏற்றவாறு குறிஞ்சிப்பண், முல்லைப்பண், மருதப்பண், நெயதல் பண், பாலைப்பண் எனப் பல்வேறு இசை வடிவங்களையும், பல்வேறு இசைக்கருவிகளையும்  கொண்டு, பொழுதிற்குத் தக்கவாறு காலை, மாலை என இசைத்து மகிழ்ந்தனர் பண்டைத் தமிழர். இந்த இசை நுணுக்கங்களைப் பல்வேறு நிலைகளில் பயன்படுத்தி வந்ததைப் போன்று மருத்துவத்துறையிலும் பயன்படுத்தியுள்ளனர். 

------ ------ ஆம்பல் ஊதி

                             இசைமணி எறிந்த காஞ்சி பாடி

                             நெடுநகர் வரைப்பின் கடிநறை புகைஇக்

                             காக்கம் வம்மோ காதலந் தோழி  (புறம்.281:4-7) 

என்ற அடிகள், இயற்கை மருத்துவத்தோடு இசை மருத்துவத்தையும் ஒருங்கே சுட்டுகின்றன. இதில், போரில் ஈடுபட்டு புண்பட்டுக் கிடக்கும் வீரனின் உயிரினைக் காக்க, ஐயவியைப் பயன்படுத்துவதோடு, ஆம்பல் என்னும் குழலை ஊதியும், காஞ்சிப் பண்ணை இசைத்தும் இசைமருத்துவம் செய்ததை அறியமுடிகிறது. மேலும்,  இசை மருத்துவம் பற்றிய செய்தியை, 

                              தீங்கனி இரவமொடு வேம்புமனைச் சேரீஇ

                             வாங்குமருப்பு யாழொடு பல்லியம் கறங்க

                             காக்கம் வம்மோ காதலந் தோழி          (புறம்.281)

என்றும்,

                             வேம்புசினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும்

                             நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்

                             எல்லா மனையும் கல்லென் றவ்வே      (புறம்.296:1-3)

என்றும் காட்டுகிறது புறநானூறு. இவற்றில், மகளிர், போரில் புண்பட்ட தம் கணவன்மார்களின் காயங்களை ஆற்றுவதற்கு யாழ், பல்லியம் போன்ற கருவிகளை இசைத்ததும், ‘காஞ்சி’ என்ற இசை வகையினை பாடியதும் அறியப்படுகிறது. இம் மருத்துவ முறை போரில் காயமடைந்த வீரர்களின் இல்லங்கள்தோறும் செய்யப்பட்டதால் அனைத்து இல்லங்களிலிருந்தும் இசையொலி எழும்பியதாகப் பாடல் காட்டுகிறது. மேலும், இந்த இசைமருத்துவ முறையினை இல்லத்துப் பெண்களே கற்றிருந்தனர் என்பதும் இதில் புலப்படுகிறது. அதேபோல, கொடிச்சியர், வரிப்புலி மார்பைக் கிழித்தது போல் போர்க்களத்தில் ஏற்பட்ட வீரர்களின் விழுப்புண்ணை ஆற்றுதற்கு இசைப்பாடலை இசைத்தனர் என்று மலைபடுகடாமும் குறிப்பிடுகிறது. 

நுண் மருத்துவம் 

இயற்கை மருத்துவம், இசை மருத்துவம் என்பதோடு, மருத்துவத் துறையின் நவீனத் தொழில்நுட்பமான ‘அறுவை மருத்துவம்’ (Operation), புண்ணிற்குப் பஞ்சு வைத்துக் கட்டுபோடுதல்  போன்ற செயல்பாடுகளுடன் கூடிய நுண் மருத்துவ முறைகளும் பழந்தமிழகத்தில் இருந்துள்ளன.           

அறுவை மருத்துவ முறையினைக் குறிப்பிடும் பதிற்றுப்பத்து, ‘போர்க்களத்தில் காயம்பட்ட வீரர்களின் மார்புப் புண்களுக்குத் தையல் போடும்போது  அப்புண்ணின் குருதியிலே மூழ்கி மறைந்து மேலெழும் நெடிய வெண்மையான ஊசியானது, நீரில் மூழ்கி மேலெழும் சிரற்பறவையின் அலகு போன்று உள்ளது’ என்கிறது. இதனை,

                     மீன்றேர் கொட்பிற் பனிக்கயம் மூழ்கிச்

                             சிரல்பெயர்ந் தன்ன நெடுவள் ஊசி

                             நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின் (பதிற்று.42:2-4) 

என்ற அடிகள் காட்டுகின்றன. இதில், சிரற்பறவை நீரில் மூழ்கி  மேலெழும்போது, அதன் அலகில் மீன்கள் மாட்டி இருபுறமும் தொங்குதல் போல,  காயங்களில் ஆழ்ந்து மேலெழும் ஊசியின் காதில் தையல் இழை தொங்குதல் ஒப்புமையாகக் காட்டப்பட்டுள்ளது.

 மேலும், மருத்துவம் முதலிய பல்வேறு துறைகளின் பயன்பாட்டிற்கான வெவ்வேறு வகையிலான ஊசிகள் உருவாக்கப்பட்டிருந்ததையும் அறிய முடிகிறது. தோல்தொழிலில் பயன்படுத்தப்படும் கூரிய ஊசிகள் (பதிற்று.7474:13,14), செந்நாயின் பற்கள் போல் விளங்கிய, அரத்தால் அராவப்பட்ட வலிமையான ஊசிகள் (அகம்.199:8) போன்றவற்றோடு, அறுவை மருத்துவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட நுண்மையான ஊசிகளையும் காணமுடிகிறது.  மருத்துவத் துறையில் அறுவை மருத்துவத்திற்குப் பயன்படும் வண்ணம் உருவாக்கிய நுண்மையான நெடிய ஊசியை, நெடுவள் ஊசி என்கிறது பதிற்றுப்பத்து (42:3).

 அதேபோல, புண்ணுக்கு மருந்துவைக்கும்போது புண்ணின்மேல் பஞ்சு வைத்துக் கட்டும் இக்கால நவீன மருத்துவமுறை பழங்காலத்திலேயே இருந்ததை, 

பஞ்சியும் களையாப் புண்ணர் (353:16) 

என்னும் புறநானூற்று அடி உறுதி செய்கிறது. இக்காட்சி பாசறையின்கண் என்பதால், தற்போது இராணுவ மருத்துவமனைகள் இயங்குதல் போல, அக்காலத்திலும் இராணுவ மருத்துவமனைகள் அமைக்கப்பட்டிருந்ததையும், அம் மருத்துவமனைகளில் அறுவை மருத்துவம் அறிந்த சிறப்பு மருத்துவரும், அதற்கான தொழில்நுட்பங்களும், கருவிகளும்  இடம்பெற்றிருந்ததையும் அறிய முடிகிறது. 

மேலும், போர்க்களத்தில் காயம்பட்டு பாசறையின்கண் இருக்கும் வீரர்களின் புண்களுக்கு,  கையில் விளக்குகளை ஏந்திக்கொண்டு ஆராய்ந்து மருந்திடும் மருத்துவரை,

                     மண்டுஅமர் அழுவத்து எல்லிக் கொண்ட

புண்தேர் விளக்கின் தோன்றும்          (111:13-14) 

என்று காட்டுகிறது அகநானூறு. அதேபோல, நவீன சிகிச்சை முறையால், போர்க்களத்தில் உடம்பில் பெற்ற விழுப்புண்களின் வடுக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து, பழைய தோற்றத்துடன் காணப்பட்ட வீரனை,

இறையுறு விழுமம் தாங்கி, அமர்அகத்து
இரும்புசுவைக் கொண்ட விழுப்புண்நோய் தீர்ந்து
மருந்துகொள் மரத்தின் வாள்வடு மயங்கி

‘வடுவின்றி வடிந்த யாக்கையன்’ ------------ (180:2-5)

 என்ற புறநானூற்று பாடலடிகள் காட்டுகின்றன. ‘போர்க்களத்தில் விழுப்புண்களை ஏற்றுக் கொண்டதால்,  மருந்துக்காக பல இடங்களில் வெட்டப்பட்ட அடிமரம்போல், உடலெல்லாம் வடுக்கள் நிறைந்திருந்தவன் தற்போது வடுக்கள் மறைந்து அழகிய உடலுடையவனாகக் காட்சியளிக்கிறான்’ என்பது இதன் பொருள். இப்பாடலடிகள், மருந்து மரத்தையும்  மருத்துவ முறைகளால் வடுக்கள் மறைந்த வீரனையும் ஒருங்கே காட்டுகின்றன. 

மருந்து பெறும் முறை (சேகரித்தல்) 

      இயற்கை மருத்துவத்திற்குப் பயன்படும் தாவரங்களைப் பட்டறிவால் அறிந்து வைத்திருந்தனர் பழந்தமிழர். தாவரங்களுக்கு உயிரும் ஓர் அறிவும் உண்டு என்பது தொல்காப்பியர் கூற்று (ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே - மரபியல்). அவ்வகையில், உயிரும் அறிவும் உள்ள தாவரங்களிலிருந்து மருந்தைப் பெறுவதிலும் சில வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. இதனை, 

            மரம்சா மருந்தும் கொள்ளார் மாந்தர்  (226:1) 

என்ற நற்றிணை பாடலடியில் காணமுடிகிறது. அதாவது, உயிர்களுக்கு ஏற்படுகிற பிணிகளைப் போக்குவது மருந்து மரத்தின் இயல்பு. ஆனால், பிணியைப் போக்குகிறது என்பதற்காக மரத்தை வேரோடு பிடுங்கிப் பயன்படுத்திவிடக் கூடாது. அப்படிச் செய்துவிட்டால் மரம் சாவதோடு, எதிர்காலத் தேவைக்கும் இல்லாமல் போகும் என்று, மருந்து கொள்ளுதலிலும் அறநோக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவர் 

          சங்க இலக்கியங்கள், மருத்துவ முறைகள் குறித்தும், மருந்துப் பொருட்கள் குறித்தும், மருத்துவன் இயல்பு குறித்தும் சுட்டிச் சென்றிருக்கின்றன. ஆயினும், சங்க இலக்கியங்களின் தொடர்ச்சியாகவும், பிழிவாகவும் காணப்படும் திருக்குறளில் மருந்து, மருத்துவம், மருத்துவன் இயல்புகள், நோய், நோய்க்கண்டறியும் முறைகள், நோயாளியை மருத்துவன் அணுகும் முறைகள், நோயாளிக்குத் துணை செய்வோர், நோயில்லா வாழ்க்கை, உணவு பழக்கம் என மருத்துவத்துறை குறித்தும் உடல் நலம் குறித்தும் விரிவாகவே பேசப்பட்டுள்ளதை அறிகிறோம். 

அக்காலத்தில் மருத்துவர், அறவோன்’ (நற்.136), ‘மருத்தன்’, ‘மருத்துவன்’ (கலி.17:20,21; 137:24,25; புறம்.173:11) என அழைக்கப்பட்டனர். தொல்காப்பியர் ‘நோய் மருங்கு அறிநர்(தொல்.அக.192) என்கிறார். வள்ளுவர் ‘கற்றான்’ (குறள்.949), ‘தீர்ப்பான்’ (குறள்.950) என்று குறிப்பால் சுட்டுகிறார். கற்றான் என்பது மருத்துவ நூல்களைக் கற்றுத் தேர்ந்தவன் என்பதையும், தீர்ப்பான் என்பது நோயினைத் தீர்க்கும் மருத்துவ அறிவு பெற்றவன் என்பதையும் குறிக்கும். 

மருத்துவரின் இயல்புகளும் இலக்கியங்களில் சுட்டப்படுகின்றன.  மருத்துவர் என்பவர், நோயுற்றவர் வேட்கைகொள்ளும் அனைத்தையும் வழங்காமல், நோயின் தன்மைக்கு ஏற்ப மருந்துகளை ஆய்ந்துக் கொடுத்து நோயினைக் குணப்படுத்தும் தன்மை வாய்ந்தவராக இருந்ததை,  

அரும்பிணி உறுநர்க்கு, வேட்டது கொடாஅது,

மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல  (136: 2-3)

 

என்று காட்டுகிறது நற்றிணை. அதேபோல, நோய்க்குத் தகுந்த நன்மருந்தினை ஆய்ந்து கொடுத்து,  உடலைப் பிணியிலிருந்து காத்து நன்மைபுரியும் மருத்துவரை, 

                             .... யாக்கையுண் மருத்துவ னூட்டிய    

                             மருந்துபோன் மருந்தாகி (17:19-20)

என்று கலித்தொகையும் சுட்டுகிறது. 

முதலில் நோய் இன்னதென்பதை ஆராய்ந்து, நோயின் காரணம் எது என்பதை அறிந்து, அதனைத் தணிப்பதற்குரிய வழிகளைக் கண்டு, அந்த வழிகளையும் நோயாளியின் உடலுக்குப் பொருந்தும் வகையில் மேற்கொள்ள வேண்டும் என மருத்துவத்திற்கான இலக்கணத்தை வகுப்பார் வள்ளுவர். இதனை,

 

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

                             வாய்நாடி வாய்ப்பச் செயல் (குறள்.948) 

என்பதில் அறியலாம். மேலும், மருத்துவன் நோயுற்றவனின் வயதளவையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்தே செயல்பட வேண்டும் என்பதை, 

                           உற்றான் அளவும் பிணிஅளவும் காலமும்

                             கற்றான் கருதிச் செயல்    (குறள்.949) 

என்று குறிப்பிடுகிறார். இம்மருத்துவத் துறையில் மருந்தாளும் செவிலியும் முக்கிய இடம் பெறுகிறார். நோய் குணமடையும் தன்மையானது, நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, அருகிலிருந்து காலம் தவறாமல் மருந்தைக் கொடுக்கும் செவிலி ஆகியோரைப் பொறுத்தே அமையும் என்பதை,

                             உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வானென்று

                             அப்பால்நாற் கூற்றே மருந்து     (குறள்.950)

என்று குறிப்பிடுகிறார். 

அதேபோல, நோயாளி மருத்துவரை அணுகும் முறையும் சுட்டப்பட்டுள்ளது. மருத்தவரிடமும், வழக்குறைஞரிடமும் உண்மையை மறைக்கக்கூடாது என்பது இன்றைய மொழி. மருத்துவர் கேட்கும்பொழுதே நோயாளி தன் நோயைச் சொல்லிவிடுதல் வேண்டும், அப்பொழுதுதான் நோயின் காரணத்தையும் நோயின் தன்மையும் அறிந்து, விரைவில் குணப்படுத்தும் மருத்துவத்தை மேற்கொள்ள முடியும். இதனை, 

                                    -------------- மருத்துவன்

                             சொல்கவென்ற போழ்தே பிணியுரைக்கும்    (77:2-3)

என்கிறது நாண்மணிக்கடிகை. 

நல வாழ்விற்கு தமிழர் வகுத்த நெறி 

மருத்துவன், மருத்துவ முறைகள், மருந்துப்பொருள்கள் என மருத்துவம் சார்ந்து பல செய்திகள் பழந்தமிழ் நூல்களில் சுட்டப்பட்டிருப்பினும்,  நல்லொழுக்கம், சீரான உணவுப் பழக்கம், இயற்கையோடு இயைந்த வாழ்க்கைமுறை போன்றவையே வளமான வாழ்விற்கு பழந்தமிழர் வலியுறுத்திய வாழ்வியல் நெறிகள். உணவே மருந்தென்பது தமிழர் கண்ட உண்மை. இவற்றைத் திருக்குறள் உள்ளிட்ட பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள் பெரிதும் வலியுறுத்துகின்றன. குறிப்பாக, உணவு கொள்ளும் முறை-உணவின் தன்மை, உறங்கும் விதம்-இடம்-திசை-முறை போன்றவை உடல்நலத்தோடு தொடர்புடையவையாகச் சுட்டப்படுகின்றன.

 உணவு உட்கொள்ளும் முறை

 படுத்துக்கொண்டும், நின்றுகொண்டும், திறந்த வெளியிலும் உண்ணுதல் கூடாது, விரும்பி அதிகமாகவும் உண்ணுதல் கூடாது, கட்டிலில் அமர்ந்தபடி உண்ணுதல் கூடாது என்கிறது ஆசாரக்கோவை (பா.23). நாவைக் காத்து, வேண்டிய அளவு மட்டும் உணவு உண்பவனுக்கு நோய்கள் வருவதில்லை என்கிறது சிறுபஞ்சமூலம். இதனை, 

                                    காத்துண்பான் காணான் பிணி (சி.மூ.8:4) 

என்பதில் அறியலாம். திருவள்ளுவரோ உணவு உட்கொள்ளும் முறையினை மிக விளக்கமாகவே எடுத்துரைக்கிறார். முறைப்படி உணவை உட்கொண்டால் மருந்து எடுக்கவேண்டிய தேவையே ஏற்படாது என்பதை, 

                                மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய

                             தற்றது போற்றி யுணின் (குறள்.942)

என்று அறிவுறுத்துகிறார். மேலும்,

                               அற்றா லளவறிந் துண்க அஃதுடம்பு

                             பெற்றா னெடிதுய்க்கு மாறு (குறள்.943)

என்று, உண்ட உணவு செரித்த பிறகு தேவையானதை ஆராய்ந்து உண்டால் வாழ்நாள் நீடிக்கும் என்றும்; உண்ட உணவானது நன்கு செரித்து, நன்றாகப் பசியெடுத்த பின்னரே முறைப்படி உணவை உட்கொள்ளவேண்டும் என்றும் (குறள்.944); உடலிற்கு மாறுபாடு செய்யாத உணவினை அளவோடு உண்டுவந்தால் பிணி அண்டாது என்றும் (குறள்.945); அளவான உணவு உட்கொள்வோருக்கு நிலையான இன்பம் இருக்கும் என்றும், அளவு மீறி உண்போருக்கு துன்பம் மிகும் என்றும் (குறள்.946,947) உணவு உட்கொள்ளும் முறைகளை வலியுறுத்துகிறார்.          

            உணவின் தன்மைக்கேற்ப உண்ணுதல்

உண்டது செரித்தபின் உண்ணுதல், அளவு மிகாமல் உண்ணுதல் என்பது போலவே, கசப்பான உணவு வகைகள் இறுதியிலும், இனிக்கும் பண்டங்கள் முதலிலும், எஞ்சியவை இடையிலும் முறைப்படி உண்ணப்பட வேண்டும் (ஆ.கோ.25.) என்பதும், உண்டபின், நீர் உட்புகாதபடி நன்றாக மூன்றுமுறை கொப்பளித்துத் துப்ப வேண்டும், நீர் குடிக்க வேண்டும், வாயை நன்றாகக் கழுவ வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படுகிறது (ஆ.கோ.25). 

உறங்கும் காலம்    

இரவில் பெரியவர்கள் குறைந்தது எட்டு மணிநேரம் உறங்கவேண்டும் என்பதும், பகல் உறக்கம் கூடாது என்பதும் இன்றைய அறிவியல் உலகில் மருத்துவர்களால் வலியுறுத்தப்படுகிறது. பகலில் உறங்கினால் உடலை நோய் அண்டும் என்னும் இக்கருத்தைப் பழந்தமிழ் நூல்களும் வலியுறுத்துகின்றன. 

பகல் பொழுதில் கண்ணுறக்கம் கூடாது என்று சுட்டுவதோடு (ஆ.கோ.29:1), நோயினை விரும்பி ஏற்றுக்கொள்பவரே பகலில் உறங்க ஆசைகொள்வார் என்பதை,

                                    ------------- பகல்வளரார்

                             நோயின்மை வேண்டுபவர்         (ஆ.கோ.57:3-4)

என்று வலியுறுத்தப்பட்டது. 

உறங்கும் திசை

          படுத்துறங்கும் நேரத்தைப் போலவே திசைகளும் நம் உடல் நலத்தோடு தொடர்புடையனவாக இருக்கின்றன என்பதைப் பழந்தமிழர் நன்கு அறிந்திருந்தனர். அதனால், எத்திசையில் தலைவைத்துப் படுக்கவேண்டும் என்பதோடு, கட்டாயம் தலைவைத்துப் படுக்கக்கூடாத திசைகளையும் சுட்டிச்சென்றனர். அவ்வகையில், மிக அதிக ஆபத்தை (நோய்) விளைவிக்கக்கூடிய திசைகளாக வடக்கும், கோணங்களும் சுட்டப்பட்டுள்ளன. இதனை,

                              கிடங்குங்கால் கைகூப்பித் தெய்வம் தொழுது

                             வடக்கொடு கோணம் தலைசெய்யார் மீக்கோள்

                             உடற்கொடுத்துச் சேர்தல் வழி  (ஆ.கோ.30)

என்பதில் அறியலாம். வடக்கிலும், வட - கிழக்கு போன்ற கோண திசைகளிலும் புவியின் காந்த சுழற்சி அதிகமாக இருக்குமென்பதும் அது அத்திசைகளில் தலைவைத்துப் படுக்கும் மனிதர்களின் மூளையின் செயற்திறனைப் பாதிக்கும் என்பதும் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட  அறிவியல் உண்மையாக இருப்பதை அறிகிறோம். 

அதேபோல இரவில் மரத்தினடியில் படுக்கக்கூடாது என்பதை,

                    இராமரமும் சேரார் (ஆ.கோ.13:2)

என்ற அடி காட்டுகிறது. தாவரங்கள் பகலில் உயிர்க்காற்றையும், இரவில் நச்சுக்காற்றையும் வெளியிடுகின்றன என்ற அறிவியலின் அடிப்படையிலேயே மேற்கண்ட முடிவு எட்டப்பட்டிருக்கும் என்பது தெளிவு. 

முடிவு

Ø  மேற்சுட்டிய சான்றுகளின் வழி, பழந்தமிழ் நூலைகளில் மருத்துவ முறைகள், பயன்படுத்தப்பட்ட மருந்துகள், மருத்துவன் இயல்பு, மருந்து பெறும் முறைகள் போன்றவை பதிவு செய்யப்பட்டுள்ளதை அறியமுடிகிறது.

 

Ø  மருத்துவன் தாமோதரன் போன்று தொழில் வகையால் மருத்துவராக இருந்துகொண்டு கவிதை பாடிய புலவரையும் சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது.

 

Ø  இயற்கையையும், இயற்கையோடு இயைந்த பொருள்களையும், இசைகளையும் மருந்துகளாக்கி இன்ப வாழ்வு வாழ்ந்தது அறியப்படுகிறது.

 

Ø  பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் மருத்துவம் குறித்தும், மருந்து வகைகள் குறித்தும் மிகுதியாகவே பேசப்படுகின்றன. திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி என்று மருந்துகளின் தன்மைகளையும் தேவைகளையும் முன்வைத்து நூல்களின் தலைப்புகளும், மருந்தின் சிறப்பால் ஆசிரியர்களின் பெயர்களும் அமைந்திருந்ததைக் காண்கிறோம். இவை, மருத்துவத்துறையின் உயர் வளர்ச்சியைக் காட்டுவதாக அமைகின்றன.

 

Ø  உடம்பை வளர்ப்பதற்கு உணவை உட்கொள்ளாமல் உயிரைப் பேணுதற்கு உணவு உட்கொள்ளும் தன்மை, முறையான உறக்கம், இயற்கையோடு இயைந்த வாழ்வியல் போன்றவை மனிதனை நோயிலிருந்து காத்து செம்மைபடுத்தும் என்று அறிவுறுத்தப்பட்டது.

 

Ø  சித்தர்களின் காலத்தில் தமிழ் மருத்துவத்தின் பயன்பாடும் ஆய்வும் சிறப்பான இடத்தில் இருந்தது. சித்தர் காலத்திற்குப் பின் தமிழ் மருத்துவம் ‘சித்த மருத்துவமாக’ இன்றும் தொடர்கிறது.

 

Ø  இதன்வழி, தொல்லியல் சான்றுகள், காலந்தோறும் பதிவுபெற்றுள்ள இலக்கியச் சான்றுகள், சுவடிக் குறிப்புகள், நடப்பில் உள்ள சித்த மருத்துவ முறைகள் போன்றவற்றை ஒருங்கே தொகுத்து, முறைப்படுத்தி, தமிழர் மருத்துவம் குறித்த முழு ஆய்வு நூலினை வெளிக்கொணர்தலும், அதன் அடிப்படையில் தமிழர் மருத்துவ முறைகளை மீட்டுருவாக்கம் செய்தலும் தேவையாகிறது என்பது பெறப்படுகிறது.

முதன்மைச் சான்றுகள் 

அகநானூறு (மூன்று தொகுதிகள்), உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை, 1990.

 கலித்தொகை மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1984.

 குறுந்தொகை மூலமும் உரையும், உ.வே.சாமிநாதையர், உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம்,  சென்னை, மூன்றாம் பதிப்பு, 2000.

 திருக்குறள், பரிமேலழகர் உரை, கழக வெளியீடு, 16ஆம் பதிப்பு, 1976.

தொல்காப்பியம் பொருளதிகாரம், நச்சினார்க்கினியர் உரை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1986.

 நற்றிணை, பொ.வே. சோமசுந்தரனார், கழக வெளியீடு, சென்னை, 1976.

 பத்துப்பாட்டு மூலமும் உரையும் (I, II), பொ.வே. சோமசுந்தரனார், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1973

 பதிற்றுப்பத்து மூலமும் விளக்க உரையும், ஔவை. துரைசாமிப்பிள்ளை, கழக வெளியீடு,   சென்னை, 1995 

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், சென்னை. 

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் மூலமும் உரையும், மீனாட்சி புத்தக நிலையம், சென்னை. 

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் மூலமும் உரையும், தொகுதி 1,2,3, முல்லை நிலையம், சென்னை. 

புறநானூறு மூலமும் உரையும், உ.வே.சாமிநாதையர், சென்னை, 1971.

 துணைமைச் சான்றுகள்

 தமிழர் கண்ட தாவரவியல், முனைவர் வே. நெடுஞ்செழியன், உலகத் தமிழாராய்ச்சி    நிறுவனம், சென்னை. 

தமிழில் மருத்துவ இலக்கியங்கள் (முனைவர் பட்ட ஆய்வு), இரா. வாசுதேவன், சென்னைப் பல்கலைக்கழகம், 2002. 

தொலைநோக்கு, ஆ. மணழவகன், ஐயனார் பதிப்பகம், சென்னை 2010. 

பழந்தமிழர் தொழில்நுட்பம், ஆ.மணவழகன், ஐயனார் பதிப்பகம், சென்னை, 2010.


தமிழியல்

www.thamizhiyal.com