நூல் அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நூல் அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 11 நவம்பர், 2024

புளிச்சாங்கொடி - திணை வாழ்வைத் தேடும் கவிதைகள்… - இரா. பச்சியப்பன்

 

 



திணை வாழ்வைத் தேடும் கவிதைகள்

கவிஞர் இரா.பச்சியப்பன்

07.03.2024

வாழ்க்கை என்பதை என்னவாகப் புரிந்துகொள்வது? நிகழ்வுகள் தோற்றுவிக்கும் உணர்வுகளையும் அது தந்த நினைவுகளையும்தான் நாம் வாழ்க்கை என்று புரிந்துகொள்கிறோம் எனத் தோன்றுகிறது. நம்மினும் படைப்பாளன் உணர்வுக் கூர்மையுடையவன். இந்த உணர்வுகளின் ஆழத்தைத் தரிசிக்கிறான். மானுடத்திற்குப் பொதுவான உணர்வுகளாக  அவற்றை இரசவாதம் செய்கிறான்.

இங்குதான், உலகியல் வழக்கு, நாடக வழக்கு ஆகியன விசித்திரமான வேதியியல் வினைபுரிந்து, புலனெறி வழக்காகப் பாடலுள் ஜீவன்கொண்டு கண்மலர்ந்துத் துடித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பாடலுள் நாம் காண்பது என்ன? படைப்பாளன் அனுபவத்தையா, நமது அனுபவத்தையா? அனுபவம் நிலமும் பொழுதும் தருவதுதானே. இவற்றின் கூட்டுக் கலவையால் நம்மைச் சுற்றியுள்ள, நம்மோடு பிணைப்பைக் கொண்டுள்ள கருப்பொருள்களின் ஊடாகத்தானே இந்த அனுபவத்தில் திளைக்கிறோம்.

எனவே, படைப்பாளன் தனது படைப்பின் உரிப்பொருள்களை முதற்பொருளின் அடித்தளத்தில் கருப்பொருள்களின் துணையோடு எண்ணற்ற இசைக் கோர்வையாக, படைப்பாக நமக்கு அள்ளி வழங்குகிறான். முதற்பொருளோடும் கருப்பொருளோடும் பிணைந்திருக்கும் நமக்கு அது அனுபவமாகக் கேட்கிறது.

இந்தப் படைப்பை ஆழ உணர்ந்த நம் முன்னோன் திணைக் கோட்பாடாக இலக்கணப்படுத்தியுள்ளான். நம் மண்ணைப் பாடுவது எனில் ஊர்ப்புறத்தைப் பாடுவது மட்டும் எனலாகாது; நம் நிலத்தில் விளையும் அத்தனை அனுபவங்களையும் பாடுவது ஆகும். அடிப்படையில் அவை இரண்டு கூறுகளை உடையவை என்று தொல்காப்பியர், தன் முன்னோர் வழிநின்று வகைப்படுத்தித் தந்திருக்கிறார். அகமென்றும் புறமென்றும் வகை கண்டு, அவற்றுள் எல்லா அனுபவங்களையும் அடக்க முற்பட்டிருக்கிறார். இது மானுடப் பொதுமையானது. இது, தமிழர் கண்ட இலக்கியக் கோட்பாடு. 

சங்க இலக்கியங்களில்தாம் திணைக் கோட்பாட்டை முன்வைத்து அதிகமாகப் பேசுகிறோம். ஏனெனில், அவை தமிழர்  வாழ்வை ஆழமாக வெளிப்படுத்துகின்றன. அப்படி வெளிப்படுத்தும் போக்கு பிற்காலங்களில் மங்கி, சிலபோழ்து முற்றிலும் அயல்நெறிக்கு ஆட்பட்டுள்ளது. தொண்ணூறுகளில் மீண்டும் அந்த எழுச்சி தொடங்குகிறது. இதனைத் தீவிரமாகத் தொடங்கிவைத்தவர் கவிஞர் பழமலய். அவரைத் தொடர்ந்து இளம் படைப்பாளிகள் பலர் தொகைதொகையாய் எழுத வந்தனர். அவ்வகைக் கவிஞருள் தன்னையுணர்ந்து, படைப்புச் செயல்பாட்டில் தீவிரமுள்ளவர் கவிஞர் ஆ. மணவழகன். இவர் ஏற்கெனவே, ‘கூடாகும் சுள்ளிகள்எனும் கவிதை நூலைத் தந்தவர். புளிசாங்கொடிஇவரின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு.

காலத்திற்கேற்றவாறு விரிவாக்கம் செய்யப்படாத எதுவும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அடங்கிவிடும் ஆபத்து உள்ளது. திணைக் கோட்பாடு என்பது, திணை வாழ்க்கைமுறை சிதையாமல் இருந்த சங்ககாலத்தில் தோன்றிய கவிதைகளுக்கு மட்டுமானது என்று தோன்றவில்லை. எல்லையற்ற வாழ்வைத் தமது மண்ணின் தன்மைக்கேற்பப் பாடும் எல்லாக் காலத்திற்குமானது எனவும் கொள்ளலாம்.

நிலமும் காலமும் ஆகிய முதற்பொருளும் அது தோற்றுவிக்கும் கருப்பொருளும் தொண்ணூறுகளுக்குப் பின்வந்த கவிதைகளில் தீவிரமாக இயங்குகின்றன. நவீனப் பாடுபொருள்களைக் கொண்டிருந்தாலும் அடிப்படையில் அவை அகம் புறமாகவே வெளிப்படுகின்றன.

கவிஞர் மணவழகனின் இத்தொகுப்பில் அகத்திணைக் கவிதைகளும் புறத்திணைக் கவிதைகளும் கலந்தே உள்ளன. எனினும், புறத்திணைக் கவிதைகளே மிகுதியாக உள்ளன என்பதை எப்படிப் புரிந்துகொள்வது. அகவாழ்க்கையினும் புறவாழ்க்கை நம்மை அலைக்கழிக்கிறது எனலாமா? இவற்றிலும், காஞ்சித் திணைக் கூறுகள் மிகுந்திருப்பதை எவ்வகையில் புரிந்துகொள்வது. நமது வாழ்க்கைக் கண்ணீரால் புதைந்துள்ளது எனக் கொள்ளலாமா? வாகைத் திணையும் பாடாண் திணையும் சிலக் கவிதைகளில் வெளிப்படுகின்றன. இன்னும் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதற்கான அல்லது வாழவேண்டியத் தேவைக்கான ஆதாரமாக இவை உள்ளன என்று கொள்ளலாமா? இவ்வகையில்தான் இத்தொகுப்பை நாம் மீண்டும் மீண்டும் வாசிக்கிறோம்.

இத்தொகுப்பில் உள்ள ஒப்புசான் மலைஎன்ற கவிதையை எடுத்துக்கொள்வோம். முதுகுடி மகளிரின் திறல்மிகு வாகைஎன்பதை, ச.பாலசுந்தரம் மனைநிலை வாகைஎன்று பாடங்கண்டு உரை கண்டவாறோ, ‘அனை நிலை வாகைஎன்று இளம்பூரணர் பாடங்கொண்டு, ‘பிறவும் அன்னஎன்று உரை கண்டவாறோ இக்கவிதையை நோக்கலாம். காமம் நீத்த பாலினாலும்என்று வாகைத் திணையின் துறையாக இக்கவிதைக்குத் துறை வகுக்கலாம்.

இன்பம் துன்பம் எதுவாயினும்

அடைக்கலமாவது பாட்டியிடமும்

ஒப்புசான் மலையிடமும்தான்

 என்று இக்கவிதையில் வருபவர் பேசுகிறார். அப்போது ஒப்புசான் மலையும் பாட்டியும் ஒன்றாகவே இணைந்து, நம்முன்னே பெரும் ஆகிருதியாய் நிற்கின்றது.

காயாகக் கனியாகக்

கொடியாகத் தழையாக

ஏதாவதொன்றை எனக்காக வைத்து...

என்று அந்த மலையின் கருணை வரிகளில் விரிகிறது.

வளமனைத்தையும் இழந்து நின்ற

பெருங்கோடையிலும்...

 

ஒப்புசான் மலையின் அடிமடியில் ஏதேனும் ஒன்று பசியாற்றும். வறட்சியின்போதும் நாடிவரும்  உயிர்களுக்காக ஏதேனும் கொடுத்துப் பசியாற்றும் இதன் அடிவாரம் பாட்டியின் அடிமடியைப் போன்றது.  அடிமடிஎன்று கவிஞன் ஆளும் சொல் மிக முக்கியமானது. இங்குதான், ‘அருளொடு புணர்ந்த அகற்சியானும்என்று தொல்காப்பியன் கண்டது நினைவுக்கு வருகிறது அல்லது முதுகுடி மகளிரின் திறல் வெளிப்படுகிறது.

பாட்டியின் அடிமடி ஓர் அமுத சுரபி. பாட்டியின் வயிறு காய்ந்திருந்தாலும் பேரப்பிள்ளைகளுக்கு அடிமடி நிறைந்தே நிற்கும். நைந்து கிழிந்தப் பழம்புடவையின் ஒருமுனையில் ஏதேனும் ஆகாரம் முடிச்சிட்டு, அடிமடியில் செருகியிருக்கும். அது பார்ப்பவர்க்குத் தெரியாது. பேரனின் பசியறிந்து, கருணைமிகு கரங்களுக்கு வெளிப்படும். மடியவிழ்க்கும் முன்னே பேரப்பிள்ளைகள் கரங்கள் பறிப்பதுமுண்டு.

பாட்டியினதும் ஒப்புசான் மலையினதும் அருளைவிட்டு விலகி, வாழ்க்கைப் பாட்டிற்காக நெடுந்தொலைவு வந்துவிட்டான் பெயரன். வந்த இடத்தில் குறிஞ்சி நிலத்திற்கு விளக்கம் சொல்லியாகவேண்டிய நிலை. அப்போதெல்லாம் நினைவிலாடுகிறது ஒப்புசான் மலை. குறிஞ்சி வாழ்க்கை வாழ்ந்தவன் வெற்று விளக்கத்தில் திகைத்து நிற்கிறான். ஏனெனில், ஒப்புசான் மலை திடுதிப்பென அருகில் நிற்கிறது. இது ஒரு பிரமைதான். ஆனால் மனம் குறிஞ்சி நிலத்தில் அலைகிறது. ஒப்புக்கு விளக்கம் சொன்னால் ஒப்புசான் மலை விடுமா?

இக்கவிதையில் நிலம், பொழுது துல்லியமாக உள்ளது. குறிஞ்சி நிலத்தைப் பேசிவிட்டு வாகைத் திணைக் கவிதை என்கிறீர்களே என்று கேட்கத் தோன்றும். வெட்சிதானே குறிஞ்சியது புறனேஅல்லவா. வாகை எல்லாப் புறத்திணைக் கூறுகளையும் உள்ளடக்கியது ஆகும். தத்தம் கூற்றைப் பாகுபட மிகுதிப்படுத்தல் என்பஎன்கிறார் தொல்காப்பியர். ஒப்புசான் மலையினது, பாட்டியினது அருள் வாழ்க்கையை விதந்து பேசுகிறது இக்கவிதை.

"கொற்றவை கண்விழிக்கிறாள்என்ற கவிதை சமகால அரசியலை வெளிப்படுத்தும் உச்சம். திணைவாழ்வை, அதன் மேன்மையை, திணைக்குடிகளின் விழுமியங்களைப் பேசுகிறது. உட்பகையால் சிதைந்தக் கோட்டையின் அவலத்தைப் பாடுகிறது. தமிழன் கண்ட விழுமியத்தை வீழ்த்த நடந்த சூழ்ச்சிகளை வெளிப்படையாக விவாதிக்கிறது. நிறங்களின் குறியீட்டோடு அறிமுகமான தத்துவங்கள் எல்லாம் எப்படி எம் மக்களுக்கு எதிராய் நிற்கின்றன என்று புரியவைக்கிறது.

இந்தக் கவிதையில் இயங்குகிற காலம் - பொழுது தற்காலம் ஆகும். காலத்தை விரிவாக்கம் செய்து  இக்கவிதையை வாசித்தால் பல நுட்பங்கள் வெளிப்படுகின்றன. இதில்வரும் கொற்றவை இக்காலத்தைப் பாலை எனப் புரிந்துகொள்ள உதவுகிறாள். பல ஊழி கண்மூடிக்கிடந்தவள் கண்திறந்து பார்க்கிறாள். எல்லாம் வறண்டு கிடக்கிறது. வாகைதானே பாலையது புறனேஎன்கிறார் தொல்காப்பியர். நமது மேன்மைகளைச் சொன்னால்தான் இளம் தலைமுறைக்கு வீறுணர்ச்சி எழும். வாழ்க்கை மீளும்.

மானாவாரிகவிதை அற்புதமான குறிஞ்சித்திணைக் கவிதை. தலைவியின் சொற்கள் தினையாய் விளைந்து கிடக்கின்றன. அருவடைக்கேனும் வருவாள் எனத் திணைப்புனத்து அருகில் தலைவன் காத்துக்கிடக்கிறான்.

நடவுவயல் அழித்து வழித்தடம் அமைக்கும் கொடூரத்தை, கால்களில் ஒட்டியிருக்கும் புழுதி மண்ணை, எங்கு வீசினும் வேர் பிடிக்கும் தேன்பசலையை, நாம் கண்ட ஐவன நெல்லை, ஒப்புசான் மலையில் அடர்ந்து செழித்திருக்கும் செடி, கொடிகளை, தூய்மை இந்தியாவின் போலிமுகத்தை, விவசாயியின் பிள்ளை என நினைக்கவும் கூச்சப்பட்ட முதல் தலைமுறையை, தீநுண்மிச் சூழலை, சென்னையின் பெருவெள்ளத்தை, இரவல் புறாக்களுக்கு உணவிடும் அயல்வாழ்வை... என நமது வாழ்வின் அத்தனைப் பக்கங்களையும் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் பேசுகின்றன.

செய்யுளை நாடுங்காலை நமக்குத் திணை வெளிப்படுவது போல பிற அழகியல் கூறுகளும் இத்தொகுப்பில் மிளிர்கின்றன. குறிப்பாக, உள்ளுறை உவமம். கருப்பொருள் வாயிலாகத் தாம் சொல்லவந்ததை நமக்கு ஆழ உணர்த்திச் செல்லும் பாங்கு அலாதியானது.

இடனறிஎன்ற கவிதையை இங்குக் காணலாம். நம்பி வளையை விட்டு வெளியே வருகிறது நண்டு. சிறு நரியின் சூழ்ச்சி அது அறியாது. விடிந்தபோது பார்த்தால் சில்லு சில்லாய் நொறுங்கிக் கிடக்கிறது நண்டு.

நண்டு என்பது யாது? யார்? வாழ்வை ஏமாற்றி நொறுக்கிய நரி எது? யார்? இப்படிப் பல கவிதைகளில் கருப்பொருள் வழியாக உள்ளுறை உவமம் பொதியப்பட்டுள்ளது. 

          வலம் இடம்

        முறைமாறிப்

        பூட்டிக்கொண்டு

        சால் பிடிக்கும்

        வாகு அறியாமல்

        தவித்து நிற்கின்றன...

        மணமுறிவு மன்றங்களில்

        மாநகர எருதுகள்!

என்பது ஒரு சிறு கவிதைதான். ஆனால், தற்காலத்தில் காணலாகும் மிகப்பெரிய சமூக அவலத்தை உள்ளுறை உவமமாகச் சுட்டி நிற்கிறது. 

நிழல் தின்று

செரித்துப் பருத்த

கடுங்கோடை ஞாயிற்றின்

வெண்கதிர்கள்

உன் சொற்கள்!

                              ***

உதிர்ந்த இதழ்களைச் சேகரித்து

ரோசாப்பூ தைக்க எண்ணும்

அப்பாவிச் சிறுமியாய்...!

                             ***

மழைநீர் வாய்க்கப்பெற்ற

மானாவாரியாய்...!

 போன்ற வாழ்வியல் உவமைகள் தொகுப்பெங்கும் அணிசெய்து, மனத்தில் காட்சிப் படிமங்களாய் நிறைந்து நிற்கின்றன.

 கவிதைகள் பெரும்பாலும் ஆசிரிய நடையில் இயங்குவது தவிர்க்க முடியாததாகிறது. வடிவ ஒழுங்கால் அல்ல; ஆனால், அந்தக் குரல். முன்னிலையாக ஒருவரை நிறுத்தி தான்வாழ்ந்த வாழ்வை, தற்கால நிலையை உரைப்பது மாதிரியான தொனி.

இவ்வகையில் நமது தொன்மைக் கோட்பாடான திணைக் கோட்பாடுவழி புளிச்சாங்கொடியைநோக்குகையில் நம் மண்ணுக்கு நாம் மீண்டதான உணர்வு வருகிறது. இன்றைய புற உலகம் நமக்கு அயல் மண்ணில் அகதி வாழ்க்கை போன்ற ஒன்றைத் தந்துள்ளதிலிருந்து சிறு மீட்சி.

கவிஞர் ஆ. மணவழகள் தெளிந்த சங்கப் புலவனாய் தற்காலத்தில் இயங்குகிறார். அவரது ஆய்வு உலகம் போலவே படைப்பு மனமும் வற்றாத ஜீவிதத் தன்மை கொண்டது. பல தொகுப்புகள் மூலம் இவர் மேலும் சிறக்க வாழ்த்துகள்.


நூல் : புளிச்சாங்கொடி
ஆசிரியர் : கவிஞர் ஆ.மணவழகன்
அய்யனார் பதிப்பகம்
சென்னை 600088
9789016815 / 9080986069

வெள்ளி, 8 நவம்பர், 2024

கூடாகும் சுள்ளிகள் - கவிதைத் தொகுப்பை முன்வைத்து - கவிஞர் இரா.பச்சியப்பன்

 



கூட்டின் அடிவயிற்றில் மெத்தென்ற சிறு பஞ்சு மீது...

 கவிஞர் இரா.பச்சியப்பன்

 

கண்காணாத தூரத்தில் பிழைக்கும்படியான நெடுங்காலம் கடந்த பின்பொழுதொன்றில், பால்ய நண்பனோ ஊர்க்காரனோ எதிர்ப்படும்பொழுது மனசின் அடியாழத்திலிருந்து அப்படியேன் அலையெழும்புகிறது? கரங்கள் பற்றும் தருணத்தில் துளிர்க்கும் கண்ணீரைச் சட்டென்று ஒதுக்கிவிட முடிகிறதா என்ன? தனக்குப் பிடித்தமான ஒன்றை எதிர்பாராத கணத்தில் காண நேர்கிறபோது அவ்வளவு எளிதில் முகம் திருப்பிக்கொள்ள இயலுமா என்ன?

 சென்னைக்கு வந்த புதிதில் மாநிலக்கல்லூரியின் பின்புறத்தில் வௌவால்கள் நிறைந்த அந்த ஆலமரத்தை அடிக்கடி போய் ஆச்சர்யம் மீதுற பார்த்திருக்கிறேன். ஊரில் இலுப்பைத் தோப்பில் அப்படித்தான் வௌவால்கள் கொத்துக்கொத்தாய்க் கனிந்திருக்கும். மூங்கில் புதர் வேலியாய் அமைந்த அந்தத் தோப்பில் கங்கையம்மன் அகண்ட கண்களோடு வௌவால்கள் பறப்பதை, விளையாடுவதைப் பார்த்துக்கொண்டே இருப்பாள். வௌவால்களின் முகம் அசப்பில் குழந்தையின் முகம்போலவே தோன்றும். நெடுங்காலத்திற்குப் பிறகு சென்னையில் நுணா மரத்தைப் பார்க்கிறபோதும் அப்படித்தான் நிற்கத் தோன்றியது. கம்மம்பூக்களின் வாடையும், நுணாப் பூக்களின் வாசனையும் தொலைத்த வாழ்வில் எங்காவது அவை தட்டுப்பட்டால் வேறென்னதான் செய்வது?

 கவிதைகூட அப்படித்தான் போல. மெல்லிய இசையாய் நமக்குள் தங்கிவிட்ட ஒரு பொழுதை, காலம் ஆற்றிய பெரும் தழும்பை, மழைக்காலத்தில் பழகிய நீச்சலை, நேருக்கு நேர் நின்று ஊழ் துப்பிய எச்சிலை என ஏதேனும் ஒன்றை ஒவ்வொரு கவிதையும் சொல்லிக்கொண்டே இருக்கிறது. கவிதை பறவைகள் போல. அவை நம்மைப் பொருட்படுத்துவதேயில்லை. அதன் அலகில் இருக்கும் சுள்ளிகளோ, இரையோ நம்மிடமிருந்து யாசித்துப் பெறாதவை. நமக்குப் போல இல்லை. அதற்கென்று எல்லையற்ற வானமும் சிறுகிளையும் வாய்த்திருக்கிறது. பறவைகள்போல கவிதை செய்கிறவர்கள் பாக்கிவான்கள். நள்ளிரவொன்றில் குழல்விளக்கு வெளிச்சத்தில் நண்பர் மணவழகன் கவிதைகளை வாசிக்கிறபோது பறவைகளும் வௌவால்களும் நிறைந்த தோப்பில் நுழைவதுபோலவே உணர்ந்தேன். சருகு மூடிய குளமும் நாவல் மரத்தின் கிளையொன்றிலிருந்து சட்டெனப் பாய்ந்து மீனைக் கொத்தியபடி மறுபடி கிளையமர்ந்து தலைசிலிர்ப்பும் மீன்கொத்தியும், பெரிய மூக்கு விடைக்கும்படி நோக்கும் கங்கையம்மனும் நெடுநாளைக்குப் பிறகு சந்தித்த ஆச்சர்யம்தான்.

 சிறியதும் பெரியதுமான சற்றேரக்குறைய எழுபது கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. எஸ்.ஆர்.எம்.கல்லூரியில் பணிபுரிந்த தொடக்க காலத்திலிருந்து என்னுடன் அவர் மனமுவந்து பழகிவந்திருக்கிறார். சங்க இலக்கியங்களை வாசித்திருக்கிற, ஆய்ந்திருக்கிற அவரின் ஆழம் நம்மை தூரவே நிறுத்திவைத்து வியக்க வைக்கும். இடையில் முளைக்கும் சிறுபுதரை அழித்து, எழுப்பி வைத்திருக்கிற தயக்க வேலியினை மிதித்துவந்து அவரின் நட்பு வட்டத்தில் நம்மை இணைத்துக் கொண்டதற்கு அவருக்குள் இருக்கிற படைப்பாளி ஒரு பெரும் காரணமாக இருந்திருக்கலாம். இணையத்தில் வெகுகாலமாய்க் கவிதைகள் எழுதிவந்திருக்கிறார். இணையத்தில் அவரின் வாசகர் வட்டம் மிகப்பெரிது.

 இளம் ஆய்வாளருக்கான செம்மொழி விருதினைப் பெற்றிருக்கும் ஒருவருக்குள் இன்னும் அந்தக் கம்மங்கொல்லை குருவிகள் பறக்க, காற்றிலாடும் கொல்லை வனப்பு கூடியிருப்பது மிகுந்த ஆச்சர்யம்தான். தனியார் கல்லூரியின் வேலைப்பளுக் கிடையில் இத்தனை சாத்தியங்களைக் கொண்டிருப்பது சாதாரணமானதல்ல.

 இந்தத் தொகுப்பினை வசதிக்காக மூன்று வகையாகப் பகுத்துக்கொள்ளலாம். உருகி உருகிக் காதலிக்கும் நெஞ்சத்தின் உணர்வுகள்; இழப்பின் காயத்தின்வழி கசியும் துளிகள்; தனக்கான அரசியலை முழங்கும் பதாகைகள் எனப் பெரும்பான்மையான கவிதைகளை உத்திபிரித்துக்கொள்ளலாம். நெற்கட்டை

 அரி அரியாக வைப்பதில் ஓர் அழகு மட்டுமல்ல ஓர் அவசியமும் இருக்கிறது. ஒரே பக்கம் கதிர்வைத்துக் கட்டுக் கட்டமுடியாது. சின்னச்சின்ன கட்டாக்கி கட்டுப்போர் போடுவது ஒருவகை. பென்னைப் பென்னையாய் வைக்கோல் சுமைகட்டி வைக்கோல் போர் போடுவது ஒருவகை. முன்னதில் தனித்தனியாக எடுக்கவேண்டிய அவசியம் இருப்பதுபோலவே பின்னதில் பின்னிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது. கவிதையைச் சொல்லியிருக்கிற உத்தியும் அதாவது, கட்டியிருக்கிற பாங்கும் அதனை வரிசைக்கிரமாய்த் தொடுத்திருக்கிற பாங்கும் மிக நுட்பமானது.

                 சாக்கடை நாற்றத்தோடு கழிவுநீர் ஊற்றுகள்

அலங்காரத்திற்கு மட்டும் அணிவகுக்கும்

பறவைகள் அமர்ந்தறியா செயற்கை மரங்கள்

முளைக்காத தானியங்கள்

விதை கொடுக்காத கனிகள்

உயிரில்லா முட்டைகள்

தாய் தந்தை உறவறியா

குளோனிங் குழந்தைகள்

 

எனச் சொல்லுகிற ஒரு ஒழுங்குமுறை. மனதுக்குள் இசை அலையைச் சீராக எழுப்பி கரையில் வந்து அடிப்பதுபோல் கடைசியில் மனிதக் கொடூரத்தின் முகத்தை எழுதுகிற எழுத்து லாவகம் அடுத்து இப்படிச் செல்கிறது...

                                 ஆணிவேரில் வெந்நீர் ஊற்றும்

அறிவியல் வளர்ச்சிகள்

ஆடுகளை மலையில் விட்டு

அருகிருக்கும் கொல்லையில் கதிரொடித்து

பால் பருவக் கம்பைப் பக்குவமாய்        நெருப்பிலிட்டு

கொங்கு ஊதி தாத்தா கொடுத்த

இளங்கம்பின் சுவைக்கு

ஈடு இது என்று

எதைக்காட்டி ஒப்புமை சொல்வேன்

பச்சைக் கம்பு தின்றதே இல்லை

ஆதங்கப்பட்ட தோழிக்கு

 

பல மைல் வெயில் கடந்து வந்தவனுக்குச் சட்டென்று ஒரு புங்கை நிழல் கிடைப்பதுமாதிரி, கொடுமை வாழ்வை அடுக்கிச் சொல்லிவிட்டு ஒரு கம்மங்கதிரில் இழந்த வாழ்வின் ருசியைச் சொல்லியிருக்கிற நேர்த்தி சாதாரணமானதல்ல. இங்கே வருகிற ஆடுமேய்த்தலும், கம்மங்கதிரைச் சுட்டுத்திண்ணலும் அதைமட்டுமேயா உணர்த்தி நிற்கின்றன? பறவை அமர்ந்தறியா செயற்கை மரங்களெனச் சொல்லுகிறபோது மரங்களை மட்டுமா சுட்டுகிறது? வரிசையாய்க் கடக்கும் நமது நாட்கள் கூட மரங்கள்தானே. நமது நாட்களில் ஒரு கணம் பறவை அமர்வதுபோன்ற அனுபவம் நேர்ந்ததுண்டா? நமது மரங்கள் எதற்காகவோ வானுயர்ந்து நிற்கின்றன. அதுதரும் நிழல் ஒன்றுதானா வேரோடி நிற்பதற்கான காரணம். இதே போன்றதொரு இழப்பின் வலி சொல்லும் மற்றொரு அற்புதமான கவிதை இக்கரைக்கு அக்கரை’. ‘வீடு சுமந்து அலைபவன்கவிதை தமிழர்களின் அவல வாழ்வினையும் சேர்த்தே சொல்லுகிற கவிதை.


                இருந்தது இல்லாமல் போகும்போதும்
                                இருப்பு இடம்மாறிப் போகும்போதும்தான்
                                உரைக்கிறது
                ஏதிலிகளின் வலி

தன்னனுபவத்தில் சிறகு விரித்து பெரும் ஜனசமூகத்தின் நெடுங்காலத் துயர வரலாற்றோடு கைகோர்த்து நிற்கிறது இக்கவிதை.

 

இத்தொகுப்பு காதல் கவிதைகளால் மேலும் அழகாகிவிடுகிறது. காலகாலமாய் ஓடும் ஜீவநதியின் அடிமடியில் உருண்டு விளையாடும் கூழாங் கற்களின் மினுமினுப்பில் இருக்கிறது நீரின் காதல். உதிர்ந்த சிறகுஎன்ற கவிதையில் இப்படி வருகிறது:


                                 பெரும் பயணத்திலும் பேருந்து ஓட்டத்திலும்
                                கண்ணில்படும் பலகையின் பெயரைக்
                                கண்டு மனம் பதைபதைக்கும் - அவள்
                                வாழ்க்கைப் பட்டது இவ்வூரோ?...

 ஓடுகிற ஓட்டத்தில் கண்ணில் அடிக்கும் முள்ளாய் அந்த ஊர்ப்பெயர். தூலம் உளுத்து ஒருபக்கமாய்ச் சாய்ந்த கூரை ஒழுகி ஓதமேறிக்கிடக்கும் மண்சுவராய் மனம். மழைக்காலத்தின் நள்ளிரவொன்றில் குடும்பமே அலறுவதுபோல ஏதோ ஒரு பொழுதில் அந்த ஊர்வழியே கடக்கிறபோது நினைவுகளின் அலறலை என்ன செய்துவிட முடியும். ஒரு கவிதை எழுதுவது தவிர.

                                 எந்திரமாய்க் கை குலுக்கி

              என்றும் போல்
                                புன்னகைத்துப் பிரிந்த 
             அந்தக் கடைசி நிமிடம்...

 இப்படி நிறைய இடங்களைச் சொல்லலாம். காதல் கவிதை எழுதும்போது எந்தச் சவாலும் எழுந்து நிற்கவில்லை. சண்டையில் தோற்றுப்போனவனின் தூங்காத இரவுகள் போலவே அவஸ்தைப்படுத்துகிற வார்த்தைகளால் நெய்யப்பட்டிருக்கின்றன.

                 அரசியல் கவிதைகள் வனைதலில் தமிழர்களின் குருதியே முதன்மையாகிறது. இழந்த மண்ணிலிருந்து சிந்திய ரத்தம் கொண்டு ஆத்திரங்கொண்டு எழுத்தைச் சுற்றி வெறிகொண்ட கைகள் விரல் நுணுக்கத்தில் எழும்பி வந்தவை அவை. முடிகிற இடத்தில் சரியாக அறுத்து மாலை வெயிலில் காயவைத்துத் தட்டித்தட்டி சூளையிலிட்டதை மனம் தட்டிப்பார்க்க திசைகள் அதிர்கின்றன. பொய்த்தேவுகவிதையில் வெளிப்படையாகவே தனது அரசியலைச் சொல்கிறார் கவிஞர். அதற்கான வரலாற்று நியாயங்களையும்  வாசகனுக்குத் தெளிவுபடுத்துகிறார். பத்துக் கோடிக்கும் மேலாக வாழ்கிற ஓர் இனம் தமது ஒரு பகுதி மக்கள் துடிக்கத்துடிக்கச் சாகிறபோது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததே எதனால்? காஷ்மீரிகளைப் போல தனித்த தேசிய இறைமை கொண்ட இனமாக, கவிஞர் சொல்லில் சொன்னால் நான் தமிழன் என்கிற ஒரு தெளிவு இல்லாததுதானே காரணம். இந்த இனம் நினைத்திருந்தால் ஓர் அரசியல் நிர்ப்பந்தத்தை உருவாக்கிப் பேரழிவிலிருந்து காப்பாற்றி இருக்காதா என்ன?

                 ‘மே 2009’ கவிதை மிக நுட்பமாக இந்த அரசியலைப் பேசுகிறது. கையாலாகாதனத்தின் முன்பு நமது எல்லாப் பெருமிதங்களும் பல்லிளித்துக்கொண்டு நிற்பதை இக்கவிதை எடுத்துக்காட்டுகிறது. பிரபாகரன்கவிதை நம்பிக்கைப் புள்ளியிலிருந்து எழுந்ததாக இருக்கிறது.  

 இது மிளகாய்த் தோட்டத்தில் முதல் வெப்புபோல. உள்ளே நுழைந்து பழமெடுக்கும்போது பூவும் பிஞ்சும் உதிராமல் நடக்கப் பழகும் நளினம் வேண்டும். நாற்று நட்டதிலிருந்து பார்த்தால் முதல் வெப்பு நெடுங்காலம் கடந்ததாய்த் தோன்றும். ஆனால் அவை நேர்த்தியானவை. பழுதில்லாதவை. அடுத்த வெப்புமிக விரைவில் வரும் என்று எதிர்பார்க்கலாம். அடுத்த தொகுப்பை இதைவிட நேர்த்தியாகக் கொண்டுவருவார் என்பதற்கு இத்தொகுப்பு ஓர் உதாரணம். ஏனெனில் தமிழ் வாழ்வு என்ற வற்றாத கிணறு இவர் மனசில் உண்டு.

 மைனாக்களும் தவிட்டுக் குருவிகளும் ஆந்தைகளும் வௌவால்களுமெனப் பறவைக்காடாய் இருந்த அந்த இலுப்பைத் தோப்பை விழுங்க சுற்றியிருந்தவர்களுக்குப் பேராசை வந்தது. வெங்கோடை இரவுப் பொழுதொன்றில் மூங்கில் புதர் தீப்பற்றியதாய்ப் பேச்செழுந்தது. கொள்ளிவாய் பிசாசின் வேலையென்று வேடிக்கை பார்த்தனர். குஞ்சுகள் கருகும் நிணவாடையும் புகையும் ஊரைச் சூழ, இலுப்பைத் தோப்பின் பெருமைமிகு வரலாற்றைத் திண்ணைதோறும் வாய்வலிக்கப் பேசினர். பறவைகளின் அலறல் ஓய்ந்த மாலையொன்றில் எரிந்த விறகுகளை ஆளாளுக்குச் சுமந்துவந்தனர். வரப்புகள் எல்லை மாறின. பஞ்சாயத்தின் தீர்மானங்கள் மாறின. கங்காதேவி மொசைக் பதித்த சிறு கோயிலில் பளபளக்க அருள் பாலிக்கிறாள். கங்கா நகர் என்று அறிவிப்புப் பலகையொன்று வழிகாட்டுகிறது. வௌவால்களையும் குருவிகளையும் இலுப்பை மரங்களையும் மனதில் சுமந்து பித்தேறித் திரிபவர்கள் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். சடைமுடி குலுங்க மந்திரம் ஜெபிக்க ரத்தப் பலியிட்டு நிணச்சோறிறைத்து ஏவிய இந்த ரத்தக்கவிதைக் காட்டேறி பழிவாங்க மாட்டாளா? செய்வாள்.


 கூடாகும் சுள்ளிகள்
(கவிதைத் தொகுப்பு)
கவிஞர் ஆ. மணவழகன்
அய்யனார் பதிப்பகம்
ஆதம்பாக்கம், சென்னை-88
9789016815 / 9080986069

விலை ரூ.120

 


புதன், 6 நவம்பர், 2024

கவிஞர் ஆ.மணவழகனின் கூடாகும் சுள்ளிகள் – கவிதைத் தொகுப்பு - பொன். குமார்

புதிய கோடாங்கி , ஆகஸ்ட் 2011 

கவிஞர் ஆ.மணவழகனின் கூடாகும் சுள்ளிகள் – கவிதைத் தொகுப்பு - ஒரு பார்வை

- பொன். குமார்


ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு படைப்பாளர் இருக்கிறான். வெளிப்படுவதற்கான வாய்ப்புகளே குறைவு. குழ்நிலையே, வாழ்நிலையே மனிதனை படைப்பாளியாக உருவெடுக்கச் செய்கிறது. பரிமாணிக்க வைக்கிறது. ஆ.மணவழகன் கவிதை உலகில் தொடர்ந்து இயங்கி வந்தாலும் அவரின் முதல் தொகுப்பு தற்போதே வெளியாகியுள்ளது. "கூடாகும் சுள்ளிகள்என்னும் தலைப்பே கவனத்தை ஈர்த்துள்ளது.' இலக்கிய மனம்" வீசுகிறது என பேரா ஆர்.பி.சத்தியநாராயணன் வாழ்த்துரையில் கூறியுள்ளார். உண்மையே.

 இல்லாதது இல்லை, சொல்லாதது இல்லை என திருக்குறளுக்குப் பெருமையுண்டு. வாழ்க்கையின் வழிக்காட்டி என்னும் பெயருமுண்டு. வள்ளுவரையும் பொய்யா மொழிப் புலவர் என அழைப்பதுமுண்டு.

 சிறப்புகள் பல கொண்டதால் தேசிய மயமாக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. மறுபுறம் மலிவு விலையில் திருக்குறள் அச்சிடப்பட்டு விற்பனைச்

செய்யப்பட்டும் வருகிறது. தொடர்வண்டியில் சிறுவன்  மலிவு விலையில் விற்றுச் செல்கிறான் திருக்குறளோடு" வாழ்க்கை" யும். மதிப்புமிக்க திருக்குறளை மலிவாக்கி

விற்பனைச் செய்வதற்காக வருந்தியுள்ளார். திருக்குறள் மட்டுமல்ல வாழ்க்கையும் விலை போகிறது என்று குறிப்பிட்டுள்ளார். திருக்குறள் மீது கவிஞர் கொண்டுள்ள 'மதிப்பு' வெளிப்பட்டுள்ளது.

 நாகரீகம் வளர்கிறது. நகரியம் பெருகுகிறது.வாழ்க்கைச் சூழல் மாறினாலும் கிராமிய நினைவுகள் மாறாது. மாறாக நெஞ்சம் இனிக்கும். "பச்சைக்கம்பு" சாப்பிடும் பாக்கியம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. கிராமத்தவர்களுக்கே வாய்ப்பு மிகுதி. "பச்சைக்கம்பு" சாப்பிட்ட அனுபவத்தை "நாகரியம்" கவிதையில் இனிமையாக வெளிப்படுத்தியுள்ளார். பச்சைச் கம்புக்கு ஈடிணை இல்லை என்கிறார். "இக்கரைக்கு அக்கரை" யிலும் கிராமத்து உணவைப் பற்றியே பேசியுள்ளார். கேழ்வரகு, சோளம், கம்பு ஆகியவற்றின்' சுவை' யை விவரித்துள்ளார்.

                         புள்ளைங்க வந்தா மட்டுந்தான்

நல்ல சோறு சாப்பிட முடியுது

அப்பா சான்றிதழ் தருவார்

என்னும் வரி வறுமையைக் காட்டுகிறது. அரிசிச் சோறு சாப்பிடுவதே அதிசயம். திருவிழா போலிருக்கும்.

நல்லவனாக வாழ், நல்லவனாக இரு என்று பாடம் கற்பிக்கிறது. சமூகம் போதிக்கிறது. ஆனால் நல்லவனாக வாழ்வதற்கான சந்தர்ப்பங்கள் அரிது. வாய்ப்புகள் குறைவு. பீடி, புகையிலை, கள், பீர், வெண் சுருட்டு, கஞ்சா, ரம், சாராயம், பான் பராக் என ஒவ்வொன்றையும் பழக்கப்படுத்த நண்பர்களும் உறவினர்களும் உள்ளனர்.


எல்லா எழவையுந்தான் பார்த்தாச்சு

எதிலேயும்

ஒரு ...... ம் இல்லை

பழகியாச்சு விடமாட்டேங்குது

பொய் சொல்லாதே

உன் மனைவி விதவையாவது பற்றி

உன் குடும்பம் நடுத்தெருவில் நிற்பது பற்றி

எந்த அரசுக்கும்

இங்கு கவலையில்லை

 

போதைப் பொருள்களினால் பயன் இல்லை என்கிறார். போதைப் பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். மனைவி, மக்களை நினைத்துப் பார்க்கச் சொல்கிறார். முடிவில் போதைப்பொருள்களை விற்பனைச் செய்யும், விற்பனைச் செய்ய உதவும் அரசைக் குற்றம் சாட்டியுள்ளார். அரசுக்கு மக்கள் மீது கவலை இல்லை என்கிறார்.

 'ஏதிலிகளின் வலி' யை உறைக்கச் செய்துள்ளது' வீடு சுமந்து அலைபவன்".

இருந்தது இல்லாமல் போகும் போதும்

இருப்பு இடம் மாறிப் போகும் போதும்தான்

உறைக்கிறது ஏதிலிகளின் வலி

என்கிறார். உடைமைகள் இழந்தும் உரிமைகள் மறந்தும் புலம் பெயர்ந்தும் வாழ்பவர்களுக்காக குரல்  கொடுத்துள்ளார்.

 இந்தியா ஒரு நாடெனினும் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்து கிடக்கிறது. மனிதர்களும் பிரிந்து உள்ளனர். மொழியின் அடிப்படையிலேயே முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

 

கன்னடம்

தண்ணீர் தரட்டும்

நானும் திராவிடன்

இந்தியா

ஈழம் அமைத்துத் தரட்டும்

நானும் இந்தியன்

கானல் நீர் தாகம் தீர்க்காது

விட்டு விடு

நான் தமிழன்

திராவிடனாக இருந்தாலும் பயனில்லை, இந்தியனாக இருந்தாலும் நன்மையில்லை என்று தமிழனாக இருப்பதாகவே கூறுகிறார். காரணம் தமிழனாக இருப்பதால் புறக்கணிக்கப்படுவதாக கூறுகிறார். தமிழன் என்பதால் இந்தியாவிலும் அங்கீகாரம் இல்லை. இலங்கையிலும் இல்லை. இந்தியாவில் தமிழன் ஓரம்கட்டப்படுகிறான். இலங்கையில் இரக்கமின்றி கொல்லப்படுகிறான். ஈழத்தமிழர்களுக்காக இரக்கப்பட்டுள்ளார். ஏராள கவிதைகளும் எழுதியுள்ளார். மாவீரர் பிரபாகரனையும் போற்றியுள்ளார்.

 

தமிழன் கொடை நீ

தமிழனின் படை நீ

 

என்பது எடுத்துக்காட்டுக்குரியது. ஒரு தமிழனாக எழுதியுள்ள கவிதை யார் நீ?. யார் என கவிஞர் வெளிப்படுத்தியுள்ளார்.

 

சிரித்துக் கொண்டே மரணம் ஏற்கும்

தமிழ்ச் சாதி நான்

 தமிழர்கள் வீரமானவர்கள் என்கிறார். நெஞ்சில் குத்து என்று துணிச்சலுடன் அழைப்பு விடுத்துள்ளார்.

 தட்டுங்கள் திறக்கப்படும் என்பது பைபிள் மொழி. தட்டியும் திறக்காததால் தகர்க்க வேண்டும் என்கிறார். தவறுகளை மன்னிக்கும் கிருத்துவ மதம் மீறலையும் மன்னிக்க வேண்டும் என்கிறார். 'ஆமென்' தலைப்பிலான இக்கவிதைத் தொன்மத்தின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. மீறலுக்கு வழிவகுத்துள்ளார்.

 நட்பு என்பது விட்டுக்கொடுப்பது. சுயநலமற்றது. ஒளிவு மறைவற்றது. அனைத்து உறவுகளையும் விட மேம்பட்டது. நட்பியல் கவிதை போலியான நண்பனை விமர்சிக்கிறது.

 

என்

கை குலுக்கலில் மட்டும்

உண்மையும் இறுக்கமும்

வேண்டுமென

எப்படி நீ

எதிர்பார்க்கிறாய்?

நண்பன் என்பவனும் தன்னைப்போலவே நட்புடன் இருக்க வேண்டும் என்கிறார். நட்புக்கான இலக்கணத்தையும் கூறியுள்ளார். நட்பியல்க்கு விளக்கம் தந்தவர் காதலியல்க்கும் ஒரு கவிதையில் விளக்கம் தந்துள்ளார்.

வானுயர்ந்த கோபுரங்கள். வாசலில் பிச்சைக்காரர்கள். 'வேற்றுமையில் ஒற்றுமை' யில் அத்தகைய அவலத்தைப் படம் பிடித்துக்காட்டியுள்ளார். வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியக் கொள்கை. கோவிலின் முன்பே கடைப்பிடிக்கப் படுகிறது என்கிறார்.

 ஒரு வீடு கட்டுவதற்கு என்னவெல்லாம் விற்பனைச் செய்ய வேண்டியுள்ளது என புதுமனை புகுவிழாவில் பட்டியலிட்டுள்ளார். ஆயினும் வீடு முழுமைப்பெறவில்லை. கவிதை முழுமைப் பெற்றுவிட்டது.

 

குடிபுகுமுன் ஓலை வந்தது

இம்முறையும் தவணை தவறினால்

வீடு தாழிடப்படும் என்று

எழுதியுள்ளார். வீட்டைக் கட்டிப்பார் என்பார்கள். வீட்டைக்கட்டிப்பார்த்தால் கண்முன்னே கம்பீரமாக தெரிவது கடனேயாகும்.

 முரண் நன்று. பொம்மை ஆடையோடு இருக்கிறது. குழந்தை அம்மணமாக உள்ளது. இதுவே இந்தியா என்கிறார். இந்தியர் என்று மார் தட்டிக் கொள்ளும் ஒவ்வொருவரையும் அவமானப்படச் செய்கிறது.

 

நூலைப் படி சங்கத்தமிழ்

நூலைப்படி முறைப்படி

நூலைப்படி

காலையில் படி கடும்பகல் படி

மாலை இரவு பொருள்படும்படி ( நூலைப் படி )

கற்பவை கற்கும்படி

வள்ளுவர் சொன்னபடி

கற்கத்தான் வேண்டும் அப்படிக்

கல்லாதவர் வாழ்வ தெப்படி ? ( நூலைப்படி)

 

என்னும் பாடல் மூலம் படி படி என்றார் பாவேந்தர் பாரதிதாசன். பாவேந்தர் வழியில் கவிஞர் ஆ. மணவழகனும் உள்ளம் செதுக்கும் உளிகள் கவிதையில் ஏராளமானவற்றைப் படி என்கிறார். படிப்பது நல்லது என்கிறார். படிப்பின் அவசியத்தை, நன்மையை உணரச் செய்கிறார். படிப்பவைகளே உள்ளம் செதுக்கும் உளிகள் என்கிறார்.

 உருவத்தில் மனிதர்' போலி' ருப்பர். உள்ளத்தில் வேறாக இருப்பர். அன்பாக இருப்பது போலிருப்பர். பழகிப் பார்த்தாலே தெரியும். 'மனிதப் போலி'களை அடையாளம் காட்டியுள்ளார். உண்மை மனிதர்களை உணர்ந்து கொள்ள வேண்டும் என்கிறார்.

'பத்தில் ஒன்பது பதர்களே' என்றுரைத்துள்ளார்.

சிறுகவிதைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. சிறுகவிதைகளில் ஒன்று 'சிறுமை'..

 

பிழைப்பில் கூடியது எறும்பு

இறப்பில் கூடியது மனிதம்

ஆறறிவுச் சிறுமை

ஆறறிவு இருந்தும் எறும்பைவிட கீழானவனாக மனிதன் உள்ளான் என்று சாடியுள்ளார். தலைப்பு இல்லையெனில் ஒரு ஹைக்கூவாகிஇருக்கும். ஹைக்கூவிற்கான அம்சங்கள் அடங்கியுள்ளது.

 வாழ்க்கை என்பது வாழ்ந்தாக வேண்டியது. வாழ்ந்து முடிந்த பிறகு இறப்பது இன்பமயமானது. பிறப்பு இயற்கை எனில் இறப்பும் இயற்கையே. இயற்கையை ஏற்பதுதானே இயல்பு. வாழத்தானே வாழ்க்கை.

 

முதுமையில் முழுதாக

முறையாக வாழ்ந்திருந்தால்

இறக்கும் அந்த நேரம் கூட - நமக்கு

இனிமையாகத் தோன்றாதோ

 

என்கிறார். முழுமையானது என்பதற்கு என்ன அளவுகோல் என தெரியாததால்தானே சிக்கல் ஏற்படுகிறது.

 உலகம் வியத்தகு வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது. அழிவும் ஏற்படுகிறது. எல்லா மாற்றத்துக்கும் காரணம் மனிதனே. மாற்றங்கள் நிகழ்ந்தாலும் நிகழ்த்தப்பட்டாலும் மனிதன்' மனிதனாக' மாறுவதில்லை. 'எதை நோக்கி' யில் மனிதராக மாறாதமனிதர்களைச் சாடியுள்ளார்.

 மாற்றம் என்பதே நிரந்தரம் என்னும் மார்க்சிய கோட்பாட்டை மனிதர்கள் பொய்யாக்கியுள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளார். '? ' என்னும் கவிதை சிந்திக்கச் செய்கிறது. நம் விருப்பப் படி எதுவும் நடப்பதில்லை. நாம் எதிர்பார்க்காததும் நடைபெறாமல் இருப்பது இல்லை.

இடையில்

நாம் என்பது யார்?

என வினா எழுப்பியுள்ளார். நம்மைச் சிந்திக்கச் செய்கிறார். உயிர் இருக்கும் வரையே உடலுக்கு மதிப்பு. உயிர் பிரிந்தால் நாம் இல்லை.

 ஒவ்வொரு செயலையும் செய்து முடிக்கும் போது மக்கள் சொல்வது அப்படிச் செயதிருக்கலாம். இப்படிச் செய்திருக்கலாம் என்பதாகும். முடிந்த பிறகு அவ்வாறு பேசுவது சரியல்ல. இவ்வாறு எதை வேண்டுமானாலும் பேசலாம். முற்றுப்பெறாத 'லாம்கள்' மூலம் ஏராளமான 'லாம்' களை எடுத்துக்காட்டியுள்ளார்.

                         ஒற்றை மதிப்பெண்ணால்

கிட்டாது போன முதலிடம்

இன்னும் கூட முயன்றிருக்கலாம்

என்பது ஒரு ' லாம்'.

ஒவ்வொரு பத்தியும்

ஒரே மாதிரி முடிந்துள்ளது

இன்னும் கூட முயன்றிருக்க'லாம்'

என்று எழுத வைக்கிறது. ' லாம்' கள் எப்போதும் முற்றுப் பெறாது.

 மாதா, பிதா குரு தெய்வம் என்பர் . மாதா பிதாவிற்குப் பின் குருவே தெய்வம் என்பதே மெய். குரு பக்திக்கு ஏராள சான்றுகள் உண்டு. ஏகலைவனுடையது குருட்டு பத்தியாகும். கவிஞரின் குரு பக்திக்கு எடுத்துக்காட்டாக உள்ளது இழப்பு. ஓவிய ஆசிரியர் ஒரு விபத்தில் விரல்களை இழக்கிறார்.

தமிழ்த்தாய்

தன் தூரிகையில் ஒன்றை இழந்திருந்தாள்

என வருத்தப்படுகிறார். குருவான ஓவியரின் விரல்களின் மதிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஈடு செய்ய முடியாதது இழப்பு.

 ஊருக்கு ஒரு தோட்டி இருப்பார். அதே போல் ஓர் ஐயரும் இருப்பார். சமீபத்திய கவிதைகளில் ஐயரின் மீதா விமர்சனம் மிகுதியாகவே இருந்து வருகிறது. பார்ப்பனிய எதிர்ப்பு உணர்வுகள் அதிகம் காணப்பட்டன. எல்லாவற்றுக்கும் மாறாக ஓர் ஐயரைக் காட்டியுள்ளார். அவரைக் கண்முன் கொண்டு நிறுத்துகிறது கவிதை. ஊரையும் ஊராரையும் அடையாளப்படுத்தும் ஐயரை அடையாளப்படுத்தியுள்ளார். ஆனால் ஐயரின் மகன் குடிகாரனாகிவிட்டான் என்கிறார். இதை 'தலைமுறை இடைவெளி " என்கிறார். அரசே மதுக்கடைகளை திறந்து வைத்து அனைவரையும் 'குடிமகன்' ஆக்கி வருகிறது. இதில் ஐயர் என்ன? அடுத்தவர் என்ன? எல்லாம் ஒன்றே.

 உண்மை வரலாறு வேறாக இருக்கும். படிக்கும் வரலாறு வேறாக இருக்கும். தற்போது வரலாறுகள் திரிக்கப்படுகின்றன. முருகன் சுப்ரமணியன் ஆக்கப்பட்டதும் திரித்தல் மூலமே நிகழ்ந்தது. கொல்லிமலையில் உள்ள ' கொல்லிப் பாவை' யும் 'ஆரியதேவி' யாக 'திரிதல்' செய்யக்கூடும் என்று ஐயமுறுகிறார். எச்சரிக்கிறார். தமிழ்ர்கள் கவனமுடன் இல்லை என்றால் ' திரிதல்' நிகழ்த்தப்பட்டு விடும்.

மனிதர்கள் அதிகரிக்க

மாசும் அதிகரிக்கும்

என்று எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. மாசு படலிலிருந்து மலைகள் காக்கப்பட வேண்டும் என்கிறார்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேண்டுதல் இருக்கும். அதில் சுயநலமிருக்கும். கவிஞரின் வேண்டுதல்கள் வித்தியாசமானவை. பொதுநலமிருக்கிறது. வேண்டுதல்களை எல்லாம் வைத்து விட்டு இறுதியாக,

தமிழே

இவை எனக்கு மட்டுமல்ல

எல்லோருக்கும் கொடு

என்று வேண்டியுள்ளார். எல்லோருக்கும் கொடு என்பதில் பொதுநலமே மேலோங்கியிருக்கிறது.

 'கூடாகும் சுள்ளிகள்' கவிஞர் ஆ. மணவழகனின் முதல் முயற்சி. ஒரு கவிஞராக அனைத்து நிலைகளிலும் எழுதியுள்ளார். பல்வேறு பாடுபொருள்களில் பாடியுள்ளார். வெற்றியும் பெற்றுள்ளார். தமிழ்ப்பற்றும் வெளிப்பட்டுள்ளது. புறத்தை எழுதியதுடன் அகத்தை எழுதியுள்ளார். மனிதர்களைக் கவிதையில் மையப்படுத்தியுள்ளார். எளிமையான மொழி. இயல்பான நடை. கவிஞரிடம் கவிபுனையும் ஆற்றல் நிரம்பவே உள்ளது என்பதற்கு 'கூடாகும் சுள்ளிகள்' சான்றாக உள்ளது. வெளிப்பாட்டில் வித்தியாசத்தைக் கையாளும் போதே கவிதை உலகில் கவிஞர் வெற்றிப் பெற முடியும். தொடரமுடியும். 'அகப்பயணம்' கவிதையில்,

                         கடல் நிறைவில்

கடுவளவு சேகரித்ததில்

தெரிந்தது

என் முகவரிக்கான

முதல் எழுத்து

என்கிறார். முதல் எழுத்து ஆக வெளிவந்துள்ள 'கூடாகும் சுள்ளிகள்' முகவரி பெற்றுத்தரும். 'கூடாகும் சுள்ளிகள்' தொகுப்பில் கவிதையாகியுள்ளன சொற்கள்.

 வெளியீடு

அய்யனார் பதிப்பகம்
சென்னை - 600088
9789016815 / 9080986069