திங்கள், 17 ஆகஸ்ட், 2020

தமிழ்: செம்மொழிச் செயலாக்கத்திற்குச் செய்யவேண்டியன

ஆ. மணவழகன், முனைவர் பட்ட ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

(இலக்குவனார் இலக்கிய இணையம், தமிழ்: செம்மொழிச் செயலாக்கத்திற்குச் செய்ய வேண்டுவன, கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்ற கட்டுரை, திசம்பர், 2004.)

           

'கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளொடு

முன்தோன்றிய மூத்தகுடி'

என்கிறது புறப்பொருள் வெண்பாமாலை. அவ்வகை மூத்த குடியாகிய தமிழ்க்குடியின் தொன்மையை, பழமையை, சிறப்பைப் பறைசாற்றுவது தமிழ் மொழி. ஒரு சமூகத்தின் பண்பாட்டு மேன்மையை, நாகரிக வளர்ச்சியினைக் காட்டுவது, அச்சமூகத்தின் மொழி என்றால், அம்மொழியின் பண்பாட்டை, சிறப்பைக் காட்டுவது அதன் மரபுக்கட்டும், புதுமையை ஏற்கும் நெகிழ்வுமே. இப்பண்பே ஓலைச்சுவடியிலிருந்த தமிழை, இன்று கணினி   மொழியாக்கியுள்ளது.  பழமை மரபோடும், புதுமை நெகிழ்வோடும் விளக்கும் இத்தன்மைகளே தமிழை 'செம்மொழி' (Cassical Language) என்று மைய அரசை வேறு வழியில்லாமல் ஏற்க வைத்துள்ளது. பெற்றவளைத் தாய் என்று அழைக்க அனுமதி அளிப்பதைப் போல.. உலக அழகியை உள்நாட்டு அழகியென்று அங்கீகரிப்பதைப் போல… மைய அரசும் தமிழைச் செம்மொழி என்று அறிவித்துள்ளது. ‘ஆயிரம் ஆண்டு பழமையும், பிற மொழிகளின் துணையின்றி இயங்கும் தன்மையும், அறிஞர்கள் பாரம்பரிய சொத்தாகக் கருதப்படக்கூடிய பண்டை இலக்கியங்களின் தொகுப்பையும், இரவல் வாங்காத இலக்கணத்தையும்’ கொண்டதே செம்மொழியாக முடியும் என்கிறது செம்மொழிக்கான வரையறை. ஆனால், தமிழோ மேற்குறிப்பிட்ட வரையறைகளைப் பெற்றிருப்பதோடு, இரண்டாயிரம் ஆண்டிற்கும் மேற்பட்ட பழமையைக் கொண்டு விளங்குகிறது.

            இவ்வகையான பழமையையும் சிறப்பையும் கொண்ட தமிழ்மொழி ஒரு நூற்றாண்டு போராட்டத்திற்குப் பின்னர் செம்மொழியாக அறிவிக்கப்பட்டுவிட்ட இவ்வேளையில், இயல்பாகவே நமக்குச் சில ஐயப்பாடுகளும் எழத்தான் செய்கின்றன. அரசாணையும், அரியணையும் அளிக்கப்பட்டு விட்டால் மட்டும் போதுமா? இவ் அறிவிப்பே தமிழை வளர்த்து விடுமா? மொழி ஒரு கருவி மட்டுமே என்பார் கருத்து ஏற்புடையதல்ல என்று ஒதுக்கிய நிலையில், 'மொழி சமூகத்தின் ஒரு அங்கம்; அதனைச் சமூகத்திலிருந்து பிரித்துப் பார்க்க இயலாது; மொழி இல்லாமல் ஒரு சமூகம் இயங்காது;  மொழி சமூகத்தைக் கட்டமைக்கிறது.' என்ற உண்மை ஒத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இவ்வறிவிப்பால் தமிழ்மொழி சார்ந்த சமூகத்திற்கு விளையும் நன்மை யாது? ஆணை மட்டும் போதுமா? அதிகாரமும், செயலாக்கமும் வேண்டாமா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடைகாணும் நிலையில் இன்று நாம் இருக்கிறோம். அறிக்கை மட்டுமே போதும், இந்தியாவிலும், உலக நாடுகளிலும் செம்மொழி என்பதால் தமிழுக்குப் பல்கலைக்கழகங்களில் இருக்கை அமையும் என்பவர் கூற்றுக்கு, ‘வடமொழிக்குத் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் இருக்கை அமைத்துள்ளதா? என்ற எதிர்வினா தானே விடையாகக் கிடைக்கிறது. இவ்வகையான கேள்விகளையும் ஐயப்பாடுகளையும் உள்வாங்கி, அதற்கானத் தீர்வுகளையும், அலோசனைகளையும் முன்மொழியும் நோக்கிலேயே இக்கட்டுரை அமைக்கப்படுகிறது.

            இவ்வகையில், வெற்று ஆலோசனைகளையும், கருத்துகளையும் மட்டுமே இக்கட்டுரை பட்டியலிட்டுக் காட்டாது, மொழியின் தொன்மையையும், சிறப்பையும், கட்டமைபையும், மரமையும் சுட்டியும், காலந்தோறும் தமிழின் நிலைகுறித்தும், தமிழில் பிறமொழித் தாக்கம் குறித்தும் ஆய்ந்தும்,  மொழியில் சிதைவு ஏற்படும் போதெல்லாம் மொழியைக் காத்திடத் துணிந்த இயக்கங்கள், அமைப்புகள், தனிமனித செயல்பாடுகள் என்பனவற்றைச் சிறப்பித்தும், தமிழிடமிருந்து தமிழர் விலகிச் செல்ல முன்வைக்கப்படும் காரணத்தை ஆய்ந்தும், அக்காரணத்தின் வலிவு மெலிவுகளை நோக்கியும், அதற்கானத் தீர்வைக் கண்டும், கட்டுரையின் மையப்பகுதியான தமிழ் செம்மொழிச் செயலாக்கத்திற்கு இனி செய்யவேண்டியனவற்றை முறைப்படுத்தி, காரணகாரியங்களோடு பட்டிலிட்டும் காட்டுவதாகவும் இக்கட்டுரையின் நோக்கம் அமைகிறது.

            இதன் அடிப்படையில்,  தமிழ்மொழியின் தொன்மை, மொழியின் சிறப்பு, காலந்தோறும் கட்டமைப்பில் பாதிப்பு, தமிழ் வளர்த்த  அமைப்புகளும் இயங்கங்களும், செம்மொழிச் செயலாக்கத்திற்குச் செய்யவேண்டியன,  தொகுப்பு என்ற தலைப்புகளையும் பல உட்தலைப்புகளையும் கொண்டு இக்கட்டுரை அமைக்கப்படுகிறது. இவ்வகையில், தமிழைச் செம்மொழியாக அறிவித்துள்ள நடுவன் அரசுக்கும், அறிவிப்பிற்குக் காரணமான திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டிணிக் கட்சிகளுக்கும், காலந்தோறும் வலியுறுத்தி வந்த தமிழ் அமைப்புகளுக்கும், ஆர்வலர்களுக்கும் நன்றி நவில்வதோடு, இக்கட்டுரை ஆக்கத்திற்குத் தேவையான குறிப்புகளைக் கொண்டு விளங்கிய நூல்கள், ஆண்டு-மாத-வார-இதழ்கள், சிற்றிதழ்கள், நாளிதழ்கள் மற்றும் கட்டுரையாளர்கள், சொற்பொழிவாளர்களுக்கும் நன்றி நவில்வது இவண் கடமையாகிறது.

தமிழ்மொழியின் தொன்மை

            உலகில் ஏறத்தாழ மூவாயிரம் மொழிகள் வழங்குகின்றன. இவற்றுள் எழுத்து வழக்கு பெற்றவை சில மொழிகளே. அவற்றுள்ளும் இலக்கிய இலக்கண வளம் கொண்ட மொழிகள் மிகச்சில. அந்த மொழிகளுள்ளும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றையுடைய தொன்மை வாய்ந்த மொழிகள் மிகமிகச் சிலவே. அப்படிப்பட்ட தொன்மையான மொழிகளுள் தமிழ் ஒன்று என்று ஆய்ந்தறிந்து மொழிகின்றனர் மொழி அறிஞர்கள். ‘அறிவே அடிப்படை; கற்பனை அதன் துணை. உண்மை உள்ளீடு; இன்பமே அதன் விளைவு’ இத்தகைய இயல்பு மிக்க இலக்கியங்கள் பலவற்றை ஈன்றெடுத்த பெருமை, நம் தாய்மொழியாகிய தமிழ்மொழிக்கு உண்டு. இப்படிப்பட்ட பழமையான வரலாற்றினை உடைய தமிழ்மொழியில் நமக்குக் கிடைக்கும் முதல் இலக்கண நூல் தொல்காப்பியம். இந்நூலுக்கு முன்பே பல நூல்கள் இருந்திருக்கின்றன என்பதை இந்நூலில் காணப்படும் குறிப்புகளைக்  கொண்டே தெளிய முடிகிறது. தொல்காப்பியத்திற்குப் பிறகு இன்றுவரை தொடர்ச்சியாக இலக்கியங்களும் இலக்கணங்களும் கிடைத்து வருகின்றன. தமிழின் தொன்மை குறித்துக் குறிப்பிடும் இடத்து,

'திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்

விண்ணோடும் உடுக்களோடும்

மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த

தமிழொடு பிறந்தோம் நாங்கள்'

என்பார் பாரதிதாசன்.

‘பொருப்பிலே பிறந்து தென்னன்

புகழிலே கிடந்து சங்கத்(து)

இருப்பிலே யிருந்து வைகை

ஏட்டிலே தவழ்ந்த பேதை

நெருப்பிலே நின்று கற்றோர்

நினைவிலே நடந்து ஓரேன

மருப்பிலே பயின்ற பாவை’

என்பார் வில்லிப்புத்தூராரும்.

            தமிழ்மொழியே தமிழ்ச் சமூகத்தைக் கட்டமைத்தது. இனக்குழு வாழ்க்கையில் இருந்து அரசு என்ற நிலைக்கு மாறிய சூழலில் 'எல்லோரும் தமிழர் என்ற நிலையில் ஒன்று சேரவும், ஓர் அரசை மன்னவன் ஒருவன் ஏற்கவுமான பணிகள் நடந்தேறின. இப்பணிக்கு முதன்மைக் கருவிகளாகப் பயன்பட்டவை மொழியும், புலமையும் ஆகும். எனவே மொழியின் தேவை முதன்மைப் பெற்றது. இனவாரியாகப் பிரிந்து கிடந்த குழுக்களை மொழி மட்டுமே ஒன்று சேர்க்க முடியும், முடிந்தது’ என்ற தமிழ் பற்றிய  சமூகவியலாளர் பார்வை இங்கு நோக்குதலுக்குரியது. ஆகவே, தமிழின வரலாற்றிற்குத் தமிழே காரணமாக அமைந்த உண்மையும், மொழியின் தொன்மையும் இதன்வழிப் பெறப்படுகின்றன. என்று தோன்றியது என்று அரிதியிட்டுக் கூறமுடியாத வரலாற்றைக் கொண்டு விளங்கும் ஒரு சமூகத்தை உருவாக்கிய மொழியின் பழமையை எண்ணி வியத்தலன்றி வேறொன்றுமில்லை.

 தமிழின் சிறப்பு

         ஒரு மொழியை உலகு போற்றுதற்கு முன், அம்மொழிக்கு உரிமையாளன் அதன் சிறப்பை உணரவேண்டும். அதனைக் கொண்டாட வேண்டும். போற்ற வேண்டும். சிறப்பை நாடறிய-உலகறியச் செய்யவேண்டும். ஆனால், தமிழ் மொழிக்கு ஏற்பட்ட நிலையோ வேறு. தமிழ் உயர்ந்த தனியொரு மொழி என்று தமிழர்களே ஒத்துக்கொள்ள தயங்கிய நிலையினைத்தான்  கடந்தகால  வரலாறுகள் நமக்குக் காட்டுகின்றன.  திரு. போப் போன்றவர்கள் திருக்குறளையும், திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பின்னரே அவற்றின் பெருமையைத் தமிழர் எண்ணத் தலைப்பட்டனர். தமிழ் சிறந்த மொழி, தொன்மை வாய்ந்த மொழி, பிற திராவிட மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி, ஆரியத்திலிருந்து பிறந்த மொழி அன்று என்று கூற, மேலைநாட்டிலிருந்து வந்த ‘கால்டுவெல்’ போன்ற மொழியியல் அறிஞர்கள் தேவைப்பட்டனர். அதன் பின்னரே தமிழர்கள் தங்களையே பெருமையாகப் பார்த்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டது என்பதையும் வரலாறு பதிவு செய்துள்ளது.  அதன்பின் வந்த தமிழறிஞர்கள் தமிழை உயர்த்திப் பார்க்கத் தவறவில்லை. பன்மொழி புலமையோன் பாரதி,

                              யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்

                             இனிதாவது எங்கும் காணோம்;

என்று பன்மொழிகளையும் அறிந்து தமிழைப் போற்றுகிறான். தமிழைத் தம் உயிராக என்னும் புலவர்களும் தோன்றித் தமிழைக் காக்க முயன்றனர்.

            இன்று, தமிழ் உலகின் ஏறத்தாழ 54 நாடுகளில் பேசப்படுகிறது. அதோடு, ஊடகத்தின் மொழியாகத் திகழும் உலகில் சில மொழிகளில் தமிழ் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. சுமார் 17,50,000 இணைய பக்கங்கள் தமிழ் மொழிக்கு இருப்பதாக சுட்டிக்காட்டுகிறது சென்னையில் நடைபெற்ற ‘தமிழ் இணையம் 2003’ மாநாடு. இச்சிறப்பே, கணினி மென்பொருள் உற்பத்தியில் முன்னணி நிறுவனமான ‘மெக்ரொசாப்ட்’ நிறுவனத்தை, உலக மொழிகளில் ஆங்கிலத்திற்கு அடுத்த நிலையில் தமிழ்  மற்றும் ஷீப்ரூ(இப்பீஸ் )ஆகிய இரண்டு மொழிகளில் தம்முடைய கணினி நூலினை வெளியிடும் முயற்சியில் ஈடுபட வைத்துள்ளது. இது ஒவ்வொரு தமிழனும் மொழியால் அடையும் பெருமையாகும். மேலும், தமிழ் ஆட்சிமொழியாக இலங்கை மற்றும் சிங்கப்பூரிலும், நாடாளுமன்ற மொழியாக மலேசியாவிலும், சிறுபான்மையினர் மொழியாக கனடாவிலும் சிறப்பு செய்கிறது.  “என்றுமுள தென்றமிழ்’ என்ற          கம்பனின் வாக்கும், ‘அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழிய வே!’ என்ற பாரதியின் கூற்றும்  இன்று மெய்யானது கண்டோம்.

 காலந்தோறும் கட்டமைப்பில் பாதிப்பு

            மொழி கட்டமைப்பு என்பது, மொழிக்குரிய நெறிமுறைகளைப் பற்றிய கருத்தியலாகும். உரித்தான நெறிமுறைகளின்படி இயங்கும் மொழி கட்டமைப்பினைக் கொண்டிருக்கிறது. இக்கட்டமைப்பு பல்வேறு காரணங்களால் நெகிழ்ச்சி அடைகிறது. தமிழ் மொழி சிறந்த இலக்கிய வளமும் இலக்கணக் கட்டமைப்பும் கொண்டு விளங்குகிறது. இம்மொழி வளத்தில் காலந்தோறும் தாக்குதல்கள் நடந்து வந்துள்ளன. வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு வகையான தாக்குதலுக்கு மொழி ஆளாகியுள்ளதை வரலாறு நமக்குக் காட்டுகிறது. தமிழ் நாட்டில் தமிழ் அரசர்கள் வீழ்ச்சியடைந்து பிறர் ஆட்சிக் கட்டில் ஏறிய ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ்ச் சமூகத்தோடு தமிழும் சீரழிவிற்கு உள்ளாகி இருக்கிறது. ஆரியர்களின் வருகையால், அவர்களோடு ஏற்பட்ட மொழிக்கலப்பால், தமிழில் வடமோழி கலவாமல் எழுதமுடியாது என்ற நிலை ஏற்பட்டு, ‘மணிப்பிரவாள நடை’ என்ற ஒரு புதிய முறையே தோன்றி வழங்கிய காலகட்டத்தினையும் தமிழ்மொழி வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

            வணிகத்தின் தொடர்ப்பாலும், மேலைநாட்டவர் வருகையாலும் இன்னும் பிற காரணங்களாலும் உலக மொழிகள் பலவும்  தமிழில் வந்து கலந்தன. சமஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, போர்த்துகீசியம், உருது என்பன போன்ற பல மொழிகளின் சொற்கள் தமிழில் ஊடுருவின. தமிழின் கட்டமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தின. இவ்வாறு தமிழ் பன்மொழித் தாக்குதலுக்கு உள்ளானாலும், அதிக பாதிப்பை ஏற்படுத்தியது வடமொழியே. இத்தாக்குதலின் உச்சமாக, வடமொழி தேவமொழியாக போற்றப்பட்டது. தமிழ் நீசமொழி என்று ஒதுக்கப்பட்டது. உண்மையறியாத தமிழன் உணர்வின்றி ஊமையாகி நின்றான்.

 தமிழ் வளர்த்த  அமைப்புகளும் இயங்கங்களும்

            விதியே விதியே தமிழச் சாதியை

          என்செய நினைத்தாய்? எனக்குரை யாயோ?

எனப் புலம்புவான் பாரதி. தமிழும் தமிழரும் அழிவைநோக்கித் தள்ளப்பட்ட காலங்களில் எல்லாம் இப்படிப்பட்ட ஏக்கங்களும், புலம்பல்களும் வெளிப்பட்டதோடு, தமிழைக் காத்திடும் முயற்சியும் வெளிப்பட்டு நின்றமை காலந்தோறும் பதிவுசெய்யப்பட்டு வந்துள்ளது. சமயங்களாலும், தத்துவங்களாலும், தர்கங்களாலும் தமிழ் தன்னைக் காத்துக்கொள்ள அவ்வப்போது முனைந்துள்ளது. இடைக்காலத்தில் உரைநடையால் தமிழ் உயர்வு பெற்றதை அறிகிறோம். இருப்பினும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை தமிழின் தனிச்சிறப்பைத் தமிழரே அறியாத நிலைதான் இருந்தது.

            இந்நிலை, மேலைநாடுகளில் இருந்து வந்த அறிஞர்கள் தமிழருக்குத் தமிழின் சிறப்பைச் சுட்டிய பின்னரே மெல்ல மெல்ல மாறத்தொடங்கியது.  அதன் பின்னரே, தமிழின் உயர்வையும், சிறப்பையும், தொன்மையையும் தமிழர்கள் உணரத் தொடங்கினர். தமிழ்மொழி தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொள்ள ஆரம்பித்தனர். இப்பெருமைக்கு அடித்தளமிட்டவர்கள், ஜி.யு.போப், தமிழுக்குச் ‘சதுரகராதி’ இயற்றிய வீரமாமுனிவர், 1856-இல் ‘திராவிடமொழிகள் ஒப்பிலக்கணம்’ (The Comparaative Grammar of the Dravidian Languages) இயற்றிய கால்டுவெல் போன்றோர்களும்  பிறருமாவர்.

தமிழ் வளர்ச்சியில் நீதிபதி வேதநாயகத்தின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். கி.பி.1862-இல் நீதிமன்றத்தில் தமிழைக் கொண்டுவந்தார். முதல் தமிழ் நாவலை இயற்றிய பெருமையோடு, தமிழில் முதல் ‘சட்டப் புத்தகம்’ இயற்றிய பெருமையும் இவரையே சாரும்.  கி.பி.1773 முதல் ஆங்கிலம்தான் நீதிமன்ற மொழியாக இருந்து வந்ததென்பது குறிப்பிடத்தக்கது.  கி.பி.1887 முதல் தமிழின் மறுமலர்ச்சிக் காலம் எனலாம். காரணம். இவ்வாண்டில் இருந்துதான் கல்வெட்டுகளின் அறிக்கைகள் வெளிவரத்தொடங்கின. தமிழின் தலையெழுத்தும் மாறத் தொடங்கியது. தமிழின் தொன்மை வெளியுலகத்திற்குத் தெரிய ஆரம்பித்தது. பண்டைத் தமிழரின் நாகரிகத்தை உலகம் அறிய முற்பட்டது.

            தமிழுக்கு மேலும் வலிமையும் பெருமையும் சேர்க்குமுகத்தான், கி.பி.1901-இல் பாண்டித்துரைத் தேவரால் மதுரைத் தமிழ்ச்சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இச்சங்கம் தெற்கிலிருந்து தமிழ் வளக்கும் பணியைத் தொடங்கியது. 1903இல் தமிழ் மொழிக்கென்று தூயதமிழில் ‘செந்தமிழ்’ போன்ற இதழ்களும், 1911-இல் கரந்தை தமிழ்ச் சங்கமும் தோன்றி தமிழ் வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டன. கி.பி.1914-இல் தமிழ்நாட்டில் தமிழை ஆட்சி மொழியாகவும், கல்வி மொழியாகவும் ஆக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வடசொற்களைத் தவிர்க்க முடியாது என்ற நிலையிருந்த காலகட்டத்தில், எம்மொழியின் தயவும் தமிழிற்குத் தேவையில்லை, தமிழ் தம்சொற்களைக் கொண்டே தனித்தியங்க முடியும் என்பதை உணர்த்த, 1916-இல் தோன்றியதுதான் ‘தனித்தமிழ் இயக்கம்’. இதனைத் தோற்றுவித்தவர் மறைமலை அடிகள். இவ்வாண்டிலேதான் ‘தென்னிந்திய நலவுரிமைச் சங்கமும்’ தோன்றம் பெற்றது.

       தனித்தமிழ் இயக்கம் வழுப்பெற்று பலரும் அதனோடு சேர்ந்து மொழியின் தனித்தன்மைக்குப் போராடிய காலகட்டத்தில், தமிழ் தனிமனித பார்வையில் இருந்து அரசாங்கத்தின் பார்வைக்கு ஆட்பட்டது. அதன்பயனாக, 1926-இல் சிவாஞானம் பிள்ளையை முதல்வராகக் கொண்ட நீதிக்கட்சி புமுமுகவகுப்பில் தமிழைக் கொண்டு வந்தது. அதனைத் தொடர்ந்து, 1930-இல் இளங்கலையில் தமிழ் பாடமாக வைக்கப்பட்டது. மேலும், 1934-இல் பி.ஏ. ஆனர்சில் தமிழ் அறிமுகப்படுத்தப்பட்டது. இவையனைத்தும் நீதிக்கட்சியின் ஆட்சியில் நடந்தேறின.

            தமிழ் இவ்வகையான சிறப்புகளைப் பெற்று வளர்ந்த அதே வேளையில், வளர்ச்சிக்குத் தடையாக ஒரு பேரிடியம் காத்திருந்தது. அது, 1937 சூலை 11-இல்  ராஜாஜியால் கொண்டுவரப்பட்ட கட்டாய இந்தி மொழிப் பயிற்புச் சட்டம். இச்சட்டத்தின் ஒரே நன்மை தமிழ் நாட்டில் தமிழ் அறிஞர்களை ஓரணியில் திரளச்செய்ததே. முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் எழுந்தது. அவ்வரசாணையைப் திருப்பப் பெற வைத்தது. அதே வேளையில் வரலாற்றில் ஒரு வியப்பாக, இந்தியைக் கட்டாயமாக்க சட்டம் கொண்டுவந்த ராஜாஜியே தமிழ் மொழியை 1938-இல் கட்டாய பயிற்று மொழியாக அறிவித்தார். அவ்வேளையில்  சுப்பராயன் கல்வி அமைச்சராக இருந்து பெருமைத் தேடிக்கொண்டார். 1943-இல் ராஜா சர்.அண்ணாமலைச் செட்டியார் தமிழிசைச் சங்கத்தைத் தோற்றுவித்து, தமிழிசைக்கு புத்துயிர் ஊட்டினார்.  1948-இல் ஓமந்தூர் ராமசாமி செட்டியார்- முதல்வராகவும், அவிநாசிலிங்கம் கல்வி அமைச்சராகவும் இருந்த அமைச்சரவை மீண்டும் இந்தியைக்  கட்டாயப் பாடமாக அறிவித்து, எழுந்த எதிர்ப்பின் காரணமான உடனே திரும்பப் பெற்றது.

இவ்வகையான வரலாற்றுப் பின்புலத்தில், ஆகஸ்டு 4,  1960-இல் அப்போதைய பாரதப் பிரதமர் நேரு, இ.வி.கே.எஸ். சம்பத்துக்கு அறிக்கை  அனுப்பினார். அதில், 'இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரையில் ஆங்கிலம் துணைமொழியாக இருக்கும்' என்று உறுதியளிக்கப்பட்டது. இதுவே இன்றைய நாள் வரையில் பின்பற்றப்படுகிறது. இவ்வறிக்கையிலும், ‘இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரையில் அவ்வவ் பிராந்திய மொழிகளே ஆட்சிமொழியாக இருக்கும்’ என்று இல்லை. இந்நிலை மாறாத வரையில் மொழிக்கு ஏற்படும் சிக்கல்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கும் என்பதில் வியப்பேதுமில்லை. 1965-ஆம் ஆண்டு மீண்டும் இந்தியை எதிர்த்துப் போராட வேண்டிய நிலைக்குத் தமிழர்களைத் தள்ளியது. மொழிப்போராட்டம் வரலாறு காணாத வகையில்  தீவிரமடைந்தது. இவ்வமையம் திராவிட கட்சிகள் முழுமூச்சாக இந்தி எதிர்ப்பில் ஈடுபட்டன. இந்தி நுழைவு தடுக்கப்பட்டது. நேருவின் வாக்குறுதியும் காப்பாற்றப்பட்டது. இக்காலகட்டம் இந்தியைப் புறக்கணித்து ஆங்கிலத்திற்கு இருக்கை அமைத்துவிட்டதாக சமூக நோக்காளர்கள் கருதுகின்றனர்.

அதன் பின்னர் பலரும், பல அமைப்புகளும் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்படவேண்டும் என்று கட்டுரைகளும், அறிக்கைகளும், ஊர்வலங்களும், உண்ணாவிரதங்களும்  மேற்கொண்டனர். ஆனால், அவை போராட்டமாக மாறவில்லை. இவ்வாறு காலந்தோறும் தமிழின் வளர்ச்சியில் பல ஏற்ற இறங்கங்கள் ஏற்பட்டு, பல அமைப்புகளாலும், கட்சிகளாலும், தனிமனித செயல்பாடுகளாலும், தற்போதுள்ள திமுக தலைமையிலான கூட்டணிக்கட்சியின்  முயற்சியாலும்  தமிழ் இன்று செம்மொழி என்ற  தகுதியை அறிவிப்பாக பெற்றுள்ளது.  1918-இல் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று முன்வைத்த மறைமலை அடிகளாரின் கோரிக்கை ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலத்துக்கப்  பின்பு அதாவது,  2004-இல் தான் நிறைவேறியுள்ளது. 

செம்மொழிச் செயலாக்கத்திற்குச் செய்யவேண்டியன 

            கட்டுரையின் மையப்பொருண்மையாகிய ‘செம்மொழி செயலாக்கத்திற்குச் செய்யவேண்டியன’ என்பதைக் கொண்டு இப்பகுதி அமைக்கப்படுகிறது. இதில், மைய அரசு செய்ய வேண்டுவன, மாநில அரசு செய்ய வேண்டுன, தமிழ் மக்கள் செய்வேண்டுவன என்ற மூன்று உட்தலைப்பின் கீழ் செயல்பாடுகள்  தேவைகளின் முக்கியத்துவத்தோடு தொகுக்கப்படுகின்றன.

 மைய அரசின் செயல்பாடுகள்

            இந்திய அரசியில் அமைப்புச் சட்டத்தின் படி மைய அரசு தனக்கென சில அதிகார மையங்களைக் கொண்டு விளங்குவதால், மொழி சார்ந்த நிலையில் மைய அரசின் செயற்பாடுகள் இன்றியமையாததாகின்றன. இந்நிலையில் சில செயப்பாடுகள் இங்கு வரைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. அவை மைய அரசின் பார்வைக்கு முன்மொழியப்படுவதாக அமைகின்றன. அதன் வழி கீழ்க்கண்ட செயல்பாடுகள் முன்மொழியப்படுகின்றன.


Ø  எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அத்துனை மொழிகளையும் இந்தியாவின் ஆட்சிமொழியாக அறிவிக்கப்படுதல் வேண்டும். இவற்றிற்கு முதல் படியாக செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ள தமிழை ஆட்சிமொழியாக அறிவித்து ஆணை வெளியிடவேண்டும்.

Ø  அடிக்கடி சுட்டிக்காட்டப்படும் ஒன்று நாடாளுமன்ற உரைகளின் மொழிகள். இவைகள் மாநில மொழிகளில் நிகழ்த்தப்படலாம் என்று அவ்வப்போது அறிக்கைகள் வருவதுண்டு.  இவற்றிற்குத் தனிச்சட்டம் இயற்றப்படுதல் வேண்டும்.

Ø  தமிழ் உச்சநீதிமன்ற மொழியாக வேண்டும். 'உலகின் முன்னேறிய நாடுகளான சீனா, உருசியா, ஜப்பான், பிரான்சு, ஜெர்மன், நார்வே, இத்தாலி ஆகிய 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் உயர்நீதிமன்ற மொழி ஆங்கிலமாக இல்லை. அந்தந்த நாட்டு மொழிகளே நீதிமன்ற மொழிகளாக உள்ளன. அவ்வகையில் இந்தியாவில் செம்மொழித் தகுதி வழங்கப்பட்ட தமிழும் உச்சநீதிமன்ற மொழியாக வழங்கப்படுதல் வேண்டும்

Ø  தமிழ் செம்மொழி மட்டுமல்ல, நவீன மொழியும் கூட. தமிழுக்குச் செம்மொழி என்ற தகுதி வழங்கப்பட்ட வேளையில், தமிழ், நவீனமொழி என்கின்ற தகுதி மறைக்கப்பட்டுவிடுதலோ, அல்லது இழந்து விடுதலோ கூடாது. இந்திய செம்மொழி (classical Indian Language) என்ற பட்டியலில் தமிழ் வைக்கப்பட்டது போலவே, ‘நவீன இந்திய மொழிகள்’ (Mordern Indan Language) என்ற பட்டியலிலும் தமிழ் சேர்க்கப்படுதல் வேண்டும்.

Ø  1999-2000ஆம் ஆண்டை அப்போதைய மைத்திய அரசு ‘சமஸ்கிருத’ ஆண்டாக  அறிவித்து, அம்மொழியின் வளர்ச்சிக்கு ரூ 1,050 கோடி ஒதுக்கியதைப் போல, ஐந்தாண்டு காலத்தை ‘தமிழின் ஆண்டுகளாக’ அறிவித்து,  பெருமளவில் நிதி உதவி வழங்கி, தமிழின்  வளர்ச்சிக்குத் தேவையான அத்துனை உதவிகளையும் மைய அரசு மேற்கொள்ள வேண்டும். மேலும், மைய அரசால் மொழி வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் தொகையில் பெரும்பங்கு வடமொழிக்கும் (சமஸ்கிருதம்) சிறு பங்கு பிறமொழிகளுக்கும் ஒதுக்கப்படும் நிலை உள்ளது. அதாவது, சமஸ்கிருதத்திற்கு ஒன்பது கோடியும், இந்தி மொழிக்கு எட்டு கோடியும், பிற மொழிகளுக்கு 2.2 கோடியும் அரசு ஒதுக்கி வருகிறது. பிற மொழிகள் என்பதில் தமிழும் அடக்கம். இந்நிலை உடனடியாக மாறவேண்டும். தமிழின் வளர்ச்சிக்கென சமஸ்கிருதத்திற்கு ஒதுக்குதலைப் போல நிதி ஒதுக்க வேண்டும்.

            மைய அரசு, செம்மொழிக்கானத் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டு செயல்திட்டங்கள் தீட்டி செயலாக்கம் செய்ய வேண்டும். அதே வேளையில், செம்மொழி என்ற புதுப்பட்டியல் சாகித்திய அகாதமியின் கீழிருக்கும் இப்போதைய நிலை  ஏற்புடையதன்று. இதனை, மனிதவள மேம்பாட்டுத் துறையின் நேரடிப்பார்வையில்  வைக்கப்படுதல் வேண்டும். இவ்வமைச்சகத்தின் மூலம் தமிழ் வளர்ச்சிக்கு விரைந்து செயல்திட்டங்கள் இயற்றப்படுதல் வேண்டும். தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தேவையான ஆக்கப்பணித் திட்டங்களை இயற்ற தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள், செம்மொழி ஆக்கத்திற்குப் பாடுபட்ட நல்லறிஞர்கள், ஆய்வு மாணர்கள் போன்றோர்களைக் கொண்ட வல்லுநர் குழுவினை உருவாக்குதல் வேண்டும். அவர்கள் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் செயல்திட்டங்கள் அமைதல் வேண்டும்.

            இந்தியப் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் செம்மொழிக்கான உயராய்வு மையங்கள் தோற்றுவித்தல் வேண்டும். அதே போல ஒவ்வொரு பல்கலைக்கழகங்களிலும் தமிழ்த் துறையினை ஏற்படுத்துதல் வேண்டும். மேலும், உலக நாடுகளில் உள்ள பல்கலைக்கழங்கங்களில் செம்மொழிகளுக்கான உயராய்வு மையங்களைத் தோற்றுவிக்க மைய அரசு நிதி உதவி வழங்க வேண்டும். செம்மொழி வளர்ச்சிக்கான ஆய்வு மையங்களை இந்தியாவிலும், உலக நாடுகளிலும் ஏற்படுத்தி, அதற்கான தமைமை மையத்தை தமிழகத்தில் நிறுவுதல் வேண்டும்.

            தொலைபேசிப் புத்தகங்கள், அஞ்சலக அட்டைகள், தபால் தலைகள், தொடர்வண்டித் துறையின் பரிமாற்றங்கள், மத்திய போக்குவரத்துத் துறைகள் போன்றவற்றில் தமிழிலும் செயல்பாடுகளை மேற்கொள்ளல் வேண்டும். தகவல் தொழில்நுட்பத் துறையின் வழித் தமிழின் பயன்பாட்டினை ஊக்குவிக்க வழிவகை செய்ய வேண்டும்.

            திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். தமிழ் செவ்விலக்கியங்களை இந்தியாவின் பிற மொழிகளில் மொழிபெயர்க்க நிதி ஒதுக்கவேண்டும். ஆண்டுதோறும் தமிழறிஞர்களைத் தேர்ந்தெடுத்துப் பாராட்டுச் சான்றிதலும், பரிசும் வழங்கப்படுதல் வேண்டும். அவ்வண்ணம் தேர்ந்தெடுக்கப்படும் அறிஞரின் குடும்பத்தை மைய அரசு தத்தெடுக்க வேண்டும்.

            இந்தி பிரசார சபா போன்று ‘தமிழ்ப் பரப்பும் மையம்’ மைய அரசால் தோற்றுவிக்கப்படுதல் வேண்டும். மைய அரசால் நடத்தப்படும் ‘இந்திய ஆட்சிப்பணி’ , ‘இந்திய காவல் பணி’ (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.) போன்றவற்றைத் தமிழிலும் எழுதும் சட்டம் இயற்றப்படுதல் வேண்டும்.

            செம்மொழிகளாக ஏற்றுக்கொண்டுள்ள தமிழ், பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம் போன்றவை காலந்தோறும் கொண்டிருந்த உறவுமுறைகளை ஆய்வு செய்தலும், அவற்றின் தோன்றம், வளர்ச்சி, வீழ்ச்சி, மொழி பகிர்வு குறித்து விருப்பு வெறுப்பற்ற நிலையில் ஆய்வு செய்தலும், அவற்றை உலகிற்கு அளித்தலும் வேண்டும். இந்திய செம்மொழிகளை உலக செம்மொழிகளோடு ஒப்பீடு செய்ய ஆவன செய்தல் வேண்டும்.

 மாநில அரசின் செயற்பாடுகள்

            மொழி வளர்ச்சியைப் பொறுத்தமட்டில் அவ்வம்மொழிகள் வழங்கும் மாநில அரசின் செயல்பாடுகளினாலேயே அம்மொழியின் வாழ்வும், வீழ்வும் அமைகிறது. மொழிப்பற்றாளர்கள் ஆட்சியில் சமூகத்தோடு மொழியும் மேம்மையுறும். இந்தியாவின் சில மாநிலங்களில் கொள்கை அளவில் அவ்வம்மாநில மொழிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளமை இங்கு எண்ணத்தக்கது.  இவ்வகை ஆதிகாரங்களைக் கொண்டுள்ள மாநில அரசு மொழிவளர்சிக்கு, செம்மொழிச் செயலாக்கத்திற்குச் செய்யவேண்டுவன இங்கு சுட்டப்படுகின்றன.

Ø  செம்மொழிச் செயலாக்கத்தைப் பொறுத்தவரையில் மாநில அரசு உடனடியாக செய்யவேண்டியவற்றுள் முதன்மையானது, இருமொழிக் கொள்கைக்கு விடைகொடுப்பதும், ஒரு மொழிக் கொள்ளைக்கு வழிவகுப்பதுமாகும். பள்ளிகளில் தமிழைக் கட்டாய மொழி ஆக்குதலும், உயர்கல்வியைத் தமிழில் நடத்த நடவடிக்கை எடுத்தலும் அடுத்த செயலாகும். மராட்டிய மாநிலத்தில் வாழ்வோர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும், அவர்கள் மராட்டிய மொழியைக் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும் என்ற வகையில், அம்மொழிப் பாடத்தைக் கட்டாயப் பாடமாக மராட்டிய அரசு கொள்கை அளவில் முடிவெடுத்து அதனை அறிவிக்கவும் செய்தது. குஜராத்தைச் சேர்ந்தவர்கள் மராட்டியத்தில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் குழந்தைகள், மாரட்டிய மொழியைப் பள்ளியில் கட்டாயப் பாடமாக படிக்க வேண்டுமா? என்று மராட்டிய மாநிலத்தின் நீதிமன்றத்தை அணுகினர். தமைமை நீதிபதி உள்ளிட்ட மூன்று நீதிபதிகளைக் கொண்ட குழு இதனை விசாரித்து தீர்ப்பும் அளித்துள்ளது.  அத்தீர்ப்பில், 'ஒரு மாநிலத்தில் அந்த மாநில மொழியைக் கட்டாயப் பாடமாகவைப்பது அரசின் கொள்கை முடிவாகும் என்றும் அது தனிமனிதனின் அடிப்படை உரிமையைமீறிய செயலாகாது என்றும் தீர்ப்பு வழங்கினர்'(செந்தமிழ்ச்செல்வி).

Ø  தமிழ் தமிழகப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயிற்றுமொழியாக இல்லை. இன்றைய நிலையில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அனுமதி பெற்ற ஆங்கிலப் பள்ளிகளும்  10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அனுமதி பெறாத ஆங்கிப் பள்ளிகளும், 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆங்கிலோ-இந்திப் பள்ளிகளும் புற்றீசல் போல தோன்றியுள்ளன. தமிழ் மெல்லச் சாவதற்கு இது அறிகுறி போலும். தமிழைக் கட்டாயப் பாடமாக்க தமிழக அரசிற்கு மேற்கண்ட நீதிமன்ற  தீர்ப்பு ஒன்றே போதும். தமிழக அரசு இதனைச் செயல்முறைப்படுத்துதலில் எவ்விதச் சிக்கலும் இல்லை.

Ø  தமிழ் நாட்டில் உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழங்குதல் வேண்டும். நம்நாட்டில் வங்காளம், உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும் மாநில மொழிகள் நீதிமன்ற மொழிகளாக உள்ளன. நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளிலேயே வழக்கு விசாரணை நடத்தலாம், வழக்கறிஞர்கள் வாதிடலாம், தீர்ப்பு வழங்கலாம் என்று அரசியில் சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.(தமிழ்ப்பாதுகாப்பு இயக்கம்) தமிழ் நாட்டில் ஏழு சட்டக்கல்லூரிகள் உள்ளன. அவற்றில் தமிழில்தான் பயிற்றுவிக்கப்படுகிறது; தமிழில்தான் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். இதனைக் கருத்தில்கொண்டு உயர்நீதிமன்ற மொழி தமிழாக இருத்தல் வேண்டும். மெட்ராஸ் ஐகோர்ட்டு  என்பதை ‘சென்னை உயர்நீதிமன்றம்’ என்று வழங்குதல் வேண்டும்.

Ø  தமிழ் வளர்ச்சிக்கும் ஆய்விற்கும் மையங்கள் தோற்றுவிக்கும் முன்பு ஏற்கனவே இயங்கி வரும் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்ப் பல்கலைக் கழகம்  போன்றவற்றிற்கு நிதியுதவியும், ஆய்வுமாணர்களின் கல்விக்கு உதவித்தொகை, உறையுள் வசதி போன்றவற்றையும் ஏற்படுத்தி, அவற்றின் தரத்தினை மேம்படுத்த அரசு ஆவண செய்தல் வேண்டும். அதோடு, தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் தமிழ் உயராய்வு மையத்தினை ஏற்படுத்தி ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். தமிழுக்கென புதிதாக ஆய்வு மையங்களையும், நிறுவனங்களையும் தோற்றுவித்தல் வேண்டும். மொழிவளர்ச்சித் துறையை மேம்படுத்துதல் இன்றியமையாமை.

Ø  தமிழக நாட்டுப்புறக் கலைகளையும், தமிழிசையையும், ஊக்குவிக்க வேண்டும். தமிழிசைக் கல்லூரிகளை உருவாக்குதல் வேண்டும். நாட்டுப்புறக் கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பரிசுகளும், நிதியுதவியும் புரிதல் வேண்டும். நாட்டுப்புறக் கலைக்கென்று புதிய கல்லூரியைத் தோற்றுவித்து, இவ்வகைக் கலைகள் அழிவில் இருந்து காத்தல் வேண்டும். இக்கல்லூரியில் உலகின் பிற நாடுகளிலும் வாழும் தமிழ்ரகளின் கலைகள்  குறித்து ஆராயப்படுதல் வேண்டும்.

Ø  ஓலைச் சுவடியில் இருக்கும் கலைச் செல்வங்களைக் கணினியில் ஏற்றுதல் வேண்டும். பதிப்பிக்கப்படாமல் இருக்கும் ஓலைச்சுவடிகளைப் பதிப்பிக்க அரசு நிதி ஒதிக்கீடு செய்தல் வேண்டும். தொல்லியல் துறைக்கு ஊக்கமும், நிதியும் வழங்கி, பண்டைத் தமிழர்களின் நாகரிகத்தை வெளிக்கொணர்ந்து உலகறியச் செய்தல் வேண்டும். இதுவரையில் வெளிவந்துள்ள, ஆங்காங்கு சிதறிக்கிடக்கும் சான்றாதாரங்களைக் கணினியில் ஏற்றி இணையத்தில் பதிவு செய்தல் இன்றியமையாதது. இணையத்தில் இதற்கெனத் தனி இணையப்பக்கம் மாநில அரசால் உருவாக்கப்படுதல் வேண்டும்.

Ø  தமிழ்ப் பண்பாடு- பழக்கவழக்கங்களுக்கெனத் தனி இணைய பக்கம் உருவாக்கப்படுதல் வேண்டும். இப்பக்கத்தில், உலகின் ஒவ்வொரு மூலையிலும் வாழும் தமிழரின் பழக்க வழக்கங்கள் பண்பாடுகள் பதிவு செய்தல் வேண்டும். எவ்விடத்தும் வாழும் தமிழர் பிறரைப் பற்றி உணர்ந்து கொள்ள வழிவகை ஏற்படுத்துதல் வேண்டும்.

Ø  இணையதள ஒருங்கிணைப்பு தளத்தினை ஏற்படுத்துதல். அதில், இணையதளம் தொடங்குமுன் பதிவு செய்தல், தமிழ் இணைய பக்கங்கள் பற்றிய அகரவரிசை பட்டியலை உள்ளீடுசெய்தல், பட்டியலிலுள்ள இணைய பக்கங்களின் உள்ளீட்டுத் தகவல்களின் குறிப்புகளைக் கொடுத்தல், ஒவ்வொரு பக்கமும் பயன்படுத்தும்  எழுத்துரு பற்றிய விவரங்களைக் கொடுத்தல். போன்றவை இணையத்தில் தமிழின் சீரமைப்பிற்கும், பயன்பாட்டு பரவலுக்கும் வழிவகுக்கும். இதற்கென மொழித் தொழில்நுட்பத் துறையினை அரசு ஏற்படுத்தவேண்டும்.

 

Ø  ‘இன்னும் அறியப்படாத இலக்கியவாதிகள் இணையத்தில் ஏராளமாக இருக்கின்றனர். உலகத் தமிழர்களுக்கு இவர்கள் நன்கு அறிமுகமாகி இருந்தும், தமிழ்நாட்டில் இவர்களின் முகங்களுக்கு இன்னும் முகவரி எழுதப்படவில்லை. இவர்களைப் போன்றவர்களை இனங்கண்டு ஊக்குவிப்பது தமிழின் வேருக்கு நீரூற்றுவது போன்றதாகும். கவிதை மட்டுமின்றி, இலக்கியத்தின் அத்தனைக் கூறுகளையும் இவர்கள் ஆட்கொள்கின்றனர. ஆனால், அதன் பயன் இணையத்தோடு இயங்குபவர்களுக்கு மட்டுமே என்பது  பயன்பாட்டு நிறைவின்மையாக அமைகிறது. இணையத்தில் வெளிவரும் சிறந்த கவிதைகள், கதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் போன்றவற்றை  நூல்வடிவிலேற்றி அனைவருக்கும் எட்டச் செய்தல்  இன்றைய அவசர அவசியத் தேவையாகிறது.’ மேலும், இணையத்தில் இயங்கும் தமிழ் ஆர்வலர்களை இனங்காட்டுவதும், அவர்களை அறிந்து அரசின் வழி பாராட்டுவதும், ஊக்கப்படுத்துவதும் எதிர்காலத்தை நோக்கித் தமிழை இட்டுச் செல்வதாக அமையும்.

Ø  பண்டைத் தமிழ் இலக்கியங்களான, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, ஐம்பெரும்காப்பியங்கள், திருக்குறள், இலக்கணமான தொல்காப்பியம் போன்றவற்றை ஒவ்வொரு தமிழனும் உணரும் வகைச் செய்யவேண்டும். இவ்வகை செவ்விலக்கியங்களை நவீன முறையில் பதிப்பித்தலும், பழை பதிப்புகளை புதுப்பித்தலும் அரசின் கடமையாகிறது. இதற்கென ‘செவ்விலக்கியச் செம்பதிப்புகள்’ வெளியிடுதல் வேண்டும். இதற்கான ஒரு தமிழறிஞர் குழுமத்தை ஏற்படுத்துதல் நன்று. இக்குழுமம் இதுவரையில் வெளிவந்துள்ள பதிப்புகளைத் திறனாய்வுக்கு உட்படுத்துதல் இலக்கியச் செழுமைக்கு வழிவகுப்பதாக அமையும். தமிழ் ஒப்பீட்டுத் துறைக்கு ஊக்கம் கொடுத்தல் காலத்தின் கட்டாயமாகிறது. பிறமொழி இலக்கியங்களை தமிழ் இலக்கியங்களோடு ஒப்பீடு செய்தலும், சிறந்த கருத்துகளை வெளிக்கொணரலும் உலகலாவிய பார்வைக்கு வழிவகுக்கும்.

Ø  கல்வித் திட்டத்தை மாற்றி அமைத்தலும், விளையாட்டு முறைக் கல்வியையும், கணினி வழி ‘அசைவூட்டத்துடன்’ கூடிய கல்வியையும், கட்டாயமாக்குதல் மாணவனின் பாடச் சுமையைக் குறைப்பதோடு, இலக்கியத்தில் ஆர்வத்தினையும் தூண்ட வழிவகுக்கும். பண்டைத் தமிழ் இலக்கியங்களை எளிய வடிவிலும், அசைவூட்ட நிலையிலும் கொடுத்தல் மொழியின் வளர்ச்சிக்கும் பண்டைத் தமிழர்களின் உயர்பண்பை மாணவர்  மகிழ்ச்சியுடன் கற்றலுக்கும் வழிவகுக்கும்.

Ø  அறிவியல் போன்ற துறைசார் நூல்கள் தமிழில் இயற்றப்படுதலும், அவற்றிற்கு சொற்களஞ்சியம் தோற்றுவித்தலும், பன்மொழி அகராதிகள் உருவாக்கப்படுதலும் வேண்டும். சங்க இலக்கியங்களுக்கானத்  தமிழ்-ஆங்கில-இந்தி அகராதி உருவாக்க வழிவகை செய்ய வேண்டும். தமிழ் இலக்கிய-இலக்கண சொற்களஞ்சியத்திற்குக் குழு அமைத்தல் வேண்டும்.

Ø  'தமிழ் வரிவடிவம் தெரியாத மொரீசியசு, ரியூனியன், தென் ஆப்பிரிக்கா, பிஜித்தீவு இவற்றில் வாழும் தமிழர்கள் 'உருமாற்று' (டிரேன்ஸ்லிடரேசன்) முறையைத்தான் விரும்பிக் கேட்கிறார்கள். தமிழ் நூல்களையே இந்த முறையில் அச்சிட்டுத் தரவேண்டுமென்று விரும்புகிறார்கள். ஆதலின் இவ்வகையான முறையில் இலக்கியங்களை எழுத்துரு மாற்றமும், அந்நாட்டிலுள்ள தமிழர்கள் தமிழை கற்கும்வகையில் தமிழ் வளர்ச்சி மையங்களையும், நிறுவனங்களையும் மாநில அரசு அவ்வந்நாடுகளிலே நிறுவுதல் மொழி வளர்ச்சிக்கு வழிவகுப்பதாக அமையும்.

Ø  தமிழ்ப் பயின்றோருக்கும் தமிழில் பயின்றோருக்கும் வேலைவாய்பிற்கான வழிவகையினை மாநில அரசு ஏற்படுத்துதல் வேண்டும். தமிழ்ப் படித்தோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.  தமிழ்ப் படிப்போருக்கும் தமிழில் படிப்போருக்கும்  ஊக்கத்தொகை வழங்குதல் வேண்டும். 

Ø  மக்கள் தகவல் தொடர்பு ஊடகங்களில் (தொலைக்காட்சி, வானொலி, இதழ்கள் போன்றவை) தமிழ்ப் படித்தோருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். நிகழ்ச்சிகள் தூய தமிழில் தொகுக்கப்படுதலும், வெளியிடப்படுதலும் வேண்டும்.

 

எளியநடை யில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்

இலக்கணநூல் புதிதா இயற்றுதலும் வேண்டும்

வெளியுலகில், சிந்தனையில் புதிது புதிதாக

விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெலாங் கண்டு

தெளிஉறுத்தும் படங்களொடு சுவடியலாம் செய்து

செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்

எளிமையினால் ஒருதமிழன் படிப்பில்லை யென்றால்

இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்

 

உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள்

ஒருத்தர்தயை இல்லாமல் ஊரறியும் தமிழில்

சலசலென எவ்வடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்

தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும்

இலவசநூற் கழகங்கள் எவ்வடத்தும் வேண்டும்

எங்கள்தமிழ் உயர்வென்று நாம்சொல்லிச் சொல்லித்

தலைமுறைகள் பலகழித்தோம்; குறைகளைந்தோ மில்லை

தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்!

 

என்ற பாரதிதாசனில் விரும்பமும் அழைப்பும்   தமிழ் செம்மொழியான இந்நாளிலாவது செயலாக்கம் பெறுதல் வேண்டும். இவற்றிற்கு மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ளல் வேண்டும்.

            மொழி பற்றின்மைக்குக் காரணம் - பிறமொழி மோகம், தமிழ் படித்தால் இனி பிழைக்க முடியாது என்ற நிலை, தமிழ் பேசினால் கவுரவக் குறைச்சல் என்பன போன்ற காரணங்கள் முன்னிறுத்தப்படுகின்றன. இவற்றைப் போக்க அரசாங்கம் தம் பங்களிப்பினை ஆற்ற வேண்டும். அரசு துறைகள் அனைத்திலும் தமிழிலேயே தொடர்புகள் மேற்கொள்ள வேண்டும். ஏங்கும் தமிழை எங்கும் தமிழ் என்ற நிலைக்கு மாற்ற வேண்டும். இந்நிலை அரசின் தயவில்லாமல் நிறைவேற வாய்ப்பு இல்லை.

Ø  பெயர்பலகைகளில் தமிழ் என்பதை அறிக்கையோடு நில்லாமல் கட்டாய அமல்படுத்த வேண்டும். முறை பிறழும் கடைகள் காரணம் சொல்லி மூடப்படுதல்  வேண்டும். தமிழில் தொலைவரி(fax) வேண்டும், தமிழில் பணவிடைத்தாளும் நிர்ப்பும் வகை செய்ய வேண்டும்.

Ø  கலைத்துறையில் தமிழ்மொழிக் கொலை கலையப்படுதல் வேண்டும். இதில் அரசு மிக்க கவனம் செலுத்துதல் வேண்டும். கதை, கவிதை, போன்ற இலக்கிய வடிவங்கள் சமூகத்தில் நிகழ்த்தும் பாதிப்புகளைவிடவும், தொலைக்காட்சி, மற்றும் திரைப்படங்களில் காணும் கலைவடிவத்திற்கு விளைவும்  வீச்சும் அதிகம்.  2003ஆம் ஆண்டு முடிவிலும், 2004-ஆம் ஆண்டு தொடக்கத்திலும் வெளிவந்த திரைப்படங்களில், தமிழ் அல்லாத பெயர்த்தாங்கி வெளிவந்த திரைப்படங்களைப் பட்டியலிடுகிறது கணையாழி.  இதில் 125 படங்களில் சுமார் 22 க்கும் மேற்பட்டவை அர்த்தமற்ற அல்லது ஆங்கிலத்திலான திரைப்படங்கள் எனக் குறிப்பிடுகிறது. (இதில் சில - பாப்கான், வெல்டன், தூள், ஜே.ஜே., எஸ்.மேடம், தம், செம ரகளை, குத்து, ஜோர், நியூ, பாய்ஸ், கில்லி, ஏய், சுள்ளான்,) இப்புள்ளி விவரம், மொழியளவிலும், சமூக அளவிலும் ஏற்பட்டுள்ள சீர்கேட்டை சுட்டிக்காட்டுவதாக அமைகிறது. இந்நிலை மாற அரசின் துணை இன்றியமையாதது. பிறமொழிகளின் பெயர்கள் வைக்கப்படுதல் கூடாது என்ற சட்டத்தோடு, தூய தமிழில் பெயர்தாங்கி வரும் திரைப்படங்களுக்கும், தமிழ்ப் பண்பாடு, நாகரிகத்தை வெளிக்காட்டும் வண்ணம் வெளிவரும் திரைப்படங்களுக்கும் பரிசுகளும், நிதிஉதவியும் அரசு வழங்கலாம். தூய தமிழ் வசனங்களை எழுதுவோருக்கும், நற்றமிழில் பாடல்கள் இயற்றுவோருக்கும் பாராட்டும் பரிசும் ஆண்டுதோறும் வழங்கலாம்.

 தமிழர்களின் செயற்பாடுகள்

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;

இறவாத புகழுடைய புதுநூல்கள்

தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;

மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்

சொல்வதிலோர் மகிமை இல்லை;

திறமான புலமையெனில் வெளி நாட்டோர்

அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்

என்கிறான் பாரதி. இந்நிலை எய்திட அரசாணை தேவையில்லை. தமிழ் ஆர்வலர்களின் முயற்சியும், செயலும் தேவை.

            மொழி இல்லாமல் ஒரு சமூகம் இயங்காது. ஒலி எல்லாம் மொழி அல்ல. மொழி சமூகத்தைக் கட்டமைக்கிறது. தமிழ்ச் சமூகத்தைக் கட்டமைத்ததும், காத்து நிற்பதும் தமிழ்மொழியே. இவ்வுண்மையைத் தமிழர்கள் உணரவேண்டும். தமிழர்கள் பிறமொழிக் காதலையும் தமிழ்மொழி வெறுப்பையும் களையவேண்டும். அழகில்லை என்றாலும் கூட தாய் தாய்தான். ஆனால், நம் தாயோ(தமிழ்) அழகானவளும், இனிமையானவளும் கூட. அவளைப் போற்றுதலும், காத்தலும் நமது கடமை என்பதை உணரவேண்டும். பிறமொழியில் பேசினால் பெருமை, பிறமொழிக் கற்றால் வாழ்வில் செழுமை என்ற அர்த்தமற்ற போக்கினை அகற்றுதல் வேண்டும். தமிழைச் சிறுமைபடுத்தும் வாதங்களைத் தவிர்த்தல் வேண்டும். பிறமொழியை வெறுக்கச் சொல்லுதல் இங்கு நோக்கமல்ல, தாய்மொழியைக் கற்றச் சொல்லுதலும், தாய்மொழியால் பெருமைகொள்ளச் சொல்லுதலுமே இவண் நோக்கமாக அமைகிறது.

           

            பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயரினைச் சூட்டுதலும், திருமணம் போன்ற விழாக்களில் தமிழில் வாழ்த்துகளும் மந்திரங்களும் முழங்குதலும் வேண்டும். கோவில்களில் தமிழில் அர்ச்சனைகள் செய்யப்படுதல் வேண்டும். தமிழிசையையும், தமிழ்க் கலையையும் பிள்ளைகளுக்குப் பழக்குதல் வேண்டும். தமிழ் இலக்கியங்களின் இனிமையை அவர்களுக்கு எடுத்தியம்புதல் வேண்டும்.

கைத்திறச் சித்தி ரங்கள்,

கணிதங்கள் வான நூற்கள்,

மெய்த்திற நூற்கள், சிற்பம்

விஞ்ஞானம், காவி யங்கள்

வைத்துள தமிழர் நூற்கள்

வையத்தின் புதுமை என்னப்

புத்தக சாலை எங்கும்

புதுக்குநாள் எந்த நாளோ?

என்ற பாரதிதாசனின் எண்ணம் ஈடேற எவரையும் எதிர்பார்த்து நிற்றல் கூடாது. இதற்குத் தமிழர்களாகிய நாம் நம்பணியை இன்றே தொடங்கிடல் வேண்டும். ‘சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!’ என்கிறான் பாரதி. ஆம், சமூகத்தையும் மொழியையும் பிரித்துப்பார்த்தல் ஆகாது. தமிழர்கள் சிறப்புற தமிழ்மொழி சிறப்புற வேண்டும். அதை எண்ணி தமிழர்கள் செயற்படுதல் வேண்டும்.

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

பரவும்வகை செய்தல் வேண்டும்

என்ற பாரதியின் கனவு அரசின் செயற்பாடுகளால் மட்டும் நனவாகாது. ஆங்காங்கே இருக்கும் அத்துனைத் தமிழர்களின் அரவணைப்பிலேதான் நனவாகும். தமிழர் தமிழரிடம் தமிழில் உரையாடும் வழக்கத்தை வளர்த்துக்கொள்ளுதல் வேண்டும். மொழியைப் பற்றிய பெருமை வேண்டும். இவைபோன்ற செயல்பாடுகளை அரசின் சட்டத்தால் நிறைவேற்ற முடியாது. தமிழர்களின் உணர்ச்சியாலும், முயற்சியாலும்தான் இவை முழுமைபெறும்.

தொகுப்பு

                        ட்சிமொழி ஆக்க வேண்டும்- தமிழை

                        அரியணையில் ஏற்ற வேண்டும்!

                        பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் தம்

                        இடைவெளியைப் குறைக்க வேண்டும்!

                                     

                        தமிழிற்கு ஆண்டைந்தை ஒதுக்க வேண்டும்!-யார்

                        தடுத்தாலும் தமிழ் வளர்க்கும் சங்கம் வேண்டும்!

                        நீதிமன்ற மொழியாகத் தமிழ் வேண்டும் - பேருந்து

                        நிறுத்தங்களில் தமிழில் மட்டும் எழுத வேண்டும்!

 

                        சின்னத்திரை  வண்ணதிரை எத்துறையும்

                        இத்திரையில் தமிழ் தாங்கிச் செல்லவேண்டும்!

                        பாடல்களில் தமிழ்ச் சொல்லே  முழு இடத்தை நிரப்பவேண்டும்!

                        பல்கலைக்கழகங்களில் தமிழுக்கு இருக்கைகள் இருக்க வேண்டும்!

                       

                        அஞ்சலகத்தில் தமிழ் வேண்டும்!

                        ஆற்றுப்படுத்தும் பலகையிலும் தமிழ் வேண்டும்!          

                        ஆலயத்தில் தமிழ் மணம் வீசவேண்டும்!

                        அருந்தமிழில் கடவுள்களும் பேச வேண்டும்!       

 

                        இணையத்தில் தமிழ் இன்னும் ஏற வேண்டும்!- தமிழர்

                        இதயங்களில் தமிழ் சென்று சேர வேண்டும்!

                        உலகத் தமிழர் ஒன்றாக இணைய வேண்டும்!

                        உலகலாவிய தமிழாய்வை உணர இணையப்பக்கம் இன்றே வேண்டும்!

 

                        பள்ளிகளில் தமிழ் வழியே கற்க வேண்டும்!

                        பாமரனும் தமிழ்ப் புலமை அடைய வேண்டும்

                        பயிற்று மொழித் தமிழாக இருக்க வேண்டும்! - பல்துறை

                        பாடங்களும் தமிழ் வழியே இயற்றல் வேண்டும்!

                        வழக்காடு மன்றங்களில் வாதங்கள் தமிழிலேய நடக்க வேண்டும்!

                        வையம் முழுதும் தமிழ்ப் பரப்பும் மையம் வேண்டும்!

                        ஆட்சிப் பணி தமிழ் மொழியால் அமைய வேண்டும்!

                        அரசாங்க அலுவல்கள் தமிழ் வழியே இயங்க வேண்டும்!

 

                        தமிழ்ப் படித்தால் முடித்தவுடன் வேலை வேண்டும்!

                        தலை குனிவைத் தமிழ்க் கொண்டே தடுக்க வேண்டும்!

                        தாயைத் தாயென்று  அழைக்க  தனிச்  சட்டமா வேண்டும்!

                        தரமற்ற பிறமொழியைத் தமிழா நீ தவிர்க்க வேண்டும்!           

 

                        உலகத்தின் சிறந்த மொழி தமிழென்று

                        இன்றேனும் தமிழா நீ உணர்தல் வேண்டும்!

                        தமிழ்க் கற்றால் தாழ்வு எனும் போக்கு

                        இனியேனும் நம்வாழ்வில் மாற வேண்டும்!

                       

                        பன்னாட்டு மொழியிலுள்ள இலக்கியங்கள்

                        பான்மையுடம் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்!

                        நம்நாட்டு நல்லறிஞர் இலக்கியங்கள்

                        பிறர்நாட்டு மொழிதனிலே புகுதல் வேண்டும்!

 

                        அண்ட அறிவியல் முதல் அத்துனைக்கும்

                        அகராதி வடித்தல் வேண்டும்!

                        பல்துறைச் சொற்களுக்கும் படித்தறிய

                        கண்முன்னே கருத்தாய் (சொற்)களஞ்சியம் வேண்டும்!

 

                        பாரதி கண்ட கனா பட்டென்று பலிக்க வெண்டும்!

                        பாரதிதாசன் கட்டிய கோட்டை படிப்படியாய் உயரவேண்டும்!

                        தனித்தமிழ் இயக்கத்தினைத் தரணியெங்கும் பரப்ப வேண்டும்!

                        தன்மானத் தமிழர் அதில் தாமாக இணையவேண்டும்!

 

                         தமிழ்த்தாயே கோவிலெங்கும் தெய்வமாக இருக்க வேண்டும்!

                        தீந்தமிழே அவள் காதில் தேனாக ஒலிக்க வேண்டும்!

                        இணையத்தில் தமிழ் நூல்கள் இருக்கும் வகை செய்ய வேண்டும்! 

                       இணையத்தில் இருக்கும் சில  நூல்வடிவம் ஆக வேண்டும்!

           

                        தமிழ் செய்து தாமே பிழைக்கும்

                        தன்மை அது  மாறவேண்டும்!

                        தமிழ் வாழத் தாம் வாழும்

                        தமிழ் உள்ளம் பெருக வேண்டும்!

 

                        தமிழிசையும் தமிழ்க்கலையும் தரணியெங்கும் செழிக்கவேண்டும்!

                        தமிழ் முறையில் திருமணங்கள் தவறாமல் நடக்க வேண்டும்!

                        தமிழ்ப் பெயரைத் தாங்கித்தான் அங்காடிகளும் அமைய வேண்டும்!

                        தமிழர் தம்மொழியில் பேசுவதைத் தப்பாமல் பழக வேண்டும்!

 

                        தமிழ் வளர்க்க ஆய்வகங்கள் உலகெங்கும் அமைக்க வேண்டும்!

                        தமிழ் நாட்டில் அதற்குமோர் தலைமையகம் இயங்க வேண்டும்!

                        பல்கலையில் தமிழ் மொழியே பயற்றுமொழி ஆக வேண்டும்!

                        பட்டங்களும் தமிழ் வழியே வழங்கே வேண்டும்!

 

                        பிறமொழி மோகம் கொண்ட பித்தர்களும் மாறவேண்டும்!

                        பிறக்கும் குழந்தைகளும் தமிழ்ப் பெயரே சூட வேண்டும்!

                        தமிழ் வளர்க்கத் தமிழரிடம் தமிழிழேயே பேச வேண்டும்!

                        தரணியெங்கும் தமிழ் மணமே தப்பாமல் வீச வேண்டும்!

-ஆ.மணவழகன்

*****