முனைவர் ஆ.மணவழகன், இணைப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை – 113.
(பன்னாட்டுக் கருத்தரங்கம், சுல்தான் இட்ரிசு கல்வியியல்
பல்கலைக்கழகம், மலேசியா, நவம்பர், 22, 2017)
தனிமனித
விழுமியங்கள்
சமூகத்தை நன்னெறிப்படுத்துவதே அற இலக்கியங்களின் உயர் இலக்கு. ஆகவே, இவ்விலக்கை நோக்கிய பயணத்தில் மிக இன்றியமையாதக் காரணியாகத் திகழும் தனிமனிதனின் எண்ணத்தை, சொல்லை, செயலைச் செப்பம் செய்வதில் இவ்விலக்கியங்கள் மிகுந்த கவனம் கொள்கின்றன. அவ்வகையில், ஆசாரக்கோவை அகத்தூய்மை, புறத்தூய்மை இரண்டையும் மிகவும் வலியுறுத்துகின்றது. துயிலெழுதல் தொடங்கி மீண்டும் உறங்கச் செல்லுதல் வரையான அத்தனை அன்றாட நிகழ்வுகளிலும் இந்நூற் பாடல்கள் உயர்நெறியைக் கற்பிக்கின்றன. உயிர்க் காப்பு, உடல் காப்பு, மனக் காப்பு என மூன்று நிலைகளிலும் தனிமனிதனை நெறிப்படுத்தி நலம் பேண வலியுறுத்துகின்றன.
வைகறை எழுதலும் நற்கடமைகளும்
விடியற் காலையில் உறக்கத்தினின்று விழித்தெழுந்து,
தான் அன்று ஆற்றவேண்டிய அறச்செயல்களையும், பொருள் திரட்டுவதற்குரிய நற்செயல்களையும்
சிந்தித்துப் பார்த்து, விடிந்தபின் தவறாமல் தந்தையையும் தாயையும் தொழுது அன்றைய செயலைச்
செய்தல் வேண்டும் என்பதே நம்முடைய முன்னோர் கூறியுள்ள முறைமையாகும் என்பதை,
வைகறை யாமம் துயிலெழுந்து தான் செய்யும்
நல்லறமும் ஒண் பொருளும் சிந்தித்து வாய்வதில்
தந்தையும் தாயும் தொழுதெழுக (ஆசார.4)
என்ற
பாடல் அடிகள் தொகுத்து வழங்குகின்றன. அதேபோல, நல்லொழுக்கத்திற்கு அடிப்படையாக அதாவது
வித்தாக, தனக்குப் பிறர் செய்த உதவியை மறவாதிருத்தல், பொறுமை, இன்சொல் கூறல், எந்த
உயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தல், கல்வி, ஒப்புரவை மிக அறிதல் (உலக நடையை அறிந்து
செய்தல்), அறிவுடைமை, நற்குணமிக்கவருடன் நட்பு கொள்ளல் ஆகிய இந்த எட்டும் வலியுறுத்தப்படுகிறது. இதனை ஆசாரக்கோவையின்,
நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல்லினத் தாரோடு நட்டல் (ஆசார.1)
என்ற பாடல் காட்டுகின்றது.
சீரான
உணவுப் பழக்கம்
உணவே மருந்து என்பது தமிழர் கண்ட உடல்நல மருத்துவ
உண்மை. எனவே, உண்ணும் உணவு, உண்ணும் காலம், உண்ணும் முறை என அனைத்திலும் தமிழர் தெளிவு
கண்டனர். படுத்துக்கொண்டும், நின்றுகொண்டும், திறந்தவெளியிலும் உண்ணுதல் கூடாது; விரும்பி
அதிகமாகவும் உண்ணக் கூடாது; கட்டிலில் அமர்ந்தபடி உண்ணக் கூடாது; நெறிமுறையைக் கடந்து
யாதொன்றையும் உண்ணக் கூடாது என்று நெறிப்படுத்தினர். இதனை,
கிடந்துண்ணார் நின்றுண்ணார் வெள்ளிடையும் உண்ணார்
சிறந்து மிகவுண்ணார் கட்டில் மேல் உண்ணார்
இறந்தொன்றும் தின்னற்க நின்று (ஆசார.23)
என்கிறது
ஆசாரக்கோவை. அதேபோல, சுவையின் அடிப்படையிலும் உணவு உண்ணும் முறைகளை நிரல் படுத்தினர்.
கசக்கும் உணவு வகைகள் இறுதியிலும், இனிக்கும் பண்டங்கள் முதலிலும் எஞ்சிய பொருள்களை
இடையிலும் முறைப்படி புகழும் வகையாக உண்ணல் வேண்டும் என்கிறது,
கைப்பன எல்லாம் கடை தலை தித்திப்ப
மெச்சும் வகையால் ஒழிந்த இடையாகத்
துய்க்க முறைவகையால் ஊண் (ஆசார.68)
என்ற பாடல்.
நீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலம்செய்து
உண்டாரே உண்டார் எனப்படுவார்
(ஆசார.18)
என்ற
அடிகள் காட்டுகின்றன. அதேபோல, காலைக் கழுவி நீர் உலர்தற்கு முன்னே உண்ண வேண்டும். கால்கழுவிய
ஈரம் உலர்வதற்கு முன்னே படுக்கையில் ஏறுதல் கூடாது என்ற நெறிமுறையும் வகுக்கப்பட்டது.
இதனை,
காலின்நீர் நீங்காமை உண்டிடுக பள்ளியுள்
ஈரம் புலராமை ஏறற்க என்பதே
பேரறி வாளர் துணிபு (ஆசார.19)
என்ற அடிகள் காட்டுகின்றன. இதில், உண்ணுதற்கு நீண்ட நேரம் எடுத்தல் கூடாது. உண்டவுடனேயே படுக்கைக்குச் செல்லுதல் கூடாது என்ற நுட்பமான உண்மைகள் சுட்டப்படுகின்றன.
உண்டபின் வாயில் புகுந்த நீர் உட்புகாதபடி
நன்றாகக் கொப்பளிக்க வேண்டும்; எச்சில் அறும்படி
வாயையும் அடியையும் நன்றாகத் துடைக்க வேண்டும்; மூன்று முறை தண்ணீர் குடிக்க வேண்டும்.
துடைத்து, முகத்தில் உள்ள கண் முதலான உறுப்புக்களை அவற்றிற்குத் தக்கவாறு மந்திரம்
சொல்லி விரல்களைச் செலுத்தி வாயைத் துடைக்க வேண்டும் என்பதை அறிவுமிக்க சான்றோர்கள்
வலியுறுத்தினர்.
இழியாமை நன்குமிழ்ந்து எச்சில் அறவாய்
அடியோடு நன்கு துடைத்து வடிவுடைத்தா
முக்கால்
குடித்துத் துடைத்து முகத்துறுப்பு
ஒத்த
வகையால் விரலுறுத்தி வாய்பூசல்
மிக்கவர்
கண்ட நெறி (ஆசார.27)
உண்டவுடன் அதிகமாகத் தண்ணீர்க் குடிக்ககூடாது. உணவு வயிற்றுக்குச் சென்றுசேரும் அளவில் மூன்று முறை தண்ணீர் குடித்தால் போதுமானது என்பதையும் அப்பொழுதுதான் செரிமானத்திற்கான அமிலம் நன்றாக வேலை செய்யும் என்பதையும் இதன்வழி அறியலாம்.
உறக்கும்
காலம் - நிலை - இடம்
உறங்கும் காலம்
இரவில் பெரியவர்கள் குறைந்தது எட்டு மணிநேரம் உறங்கவேண்டும் என்பதும், பகல் உறக்கம் கூடாது என்பதும் இன்றைய அறிவியல் உலகில் மருத்துவர்களால் வலியுறுத்தப்படுகிறது. பகலில் உறங்கினால் உடலை நோய் அண்டும் என்னும் இந்த அறிவியல் உண்மையைக் கீழ்க்கணக்கு நூல்களும் மிகத் தெளிவாக வலியுறுத்துகின்றன.
பகல் பொழுதிலும்,
கதிரவன் மறையும் அந்தி வேளையிலும் கண்ணுறக்கம் கூடாது என்றும்,
நோயினை விரும்பி ஏற்றுக்கொள்பவரே பகலில் உறங்க ஆசைகொள்வார் என்பதையும்,
-------------
பகல்வளரார்
நோயின்மை
வேண்டுபவர்
(ஆசார.57)
என்றும்,
அந்திப் பொழுது கிடவார் …. (ஆசார.29)
என்றும்
சுட்டுகிறது ஆசாரக் கோவை.
படுத்துறங்கும் நேரத்தைப் போலவே திசைகளும் நம் உடல் நலத்தோடு தொடர்புடையனவாக இருக்கின்றன என்பதைப் பழந்தமிழர் நன்கு அறிந்திருந்தனர். அதனால், எந்தத் திசையில் தலைவைத்துப் படுக்கவேண்டும் என்பதோடு, கட்டாயம் தலைவைத்துப் படுக்கக்கூடாத திசைகளையும் கண்டறிந்தனர். அவ்வகையில், மிக அதிக ஆபத்தை (நோய்) விளைவிக்கக்கூடிய திசைகளாக வடக்குத் திசையும், கோணத் திசைகளும் சுட்டப்பட்டுள்ளன. இதனை,
கிடங்குங்கால் கைகூப்பித் தெய்வம்
தொழுது
வடக்கொடு கோணம் தலைசெய்யார் மீக்கோள்
உடற்கொடுத்துச் சேர்தல் வழி (ஆசார.30)
என்கிறது ஆசாரக் கோவை. வடக்கிலும், வட-கிழக்கு போன்ற கோண திசைகளிலும்
புவியின் காந்த சுழற்சி அதிகமாக இருக்குமென்பதும் அது அத்திசைகளில் தலைவைத்துப்
படுக்கும் உயிர்களின் மூளையின் செயல் திறனைப்
பாதிக்கும் என்பதும் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியல் உண்மைகளாக
இருக்கின்றன. இந்த உண்மையின் அடிப்படையிலேயே மேற்கண்ட
வாழ்வியல் நெறியை ஆசாரக் கோவை வரையறுக்கிறது.
இராமரமும் சேரார் (ஆசார.13)
என்ற அடி காட்டுகிறது. தாவரங்கள் பகலில் உயிர்க்காற்றையும், இரவில் நச்சுக்காற்றையும் வெளியிடுகின்றன என்ற அறிவியல் உண்மையின் அடிப்படையிலேயே மேற்கண்ட முடிவு எட்டப்பட்டிருக்கும் என்பது தெளிவு.
உடல்நலப்
பாதுகாப்பு
உடல்நலக் கேடு என்பது அறியாமை, தெரிந்தே மேற்கொள்ளும்
தீய ஒழுக்கங்கள் என இரு நிலைகளில் ஏற்படுகிறது. முறையான உணவுப் பழக்கம், சீரான உறக்கம்
என்ற அடிப்படை வாழ்வியல் நெறிகள் என்பனவற்றோடு நல்லொழுக்கம், இயற்கைப் பொருள்களின்
தன்மையறிந்து செயலாற்றுதல் ஆகியவற்றையும் ஆசாரக்கோவை வலியுறுத்துகிறது.
தம்முடைய உடலின் ஒளி கெடாமல் இருக்க வேண்டுமென
விரும்புபவர் மின்னலின் ஒளியையும், எரிநட்சத்திரங்களையும் பொதுமகளிரின் அலங்காரத்தையும்
நோக்கமாட்டார். பகற்காலத்துக்கு உரிய கதிரவனின் காலை ஒளியையும், மாலை ஒளியையும் அவ்வாறே
உற்றுப்பார்க்க மாட்டார் என்கிறது ஆசோரக்கோவையின்,
மின்னொளியும் வீழ்மீனும் வேசையர்கள் கோலமும்
தம்மொளி வேண்டுவோர் நோக்கார் பகல்கிழவோன்
முன்னொளியும் பின்னொளியும் அற்று (ஆசார.51)
என்ற
பாடலடிகள்.
மருத்துவ நூல்களை நுட்பமாக அறிந்த சான்றோர்,
ஒருவர் கண்ணுக்கு எழுதிய கோலைத் தூய்மை செய்யாமல் மறு கண்ணில் செலுத்தார் என்பதை,
கண்ணெச்சில் கண்ணூட்டார் -----------
--------- -------------- -------------
நுண்ணிய நூல் அறி வினார் (ஆசார.41)
என்ற
அடிகள் காட்டுகின்றன. ஒரு கண்ணுக்கு மருந்திட்ட குச்சியால் மறுகண்ணுக்கோ, பிறரின் கண்ணுக்கோ
மருந்திட்டால் நோய்த் தொற்று ஏற்படும் என்பதை இப்பாடல் சுட்டுகிறது. இதுபோலவே,
தலைக்கிட்ட
பூமேவார் மோந்தபூச் சூடார்
(ஆசார.90)
என்பதில்,
அறிவுடையவர் எப்பொழுதும் பிறர் தலையில் சூடிய பூவைத் தாம் சூடார்; ஒருவர் முகர்ந்த
பூவையும் தாம் அணிந்து கொள்ளார் என்ற கருத்தும் சுட்டப்படுகிறது.
உடை குறித்த
விழுமியங்கள்
ஆடைகளை உடுத்த வேண்டிய முறைகள், அவற்றின்
தூய்மை, எச்சூழலிலும் பிறருடைய ஆடைகளைப் பயன்படுத்தாமை எனப் பல செய்திகளை ஆசாரக்கோவையில் காணமுடிகிறது. உடம்பில் ஒற்றை ஆடையை
மட்டும் உடுத்திக்கொண்டு செய்யக்கூடாத செயல்களை,
உடுத்தலால் நீராடார் ஒன்றுடுத்து உண்ணார்
---------- ----------- ---------- ----------
ஒன்றுடுத்து என்றும் அவைபுகார் (ஆசார.11)
என்று வரையறுக்கிறது ஆசாரக்கோவை. இதில், சிறந்த சான்றோர்கள் ஓர் ஆடையை உடுத்தல்லது நீராட மாட்டார்கள்; ஓராடை உடுத்து உண்ணமாட்டார்கள்; ஓராடை உடுத்து கற்றவர் அவைக்குச் செல்ல மாட்டார்கள் என்று தெளிவுபடுத்தப்படுகிறது.
இதேபோல,
எவ்வளவு துன்பம் வந்தாலும் பிறருடைய அழுக்காடையைத் தம் உடலின் கீழ்ப் பகுதியில் உடுப்பதும்,
மேற்பகுதியில் போர்த்துக் கொள்வதும் செய்யக்கூடாது என்பதையும், படையே வந்தாலும் தாம்
உடுத்தியிருந்த ஆடையின் காற்று மற்றவர் மீது போய்ப் படுமாறு செல்லக்கூடாது என்பதையும்,
பலர் நடுவில் நின்று ஆடையை உதறக் கூடாது என்பதையும் அறிவுறுத்தினர். இதனை,
இடரெனினும் மாசுனி கீழ்தம்மேல் கொள்ளார்
படைவரினும் ஆடை வளியுரைப்பப் போகார்
பலரிடை யாடை யுதிராதே யென்றும் (ஆசார.36)
என்ற
பாடலடிகளில் அறியலாம். மேலும், எவ்வளவு துன்பம் வந்தாலும் மற்றவர்கள் உடுத்திய அழுக்கான
ஆடையையும் மற்றவர் செருப்பையும் நாம் பயன்படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.
பிறர் உடுத்த மாசுணியும் தீண்டார் செருப்புக்
குறையெனினும் கொள்ளார் இரந்து (ஆசார.12)
சுற்றுப்புறத்
தூய்மை பேணுதல்
ஆரோக்கியமான வாழ்வு என்பது உடல் தூய்மை மனத்தூய்மை என்பதன் அடிப்படையில் அமைகிறது. ஆயினும், இவ்விரண்டும் சூழலியல் காரணிகளின் தன்மைகளால் பாதிக்கப்படுகின்றன. உடல், மனம், சூழல் என்ற மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புடையவையாக இருப்பதே என்பதே இதற்குக் காரணம். எனவே, நம்மை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கும் சூழலியல் காரணிகளை வளமாகவும், தூய்மையாகவும் தேவைக்கேற்பவும் அமைத்துக்கொள்ளுதல் இன்றியமையாதது என்பதை சமூகவியலாளரும் சூழலியல் ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர். சுற்றுப்புறத் தூய்மை, பயன்பாட்டுப் பொருள்களின் தூய்மை போன்றவற்றை ஆசாரக் கோவையும் வலியுறுத்துகிறது.
அறிவுடைய சான்றோர் புல், விளைநிலம், பசுவின்
சாணம், சுடுகாடு, வழி, தூயநீர் நிலைகள், வழிபாட்டிற்குரிய இடங்கள், நிழல் உள்ள இடம்,
பசுக்கள் கொட்டகை, சாம்பல் என்று சொல்லப்பட்ட இந்தப் பத்து இடங்களிலும் உமிழ்தலையும்
மலம் சிறுநீர் கழித்தலையும் செய்ய மாட்டார்கள் என்பதை,
புல் பைங்கூழ் ஆப்பி சுடலை வழி தீர்த்தம்
தேவகுலம் நிழல் ஆனிலைவெண்பலி என்று
ஈரைந்தின் கண்ணும் உமிழ்வோடு இருபுலனும்
சோரார் உணர்வுடை யார் (ஆசார.32)
என்ற
பாடல் காட்டுகிறது.
அதேபோல, ஆடையைத் துவைத்து அந்த ஆடையை மக்கள் பயன்பாட்டிற்கு உள்ள நீரிலே பிழிந்து நீரை அசுத்தம் செய்யக்கூடாது என்றும் (ஆசார.11), சுவரின் மீது உமிழ்ந்து அதனை அசுத்தப்படுத்துதல் கூடாது என்றும் (ஆசார.36) அறிவுறுத்தினர்.
சுற்றுப்புறத் தூய்மை என்பதோடு தாம் உறையும் இல்லத்தையும் மிகத் தூய்மையாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. வீட்டின் தூய்மை, புழங்குபொருள்களின் தூய்மை என அனைத்தும் இதில் அடங்கும். எனவே, நன்மை அடைவதை விரும்புபவர், விடியற்காலையில் விழித்தெழுந்து வீடுவிளங்கும் வண்ணம் குப்பைகளைப் போக்கி, பசுஞ்சாண நீரைத் தெளித்துச் சுத்தம் செய்து, பின் கரியகலங்களைக் கழுவி, நீர்ச்சால், கமண்டலங்கள் நிறையுமாறு மலர் அணிந்து பின் அடுப்பினுள் தீ மூட்டுதல் வேண்டும் என்பதை,
காட்டுக் களைந்து கலம்கழீஇ இல்லத்தை
ஆப்பிநீர் எங்கும் தெளித்துச் சிறுகாலை
நீர்ச்சால் கரகம் நிறைய மலரணிந்து
இல்லம் பொலிய அடுப்பினுள் தீப்பெய்க (ஆசார.46)
என்ற பாடலடிகள் காட்டுகின்றன.
மனத்
தூய்மைமையும் நன்னெறியும்
உலகம் போற்ற வாழும் நெறி அறிந்த சான்றோர் மனத்தூய்மையைப் பெரிதும் வலியுறுத்துகின்றனர். அறநூல்களின் ஓர்மைப் பண்பும் மனத்தூய்மையால் மாந்தர் மாண்பை வளர்ப்பதே. எனவே, ஆசாரக் கோவையின் பாடல்கள் பலவும் மனத்தூய்மையையும் அது சார்ந்த ஒழுக்க நெறிகளையும் நவில்கின்றன.
மனத்தாலும் நினைக்கக்கூடாத பாவச் செயல்களாக,
பிறர் மனைவியை விரும்புதல், கள்ளருந்துதல், களவு செய்தல், சூதாடல், கொலை செய்தல் அகிய
ஐந்தையும் சுட்டுகிறது ஆசாரக்கோவை. மாறாக எண்ணுவராயின் நல்லொழுக்கம் இல்லாதவர் என்று
இகழப்படுதல் மட்டுமன்றி நரகத்தின் கண்ணும் அப் பாவச்செயல்கள் உய்த்து விடும் என்பதை,
பிறர்மனை கள்களவு சூது கொலையோடு
அறனறிந்தார் இவ்வைந்தும் நோக்கார் திறனிலார் என்று
என்னப் படுவதூஉம் அன்றி நிரயத்துச்
செல்வழி உய்த்திடுத லால்
(ஆசார.37)
என்ற
பாடல் காட்டுகிறது. நரகத்திற்குச் செல்வார் என்பதை துன்பம் மிக அடைவார் என்பதாகக் கொள்ளலாம்.
பொய் குறளை வௌவல் அழுக்காறு இவை நான்கும்
ஐயம் தீர் காட்சியார் சிந்தியார் சிந்திப்பின்
ஐயம்புகு வித்து அருநிரயத் துய்த்திடும்
தெய்வமும் செற்று விடும் (ஆசார.38)
இல்லற நெறிகள்
மக்கட்பேற்றைப் பழந்தமிழ் இலக்கியங்கள்
போற்றுகின்றன. எவ்வகைச் செல்வங்களைக் காட்டிலும் மக்கட் செல்வமே சிறந்தது என்பதை புறநானூறு
முதலான இலக்கியங்கள் காட்டுகின்றன. மக்கட்பேறு உண்டாகும் வழிகளை ஆசாரக்கோவை நுட்பமாக
உரைக்கிறது.
தம் மனைவிக்கு மாதப் பூப்பு நிகழ்ந்தால்
மூன்று நாள் அளவும் அவர் தம் முகத்தைக் கணவன் பார்த்தல் கூடாது. மூன்று நாள் கழித்து
நீராடியபின் பன்னிரண்டு நாளும் கணவன் மனைவியைப் பிரிதல் கூடாது என்பதே பேரறிஞர்களின்
துணிவாகும் என்பதை,
தீண்டாநாள் முந்நாளும் நோக்கார் நீராடியபின்
ஈராறு நாளும் இகவற்க என்பதே
பேரறி வாளர் துணிபு
(ஆசார.42)
என்ற
பாடல் காட்டுகிறது. மேலும் மனைவியைச் சேரக்கூடாத சூழல்களாக,
உச்சியம் போழ்தோடு இடையாமம் ஈர்அந்தி
மிக்க இருதேவர் நாளோடு உவாத்திதிநாள்
அட்டமியும் ஏனைப் பிறந்த நாள் இவ்வனைத்தும்
ஒட்டார் உடன் உறைவின் கண் (ஆசார.43)
ஆகிய காலங்களை வரையறுக்கிறது. அதாவது, நண்பகல், நள்ளிரவு, மாலை, காலை, சிவபெருமான்-திருமாளுக்குரிய நாட்களாகிய திருவாதிரை, திருவோணம், பௌர்ணமி, அட்டமி, தாம் பிறந்த நாள் ஆகிய எட்டு நாட்களிலும் மனைவியோடு சேர்ந்திருக்க நல்லவர் சம்மதியார் என்கிறது பாடல்.
பொதுநெறி
மேற்குறிப்பிட்டவை அல்லாமல் சமூகத்தில்
பொதுநெறியாக தெரிந்துகொள்ளக்கூடிய கருத்துகளையும் ஆசாரக்கோவை பகர்கிறது. அதாவது, புற்றில்
வாழும் பாம்பும் அரசரும் நெருப்பும் குகையில் தங்குகின்ற சிங்கமும் ஆகிய இவை நான்கினையும்
இளையவை என்றும் எளியவை என்றும் பழகியவை என்றும் எண்ணி இகழ்ந்தால் அவை அவனுக்குத் துன்பத்தை
அளிக்கும் என்பதாகும். இதனை,
அளையுறை பாம்பும் அரசும் நெருப்பும்
முழையுறை சீயமும் என்றியை நான்கும்
இளைய எளிய பயின்றன என்றெண்ணி
இகழின் இழுக்கம் தரும் (ஆசார.84)
என்கிறது பாடல். ஆசைரக் கோவையில் இப்பாடலைப் போன்று பல பாடல்களில் பலவித கருத்துகள் சுட்டப்படுகின்றன. குறிப்பாக, மன்னனை (அரசை) அணுகும் முறைகள், ஆசிரியனை அணுகும் முறைகள், பெரியோரை அணுகும் முறைகள் எனப் பலவற்றைக் குறிப்பிடலாம். அவையும் நுட்பமாக நோக்கப்பட வேண்டியவை.
முடிவுரை
தனிமனிதன், குடும்பம், சமூகம் என்ற மூன்று நிலைகளிலும் மக்கள் போற்றும் விழுமியச் சிந்தனைகளை ஆசாரக் கோவை கொண்டிருப்பதைச் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.
ஆசாரக் கோவை வலியுறுத்தும் விழுமியங்கள் அல்லது உயர் பண்பு நெறிகள் இந்நூல் இயற்றுவதற்கு முன்பே பல நூல்களில் சுட்டப்பட்டவை என்பதும், வழிவழியாகச் சான்றோர்களால் அறிவுறுத்தப்பட்டவை என்பது தெரியவருகிறது. இதனை, ‘சொல்லிய ஆசார வித்து’, ‘முந்தையோர் கண்ட முறை’, ‘யாவரும் கண்ட நெறி’, ‘நுண்ணிய நூல் அறிவினார்’, ‘பேரறி வாளர் துணிபு’, ‘மிக்கவர் கண்ட நெறி’ முதலிய தொடர்கள் உறுதிப்படுத்துகின்றன.
தனிமனிதனின் உடல்நலப் பாதுகாப்பு, மனவள
மேலாண்மை என்ற இரண்டிற்குமான உயர் நெறிகளையும் இந்நூல் முறைப்படுத்துகிறது. அவ்வகையில்,
இந்நூலுள் அறிவுறுத்தப்படும் சீரான உணவுப் பழக்கம், முறையான உறக்கம், உறங்கும் இடம்-திசை-சூழல்
போன்றவை இன்றைக்கும் ஏற்புடையனவாக உள்ளன. இவை இன்றைய நடைமுறை அறிவியலோடு முற்றிலும்
பொருந்தியிருப்பதையும் அறியமுடிகிறது.
குடும்ப மேலாண்மை, சுற்றுப்புறச் சூழலைப்
பேணுதல், சமூக நலன் என்ற நிலைகளிலும் விழுமியச் சிந்தனைகளை அறிவுறுத்தல்களாகவும் வலியுறுத்தல்களாகவும்
இந்நூல் இயம்புகிறது.
ஆசாரக் கோவையில் சுட்டப்பெறும் ஒழுக்க நெறிகள், அறிவியல் அடிப்படையிலான வாழ்வியல், உயர் விழுமியங்கள் போன்றவற்றைத் தேர்ந்து, இன்றைய இளைய தலைமுறையினர்க்குப் பாடத்திட்டமாக வைத்தால் வளமான இளைய சமூகத்தை உருவாக்க வழிவகுக்கும் என்பதை இக் கட்டுரை வலியுறுத்துகிறது.
*****
Dr. A. Manavazhahan,
Associate Professor, Sociology, Art & Culture, International Institute of
Tamil Studies, Chennai -113.
தமிழியல்
www.thamizhiyal.com