வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

எட்டுத்தொகை நூல்கள்

முனைவர் ஆ.மணவழகன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். 

ஆகஸ்டு -2, 2011.

    பழந்தமிழர் எழுதிய பாடல்களில் காலத்தால் மறைந்ததும் மறைக்கப்பட்டதும் போக, எஞ்சிய, கிடைத்த பாடல்கள் தேவையுணர்ந்த சிலரால் தேடித் தொகுக்கப்பட்டன. அவ்வாறு தொகுக்கப்பட்ட பாடல்களின் தன்மையும் பண்பும் சிறப்பும் கருதி தொகுப்பு ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே பெயர்கள் வைக்கப்பட்டன. இவை பொதுவாக, ‘பாட்டும் தொகையும் என்று வழங்கப்படுகின்றன. பாட்டு என்பது ‘பத்துப்பாட்டு’ நூல்களையும், தொகை என்பது ‘எட்டுத்தொகை’ நூல்களையும் குறிக்கும். அதாவது, பல பாடல்களின் தொகுப்பாக அமைந்திருப்பது ‘தொகை’; தனியொரு பாடலே ஒரு நூலாக அமைந்திருப்பது ‘பாட்டு’. எட்டுத்தொகை நூல்கள் ஒவ்வொன்றிற்கும் பலர் பாடலாசிரியர்களாக இருப்பர்; பத்துப்பாட்டு நூல்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொருவரே ஆசிரியர். இச்சிறு அறிமுகத்தோடு, வைப்பு முறையின் அடிப்படையில் இங்கு எட்டுத்தொகை நூல்கள் குறித்து முதலில் காண்போம்.

                                1. நற்றிணை

                                2. குறுந்தொகை

                                3. ஐங்குறுநூறு

                                4. பதிற்றுப்பத்து

                                5. பரிபாடல்

                                6. கலித்தொகை

                                7. அகநானூறு

                                8. புறநானூறு

என்ற எட்டு நூல்களும் எட்டுத்தொகை நூல்கள் என வழங்கப்படுகின்றன. இந்நூல்களைக் குறித்த  பட்டியலை,

                        நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு

                        ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்

                        கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம் புறம் என்று

                        இத்திறத்த எட்டுத்தொகை

என்ற வெண்பா தருகிறது. இப்பாடலில் சில நூல்களுக்கு அதன் சிறப்பை உணர்த்தும் வகையில் நல்ல, ஒத்த, ஓங்கு, கற்றறிந்தார் ஏத்தும் போன்ற அடைமொழிகள் கொடுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இவ்வெட்டு நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகிய ஐந்தும் அகப்பொருள் பற்றிய நூல்கள். புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய இரண்டும் புறப்பொருள் பற்றிய நூல்கள். பரிபாடல் அகம் புறம் இரண்டும் கலந்த நூல். அதாவது, பரிபாடலில் கிடைக்கப்பெற்ற 22 பாடல்களில் 8 பாடல்கள் அகம் சார்ந்தவை மற்றவை புறம் சார்ந்தவை.

        இத்தொகைநூல்களில் இடம்பெற்றுள்ள 2352 பாடல்களைச் சுமார் 700 புலவர்கள் பாடியுள்ளனர். இப்புலவர்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஊர்களில் வாழ்ந்தவர்கள். பல்வேறு தொழில்களைச் செய்தவர்கள். இவர்களுள் 25 பேர் அரச புலவர்களாகவும் 30 பேர்  பெண்பாற் புலவர்களாகவும் அடையாளம் காணப்படுகின்றனர். ஆயினும், சுமார் 102 பாடல்களுக்கு ஆசிரியர் பெயர்கள் தெரிவில்லை. பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு ஊர்களில், பல்வேறு தொழில்களில் இருந்தவர்களின் பாடல்கள் இவை என்பதால் அக்காலச் சமூகத்தைப் படம்பிடித்துக் காட்டுவனவாக இப்பாடல்கள் உள்ளன. இவைக் கடைச்சங்க காலத்தைச் சார்ந்தவை என்பர். சங்கத்தில் அரங்கேற்றப்பட்டதால் இவை ‘சங்க இலக்கியங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.

        இந்த எட்டு நூல்களுள் அகப்பொருள் பற்றிய ஐந்து நூல்களும் சிதைவில்லாமல் தொகுக்கப்பட்ட காலத்தில் இருந்ததைப் போலவே கிடைத்துள்ளன. ஆனால், புறப்பாடல்களில் சிலப் பாடல்கள் சிதைந்தும், அழிந்தும், பாடபேதங்கள் மிகுந்தும் (பதிப்புகளுக்கிடையேயான வேறுபாடு) காணப்படுகின்றன.

        எட்டுத்தொகை நூல்கள் அக்கால மக்களின் அக-புற வாழ்க்கை முறைகள், சடங்குகள், விழாக்கள், பண்பு நலன்கள், அரசியல், அரசு, கல்வி, போர், பல்துறை அறிவு, தொழில்கள், தொழில்நுட்பங்கள், உலகலாவிய சிந்தனைகள் என அனைத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளன. எனவே, பழந்தமிழ்ச் சமூகத்தை இவ்வுலகிற்கு முழுமையாக அடையாளப்படுத்துபவையாக இவைத் திகழ்கின்றன. மேலும், தமிழைச் ‘செம்மொழி’ என்னும் அரியணைக்கு இட்டுச்சென்ற பெருமை சங்க இலக்கியங்களையே சாரும்.

*****

பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வை குறித்து

 

பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வை
(ஆய்வு நூல்)
முனைவர் ஆ.மணவழகன்
காவ்யா பதிப்பகம், சென்னை. மு.ப.2005.

அணிந்துரை

பேராசிரியர் முனைவர் வ. ஜெயதேவன், தமிழ் மொழித்துறைத் தலைவர் , சென்னைப் பல்கலைக்கழகம். 31.12.05

ஆ.மணவழகன் அவர்களின் ‘பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வை’ என்ற நுண்ணிதின் ஆராய்ந்து எழுந்துள்ள இவ் ஆய்வு நூல், மிகப் பொருத்தமானவரால் - பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதி, பயிற்சி வகுப்புகள் நடத்தி, குறுந்தகடுகள் உருவாக்கிப்   பல   துறைகளில்  விற்பன்னராக  விளங்கும்  பேராசிரியர் ஆ.மணவழகன் அவர்களால் மிகப் பொருத்தமானதொரு காலகட்டத்தில் எழுந்துள்ளது. இந்நூலாசிரியர் தனது முனைவர் பட்ட ஆய்வு, முதுநிலை ஆய்வேடுகள், அண்ணா பல்கலைக்கழகக் கணினி அறிவியல் தொழில்நுட்பத் துறையில் திட்டக் கல்வி இணையராகப் பணியாற்றியமையால் பெற்ற அரிய பட்டறிவின், தொழில்நுட்ப அறிவின் பயனாக இந்நூலை இயற்றியுள்ளமை பாராட்டுக்குரியது.

இவரது இந்நூலுக்கு அடித்தளமாக அமைவது, அவர் பல கருத்தரங்குகளிலும் படைத்தளித்த செவ்விய ஆய்வுக் கட்டுரைகளாகும். இலக்கியங்களில் பயின்றுவரும் பலதுறைத் தொழில்நுட்பங்களையும் - வேளாண், நெசவு, கட்டுமானம், உலோகம், மருத்துவம், எந்திரம், வணிகம், கால்நடை வளர்ப்பு, கைவினைப் பொருள் உற்பத்தி போன்ற தொழில்நுட்பங்களையும் - சமூகத் தொலைநோக்குகளையும் - உணவு, உடை, உறையுள் பற்றியும் - மனிதநேயக் கூறுகளையும் ஆய்வுக் கண்கொண்டு அலசிக் கண்டெடுத்த  கட்டுரைகளின் முடிவுகளின் பயனாக மலர்ந்துள்ளதே இந்நூலாகும்.

தமிழ் செம்மொழிச் செயலாக்கத்திற்குச் செய்யவேண்டுவனபற்றியும் இயம்புகின்ற முறை இவருக்குச் சிறப்பாக அமைந்திருக்கிறது. தமிழின் முன்னைத் தொழில்நுட்ப, தொலைநோக்குகளைப் படம்பிடித்துக் காட்டுவதோடு, பழங்கதை பேசுவதோடு நின்றுவிடாது, பின்னைத் தமிழுக்கு ஆற்றவேண்டிய , தமிழால் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றியும் திறம்பட எழுதியுள்ளமை இவர்தம் நுண்மான்நுழைபுலத்தை எடுத்துக்காட்டுகிறது. பத்து இயல்களும் முத்துமுத்தாக அமைந்திருக்கின்றன. கடைசியில் தீர்வாக அவர் வடித்திருக்கும் கவிதை, பல ஆக்கச் செயல்களை அடுக்கடுக்காக கூறுவது, தமிழ்மேல் அவருக்கு இருக்கும் தீராத காதலை எடுத்துக்காட்டுகிறது.

இயற்கை வளங்களைப் பேணுதல், இயற்கை அரண்களைப் பாதுகாத்தல், வேளாண்குடியை உயர்த்துதல்,  தொழில்நுட்பத்தோடு கூடிய தொழில்துறை வளர்ச்சி போன்ற பழந்தமிழ் இலக்கியங்கள் வெளிக்காட்டும் இத்தொலைநோக்குச் சிந்தனைகளையும் செயல்திட்டங்களையும் வெளிக்கொணர்வது உலகச் சமுதாயம் முழுமைக்கும் வழிகாட்டுவதாக அமையும் என்பது திண்ணம் என்ற இவரது எண்ணம் தமிழ் மக்கள் மனதில் இருத்திக் கொள்ளப்படவேண்டியதொன்றாகும்.

தமிழ் நாட்டில் தொழில்நுட்பம் அன்றே வளர்ந்த நிலையில் இருந்துள்ளதை எடுத்துக்காட்டித் தலைநிமிரச் செய்து, இன்று நாம் மேலைநாட்டுத் தொழில்நுட்பத்திற்கு அச்சப்படாமல் அதற்குத் தக்கவாறு நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ளச் செய்யும்  இந்நூலாசிரியரின் அணுகுமுறை அனைவரையும் அவருடன் இணங்கவைக்கும். இந்நூல் காலத்தின் தேவை என்பதால், இந்நூலாசிரியர் ஆ.மணவழகன் அவர்களுக்கு அனைவரின் பேராதரவும் நிச்சயம் உண்டு என்று கூறி எனது மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவர் தான் அடியெடுத்துவைக்கும் எல்லாத் துறைகளிலும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.


கவிஞர் ஆ. மணவழகனின் கூடாகும் சுள்ளிகள்

 


கூடாகும் சுள்ளிகள் 
கவிஞர் ஆ.மணவழகன் 
அய்யனார் பதிப்பகம், சென்னை. 2010.

வாழ்த்துரை 

பேரா. ஆர்.பி.சத்தியநாராயணன் 

துணைவேந்தர், எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம், சென்னை.

    கவிஞர் ஆ.மணவழகன் கூடாய் தான் சுமந்த கனவுகளை இந்நூலின் வாயிலாகக் கருத்துடன் கூடிய கவிதைத் தொகுப்பாய் நமக்காகப் படைத்துள்ளார். தலைப்பில் மட்டும் இலக்கிய மணம் வீசாமல், தொகுப்பு முழுவதும் பரவிப் படர்ந்திருக்கிறது.

    இன்றைய தலைமுறைக்கு மிகவும் தேவையான சமுதாயச் சிந்தனைகளும் மனித நேயமும் நயம்பட நெஞ்சில் பதியுமாறு ஒவ்வொரு கவிதையிலும் அதன் சொற்களிலும் செதுக்கப்பட்டுள்ளன. அழகியலுடன் அனுபவமும் சேர்ந்து நற்கவிதைகளாய் மலர்ந்து மணம் கூட்டுகின்றன. அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள் தொடங்கி, முக்கிய நாட்டு நடப்புகள் வரை பல கருத்துகளைத் தன் கவிதைகளுக்குள் பொதிய வைத்துள்ளார் முனைவர் மணவழகன். ‘சங்கத்தமிழ் மூன்றும் தா’ என நமக்கு மட்டும் கேட்டுப் பழகிப் போன நம் தன்நலச் சிந்தனைக்கு, தான் வேண்டுவனவற்றை ‘தமிழே இவை எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் கொடு’ என அவர் கேட்டிருப்பது சமூக அக்கறையையும் சுயநலமற்ற சிந்தனையையுமே காட்டுகிறது.

    முனைவர் மணவழகனுக்கு இந்திய அரசு அளித்த ‘இளம் அறிஞர்’ விருது அவர் எழுத்தாளுமைக்கு மட்டுமன்றி, தன்னலமற்ற சமுதாய நோக்கிற்கும்தான் என்று உணர வைப்பதாய் உள்ளது அவரின் இக்கவிதைத் தொகுப்பு.

    அமைதியான இடத்தில் ஆழமும் அதிகம் இருக்கும் எனக் கூறுவர். அது முனைவர் மணவழகனுக்கு மிகவும் பொருந்தும். அமைதியான பேச்சும் நடத்தையும் வீரியம் நிறைந்த சிந்தனைகளோடும் கருத்துகளோடும் சேர்ந்திருக்கும் என்பதன் சிறந்த உதாரணமாக முனைவர் மணவழகன் திகழ்கிறார். அவர் படைத்துள்ள இந்தக் ‘கனவு சுமந்த கூடு’ கவிதைத் தொகுப்பு, படிப்போரின் இலக்கியத் தாகத்தைத் தீர்ப்பதுடன், பயனுள்ள பல புதிய சமுதாயப் பரிமாணப் பார்வைகளையும் காண உதவும் என்பது உறுதி.

    முனைவர் மணவழகனின் இக்கவிதைத் தொகுப்பு வெற்றியடையவும் அவர் மென்மேலும் இதுபோன்ற கருத்தோவியங்களைப் படைக்கவும் என் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.


தொலைநோக்கு - ஆய்வு நூல்

 

தொலைநோக்கு - ஆய்வு நூல் 
ஆசிரியர்: முனைவர் ஆ.மணவழகன்
அய்யனார் பதிப்பகம், சென்னை. 2010.

பதிப்புரை

நேற்றைய பட்டறிவை அடித்தளமாகக் கொண்டு, இன்றைய தொழில்நுட்ப-மனித வளத்தின் திறத்தால் நாளைய சமூக நலனுக்குத் தேவையானவற்றைச் சிந்தித்தலும், அவற்றை முன்னெடுத்துச் செயலாக்கம் செய்ய முனைதலும் தொலைநோக்காகிறது. இவ்வகைச் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் கொண்ட சமூகமே தன் தேவைகளை நிறைவுசெய்து கொள்வதோடு, பிற சமூகத்திற்கும் வழிகாட்டி, தலைமை ஏற்கும் தன்மையைப் பெறுகிறது.

2020-இல் இந்தியா வல்லரசாக மாற வேண்டும் என்ற உயரிய நோக்கோடு சமூக ஆர்வலர்களால் இன்று பரவலாக முன்மொழியப்படும் சொல்லே ‘தொலைநோக்கு’ என்பது. இச்சொல்லே இந்நூலிற்கு வேராக அமைந்திருக்கிறது. அவ்வகையில் தொலைநோக்கு என்ற சொல்லிற்கான முழு வரையறையைக் கொடுத்து, இச்சிந்தனையை ஒரு இயக்கமாக மாற்ற முனைந்திருக்கிறார் நூலாசிரியர் முனைவர் ஆ.மணவழகன்.

இன்றைய-நாளைய சமூக நலனிற்கு முன்மொழியப்படும் தொலைநோக்குத் திட்டங்கள் முன்னைச் சமூகத்தின் தொலைநோக்குச் சிந்தனைகளிலிருந்து பெற்றவையே என்பதை மீள்பார்வை பார்த்தலும், மீட்டுருவாக்கம் செய்தலும் இந்நூலின் நோக்கமாக அமைந்துள்ளது. ‘தொலைநோக்கு’ என்ற கலைச்சொல் புதியதாக இருக்கலாம், ஆனால், தொலைநோக்குச் சிந்தனை பழந்தமிழரிடத்து மிகுந்திருந்ததென்பதைப் பழந்தமிழ் இலக்கிய-இலக்கணச் சான்றுகளின் வழி நிறுவியிருப்பது சிறப்பு. கருத்துருவாக்கத்திற்குப் பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் இக்கால நடப்பியல் வரையிலாக முன்வைக்கப்பட்டுள்ள சான்றுகள் ஆசிரியரின் வாசிப்பனுபவத்திற்கும், தேடலுக்கும் சான்று பகர்கின்றன.

முனைவர் ஆ. மணவழகன் சேலம் மாவட்டம் கெங்கவல்லியைச் சேர்ந்தவர். சென்னை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினித்தமிழ் ஆராய்ச்சியாளராகப்  பணியாற்றியவர். படவிளக்க அகராதி, தமிழ்மொழிக் கையேடு,  உயிரோவியம் - சங்க இலக்கியத்தில் தமிழர், தமிழ் மின் அகராதி, தமிழர் பழக்க வழக்கங்களில் அறிவியல் சிந்தனைகள் போன்ற  கணினித் தமிழ் தொகுப்புகளை உருவாக்கியுள்ளார். தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் நாற்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுள்ளார். செம்மொழித் தமிழுக்கான குடியரசுத் தலைவரின் ‘இளம் தமிழ் அறிஞர்’ விருதினைப் பெற்றவர். தற்பொழுது எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார். ‘பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வை’, ‘சங்க இலக்கியத்தில் மேலாண்மை’ என்ற இரண்டும் இவரின் முந்தைய ஆய்வு நூல்கள். அவ்வகையில், இக்கால சமூகத் தொலைநோக்கின் தேவை, நிறைவு-நிறைவின்மையையும் பழந்தமிழர் சமூகத் தொலைநோக்குச் சிந்தனைகளையும் ஒருங்கே கொண்டு விளக்கும் ‘தொலைநோக்கு’ என்ற இந்த ஆய்வு நூலை வெளியிடுவதில் பெரிதும் மகிழ்கிறோம்.

அய்யனார் பதிப்பகம், சென்னை - 88. tamilmano77@gmail.com

               

தொலைநோக்கு - ஆய்வு நூல்

நூலறிமுகம்

ஒரு சமூகம் அதற்கேயுரிய பண்பாடு, பழக்க வழக்கங்கள், நாகரிகக் கூறுகள் போன்றவற்றால் பிற சமூகங்களிலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்கிறது. இவ்வகை பிரித்தறியும் நோக்கிற்கு அச்சமூகத்தின் பழம் பண்பாடு, பழக்கவழக்கம், நாகரிகம் போன்றவற்றைப் பாதுகாக்கும் பழம்பெரும் இலக்கியங்கள் அளவுகோல்களாக அமைகின்றன. மொழி வளர்ச்சி, இலக்கிய வளர்ச்சி, சமூக வளர்ச்சி இவை மூன்றும் ஒன்றோடொன்று தொடர்பற்றவையோ, அல்லது  திடீரென முளைத்தெழுந்தவையோ அல்ல. இவற்றின் பெருக்கத்திற்கான, வளர்ச்சிக்கான கூறுகளை மொழியும், அதைச் சார்ந்த இலக்கியங்களும் தம்முள் கொண்டுள்ளன. அவ்வகையில், பழந்தமிழர் நாகரிகத்தை, பண்பாட்டை, பழக்கவழக்கங்களைப் பாதுகாக்கும் கலைப் பெட்டகங்களாக விளங்குபவை பழந்தமிழ் நூல்களாகும். இவை, பழந்தமிழரின் பல்வகைக் கூறுகளைத் தம்முள் அடைகாப்பது போலவே, அவர்களின் தொலைநோக்குச் சிந்தனைகளையும் தம்முள் கொண்டுள்ளன.

மேலும், வரலாற்று ஆய்விற்கும், சமூக ஆய்விற்குமான தேடலில், இலக்கியப் பதிவுகள் என்பதும் முதன்மைச் சான்றுகளாக அமைகின்றன. இலக்கியம் காலத்தின் பதிவாகவும்  கண்ணாடியாகவும் சுட்டப்படுகின்றது. அவ்வகையில், பழந்தமிழர் இலக்கியப் பதிவுகளைக் கொண்டு, அக்காலச் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு அவர்களால் முன்னெடுக்கப்பட்ட தொலைநோக்குச் சிந்தனைகள் வெளிக் கொணரப்படுவதை முதன்மை நோக்காகவும், இன்றைக்கும் நாளைக்குமான தொலைநோக்குத் திட்ட வரையறையை மதிப்பீடு செய்வதை துணைமை நோக்காகவும் கொண்டு ’தொலைநோக்கு’ என்ற இந்நூலுள் அமைகிறது.

இன்றைக்கும் எதிர்காலத்துக்குமான சமூக நலனிற்கு முன்மொழியப்படும் தொலைநோக்குத் திட்டங்களுக்கான அடிப்படை  முன்னைச் சமூகத்தின் தொலைநோக்குத் திட்டங்களும், செயல்பாடுகளுமே என்பதை மீள்பார்வை பார்த்தலும், மீட்டுருவாக்கம் செய்தலும் காலத்தின் தேவையாகிறது.

காட்டாற்றுக் கூழாங்கற்கள், கூழாங் கற்களாகவே பிறப்பதில்லை. அவ்வடிவத்தைப் பெற அவை கடந்துவந்த பாதைகளும், காலமும் பலவாகும். கற்களின் சிதைவுகள் காலத்தின் பதிவுகளாகின்றன. சமூகத்தின் இன்றைய ஒழுங்குமுறை கட்டமைப்பும், ஓட்டத்தில் ஒழுங்குபடுத்தப்பட்ட கூழாங்கற்களைப் போன்றதே. எனவே, சமூகத்தைத் தொலைநோக்குத் திட்டம் கொண்டு முன்னெடுத்துச் செல்ல, அது கடந்து வந்த பாதையை, தம் வளர்ச்சியில் அவ்வப்போது ஏற்றுக்கொண்ட மாற்றங்களை, மீள் ஆய்விற்கு உட்படுத்தி, ஏற்புடையனவற்றைக் கொள்ளலும், அல்லாதனவற்றைத் தள்ளலும்  இன்றியமையாததாகிறது. திட்டச் செயலாக்கத்தில் இடைப்படும் தடைகளை எதிர்கொள்ள, எளிதில் அத் தடைகளிலிருந்து விடுபட, இவ்வணுகுமுறைத் தேவையாகிறது. ஒரே வகையிலான வழக்கில் முன்னைத் தீர்ப்புகளைப் புரட்டிப் பார்த்தலும், ஒரே தன்மையிலான நோய்க்கு முன்பு வழங்கப்பட்ட மருந்து முறைகளை  ஆய்வதும் போன்றதாகும் இது.

மேலும், ஒரு சமூகம் தன்னிறைவு பெற்ற, பலம் பொருந்திய சமூகம்  என்ற நிலையை அடைவதென்பது அது தனக்கு ஏற்பட்ட இடையூறுகளையும், எதிர்கொண்ட சவால்களையும் அடித்தளமாகக் கொண்டு முன்னேறுவதைப் பொறுத்தே அமைகிறது. அவ்வகையில், 2020ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் தொலைநோக்குத் திட்ட கருத்துருவாக்கம் பரவலாக்கப்பட்டுவரும் இன்றைய சூழல் இப்பார்வையின் தேவையை வலுவாக்குகிறது.

இலக்கண நூலான தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களும், பதினெண்கீழ்க்கணக்கு  நூலான திருக்குறளும், இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவையும் இந்த நூலிற்கு ஆய்வுக் களங்களாக அமைகின்றன. ‘பண்டைத்தமிழரின் தொலைநோக்குப் பார்வை’ (2005), ‘சங்க இலக்கியத்தில் மேலாண்மை’ (2007) என்ற என் முந்தைய நூல்களை வரவேற்று,  நிறை-குறைகளைச் சுட்டி என்னை ஆற்றுப்படுத்திய தமிழ்ச்சான்றோர்கள், தமிழன்பர்கள் இந்நூலினையும் ஏற்பார்களென நம்புகிறேன்.

நட்புடன்,

முனைவர் ஆ. மணவழகன், தமிழ்த்துறைத் தலைவர், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், சென்னை. 2010.

நூல்கள் பெற - 9789016815

தமிழர் அறக்கோட்பாடுகள் - சமூக உளவியல் நோக்கு

 முனைவர் ஆ.மணவழகன், இணைப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை-113. பிப்ரவரி 17, 2020.

 

            அறம்என்பது மனித வாழ்வின் உயர் மதிப்பீடான விழுமியங்களை உருவாக்குவதாக அமைகிறது. அது மரபினருக்குத் தொடர்ந்து வழிவழி கற்பிக்கப்படுகிறது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களான அற இலக்கியங்கள், அறத்தை நேரடியாக வலிந்து வலியுறுத்தும் தன்மையைக் கொண்டுள்ளன. சங்க இலக்கியங்களில் அறம் வலிந்து வலியுறுத்தப்படுவதில்லை. எனினும், பாடற் கருத்தோடு இயைந் அறியுறுத்தல்களாக இருக்கின்றன. அறம் வாழ்வியலோடு இயைந்ததாக, இன்பமும் பொருளும் அறத்தின் வழிப்பட்டதாக இருக்க நெறிப்படுத்தப்பட்டது.

     புறநிலையில் அரசன், ஆட்சிமுறை போன்றவற்றிற்கான ‘அரசு’ சார்ந்த அறங்கள் பரவலாகவும் அவற்றோடு, தனிமனித அறமும், அவற்றின்வழி குடும்ப அறமும் ஆங்காங்கே வலியுறுத்தப்படுகின்றன. அகநிலையில் மாந்தர்களான தலைவன், தாய் (நற்றாய்+செவிலி) போன்றோரோடு நேரடியாக ‘அறன்’, அல்லது ‘அறம்’ என்ற சொற்கள் பயின்று வருவதைக் காணமுடிகிறது. அதேபோல, தலைவி கூற்றாக வரும் பாடல்களிலும் அறன் எனும் சொல் பயின்று வருகிறது. சமூகக் கட்டமைவிற்கும், செல்நெறிக்கும் தனிமனித ஒழுக்க நெறிகளும், அறச் செயல்களும் அடிப்படையாக அமைகின்றன. எனவே, அறத்தின் தேவை பெரிதும் வலியுறுத்தப்பட்டது. 

‘தனிமனிதன், ஒரு குடும்பம்-குழு-அரசு போன்றவற்றில் இணைந்தே செயல்படுகின்றான். சமுதாயம் தனிமனிதனைச் சமுதாய உறுப்பினனாக்கப் பெருமளவிற்குத் தொண்டு புரிகின்றது. பொதுவாகச் சமூக இயல்பு தனிமனிதன் இயல்பு ஆகிய இரண்டும் ஒருங்கே வளர்கின்றன’ (சமூகவியல், ப.64) என்பது சமூகவியல் கோட்பாடு. மேலும், தனி மனிதனுடைய உரிமைகளும், கடமைகளும், சமூகப் பிணைப்பும் குடும்ப இணைப்பும், பழக்க வழக்கங்களும், விருப்பு வெறுப்பு என்னும் இயல்புகளுமாகிய அனைத்தும் அறத்தின் கோட்பாட்டினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன (தி.நீ.., ப.49) என்பது நோக்கத்தக்கது. எனவே, தமிழர் அறக்கோட்பாடுகளைச் சமூக உளவியல் நோக்கில் அணுகுவது தேவையாகிறது. 

அறம்

 அறுஎன்ற வினைச்சொல் அடியாகப் பிறந்ததே அறம்என்னும் சொல். இச்சொல்லுக்கு அறுத்துச் செல், வழியை உண்டாக்கு, உருவாக்கு, துண்டி, வேறுபடுத்து என்ற பலவகைப் பொருள்கள் சுட்டப்படுகின்றன. இதன் அடிப்படையில் அறம் என்னும் சொல்லிற்கு, ‘மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே - முழுநிறை வடிவமே அறம்’ என்று சமூகவியல் விளக்கமும், பிறவிதோறும் மனிதனைப் பற்றிக் கொண்டு வரும் தீவினையை அறுத்தெறிவதே அறம்என்ற ஆன்மீக விளக்கமும் தரப்படுகின்றன(தி.நீ..,ப. 23). 

நல்ல அல்லது தீய செயல்கள் மூலம் தானே வெளிப்படும் மக்களுடைய நடத்தையைப் பற்றிய ஆய்வியல் கலை மேலை நாடுகளில் எதிக்ஸ்’ (Ethics) என வழங்கப்படுகிறது. இதைத் தமிழில் அறவியல் எனலாம். ‘எதிக்ஸ்’ என்னும் இக் கிரேக்கச் சொல் முதன் முதலில் பழகிப்போன நடத்தை, வழக்கம், மரபு என்னும் பொருள்களை உணர்த்தியும் பின்னர், நடத்தை என்னும் பொருளையும் வழங்குவதாகவும் உள்ளது.  தமிழில், அறம் என்னும் சொல்லிற்கு ஒழுக்கம், வழக்கம், நீதி, கடமை ஈகை, புண்ணியம், அறக்கடவுள், சமயம் என்ற எட்டுவகையான பொருள்கள் பெருவழக்காக வழங்கப்பட்டு வருகின்றன (தி.தி.., ப.48).

 

தனிமனித நடத்தை பெரும்பாலோரால் பின்பற்றப்பட்டபொழுது ஒழுக்கமெனும் பண்பாக மலர்ந்து, வாழ்க்கை நெறியாக மாண்புற்றது எனலாம். எனவே அறம் என்பது மனிதவாழ்வின் விழுமியங்களை உருவாக்குவதும் கற்பிப்பதுவுமான கருத்தோட்டமாக அமைகிறது. அறத்தை மீறுவது சமூகக் குற்றமாக, தெய்வக் குற்றமாக பார்க்கும் சூழல் அமைந்த நிலையில் ‘சட்டம்’ உருவானது எனலாம். அறம் தவறிய சமூக ஒழுக்கச்செயல்களில் ஈடுபடுவோர் சட்ட தண்டனைக்கு ஆளாகினர். 

தனிமனிதரும் அறமும்

சங்க இலக்கியங்களில் அறன்இல், மாசுஇல், நிறைஇல் என்பன போன்ற சொற்களின் பயன்பாடு காணப்படுகிறது.  ‘இல்’ எனும் சொல்லின் முன் அறன், பண்பு, மாசு, மரன், வறன், நயன், நார், நிறை, முனிவு, புலை, மாண்பு, அன்பு, அருள், ஊறு, அசை, ஈரம் போன்ற சொற்கள் பயின்று வந்துள்ளன. இவற்றுள், அறன்இல்’ எனும் சொல் அன்னை, யாய் போன்ற சொற்களோடு சேர்ந்து அறன்இல் அன்னை, அறன்இல் யாய் என  வந்துள்ளது. அறன் இல்லாத என்பதை உணர்த்தும் அறன்இல் எனும் சொல்லன்றி, அறனிலாளன், அறனும் அன்றே, அறன் இன்று எனும் சொற்றொடர்களும் சங்க அக இலக்கியத்துள் பயின்று வந்துள்ளன. இச்சொற்கள் தலைவன், தலைவியின் ஊர், அஃறிணைகள் குறித்து செவிலி, தோழி மற்றும் தலைவியால் சுட்டப்படுவன. ஆயினும், அறம், அறன் எனும் சொற்கள் பயின்று வருகிற இடங்களைக் கொண்டு மட்டுமே தலைவனுக்குச் சுட்டப்படுகிற அறத்தை வரையறுத்துவிட முடியாது. இச்சொற்கள் நேரடியாக இடம்பெறாமல் கருத்து நிலையில் அறம் வலியுறுத்துகிற இடங்களையும் கருத்தில் கொண்டே தலைவனுக்கான அறக்கோட்பாட்டை வரையறுக்க முடியும். மேலும், ஒரே வகையான செயல், தொடர்புடைய இருவேறு மாந்தர்களின் பார்வையிலும் சமூக உளவியல் நோக்கிலும் வேறுபட்டு விளங்குவதையும் காணமுடிகிறது. அவ்வகையான செயல்களுக்குப் பொதுவானவர்களின் (சான்றோர்) கருத்து பெறப்பட்டு அறம் உறுதிசெய்யப்படுகிறது (எ.கா. உடன்போக்கு). அக வாழ்க்கையில் தலைவனுக்கான அறத்தை களவு, கற்பு என்ற இருநிலைகளிலும் பார்க்க முடிகிறது. இவ்விரு நிலைகளிலும் காணப்படும் மாந்தர்களான தலைவன், தலைவி, செவிலி, நற்றாய், தோழன், தோழி, வாயில்கள், கண்டோர் ஆகியோரின் கூற்றுகளின் வழி தலைவனுக்கான அறம் பெறப்படுகின்றன. 

தனிமனித அறங்களைக் குறிப்பிடும் இடத்து, தாம்வளம்பட வாழ்தல், தம் கேளிரைத் தாங்குதல், இரந்தோர்க்கு இல்லையென்னாது ஈதல் ஆகிய இம்மூன்றினையும் உயிரினும் மேலாகக் கொள்ளுதல் வேண்டும் (கலி.2:11,15,19) என்று அறிவுறுத்தப்பட்டது. அதேபோல, கிளையழிய வாழ்பவன் ஆக்கம் பொலிவு பெறாது(கலி.34:18). பொருளில்லான் இளமையும் (கலி.38:15) அறஞ்சாரான் மூப்பும்(கலி38:19) பொலிவழியும் என்றும் வலியிறுத்தப்பெற்றது. 

            பொன்னாலும், முத்தாலும் மணியாலும் செய்யப்படும் அணிகலன்கள் கெடுமானால் தொழில் வல்லோரால் சீர்படும். சால்பும் இயல்பும் வியப்பும் குன்றினால் மாசற்ற தம் புகழினை நிறுத்தல் முற்றுந்துறந்த முனிவர்க்கும் ஆகாது என்கிறார் கபிலர் (குறிஞ்சி.13-18). செயல்களுக்கு மனதும் அதில் தோன்றும் எண்ணங்களும் அடிப்படை என்பதால்,

                        ‘மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்து அறன்’

என்கிறார் வள்ளுவர். 

தனி வாழ்க்கையில் அறக்கோணல் ஏற்படுமாயின், அது சமுதாயத்திற்கு ஊறு பயக்குமென்ற நம்பிக்கை  அக்காலத்திலிருந்தது. தம் பெற்றோர் தன்னை நொதுமலர்க்கு வரைந்தால் அவ்வறமில் செயலால் வள்ளிக் கிழங்கும் கீழ்வீழா; மலைமிசைத் தேனுந்தோன்றா என்று எண்ணுகிறாள் தலைமகள்(கலி.39:11-14). அறக்கோணல் தெய்வக்குத்தமாக கருதப்பட்டது.

அறமும் நம்பிக்கையும்

அறம் இயற்கை நிகழ்வுகளோடும், சமூகத்தில் நிகழும் நன்மை தீமைகளோடும் பொருத்திப்பார்க்கப்பட்டது. சான்றாக, அகவாழ்வில் ஆடவர்க்கான அறத்தில் முதன்மையானதா வலியுறுத்தப்பட்ட ‘புணர்ந்தாரைப் பிரியாமை என்பதைக் கூறலாம்.  தலைவன்-தலைவி களவொழுக்கத்தில் இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்ததற்கு எந்தவொரு சாட்சியும் இல்லை. இந்நிலையில் ‘புணர்ந்தாரைப் பிரியாமை’ என்ற ஆடவர்க்கான அறக்கோட்பாடே சமூக விழுமியமாக அமைந்தது. சமூகம் ஏற்றுக்கொண்ட அறங்களை மீறுவது இயற்கைக்கு எதிரான செயலாகவும், தெய்வக் குற்றமாகவும் வலியுறுத்தப்பட்டது. இது மிக நுட்பமான சமூக உளவியலாகும். எனவேதான், சூள் பொய்த்தான் மலையில் எப்படி அருவி வீழும் என்கிறாள் ஒரு தலைவி.

 களவில், சூள் பொய்க்கும் தலைவனின் செயல் பண்பற்றச் செயலாகவும், அறநெறி அற்றதாகவும் சுட்டப்பட்டது. அறக்கோணல் இயற்கைக்கு எதிரானதாகக் கட்டமைக்கப்பட்டது. எனவே, தலைவன் தன் வாய்மையில் பொய்த்தானோ என ஐயுறும் தோழிக்கு,

குன்றகல் நன்னாடன் வாய்மையில் பொய் தோன்றில்

திங்களுள் தீ தோன்றியற்று (குறிஞ்சிக்கலி,5)

எனப் பதில் மொழிகிறாள் தலைவி.  இந்நிலையிலேயே,

                               போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை’ (கலி.நெய்.16)

என்ற அறக்கோட்பாடு உருவாக்கப்படுகிறது. பெண்ணோடு பழகிவிட்டு இல்லையென்று கூறி ஏமாற்றும் அறம் மீறலுக்கு,  பொதுமக்களின் முன்னிலையில் தண்டனையும் வழங்கப்பட்டது(அகம்.526). 

அறத்தொடு நிற்றலும் சமூக உளவியலும்

சங்க இலக்கியங்கள் சுட்டுகிற களவு வாழ்க்கையில் எது அறம், எது அறம் அன்று என்பது குறித்த எதிர்நிலை கருத்துகள், விவாதங்கள் காணப்படுகின்றன. ‘அறனில் அன்னை’ என்ற சொல்லாட்சியும் ‘அறனிலாளன்’ என்ற சொல்லாட்சியும் நோக்கவேண்டியவை. ‘அறனில் அன்னை’ என்பது தலைவியின் தாயையும் ‘அறனிலாளன்’ என்பது தலைமகனையும் குறிப்பன.

  களவு வாழ்க்கையை அனுமதிக்காத அன்னை, தலைவியின் பார்வையில் அறம் அற்றவளாகிறாள். தினைப்புனம் காக்க சென்றால் தலைவனைச் சந்திக்கலாம்; ஆனால் தாய் தலைவியைத் தினைப்புனம் காக்க அனுமதிக்கவில்லை. அனுமதிக்காத அன்னையைத் தலைவி அறனில் அன்னை என்கிறாள்(அகம்.302). தலைவன் தலைவி உறவு பற்றி ஊரில் அலர் தோன்றுகிறது; அதனால் அன்னை தலைவியை இற்செறிக்கிறாள்; அலர் கூறும் ஊரும் அறமில்லாதது; இச்செறிக்கும் அன்னையும் அறமற்றவள் (குறு.262; நற்.63) என்பது தலைவியின் கோபம். எனவே, ‘புலிகள் வழங்கும் மலைகள் பிற்பட உன்மகள் சுரங்களைக் கடந்து தலைவனுடன் சென்றனள் என்று அறனில் அன்னைக்குக் கூறுங்கள்’ என்று வழிப்போக்கரிடம் கூறுகிறாள் உடன்போக்கு மேற்கொண்ட ஒரு தலைவி (ஐங்.385). 

    இதற்கு எதிர்நிலையாக தாயின் மனநிலை அமைகிறது. தலைவன் தலைவி உடன்போக்கு மேற்கொள்கின்றனர். அவர்கள் சென்ற வழியோ கொடிய பாலைநிலம். ‘அந்தக் பாலை நிலத்தில் அறனிலாளன் ஆகிய தலைவன் தோண்டிய கலங்கிய நீரைத் தலைவி அருந்தித் துன்புறுவாளோ’ என்று தாய் புலம்புகிறாள். இங்கு, தாயின் பார்வையில் தலைவன் அறனில்லாதவன் ஆகிறான் (அகம்.207). அதேபோல ‘அறனில்லாதவனோடு சென்றாளே’ என்று தலைவி பற்றிப் பிறிதொரு தாய் கலக்கம் உறுகிறாள் (அகம்.25). இங்குப் பெற்றோரையும் உறவினர்களையும் பிரித்து தலைவியை அழைத்துச் செல்லும் தலைவன் அறனிலாதவன் ஆகிறான். 

மேலும், ‘என் மகளை உடன் போக்குச் செல்லக் காரணமான ஊழ் அறம் அற்றது; அந்த அறனில் ஊழ், காட்டிடை எரியில் வெந்து ஒழிவதாக’ என்று ஒருதாய் சாபம் இடுகிறார் (ஐங்.376). அதேபோல, தலைவி தலைவனுடன் உடன் போக்கினை மேற்கொள்கிறாள்; இதனை அறிந்த அன்னை அறத்தினை வெறுத்துப் பழித்து உரைக்கிறாள் (ஐங்.393). 

ஆக, களவு வாழ்க்கையில் உடன்போக்கு என்பது காதலர் பார்வையில் அறமாகக் தெரிகிறது; பெற்றோர் பார்வையில் அது அறமற்றதாகத் தெரிகிறது. உடன்போக்கு மேற்கொள்ளும் தலைவன், தலைவியின் பெற்றோர் பார்வையில் அறமில்லாதவன் ஆகிறான். களவு வாழ்க்கையைத் தடைசெய்யும் தாய் தலைவியின் பார்வையில் அறமற்றவள் ஆகிறாள். இந்நிலையில் அறம் எது என்ற வினா எழுகிறது. தலைவன் தலைவி களவு வாழ்க்கையை வெளிப்படுத்தும் தோழியின் செயற்பாட்டை ‘அறத்தொடு நிற்றல்’ என்கிறது இலக்கணம். இங்கு அறத்தொடு நிற்றல் என்பது களவு வாழ்க்கையை கற்பு வாழ்க்கையை நோக்கி நகர்த்துதல் ஆகிறது; தலைவியின் காதலைப் பெற்றோர்க்கும் உறவினர்க்கும் உணர்த்துதல் ஆகிறது. அவ்வாறு அறத்தொடு நிற்கும் தோழி ஒருத்தி காதலர் களவு வாழ்க்கையை அனுமதிக்காத மலை வாழ்நரை ‘அல்ல புரிந்து ஒழுகுவோர்’(கலி.39) என்கிறாள். இங்கு ஊரார் அறமற்றவர்களாகின்றனர். களவு வாழ்க்கையைத் தடை செய்வதால் ‘வள்ளிக்கிழங்கு விளையாது, மலையில் தேன் கூடு கட்டாது, தினைப்புனத்தில் தினைக்கதிர்கள் விளையாது’ என்கிறாள் (கலி.39). அறம் வழுவுதல் இங்குத் தெய்வக் குற்றமாகிறது. 

இல்லறத்தில் நல்லறம்

            கற்பு வாழ்க்கை, கொடுப்போர் பெறுவோர் என்ற முறைமையின் அடிப்படையிலான முதல்நிலை திருமண நிகழ்வோடோ அல்லது தலைவன்-தலைவியுடனான காதல் என்ற முறைமையின் அடிப்படையில் உடன்போக்கு என்ற இரண்டாம் நிலை நிகழ்வோடோ தொடங்குகிறது. முறைப்படுத்தப்பட்ட திருமண நிகழ்வாயினும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்போக்கு நிகழ்வாயினும் அதற்குப் பின்னான கற்பு வாழ்வில் தலைமாந்தர்களுக்கான சில அறங்கள் அறிவுறுத்தப்பட்டன.

                              ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்

                             ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை (கலி.9.23-24)

என்று, தலைவன் தலைவிக்கான எண்ண ஒற்றுமை சுட்டப்பட்டது. ஆகவே, தலைவன் தலைவியின் ஒன்றிய வாழ்க்கைக்கும், திருமண வாழ்வின் நோக்கத்திற்கும், சுற்றத்தின் உயர்விற்கும், சமூக நலனிற்குமாக தலைவன் தலைவியிடத்தே இருக்க வேண்டிய அறச் செயல்பாடுகள் முன்னிறுத்தப்படுகின்றன. 

            மேலும், தலைவியைப் கூடும்முன் காட்டுகிற அன்பு, களவில் அவளைப் பிரிந்திருக்கிற சூழலில் வெளிப்படுத்துகிற அன்பு, அவளோடு நிரந்தரமாக கற்புவாழ்வில் சேர்ந்தபின்பும் மாறாமல் இருக்க வேண்டும் எனத் தலைவனுக்கு வலியுறுத்தப்பட்டது. உடன்போக்கு மேற்கொள்ளும் சூழலில் தலைவனிடன் தோழி கூறுவதாக கீழ்க்கண்ட பாடல் அமைகிறது.

         அண்ணாந்து ஏந்திய வனமுலை தளரினும்

          பொன்மனர் மேனி மணியில் தாழ்ந்த

          நன்னெடும் கூந்தல் நரையொடு முடிப்பினும்

          நீத்தல் ஓம்புமதி (நற்.10) 

இதில், தலைவியல் மார்புகள் தளர்ச்சியுற்ற காலத்தும், கரிய நெடிய கூந்தல் நரை எய்திய முதுமைக் காலத்தும், தலைவி மீதுகொண்டிருக்கிற அன்பு மாறாமல் இருக்க வேண்டும் என்று தலைவனிடம் வேண்டுகிறாள் தோழி. எனவே, தலைவியை என்றும் பிரியாமல் இருப்பதும், மாறாத அன்போடு இருப்பதும் இல்லறத்தின் நல்லறமாகச் சுட்டப்படுகிறது. 

            அறவழிகளாவன இல்லறம், துறவறம் இவ்விருவகை அறங்களுள் சிறந்தது எது என்பது தொடர்ந்துவரும் வினா. இதற்கு,  

காமஞ் சான்ற கடைக்கோட் காலை

ஏமஞ் சான்ற மக்களோடு துவன்றி

அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்

சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே (தொல்.கற்பு.190)

என்று விளக்கமளிக்கிறார் தொல்காப்பியர். இதில், இல்லற வாழ்க்கையின் இறுதிக் காலத்து, பெருமை பொருந்திய மக்களுடன் நிறைந்து, அறத்தினைப் புரிகின்ற சுற்றத்தோடு தலைவனும் தலைவியும் சிறந்ததாகிய வாழ்க்கை முறையினையும், நன்னெறியினையும் சமூகத்திற்குப் பயிற்றுவித்தல், அவர்கள் வாழ்ந்ததன் பயனாகும் என்கிறார். இதையே,

                        ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை

                       நோற்பாரின் நோன்மை உடைத்து (குறள்.48)

என விளக்குகிறார் வள்ளுவரும். 

பொருள் தேட்டமும் சமூக அறமும்

       களவு, கற்பு என்ற இரு நிலைகளிலுமே பிரிவிற்கான இலக்கணத்தை வகுக்கிறார் தொல்காப்பியர். இரண்டிற்குமான பிரிவிலும் காரணங்ளும், கால வரையறைகளும் உண்டு. ஆயினும் களவு கற்பு இருநிலைகளிலுமே பிரிவைத் தலைவி ஏற்றுக்கொள்வதில்லை. எச்சூழலிலும் தலைவன் உடன் இருக்கவேண்டும் என்ற தலைவியின் எண்ணமும், எவ்வகைச் செல்வத்தினும் தலைவியுடன் இருப்பதே சிறந்தது என்ற தலைவனின் எண்ணமும் கற்புக் கால நிகழ்வுகளில் பதிவுசெய்யப்படுகிறது. 

     தலைவியைப் பிரிந்து பொருள்தேடச் செல்லுதல் அறமற்றதாக தலைவியால் சுட்டப்படுகிறது. இல்லறத்திற்குத் தேவையான பொருளைத் தேடுதல் ஆடவர்க் கடமை ஆயினும், அக்கடமையைத் தலைவி உணர்ந்திருப்பினும், அன்பின் காரணமாக, தலைவனை அறனிலாளன் என்கிறார் தலைவி.

                             ‘நம் நோய் அறியா அறனில்லாளர்’ (அகம்.294)

 

        பொருள் தேடுதல் போன்ற காரணங்கள் தலைவியின் அன்பினால் அறமற்றதாகச் சுட்டப்படினும், சமூக நோக்கில் அவ்வாறு எண்ணப்படவில்லை. தலைவியைச் அமைதிப்படுத்திவிட்டு, பொருள்தேடச் செல்லும் தலைவனைச் சிறந்த வினையாளனாகக் காட்டுகிறது சமூகம். தான் காதலிக்கும் தலைவியைத் தவறாது மணக்க உறுதி கூறும் தலைவனொருவன்,

                             விருந்துண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை

                             நின்னொடு உண்டலும் புரைவது என்று ஆங்கு

                             அறம்புணை யாகத் தேற்றிப் பிறங்குமலை

                             மீமிசைக் கடவுள் வாழ்த்திக் கைதொழுது (குறிஞ்சி.206-209)

அமைகிறான். வருவோர்க்கெல்லாம் வரையாது நல்லுணவு அளித்தல் இல்லறத்தின் கடமைகளுள் தலையாய ஒன்றென்று கருதியிருந்தனர். விருந்தினர் உண்டு எஞ்சிய மிச்சிலை உண்பதில் நிறைவு கொண்டனர். அத்தகைய இல்லறத்தினை நடத்துதற்காகவே தலைவியை  மணமுடித்தல் வேண்டும் என்கிறான் இத்தலைவன். இதற்குப் பொருள் இன்றியமையாதது. ஆகவே, ஆடவர் பொருள்தேடப் பரிந்துசெல்லுதல் சமூக நோக்கில் அறமாகக் கருதப்பட்டது. எனவே,

                        வினையே ஆடவர்க் குயிரே (குறு.135)

என்னும் அறம் வலியுறுத்தப்பட்டது. அதோடில்லாமல், வினையாற்றாமல் மரபுவழிச் செல்வத்தைக்கொண்டு வாழும் வாழ்வை உடையவனை,  சோம்பியிருக்கும் ஆடவனை, 

குடுபுரவு இரக்கும் கூரில் ஆண்மை (புறம்.75)

என்று பழிக்கிறது. 

            வினைமேற்கொள்பனின் செயல், பிறர்க்கென முயலும் பேரருள் (நற்.186) என்று போற்றப்பட்டது. பொருள் தேடி இன்புற்று வாழ்தல் நோக்கம். ஆயினும் அறமே வழியாதல் வேண்டும் என்னும் கொள்கை நிலவியது.

            சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்

          அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல் (புறம்.31) 

            பழியோடு வரும் இன்பமும் (புறம்.112:11-12), அறத்திற்கு எதிராக வரும் பொருளும் வெறுக்கப்பட்டது.

                              அறக் கழிவுடையன பொருட்பயம்படவரின்

                             வழக்கென வழங்கலும் பதித்தன்று என்ப (1164) 

குடும்பம் காத்தல் ஆடவர் அறம்

     மனைவி மற்றும் குடும்பத்தினரின் பாதுகாப்பு என்பது ஆடவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது கடமையாகவும் அறமாகவும் உணர்த்தப்பட்டது. வேட்டையாட வந்த வீரனை வழி மறித்து, தன் துணையையும் குட்டிகளையும் பாதுகாப்பாக வைத்துவிட்டு, ஆயுதத்தோடு வேட்டையாட வந்த வீரனை வழிமறித்து எதிர்கொண்ட ஆண்பன்றியை,

                                    அரும்புழை முடுக்கர் ஆட்குறித்து நின்ற... (அகம்.248) 

என்ற பாடல் காட்டுகிறது. ஒரு மனிதன் தன்மனைவி மக்களைக் காக்க நினைக்கின்றான். ஓர் ஆண் பன்றி தன் பெண்ணையும் குட்டிகளையும் காப்பாற்றும் பொருட்டு வீரத்தோடு செயல்படுகிறது. இங்கு அஃறிணை உயிரின் வாயிலாக ஆடவரின் பொறுப்பும் அறமும் வலியுறுத்தப்படுகிறது.

சமூகக் கட்டமைப்பில் அறத்தின் பங்களிப்பு

            நீதியும், நட்பும், இழிசெயல் விலக்கலாகிய நாணும், பிறர்க்கும் தமக்கும் பயன்படும் திறமாகிய பயனும், நற்குணங்கள் நிறைந்த பண்பும், பிறர் தன்மை அறிந்து ஒழுகும் பாடும் ஆகிய ஆறு பண்புகளைத் தனிமனித ஒழுக்கங்களாக அற்றைச் சமூகம் அறிவுறுத்தியது. இதனை,

                              நயனும் நண்பும் நாணு நன்கு உடைமையும்

                             பயனும் பண்பும் பாடு அறிந்து ஒழுகலும் (நற்.160:1-2)       

என்கிறது இலக்கியம். ஒரு நாட்டின் நில அமைப்போ, இயற்கையில் அமையப்பெற்ற வளங்களோ அந்நாட்டை நல்லநாடாக முன்னெடுத்துச் செல்வதில்லை. அந்நாட்டில் வாழும் மனிதர்களின் செயல்களே அச்சமூகத்தை  முன்னேற்றுகின்றன என்பதை,

                              நாடா கொன்றோ காடா கொன்றோ

                             அவலா கொன்றோ மிசையோ கொன்றோ

                             எவ்வழி நல்லவர் ஆடவர்

                             அவ்வழி நல்லை வாழிய நிலனே       (புறம். 187)

என்று சுட்டுவார் ஔவையார். எனவே,

                    நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்

                   அல்லது செய்தல் ஓம்புமின், அதுதான்

                   எல்லோரும் உவப்பது, அன்றியும்

                   நல்லாற்றுப் படூஉம் நெறியும்மார் அதுவே (புறம்.195; 1– 9)

என்று வலியுறுத்தப்பெற்றது. 

நிறைவு

            புணர்ந்தாரைப் பிரியாமை, நன்றி மறவாமை, பிறர் துன்பத்தையும் தன் துன்பமாக எண்ணுதல், சொல்லிய சொல்லில் நிற்றல், வினை ஆளுமை, எண்ணத் தூய்மை, சுற்றம் காத்தல், விருந்தோம்பல் என்பனவெல்லாம் சமூகத்தைக் கட்டமைக்கும் அறக்கோட்பாடுகளாகச் சங்கச் சமூகத்தால் முன்னிறுத்தப்பட்டன. தனி மனிதனும், அரசும் தங்களுக்கான அறங்களில் வழுவாது நிற்க அறிவுறுத்தப்பட்டது. அறம் வழுவும் தனியனைச் சமூகம் தண்டித்தது. அறம் போற்றா அரசனைப் புலவர் பாடாது ஒதுக்கினர்.

          சங்க இலக்கியத்திற்குப் பின்வந்த ஆசாரக்கோவை,

                    நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு

                   இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு

                   ஒப்புர வாற்ற வறிதல் அறிவுடைமைய        

                   நல்லினத் தாரோடு நட்டல் இவையெட்டும்

                   சொல்லிய ஆசார வித்து (ஆ.கோ.)

என்று, அறச்செயல்களைப் பட்டியலிடுகிறது. மணிமேகலைக் காப்பியமோ,

                   அறமெனப் படுவது யாதெனக் கேட்பின்

                   மறவாது இதுகேள் மன்னுயிர்க் கெல்லாம்

                   உண்டியும் உடையும் உறையுளும் அல்லது

                   கண்டதுஇல் 

என்று, இந்த உலகத்து உயர்களுக்கெல்லாம் உணவும், உடையும், உறையும் கிடைக்கச் செய்வதே சிறந்த அறம் என்கிறது. எனவே, அறம் என்னும் சொல் காலந்தோறும் சமூகச் சூழ்நிலைக்கு ஏற்ப புதிய பொருள்களைப் பெற்று வந்துள்ளதை அறியமுடிகிறது. 

            அறம் என்பது வாழ்வின் அடிப்படை ஒழுக்கத்தைக் குறிப்பதாயினும் அது பல்வேறு பொருண்மைகளை அகத்தடக்கிய நுட்பமும் செறிவும் கொண்டதாகத் திகழ்கிறது. அறத்தை வடிவமைப்பதில் சமூக உளவியல் முன்னிற்கின்றது. எனவே, மனிதன் தன் வாழ்வுச் சிறப்புக்கும், சமூக ஒழுங்கிற்கும் அமைத்துக்கொண்ட ஒழுக்கநெறிகள் அனைத்தும் அறம் என்று கொள்ள முடியும். மேலாக,

                   முகத்தான் அமர்ந்த இனிதுநோக்கி அகத்தானாம்

                   இன்சொ லினதே அறம் (குறள். 93)

என்று வள்ளுவர் உரைப்பதைப்போல, முகம் மலர்ந்து, இனிது நோக்கி, உள்ளத்திலிருந்து இன்சொற்களைப் பேசுதே இன்றைய நிலையில் தேவையான, சிறந்த அறமாக உள்ளது. 

சுருக்கக் குறியீட்டு விளக்கம்

தி.நீ..,ப. 23 - திருக்குறள் நீதி இலக்கியம்

 ***** 

Dr. A. Manavazhahan, Associate Professor, Sociology, Art & Culture, International Institute of Tamil Studies, Chennai -113.

தமிழியல்

www.thamizhiyal.com  

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

பழந்தமிழர் நெசவுத் தொழில்நுட்பம்

 பழந்தமிழர் உடை மேலாண்மையும் நெசவுத் தொழில்நுட்பமும்

முனைவர் ஆ.மணவழகன், இணைப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 600 113.

(அரிமா நோக்கு, பன்னாட்டு ஆய்விதழ், சனவரி, 2019)

 

உணவிற்கு அடுத்த நிலையிலான அடிப்படைத் தேவையாக மட்டுமன்றி, ஒரு சமூகத்தின் நாகரிகத்தையும் தொழில்நுட்பத் திறத்தையும் அடையாளப்படுத்துவதாகவும் உடை பண்பாடு அமைகிறது.  உடை பற்றிய பண்டைய இலக்கியக் குறிப்புகளிலிருந்து பழந்தமிழர்களின் நாகரிக வளர்ச்சி நிலைகளையும் உடை மேலாண்மையையும் நெசவுத் தொழில்நுட்பத் திறத்தையும் அடையாளப்படுத்த முடிகிறது. ‘ஆடையில்லா மனிதன் அரை மனிதன்’, ‘கந்தையானாலும் கசக்கிக் கட்டு’ என்பன போன்ற தமிழர்தம் பழமொழிகள், அவர்கள் உடைக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன. 

எத்தகைய நிலையிலிருப்போர்க்கும் உணவும் உடையும் இன்றியமையாதன என்பதால், இவ்வுலகத்தை ஒரு குடைக்கீழ் ஆளும் மன்னனாயினும், காட்டில் வேட்டையாடிப் பிழைப்பவனாயினும் ஒவ்வொருவனுக்கும் உண்பதற்கு நாழி உணவும் உடுப்பதற்கு இரண்டு உடைகளும் இன்றியமையாத பொதுமைகளாக வலியுறுத்தப்பட்டன (புறம்.189:1-5). உடையின் இன்றியமையாமையைக் குறிப்பிடும் இடத்து, ‘உடுக்கை இழந்தவன் கைபோல’(குறள்.788) என உவமையாக்குவார் வள்ளுவர்.

அகத்தால் அழிவு பெரிதாயக் கண்ணும்

புறத்தால் பொலிவுறல் வேண்டும் எனைத்தும்

படுக்கை இலராயக் கண்ணும் உடுத்தாரை

உண்டி வினவுவார் இல்        (பழமொழி.329)

என்று, உடுத்தும் உடையே ஒருவரின் நிலையை வெளிக்காட்டும் அளவீடாகுமென உடையின் தேவையை அறிவுறுத்தும் பழமொழி நானூறும். இவ்வாறு, வாழ்வியல் பண்பாட்டோடு ஒன்றிய உடையின் தேவையை நிறைவு செய்ய பழந்தமிழர் எவ்வகையானச் செயல்பாடுகளைக் கடைபிடித்தனர் என்பதையும், பலவகையான தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி, இன்றைய உடை உற்பத்திக்கும் ஆடை வடிவமைப்புக்கும் மேலாண்மைக்கும் முன்னோடியாக எவ்வாறு திகழ்ந்தனர் என்பதையும் பதிவு செய்வதை இக்கட்டுரை நோக்கமாகக் கொள்கிறது. 

ஆதி கால ஆடைப் பயன்பாடு

வேட்டைச் சமூகத்தில் இயற்கைச் சக்திகளால் தனது உடலுக்கு ஊறு நேராவண்ணம் பாதுகாப்பதற்காக உடையணிய வேண்டிய தேவை மனிதனுக்கு எற்பட்டது.  மழையாலும் வெயிலாலும் பனியாலும் ஏற்பட்ட துன்பத்தைப் போக்க, தான் உணவிற்காக வேட்டையாடிய மிருகங்களின் தோலையே தனக்கேற்ற உடையாகப் பயன்படுத்தத் தொடங்கினான். தோல் கிடைக்காதவிடத்து மரப்பட்டைகளையும், மர நார்களையும் மரத் தழைகளையும் உடையாக வடிவமைத்தான். அதன் படிநிலைவளர்ச்சியாக, நூலாடையையும் பட்டாடையையும் உற்பத்தி செய்யும் தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் தன்னை உயர்த்திக்கொண்டான்.  

வெப்பமான காலத்திலே மரத் தழைகளை உடுத்தலால் குளுமையாக உடலை வைத்திருக்க முடிந்தது. தழையுடுத்தும் இப்பண்பாடு மக்களிடையே நிலவி வந்ததைச் சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன. பெரும்பாலும், தழை பெண்களுக்குரிய உடையாகவே காட்டப்படுகிறது (புறம்.61:1; 248; 340:1; 341:2,3; அகம்.7:2; 20:9,10; 59:4-6; 156:9-11; 176:13-15; குறு.293:5-7; 342:4,5; நற்.96:7-9;  ஐங்குறு.15:1,2; 191:3; 256:2; கலி.102:4-8;125:12-15). தலைவிக்குத் தலைவன் தழையும் தாரும் பரிசளித்தான் (நற்.80:5). அவ்வகைத் தழையுடைக்கு மகளிர் நெய்தற்பூக்கள் போன்றவற்றால் அணிசெய்தனர்(அகம்.70:11,12; 201:6,7; 275:16-19; 320:3; குறு.125:3; 159;1).

அரிதாக, ஆடவரும் தழையணி அணிந்த செய்தியை, ‘தளிரால் ஆகிய தழையை உடுத்தி நுந்தையின் தினைப் புனத்தின் கண்ணே ஞாயிறு மறையும் பொழுதில் வரவோ’ (நற்.204:1,2) என்ற தலைவன் மொழிகொண்டு அறிய முடிகிறது. ‘சங்க இலக்கியங்களில் ‘தழை’ என்னும் சொல்லே பல பாடல்களில் பயின்று வந்துள்ளது. 

உடை உற்பத்தி மேலாண்மை

உடை உற்பத்தியில் நிறைவினை எட்ட பழந்தமிழர் பலவகைத் தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்தினர். உடை உற்பத்தி மற்றும் மேலாண்மையில் உடை உற்பத்திக்கு மூலப்பொருளாகிய பருத்தியினை உள்நாட்டிலேயே உற்பத்திசெய்தல், நெசவுத்தொழிலை மக்கள் தொழிலாக/சிறுதொழிலாக மாற்றி, பெண்கள் உட்பட அனைவரும் அத்தொழிலில் ஈடுபடல், வறியவர்க்கும், இரவலர்க்கும், இயலாதோர்க்கும் உடைகளை வழங்கல், உடை உற்பத்தியில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உழைப்பினை எளிதாக்குவதோடு, அதிக உற்பத்தியாலும், சிறந்த வேலைப்பாடுகளாலும் ஏற்றுமதிக்கும் உட்படுத்தி வணிகத்தைப் பெருக்குதல் என பல்வேறு செயலாக்கங்களைக் கண்டறியமுடிகிறது. 

மூலப்பொருள் உற்பத்தி

ஒரு தொழிலின் தடையற்ற வளர்ச்சிக்கு, அத்தொழிலுக்குத் தேவையான மூலப்பொருள்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்தல் அடிப்படையாகிறது.  உடைகளின் உற்பத்திக்கு மூலப்பொருளான பருத்தியை உள்நாட்டிலேயே விளைவித்த செய்தியினை சங்க இலக்கியம் காட்டுகிறது. பருத்தி மிகுதியாகப் பயிரிடப்பட்டு, ஊரைச் சுற்றி வேலிபோல காட்சியளித்ததை, ‘பருத்தி வேலிச் சீறூர்’(புறம். 299:1) என்பதில் அறியமுடிகிறது. 

நெசவுச் சிறுதொழில்

பழந்தமிழகத்தில் நெசவுத் தொழில் சிறுதொழிலாக இல்லங்கள்தோறும் கைக்கொள்ளப்பட்டது. உடையின் தேவை என்பது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பொதுவானதொன்று என்பதால், அதனைத் தேவையான அளவில் உற்பத்தி செய்வது இன்றியமையாததாகியது. அதற்கானத் தீர்வாக, அத்தொழில் எளிய மக்களின் தொழிலாக பரவலாக்கப்பட்டது. பருத்திப் பயிரை விளைவித்து, அதிலிருந்து பஞ்சினை எடுத்துவந்து, அதிலுள்ள தூசுகளையும், செற்றைகளையும் நீக்கி உலர்த்தினர். பின்னர் கொட்டை நீக்கி, நூலாக நூற்றனர். பழந்தமிழர் இல்லங்களின் முற்றங்களில் பஞ்சு உலர்த்தப்பட்டிருந்தது.

            பஞ்சி முன்றிற் சிற்றி லாங்கட்’ (புறம். 166:5) 

உடை உற்பத்தியில் மகளிர்

உடை உற்பத்திக்கானத் தொழில்நுட்பத்தினைப் பெண்கள் கற்றிருந்தனர்.  நெசவுத்தொழிலில் ஈடுபட்ட பெண்கள் ‘பருத்திப் பெண்டிர்’ என வழங்கப்படுகின்றனர். இவ்வகைப் பருத்திப் பெண்டிர் செய்த நூலாலான பனுவலை,

            ‘பருத்திப் பெண்டின் பனுவ லன்ன’ (புறம். 125: 1)

என்று உவமையாக்குகிறது இலக்கியம். பருத்தியை எடுத்துவந்து, அதிலிருக்கும் தூசு, செற்றை ஆகியவற்றை நீக்கும் பணியில், இரவிலும் விளக்கொளியில் ஈடுபட்டிருந்த பருத்திப் பெண்டிரை,

                        சிறையும் செற்றையும் புடையுந ளெழுந்த

                     பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்து    (புறம்.326:4-5)

என்ற பாடலடிகள் காட்டுகின்றன. ஆண் துணை இல்லாத பெண்கள் சிறுதொழிலாக, இல்லத்திலேயே இந்நெசவுத் தொழிலைச் செய்தனர்.  இவ்வகைப் பெண்கள் தம் முயற்சியில் செய்த நுணங்கிய நுண்ணிய பனுவலை,

                        ஆள் இல் பெண்டிர் தாளின் செய்த

                      நுணங்கு நுண் பனுவல் போல          (நற்.353:1-2)

என்பதில் காணலாம். 

நெசவுத் தொழில்நுட்பம்

மூலப்பொருள்களை உற்பத்தி செய்து (பருத்தி, பட்டுக்கூடு) அவற்றிலிருந்து இரண்டாம் நிலை பொருள்களை (நூல், பட்டு இழை) உருவாக்கி, மூன்றாம் நிலை உற்பத்திப் பொருளாகிய துணியை நெய்து, பின்னர் பயன்பாட்டுக்கு ஏற்ப பல வடிவங்களிலும், வண்ணங்களிலும், அலங்கார வடிவமைப்புடனும் கூடிய ஆடைகளை நெய்யத் தொடங்கிய நிலை தொழில்நுட்பத்தின் உயர்நிலையாக அறியப்படுகிறது.  இவ்வகை படிநிலை நுட்பங்களைச் சங்க இலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன. 

          வேறுபட்ட உடைகள்

தன்னை நாடி வரும் வறியவர்க்கும் பாணர்க்கும், அவர்களின் நைந்துபோன, பழைய, கிழிசல் உடைகளைக் களைந்து, புத்தாடைகளை உடுக்கச்செய்யும் பழந்தமிழ் அரசர்களின் செயல்களைப் பல்வேறு இலக்கியக் குறிப்புகள் காண்ட்டுகின்றன. அவ்வாறு வழங்கப்பட்ட உடைகள் பலவகை நுண்வேலைப்பாடுகளைக் கொண்டவையாகவும், பல்வகைத் தொழில் நுட்பங்களின் வெளிப்பாடாகவும் விளங்கின. அரசர், பாம்பின் தோல் போன்ற பளபளப்புத் தன்மையுடையனவாகவும், மூங்கிலின் உட்பக்கத்தில் உள்ள தோலைப் போன்ற மென்மையுடையனவாகவும், நெய்யப்பட்ட நூல் இழைகளின் வரிசை அறிய முடியாத, பூ வேலைப்பாடுகளுடன் கூடியனவுமாகிய பல்வகைத் தொழில்நுட்பம்கொண்ட உடைகளை வறியவர்க்குக் கொடுத்து உடுக்கச் செய்தனர்(புறம். 383:9-11). இரவலரின் பழைய, பாசி போன்ற கந்தல் உடைகளைக் களையச்செய்து, மென்மையான மேகம் போன்ற உடையை உடுக்கச்செய்தனர்(பெரும்பாண். 468-469).

மேலும் உடைகள், பின்னப்பட்ட நூலிழைகளின் இடைவெளியை அறிய முடியா தன்மையிலும், பூ வேலைப்பாட்டுடனும், பாம்பின் மேல்தோல்(சட்டம்) போன்ற தன்மை வாய்ந்ததாகவும்  நுண்ணிய தொழில்நுட்பத்தோடு பின்னப்பட்டிருந்தன.

                        நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்த

                     அரவுரி அன்ன அறுவை நல்கி   (பொருநர். 82-83) 

          நுண் வேலைப்பாடுகள்

பல்வகைத் தன்மைகளோடு கூடிய உடைகளை உற்பத்தி செய்ததோடு, அவற்றில் வண்ணம் ஏற்றுதல், உடைகளில் பூவேலைப்பாடுகள் செய்தல் முதலிய பல்வேறு நுட்பங்களையும் பழந்தமிழர் கையாண்டனர். இது அச் சமூகத்தின் தொழில்நுட்ப அறிவோடு முருகியல் உணர்வையும் வெளிப்படுத்துவதாக அமைகிறது.  நெய்யப்பட்ட உடையில் கலைப்படைப்புகளை பலவகை ஓவியங்களாக பூ வேலைப்பாடுகளில் வெளிப்படுத்தினர். அவ்விதம் பின்னப்பட்ட பூக்களைப் பல வண்ணங்களில் அழகூட்டினர். நீல நிற உடையில் பல வண்ணப் பூக்கள் பின்னப்பட்டதை,

            ‘நீலக் கச்சைப் பூவா ராடை’ (புறம். 274:1) என்பதிலும்

                       ‘பூவிரி கச்சைப் புகழோன் தன்முன்’ (சிறுபாண். 239) என்பதிலும்

அறிய முடிகிறது.       

            மேலும், பலவகைத் தன்மைகளும், வடிவங்களும் அமைந்த உடைகளுள், இருபுறமும் குறுகியதும், நீளமானதுமான உடையை,

                        தெண் திரை அவிர் அறல் கடுப்ப ஒண் பகல்

                      குறியவும் நெடியவும் மடி தரூஉ விரித்து             (மதுரைக். 519-520)

என்பதிலும், இருபுறமும் தொங்கவிடும்படி நீளமாக வடிவமைக் கப்பட்ட உடையை,

                        ‘இருகோட்டு அறுவையர் வேண்டு வயின் திரிதர’ (நெடுநல். 35)

என்பதிலும் காணலாம்.

            அதேபோல, பின்புறம் நிலம்தோயும் வண்ணம் நீளமாகத் தொங்கவிடப்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட உடையை, 

                        ‘புடை வீழ் அம் துகில் இடவயின் தழீஇ’ (நெடுநல்.181) என்றும், 

விரிந்த நூலான் இயன்ற, தரையில் புரளும் உடையினை,

                        இருநிலந் தோயும் விரிநூல் அறுவையர்’ (பதி.34:3)

என்றும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. 

            வண்ணம் ஏற்றுதல், பூ வரைதல் போன்ற நுண்வேலைப்பாடமைந்த கச்சையை,                             ‘நுண்வினைக் கச்சைத் தயக்கறக் கட்டி’ (குறிஞ்சி.125)

என்ற பாடலடியும், கடல் அலைபோன்ற தன்மைகொண்ட மென்மையான உடையை,

                        ‘கோட்டங் கண்ணியும் கொடுந்திரை ஆடையும்’(புறம். 275:1)

என்ற அடியும் சுட்டி நிற்கின்றன. அதேபோல, இரு ஓரங்களிலும் நூல்களின் வெட்டுவாயினை அறிய முடியாத, அடர்த்தியான நூல் இழைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட உயர்தர உடையை உற்பத்தி செய்யும் நுட்பத்தினை,

                         ‘இழைமருங்கு அறியா நுழைநூல் கலிங்கம் (மலைபடு.561)

என்பதிலும் அறியமுடிகிறது. 

            வண்ணம் ஏற்றுதல்

உடைகளுக்கு வண்ணம் ஏற்றும் தொழில்நுட்பத்தினைப் பழந்தமிழர் கைவரப்பெற்றனர்.  ஒருசேர நெய்யப்பட்ட உடையில் நீலநிற வண்ணம் ஏற்றியிருந்ததை,

            ‘இணைபட நிவந்த நீல மென் சேக்கையுள்’ (கலி.72:1)

என்பதில் அறியமுடிகிறது. மேலும், சிவப்பு நிற வண்ணம் ஏற்றப்பட்ட உடையை,

                        வெயிற் கதிர் மழுங்கிய படர் கூர் ஞாயிற்றுச்

                      செக்கர் அன்ன சிவந்து நுணங்கு உருவின்

                      கண் பொருபு உகூஉம் ஒண் பூங் கலிங்கம்   (மதுரைக். 431-433)

என்பதிலும், ‘கோபத் தன்ன தோயாப் பூந்துகில்’ (திருமுருகு.15) என்பதிலும் அறிய முடிகிறது. பூந்துகிலை, ‘அற்றங் காவாச் சுற்றுடைப் பூந்துகில்’ (மணி.3:139) என்றும் இலக்கியம் காட்டுகிறது. 

நெசவுத் தொழிலுக்குப் பயன்படுத்தப்பட்ட தறியும், அதில் பல்வகை நூலிழைகளைக் கொண்டு பரப்பி, உடைகளை உற்பத்திச் செய்த தொழில்நுட்பமும் ‘பாவிரித்தன்ன’ (அகம்.293) என்று உவமையாக அமைவதைக் காணமுடிகிறது. 

பலவகையான உடைகள்

            துகில்

உடை வகைகளுள் மென்மைத் தன்மை வாய்ந்ததாகத் துகில் காணப்படுகிறது. அதன் நிறம் மிகவும் வெண்மையானதாகக் கூறப்பட்டுள்ளது. இது பருத்தியினால் ஆக்கப்பட்டதாகும். உருவத்தை மறையாது காட்டுகின்ற மென்மைத் தன்மை இத்துகிலுக்கு உண்டு.

                        முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்

                       நுணுங்கு துகில் நுடக்கம் போல         (நற்.15:1,2)

என்றும்,          ‘துகில் விரித்தன்ன வெயிலவர் உருப்பின்’ (நற்.43:1)

என்றும் துகில் குறிப்பிடப்படுகிறது. 

போர்வை

போர்வை தமிழர்களது உடை வகைகளில் ஒன்றாகும். உடல் மறைக்க உடைகளை உருவாக்கியதோடு, குளிருக்கும், இரவில் போர்த்தவும், விரிப்பிற்கும், உடைகளை விடவும் தடிமனாக நெய்யப்பட்ட போர்வைகளை உற்பத்தி செய்யும் நுட்பத்தினைக் கைக்கொண்டிருந்தனர்.

தலைவனைக் காண்பதற்குத் தலைவி குறியிடத்திலே போர்வையை அணிந்து நின்ற செய்தியை,

மன்பதை எல்லாம் மடிந்த இருங்கல்குல்

          அம் துகில் போர்வை அணி பெறத் தைஇ நம்

          இன்சாயல் மார்பன் குறி நின்றேன் யான் ஆக   (கலி.65:3-5)

என்ற பாடலடிகள் காட்டுகின்றன.           

பல வண்ணங்கள் ஊட்டப்பட்ட பல மயிர்களை உள்ளே வைத்துத் தைத்து , அரிமா வேட்டை ஆடுதல் போன்ற உருப்பொறித்து, அகன்ற இடத்தையுடைய காட்டில் பூத்த முல்லை முதலான பல வகையான மலர்களின் உருவங்களையும் நிரம்பப் பொறித்து, மென்மையாகப் போர்த்த போர்வையை,

                        ஊட்டுறு பல் மயிர் விரைஇ வய மான்

வேட்டம் பொறித்து வியன் கட் கானத்து

முல்லைப் பல் போது உறழ பூ நிரைத்து

மெல்லிதின் விரித்த சேக்கை               (நெடுநல்.128-131)

என்பதில் காணமுடிகிறது.

பட்டாடை

உடை உற்பத்தியில் பருத்தியை மட்டும் பயன்படுத்தாமல், பட்டு இழைகளையும் பயன்படுத்திய நுட்பத்தையும் இலக்கியங்கள் காட்டுகின்றன.

பாசி வேரின் மாசொடு குறைந்த

துன்னற் சிதாஅர் நீக்கித் தூய

கொட்டைக் கரைய பட்டுடை நல்கி                     (பொருநர்.153-155)

என்பதில் கரை வைத்து நெய்யப்பட்ட பட்டாடையும்,

            அணிகிளர் சாந்தின் அம்பட்டிமைப்பக்

          கொடுங்குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கை     (அகம்.236)

என்பதில், ஒளிரும் பட்டாடையும் சுட்டப்படுகிறது. 

கம்பளம்

உடைகளிலிருந்தும் போர்வைகளிலிருந்தும் வடிவமைப்பிலும், தன்மையிலும், வேறுபட்ட கம்பளம் தயாரிப்பு நுட்பத்தினையும் பழந்தமிழர் கொண்டிருந்தனர். பசுமையான கம்பளத்தில்   இரும்பால் செய்த ஊசி எளிதில் தைத்தயிடம் தெரியாது மறைவதை,

                        பொன்னின் ஊசி பசுங்கம்பளத்துத்

                      துன்னிய தென்னத் தொடுகடல் உழந்துழி         

என்ற பாடலடிகள் உவமையாக்குகின்றன.

 

   மேற்கண்ட சான்றுகளின்வழி, பழந்தமிழர் அடிப்படைத் தேவைகளுள் முதன்மையானதான உடையின் உற்பத்திக்கும் பரவலாக்கத்திற்கும் தொழில்முறை செயல்பாடுகள் மற்றும் பண்பாட்டு நெறி என இருவகை செயல்பாடுகளைக் கொண்டிருந்தது தெரியவருகிறது.

    பண்பாட்டு அடிப்படையிலான செயல்பாட்டில் வறியவர்களுக்கு உணவோடு உடையையும் வழங்கி அதனை அறமாகப் போற்றினர் என்பதும், உடை உற்பத்தியின் நிறைவிற்குத் தொழில்முறையிலான செயல்பாடுகளில் மேலாண்மையைக் கொண்டிருந்தனர் என்பதும் பெறப்படுகிறது. உடை உற்பத்தியில் பெண்களும் ஈடுபட்டனர் என்பதும், வெறுமனே உடுத்துதற்கு உடை என்ற நிலையோடு நில்லாமல், அதில் பலவகையான கலை வேலைப்பாடுகளை மேற்கொண்டனர் என்பதும், வயதுக்கும் காலத்துக்கும் ஏற்ற உடைகளை உற்பத்தி செய்ததோடு உடைகளில் பலவகை வண்ணங்களை ஏற்றும் நுட்பத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பதும் அறியப்படுகிறது.

 ***** 

Dr. A. Manavazhahan, Associate Professor, Sociology, Art & Culture, International Institute of Tamil Studies, Chennai -113.

தமிழியல்

www.thamizhiyal.com