ஆ. மணவழகன், விரிவுரையாளர், எஸ்.ஆர்.எம். கலை-அறிவியல் கல்லூரி, காட்டாங்குளத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம் 603 203.
(பன்னாட்டுக் கருத்தரங்கம், எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி, சென்னை,
ஆக.19,20,
2006)
கணினித் தமிழ்
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு ஊடகத்தின்/பொருண்மையின் வழி, தமிழ் தன் பயணத்தை இனிதே மேற்கொண்டுவந்துள்ளது.
தமிழின் ‘பொற்காலம்’ என்று போற்றப்படக்கூடிய சங்ககாலம் தவிர்த்த ஏனைய எக்காலத்திற்கும்
இத்தன்மை பொருந்துவதாகும். தர்க்கத்தின் தோளேறியும், சமயத்தின் தோளேறியும் காலத்தைப்
புறந்தள்ளி வந்துள்ளது தமிழ். அவ்வகையில், நடப்பு நூற்றாண்டோ, ‘நாளும் இன்னிசையால்
நல்ல தமிழ் வளர்ப்போம்’ என்ற நிலையை மாற்றி, ‘நாளும் இணையத்தால் இனிதே தமிழ் வளர்ப்போம்’
என்ற நிலையை அடைந்துள்ளது எனலாம்.
ஒரு
சமூகத்தின் பண்பாட்டு மேன்மையை, நாகரிக வளர்ச்சியைக் காட்டுவது அச்சமூகத்தின் மொழி
என்றால், அம்மொழியின் பண்பாட்டை, நாகரிகத்தைக் காட்டுவது, அதன் மரபுக்கட்டும், புதுமையை
ஏற்கும் நெகிழ்வுமாகும். இத்தகைய தன்மைகளே தமிழை இன்று நவீன ஊடகத்தின் மொழியாக உயர்த்தியுள்ளது. ஊடகம் என்பதைக் கணினி என்று கொண்டால், இன்று தமிழின்
பயணம் இணையத்தில் எனலாம்.
ஊரகத்தே உலாவி வந்த தமிழ் இன்று தகவல்
நெடுஞ்சாலையில் பயணித்து உலகமெலாம் பரவி வருகிறது. ‘வேறு எந்த இந்திய மொழியையும்விட
தமிழ் கணினியில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது’(மின்-தமிழ், ப.63). ‘நம் இன்தமிழ் மின்-தமிழாக
மாற வேண்டியது காலக் கட்டாயம். ஏற்றுக்கொள்ள வேண்டியதும் ஏற்படுத்த வேண்டியதும் நம்
கடன்’ (மின்-தமிழ், ப.62) என்ற கருத்து இன்று ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாகவே உள்ளது.
இணையத் தமிழ்
இணையம் என்பதற்கு ‘கணினிகளுக்கு இடையிலான
தகவல் பரிமாற்றம்’ என்று பொருள் கொள்ளப்படுகிறது (பால்ஸ் தமிழ் மின் அகராதி). தகவல்தொடர்புப் புரட்சியின் தொடக்கம் கணினி, தொடர்வது
இணையம் ஆகும். ‘1969இல் தோன்றிய தகவல் தொடர்புப் புரட்சியால் (Information
Revolution) உலகம் தகவல் சமுதாயமாக (Information Society) மாற கால் நூற்றாண்டே போதுமானதாகிவிட்டது.
இதனால் உலகின் எல்லாப் பகுதிகளோடும் உடனடித் தொடர்பு கொள்ள முடிகிறது. (மின்-தமிழ்,
ப.68). (1969ஆம் ஆண்டு இணையம் தோன்றிய ஆண்டாக அறியப்படுகிறது). இன்று உலகையே சிறு கிராமமாக்கி
தகவல் பரிமாற்றத்தில் பெரும் புரட்சிக்கு வித்திட்டுள்ளது இணையம் (Internet).
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்
என்ற
பாரதியின் மொழிக்கேற்ப, உலகெங்கும் வாழும் தமிழர்களால், தமிழ் இணையத்தில் பயணித்து,
உலகத்தமிழர் இதயங்களை இணைக்கிறது. இவ்வகையில், ‘இணையத்தில் இணைந்த தமிழ் இதயங்கள் பல.
பற்பல தகவல் தளங்களை(Websits) தரணிக்குத் தந்து, தமிழ் கூறு நல்லுலகினை வேறு நாட்டவரும்
வணக்கம் செய்யும் வகை செய்துள்ளனர்’ (மின் தமிழ், ப.60,61) என்பதை அறிகிறோம்.
‘இணையத்தில் நுழைந்த முதல் இந்திய மொழி
என்ற பெருமை தமிழுக்கு உண்டு. தமிழ் 1986ஆம்
ஆண்டு பிப்ரவரி மாதம் இணையத்தில் ஏறியதாக அறியப்படுகிறது (இன்டெர்நெட் உலகில் தமிழ்
தமிழன் தமிழ்நாடு, ப.8). மேலை நாடுகளில் பணிபுரியும் தமிழர்கள் பலரிடம் கணினி வசதியுடன்
தமிழார்வமும் ஒன்றுசேர, அவர்கள் தன்னார்வமாகப் பல முயற்சிகள் செய்து இணையத்தில் தமிழ்
விரிவாக, விரைவாகப் பரவ வகை செய்து வருகின்றனர்.
‘இணையத்தில் தமிழை வெளிநாட்டுத் தமிழர்கள்
முதலில் பயன்படுத்தத் தொடங்கினர். முதல் கட்டத்தில் தாங்கள் கண்டுபிடித்த தமிழ் எழுத்துகளைப்
பயன்படுத்தி மின்னஞ்சல் அனுப்பித் தங்களுக்குள் உறவை வளர்த்து வந்தனர். 1992-93 ஆம்
ஆண்டுகளில் எஸ்.சி. தமிழ் இலக்கிய மன்றம், ‘அ’ என்று ஒரு தமிழ் இலக்கிய மின்னிதழை நடத்தியது.
(ஆசிரியர் குழுவில் இருந்தவர்கள்: அருள் சுரேஷ், வைத்தியநாதன் ரமேஷ், எம்.சுந்தரமூர்த்தி,
சுந்தரபாண்டியன், விக்னேஸ்வரன்). இதுதான் முதல் தமிழ் மின்னிதழாக இருக்கவேண்டும் என்றும்
(தமிழில் இணைய இதழ்கள், ப.23), இணையத்தில் முதல் மின் இதழ் எனும் பெயர் பெற்றது ‘தேனி’
(www.tamil.net/theni) என்றும்(மின்-தமிழ், ப.68), இரண்டு விதமாக அறியப்படுகிறது. தொடக்கம்
எதுவாக இருப்பினும், இன்று இதன் சிறப்பான வளர்ச்சியினைக் காண முடிகிறது. 2003ஆம் ஆண்டிற்கு
முன்பாகவே ஏறக்குறைய பதினேழு லட்சத்துக்கும் அதிகமான இணையப் பக்கங்கள் தமிழுக்கு இருப்பதாக ‘தமிழ் இணைய மாநாட்டு அறிக்கை’ (திசம்பர்
2003, சென்னை) குறிப்பிடுவது இங்குச் சுட்டத்தக்கது. உலக மொழிகளில் ஆங்கிலத்திற்கு
அடுத்து தமிழில்தான் அதிக இணையப் பக்கங்கள் உள்ளன. இதில் வலைப் பதிவுகள் எனப்படும்
தனியார் பக்கங்களின் எண்ணிக்கையே அதிகம்.
தமிழகத்தில், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை
ஏற்படுத்த கடந்த 1997ஆம் ஆண்டு தனிக்கொள்கை உருவாக்கப்பட்டது. இதன்வழி, ‘தமிழ் இணையம்’(Tamil
Internet) மாநாடு நடத்தப்பட்டு, தமிழில் மென்பொருள் வளர்ச்சி ஏற்பட விசைப்பலகை வடிவமைக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் மாநாடுகள் நடத்தப்பட்டு கணினி-தமிழ் பயன்பாட்டில் ஏற்படும்
சிக்கல்கள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டும், ஆராய்ச்சியின்
முடிவுகள் விளக்கப்பட்டும் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இணையப்
பக்கங்கள்
தமிழில் உள்ள வலைத்தளங்களை, இணைய இதழ்கள்(e-magazine
or e-zine), இணையப் பக்கங்கள் (web site ), வலைப் பதிவுகள்/தனியார் இணையப் பதிவுகள்(blogs
) என வகைப்படுத்தலாம்.
பொதுவாக இணைய இதழ்களை,
(i) தினச் செய்திகளுக்கானவை
(ii) செய்திகளோடு பிறவற்றையும் வெளியிடுபவை
(iii) இலக்கிய இதழ்கள்
அ. ஏதாவது ஒரு படைப்பிலக்கியத்தைக் களமாகக் கொண்டவை
ஆ. ஒன்றிற்கு மேற்பட்ட படைப்பிலக்கியத்தைக் களமாகக்
கொண்டவை.
இ. முழுமையான இலக்கிய இதழாக இயங்குபவை
(இலக்கியம், அரசியல், சமூகம், திரைப்படம்,..)
(iv) அறிவியல் இதழ்கள் (மருத்துவம், கணினி என துறைசார் இதழ்கள்)
என்ற
பகுப்பிற்குள் கொண்டுவரலாம். மேலும், இவற்றை, அச்சு வடிவத்தை ஏற்றம் செய்பவை/அச்சு
இணையம் இரண்டிலும் இயங்குபவை (தினமணி, தினத்தந்தி, தினகரன் போன்ற செய்தி இதழ்கள், விகடன்,
குமுதம் போன்ற வார இதழ்கள்), நேரடியாக இணையத்தில் இயங்குபவை (திண்ணை, திசைகள், வார்ப்பு,
பதிவுகள்,...) என்றும் பகுத்துக் காணலாம்.
இவையல்லாமல், இணைய குழுக்களும் (web
groups), தமிழ் மின் நூலகங்களும் (e-library), எண்ணிலடங்கா ‘தனியார் வலைப்பதிவுகளும்’ இணையத் தமிழ் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கவையாகச்
செயல்படுகின்றன.
தமிழ் இணைய
இதழ்கள் (e-zines)
அச்சு வடிவத்திலிருந்து இணைய இதழாக மாறியவற்றைத்
தவிர்த்து, இணையத்தில் நேரடியாக தொடங்கப்பட்ட
தமிழ் இணைய இதழ்கள் பல. தற்போது பயன்பாட்டில் உள்ள மின் இதழ்களில் ‘தமிழில்
முதல் மின் இதழ்’ என்ற அறிமுகத்தோடு வெளிவருவது ‘தினபூமி.காம்’ ஆகும். இவ்விதழ் தினச்
செய்திகளுக்கான இதழாக விளங்குகிறது. இதற்கு அடுத்து 1.5.1996இல் தமிழ்சினிமா.காம் என்ற
இதழ் இணையம் ஏறியது. ஆனால், www.tamilcinema.com என்ற உலகின் முதல் தமிழ் இணைய பத்திரிகையை
முதன்முதலில் துவக்கியவர் மா.ஆண்டோ பீட்டர்’ (மல்டிமீடியா வேலைவாய்ப்புச் செய்திகள்,
மே.-ஜூன் 2006, ப.4) என தமிழ் சினிமா.காமே முதலில் வலையேறியது என்றும் சொல்லப்படுகிறது.
இவ்வாறு தொடங்கிய இணைய இதழ்களின் வலை ஏற்றம்,
ஏறக்குறைய பத்தாண்டுகளில் 125க்கும் மேலாக அதிகரித்துள்ளதை அறியமுடிகிறது. இவற்றில்,
வணிகநோக்கிலான இதழ்களும் வணிகநோக்கில்லாத இதழ்களும் அடங்கும்.
வணிக நோக்கிலான
இணைய இதழ்கள்
சிஃபி (sify.com) நிறுவனத்தின் தமிழ் வலையகம்
:http:tamil.sify.com. அதே நிறுவனம் நடத்தும், தினசரிகளிலிருந்து செய்திகளைச் சேகரித்து
www.samachar.com/tamil/index.php. என்ற பக்கத்தில் வழங்குகிறது. இதேபோல தெட்ஸ்தமிழ்
(http://thatstamil.oneindia.in), ஆறாம் திணை (www.aaraamthinai.com), வெப் உலகம்
(www. webulagam.com) போன்றவையும் வணிக நோக்கில் இயங்குகின்றன.
வணிக நோக்கில்லாத
இணைய இதழ்கள்
வணிக நோக்கில்லாத இணைய இதழ்கள் என்பவற்றில்,
‘திண்ணை’ (www.thinnai.com), ‘திசைகள்’ (www.thisaigal.com), ‘வார்ப்பு’ (www.
vaarppu.com), ‘தமிழோவியம்’ (www.tamiloviam.com), ‘பதிவுகள்’
(www.pathivukal.com), ‘நிலாச்சாரல்’ (www.nilacharal.com), ‘தமிழருவி’
(www.tamilaruvi.com), ‘கீற்று’ (www.keetru.com), ‘இன்தாம்’ (இணைய இதழ்களின் குழுமம்),
‘தமிழ்மணம்’ (www.tamilmanam.com), ‘தமிழ்க்குடில்’ (www.thamizhkudil.com), ‘வெப்தமிழன்’
(www.webtamilan.com), ‘மரத்தடி’ (www.maraththati.com), ‘அந்திமழை’ (www.andhimazhai.com),
‘எழில்நிலா’ (www.ezhilnila.com) ‘தமிழமுதம்’ (www.thamizhamutham.com), ‘சாளரம்’
(www.saalaram.com) போன்றவை செயலாற்றி வருகின்றன.
இவை, இலக்கியம், அரசியல், சமூகம், சினிமா என பலவற்றையும் பேசுகின்றன. இவற்றுள், வார்ப்பு
என்ற இதழ் கவிதை இலக்கியத்தை மட்டுமே களமாகக் கொண்டு இயங்குகிறது.
‘கீற்று’ இணைய இதழும், சிஃபி தமிழ்ப் பகுதியும்
(tamilsify.com)அச்சு வடிவில் வெளியாகும் சிற்றிதழ்கள் பலவற்றை வெளியிட்டும் ஆவணப்படுத்தியும்
வருகின்றன. சிஃபி.காமில், காலச்சுவடு, உயிர்மை, அமுதசுரபி, கலைமகள், மஞ்சரி, தலித்,
பெண்ணே நீ ஆகிய இதழ்கள் ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன. கீற்று இணைய இதழில், தலித் முரசு,
புதிய காற்று, புது விசை, கூட்டாஞ்சோறு, அநிச்சம், புரட்சி பெரியார் முழக்கம், விழிப்புணர்வு,
தாகம், தமிழ்ச் சான்றோர் பேரவை செய்தி மடல் ஆகியவை கிடைக்கின்றன. கீற்று இணைய இதழ்,
யுனிகோட் எழுத்துருவில் அமைந்திருப்பதால் தேடுபொறியிலும் இவ்விதழ்களைத் தேடிப் பெறும்
வாய்ப்பினைப் பெற்றுள்ளன. மற்ற பகுதிகளுக்கு
இவ்வாய்ப்பு இல்லை. தேடுபொறிகளில் அவை அகப்படா. அதேவேளை, இயங்கு தளம் 2000க்கு பிறகே யுனிகோட் எழுத்துரு பயனிக்கிறது என்பதும்
இங்குச் சுட்டத்தக்கது.
இவற்றில் வார இதழ்கள், மாத இதழ்கள், இருமாத இதழ்கள், எப்போதாவது
வலையேற்றம் பெறும் இதழ்கள் என்ற பகுப்பும் உண்டு. ‘சாளரம்’ அண்மையில் தமிழ்ப் பேராசிரியர்களை
ஆசிரியக் குழுவாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ள முழுமையான இணைய இதழாகும். இப்போக்கு இணைய
இதழின் தரத்தை உயர்த்த வழிவகுப்பதாக அமையும் எனலாம். இவற்றில் கவிதைகளுக்காக மட்டும்
(வார்ப்பு), கவிதை சிறுகதைக்காக மட்டும் இயங்கும் இதழ்களும் அடங்கும். சோதனை முயற்சியாக, சில பக்கங்கள் நாவல்களையும் (பா.ராகவன்-
அலகிலா விளையாட்டு) வெளியிட்டன. இப்போக்கு,
தமிழ் இணைய பக்கங்களின் படிநிலை வளர்ச்சியினையும், பன்முக நீட்சியினையும் காட்டுவதாக
அமைகிறது. குமுதம் குழுமத்தின் ஒரு பகுதியான தீராநதி சிற்றிதழ், இணைய இதழாகத் தொடங்கப்பட்டு,
பிறகு அச்சு வடிவத்தையும் பெற்ற இதழாக விளங்குகிறது.
மின் நூலகங்களில் குறிப்பிடத்தக்கவை மதுரை
மின் திட்டம்(Project madurai) மற்றும் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் நூலகமாகும். முனைவர் க. கல்யாணசுந்தரம் சுவிட்ஸர்லாந்தில்
வசிக்கும் ஒரு வேதியியல் அறிஞர். ‘மதுரைத் திட்டம்’ என்ற பெயரில் 1998ஆம் ஆண்டு தைப்பொங்கல்
அன்று இணைய பக்கத்தினைத் தொடங்கினார். இதுவரை 200 க்கும் மேற்பட்ட நூல்கள் வலை ஏற்றப்பட்டுவிட்டன.
இவற்றில் பழந்தமிழ் நூல்கள் முதல் இக்கால இலக்கியங்கள்
வரை அடங்கும்.
தனியர் பக்கங்கள் (blogs)
இணைய வலைத்தளங்களில் அதிக எண்ணிக்கையில்
காணப்படுபவை தனியர் பக்கங்களே ஆகும். பெரும்பாலும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் தங்களைப்
பற்றிய செய்திகளையும் தங்கள் படைப்புகளையும் வலையேற்றம் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வகைப் பக்கங்களில் தங்களைப் பற்றிய குறிப்பேட்டினோடு,
பெரும்பாலும் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் சிலர், பல இணைய பக்கங்களில் தாங்கள்
எழுதி, வெளிவந்த கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் போன்றவற்றைத் தொகுத்து, தங்களுக்கென்று
தனி பக்கத்தினை உருவாக்கியுள்ளனர்(ஹரிமொழி.காம், அன்புடன் இதயம்.காம், கவிமலர்.காம்,
தமிழம்.காம்,..). ‘கவிமலர்’ என்பது முழுமையாக ஹைக்கூ கவிதைகளுக்கான தனியார் பக்கமாக
(இரா.இரவி) அறியப்படுகிறது. அதேபோல, கனடா நாட்டில் வாழும் தமிழ்க் கவிஞர் புகாரி ‘அன்புடன்
இதயம்’ என்ற தம் இணைய பக்கத்தில், தம் கவிதைத் தொகுப்புகளை வலையேற்றம் செய்திருப்பதோடு,
புதிதாக தாம் எழுதும் கவிதைகளையும் வலையேற்றி வருகிறார். இவ்வாறு தாம் இணையத்தில் எழுதிய
கவிதைகளைத் தொகுத்து, நூலாகவும் வெளியிட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே போல, கவிஞர் சேவியர் இணையத்தில் எழுதிய கவிதைகளைத் தொகுத்து, ‘சேவியர் கவிதைகள்’
என்ற பெயரில் ‘உலகத் திருக்குறள் மையம்’ வெளியிட்டுள்ளதும் இங்குச் சுட்டத்தக்கதாகும்.
அதேபோல, பொள்ளாச்சி நசன் அவர்கள், தமிழம்.காம்
என்ற தம் இணைய பக்கத்தைத் தானே வடிவமைத்து இயக்கி வருகிறார். சிற்றிதழ்களின்
அறிமுகம், இதழ்களில் வெளியான முக்கிய செய்திகள், தமிழர் பண்பாட்டு ஆவணங்கள், நூல் அறிமுகம்,
சங்கப் பாக்கள், இலக்கியப் பாடல்களின் ஒலி வடிவம் எனப் பல்வேறு தகவல்களோடு ஒரு இதழுக்கு
உண்டான தன்மைகளோடு இவ்வலைப் பதிவு மிளிர்கிறது. இப்பதிவில், தகவல்கள் வலையேற்றம் பெற்ற
நாள், அடுத்து வலையேற்றம் பெறவிருக்கும் நாள் (upload) ஆகியவற்றையும் குறிப்பிட்டுள்ளார்.
வலைப்பதிவுகள் (blogs) எனப்படும் தனியார்
இணையக் குறிப்பேடுகள் இன்று மிகவும் பிரபலமாக உள்ளன. இவற்றை இணைய இதழ்களோடு நேரடியாக
ஒப்பிட முடியாவிட்டாலும், வரும் வருடங்களில் இவை இணைய இதழ்களை விட அதிகமாக மிளிர வாய்ப்புகள்
நிறைய உள்ளன என்பது கணிப்பாக உள்ளது.
வெளிப்பாட்டு
உத்திமுறை
இணைய பக்கங்களின் இலக்கியப்பகுதிகளில்
பெரும்பான்மையானவை, வெளிப்பாட்டு உத்திமுறைகளைப் பெரிதும் கையாள்வதில்லை என்பது தெரியவருகிறது.
இணையம் என்பது மிகச்சிறந்த ஊடகம், பத்திரிகைகளின் வெளிப்பாட்டு உத்திமுறைகளைவிட இணையத்தில்
வெளிப்பாட்டு உத்திமுறை மேம்பாடுடையதாக அமைதல் வேண்டும். அதற்கான வாய்ப்புகளும் இணையத்தில்
அதிகம். ஆனால், தமது அச்சு இதழ்களில் கவனம் செலுத்தும் அனைத்து நிறுவனங்களும் மின்னிதழ்களுக்கு
அதே அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதன் காரணம், ‘இதுநாள்வரை இந்த மின்னிதழ்கள்
மூலம் வருமானம் பெறச் சரியான, நிலையான வழிகள் இல்லாமையே’ என்ற கருத்து இங்குச் சுட்டத்தக்கது.
வெளிப்பாட்டு
உத்திமுறைகள் என்பதை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று உட்பொருள் உருவாக்கம் (Content)
மற்றொன்று, வெளிப்பாட்டு வடிவம், இந்த இரண்டிலும் கையாளப்படும் உத்தி முறைகளைக் கொண்டே
இணையத்தில் இலக்கியப் பகுதிகளின் பயன் பயனின்மை சீர்தூக்கப்படுகிறது. ஆனால், இவ்விருவகை
உத்திகளும் இணைந்திருப்பது அரிதிற் காணக்கூடிய ஒன்றாகவே உள்ளது. காரணம், இணையபக்கங்களின்
வடிவமைப்பாளர்கள் கணினி வல்லுநர்களாக இருந்தும், உட்பொருள் உருவாக்கத்தில்(Content
Creation) தமிழரிஞர்களின் பங்கு அவ்வளவாக இல்லாமையே. தற்போதைய நிலையில், உட்பொருள் உருவாக்கத்தில் முனைந்திருப்போர்
பெரும்பாலும் தமிழ் ஆர்வலர்களும், கணினியோடு தொடர்புடையவர்களுமே அன்றி, தமிழரிஞர்கள்
இல்லை என்பதே உண்மை. மேலும், இணையத்தில் வெளியிடப்படும் கட்டுரைகள், இலக்கியப்பகுதிகள்
பெரும்பாலும் அச்சு இதழ்களுக்காக எழுதப்பட்டும்
வெளியிடப்பட்டும் வந்தவையே. அவற்றை அப்படியே எடுத்தாளும் நிலை உள்ளதேயன்றி, பல்லூடகத்
தன்மைகளோடு கூடியவையாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கணினி மொழிநடை
எழுத்தாளர்கள் என்று அடையாளம் காணப்படாத, எழுதும் திறமையைப் பெற்ற பலரும் இணையத்தின் வரவால், வரவேற்பால், தங்கள் படைப்புகளை,
சிந்தனைகளை, அனுபவங்களை, தடையின்றிப் பிறரோடு பங்கிட்டுக்கொள்ளும் நிலை இன்று உருவாகியுள்ளது.
இந்நிலை வரவேற்கத்தக்க ஒன்றேயாகும். அதே வேளையில்,
இணைய பக்கங்களில் எழுத, பக்கத்தை நடத்த எந்தவொரு கட்டுப்பாடும்¢ இல்லாதிருப்பதாலும்,
யாரும் எதையும் எழுதலாம் என்ற கட்டற்ற நிலையாலும், மொழி அமைப்பிலும், கருத்திலும் ஆரோக்கிய
சீர்கேட்டை உண்டாக்கும் சூழல் இன்று உருவாகியிருக்கிறது
என்பதையும் நாம் மறுத்தல் கூடாது.
இங்கு, ‘இணையம் என்பதை கட்டற்ற சுதந்திரம்
உள்ள ஒரு பிராந்தியமாகப் பார்க்கிறார்கள். அதுவும் அபாயம்தான். சுதந்திரம் என்பதே நமக்கான
வேலிகளை வேண்டிய தூரத்தில் தள்ளி வைத்துக்கொள்வதுதான். ஆனால் வேலியென்று ஒன்று இருந்தே
தீரவேண்டும்.(பா.ராகவன். தெட்ஸ்தமிழ்.காம்) என்ற கருத்தை இன்று வலியுறுத்த வேண்டியுள்ளது.
ஒரு பக்கத்தில் தமிழ்க் கணினி அமோகமான
வளர்ச்சியடைய, இன்னொரு பக்கத்தில் சில பாதகமான விளைவுகளும் ஏற்பட்டன. தமிழில் சொற்கூட்டலையோ
இலக்கணத்தையோ கவனிப்பது வெகுவாகக் குறைந்துவிட்டது. (அ. முத்துலிங்கம்,
tamil.sify.com/kalachuvadu). இக்குறையைப் போக்க
‘சொற்பிழை திருத்தி’ தமிழில் வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது. ஆனால்,
வணிக நோக்கில் சிலர் தனித்தனியாக இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் மென்பொருள்கள்
உருவாக்குதற்கு, மைய அரசால் பலகோடி ரூபாய் செலவில் திட்டம் தீட்டப்பட்டு, அண்ணா பல்கலைக்கழகம்
போன்றவற்றில் உருவாக்கப்பட்ட சொற்பிழை திருத்திகள் உள்ளிட்ட பிற மென்பொருள்களின் இன்றைய
நிலையும் பயன்பாடும் எந்த அளவில் உள்ளதென்பது தெரியவில்லை. மேலும், மைய அரசால் வெளியிடப்பட்ட
சொற்பிழை திருத்தி போன்றவை தாம்(tam), தாப்(tab) எழுத்துருவிற்கானவை என்பதால், அதன்
பயன்பாட்டு எல்லை குறைவாகவே உள்ளது.
பயன்பாட்டு
நிறைவு - நிறைவின்மை
இணையத்தில் தமிழின் புழக்கம் பரவலாகி வரும்
இன்றைய சூழலில், அதன் பயன், பயனின்மையைச் சீர்தூக்கிப்
பார்த்தல் இன்றியமையாததாகிறது. இணையத்தில் தமிழை இயக்க எவருடைய முன்னனுமதியும் தேவையில்லை.
அதனாலேயே நாளும் புற்றீசல்போல் இணையத்தில் தமிழ்ப் பக்கங்கள் தோன்றியவண்ணம் உள்ளன. இந்நிலை, தமிழின் எதிர்காலத்திற்கு வளம் சேர்க்கும்
என்றாலும், கணினி மொழிநடை, மொழி பயன்பாட்டுத் தன்மை, பயன்பாட்டு நிறைவு - நிறைவின்மை,
ஆவணமாக்கலின் தேவை ஆகியவை கண்காணிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. காரணம்,
இணையபக்கங்களை உருவாக்க எந்தவொரு கட்டுப்பாடோ, விதிமுறையோ இதுவரை இல்லாமையே! இந்நிலையில், தமிழ் இணைய பக்கங்களைத் தணிக்கை செய்வதும், இணைய
பக்கங்களை ஒரு வரம்பிற்குள் கொண்டுவருவதும் மொழி வளத்தினைப் பாதுகாக்க மேற்கொள்ளவேண்டிய
இன்றியமையாத செயல்களாகின்றன.
அண்மை
காலமாக, தமிழ்ப் பேராசிரியர்களும், அறிஞர்களும் இணையத்தோடு நேரடி தொடர்பு கொண்டுவருகின்றனர்
என்றாலும், இச்செயல்பாடு இன்னும் பரவலாகவில்லை என்பதே உண்மை. இத்தடை களையப்படுதல் இணையத் தமிழ் வளர்ச்சியில்
புதிய பாய்ச்சலை ஏற்படுத்த வழி வகுக்கும்.
அதே போல, கணினித் தொழில்நுட்பம் என்பதும் தமிழறிஞர்களின் பார்வையில் ஒத்துவராத
ஒன்று என்ற மனநிலை மாறவேண்டியதும், தொழில்நுட்பத்தினைக் கைகொள்வதும் இணையத்தமிழ் வளர்ச்சிக்கு
ஊக்கமூட்டுவதாக அமையும்.
இணையமானது
அரசியல், ஆன்மீகம், கல்வி, தொழில்நுட்பம், பொருளாதாரம், இலக்கியம் என்ற எல்லா நிகழ்வுகளையும்
தன்னுள் பதிவு செய்கிறது. இப்பதிவு, உலகில் எந்த மூலையில் இருப்போரும் எளிதில் பயன்பெறுதற்கு
உரியதாக அமைகிறது. அதேவேளையில், இணையத்தின் இப்பயன்பாடு சென்று சேர வேண்டிய அனையவருக்கும்
சேர்கிறதா? என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். தமிழ் இணையபக்கங்களின் பயனை இரு வகைகளில்
சுட்டலாம். ஒன்று, பயனாளரைச் சார்ந்தது. மற்றொன்று, இணையத்தில் இருக்கும் தகவலைச் சார்ந்தது.
அன்றாட நிகழ்ச்சி முதல், அபூர்வ நிகழ்ச்சி
வரை அனைத்தையும் அலசும் இணையமானது அதைப் பயன்படுத்தும் ஒரு பகுதியினர்க்கு மட்டுமே
அதன் பயனைத் தருகிறது . உண்மையில் இப்பயனை
அடையவேண்டிய ஒருபகுதியினர் இணையத்தின் இத்தகைய செயல்பாட்டினையே உணராமல் இருப்பது சிந்திக்கத்தக்கது.
இணையத்தை வடிவமைப்போர் பெரும்பாலும் கணினி வல்லுநர்களே. இணையத்தைப் பயன்படுத்துவர்
பெரும்பாலும் வெளிநாட்டு வாழ் தமிழர்களே. ஆக, இலக்கியப் பகுதிகளின் பயன், தமிழ் ஆர்வலர்களில்
ஒரு பகுதியினர்க்கும், கணினியைக் கையாளும் வாய்ப்புள்ளவர்களுக்குமே சென்று சேர்கிறது
என்பது சிந்தனையில் கொள்ளவேண்டிய ஒன்றாகும்.
மற்றொன்று
கணினிமொழிநடை. தேவையான தணிக்கை இல்லாமலும், சுயக்கட்டுப்பாடு இல்லாமலும், எண்ணியதைத்
தனக்குள்ளே மறுபரிசீலனை செய்யாமலும் வெளியிடப்படும் பல உள்ளீடுகள், குப்பைகளாகச் சேமிக்கப்பட்டு,
இணையத்தில் இடத்தை மட்டுமே நிரப்புகின்றன. இவை பயனாளரின் நேரத்தை வீணடிக்கின்றனவே அல்லாமல்
வேறொரு பயனையும் கொடுத்தல் இல்லை.
பயன்பாட்டின் நிறைவின்மைக்கு மற்றொரு காரணமாக
காணக்கிடைப்பது, இணையப்பக்கங்களின் முகவரி அறியப்படாமையும், எந்த இணைய பக்கத்தில் எவ்வகைத்
தகவல்கள் கிடைக்கின்றன என்பனவற்றை அறிய தேவையான வழிமுறைகள் இல்லாமையுமாகும். இவ்வகைக்
குறைபாடுகள் நீக்கப்படும் வேளையில், இணைய பக்கங்களின் பயன்பாடும் மிகவும் சிறப்பானதொன்றாக
அமையும் என்பதில் ஐயமில்லை.
தமிழ் எழுத்துருவைக் கண்டுபிடித்ததன் நோக்கமே
ஒருவருடன் ஒருவர் தமிழில் தொடர்பு கொள்வது. ஆனால், அந்த நோக்கத்துக்கு எதிர்த்திசையில்
காரியங்கள் நடந்தன. நூற்றுக்கணக்கான எழுத்துருக்கள் உண்டானதும் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைப்
பிடித்துக்கொண்டார்கள். ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்வது சாத்தியமில்லாமல் போனது (அ. முத்துலிங்கம்,
tamil.sify.com/kalachuvadu) என்பதும் சுட்டத்தக்கது.
அதேவேளையில்,
ஒருங்கு குறியின் (யூனிகோடு) வருகையால் தமிழில் தேடுபொறி கிடைத்திருக்கிறது. உலக மொழிகள்,
இந்திய மொழிகள் எல்லாவற்றிற்கும் ஒரேயொரு குறியாக்க முறைதான் இந்த யுனிகோட். இந்த முறையில்,
தமிழுக்கு என்று தனி இடம் இருக்கிறது. அது சரியாகவும் சிறப்பாகவும் இயங்குவதாகக் கணினி
அறிஞர்களால் சுட்டப்படுகிறது. யூனிகோட்டில் எழுதி, இணையத்தில் பதிவான கட்டுரைகளைக்
கூகிள் தேடுதளங்களில் தேடலாம். இது முதன்முறையாகத் தமிழில் சாத்தியமாகியிருக்கிறது. திசைகள் (யுனிகோடில் அமைந்த முதல் தமிழ் இதழ்),
எழில் நிலா, அப்பால் தமிழ், மரத்தடி, கீற்று, ..
போன்றவை யுனிகோடில் இயங்கும் இணைய இதழ்களாகும்.
ஆனால், மாநில அரசால் உறுதிபடுத்தப்பட்ட
எழுத்துருக்களாக, தாம் (tam) மற்றும் தாப்(tab) ஆகியவைகளே உள்ளன. மேலும், மைய அரசால்
அண்மையில் வெளியிடப்பட்ட தமிழ் மென்பொருளுக்கான இலவச குறுந்தகட்டிலும் 92 யூனிகோட்
எழுத்துருக்களோடு, 46 தாப் எழுத்துருக்களும், 65 தாம் (tam) எழுத்துருக்களும் இடம்பெற்றுள்ளன.
மேலும், அதில் இடம்பெற்றுள்ள சொற்பிழை திருத்தியும், தமிழகராதியும் தாப் (tab) எழுத்துருவிலேயே
இயங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில்
1000 வீடுகளுக்கு 7 வீடுகளில் மட்டுமே கணினி உள்ளது. ‘தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில
அறிவு உள்ளவர்கள்தான் கணினியைப் பயன்படுத்த முடியும் என பலரும் நினைப்பதே இதற்குக்
காரணம் (தினகரன், 16.6.06). இக்குறைபாடு வருங்காலத்தில் தவிர்க்கப்படும் எனலாம். காரணம்,
தமிழில் இயங்கும் கணினியை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளதே. (மைக்கோசாப்ட்
நிறுவனம் , விண்டோஸ் எக்ஸ்.பி ஸ்டார்ட்டர் எடிஷன் என்ற பெயரில் தமிழ் (ஆங்கிலம், இந்தி)
உட்பட மூன்று மொழிகளில் இயங்கக் கூடிய கணினியை சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளது
(தினகரன், 16.06.06).
ஆவணமாக்கலின்
தேவை
அன்றாட நிகழ்ச்சிகள் முதல் அரசியல், கலை,
இலக்கியம், விமர்சனம், உலகம் என அத்துனையும் தம்முள் கொண்டு விளங்குகிறது இணையம். இவைபோன்ற
பயன்தரு தகவல்களை இணையத்திலிருந்து இறக்குமதி செய்து அவற்றை நூலாக்கி ஆவணப்படுத்துதல்
காலத்தின் தேவையாகிறது. இணையத்தைப் பயன்படுத்த வாய்ப்பில்லாதவர்களுக்கும் இச்செயல்
மிகுந்த பயனளிப்பதாக அமையும்.
மேலும், இணையத்தில் மட்டும் இயங்கக்கூடிய
இளம் எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். இவர்களை இனங்கண்டு ஊக்குவிப்பது தமிழின் வேருக்கு
நீரூற்றுவது போன்றதாகும். அதேபோல, ஓலைச் சுவடியிலிருந்த இலக்கியங்கள் தாளில் அச்சேறியதைப்
போல, அச்சிலிருப்பவை அழிந்துபோகாமலிருக்க கணினியில் உள்ளீடு செய்வதும், உலகெங்கிலும்
உள்ள தமிழர் பயன்பெறும் வகையிலும் இணையத்தில் ஏற்றி உலகை வலம்வர வைப்பதும், தமிழின்
எதிர்காலவியலைத் தீர்மானிக்கும் தொலைநோக்குச் செயல்பாடுகள் என்பதில் ஐயமில்லை.
தடைகள்
இணையத் தமிழின் வளர்ச்சியில் தடைகளாகக் கீழ்க்கண்டவற்றை இனங்காண முடிகிறது.
· இணையப்
பயன்பாடு தமிழ்நாட்டிலுள்ள பயனாளர்களிடமிருந்து விலகி இருத்தல். இதற்கு, பொருளாதாரம்,
தொழில்நுட்பம், இணையத் தமிழின் அறிமுகமின்மை ஆகியவை காரணங்களாக அமைகின்றன.
· தமிழ்ப்
பேராசிரியர், ஆசிரியர், படைப்பாளர்களின் நேரடித்தொடர்பையும், பங்களிப்பையும் இணையம்
இன்னும் பரவலாக்கப் பெறாமை.
· கணினியில்
தமிழ் ஏறிய காலத்திலிருந்து தொடரும் எழுத்துரு இடர்பாடுகள். ஒவ்வொரு இணைய பக்கமும்,
இதழும், தனியார் பக்கங்களும் தங்களுக்கென்று வடிவமைத்துக்கொண்ட ஏதாவதொரு எழுத்துருவைப்
பயன்படுத்துதல். இப்போது சில தளங்கள் ‘யுனிகோட்’ என்று அழைக்கப்படும் நிலையான எழுத்துருவைப்
பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. இவற்றை, பெரும்பாலும் விண்டோஸ் 2000 இயங்கு தளத்திற்குப்
பிறகு வந்தவற்றிலேயே பயன்படுத்த முடியும் என்பதும், எல்லா இணைய இயக்க மையங்களிலும்
(browsing center) இவ்வசதி இருக்குமா என்பதும் தீர்வை நாடும் கேள்விகளாகின்றன.
· முறைப்படுத்தப்படாத
கணினிக் கலைச்சொற்கள் (வலைப்பூக்கள், வலைப்பின்னல்கள், வலைப்பக்கங்கள், வலைப்பதிவுகள்,
..)
· தமிழ்த்
தளங்களுக்கானத் தேடுபொறிகள் இருந்தும், தேடுதற்கான தள முகவரிகள் அறியப்படாமை (அ) எழுத்துரு
சிக்கலால் தேடுபொறிகள் தளமுகவரிகளை தேடித் தராமை. (யுனிகோட் எழுத்துருவைக் கொண்ட தளங்களை
மட்டுமே தேடுபொறிகள் காட்டுகின்றன)
தீர்வுகள்
இணைய தமிழின் எதிர்காலவியல் குறித்து எழுத்தப்பட்ட
இக்கட்ரையானது கணினித் தமிழின் பயன்பாட்டு நிறைவிற்கும், இணையத் தமிழின் எதிர்காலவியலுக்கும்
கீழ்க்கண்ட சிலத் திட்ட வரைவுகளை முன்னிறுத்துகிறது.
- தமிழ்
இணைய பக்கத்தின் ஆக்கத்திலும் செயல்பாட்டிலும் தமிழறிஞர்கள் மற்றும் கணினி வல்லுநர்களின்
இணைவை/ கூட்டு முயற்சியை வலியுறுத்துதல்.
- இணைய பக்கங்களில்
வெளியிடப்படும் குறிப்பிட்ட தகவல்களைத்
தணிக்கைக்கு உட்படுத்துதல்.
- கணினி
மொழிநடை, மொழியின் சீர்மையைப் பாதிக்காதவகையில் கையாள வலியுறுத்துதல். இணைய இதழ்கள்,
தங்களுக்கென்று பதிப்பாளரை நியமித்தல்.
- ‘இணையவலை
ஒருங்கிணைப்புத் தளத்தினை’ ஏற்படுத்துதல். அதில், இணையதளம் தொடங்குமுன் பதிவு
செய்தல், தமிழ் இணைய பக்கங்கள் பற்றிய
அகரவரிசை பட்டியலை உள்ளீடுசெய்தல், பட்டியலிலுள்ள இணைய பக்கங்களின் உள்ளீட்டுத்
தகவல்களின் (content) குறிப்புகளைக் கொடுத்தல்.
- அச்சு
ஊடகத்திலிருந்து மாறுபட்ட வெளிப்பாட்டு உத்திமுறையினையும், சிறப்பான தள வடிவமைப்பினையும்
கையாளுதல். உட்பொருள்களுக்கான தெளிவான இணைப்பினைப் பயனாளருக்குக் கொடுத்தல்.
- பயன்பாட்டு
நோக்கில் சில குறிப்பிட்ட தகவல்களை இணையத்திலிருந்து இறக்குமதி செய்து அவற்றை
நூலாக்க வழிவகை செய்தல்.
- தரப்படுத்தப்பட்ட,
ஒரே வகையான எழுத்துருவின் பயன்பாட்டையும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட விசைப்பலகையின்
பயன்பாட்டையும் மேற்கொள்ளுதல். கணினி வல்லுநர்கள் கருத்துகள் அடிப்படையில், யுனிகோட்
எழுத்துருவையே பயன்படுத்துவது சிறந்த பயனைத் தரும் ஒன்றாக அறியப்படுகிறது.
- அரசாலும்,
தனியாராலும் மேற்கொள்ளப்படும் தமிழ்-கணினி தொடர்பான ஆய்வுகளின் ஒருங்கிணைப்பு
மையத்தை / தளத்தைத் தொடங்குதல். தமிழ்-கணினி குறித்து உருவாக்கப்பட்ட புதிய மென்பொருள்களைப்
பற்றிய தகவல்களை இத்தளத்தில் வழங்குதல்.
திறமான புலமையெனில் வெளி நாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்! -பாரதி.