செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

புறநானூற்றில் பழந்தமிழர் தொழில்நுட்பம்

 ஆ.மணவழகன், முனைவர் பட்ட ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

 (தேசியக் கருத்தரங்கம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், அக்.18,19,20-2006)

 

முன்னுரை

            ஒரு நாட்டின் வளமைக்கும் வளர்ச்சிக்கும் அந்நாடு தொழில்நுட்ப அறிவினைத் தம்முள் கொண்டிருப்பதும், பல்துறைகளிலும் தொழில்நுட்ப உத்திகளைக் கையாள்வதும் அடிப்படையாக அமைகிறது. தொழில்நுட்பக் கூறுகளைப் பயன்படுத்தாத எந்த ஒரு நிறுவனமோ, துறையோ அல்லது நாடோ தன்னிறைவு பெறுதலும் வளர்ச்சி காண்பதும் அரிதாகிறது. இன்றைய நிலையில், வளர்ந்த நாடுகளின் வரிசையில் உள்ள பலவும் தங்கள் வளர்ச்சிக்குத் தொழில்நுட்பத்தினையே மூலதனமாக்கியுள்ளன என்பது கண்கூடு. இந்நிலையில், வளர்ந்துவரும் நாடுகளும் அவ்வழியைப் பின்பற்றியே தங்களை வளர்த்துக் கொள்ள முனைவதையும்  காணமுடிகிறது.

            நாட்டில் பல்வேறு மூலப்பொருள்கள் மண்டிக்கிடப்பதாலேயே அந்நாடு தன்னிறைவு பெற்றதாகவோ, வளர்ச்சியடைந்ததாகவோ கொள்ள முடியாது. மூலப்பொருட்களை அதிகம் பெற்றிராத, அதே வேளையில் தொழில்நுட்ப வல்லமை கொண்ட அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஜப்பான் போன்றவை இன்று உலக நாடுகளில் பொருளாதார வல்லமை கொண்டவையாக முன்னிறுத்தப்படுகின்றன. இவை தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்தி நிற்கின்றன. அவ்வகையில், 2020-ஆம் ஆண்டுக்குள் இந்தியா பொருளாதார வல்லரசாக மாற,  ‘தொழில்நுட்பத்தை மையமாகக்கொண்ட தொழில்துறை வளர்ச்சி’ என்பது திட்டகுழுவினரால் இன்று முன்னிறுத்தப்பட்டுள்ளமையும் இங்கு நோக்கத்தக்கது.

             தொழில்நுட்பம் என்பது திடீரென இன்று முளைவிட்டு கிளைத்தெழுந்த ஒன்றா?  மேலும், அது இன்று தொழில்நுட்பங்களில் முன்னிலை வகிக்கும் நாடுகளுக்கு மட்டுமே உரித்தான ஒன்றா? என்பன போன்ற கேள்விகள் தொழில்நுட்பத்தின் தீவிரத் தேவையால் இன்று முன்னிறுத்தப்படுகின்றன. மனிதனின் அடிப்படைத் தேவைகள் விரிவடையும் ஒவ்வொரு காலகட்டத்திலேயும், அத்தேவைகளை நிறைவு செய்ய புதிய புதிய வழிமுறைகளைக் கையாளவும், புதுப் புதுக் கருவிகளைக் கண்டுபிடிக்கவும் அவன் முனைகிறான். அத்தேவைகளின் நிரந்தரத் தன்மைக்கும், வேலை பளு குறைப்பு மற்றும் கால மேலாண்மைக்கும் புதிய புதிய நுட்பங்களைக் கையாள  வேண்டிய கட்டாயம் அவனுக்கு ஏற்படுகிறது.  இவ்வடிப்படையிலேயே மனித வரலாறு தொடங்கிய காலந்தொட்டு இன்று வரை புதிய புதிய கண்டுபிடிப்புகளும், நுட்பங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன/வந்திருக்கின்றன. தொழில்நுட்ப வல்லமையே ஒருநாட்டின் நாகரிக வளர்ச்சியினைத் தீர்மானிக்கும் அளவுகோலாகவும் அமைகிறது எனலாம். இவ்வியல்புக்குப் பழந்தமிழரும் விதிவிலக்கல்ல.  இன்று உலகம் வியக்கும் தொழில்நுட்பக் கூறுகளின் தன்மைகள் பலவும் பழந்தமிழரிடையே கையாளப்பட்டு வந்தமை பழந்தமிழ் இலக்கியங்கள் உணர்த்தும் உண்மையாகும். இவ்வகையில், சங்க இலக்கியங்களின் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றில் பழந்தமிழர்களின்,  தன்னிறைவு பெற்ற சமுதாயத்திற்கு வித்திடும் தொழில்நுட்பக் கூறுகள்  காணப்படுவதை இனங்காட்டுவதாக  இக்கட்டுரை அமைகிறது.

             ‘புறநானூறு காட்டும் பழந்தமிழர் தொழில்நுட்பம்’ என்ற இக்கட்டுரையானது,  அடிப்படைத் தேவைகளின் தன்னிறைவிற்குப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களான, வேளாண் தொழில் நுட்பம், நெசவுத் தொழில்நுட்பம், கட்டுமானத் தொழில்நுட்பம் என்பவற்றோடு உலோகத் தொழில்நுட்பம், எந்திரத் தொழில்நுட்பம் என்ற பெரும்பகுப்புகளையும் அவற்றுள் பல  உட்பகுப்புகளையும் கொண்டு அமைகிறது.

 வேளாண் தொழில் நுட்பம்

            நாட்டின் இயற்கை வளங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் தொழில்களுள் முதன்மையானது வேளாண் தொழிலாகும். சமுதாய வறுமைநிலையினைப் போக்கவும், மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறையுள் என்பவற்றுள் முதன்மையானதாகிய உணவின் தேவையை நிறைவு செய்யவும் வேளாண் தொழில் இன்றியமையாததாகிறது.  வேளாண் தொழிலே மற்ற எல்லாவற்றிற்கும் அடிப்படை என்பதைப் பழந்தமிழர் நன்கு உணர்ந்திருந்தனர். இவ்வகை வேளாண்தொழிலுக்கு  அடிப்படை ஆதாரமாக விளங்குவது மழைநீராகும். இம்மழைநீரினைச் சேமிக்க குளங்கள், அணைகள், ஏரிகள் போன்ற நீர்நிலைகளை ஏற்படுத்துதல், சேமிப்பு நீரினை முறையாகப் பயன்படுத்தி நீர் மேலாண்மைக்கு வழிவகுத்தல்,  தரிசு நிலங்களைப் பண்படுத்துதல்,  சுழற்சி முறையில் பல்வித  பயிர்களைப் பயிரிடுதல், மானாவாரி பயிரிடுமுறையைக் கையாளுதல், நிலத்தை உழுதல் தொடங்கி அறுவடை வரையிலான வேளாண் செயல்பாடுகளில் பலவித கருவிகளைப் பயன்படுத்துதல் போன்ற பல்வகை நிலைகளிலும் பழந்தமிழர் தொழில்நுட்பத்தினைக் கையாண்டுள்ளனர்.

             ஒரு நாட்டின் வளமான நிலைக்கும், சிறந்த ஆட்சிமுறைக்கும், வீரர்கள் போர்க்களத்தில் வெற்றியை ஈட்டி வருதற்கும் அடிப்படையாக அமைவது உழுது விளைவித்த நெல்லின் பயனே.  ஆதலால், ஏரைக் காப்பவரின் குடியைக் காப்பதே நல்லரசின்  கடமையாகும் என்பதை பழந்தமிழ்ப் புலவர்கள் மன்னர்களுக்கு உணர்த்தினர்(புறம் 35). இதனையே வள்ளுவரும்,                              சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்

                   உழந்தும் உழவே தலை (குறள்.1031)

என்கிறார்.

            இவ்வகை தலைமைச் சிறப்பு  வாய்ந்த வேளாண் தொழிலின் இன்றியமையாமையை மக்களும் உணர்ந்திருந்தனர். உணர்ந்ததன் பயனாய் அத்தொழிலில் பல தொழில்நுட்பங்களைக் கையாண்டு வேளாண் உற்பத்திப் பெருக்கத்திற்கு  வழிவகுத்தனர். தரிசு நிலங்களைப் பண்படுத்தவும், நிலத்தினை ஆழ உழவும், களைகளை எடுக்கவும், தானியங்களைப் பிரித்தெடுக்கவும் பலவித கைக்கருவிகளையும் இயந்திரங்களையும் பயன்படுத்தியுள்ளனர்.

             கார்காலத்தில் பெய்த மழையின் ஈரம் உலர்வதற்குள் நிலத்தைப் பலமுறை உழுவர். நன்செய் நிலமாயின் அந்நிலத்தை உழும்போது ஏற்படும் கட்டிகளைக் களைய/உடைக்க தளம்பு என்ற ஒருவித கருவியைப் பயன்படுத்தியுள்ளனர். இதனை,

                          'மலங்குமிளிர் செறுவிற் றளம்புதடிந் திட்ட

                         பழன வாளை'     (புறம்.61:3-4)

 என்ற புறநானூற்று அடிகள் காட்டுகின்றன. வாளைமீன்கள் தளம்பிடை மாட்டி வெட்டுப்பட்டன என்ற குறிப்பிலிருந்து, ‘தளம்பு’ என்பது இரும்பினால் தகடுகளாக வடிவமைக்கப்பட்ட ஒருவித வேளாண்கருவி  என்பது புலனாகிறது.

            அவ்வாறே, நிலத்தைப் பண்படுத்திப் பலமுறை உழுது, விதைத்த பயிரை ஒழுங்கு செய்வதற்கும்,  களையெடுப்பதற்கும்   பல கிளைகளையுடைய ஒரு வித கலப்பையைப் பயன்படுத்தியுள்ளனர். இதனை,

                              ‘பூமி மயங்கப் பலவுழுது வித்திப்

                             பல்லி யாடிய பல்கிளைச் செவ்விக்

                             களைகால் கழாலிற் றோடொலிபு  நந்தி’ (புறம். 120:2-3)

என்ற புறநானூற்று அடிகள் சுட்டுகின்றன.  மேலும், ஈரநிலமாயினும் பலசால் உழுவதால் புழுதி உண்டாகும். அவ்வாறான நிலத்தில் எரு இடாமலே நன்கு விளையும் என்பர். இத்தன்மையையே ‘பூமி மயங்கப் பல உழுது’ என்கிறார்.

        அதேபோல, விளைந்த கரும்பினை வெட்டி எடுத்து, அதிலிருந்து சாறினைப் பிரித்தெடுக்க கரும்புபிழி எந்திரம் பயன்படுத்தப்பட்டதை பதிற்றுப் பத்து, ஐங்குறுநூறு போன்ற இலக்கியங்களைப் போல புறநானூறும் காட்டுகிறது.  இதனை,

                              'கரும்பி னெந்திரஞ் சிலைப்பி னயல

                               திருஞ்சுவல் வாளை பிறழும்'       (புறம் 322:7-8)

என்ற அடிகளில் அறியலாம். கரும்பைப் பிழியும் ஆலையானது ஒலிக்குமானால், பக்கத்து நீர்நிலையில் உள்ள பெரிய             பிடரையுடைய வாளை மீன்கள் துள்ளிப் பாயும் என்பதிலிருந்து, கரும்பு பிழி எந்திரம் ஓங்கி ஒலிக்கும் தன்மையதாக இருந்ததை அறிய முடிகிறது.

            இத்தகைய திட்டமிட்ட செயல்பாடுகளாலும், தொழில்நுட்ப உத்தியாலும் நாட்டின் உணவுத் தேவையை வேளாண்மக்கள் நிறைவு செய்ய முயன்றதோடு, 'வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை'யும் (புறம்; 108) வாழ்ந்துள்ளனர் என்பது புலனாகிறது.

 நெசவுத் தொழில்நுட்பம்

            இயற்கை நிலையிலிருக்கும் ஒன்றைத் தன் தேவைக்கேற்ப மாற்றி அமைத்து, அவற்றைப்  பயன்படுத்த முனையும் நிலையில் மனிதனின் தொழில்நுட்ப அறிவு வெளிப்படத் தொடங்குகிறது. அவ்வகையில் ,   தழை, மரப்பட்டை போன்றவற்றை உடையாகப் பயன்படுத்தும் வண்ணம், அவற்றை வடிவமைத்த ஆதிமனிதச் செயல்பாட்டில் தொழில்நுட்பம் முகைவிடத் தொடங்கியது எனலாம்.  எனினும், இரண்டாம் படிநிலையாகிய விலங்குகளின் தோலினையும், மூன்றாம் படிநிலையாகிய பருத்தி, பட்டு போன்றவற்றையும் பயன்படுத்தத் தொடங்கிய நிலையிலேயே அவனின் தொழில்நுட்ப அறிவு மலரத் தொடங்கியதாக கொள்ளப்படுகிறது. இவற்றிலும், மூலப்பொருள்களை உற்பத்தி செய்து (பருத்தி, பட்டுக்கூடு) அவற்றிலிருந்து இரண்டாம் நிலை உற்பத்தி பொருள்களை (நூல், பட்டு இழை) உருவாக்கி, மூன்றாம் நிலை உற்பத்திப் பொருளாகிய துணியை நெய்து, பின்னர் பயன்பாட்டுக்கு ஏற்ப பல வடிவங்களிலும், வண்ணங்களிலும், அலங்கார வடிவமைப்புடனும் கூடிய ஆடைகளை நெய்யத் தொடங்கிய நிலையே தொழில்நுட்பத்தின் உயர்நிலையாக முன்னிறுத்தப்படுகிறது.

          பழந்தமிழ் சமுதாயத்தைப் பொறுத்த அளவில் உடையின் தேவையை நிறைவு செய்யவும், அவற்றின் வழி பொருளாதாரத்தை ஈட்டவும், பல்முனைச் செயல்பாடுகள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. முதலில், அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உடையின்  தேவையை நிறைவுசெய்ய நெசவுத் தொழில்நுட்பத்தைப் பெண்களும் கற்று அதனைக் குடிசைத் தொழிலாக்குதல், இரண்டாவது, அவற்றிற்குத் தேவையான மூலப்பொருள்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்தல், மூன்றாவது, உடை உற்பத்தியில் பல வகை நுட்பங்களையும் பயன்படுத்தி உடைகளில் பலவகைகளையும், வண்ணங்களையும் ஈட்டி அவற்றை  வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து பொருளாதாரத்தைப் பெருக்குதல் என்ற அடிப்படையில் இச்செயல்பாடுகள் அமைவதைக் காணமுடிகிறது.

      முல்லை நிலத்துப் பெண்கள் மோர்விற்று தம் குடும்பப் பொருளாதாரத்தை வளப்படுத்தியதைப் போல, கணவனைப் பிரிந்த பெண்கள், தனியே இருக்கும் பெண்கள் உட்பட இல்லிருப்போர் தங்கள் குடும்பத்திற்குத் தேவையான பொருளாதாரத்தை ஈட்ட நெசவுத் தொழிலை வீட்டிலேயே செய்து வந்திருக்கின்றனர்.  நெசவுத்தொழிலில் ஈடுபட்ட பெண்களைப் புறநானூறு ‘பருத்திப் பெண்டிர்’ எனக் குறிப்பிடுகிறது. இதனை,

                        பருத்திப் பெண்டின் பனுவ லன்ன          (புறம். 125: 1)

 மற்றும்,

                        'சிறையுஞ் செற்றையும் புடையுந ளெழுந்த

                       பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்து’ (புறம்.326:4-5)

என்ற பாடலடிகள் உறுதிசெய்கின்றன. மேலும், இரவு நேரத்திலும் வீட்டின் விளக்கொளியில் பெண்கள் பருத்திப் பஞ்சை நூல்நூற்க ஏற்றவாறு தரம்பிரித்து, அவற்றிலுள்ள சொத்தைகளையும் குறைகளையும் நீக்கி பண்படுத்தும் பணியை ஏற்றிருந்தமை புலப்படுகிறது.

       நெசவுத்தொழிலுக்கு மூலப்பொருளான பருத்திப் பஞ்சைப் பெறுதல் பொருட்டு,  பருத்திச் செடியை உள்நாட்டிலேயே விளைவித்த வேளாண்மை நுட்பத்தை புறநானூறு காட்டுகிறது. ஊரைச் சுற்றிலும் பருத்தி மிகுதியாகப் பயிரிடப்பட்டிருந்ததை,

                               ‘பருத்தி வேலிச் சீறூர்’                   (புறம். 299:1)

என்பதன் வழி அறிய முடிகிறது.  பருத்திச் செடியிலிருந்துப் பெறப்பட்ட பஞ்சை உலர்த்தி, பண்படுத்த இல்லத்தின் முன்றிலில் பரப்பி வைத்திருந்த காட்சியை,

                               ‘பஞ்சி முன்றிற் சிற்றி லாங்கட்’    (புறம். 166:5)

என்ற புறநானூற்று அடி சுட்டுகிறது.

            தன்னை நாடி வரும் வறியவர்க்கும் பாணர்க்கும் அவர்களின் கிழிசல் ஆடைகளைக் களைந்து, புத்தாடைகளை உடுக்கச்செய்யும் பழந்தமிழ் அரசர்களின் செயல்களைப் புறநானூறு  வெளிப்படுத்துகிறது. அவ்வாறு வழங்கப்பட்ட ஆடைகள் பலவகை நுண்வேலைப்பாடுகளைக் கொண்டவையாகவும், பல்வகைத் தொழில்நுட்பங்களின் வெளிப்பாடாகவும் விளங்கின. பாம்பின் தோல் போன்ற தன்மையுடையனவும், மூங்கிலின் உள்பக்கத்தில் உள்ள தோலைப் போன்றனவும், நெய்யப்பட்ட நூல் இழைகளின் வரிசை அறிய முடியாத, பூ வேலைப்பாட்டுடன் கூடியனவுமாகிய தொழில் நுட்பம்கொண்ட ஆடைகளை வறியவர்க்குக் கொடுத்து உடுக்கச் செய்த சிறப்பினை,

                             ‘பாம்புரி யன்ன வடிவின காம்பின்

                             கழைபடு சொலியி னிழையணி வாரா

                             ஒண்பூங் கலிங்க முடீஇ’     (புறம். 383:9-11)

என்ற புறநானூற்றுப் பாடலடிகள் காட்டுகின்றன.

            இதைப் போலவே, இரவலர்க்கு மணி, பொன், முத்துக்களோடு பல்வேறு தன்மைகளில் பல்வகை உடைகளை வழங்கிய செய்தியை,    

                                வேறுபட்ட வுடையுஞ் , சேறுபட்ட தசும்பும்       (புறம்;377:18-19)

என்ற அடி காட்டுகிறது. மேலும், ஆடைகளுக்கு வண்ணம் ஏற்றும் தொழில்நுட்பத்தினைப் பழந்தமிழர் கற்றிருந்தனர் என்பதோடு, கடல்அலை போன்ற தன்மையிலான ஆடைகளை உற்பத்தி செய்யும் தொழில்நுட்ப வன்மையையும் கைவரப் பெற்றிருந்தனர் என்பதை,

                                  ‘நீலக் கச்சைப் பூவா ராடை’                                   (புறம். 274:1)

என்ற அடியும்,

                                  ‘கோட்டங் கண்ணியுங் கொடுந்திரை யாடையும்’(புறம். 275:1)

என்ற அடியும் காட்டுகின்றன. இதன் வழி பழந்தமிழர் நெசவுத் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கினர் என்பதோடு, நெசவுத் தொழிலில் உள்நாட்டு மூலப்பொருள்களையும் நுட்பத்தையும் பயன்படுத்தினர் என்பதும் பெறப்படுகிறது.

 கட்டுமானத் தொழில்நுட்பம்

     அடிப்படைத் தேவைகளில் உணவு, உடைக்கு அடுத்த இடத்தினைப் பெறுவது இருப்பிடத்தேவையாகும். இயற்கையாக அமையப்பெற்ற மலைக்குகைகள், மரப்பொந்துகளில் மனிதன் ஒளிந்து வாழ்ந்த நிலையிலிருந்து, செயற்கையாக இருப்பிட வசதியினை ஏற்படுத்திக்கொள்ள முனையும் நிலையில் அவனின் தொழில்நுட்ப அறிவு  வெளிப்பட்டு நிற்கிறது. அவ்வாறு இருப்பிட வசதியை ஏற்படுத்திக்கொள்ளும்போது, மண்ணின் தன்மை, சுற்றுச்சூழல், கூட்டமாக வாழ்வதற்கான வாய்ப்புகள், இருப்பிடங்களை ஒட்டியுள்ள தொழில்சார்ந்த நிலங்களின் தன்மை, இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாப்பு  போன்ற பலவற்றையும்  கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது. இவ்வகையான முன்யோசனை  நிறைந்த, திட்டமிடுதலுக்குப் பின்னரே பழந்தமிழகத்தில் சிற்றூர்களும், பேரூர்களும் தோன்றியிருக்க வாய்ப்புகள் உள்ளன. இவ்வகையான இருப்பிட வசதிகளை ஏற்படுத்திக்கொள்வதிலும், கட்டடக்கலையில் தொழில்நுட்பங்களைக் கையாளுவதிலும் கைதேர்ந்தவர்களாகப் பழந்தமிழர் விளங்கியுள்ளனர். 

     பழந்தமிழர் குடியிருப்பினைத்  திணை சார்ந்த குடியிருப்புகள்/வயல்வெளி குடியிருப்புகள், சிற்றூர் குடியிருப்புகள், பேரூர் அல்லது நகரக் குடியிருப்புகள் என வகைப்படுத்திக் காண்பது  பொருத்தமாகிறது. இவ்வகைப்பாடு ஒவ்வொன்றிலும் வெவ்வேறு தன்மையிலான குடியிருப்புகளைக் காணமுடிகிறது. திணை சார்ந்த குடியிருப்புகள் என்பதில், திட்டமிட்ட கட்டுமான அமைப்பு இல்லாமல், வாழும் நிலப்பகுதிகளில் கிடைக்கும் அல்லது உருவாக்கும்  பொருள்களைக் கொண்டு (கரும்புத் தோகை, வைக்கோல,  தினைத் தாள்) இருப்பிட வசதியை ஏற்படுத்திக்கொள்ளல் (புறம்.22:14-15, 120:13) என்பதாகும். அடுத்துள்ள சிற்றூர் குடியிருப்புகள் மற்றும் நகரக் குடியிருப்புகள் என்பதில், திட்டமிட்டு, தொழில்நுட்பத்துடன்  உருவாக்கப்பட்ட வீடுகளும், அரண்களும், மதில்களும் காணப்படுகின்றன. 

    தூண்களுடன்  கூடிய சிற்றில்களைக் கட்டுதல்,  கட்டடங்களின் உறுதிப்பாட்டிற்குத் தேவையான பொருள்களைத் தயாரித்தல் (மண் பொடி), உயரமான மாடங்களை உருவாக்குதல், பாதுகாப்புடன் கூடிய, போர்க் கருவிகள் பொருத்தப்பட்ட  அரண்களை அமைத்தல், வானுயர்ந்த மதில்களைக் ஏற்படுத்துதல், இவையல்லாமல், அணைகள் போன்ற நீர்நிலைக் கட்டுமானங்களில்  தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துதல் (அணைகள், கால்வாய்கள், மதகுகள்) போன்ற தொழில்நுட்பத்தின் பல நிலைகளைப் புறநானூற்றின் வழி அறிய முடிகிறது.

      சிறிய இல்லமாயினும் அதன் உறுதிப்பாட்டிற்கு வேலைப்பாடமைந்த தூண்களை நிறுவியதை,

                              ‘சிற்றில் நற்றூண் பற்றி ..’             (புறம்.86:1)

என்ற அடி சுட்டுகிறது. நற்றூண் என்பதால் நல்ல வேலைப்பாடமைந்த தூண் என்பது பெறப்படுகிறது.

            நகரில் கட்டடங்கள் மிக உயரமானதாகவும், மலைகளின் கூட்டத்தைப் போன்று நெருக்கமானதாகவும் அமைக்கப்பட்டிருந்தன என்பதை,

                                மலைக்கணத் தன்ன மாடஞ் சிலம்ப’                  (புறம். 390:7)

என்ற அடியும்,   உயர்ந்த, மணியைவிட அதிகமாக ஒளிவீசும் மாடத்தினை,          

                                 ‘கதிர்விடு மணியிற் கண்பொரு மாடம்’(புறம். 53:2)

என்ற பாடலடியும்  காட்டுகின்றன. மணியைவிட அதிக பளபளப்புத் தன்மை கொண்ட மாடம் என்பதனால் தேர்ந்தெடுத்த கற்களைப் பளபளப்பாக்கி கட்டுமானத்திற்குப் பயன்படுத்தும்  நுட்பம் கைவரப்பெற்றிருந்தமை தெளிவாகிறது. இதற்கான கருவிகளைப் பழந்தமிழர் கொண்டிருந்தனர் என்பது இதன்வழி உய்த்துணரப்படுகிறது.

பழந்தமிழகத்தில் சிற்றில்கள் இருந்ததைப் போலவே நெடிய, உயரமான சுவர்களைக் கொண்ட இல்லங்களையும் கட்டும் தொழில்நுட்பம் காணப்படுகிறது. இதனை,

                             ‘நெடுஞ்சுவர் நல்லில் புலம்பக் கடைகழிந்து’       (புறம். 373:11)

என்ற புறநானூற்று அடி சுட்டுகிறது.

             இவையல்லாமல், கட்டடங்களின் உறுதிப்பாட்டிற்கு, மண்ணை அரைத்துப் (சிமெண்ட் போன்ற மண் கலவை) பயன்படுத்திய தொழில்நுட்பத்தினையும், செம்பைப்போன்ற / செம்பை உருக்கி ஊற்றி வலுவான கோட்டைகளை  உருவாக்கும் செயல்திறனையும், ஓடிவரும் மழைநீரினைத் தேக்கிவைத்து வேளாண்மைக்குப் பயன்படுத்த அறையும், பொறையும் அமைந்த பகுதிகளை இணைத்து வளைந்த வடிவிலான அணைகள் கட்டும் நுட்பத்தினையும் பழந்தமிழர் கைவரப்பெற்றிருந்தனர்.

                              கடுமுரண் முதலைய நெடுநீர் இலஞ்சிச்

                             செம்புறழ் புரிசைக் செம்மல் மூதூர்'          (புறம்.37:9-10)

என்பதில், செம்பை உருக்கி ஊற்றி கோட்டை எழும்பும் தொழில்நுட்பத்தை அறியமுடிகிறது. இந்நுட்பம் அரண்களின் உறுதிப்பாட்டிற்கானதாகும். செம்பை உருக்குதற்கும், கட்டுமானத் தொழிலில் அவற்றைப் பயன்படுத்துதற்கும் பலவகையான நுட்பங்களைப் பயன்படுத்தியிருத்தல் வேண்டும் என்பது தெளிவு.  அதேபோல,

                              'குரூஉக்கெடிற்ற குண்டகழி

                             வானுட்கும் வடிநீண்மதில்'             (புறம்.18:10-11)

என்பதில்,  வானம் வரையில் நீண்டு உயர்ந்த மதிலைக் கட்டும் பழந்தமிழர் கட்டுமானத் தொழில்நுட்பம் வெளிப்படுகிறது.

                              '--------------------- பருந்துயிர்த்

                             திடைமதிற் சேக்கும் புரிசைப்

                             படைமயங் காரிடை நெடுந லூரே'           (புறம்.343:15-17)

என்பதில், பருந்துகள் தங்கி இருக்கும் உயர்ந்த மதிலை உடைய, படைக்கருவிகள் பொருத்தப்பட்ட அரண்களைக் காணமுடிகிறது. உயர்ந்த மதில்களில் ஆங்காங்கே கண்காணிப்புக் கோபுரங்களையும், வெளியில் அறியமுடியாவண்ணம் பொருத்தப்பட்ட படைக்கருவிகளையும், அவற்றை இயக்கும் எந்திரங்களையும் கொண்டதாகும்.  மேலும், நிலத்தின் ஆழத்தைக் கடந்த அகழியையும், வானைமுட்டும் உயரமான மதிலையும் ஏற்படுத்தியிருந்ததை,

                           'நிலவரை யிறந்த குண்டுகண் ணகழி

                             வான்றோய் வன்ன புரிசை’                               (புறம்.21:2-3)

என்ற புறநானூற்று அடிகள் சுட்டுகின்றன.

 

இவைபோலவே, கட்டுமான நுட்பத்தின் மற்றொரு வெளிப்பாடான நீர்நிலைக் கட்டுமானங்களும்  புறநானூற்றில் சிறந்து விளங்குகின்றன.

                                ‘அறையும் பொறையு மணந்த தலைய

                             எண்ணாட் டிங்க ளனைய கொடுங்கரை’  (புறம்.118:1-2)

என்பதில், பாறைகளையும், சிறிய குவடுகளையும் இணைத்துக் கட்டப்பட்ட எட்டாம் நாள் தோன்றும் திங்களைப் போன்று வளைந்த கரையையுடைய குளம் சுட்டப்படுகிறது. இங்கு கட்டுமானத் தொழில்நுட்பத்தினை நீர் மேலாண்மைக்குப் பழந்தமிழர் பயன்படுத்திய செய்தி அறிய வருகிறது.  இவைப் போலவே,

                               'வேட்டச் சிறாஅர் சேட்புலம் படராது

                             படமடைக் கொண்ட குறுந்தா ளுடும்பின்'           (புறம்.326)

என்பதில், அணைக்கட்டுப் பகுதியும் அங்கு சிறுவர்கள் உடும்பு பிடித்த காட்சியும் விளக்கப்படுகிறது. அணைகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளில் தேக்கி வைத்த நீர், கட்டப்பட்ட கால்வாய்களின் வழியாக வேளாண்மைக்குப் பயன்படுத்தப்பட்டது. இதனை,

                             ‘ஓம்பா ஈகை மாவேள் எவ்வி

                             புனல் புதவின் மிழலையொடு கழனி’                   (புறம்.24:18-19)

என்ற புறநானூற்று அடிகள் காட்டுகின்றன. நீர் வெளியேற்றும் வாயில்களில் பாசனத்திற்காக திறந்துவிட்ட நீரின் ஓசையை

                                    'இழுமென வொலிக்கும் புனலம் புதவிற்'             (புறம்.176:5)

என்ற புறநானூற்று அடி காட்சியாக்குகிறது. இதில் பழந்தமிழரின் கட்டுமான நுட்பத்தினோடு நீர் மேலாண்மையையும் உணர முடிகிறது.

             இன்றைய நிலையில் கட்டுமானப் பணியில் கட்டடங்களின் உறுதிப்பாட்டிற்குப்   பயன்படுத்தப்படும் சிமெண்ட் என்ற கட்டுமானக் கலவைப் பொருளுக்கு முன்னோடியான பொருள் பழந்தமிழரால் உருவாக்கப்பட்டுள்ளது.  மண்ணை அரைத்து அதனைக் கொண்டு கோட்டை போன்றவற்றை வலுவுடையதாக கட்டியிருக்கின்றன. கோட்டை, அணைகள் போன்ற பெரிய கட்டுமானப் பணியில் மண்ணைச் சிறிய அளவில் கையால் அரைத்து பயன்படுத்துதல் என்பது இயலாத ஒன்று. அதற்கென வடிவமைக்கப்பட்ட அரவை எந்திரத்தினாலேயே இது ஏற்புடையதாகும். அதற்கான எந்திரம் பற்றிய குறிப்பு புறநானூற்றில் இல்லை என்றாலும், ‘அரைமண் இஞ்சி’ பற்றி பதிற்றுப்பத்து போன்ற இலக்கியங்களும் குறிப்பிடுவதால் (பதி.58:6)  அதன் பயன்பாடு உணரப்படுகிறது. அதேபோல, செங்கல்லை வடிவமைத்து, அதனைக் கட்டுமானப் பணிக்குப் பயன்படுத்தும்  நுட்பத்தினையும் பழந்தமிழர் அறிந்திருந்தனர். மண்ணை அரைத்து அரண் அமைத்திருந்ததையும்,  அரணின் கொடி பறக்கவிடப்பட்டதையும்

                                   ‘அரைம ணிஞ்சி நாட்கொடி நுடங்கும்’(புறம். 341:5)

 என்ற புறநானூற்று அடியும், கல்லை அறுத்து  கிணற்றின் சுற்றுச்சுவர் கட்டியிருந்த குறிப்பினை,

                                    'கல்லுறுத் தியற்றிய வல்லுவர்க் கூவல்'(புறம்.331:1)

என்ற புறநானூற்று அடியும் சுட்டுகின்றன.

 உலோகத் தொழில்நுட்பம்

            பழந்தமிழர் இரும்பு போன்ற உலோகப் பொருள்களின்  பயனை நன்கு அறிந்திருந்தனர். இரும்பை உருக்கி படைக்கலன்கள், வேளாண்கருவிகள், வீட்டு உபயோகப் பொருள்கள் போன்றவை  செய்யும் திறன் பெற்றிருந்தனர். செம்பு போன்ற உலோகத்தினை கட்டுமானப் பணிகளுக்கும் பயன்படுத்திய நுட்பம் குறிக்கப்பட்டது போல,  இரும்பு உலைகள் ஆங்காங்கே இருந்த செய்திகள்  அதிகமாக சுட்டப்படுகின்றன. காட்டாக, பெண் யானை மூச்சுவிட்டது போல் கை கோப்புப் பொருந்திய உலையின் வாயினை,

                              ‘பிடியுயிர்ப் பன்ன கைகவ ரிரும்பின்

                             நோவுற ழிரும்புறங் காவல் கண்ணி’                     (புறம். 345:8-9)

என்று காட்டுகிறது. புறநானூறு.

‘கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய

இரும்பு ணீரினு மீட்டற் கரிதென’                        (புறம்.  21:7-8)

என்பதில், வன்மையான கையை உடைய கொல்லன் இருப்பை காய்ச்சி, வடிவமைத்து அதனை நீரில் வைத்து வன்மையாக்கிய காட்சி சுட்டப்படுகிறது.

                              ‘இரும்புபயன் படுக்குங் கருங்கைக் கொல்லன்

                             விசைத்தெறி கூடமொடு பொரூஉம்

                             உலைகல் லன்ன வல்லா ளன்னே’             (புறம்.170:15-17)

என்பதில், வலிய கையினால் விசையுடன் அடித்த சம்மட்டி அடியை ஏற்று மாறுபடும் உலைக்களத்தில் உள்ள அடைகல் (உலைகல்) குறிக்கப்படுகிறது.

                              'கருங்கைக் கொல்லனை யிரக்கும்

                             திருந்திலை நெடுவேல் வடித்திசி னெனவே'       (புறம்.180:12-13

என்ற அடிகள், கொல்லனை போர்க்கருவிகளுள் ஒன்றான வேலினை வடிக்கச் சொல்லுதல் காட்டப்படுகிறது.

                              'கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய

                             இரும்பு ணீரினு மீட்டற் கரிதென'            (புறம்.21:7-8)

என்பதிலும், இரும்பை உருக்கும் உலைக்கலனும், உலைக்கலத் தொழிலில் ஈடுபட்ட ‘கருங்கை கொல்லனும்’ காட்டப்படுகின்றனர்.  இதன்வழி,  உலோகத்தொழில் நுட்பத்தில் பழந்தமிழர் தேர்ச்சிப் பெற்றிருந்தமையை அறிய முடிகிறது. மேலும், இருப்புத்  தாதினைக் கண்டறியவும், அதனைப் பிரித்தறியவும்,  அதிலிருந்து உலோகப்பொருள்களை வடித்தெடுக்கவும் தேவையான  தொழில்நுட்ப அறிவினையும், தொழிற்கூடங்களையும் பெற்றிருந்தனர் என்பதை இதன்வழி உணரமுடிகிறது.

 எந்திரவியல் நுட்பம்

            ஆழமான அகழிகளையும், நீண்ட மதில்களையும், வலிமையான கோட்டைகளையும் வடிவமைத்ததோடு, கோட்டைகளில் தானே எய்தக்கூடியதும், தொடர்ச்சியாக தாக்கவல்ல  ஆயுதங்களை  வெளியிடக்கூடியதுமான பலவித எந்திரப் பொறிகளைப் பொருத்தினர். அதற்கான எந்திரங்களை வடிவமைக்கும் நுட்பத்தினையும் பெற்றிருந்தனர். இத்தன்மை வாய்ந்த அரண்கள் குன்றுகள் போல அருகருகே அமைக்கப்பட்டிருந்தை,

 

                             தமரெனின் யாவரும் புகுப வமரெனிற்

                             றிங்களு நுழையா வெந்திரப் படுபுழைக்

                             கணமாறு நீட்ட நணிநணி யிருந்த

                              குறும்பல் குறுபில்               (புறம்.177:4-7)

 என்ற புநானூற்று அடிகள் சுட்டுகின்றன. அம்புகள் பொருத்தப்பட்ட காவல் மிக்க அரணை,

                                    'அம்புதுஞ்சுஞ் கடியரண்'    (புறம்.20:16)

என்ற புறநானூற்று அடி  சான்று காட்டுகிறது.

 

            அதேபோல, ஓட்டுநர் தேவையில்லாத வான ஊர்தியைச் சிந்தித்துப்பார்த்த பழந்தமிழர் தொழில்நுட்ப அறிவினை,

                        ‘வலவ னேவா வான வூர்தி’                        (புறம். 27:7-8)

என்ற புறநானூற்றுப் பாடலடி கோடிட்டுக் காட்டுகிறது.

 முடிவு

            ஒவ்வொரு சமுதாயமும் அவற்றிற்கேயுரிய பண்பாடுகள் பழக்க வழக்கங்கள் நாகரிக கூறுகள் போன்றவற்றால் பிற சமுதாயத்திலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்கின்றன. இவ்வகை பிரித்தறியும் நோக்கிற்கு அச்சமுதாயத்தின் பழம் பண்பாடு, பழக்கவழக்கம் நாகரிகம் போன்றவற்றைப் பாதுகாக்கும் பழம்பெரும் இலக்கியங்கள் அளவுகோல்களாக அமைகின்றன.  மொழி வளர்ச்சி, இலக்கிய வளர்ச்சி, நாகரிக வளர்ச்சி இவை மூன்றும் ஒன்றோடொன்று தொடர்பற்றவையோ, அல்லது  திடீரென முளைத்தெழுந்தவையோ அல்ல. இவற்றின் பெருக்கத்திற்கான, வளர்ச்சிக்கான கூறுகளை மொழியும், அதைச் சார்ந்த இலக்கியங்களும் தம்முள் கொண்டுள்ளன. அவ்வகையில் பழந்தமிழர் நாகரிகத்தை, பண்பாட்டை, பழக்கவழக்கத்தைப் பாதுகாக்கும் கலைப் பெட்டகமாக விளங்குவது பழந்தமிழ் நூல்களுள் ஒன்றான புறநானூறு. இது பழந்தமிழர்களின் பல்வகைச் சிறப்புகளை அடைகாப்பது போலவே, நாகரிகத்தின் முதன்மைக் கூறாகக் கருதப்படும் தொழில்நுட்பச் சிந்தனைகளையும் தன்னுள் கொண்டு விளங்குகிறது என்ற உண்மையை மேற்கண்ட சான்றுகள் மெய்ப்பிக்கின்றன. இச்சான்றுகளின் வழி பழந்தமிழரின் வேளாண் தொழில்நுட்பம், நெசவுத் தொழில்நுட்பம், கட்டுமானத் தொழில்நுட்பம், எந்திரத் தொழில்நுட்பம், உலோகத் தொழில்நுட்பம் போன்றவற்றை அறிய முடிகிறது.

 புறநானூற்றுப் புலவர்களில் ஆவூர் மூலங்கிழார் தன்பாடல் பலவற்றில் தொழில்நுட்பக்கூறுகளைப் பதிவுசெய்கிறார். மேலும், கபிலர், அண்டர் நடுங்கல்லினார், குறுங்கோழியூர் கிழார் மற்றும் பரணரும் தொழில்நுட்பக் கருத்துகளை ஆங்காங்கே சுட்டுகின்றனர். இவர் அன்றி காவற்பெண்டு, பொருந்திலிளங்கீரனார், மாறோக்கத்து நப்பசலையார், குடபுலவியனார், நன்னாகனார், மாங்குடி மருதனார், உறையூர் மருத்துவன் தாமோதரனார், முதுகண்ணன் சாத்தனார், பொன்முடியார், உத்திரையார், ஓரூஉத்தனார், உலோச்சனார், ஔவையார், கோவூர்கிழார், தங்கால் பொற்கொல்லனார், உறையூர் முதுகூத்தனார் ஆகியோர் பாடல்களிலும் பழந்தமிழர் தொழில்நுட்பம் குறித்த பதிவுகளைக் காண முடிகிறது. 

 

www.thamizhiyal.com

தமிழியல்.காம்