வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

ஐங்குறுநூறு அறிமுகம்

 ஐங்குறுநூறு - அறிமுகம்

முனைவர் ஆ.மணவழகன்
அக்டோபர் 03, 2011

எட்டுத்தொகை இலக்கியங்களுள் மூன்றாவதாக இடம்பெற்றுள்ள அக இலக்கியம் ஐங்குறுநூறு. இவ்விலக்கியமே எட்டுத்தொகையுள் அடியளவால் மிகவும் சிறிய பாடல்களைக் கொண்டது (3 அடி முதல் 6 அடிவரை). இந்நூலில் ஐந்நூறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன (ஐந்து+குறுகிய+நூறு). இந்த ஐந்நூறு பாடல்களையும் திணைக்கு நூறு பாடல்கள் வீதம் ஐந்து புலவர்கள் பாடியுள்ளனர் (5X100=500). ஐந்திணை ஒழுக்கங்களை நூறுநூறு பாக்களில் இலக்கிய வளமை குன்றாது எடுத்தியம்புகிறது. ஒவ்வொரு நூறும் பத்து பத்து பாக்களாக, தனித்தனி தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளது. தலைப்பானது செய்யுளில் பயின்று வரும் சொற்களாலோ அல்லது பொருளாலோ இடப்பட்டுள்ளது இதன் தனிச்சிறப்பாகும். திணையையும் ஒரு பெரும் புலவர் பாடியுள்ளார்.

மருதத் திணை         - ஓரம்போகியார்
நெய்தல் திணை     - அம்மூவனார்
குறிஞ்சித் திணை   - கபிலர்
பாலைத் திணை     - ஓதலாந்தையாரை
முல்லைத் திணை  - பேயனார்

யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையின் விருப்பத்தால் கூடலூர்கிழார் என்னும் புலவர் ஐங்குறுநூற்றைத் தொகுத்து வழங்கியுள்ளார். இந்நூல், சங்க கால தமிழரின் திணை சார்ந்த வாழ்வியல், காதல் வாழ்க்கை, சமூக நோக்கு, பழக்க வழக்கங்கள், நாகரிகம், ஒழுக்கம், மகளிர் மாண்புகள், அறம், அருள் என அனைத்தையும் எளிய – இனிய வடிவத்தில் பதிவுசெய்துள்ளது.

சிறப்புகள்
சங்க இலக்கியத் தொகை நூல்களுள் பல சிறப்புகளைப் பெற்றது ஐங்குறுநூறு. சங்க இலக்கியங்களுள் மூன்றடியிலும் பாடல்கள் இடம்பெற்றுள்ள நூல் இது ஒன்றே. இந்நூலைத் தவிர வேறு எந்த நூலிலும் மருதத் திணைப் பாடல்கள் முதலாவதாக வைக்கப்படவில்லை. இந்திராவிழா பற்றிய செய்தியைக் கொண்டுள்ள பழைய இலக்கியம் இதுவே. தாவரங்கள், விலங்குகள், பறவைகள் பற்றிய செய்திகளும், அவற்றின் பெயரால் பாடல்களும் இடம்பெற்றுள்ளன. விலங்குகள் போன்றவற்றின் வாழ்வியல் நுட்பங்களும் படம்பிடித்துக்காட்டப்பட்டுள்ளன. குறுந்தொகையைப் போன்றே சிறந்த உவமைகளைக் கொண்டுள்ள நூல் ஐங்குறுநூறு எனலாம்.
        உலகில் அனைத்து தீய செயல்களுக்கும் காரணமாக அமைவது வறுமையே. வறுமையே, பசிக்கும், பிணிக்கும் மூலகாரணமாக அமைகிறது. வறுமையைப் போக்கவே மக்கள் தீய செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆகவே, ஒரு நாடு சிறந்தோங்க பசி, பிணியை இல்லாது செய்யவேண்டும் என்ற சிந்தனையை 

                                        'பசியில் ஆகுக பிணிசே நீங்குக'

என்று வெளிப்படுத்துகிறது ஐங்குறுநூறு. ஐங்குறுநூற்றில் வேளாண் சிந்தனைகள் காணக்கிடைக்கின்றன. வயல் நிறைய விளைய வேண்டும் என்று எண்ணுகின்றனர். அதற்குக் காரணம் தானியத்தைச் சேர்த்து வைக்கவேண்டும் என்பதல்ல, இரவலர்களுக்கு கொடுக்கவேண்டும் என்பதே. இந்த உயர்ந்தச் சிந்தனையை

                                    'விளைக வயலே வருக இரவலர்'
    மற்றும்,

                                 நெற்பல பொலிக பொன் பெரிது சிறக்க

 என்ற ஐங்குறுநூற்று அடிகளில் அறியலாம்.

இயற்கையிலிருந்து விலகாமலும், அதேவேளையில், நவீனத்துவத்தைப் பயன்படுத்தியும் பயன் கண்டனர் நம் முன்னோர். வேளாண்துறையிலும் கூட நவீன கருவிகளைப் பயன்படுத்திய உண்மையைக் கீழ்க்கண்ட அடிகள் நமக்குப் படம்பிடித்துக் காட்டுகின்றன.
     
             'கரும்பின் எந்திரம் களிற்றெதிர் பிளிற்றும்'

கரும்பைப் பிழிந்து சாறு எடுப்பதற்கு நவீன கருவிகளைப் பயன்படுத்திய உண்மையை இவ்வடி உணர்த்துகிறது. எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு பகைமைபாராட்டுதலிலோ, அல்லது போர் புரிவதிலோ இல்லை.  பகைமையை மறத்தலிலும், நட்பை பாராட்டுதலிலுமே உள்ளது. போர்கள் போற்றப்பட்ட சூழலில் வேந்தர்கள் பகைகொள்ள வேண்டாம் என்கிறது ஐங்குறுநூறு.

                                வேந்து பகை தணிக யாண்டுபல நந்துக

புறத்திற்கென்று தனியே இலக்கியம் படைத்து, விழுப்புண் படுதலே வீரம் என்ற மரபை வளர்த்து, வாழ்ந்து வந்த சமுதாயச் சூழலில், பகையே வேண்டாம் என்று ஒருவர் சிந்தித்திருப்பது எண்ணி வியக்கத்தக்க ஒன்றல்லவா?

ஒரு நாட்டின் வாழ்விற்கும், வளர்ச்சிக்கும், வளமைக்கும் உற்ற துணையாக விளங்குவது அந்நாட்டின் அரசாங்கம் என்பது துணிவு. அந்த அரசாங்கம் முறைசெய்து மக்களை காப்பாற்ற வேண்டும். நாட்டில் களவு இல்லாது ஒழிய வேண்டும். இச்செயல்பாடுடைய அரசே நல்லரசாக விளங்கமுடியும். இதை,

                                அரசுமுறை செய்க களவில் லாகுக’-22

 என்ற ஐங்குறுநாற்றின் அடி நமக்கு தெளிவாக்குகிறது.

        அன்பும், அறனும், பண்பும் மிகுந்த ஒரு காலகட்டத்தில், இயற்கையோடு மனிதன் இயைந்து வாழ்ந்த ஒரு காலகட்டத்தில், அறச்சிந்தனைகள் நாட்டில் தலைத்தோங்க வேண்டும் என்று சிந்திப்பதும் அச்சிந்தனை உலகெங்கும் சிறந்தோங்க வேண்டும் என்று ஆசை கொள்வதும்  நாம் பெருமைப்பட கூடிய ஒன்றே. இவ்வகைச் சிந்தனை.

                                        அறநனி சிறக்க வல்லது கெடுக

என்று வெளிப்படுத்துகிறது ஐங்குறுநூறு.

        அறச்சிந்தனை எங்களுக்கு வாய்க்கப்பெற்றது போல, உலகம் அனைத்தும் பரவி தழைத்தோங்க வேண்டும், அதன் மூலம் தீய செயல்கள் அழிந்துபட வேண்டும் என்ற இத்தொலைநோக்குச் சிந்தனை இன்றும், என்றும் ஏற்புடையதுதானே! அறச்சிந்தனை வலுப்பெற்றால் என்ன நடக்கும்? தீமைகள் எல்லாம் விலகியோடும், எங்கும் நன்றே, தீமை இல்லை, எவ்வுயிரும் துன்பமின்றி இன்பம் பெறும். இந்த உண்மையைத் தானே ஐங்குறுநூற்றின்,
                              ‘நன்று பெரிது சிறக்க தீதில் ஆகுக

என்ற அடி நமக்கு வலியுறுத்துகிறது.

        உயிரியல் அறிவும் ஐங்குறுநூற்றில் காணக்கிடைக்கின்றன. நண்டுகள் பிறக்கும் போதே அதன் தாய் இறந்துவிடுகிறது என்பதையும், முதலைகள் தம் குட்டிகளையே தின்னும் என்பதையும் ஐங்குறுநூறு கீழ்க்கண்டவாறு பதிவுசெய்கிறது.

                        ‘தாய்சாப் பிறக்கும் புள்ளிக் களவனொடு
                        பிள்ளை தின்னும் முதலைத்து அவனூர்’

                        ‘தன்பார்ப்புத் தின்னும் அன்புஇல் முதலை’

 ஐங்குறுநூறு  பதிப்புகள்

                    உ. வே. சா, ஔவை சு. துரைசாமிப்பிள்ளை (அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு), பொ.வே. சோமசுந்தரனார் (கழக உரை) போன்றவையும்  புலியூர் கேசிகன் உரை,   வர்த்தமானன் பதிப்பக வெளியீடு போன்றவையும் பிறவும் வெளிவந்துள்ளன.