பொதுக் கட்டுரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொதுக் கட்டுரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

தமிழர் வளர்த்த திறனாய்வுக் கலை

முனைவர் ஆ.மணவழகன், இணைப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை - 600 113. நவம்பர் 142018

 

      உலகில் இன்று கோலோச்சிக் கொண்டிருக்கும் பல மொழிகளும் தோன்றிராத காலத்திலேயே மொழி வளர்க்கவும், மொழிக்குப் புதியனவற்றைத் திறனாய்வு செய்யவும், அரசை வழிநடத்தவும் அவைக்களத்திலே புலவர் கூட்டத்தை வைத்திருந்த பெருமை தமிழினத்திற்கு உண்டு.

             தான் மேற்கொள்ளும் போரில் வெற்றிபெறவில்லை என்றால் தன் அவையில் மாங்குடி மருதனைத் தலைவனாகக் கொண்டு இயங்கும் புலவர் குழாம் என்னைப் பாடாது போகட்டும் என்று வஞ்சினம் மொழிகிறான் பாண்டியன் நெடுஞ்செழியன்.

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி

மாங்குடி மருதன் தலைவனாக

உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்

புலவர் பாடாது வரைகென் நிலவரை (புறம்.72)

            மாங்குடி மருதனார் நெடுஞ்செழியனை வாழ்த்தும்போது, அவனது முன்னோர்களாகிய பல்சாலை முதுகுடுமிப் பெருவழுதி போலவும், நிலந்தரு திருவின் நெடியோன் போலவும் இனிது வாழவேண்டும் என வாழ்த்துகிறார். பல்சாலை முதுகுடுமிப் பெருவழுதி நல்லாசிரியர்களைக் கூட்டி அவர்களுக்கு உணவளிக்கும் நல்வேள்வி செய்தவன் என்றும், நிலந்தரு திருவின் நெடியோன் என்பவன் நல்லாசிரியர்களைக் கூட்டி ‘புணர்கூட்டு’ அவையை நடத்தினான் எனவும் குறிப்பிடுகிறார்.

தொல்லாணை நல்லாசிரியர்

புணர்கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின்

நிலந்தரு திருவின் நெடியோன் ( மதுரைக் காஞ்சி,761-763) 

புணர்கூட்டு என்பது புலவர்கள் கூடும் அவை. இந்த அவை  கூடி, புதிதாக புனையப்படுகிற பாடல்களின் தன்மையை ஆய்வு செய்யும். 

திறனாய்வாளன் தன்மை

      மன்னனை வழிநடத்துவதற்கு உரிய சொற்களைத் தீதின்றி தேர்ந்தெடுத்து கூறுபவனவே நல்ல அமைச்சன். அவர்களைப் போல், நூல்வல்ல ஆசிரியர்களால் திறனாய்வு செய்து நல்ல சொற்களைத் தேர்ந்து, பொல்லாத சொற்கள் இடையில் புகாதவாறு விலக்கி, அறிவுடைய நா என்னும் ஏரால் உழுது உண்ணுபவர்களே புலவர்கள் என்கிறது கலித்தொகை (68). 

       திறனாய்வாளனுக்கு வேண்டப்படுகிற தகுதிகளில் முதன்மையானது நடுநிலைமை. அதாவது, தன் விருப்பு வெறுப்பின் காரணமாக ஒருதிறம் சாராது, துலாக்கோல் போல் சமநிலையில் நின்று  திறனாய்ந்து உரைத்தல். இதனை, குறுந்தொகையில் இறையனார் எனும் புலவர் மிகத் தெளிவாக உணர்த்தியுள்ளார்.

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்

நறியவும் உளவோ நீ அறியும் பூவே.

என்பது அப்பாடல். தலைவி சூடியுள்ள பூவில் மொய்க்கும் தும்பி என்னும் வண்டைப் பார்த்து நீ அறிந்த பூக்களில் என் தலைவியின் கூந்தலைக் காட்டிலும் நல்ல மணமுள்ள பூவை அறிந்ததுண்டா? என்ற தலைவன் கேட்பதாக பாடல் அமைக்கப்பட்டுள்ளது.

       தேன் தேடும் வாழ்க்கை கொண்ட அழகிய சிறகுகளை உடைய தும்பியே! தேன் உண்ணும் காம ஆசையால் சொல்லாமல் உண்மையாக நீ கண்டதைச் சொல். இவள் என்னிடம் பயின்றதைக் கெழுதகை நட்பாகக் கொண்டவள். அவளும், அவள் கூந்தலும் மயிலின் இயல்பைக் கொண்டவை. அவற்றைக் காட்டிலும் நல்ல மணமுள்ள பூக்கள் இருக்கின்றனவா?  என்கிறான். இதில் பூவின் மீது கொண்டு விருப்பத்தின் பேரில் ஒருதிறம் நின்று கருத்துச் சொல்லாதே என்று வண்டைப் பார்த்துக் கூறுவதாக அமைக்கப்பட்டுள்ளது பாடல்.

            திறனாய்வாளர் என்பவர் பல மலர் அணையும் வண்டைப் போன்றவர். பல நூல்களைப் பயின்றாலும் தமக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்று ஒருதிறம் சாராமல், நூற்திறம் அறிந்து உள்ளதை உள்ளபடி உரைக்கவேண்டும் என்பது இதன் உட்பொருள்.

 சங்கப் பாடலும் புராணச் செய்தியும்

          கி.பி. 600 வாக்கில் வாழ்ந்த திருநாவுக்கரசன் சிவபெருமானைச் சங்கத்தோடு இணைத்துப் போற்றிப் பாடுகிறார். தருமி என்னும் ஏழைப் புலவனுக்கு, ’கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி’ என்றப் பாடலை எழுதிக்கொடுத்தார் என்பதை, 

நன்பாட்டுப் புலவரனாய்ச் சங்கமேறி

நற்கனகக்கிழி தருமிக்கு அருளினோன்காண்

என்று கூறுகிறார். 

            திருநாவுக்கரசருக்குப் பின்வந்த பல்வேறு இலக்கிய ஆசிரியர்களும் தமிழாயும் புலவர் கூட்டத்தைக் குறிக்கும் சங்கம் என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். சின்னமனூர்ச் செப்பேடு, சங்கத்தில் இலக்கியம் இயற்றும் பணியோடு, மொழிபெயர்ப்புப் பணியும் நடைபெற்றதாக ஒரு செய்தியைக் கூறுகிறது. இதில்,

                        மாபாரதம் தமிழ்ப்படுத்தும்

                   மதுராபுரிச் சங்கம் வைத்தும்

என்று குறிப்பிடப்பிடுகிறது. 

            வள்ளுவரும் திறனாய்வின் தன்மையைப் பல இடங்களில் மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறார். அவர், ஒன்றின் உண்மைத் தன்மையக் காண்பது குறித்து,

                             எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

                             மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்றும்,

                              எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் 

                             மெய்ப்பொருள் காண்பது அறிவு.

என்றும் குறிப்பிடுகிறார். மேலும்,

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்

பொருளும் அதனின் ஊங்கு இல் (குறள்-644)

என்று மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். 

            ஆக, நடுநிலை நின்றல், தானே நுண்மான் நுழைபுலம் கொண்டு ஒன்றின் உண்மைத் தன்மையைக் கண்டறிதல், அறிந்தவற்றைத் தெளிவாக உலகிற்கு உரைத்தல் என்ற திறனாய்வுக் கலையின் மையக் கோட்பாடுகளைப் பழந்தமிழர் நன்கு வரையறுத்து வைத்திருந்னர் என்பதும், திறனாய்வுக் கலையை உலகிற்கு இவர்களே வழங்கினர் என்பதும் தெளிவு.


புதன், 19 ஆகஸ்ட், 2020

இளம் தமிழறிஞர் முனைவர் ஆ.மணவழகன்

 முனைவர் க.ஜெயந்தி, மேனாள் உதவிப் பேராசிரியர், சிந்தி கலை அறிவியல் கல்லூரி,  சென்னை.

(தடம் பதித்த தமிழறிஞர்கள், பன்னாட்டு மாநாடு, இசுலாமியக் கல்லூரி, வானியம்பாடி சூலை 27, 2017)

 

   சமகாலத்தில் வாழ்ந்து வரும் தமிழறிஞர்களையும் அவர்தம் பணிகளையும் அறியும் வாய்ப்பைப் பெறுவதென்பது தமிழார்வலர், ஆய்வாளர், மாணவர் என அனைத்துத் தரப்பினர்க்கும் மிகுந்த பயன் அளிக்கக்கூடியதாகும். 

அவ்வகையில், சங்க இலக்கியம், தற்கால இலக்கியம், கணினித் தமிழ் என மரபையும் நவீனத்தையும் தமது ஆய்வும் களமாகக் கொண்டு இயங்கி வரும் ’இளம் ஆய்வறிஞர்’ முனைவர். .மணவழகன் அவர்களது பணிகளை இவண் பதிவு செய்வதைப் பெரும் பேறாகக் கருதுகிறேன். நமது முன்னோர் விட்டுச் சென்றுள்ள அறிவுப் பெட்டகங்களை இளந்தலைமுறையினர்க்கு உணர்த்தும் வகையில் பல கோணங்களில் விளக்கியும், இக்காலத்திலுள்ள பல அறிவுத் துறைகளுக்கும் பழந்தமிழர் தம் சிந்தனைகளே உயிரளித்துள்ளன என்பதை அவர்க்கு எடுத்துக்காட்டும் வகையிலும் தமிழ்த் தொண்டாற்றிவருபவர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள். இவர், செவ்வியல் இலக்கியங்களைச் சமூகவியல், அறிவியல் நோக்கோடு ஆய்வு செய்யும் அறிஞர் என்பதோடு, கவிதைத் துறையிலும் தம் பங்களிப்பைச் செய்துள்ளார். 

கல்வியும் ஆய்வும்

        12:06:1977-இல் சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் பிறந்தார். பெற்றோர் மா.ஆறுமுகம்-பெரியக்காள். பள்ளிப்படிப்பைக் கெங்கவல்லி அரசு மேல்நிலைப் பள்ளியில் நிறைவு செய்தார். ஆத்தூர் அரசு  கலைக்கல்லூரியில் தமிழ் இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார்.  திருச்சி தேசியக் கல்லூரியில் (பல்கலைக்கழகத் தரத்துடன்) முதுகலைப் பட்டம் மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தைப் பெற்றார். சென்னை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர்.அன்னி தாமசு அவர்களின் நெறிகாட்டுதலில் முனைவர் பட்டம் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வழி முதுகலை – சமூகவியல் பட்டம் பெற்றார். கல்வெட்டியலில் பட்டயமும் பெற்றுள்ளார். 

        முதுகலையில் ’பதிற்றுப்பத்துக் காட்டும் பழந்தமிழர் வாழ்வியல் முறைகள்’ என்ற தலைப்பிலும், ஆய்வியல் நிறைஞரில் ’இதழ்களில் சிறுகதைகள்’ என்ற தலைப்பிலும், முனைவர் பட்டத்தில் ’பழந்தமிழ் நூல்களின் சமூகத் தொலைநோக்கு’ என்ற தலைப்பிலும் தமிழியல் ஆய்வுகளை மேற்கொண்டார். 

பணிகள்

தமிழியல் பட்டங்களைப் பெற்றிருந்தாலும், தமக்கிருந்த கணினி அறிவுத் திறத்தால் அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினித் தமிழ் ஆராய்ச்சி அலுவலராகத் தம் பணியைத் தொடங்கினார். அதன் பிறகு சென்னை இந்துக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகச் சில மாதங்கள் பணியாற்றிய இவர், சென்னை எஸ்.ஆர்,எம் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக 2005 முதல் ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது எஸ்.ஆர்.எம் குழுமத்தால் தொடங்கப்பட்டபுதிய தலைமுறைவார இதழ் மற்றும் தொலைக்காட்சிக்கு அறிவுரைஞர் மற்றும் மொழி ஆளுகைப் பணிகளையும் மேற்கொண்டார். 

2011-இல் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சமூகவியல், கலை மற்றும் பண்பாட்டுப் புலத்தின் உதவிப்பேராசிரியராக இணைந்தார். தற்போது அப்புலத்தில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். மேலும்  தமிழகத்தின் மேனாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் அறிவிப்பின் பேரில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உருவாக்கப்பட்டுள்ளபழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடத்தின் பொறுப்பாளராகவும் உள்ளார். 

இயற்றியுள்ள நூல்கள்

        கவிதைத் தொகுப்பு

        கூடாகும் சுள்ளிகள் (அய்யனார் பதிப்பகம், சென்னை, 2010) 

        ஆய்வு நூல்கள்

        1.பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வை (காவ்யா பதிப்பகம், சென்னை, 2005), 2.சங்க இலக்கியத்தில் மேலாண்மை (காவ்யா பதிப்பகம், சென்னை, 2007),   3.தொலைநோக்கு (அய்யனார் பதிப்பகம், சென்னை, 2010) 4.பழந்தமிழர் தொழில்நுட்பம் (அய்யனார் பதிப்பகம், சென்னை, 2010), 5.தமிழ்ச் செவ்வியல் நூல்களில் அறம்-அறிவியல்-சமூகம் (தமிழக அரசின் விருது பெற்ற நூல்) (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2013), 6.பதினெண்கீழ்க்கணக்கில் அறிவுத் துறைகளும் மரபு நுட்பங்களும் (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2015),   7.பழந்தமிழ் நூல்களின் சமூகத் தொலைநோக்கு (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2016).

       ’திருமணம் செல்வகேசவராய முதலியார்’ என்ற நூலில் ‘செல்வக்கேசவராய முதலியார் – படைப்புத் திறன்’ என்ற பகுதியையும் ’இந்திய ஆட்சிப்பணி – தமிழ் முதன்மைத் தாள்’ என்ற நூலில் இரண்டு அலகுகளையும் இவர் இயற்றியுள்ளார். 

        பதிப்பித்த நூல்கள்

        இந்திய ஆட்சிப்பணி – தமிழ் முதன்மைத் தாள் என்ற நூலைப் பதிப்பித்துள்ளார். உலகத் தமிழாராய்ச்சி நிறவனப் பொதுப் பதிப்பாசிரியராக, ஆதி சைவம், உதயணகுமார காவியம் உணர்த்தும் வாழ்வியல் நெறிகள், கிரேக்கக் காப்பியத்தில் மகாபாரதத் தமிழர், கிறித்தவக் காப்பியங்கள், மறைமலையடிகளாரின் பன்முகப் பார்வை, சங்கத் தமிழ்க் குழவிக்குச் செவிலியாகும் சிவப்பிரகாசர், புறநானூற்றில் பண்பாட்டியல், வரலாற்றில் அதியமான், தனித்தமிழ் இயக்கக் கட்டமைப்பில் செல்விலக்கியத் தாக்கம் ஆகிய ஒன்பது நூல்களைப் பதிப்பித்துள்ளார்.

கணினித் தமிழ் ஆக்கங்கள்

        கணினித் தமிழ் ஆக்கங்களாக, சொல்லோவியம் (படவிளக்க அகராதி), காந்தள்(தமிழ்மொழிக் கையேடு), உயிரோவியம்(சங்க இலக்கிய காட்சிகள்) முதலிய கணினித்தமிழ் தொகுப்புகளை (குறுந் தகடுகள்) உருவாக்கியுள்ளார். 

ஆய்வுத் திட்டங்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள்

        உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ’தமிழ்ச் செவ்வியல் நூல்களில் அறம்-அறிவியல்-சமூகம்’, பதினெண்கீழ்க்கணக்கில் அறிவுத் துறைகளும் மரபு நுட்பங்களும்’ ஆகிய தலைப்புகளில் ஆய்வுத் திடங்களை நிறைவு செய்துள்ளார். மேலும், ‘பழந்தமிழர் உடல்நல மேலாண்மையும் மனவள மருத்துவமும்’ என்ற தலைப்பில் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பல்துறை அறிவும் துறைசார் மேலாண்மையும்’ என்ற தலைப்பிலும் பல்கலைக்கழக நிதிநல்கைக்குழுவின் மூலம் (யு.ஜி.சி) ’தமிழ்ச் செவ்வியல் நூல்களில் புழங்குபொருள் பண்பாடு மற்றும் சொற்களஞ்சியம் உருவாக்குதல்’ என்ற தலைப்பிலும் இருபெரும் திட்டப்பணிகளை நிறைவு செய்துள்ளார். 

        முனைவர் ஆ.மணவழகன் அவர்கள் ஆய்வு மாணவராக இருந்தபொழுது மூதறிஞர் முனைவர் ச.வே.சுப்பிரமணியன் அவர்களின் உலகத் தமிழ்க் கல்வி இயக்க கருத்தரங்கில் கலந்துகொண்டு ’சமூகத் தொலைநோக்கு அன்றும் இன்றும்’ எனும் தலைப்பில் தன் முதல் ஆய்வுக் கட்டுரையை வழங்கினார். அக்கட்டுரை முனைவர் ச.வே.சு., முனைவர் க.ப.அறவாணன் போன்ற தமிழ் அறிஞர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. அதுதொடங்கி தற்போதுவரை தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் எழுபதிற்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை இவர் வழங்கியுள்ளார். 

பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம் அமைப்புப் பணி

       தமிழக அரசின் மூலம், சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம்’ அமைப்புப் பணியில்  சிறப்பான பங்களிப்பினை இவர் ஆற்றியுள்ளார். கருத்துரு, காட்சித் தேர்வு, காட்சி வடிவமைப்பு, நெறியாள்கை, கலைப்பொருள்கள் சேகரிப்பு, வலைதள வடிவமைப்பு முதலானப் பணிகளை இவர் மிகுந்த ஆர்வத்துடன் மேற்கொண்டார். இவருடைய பழந்தமிழர் தொழில்நுட்பம், சங்க இலக்கியத்தில் மேலாண்மை, பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வை ஆகிய நூல்களைக் கருவி நூல்களாகக் கொண்டு இக்காட்சிக்கூடம் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

அசைவூட்டு ஆவணப் படங்கள்

       பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடத்தின் திரையரங்கில் ஒளிபரப்புவதற்கென ‘தமிழர் நீர் மேலாண்மை’, ‘பழந்தமிழர் மருத்துவம்’, பழந்தமிழர் போரியல்’, பழந்தமிழர் ஆட்சித் திறன்’, பழந்தமிழர் வாழ்வியல்’ ஆகிய குறும்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இப்படங்களுக்கு தரவு, எழுத்துரு மற்றும் நெறியாள்கை பணிகளைச் செய்துள்ளார். மேலும், மதுரை, உலகத் தமிழ்ச் சங்கத்தின், ‘சங்க இலக்கியக் காட்சிக்கூட’த்தில் இடம்பெற்றுள்ள சங்க இலக்கியக் காட்சிகளையும் பொருண்மைகளையும் தேர்வு செய்ததில் முக்கியப் பங்களிப்பினை வழங்கியுள்ளார். 

பிற தமிழ்ப் பணிகள்

       சிறப்புப் பொழிவுகளாக, ’கணினித் தமிழ், பல்லூடகத்தில் தமிழ், கணினித் தமிழ் உள்ளீடுகள், இக்கால கல்வி முறைகளின் அணுகுமுறைகள், குறுந்தொகை, தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களில் சமூக மதிப்பீடுகள், தமிழ் அறிவு நுட்பங்கள்- ஆவணமாக்கலும் மீட்டுருவாக்கமும், தமிழின் மேன்மை தொன்மையில் இல்லை; அதன் தொடர்ச்சியில்’ முதலிய 11  சிறப்புப் பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார். 

        அறக்கட்டளை பொறுப்பாளர்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பெருந்தலைவர் காமராசர், தனித்தமிழ் தந்தை மறைமலையடிகளார், வ.அய்.சுப்பிரமணியன், வா.செ.குழந்தைசாமி, முனைவர் மு.தமிழ்க்குடிமகன், கலாநிலையம் டி.என்.சேசாசலம், கிறித்துவமும் தமிழும் ஆகிய பெயர்களில் நிறுவப்பட்டுள்ள அறக்கட்டளைகளுக்கு பொறுப்பாளராக இருந்து சுமார் பத்து சொற்பொழிவுகளை நடத்தியுள்ளார். 

            நூல் மதிப்புரைகள்

     அப்பாவின் பெருவிரல், நீயும் நானும் நாமும், தேவதையல்ல பெண்கள், தமிழ்ச் செவ்வியல் நூல்கள்-தொல்காப்பியம், தமிழ்ச் செவ்வியல் நூல்கள்- எட்டுத்தொகை முதலிய 14 நூல்களுக்கு மதிப்புரை வழங்கியுள்ளார். 

        கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள்

தமிழ்க் கவிதை, சங்க இலக்கியம்–பன்முகப் பார்வை, தமிழக நிகழ்த்துக்கலை மரபுகளும் எடுத்துரைப்பியலும், தமிழர் மரபு கலைகளும் நவீன மாற்றங்களும், இக்கால இலக்கியங்களில் சமூகப் பண்பாட்டுப் பதிவுகள், சங்க இலக்கிய வாழ்வியல் ஆகிய தேசியக் கருத்தரங்குகளை நடத்தியுள்ளார். மேலும், கலைகளும் கலைஞர்களும் (நவீன நாடகம் குறித்தது), தூரிகை அரங்கு-2016 முதலிய ஆறு பயிலரங்குகளை நடத்தியுள்ளார்.      

விருதுகள் மற்றும் சிறப்புகள் 

        குடியரசுத் தலைவர் விருதுஇளம் ஆய்வறிஞர் (2007-2008)

செம்மொழித் தமிழ் அறிவுத் திறத்திற்காகவும் நூற்புலமைக்காகவும் முதன் முதலாக அறிவிக்கப்பட்ட குடியரசுத் தலைவரின் இளம் ஆய்வறிஞர்விருதினைப் பெற்றார். 

        தமிழக அரசின்சிறந்த திறனாய்வு நூல்’ (2013)

தமிழ்ச் செவ்வியல் நூல்களில் அறம்-அறிவியல்-சமூகம்’ என்ற இவருடைய நூலிற்காகத் தமிழக அரசின்சிறந்த திறனாய்வுநூலுக்கானப் பரிசினைப் பெற்றார். 

இளம் படைப்பாளி (2005)

மொழிகள் நடுவம் நிறுவனத்தால் (புவனேஸ்வர்) கவிதைத் துறைக்கானஇளம் படைப்பாளியாக தேர்வுசெய்யப்பட்டார். 

வாழ்நாள் சாதனையாளர் விருது (2016)

நீதியரசர் முனைவர் வள்ளிநாயகம் அவர்களின் கரங்களால் வாழ்நாள் சாதனையாளர் விருதினைப் பெற்றார்.      

நெறியாளர் பணி

       ஆய்வுப் பணிக்கு இணையாக நல்லாசிரியராகவும் இவர் விளங்கிவருபவர். சங்கப் பாடல்களைச் சுவைபட எடுத்துரைப்பதில் வல்லவர். மாணவர்களைத் தன் பிள்ளைகளாகக் கருதி வழிகாட்டும் இயல்பினையுடைவர். இவரது நெறிகாட்டுதலில் 23 மாணவர்கள் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றுள்ளனர். ஒரு மாணவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.  ஒன்பது மாணவர்கள் முனைவர் பட்டம் மேற்கொண்டு வருகின்றனர். 

       எடுத்த செயலைச் செம்மையுறச் செய்ய வேண்டும் என்ற முனைப்பும், தமிழ் மீது  பெரும்பற்றும் உடையவராக முனைவர் ஆ.மணவழகன் அவர்கள் விளங்குவதால் தமிழ்சார் பணிகளை அவர் பல்வேறு இடையூறுகளுக்கு இடையிலும் இடையீடின்றிச் செய்து வருகிறார். தமிழ் உள்ள அளவும் அவர்தம் பணிகள் நிலைத்திருக்கும் என்பது திண்ணம். 

*******

 

 

 

 

வாழ்வியல் பாடத்திட்டம்

முனைவர் ஆ.மணவழகன், இணைப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

(தினமணி, சூலை 29, 2017)

             உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும், பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே’ என்று பாண்டியன் நெடுஞ்செழியனும் ‘யாதானும் நாடாமால் ஊராமால் என்ஒருவன், சாந்துணையும் கல்லாதவாறு’ என்று வள்ளுவரும் ‘கற்கை நன்றே கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்று ஔவையாரும் கல்வியின் தேவையையும் சிறப்பையும் வலியுறுத்துவர். தமிழ்ச் சமூகத்தில் தொன்றுதொட்டு போற்றப்படும் சிறந்த செல்வமாக கல்வி விளங்கி வருகிறது.

             அண்மைக்காலச் சமூகச் செல்நெறிகள் கல்வியை அனைத்திற்குமான அடிப்படை மூலதனமாகக் கட்டமைத்துள்ளன.  மனவளமும் அறிவு வளமும் கல்வியால் ஆகும் என்ற நிலை மாறி, பொருளியலும் அதன்வழி இன்பமுமே கல்வியால் ஆகும் என்ற நிலை தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இன்று, கல்வி ஒரு வேட்டைச் சமூகத்தின் முக்கிய தேடல் பொருளாக மக்கள் மனத்தில் குடிகொண்டுள்ளது. இச்சூழலில், வல்லுநர்கள் பலரை அழைத்து பள்ளிப் பாடத்திட்ட உருவாக்கம் தொடர்பான கருத்துகளை அரசு கேட்டுள்ளது. பாடத்திட்ட உருவாக்கத்தில் அரசும் வல்லுநர் குழுவும் கருத்தில் கொள்ளவேண்டியவை பல உள்ளன.

             பழந்தமிழ்ச் சமூகம் என்றாலே காதல், வீரம், உடன்போக்கு என்பதான புரிதலையே இன்றைய இளந்தலைமுறையினர் கொண்டுள்ளனர். இளந்தலைமுறையினர் மட்டுமல்ல சங்கத் தமிழை அதன் துறைகளோடு உள்வாங்காத யாவருக்குமான புரிதலும் இதுவே. தமிழ்ச் சமூகம் எதை விதைத்ததோ அதை அறுவடை செய்யவில்லை என்பது உண்மையில் முரண்பாடே.

             அறுவை சிகிச்சை மருத்துவம் நம்மிடையே இருந்ததா என்றால் இல்லை, அது மேலைநாட்டு வரவு என்கிறான் மாணவன். நீர் மேலாண்மை உத்திகளும் நெசவுத் தொழில்நுட்பங்களும் கட்டுமான நுட்பங்களும் எங்கிருந்தோ வந்தவை என்பதே அவனுடைய அசைக்கமுடியா நம்பிக்கையாக உள்ளது.  அது மாணவன் தவறு அல்ல, அவனுக்குச் தமிழ்ச் சமூகத்தின் பெரும் அறிவு மரபை அறிமுகம் செய்யாது விட்ட நம் தவறு.

             ஐம்பூதங்களின் தன்மைகள் பற்றியும் உலகத்தின் தோற்றம் பற்றியும் தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் பேசுகின்றன. கோள்நிலைகளைக் கொண்டு உலக நிகழ்வுகளை முன்னுணர்ந்த நுட்பத்தைச் சங்கச் சான்றோர் உணர்த்துகின்றனர். விண்மீன்களும் கோள்களும் தத்தமக்குரிய இடத்தே நிற்க, மழை தப்பாது பொழிந்ததை பதிற்றுப்பத்துப் பதிவு செய்கிறது.            அண்டவெளியிலே குறிப்பிட்ட உயரத்துக்கு மேலே காற்று இருப்பதில்லை என்ற வானியல் உண்மையைப் புறநானூறு அறிவிக்கிறது. இந்த இயற்கை அறிவியலையும் முன்னோர் அறிவையும் இளந்தலைமுறைக்கு கொண்டுசேர்க்காமல் போனது யார் தவறு?

             தாவரங்களுக்கு உயிரும் ஓர் அறிவும் உண்டு என்று முதன்முதலாக அறிவித்த தொல்காப்பியரின் தாவரவியல் கண்டுபிடிப்பை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு மறைத்து வைத்திருக்கப் போகிறோம்? ’நோய் மருங்கு அறிநர்’ என்று மருத்துவனை விளிக்கும் தொல்காப்பியம் தொடங்கி, இயற்கை மருத்துவம், இசை மருத்துவம், நுண்மருத்துவம், அறுவை மருத்துவம், மனவள மருத்துவம் என நீளும் பண்டைத் தமிழனின் மருத்துவ அறிவை இப்போது விட்டால் வேறு எப்போது மாணவனுக்கு அறிமுகப்படுத்துவது?

               ‘சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்’ என்று ஏர்க்குடிகளின் இன்றியமையாமையைச் சுட்டியதோடு, நிலத்தினை ஆழமாகவும், மண் மேல்-கீழ் புரளும்படி பலமுறை நன்கு உழுதலும், நிலத்தை ஆறப்போடுதலும் மண்ணையே எருவாக்கும் நுட்பங்கள் என்று வள்ளுவரும், பூமி மயங்க பலமுறை உழுது விதைக்கவேண்டும் என்று புறநானூறும், கொழு முழுகும் அளவிற்கு ஆழமாக உழவேண்டும் என்று பெரும்பாணாற்றுப்படையும் வேளாண்மை நுட்பங்களை வலியுறுத்துகின்றன.

            மண்ணையும் நீரையும் ஒன்றிணைப்போர் உடலையும் உயிரையும் படைத்தவராவார் என்ற புறநானூற்றுச் சான்றோனின் நீர் மேலாண்மைச் சிந்தனை உலகம் வியக்கக்கூடியது. ஓடிவரும் மழைநீரைத் தேக்கிவைத்து வேளாண்மைக்குப் பயன்படுத்த பாறைகளையும் சிறிய குவடுகளையும் இணைத்து, எட்டாம்நாள் பிறைநிலவைப் போன்ற வடிவத்தில் கட்டப்பட்ட தடுப்பணையை இலக்கியம் காட்டுகிறது. நீர்த்தேக்க கட்டுமான நுட்பத்தில் வளைந்த வடிவிலான தடுப்பணை என்பது தமிழன் உலகிற்கு வழங்கிய கட்டுமான நுட்பமாகும்.

       பழந்தமிழர் கட்டுமான நுட்பத்தில் நீர்நிலைகளோடு குடியிருப்புகளின் வடிவமைப்புகளும் நுண்மை வாய்ந்தவை. பலமாடிக் கட்டடங்களையும் பருவநிலைக்கு ஏற்ப உறையும் தளங்களையும் நெடுநல்வாடை, சிலப்பதிகாரம் முதலான இலக்கியங்கள் கண்முன் நிறுத்துகின்றன. குடியிருப்புகளில் சுருங்கைத் தூம்பு எனப்படும் கழிவுநீர் போக்குக் குழாய்களும் அமைக்கப்பட்டிருந்தது தமிழரின் மரபுத் தொழில்நுட்பத்திற்கும் நாகரிகத்திற்கும் சான்று. 

             பட்டிலும் பருத்தியிலும் நெய்யப்பட்ட உடைகள் நூலிழைகளின் இடைவெளியை அறிய முடியாத நுட்பத்திலும், பல வண்ணங்களிலும், பூ வேலைப்பாடுகள் நிறைந்தும், பாம்பின் தோல், பாலாடை, மூங்கிலின் உள்தோல், அருவியின் சாரல் எனப் பல்வேறு தன்மைகளில் மிக்கத் தொழில்நுட்பங்களோடு வடிவமைக்கப்பட்டிருந்ததைத் தமிழின் செவ்விலக்கியங்கள் காட்டுகின்றன. சிறல் எனும் மீன்கொத்திப் பறவை நீரில் மூழ்கி மேலெழும்போது அதன் அலகில் மீன் மாட்டி இருபுறமும் தொங்குவதைப் போல, மார்பில் வெட்டுப்பட்ட வீரனின் காயத்தைத் தைக்கும் ஊசியின் தோற்றம் இருப்பதாகப் பதிற்றுப்பத்து பழந்தமிழரின் அறுவை சிகிச்சை மருத்துவ நுட்பத்தைப் படம்பிடிக்கிறது.   

            பண்டை இலக்கியங்களில் பொதிந்துகிடக்கிற தமிழரின் மரபு அறிவு நுட்பங்கள் அனைத்தும் யாருக்காக? இளங்கலையிலும் முதுகலையிலும் தமிழை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்து தமிழியல் ஆய்வில் ஈடுபடுவோருக்கு மட்டுந்தானா? இத்தனை ஆண்டுகளாக அப்படியொரு நிலையில்தான் நம் பாடத்திட்டம் இயங்குகிறது என்பது வேதனையான உண்மை. தமிழரின் அறச்சிந்தனைகளை, மரபு அறிவு நுட்பங்களை, வாழ்வியல் விழுமியங்களை, மரபுக் கலைகளைப் பள்ளி மாணவர்களுக்கும் கொண்டு சேர்ப்பதும், அறிமுகம் செய்வதும் நம் கடமையல்லவா?  

             செவ்விலக்கியங்களில் ஒரு தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அக்காலப் பாடத்திட்ட உருவாக்கமே. அத்தொகுப்பில் தமிழரின் அறம்-அறிவியல்-சமூகம் என அனைத்துக் கூறுகளும் பொதிந்துள்ளன.  இவற்றிலிருந்து தேவையானவற்றைச் சாறுபிழிந்து மாணவனுக்குக் கொடுக்க முடியும். ‘வடக்குத் திசையோடு, கோணத் திசைகளிலும் தலைவைத்துப் படுக்கக்கூடாது’, ‘இரவில் மரங்களின் அடியில் படுத்துறங்கக் கூடாது’, ‘இனிப்புச் சுவையுள்ள உணவை முதலிலும், கசப்புச் சுவையுள்ள உணவை இறுதியிலும், மற்ற சுவையுள்ள உணவுகளை இடையிலும் உண்ணுதல் வேண்டும்’ என்பன போன்ற மாணவர்களுக்கான வாழ்வியல் அடிப்படைகளைக் கீழ்க்கணக்கு நூல்கள் மிக நுட்பமாகப் பதிவுசெய்துள்ளன. குறிப்பாக, வாழ்வியல் நெருக்கடிகளை எதார்த்தமாக எதிர்கொள்ளத் தேவையான அத்தனைக் கூறுகளையும் நம் இலக்கியங்கள் நிரம்பவே கொண்டுள்ளன. தொடக்கப் பள்ளி பாடத்திலிருந்தே இவற்றை முறைப்படுத்தி வழங்க முடியும்.

             உலகின் தொன்மை இனமாம் தமிழினத்தின் தோற்றமும் வரலாறும், செம்மொழியாம் தமிழின் சிறப்புகள், மரபு இலக்கியங்களில் காணலாகும் அறச் சிந்தனைகள், மனிதநேயக் கூறுகள், உளவியல் சிந்தனைகள், மரபு அறிவியல் நுட்பங்கள், பல்துறை மேலாண்மை, கலைப் பண்பாட்டுக் கூறுகள், ஆட்சித்திறன் போன்ற விழுமியங்களைப் பாடத்திட்டத்தில் இடம்பெறச் செய்தல் வேண்டும். செய்திகளின் தன்மைகள், மாணவர்களின் வயது மற்றும் புரிந்துணரும் ஆற்றல் போன்றவற்றிற்கேற்ப மேற்கண்டவற்றை நிரல்படுத்த முடியும். மேலும், இவற்றை எளிய வடிவிலும் படக்கதைகளாகவும் சுவைபட வழங்க முடியும். தேர்வுகளை எதிர்கொள்ளும் பாடத்திட்டத்தோடு வாழ்வியலை எதிர்கொள்ளும் பாடத்திட்டமும் வேண்டும் என்பதே நம் விழைவு. மனவளமும் அறிவு வளமும் ஒருங்கே பெற்ற இளைய சமூகத்தை உருவாக்க அதுவே வழிவகுக்கும்.

 

*****

வரி வருவாயும் அரசு ஆளுமையும்

 ஆ.மணவழகன், இணைப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 113. சூலை 7, 2016


 நாடென்ப நாடா வளத்தன நாடல்ல

                                              நாட வளந்தரு நாடு

என்று, நல்ல நாட்டிற்கான இலணக்கத்தை வரையறுக்கிற உலகப் பொதுமறை, நல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும் எந்தப் பயனும் இல்லை என்றும் அறிவுறுத்துகிறது.  ஒரு நாட்டின் தலைமையானது சமூகப் பொருளாதாரம், மக்கள் வளம், அடிப்படைக் கட்டமைப்பு, கல்வி, நீதி, சமத்துவம், இயற்கை வளம், பாதுகாப்பு, தனிமனித உரிமை மற்றும் மேப்பாடு போன்றவற்றில் காட்டும் அணுகுமுறையே அந்நாட்டின் வளமைக்கும் வளர்சிக்கும் வழிவகுக்கிறது. 

            நாட்டின் அரசு தலைசிறந்த நல்லமைப்புடனும் நீதி நெறிகளுடனும் தகுந்த முடிவுகளை எடுக்கும் ஆற்றலுடைய ஒரு நிறுவனமாக இருத்தல் வேண்டும். அஃதாவது, நாடும் அரசும் மேன்மையுற்ற சமுதாயத்தை உருவாக்கி மக்களை உயர்த்துதல் வேண்டும் என்பது சமூகவியலாளர் கருத்து. பழந்தமிழ்ச் சமூகத்தில் மக்களுக்கு மன்னன் உயிராகவும் (புறம்.186) மன்னனுக்கு மக்கள் உயிராகவும் (மணி.7) மதிக்கப்பெற்றனர். எனவே, பிறரால் விளையும் கேட்டைவிட ஆள்பவரின் தீச்செயலால் மக்கள் அடையும் துன்பம் கொடுமையானது என்றும் ஆள்பவர் சரியில்லை என்றால் அச்சமூகம்,

                        ஆள்பவர் கலக்குற அலைபெற்ற நாடுபோல் (கலி.5)

துன்பமுறும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. குடிகள் அடியும் துன்பத்திற்குக் முதன்மைக் காரணமாக முறையற்ற வரிவசூல் அமைகிறது. 

            நாட்டில் குடிமக்களை வருத்தி வரி வசூலித்தல் செங்கோன்மையன்று. அவ்வகை அரசு கொடுங்கோன்மை அரசாக அக்காலத்தில் ஒதுக்கப்பட்டது. அதனால்தான் சிலப்பதிகாரத்தில், மாடலமறையோனின் அறிவுரையால் இனி, ‘குடிமக்களிடம் வரிவசூலிக்க வேண்டாம், நம் எல்லைக்கு உட்பட்டிருக்கும் சிற்றரசுகளும் நமக்குத் திறை எதுவும் செலுத்த வேண்டாம், இதை இன்றே எல்லோருக்கும் தெரிவியுங்கள்’ என்று சேரன் செங்குட்டுவன் உத்தரவிடுகிறான். வரையறையின்றிப் பெறப்படும் வரியால், அரசின் கையிருப்பு உயருமே அன்றி, மக்களின் வளம் பெருகாது என்பது தொன்மைச் சான்றோரின் தொலைநோக்கு.

            அரசுக்குரிய வருவாய் வழிகளைக் சுட்டுமிடத்து,

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்

தெருபொருளும் வேந்தன் பொருள் (குறள்.756) 

என்கிறார் வள்ளுவர். இதில் உல்கு என்பது வரி வருவாயைக் குறிப்பது. ஆயினும், வரிவருவாய் மக்களின் வளமை அறிந்து, சுமையாக இல்லாமல் இயல்பாக மேற்கொள்ளும் ஒன்றாக அமையவேண்டும்.  மாறாக, மக்களைத் துன்புறுத்தி அடித்துப் பிடுங்கும் கள்வரைப் போல இருத்தல் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இதைத்தான்,

                        வேலோடு நின்றான் இடு என்றது போலும் 
                   கோலொடு நின்றான் இரவு (குறள்552)

என்கிறார் வள்ளுவர். வரிவிதிப்பு மக்களின் வருவாய்க்கு உட்பட்டதாக அமையாமல், குடிமக்களைத் துன்புறுத்தி மிகுதியும் பெறுவதாக இருந்தால், வலிந்து பெறும் வரி அரசுக்கு தீராத பகையாக முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டது(புறம்.75). 

            மரம்சா மருந்தும் கொள்ளார் மாந்தர்

          உரம் சாச் செய்யார் உயர்தவம் வளம் கெடப்

          பொன்னும் கொள்ளார் மன்னர் (நற். 226:1-3)

என்பார் கணிபுன்குன்றனார். இதில், மருந்துமரம் என்பதற்காக வேரோடு பிடுங்கி பயன்படுத்துதலும், வரம் கிடைக்க உயிர் நீங்கமட்டும் தவம் செய்தலும் எப்படித் தீதாகுமோ அதைப்போல, மக்களின் வளம் கெட அவர்களை வருத்தி வரிவசூல் செய்தலும் மிகுந்து துன்பத்தைத் தரும் என்கிறார்.  

            அதேபோல,

                    மூத்தோர் மூத்தோர்க் கூற்றப் உய்த்தெனப்

                   பால்தர வந்த பழவிறல் தாயம்

                   எய்தனம் ஆயின் எய்தினம் சிறப்புஎனக்

                   குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச்

                   சிறியோன் பெறின்அதி சிறந்தன்று மன்னே (புறம்.75) 

என்பதில், சிறப்புக்குரிய அரசுரிமையை அடைந்துவிட்டோம் என எண்ணிக்கொண்டு, தம் குடிமக்களிடம் வரியை வேண்டி இரக்கும் அரசன் சுமக்க இயலாத துன்பத்திற்கு ஆளாவான் என்றும், அப்படிப்பட்டவன் ‘கூரில் ஆண்மை சிறியோன்’(புறம்.75) என்றும் சோழன் நலங்கிள்ளி சினம்கொள்கிறான். 

            மேலும்,

                        காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே

                   …… …………… ……….. ……….

                   தானும் உண்ணான் உலமும் கெடுமே (புறம்184)

என்ற புறநானூற்றுப் பாடலில், முறையற்ற வரிவசூல் செய்யும் அரசைக் குறிப்பிடுமிடத்து,  ‘ஒரு மா என்னும் அளவைவிடக் குறைந்த நிலமேயாயினும், விளைந்த நெல்லைக் கொண்டுவந்து கவளமாக்கி யானைக்குக் கொடுத்தால் அது பலநாட்களுக்கு உணவாகும். நூறு செய் அளவுடைய பெரிய நிலமாயினும் அதனுள் யானை தானே தனியாகப் புகுந்து உண்ணத் தொடங்கினால், யானையின் வாயினுள் புகும் நெல்லைக் காட்டிலும் கால்களில் மிதிப்பட்டு அழிவது மிகுதியாகும். அதுபோல, அறிவுடைய மன்னன் ஒருவன் குடிமக்களிடமிருந்து வரி வாங்கும் நெறியை அறிந்து வாங்குவானானால், அவனது நாட்டில் வாழும் குடிமக்கள் அவனுக்கு மிகுதியும் பொருளைத் தந்து தாங்களும் தழைப்பர். மன்னன் அந்நெறியை அறியும் அறிவற்றவனாகி, குடிகளைத் துன்புறுத்தி வரிவசூல் செய்வானாயின் அந்த யானை புகுந்த விளைநிலம்போல, தானும் உண்ணப் பெறான்; உலகும் அழியும்’ என்று எச்சரிக்கிறார் பிசிராந்தையார். 

எனவேதான்,

அரசியல் பிழையாது அறநெறி காட்டிப்

பெரியோர் சென்ற அடிவழிப் பிழையாது (மதுரைக்.191-192) 

ஆட்சிசெய்த அரசனை உலகம் சங்கச் சமூகம் போற்றியது. அதனால்தான், ‘உலகம் கொள்ளும் அளவிற்குச் செல்வம் கிடைக்கப்பெறினும் பழியோடு வரும் செல்வம் வேண்டாமெனஅக்காலத்தில் விலக்கப்பட்டது. ஆம். பேரரசு, சிற்றரசு என்பதெல்லாம் மக்கள் விரும்பும் நல்லரசு என்பதிலேயே அளவிடப்படுகிறது எப்போதும்.   


புதன், 7 மார்ச், 2018

வாழ்வியல் பாடத்திட்டம் தேவை - ஆ.மணவழகன்




ஆ.மணவழகன், தினமணி 29.7.17

பழந்தமிழக மகளிர் வீரம் - ஆ.மணவழகன்



விதைத்தலும் அறுவடை செய்தலும் வீரத்திற்கும் பொருந்தும். வீரத்தையும் மண் பற்றையும் விதைப்பதில் பெண்களே கைதேர்ந்த உழவர்கள். சங்க இலக்கியத் தாயொருத்தியின் மற உணர்வையும் மண் பற்றையும் பெண்பாற் புலவர் ஒக்கூர் மாசாத்தியார் நயம்பட உரைக்கிறார்.

‘முன்நாள் நடந்த போரில், இவளுடைய தந்தை போர்க்களத்தில் யானையைக் கொன்று தானும் வீழ்ந்து இறந்தான். நேற்று நடந்த போரில், இவளுடைய கணவன் பகைவர்கள் பெரும் ஆநிரைகளைக் கவர்ந்து செல்லாமல் தடுத்துநின்று போரிட்டு வீரமரணமடைந்தான். இன்றும் போருக்கு எழுமாறு வீரரை அழைக்கும் முரசின் ஒலி கேட்கிறது. இவளோ அறிவு மயங்கி, உறவென்று தனக்கிருக்கும் ஒரே மகனையும் போர்க்கோலம் பூணச்செய்து, கையிலே வேலைக்கொடுத்துப் போருக்கு அனுப்புகிறாள். இவள் துணிவு கொடியது. இந்தக் கொடிய முடிவினை எடுத்த இவளது சிந்தை கெடுக!

கெடுக சிந்தை கடிதுஇவள் துணிவே
------- ------------------- ---------------
ஒருமகன் அல்லது இல்லோள்
செருமுக நோக்கிச் செல்க என விடுமே! (புறம்.279)


- முனைவர் ஆ.மணவழகன்









உலக மருத்துவத்தின் முன்னோடி தமிழர் மருத்துவம் - முனைவர் ஆ.மணவழகன்


தினமணி, 19.02.2018

புதன், 5 ஜூலை, 2017

அரச முறைமை - வரிவிதிப்பு


நாட்டில் குடிமக்களை வருத்தி வரி வசூலித்தல் செங்கோன்மையன்று. அவ்வகை அரசு கொடுங்கோன்மை அரசாக அக்காலத்தில் ஒதுக்கப்பட்டது. அதனால்தான் சிலப்பதிகாரத்தில், மாடலமறையோனின் அறிவுரையால் இனி, ‘குடிமக்களிடம் வரிவசூலிக்க வேண்டாம், நம் எல்லைக்கு உட்பட்டிருக்கும் சிற்றரசுகளும் நமக்குத் திறை எதுவும் செலுத்த வேண்டாம், இதை இன்றே எல்லோருக்கும் தெரிவியுங்கள்’ என்று சிலம்பில் சேரன் செங்குட்டுவன் உத்தரவிடுகிறான். வரையறையின்றிப் பெறப்படும் வரியால், அரசின் கையிருப்பு உயருமே அன்றி, மக்களின் வளம் பெருகாது என்பது தொன்மைச் சான்றோரின் தொலைநோக்கு.

            வரிவிதிப்பு மக்களின் வருவாய்க்கு உட்பட்டதாக அமைதல் வேண்டுமே தவிர, குடிமக்களைத் துன்புறுத்தி மிகுதியும் பெறுவதாக இருத்தல் கூடாது. வலிந்து பெறும் வரி அரசுக்குத் தீராத பகையாக முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டது(புறம்.75).
            மரம்சா மருந்தும் கொள்ளார் மாந்தர்
          உரம் சாச் செய்யார் உயர்தவம் வளம் கெடப்
          பொன்னும் கொள்ளார் மன்னர் (நற். 226:1-3)
என்பார் கணிபுன்குன்றனார். இதில், மருந்துமரம் என்பதற்காக வேரோடு பிடுங்கி பயன்படுத்துதலும், வரம் கிடைக்க உயிர் நீங்கமட்டும் தவம் செய்தலும் எப்படித் தீதாகுமோ அதைப்போல, மக்களின் வளம் கெட அவர்களை வருத்தி வரிவசூல் செய்தலும் மிகுந்து துன்பத்தைத் தரும் என்கிறார்.  அதேபோல, சிறப்புக்குரிய அரசுரிமையை அடைந்துவிட்டோம் என எண்ணிக்கொண்டு, தம் குடிமக்களிடம் வரியை வேண்டி இரக்கும் அரசன் சுமக்க இயலாத துன்பத்திற்கு ஆளாவான் என்றும், அப்படிப்பட்டவன் ‘கூரில் ஆண்மை சிறியோன்’(புறம்.75) என்றும் சோழன் நலங்கிள்ளி சினம்கொள்கிறான்.

            முறையற்ற வரிவசூல் செய்யும் அரசை எச்சரிக்கும் புலவர் பிசிராந்தையாரோ, ஒரு மா என்னும் அளவைவிடக் குறைந்த நிலமேயாயினும், விளைந்த நெல்லைக் கொண்டுவந்து கவளமாக்கி யானைக்குக் கொடுத்தால் அது பலநாட்களுக்கு உணவாகும். நூறு செய் அளவுடைய பெரிய நிலமாயினும் அதனுள் யானை தானே தனியாகப் புகுந்து உண்ணத் தொடங்கினால், யானையின் வாயினுள் புகும் நெல்லைக் காட்டிலும் கால்களில் மிதிப்பட்டு அழிவது மிகுதியாகும். அதுபோல, அறிவுடைய மன்னன் ஒருவன் குடிமக்களிடமிருந்து வரி வாங்கும் நெறியை அறிந்து வாங்குவானானால், அவனது நாட்டில் வாழும் குடிமக்கள் அவனுக்கு மிகுதியும் பொருளைத் தந்து தாங்களும் தழைப்பர். மன்னன் அந்நெறியை அறியும் அறிவற்றவனாகி, குடிகளைத் துன்புருத்தி வரிவசூல் செய்வானாயின் அந்த யானை புகுந்த விளைநிலம்போல, தானும் உண்ணப் பெறான்; உலகும் அழியும் (புறம்.184) என்று எச்சரிக்கிறார்.

            அதனால்தான், ‘உலகம் கொள்ளும் அளவிற்குச் செல்வம் கிடைக்கப்பெறினும் பழியோடு வரும் செல்வம் வேண்டாமென’ விலக்கப்பட்டது. ஆம். பேரரசு, சிற்றரசு என்பதெல்லாம் மக்கள் விரும்பும் நல்லரசு என்பதிலேயே அளவிடப்படுகிறது.  

-       குறிப்பு நூல்: தொலைநோக்கு, முனைவர் ஆ.மணவழகன்.