ஆ.மணவழகன், விரிவுரையாளர், தமிழ்த்துறை, எஸ்.ஆர்.எம். கலை அறிவியல் கல்லூரி, காட்டாங்கொளத்தூர், சென்னை- 603 203.
(தமிழியல் - பன்னாட்டு ஆய்விதழ், ஜூன், 2007)
தமிழ் மொழியின் கவிதை வரலாறு நீண்டதொரு மரபினை உடையது. தமிழ்க்கவிதைகள் காலந்தோறும் பொருள், வடிவம், வெளியீட்டு உத்தி முறைகள் ஆகியவற்றில் மாற்றத்திற்கு உட்பட்டு வந்துள்ளன/ வருகின்றன. இம்மாற்றங்கள் கவிஞனின் காலச்சூழலுக்கும், சிந்தனை ஓட்டத்திற்கும், மொழி ஆளுகைக்கும் உட்பட்டு நிகழ்கின்றன. கவிதைகள் பொதுவாக மரபிலக்கணக் கோட்பாட்டிற்கு உட்பட்டு எழுதப்படுபவை மற்றும் இலக்கண வரையறையின்றி எழுதப்படுபவை என இருவகையில் அடங்குகின்றன. இவற்றுள், பின்னது புதுக்கவிதை என அழைக்கப்படுகின்றது. சிந்தனைகளைக் கவிதையாக்க எவ்வகைக் கட்டுப்பாடுகளும் தேவையில்லை என்பது இவ்வகைக் கவிஞர்களின் கருத்தாக அமைகிறது.
பொதுவாக, தமிழ்க் கவிதையின் பயணத்தை நோக்கும்போது, காலச்சூழலுக்கும் சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கும் ஏற்ப, ஏற்ற கருத்துகளைப் பொருண்மைகளாகக் கொண்டு வளர்ந்து வந்துள்ளது எனலாம். சங்க காலத்தில் காதல், வீரம், போர், கொடை, விருந்தோம்பல் போன்ற பொருண்மைகளை முதன்மையாகக் கொண்டு கவிதைகள் எழுந்தன. அடுத்த காலகட்டத்தில் அற இலக்கியங்கள் தோன்றலாயின. அதனையடுத்துப் பக்தி தலைமை தாங்கியது. இதனைத் தொடர்ந்து, சிற்றிலக்கியங்கள் பல்வேறு பொருண்மைகளால் உருவாயின. இக்காலகட்டம் வரையிலான கவிதை கட்டமைப்பு ஒரு இலக்கண வரம்பிற்குட்பட்டே அமைந்திருந்தது. இருபதாம் நூற்றாண்டில், பாரதிக்குப் பின் கவிதை ஒரு புதிய திசையில் தன் பயணத்தைத் தொடங்கியது. இவரில் தொடங்கிய புதுக்கவிதை வடிவம் தேசீயம், சமூக விடுதலை, தனிமனித முன்னேற்றம், பெண்கள் முன்னேற்றம் போன்றவற்றைப் பொருண்மைகளாக ஏற்றது. இதன் தொடர்ச்சி பாரதி பரம்பரை, பாரதிதாசன் பரம்பரை என்று இன்றுவரை நீள்கிறது எனலாம்.
இதற்கிடையில், எண்பதுகளில் ‘மிக உயர்ந்த சொற்களை மிகச் சீரிய முறையால் உள்ளடக்கியது கவிதை’ (வாழ்வியல் களஞ்சியம், ப.886) என்ற கோலரிட்சின் கோட்பாட்டைப் பின்தள்ளி, சொற்களுக்கு முக்கியத்துவம் தராமல், ‘கவிதை வாழ்க்கையின் திறனாய்வு’ (கவிதைக் கலை, பாரதி தமிழ்ச்சங்க வௌ¢ளிவிழா வெளியீடு, ப.15) என்ற செல்லியின் கோட்பாட்டிற்கும், ‘கவிதை வாழ்வோடு தொடர்புடையது’ (கவிதைக் கலை, பாரதி தமிழ்ச்சங்க வௌ¢ளிவிழா வெளியீடு, ப.32) என்ற ஆர்னால்டின் முடிவிற்கும் ஏற்ப, மக்களை, மக்களின் மொழிகளால் பேச ஆரம்பித்தது கவிதை. ‘வாழ்வு பற்றிய ஆய்வே அது’ என்ற கருத்தின் அடிப்படையில் நோக்கும் போது, உயர்ந்த சொற்கள் தாழ்ந்த சொற்கள் என்ற பாகுபாடு புறந்தள்ளப்பட்டு, ‘மக்களின் வாழ்வினை அவர்களின் மொழியில் பதிவு செய்தல்’ என்பது முன்னிறுத்தப்பட்டது. இவ்வகைக் கவிதைகள் ‘மண்சார்ந்த கவிதைகள்’ என்ற அடையாளத்தோடு இப்போது பரவலாக எழுதப்படுகின்றன. மக்களின் வாழ்வினைப் பதிவுசெய்வதில் சங்க இலக்கியம் முதன்மையானதாகத் திகழ்கிறது என்றாலும் அவை, கற்றறிந்தோருக்குரிய புலமை மொழியில் பதிவுசெய்யப்பட்டது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
மண்சார்ந்த கவிதை வடிவத்தினைத் தமிழ்ப் புதுக்கவிதை வரலாற்றில் தொடங்கி, தொடர்ந்தவராக கவிஞர் பழமலய் இனங்காணப்படுகிறார். இவ்வகைப் பதிவினைக் குறித்து அவர் கூறுமிடத்து ‘நான் இங்கே அனுபவங்கள் சிலவற்றையும் ஆள்கள் சிலரையும் வரைந்துள்ளேன். அனுபவங்களைக் கவிதைகளாக உணர்கிற நான், ஆள்களையும் கவிதைகளாகவே உணர்கிறேன். எனக்கு ஆள்களும் அனுபவங்களாகவே உள்ளார்கள்’ என்கிறார்(சனங்களின் கதை, ப.10). மேலும், ‘சிற்றூர்களும், சிறு விவசாயிகளும் என் நெஞ்சுக்கு நெருக்கமானவர்கள். நான் என்னை எழுதுவது என்பது அவர்களை எழுதுவது, அவர்களை எழுதுவது என்பது என்னை எழுதுவது’ (நானும் என் கவிதையும், ப.119) என்று, தன் கவிதை பொருண்மையையும் சுட்டுகிறார்.
அவரின் ‘சனங்களின் கதை’ கவிதைத் தொகுப்பின் வெற்றியைக் குறிப்பிடும் இடத்து, ‘சனங்களின் கதைத் தொகுதியின் வெற்றியைப் பாரதிராசா மற்றும் இளையராசா ஆகியோரின் வெற்றிகளோடு சேர்த்துப் பார்க்கலாம். அக்காலத்தில் (80 களில்), தமிழ்ப் புதுக்கவிதை உலகம் - படிமம், குறியீடு, இருண்மை என்று ஒரு தேக்கத்தில் இருந்ததும் பிறிதொருகாரணம்’ (நானும் என் கவிதையும், ப.117) என்கிறார். இங்கு, ‘சனங்களின் கதை, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வாழ்ந்த குழுமூர் மக்களின் வாழ்வுமுறை பற்றிய ஒரு கள ஆய்வு போல விளங்குகிறது’ (பழமலயின் கவிதைகள், க. ஜெயந்தி, ப.3) என்ற மதிப்பீடும் இவ்வகைக் கவிதைத் தன்மையை விளக்குவதைக் காணலாம்.
இவ்வகை மொழி நடையை, வடிவத்தினைப் பயன்படுத்தி எழுதத் தொடங்கிய நாட்களில் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்துக் குறிப்பிடுமிடத்து, இவை கவிதை என்று தன்னால் முடிவிற்கு வரவியலா தொடக்கநிலை தயக்கத்தையும், தன்னைச் சார்ந்தவர்களின் எள்ளலையும் பதிவு செய்துள்ளார். ஆனால், இவ்வகைக் கவிதை நடை எண்பதுகளுக்குப் பின் எழுதத் தொடங்கிய புதுக்கவிஞர் பலரின் கவிதைகளிலும், அதற்கு முன்பு வேறு வடிவத்தினைக் கையாண்டுவந்த கவிஞர்களுள் சிலரிடமும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதைக் காணமுடிகிறது. இவ்வகைக் கவிதைகளுக்கானத் தேவைகளைக் குறித்து கூறுமிடத்து, ‘இந்தக் கவிதைகள் என்னை எனக்கும், என் மக்களை அவர்களுக்கும் உணர்த்துபவை. நம் இழிவுகளுக்கான காரணங்களைக் கண்டு பிடிக்கவும், போராடவும் உந்துபவை. இந்தச் சமூக அவசியங்கள் தாம் இவற்றை வெளியிடும் துணிவை எனக்குத் தருபவை’ (சனங்களின் கதை, ப.12) என்கிறார் பழமலய்.
பழமலயின் இத்தகு கவிதை கட்டமைப்புகளாக, 1. சனங்களின் கதை (1988), 2. குரோட்டன்களோடு கொஞ்ச நேரம் (1991), இவர்கள் வாழ்ந்தது (1994), இன்றும் என்றும் (1998), முன்நிலவுக் காலம் (1999), புறநகர் வீடு (2001), வேறு ஒரு சூரியன் (2002) ஆகிய தொகுப்புகள் அறியப்படுகின்றன.
இவ்வகைக் கவிதை நடை முழுத்தொகுப்பாகவும், தொகுப்பில் சில கவிதைகளாகவும் அடையாளப்படுகின்றன. குறிப்பாக, என்.டி.ராஜ்குமார் (தெறி, கல் விளக்கு, ஒடக்கு, காட்டாளன்), பச்சியப்பன் (உனக்குப் பிறகான நாட்களில், கல்லால மரம், மழை பூத்த முந்தாணை), கண்மணி குணசேகரன் (காட்டின் பாடல்), அழகிய பெரியவன் (அரூப நஞ்சு), வித்யா சங்கர் (சன்னதம்), கோவி லெனின் (வேப்பங் காற்று), பாரி கபிலன் (களத்து மேடு) வே. ராமசாமி (ஏலேய்), யுகபாரதி (மனப்பத்தாயம், பஞ்சாரம்), இளம்பிறை (நிசப்தம், முதல் மனுசி), தேன்மொழி (இசை இல்லாத இலை இல்லை), வைகைச்செல்வி (அம்மி), தமிழச்சி (எஞ்சோட்டுப்பெண்) போன்றோர் தம் கவிதைகளில், இக்கவிதை நடை அடையாளப்படுவதைக் காணமுடிகிறது.
கவிதைத் தன்மை
மேற்கண்ட மண்சார்ந்த கவிஞர்களுள், ‘அப்துல் ரகுமான், தமிழன்பன், இன்குலாப், வைரமுத்து, அறிவுமதி ஆகியோரால் கவிதை வாசிப்பில் நுழைந்து, பழமலயின் ‘சனங்களின் கதை’யால் கவிதை நடையையும், கருவையும், களத்தையும் தேர்ந்தெடுத்துக்கொண்டதாகக்’ கூறும் கவிஞர் பச்சியப்பனின் (நேர்காணல் 13.07.06) மேற்குறிப்பிட்ட மூன்று கவிதைத் தொகுப்புகளின் வழி, மண்சார்ந்த கவிதைகளின் தன்மைகளைக் காணலாம்.
பச்சியப்பன், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அய்யம்பாளையம் என்ற கிராமத்துக்காரர். இவரின் கவிதைகள், இவர் சார்ந்த மண்ணையும் மக்களையும் அவர்தம் இயல்புகளையும் நுணுக்கமாகப் பதிவு செய்கின்றன. சமகாலச் சூழலைப் பதிவுசெய்யும் கவிஞனின் கடமையோடு, இடம்பெயர்தலில் இடர்ப்பாடுகளையும், வேரடி மண்ணோடு வந்தும் நகரத்தில் வேரூன்றி, பச்சைகட்ட முடியா வாழ்வையும் எதார்த்த மொழிகளில் பதிவுசெய்வது இவரது கவிதைப் பொருண்மைகளாக அமைகின்றன.
‘வயல் இருந்த இடத்தில் குரோட்டன்ஸ் செடிகள் படர்ந்த மொட்டைமாடிகள், கிணறு இருந்த இடத்தில் கழிவு நீர்த்தொட்டி, கிணற்று மேடிருந்த இடத்தில் கண்ணாடிச் சில்லுகள் பதித்த வீடு என்பவற்றைக் காட்டி,
துடிப்பு நிறுத்துவதான/ கீச்சுக்குரல் கொண்டு குரைக்கும்/ முடிசெழித்த அல்சேஷனைக்/ கட்டிவைத்திருக்கிறாயே/ இங்குதான்/ என் காலத்தைச் சுமந்திழுத்துப்போன/ உழவு மாடுகளைக் கட்டிவைத்திருந்தேன் (உனக்குப் பிறகான நாட்களில், ப.103)
என்று, இருந்ததையும் இன்று இருப்பதையும் சுட்டி, கிராமத்தின் வாழ்வுமுறை மாற்றத்தினையும், விளைநிலங்களின் அழிவையும் பதிவு செய்கிறார். அதேபோல, மானாவாரி நிலங்களில் மேற்கொள்ளப்பட்ட வேளாண்மையும், இன்று அதனுடைய நிலையையும் சுட்டி, அந்நிலங்களின் தன்மை குறித்து,
சுழன்றடித்த கோடை மழையின்/ விடியல் பொழுதுகளில்/ பொன்னேர் தீண்டலின்போது/ கண்விழிப்பவை அந்நிலங்கள்
என்றும், அவை, கடலை, கீரை, கம்பு, காராமணி, மொச்சை, சோளம் என்று விளைந்தவை. ஆனால் இன்று,
அதெல்லாம் ஒருகாலம்/ இப்போதெல்லாம் அவை சுடுகாடுகள் போலாகி/ வௌ¢ளெருக்குப் புதர்களுக்கிடையில்/ மண்டை யோடுகள் போல்/ ‘பிளாட்’ கற்கள் நிற்கின்றன
என்றும்,
சுழன்றடிக்கும் / கோடை மழை வௌ¢ளம் / இப்போதும் அதனூடே போகிறது அழுக்கு சுமந்த / ஓர் அநாதைப் பைத்தியத்தைப் போல (கல்லால மரம், ப.5)
என்றும் காட்டப்படுகின்றன. இங்கு, விளைநிலங்களின்அழிவு பொருண்மையாகிறது. மழைப் பொழிவும், விளைவும் நன்றாயிருந்தால் வேளாண்மக்களின் வாழ்வும், நாட்டின் வளர்ச்சியும் நன்றாய் இருக்கும். வானம் பொய்த்தால் வேளாண்குடியின் வாழ்வும் பொய்க்கும். வறுமை, மக்களை வாழ்வு தேடி பட்டினம் விரட்டுவதை,
ஊர் கூடி நாற்று நட்டு/ ஊர்கூடி அம்பாரம் குவித்த/ அவளின் பூமி/ மேகம் காணாத/ பாலைவெளி ஆயிற்று / அவள் வீட்டு வழியே/ நீங்கள் போனால்/ கேட்கவும் கூடும்/ அவள் பிள்ளைக்கு/ நீங்கள் இருக்கும் ஊரின் ஓட்டலில் ஒரு வேலை (மழை பூத்த முந்தாணை, ப.29)
என்ற பதிவு காட்டுகிறது. ஊருக்கே உலையரிசி கொடுத்தோர் வாழ்வு, இன்று வயிற்றுக்கு ஒருவேளைசோறு கிடைத்தால் போதுமென்றானதை மேற்கண்ட கவிதை அடிகள் காட்டுகின்றன.
ஒரு மத்தியான வேளையில்/ தூசுகள் எழுப்பியபடி வந்த/ லாரியொன்று/ சுமந்து வந்த/ கப்பிகளைக் கொட்டி/ பள்ளத்தை நிரப்பிவிட்டுச் சென்றது பின்பொருநாள்/ குழிபோட்டுக்/ கம்பிகள் நட்டு எழுப்பிய/ அடுக்குமாடி ஒன்றில் அமர்ந்தபடி/ என் மகனுக்கு/ விளக்கம்/ சொல்லிக் கொண்டிருக்கிறேன்/ மருதமெனில்/வயலும்/ வயல்சார்ந்த நிலமும் என்று (கல்லால மரம், ப.19)
என்கிறது கவிதை. இதில், நீர் நிலைகளான ஏரிகள் போன்றவை ‘அடுக்ககங்களாக’ (பிளாட்) மாறிவரும் அவலம் பதிவாகியுள்ளது.
ஒர் ஏழை விவசாயியின் கனவு என்னவாக இருந்துவிட முடியும்? தனக்கான நிலத்தில் எப்படியும் ஒரு கிணறு வெட்டி தண்ணீர் கண்டு, கிணற்றைச் சுற்றி சில தென்னைகள், ஓரிரு மா நட்டுவளர்த்துவிட வேண்டும் என்பதாகத்தானே. ஆனால், இவற்றிலுள்ள சிக்கலை,
கல்யாணத்துக்குப்போட்ட நகை/ ரெண்டு பசு மாடு/ தாத்தா காலத்திய காட்டுவா மரம்/ சொசைடி லோன் / எல்லாவற்றையும் கிணற்றில் கொட்டி/ பதிமூணாவது கஜத்தில்/ தண்ணி கண்டது/ கூடவே பாறை (கல்லால மரம், ப.39)
என்று, கிணறு தோண்டுவதில் ஏற்பட்ட இன்னல்களும், தொழில்மயமாக்கலாலும், உலகமயமாக்கல் என்ற மாயையால் ஆற்றுநீர் தொழிற்சாலைகளுக்கு விற்கப்படுதலாலும், நன்னீர் விற்பனைநீராக்கப்படுதலாலும், வேளாண்மைக்கு நீரின்றிப்போனதை,
‘எல்லா புறமும்/ ஆழ்துளை செருக/ நாவறண்டு செத்தது/ அக் கிணறு (மழைபூத்த முந்தாணை, ப.41)
என்றும், பதிவுசெய்யப்படுகின்றன. தொழில்மயமாதலில், விளைநிலங்கள் அழிக்கப்படுதலும், குடிநீர்¢ உறிஞ்சப்படுதலும் இங்கு, கிராம மண்சார்ந்த சிக்கலாக பதிவாகியுள்ளதை அறியமுடிகிறது.
யாவாரி சீனு.../ இந்த எருதுங்கள வாங்கி/ அறுப்புக்காரனுக்கு மட்டும் தள்ளிராதய்யா/கொழுந்தங்க/ நெலம் நீச்சி இருக்கிற/ சம்சாரியா பார்த்து குடுத்திட்டீன்னா/ புண்ணியமா போவும் உனக்கு (மழை பூத்த முந்தானை, ப.18)
என்பதில் அறிய முடிகிறது. சம்சாரிக்குத் தோதாய்/ மனைவி அமைகிறாளோ இல்லையோ/ மாடு அமையவேண்டும் (மழை பூத்த முந்தானை, ப.23) என்றெண்ணும் விவசாயியின் வாழ்வில், அந்த மாடுகளையே விற்க நேர்ந்த நிலையும், அதனால் ஏற்படும் அவனின் மனக்கலக்கமும் மேற்கண்ட கவிதை வரிகளின் பதிவாகின்றன.
இன்று/ கல்குவாரியாய் மிச்சப்பட்ட/ அம்மலையின் அடிவாரத்தில்/ பாறை பிளந்த வெடியோடு/ இருந்து ஓர் ஓணானும்/ உடல் சிதறி செத்துப் போயிற்று (மழை பூத்த முந்தானை, ப.81)
என்ற பதிவு நமக்குக் காட்டுகிறது. எல்லா வளங்களும் அழிக்கப்பட்ட நிலையில், உயிரினங்களும் அற்றுபோய், வெறுமனே காட்சியளிக்கும் மலை இங்குக் கருப்பொருளாயிற்று.
தாகம் தணிக்கவும்/ தலை முழுகவுமான/ தோட்டக் கிணறுபோல்/ உனையன்றி/ எவரைச் சொல்ல/ (கல்லால மரம், ப.1), என்பதிலும், நட்டு வைத்த வயலின்/ குறுக்கே பாய்ந்த/ இளங்கன்றின் குளம்புப் பதிவுகளாய்/ (மழைபூத்த முந்தானை, ப.16) என்பதிலும், மானாவாரியில் விதைத்த விதைப்பாடாய்/ ஏகாந்தத்திற்கு/ நாலு இலைவிட்டுக் கிடக்கிறது மனசு (கல்லால மரம், ப.2)
என்பதிலும்,
கரம்பாய்ப் போன கழனியில்/ குறுக்கே விழும் பாதையாய்(உனக்குப் பிறகான நாட்களில், ப.25) என்பதிலும், மேய்ந்து போனதால் / கதிரற்றுப்/பச்சையோடிக் கிடக்கும்/ வரப்போரப் பயிராய் (உனக்குப் பிறகான நாட்களில், ப.25) என்பதிலும், கிராமத்து மண்ணும், தொழில் சார்ந்த நிகழ்வுகளும் உவமைகளாகின்றன.
அதேபோல,
பற்றி எரியும் தொழுவத்துள்/ கட்டுத்தறியில் கதறும் கன்றுக்குட்டியாய்../ தவிக்கும் மனசு (கல்லால மரம், ப.16) என்பதிலும், தண்ணீரில் மூழ்கி/ மீனோடு திரும்பும் /உல்லாங் குருவியென (மழை பூத்த முந்தானை, ப.14), என்பதிலும், மண்டிக்கிடக்கும் கார முட்களுக்கிடையில்/ தளிர்த்தவைகளைப்/ பசியோடு கடிக்கும் வௌ¢ளாட்டினைப் போல (கல்லால மரம், ப.1)
என்பதிலும்,
முன் செல்லும் ஒருவன்/ இழுத்துவிட்ட முள் விளாரொன்று/ பின் வருபவனின்/ கண்ணிலடிப்பது போல் (மழை பூத்த முந்தானை, ப.16) என்பதிலும், குருவி மறந்த கூட்டின் ஓரம் /சேற்றில் ஒட்டிச் செத்துக் கிடக்கும்/ மின்மினியாய் (உனக்குப் பிறகான நாட்களில், ப.26) என்பதிலும், வாபூட்டு மாட்டிய எருதின் அவஸ்தையோடு/ உன் மௌனத்தை உதும்பியபடி/ உன்னோடு வந்துகொண்டிருப்பேன் (உனக்குப் பிறகான நாட்களில், ப.92)
என்பதிலும், கிராமத்து மண்சார்ந்த காட்சிகளே உவமைகளாக அமைவதைக் காணமுடிகிறது.
கிராமத்தில் மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளையே நிறைவுசெய்து கொள்ளவியலா நிலையில், வாழ்வுதேடி நகரங்களை நோக்கிக் குடிபெயரும் அவலம்,
ஒவ்வொரு முறை /ஊருக்குப் போகும்போதும்/ யாரேனும் ஒருவர்/ இறந்திருக்கிறார்/ அல்லது/ ஏதேனும் ஒரு வீடு / காலியாக இருக்கிறது (மழை பூத்த முந்தானை, ப.36)
என்று பதிவு பதிவுசெய்யப்படுகிறது. கிராமத்தின் தேய்வைக் குறித்து கவிஞரின் நடையில் குறிப்பிடுவதானால்,
ஓடும்போது/ கல்லடித்துப் பெயர்ந்த கால்விரல்/ நகத்தில் அருகம்புல் மாட்டி இழுத்ததாய் / அப்படி வலி (உனக்குப்பிறகான நாட்களில், ப.68)
ஏற்படுத்துகின்றன இவ்வகைக் கவிதைப் பதிவுகள்.
மண் சார்ந்த கவிதைகள் உறவுகளிலிருந்தே தொடங்குகின்றன. தம்மையும், தம் உறவையையும், ஊரையும், தொழிலையும், இருப்பையும் பதிவு செய்வதில் இவை நிறைவு காண்கின்றன. இதுபற்றி, ‘இந்தச் சனங்களுக்கு வாழக் கிடைத்திருக்கும் வாழ்க்கை ‘சமகால அனுபவ இழப்புகளால்’ சிறுமைப்பட்டது. இவர்களுடைய சமூக அனுபவங்கள் என்பவை காயம்பட்டுக் காயம்பட்டு ஆறாதவை, ரத்தம் கசிபவை. இக்கவிதைகள் இவற்றுக்கான பரிகாரங்களைப் பரிந்துரைக்கவில்லை என்றாலும் நோயைத் தீர்மானிக்க உதவுகின்றன’ என்கிறார் பழமலய் (சனங்களின் கதை, ப.12).
பச்சியப்பனின் மூன்று கவிதைத் தொகுப்புகளிலும் உறவுகளையும், உறவுநிலைச் சிக்கல்களையும் பதிவுகளாகக் காணமுடிகிறது. காதல் திருமணத்தினால் ஏற்பட்ட உறவுநிலைச் சிக்கல்களையும், பங்காளிச் சண்டைகளையும் மூன்று தொகுப்புகளிலுமே வெவ்வேறு முறைகளில் பதிவு செய்கிறார் கவிஞர். தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, அறிந்தோர், அண்டை வீட்டார் என்று, கவிஞரைச் சார்ந்த அனைவருமே கவிதைப் பாத்திரங்களாகின்றனர்.
நகர வாழ்வின் ஆடம்பரங்களுக்கிடையே, கிராம வாழ்வின் எளிமையை, போதாமையை இவ்வகைக் கவிதைகள் பேசுகின்றன. வரதட்சினைக் கடனை அடைக்க வீடுகளை அடமானம் வைக்கும் கிராம மக்களின் வறுமை நிலைகளை இவ்வகைக் கவிதைகள் பதிவு செய்கின்றன. இதனை,
வரதட்சணைக்காக/ வாங்கின கடனுக்கு வட்டி கட்டவும்/ நாளைய செலவுக்காகவும்/ வீட்டுப் பத்திரத்தை எடுத்துக் கொடுத்தாள் அம்மா/ வலித்திருக்கக் கூடும்/ கண்கள் சொல்லின (கல்லால மரம், ப.43)
என்பதில் அறியமுடிகிறது. நகரத்து ஆடம்பர வாழ்வினூடே, கிராமத்து ஏழ்மையைக் காட்டும் இவ்வகைப் பதிவு, நகரத்திற்கும் கிராமத்திற்குமான ஏற்றத்தாழ்வுகளைக் காட்டுகிறது. அதேபோல, ‘நீச்சல் பழகிய / கிணறுவிற்றுப் / படிக்கவைத்தார் அப்பா / பாத்ரூமில் குளிக்கும் / பாழாய்போன வாழ்வுக்காக (மழைபூத்த முந்தாணை, ப.23) என்பதில், கிராம மக்களின் கல்வித் தேவை பூத்திசெய்யப்படும் விதம் பதிவாகிறது.
இருந்தும் என்ன/ எத்தனை முறை துரத்தியும்/ என் வீட்டிலேயே வந்தடங்கும் உனது / கோழிக்கு/ பதில் சொல்லத் தெரியாமல் / கிடக்கிறேன்/ நான் (உனக்குப் பிறகான நாட்களில், ப.91)
என்பதில், பங்காளிகளின் பிரிவும், நடப்பியல் எதார்த்தமும் பதிவுகளாகின்றன.
மா, கொய்யா, புங்கை, வேம்பு, நாவல், பனை, தென்னை, அவுஞ்சி, எட்டி, அத்தி, ஈச்சை, இலந்தை என மரவகைகளையும், நாயுருவி, நெருஞ்சி, தும்பை , வெம்பாளை, நாய்த்துளசி எனச் செடிவகைகளையும், ஓணான்கொடி, பிரண்டை, கொள்காவாடு, பூசணி, கட்டுக்கொடி, கல்கோவை, ஆத்துப்பாலை, வெற்றிலை, கொடிமல்லி, அவரை, குன்றிமணி எனக் கொடி வகைகளையும், நாணல், தர்ப்பை, அருகம்புல், கோரை, கரும்பு எனப் புல்வகைகளையும், தாமரை, பனம்பூ, பூசணிப்பூ. மல்லி, ரோஜா எனப் பூ வகைகளையும் ஈச்சை, இலந்தை, அவுஞ்சி, எட்டி, அத்தி, உனி, காரை, நாவல், கொய்யா, மா, நுனா எனக் கிராமத்துப் பழவகைகளையும் பதிவு செய்கின்றன. அதேபோல, அணில், பாம்பு, ஆடு, மாடு, நரி, முள்ளம்பன்றி, ஓணான், அரணை, கீரி, எலி, மீன், நத்தை, முயல், பன்றி, கம்பளிப்பூச்சி, தேள், நண்டு, மண்புழு, நாக்குப்பூச்சி, சிலந்தி, வெட்டுக்கிளி, தும்பி, குளவி, மின்மினி, உல்லாங்குருவி, கிளி, மீன் கொத்தி, கோழி
என விலங்கு மற்றும் பறவையின வகைகளையும் கவிதைப் பாத்திரங்களாகின்றன. இவை, கிராமத்துக் கருப்பொருள்களாகக் கவிதைக்கு வலுசேர்க்கின்றன.
#மிக ஆழமானவற்றை மிக எளிமையாகக் கூறுவதே இவ்வகைக் கவிதைகளின் பண்பாக அமைவதைக் காணமுடிகிறது.
#படிமம், குறியீடு என்ற கவிதை சித்தாந்தங்கள் புறந்தள்ளப்பட்டு, மண்சார்ந்த மக்களின் வாழ்வனுபவங்களைக் காட்சிகளாகவும், உவமைகளாகவும் எளிய நடையில் வடிக்கின்றன.
#கிராம மக்களின் பேச்சு நடையும், உரைநடையும் கவிதைக்கான கருவியாகின்றன. எளிய நடையும், மக்கள் வழக்காறுகளும் இவ்வகைப் பதிவுகளுக்குக் கைகொடுக்கின்றன.
#சமுதாய வளர்ச்சி என்பது கிராமங்களைத் தவிர்த்தது அல்ல. அதனையும் உள்ளடக்கியதே. கிராமங்களின் வளர்ச்சியே உண்மையான சமூக வளர்ச்சியாக அமைய முடியும். அவ்வகைக் கிராமங்களின் உண்மையான நிலையினை இவ்வகைக் கவிதைகள் படம்பிடிக்கின்றன.
# குறிப்பாக இவ்வகைக் கவிதைகள், கிராமத்தின் இயல்பைச் சுட்டுவதோடு, கிராமம் பற்றிய உயர் மாயையை உடைப்பனவாகவும் அமைகின்றன. இருந்ததைச் சுட்டி, இன்று இருப்பதை ஆதங்கத்தோடு பதிவு செய்கின்றன.
# கிராமத்து மண்ணையும், மக்களையும் பாத்திரமாகவும், கிராமச் சூழலைக் கவிதைக் களமாகவும் கொண்டுள்ளன. கிராம மக்களையும், அவர்களின் வாழ்வுமுறைகளையும் ஆராயப் புகுவோர்க்கு, இவ்வகைக் கவிதைகள் சான்றுகளாய் அமைகின்றன.
# மண்சார்ந்த கவிதைகள், கிராமத்தின் தேய்வைச் சுட்டுவதோடு, நகரவாழ்வின் போலித்தனத்தையும் ஆங்காங்கே அடையாளப்படுத்துகின்றன.
# இழந்ததன் மீதான காதல் (நிலம், உறவுகள், தொழிலில் துணைகள், ...) இவ்வகைக் கவிதை உருவாக்கத்திற்குப் பெரும்பங்கு வகிக்கின்றது.
உனக்குப் பிறகான நாட்களில், பச்சியப்பன், பொன்னி பதிப்பகம், சென்னை,1998.
கல்லால மரம், பச்சியப்பன், காவ்யா பதிப்பகம், சென்னை, 2002.
கவிதைக் கலை, (முதல் பகுதி), ரா.ஸ்ரீ. தேசிகன், பாரதி தமிழ்ச்சங்க வெளிவிழா வெளியீடு, 1966.
குரோட்டன்களோடு கொஞ்சநேரம், பழமலய், ரிஷபம் வெளியீடு, சென்னை, இரண்டாம் பதிப்பு, 2001.
சனங்களின் கதை, பழமலய், தாமரைச் செல்வி பதிப்பகம், சென்னை, இரண்டாம் பதிப்பு, 1996.
நானும் என் கவிதையும், வளர்மதி (பதிப்பு), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. 1999.
பழமலயின் கவிதைகள், (கட்டுரை) க. ஜெயந்தி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. 15.10.2004
மழை பூத்த முந்தாணை, பச்சியப்பன், காவ்யா பதிப்பகம், சென்னை, 2005.
வேறு ஒரு சூரியன், பழமலய், பெருமிதம் வெளியீடு, விழுப்புரம், 2002.
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும், வல்லிக்கண்ணன், எழுத்து பிரசுரம், சென்னை, 1977.
கவிஞர் பச்சியப்பனின் நேர்காணல், 13.07.2006.
Dr.A.Manavazhahan, Lecturer, Tamil Department, Arts & Science College, S.R.M. University, Chennai. 603 203
*****
Dr.A.Manavazhahan, Lecturer, Dept. of Tamil, S.R.M. Arts & Science College, Chennai - 603 203.
தமிழியல்
www.thamizhiyal.com