வியாழன், 20 ஆகஸ்ட், 2020

உலகம் வியக்கும் தமிழரின் பெருநகரக் கட்டமைப்புகள்

முனைவர் ஆ.மணவழகன், இணைப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை -113.  அக்டோபர் 30, 2019.

 

            மனிதகுல வரலாறு கற்கருவிகளைப் பயன்படுத்தியதில் தொடங்குகிறது என்றால், அவன் நாகரிக வரலாறு உடை உற்பத்தியிலும் உறையுள் தேட்டத்திலும் தொடங்குகிறது. மரப்பொந்துகளிலும், கற்குகைகளிலும் தன்னை ஒடுக்கியிருந்த மனிதன், தனக்கான இருப்பிடத்தைத் தானே அமைத்துக்கொள்ள முனைந்தபோது அவனின் நாகரிகம் முகிழ்க்கத் தொடங்கியது. இருப்பிடம் அமைத்தல் என்பது வெறும் தற்காலத்தேவை மட்டுல்ல, அதுவொரு வாழ்வியல்; மனிதன் கண்ட இயற்கை அறிவியல். இடத்தேர்வு, சூழலியல் மேலாண்மை, வளம் என அனைத்தையும் ஆராய்ந்து, நிலைத்தக் குடியிருப்பை ஏற்படுத்தியது மனிதனின் மரபு அறிவு. இம்மரபு அறிவு வளர்ச்சியே கட்டடக்கலை நுட்பங்களாகப் பின்னாளில் வளர்ந்தது. அந்தவகையில், உலகின் மூத்த இனமான தமிழினத்தின் கட்டடக்கலை நாகரிகம் உலகின் அனைத்துக் கட்டடக் கலை நாகரிகத்திற்கும் முந்தியது, நுட்பம் வாய்ந்தது என்பதற்குப் பழந்தமிழ் இலக்கியங்களும் அகழாய்வுகளும் சான்றுகளாய்த் திகழ்கின்றன. 

            புதிய கற்காலத்தில் மனிதர் ஓரிடத்திலேயே தங்கி நிலைத்து வாழக் கற்றிருந்தனர். ‘விழவுத்தலைக் கொண்ட பழவிறல் மூதூர்’, ‘பதியெழு அறியாப் பழங்குடி’ என்றெல்லாம் நற்றிணை, சிலப்பதிகாரம் முதலிய பழந்தமிழிலக்கியங்கள் மக்கள் தங்கி வாழ்ந்த தொன்மையான ஊர்களைப் புகழ்கின்றன. தங்குமிடங்களின் பெயர்கள், ‘அகம், இல், இல்லம், உறையுள், உறைவிடம், கல்லளை, குடில், குரம்பை, குறும்பு, நெடுநகர், புக்கில், மனை, மாடம் எனப் பலவாறு குறிக்கப்படுகின்றன. 

            இயற்கைப் பொருள்களாலான திணைசார் இருப்பிடங்களில் தொடங்கும் தமிழரின் கட்டடக்கலை நுட்பங்களானது அடிப்படைத் தேவைக்கான உறையுள் என்பதோடு நின்றுவிடாமல், எழில்மிகு அரண்மனைகள், உயர் மாளிகைகள், எழுநிலை மாடங்கள், அகல்நெடுந் தெருக்கள், வடிவார்ந்த ஊர்கள், திட்டமிட்ட பெருநகரங்கள், வளம்மிகு பட்டினங்கள், உறுதியான கோட்டைகள், ஏற்றமிகு அரண்கள், பயன்மிகு நீர்நிலைகள், வின்னளக்கும் கலங்கரை விளக்கங்கள், கலைகள் வளர்க்கும் அரங்குகள், ஆன்மீகம் வளர்க்கும் கோயில்கள் எனப் பரந்துபட்டது. இவற்றில், பெருநகர கட்டமைப்புகள் குறித்த பதிவுகள் மிக இன்றியமையாதவை. இன்றைய கட்டுமானப் பொறியியல் நுட்பத்திற்கும் முன்னோடியாகத் திகழ்பவை. ‘வரைகுயின்றன்ன வான்தோய் நெடுநகர், ‘விண் பொரு நெடுநகர், ‘சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பு, ‘கடியுடை வியல் நகர், ‘பொன்னுடை நெடுநகர்’ போன்ற தொடர்கள் நெடுநகர் குறித்த அறிமுகங்களாக உள்ளன. இவை, நெடுநகர்களின் கட்டுமானச் சிறப்பையும், பாதுகாப்பையும், அழகையும், வளத்தையும் சுட்டுகின்றன.

    பழந்தமிழக நகரங்களுக்குப் புகழ்பெற்றவையாக பூம்புகார், காஞ்சி, மதுரை போன்றவை திகழ்கின்றன. நகரமைப்பிலும், பண்பாட்டிலும், பாதுகாப்பிலும் இந்நகரங்கள் சிறப்புற்று விளங்கின. இவற்றில் பூம்புகார் முழுமையாகக் கடல்கொண்டது என்றாலும் தொல்லியல் ஆய்வுகளும், பழந்தமிழ்ப் பனுவல்களும் இதன் அமைப்பையும், சிறப்பையும் நன்கு உணர்த்துகின்றன. முதல் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க பயணி தாலமி காவிரிப்பூம்பட்டின நகரமைப்பின் சிறப்பைப் பாராட்டிக் கூறியுள்ளார். அந்நாளைய மேனாட்டு வரலாற்று ஆசிரியர் எழுதிய 'பெரிப்ளுஸ்' என்னும் நூலிலும் காவிரிப்பூம்பட்டினம் புகழப்பட்டுள்ளது. 'இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்நகரம், பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலண்டன் மாநகரம் எப்படி விளங்கியதோ அதைவிட ஆயிரம் மடங்கு சிறப்பாக விளங்கியதாக நாம் கூறலாம்’ என்கிறார் வரலாற்று அறிஞர் சதாசிவப் பண்டாரத்தார். 

            ‘முட்டாச் சிறப்பிற் பட்டினம்’ என்று கடியலூர் உருத்திரங்கண்ணனார் பூம்புகாரைப் புகழ்கிறார். கடல் வாணிகச் சிறப்பால் அன்றைய பூம்புகார் ஒரு பன்னாட்டு நகரமாகவும் விளங்கியுள்ளது. இந் நகரத்துக்குச் செல்லும் முதன்மைச் சாலை சோழ மன்னர்களின் கல்வெட்டுகளில் ‘பட்டினப் பெருவழி’ என்று குறிக்கப்பட்டுள்ளது. இப்பெருநகர், மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம், நாளங்காடி என மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தாக அறிஞர்கள் உரைக்கின்றனர். இந்த மூன்று பிரிவுகளும் அடுத்தடுத்து திட்டமிட்ட அமைக்கப்பட்டிருந்த விதம் நகர வடிவமைப்பின் உச்சமாகக் கருதப்படுகிறது. மருவூர்ப்பாக்கம் புகார் நகரின் கடற்கரை ஓரமாக அமைந்திருந்த பகுதி. அகநகராக உட்புறம் அமைந்திருந்த பகுதி பட்டினப்பாக்கம். இந்த இரண்டு பாக்கங்களுக்கும் இடையில் இருந்த இடம் நகரத்தின் வணிகப் பகுதியாக அமைந்திருந்த நாளங்காடி. 

      நிலா முற்றங்களும், மிகவும் சிறப்புடைய பலவகை அலங்காரங்களால் அழகு செய்யப்பட்ட அறைகளும், மானின் கண் போன்ற அமைப்பை உடைய சாளரங்களும் கொண்ட மாளிகைகள் நகரின் மருவூர்ப்பாக்கத்தில் நிறைந்திருந்தன. காவிரி கடலொடு கலக்கும் இடங்களில் கரையோரமாக கண்ணைக் கவரும் யவனர் மாளிகைகள் இருந்தன. கடல் வாணிபத்தில் ஈடுபட்ட வேறுபிற நாட்டு வாணிகர்களும் கடற்கரை ஓரமாகவே வாழ்ந்தனர் என்று இதன் தோற்றச் சிறப்பைக் காட்டுகிறார் இளங்கோவடிகள். மேலும் இந்நகரில், பல்வகைத் தொழிலாளர்கள் வாழ்தற்குரிய தனித்தனி இடங்களும் அமைந்திருந்தன என்கிறார். 

            பூம்புகாரைப் போலவே காஞ்சி மாநகரும் பழம்பெரும் நகராகச் சங்க இலக்கியங்களில் சுட்டப்படுகிறது. காஞ்சி மாநகர் தாமரை மொட்டின் வடிவத்திலிருந்ததையையும், அங்குச் செங்கற்களால் கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்கள் ஓங்கி உயர்ந்து நின்றதையும், பழம்பெரும் இந்நகரில் இடைவிடாது பல்வேறு விழாக்கள் நிகழ்ந்ததையும் பெரும்பாணாற்றுப்படை பதிவுசெய்கிறது.  

            பழைய மதுரை கோநகரும் தாமரை வடிவில் அமைந்திருந்ததாகப் பரிபாடல் கூறுகிறது. தாமரையின் அக இதழ்களைப் போன்றவை மதுரைத் தெருக்கள் என்றும், அவ்விதழ்களின் உட்புறமாக விளங்கும் கொட்டையைப் போன்றது பாண்டியனின் கோயில் என்றும், அப்பூவிற்பொருந்தியுள்ள தாதினைப் போன்றவர் தண்தமிழ் மொழியைப் பேசும் மக்கள் என்றும், அத் தாதை உண்ணுகின்ற வண்டினைப் போன்றவர்கள் மதுரைக் கண் வந்து பரிசில்பெற்று வாழ்கின்றவர்கள் என்றும் வருணிக்கிறது. இந்நகரில், பாதாள வடிநீர் வழிக்காக பூமிக்கடியில் யானைகள் நுழையுமளவு பெரிய புதைகுழாய்கள் பதித்திருந்ததைச் சிலம்பு உரைக்கிறது. நகரம் சுகாதார வசதிகளுடனும் திட்டமிட்டு அமைக்கப்பட்டிருந்து. இல்லங்களின் கழிவுநீரை ஒன்றாகத் திரட்டி ஊருக்கு வெளியே கொண்டு செல்லும் சுருங்கைத் தூம்பு அமைப்பு இருந்தது. வெளியேறும் கழிவுநீர் சுருங்கைவழி சென்று ஓரிடத்தில் விழும் காட்சி, யானை தன் தும்பிக்கையின் வழியே நீரினைப் பீய்ச்சி அடிப்பது போலுள்ளதாகப் பரிபாடல் சுட்டுகிறது.  

            பரிபாடல் காட்டும் மதுரையைக் கீழடி அகழாய்வு இன்று உறுதிபடுத்தியுள்ளது. கீழடியில் உறைகிணறுகள், செங்கற் சுவர்கள், சுடுமண் குழாய்கள், கூரை ஓடுகள், மண்பாண்டங்கள்,  எலும்புக் கருவிகள், இரும்பு வேல், தனிநபர்களின் பெயர்களைக் குறிப்பிடும் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட மண்பாண்ட ஓடுகள்,  இரும்பாலான அம்பு முனைகள், எழுத்தாணிகள், சுடுமண் முத்திரை கட்டைகள், தந்தத்தாலான தாயக் கட்டைகள், சுடுமண் பொம்மைகள், சுடுமண் அணிகலன்கள், பொன்னணிகலன்கள், மிளிர்கல் அணிகலன்கள் எனப் பல்வேறு அரிய தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. 

            இங்குக் கண்டறியப்பட்டுள்ள கட்டடங்கள், ஒரு வளர்ச்சியடைந்த நகரமாக இது திகழ்ந்ததற்கு வலுவான சான்றுகளாகத் திகழ்கின்றன. சங்க இலக்கியங்கள் சுட்டும் நகரங்களில் அமைந்திருந்த நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றலுக்கான குறிப்புகளுக்குச் சான்றுகளாய் கீழடியில் சுடுமண் குழாய் மூலம் உருவாக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் வசதியுடன்கூடிய கட்டிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பட்டினப்பாலை முதலான சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் உறைகிணறுகளும் இங்குக் கண்டறியப்பட்டுள்ளன. உலகக் கட்டடக் கலை நாகரிகத்திற்கும் திட்டமிட்டப் பெருநகர வடிவமைப்பிற்கும் தமிழன்தான் முன்னோடி என்பதை இவை இன்று உறுதிசெய்துள்ளன. 

            தமிழர் நிலமெங்கும் சிதைந்தும் புதைந்தும் கிடப்பவை வெறும் கட்டடங்களல்ல. அவை, தமிழன் கண்ட கட்டுமான நுட்பங்களும் நாகரிகங்களும். தமிழனின் இவ்வகையான மரபு நுட்பங்களும் கலைகளும் மேலெழும்போது, உலகின் மனிதகுல வரலாறு மாற்றி எழுதப்படும் என்பது உறுதி.

***** 

Dr. A. Manavazhahan, Associate Professor, Sociology, Art & Culture, International Institute of Tamil Studies, Chennai -113.

தமிழியல்

www.thamizhiyal.com