புதன், 19 ஆகஸ்ட், 2020

வரி வருவாயும் அரசு ஆளுமையும்

 ஆ.மணவழகன், இணைப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 113. சூலை 7, 2016


 நாடென்ப நாடா வளத்தன நாடல்ல

                                              நாட வளந்தரு நாடு

என்று, நல்ல நாட்டிற்கான இலணக்கத்தை வரையறுக்கிற உலகப் பொதுமறை, நல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும் எந்தப் பயனும் இல்லை என்றும் அறிவுறுத்துகிறது.  ஒரு நாட்டின் தலைமையானது சமூகப் பொருளாதாரம், மக்கள் வளம், அடிப்படைக் கட்டமைப்பு, கல்வி, நீதி, சமத்துவம், இயற்கை வளம், பாதுகாப்பு, தனிமனித உரிமை மற்றும் மேப்பாடு போன்றவற்றில் காட்டும் அணுகுமுறையே அந்நாட்டின் வளமைக்கும் வளர்சிக்கும் வழிவகுக்கிறது. 

            நாட்டின் அரசு தலைசிறந்த நல்லமைப்புடனும் நீதி நெறிகளுடனும் தகுந்த முடிவுகளை எடுக்கும் ஆற்றலுடைய ஒரு நிறுவனமாக இருத்தல் வேண்டும். அஃதாவது, நாடும் அரசும் மேன்மையுற்ற சமுதாயத்தை உருவாக்கி மக்களை உயர்த்துதல் வேண்டும் என்பது சமூகவியலாளர் கருத்து. பழந்தமிழ்ச் சமூகத்தில் மக்களுக்கு மன்னன் உயிராகவும் (புறம்.186) மன்னனுக்கு மக்கள் உயிராகவும் (மணி.7) மதிக்கப்பெற்றனர். எனவே, பிறரால் விளையும் கேட்டைவிட ஆள்பவரின் தீச்செயலால் மக்கள் அடையும் துன்பம் கொடுமையானது என்றும் ஆள்பவர் சரியில்லை என்றால் அச்சமூகம்,

                        ஆள்பவர் கலக்குற அலைபெற்ற நாடுபோல் (கலி.5)

துன்பமுறும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. குடிகள் அடியும் துன்பத்திற்குக் முதன்மைக் காரணமாக முறையற்ற வரிவசூல் அமைகிறது. 

            நாட்டில் குடிமக்களை வருத்தி வரி வசூலித்தல் செங்கோன்மையன்று. அவ்வகை அரசு கொடுங்கோன்மை அரசாக அக்காலத்தில் ஒதுக்கப்பட்டது. அதனால்தான் சிலப்பதிகாரத்தில், மாடலமறையோனின் அறிவுரையால் இனி, ‘குடிமக்களிடம் வரிவசூலிக்க வேண்டாம், நம் எல்லைக்கு உட்பட்டிருக்கும் சிற்றரசுகளும் நமக்குத் திறை எதுவும் செலுத்த வேண்டாம், இதை இன்றே எல்லோருக்கும் தெரிவியுங்கள்’ என்று சேரன் செங்குட்டுவன் உத்தரவிடுகிறான். வரையறையின்றிப் பெறப்படும் வரியால், அரசின் கையிருப்பு உயருமே அன்றி, மக்களின் வளம் பெருகாது என்பது தொன்மைச் சான்றோரின் தொலைநோக்கு.

            அரசுக்குரிய வருவாய் வழிகளைக் சுட்டுமிடத்து,

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்

தெருபொருளும் வேந்தன் பொருள் (குறள்.756) 

என்கிறார் வள்ளுவர். இதில் உல்கு என்பது வரி வருவாயைக் குறிப்பது. ஆயினும், வரிவருவாய் மக்களின் வளமை அறிந்து, சுமையாக இல்லாமல் இயல்பாக மேற்கொள்ளும் ஒன்றாக அமையவேண்டும்.  மாறாக, மக்களைத் துன்புறுத்தி அடித்துப் பிடுங்கும் கள்வரைப் போல இருத்தல் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இதைத்தான்,

                        வேலோடு நின்றான் இடு என்றது போலும் 
                   கோலொடு நின்றான் இரவு (குறள்552)

என்கிறார் வள்ளுவர். வரிவிதிப்பு மக்களின் வருவாய்க்கு உட்பட்டதாக அமையாமல், குடிமக்களைத் துன்புறுத்தி மிகுதியும் பெறுவதாக இருந்தால், வலிந்து பெறும் வரி அரசுக்கு தீராத பகையாக முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டது(புறம்.75). 

            மரம்சா மருந்தும் கொள்ளார் மாந்தர்

          உரம் சாச் செய்யார் உயர்தவம் வளம் கெடப்

          பொன்னும் கொள்ளார் மன்னர் (நற். 226:1-3)

என்பார் கணிபுன்குன்றனார். இதில், மருந்துமரம் என்பதற்காக வேரோடு பிடுங்கி பயன்படுத்துதலும், வரம் கிடைக்க உயிர் நீங்கமட்டும் தவம் செய்தலும் எப்படித் தீதாகுமோ அதைப்போல, மக்களின் வளம் கெட அவர்களை வருத்தி வரிவசூல் செய்தலும் மிகுந்து துன்பத்தைத் தரும் என்கிறார்.  

            அதேபோல,

                    மூத்தோர் மூத்தோர்க் கூற்றப் உய்த்தெனப்

                   பால்தர வந்த பழவிறல் தாயம்

                   எய்தனம் ஆயின் எய்தினம் சிறப்புஎனக்

                   குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச்

                   சிறியோன் பெறின்அதி சிறந்தன்று மன்னே (புறம்.75) 

என்பதில், சிறப்புக்குரிய அரசுரிமையை அடைந்துவிட்டோம் என எண்ணிக்கொண்டு, தம் குடிமக்களிடம் வரியை வேண்டி இரக்கும் அரசன் சுமக்க இயலாத துன்பத்திற்கு ஆளாவான் என்றும், அப்படிப்பட்டவன் ‘கூரில் ஆண்மை சிறியோன்’(புறம்.75) என்றும் சோழன் நலங்கிள்ளி சினம்கொள்கிறான். 

            மேலும்,

                        காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே

                   …… …………… ……….. ……….

                   தானும் உண்ணான் உலமும் கெடுமே (புறம்184)

என்ற புறநானூற்றுப் பாடலில், முறையற்ற வரிவசூல் செய்யும் அரசைக் குறிப்பிடுமிடத்து,  ‘ஒரு மா என்னும் அளவைவிடக் குறைந்த நிலமேயாயினும், விளைந்த நெல்லைக் கொண்டுவந்து கவளமாக்கி யானைக்குக் கொடுத்தால் அது பலநாட்களுக்கு உணவாகும். நூறு செய் அளவுடைய பெரிய நிலமாயினும் அதனுள் யானை தானே தனியாகப் புகுந்து உண்ணத் தொடங்கினால், யானையின் வாயினுள் புகும் நெல்லைக் காட்டிலும் கால்களில் மிதிப்பட்டு அழிவது மிகுதியாகும். அதுபோல, அறிவுடைய மன்னன் ஒருவன் குடிமக்களிடமிருந்து வரி வாங்கும் நெறியை அறிந்து வாங்குவானானால், அவனது நாட்டில் வாழும் குடிமக்கள் அவனுக்கு மிகுதியும் பொருளைத் தந்து தாங்களும் தழைப்பர். மன்னன் அந்நெறியை அறியும் அறிவற்றவனாகி, குடிகளைத் துன்புறுத்தி வரிவசூல் செய்வானாயின் அந்த யானை புகுந்த விளைநிலம்போல, தானும் உண்ணப் பெறான்; உலகும் அழியும்’ என்று எச்சரிக்கிறார் பிசிராந்தையார். 

எனவேதான்,

அரசியல் பிழையாது அறநெறி காட்டிப்

பெரியோர் சென்ற அடிவழிப் பிழையாது (மதுரைக்.191-192) 

ஆட்சிசெய்த அரசனை உலகம் சங்கச் சமூகம் போற்றியது. அதனால்தான், ‘உலகம் கொள்ளும் அளவிற்குச் செல்வம் கிடைக்கப்பெறினும் பழியோடு வரும் செல்வம் வேண்டாமெனஅக்காலத்தில் விலக்கப்பட்டது. ஆம். பேரரசு, சிற்றரசு என்பதெல்லாம் மக்கள் விரும்பும் நல்லரசு என்பதிலேயே அளவிடப்படுகிறது எப்போதும்.