வியாழன், 13 ஆகஸ்ட், 2020

நற்றிணையில் மனிதநேயச் சிந்தனைகள்

 

நற்றிணையில் மனிதநேயச் சிந்தனைகள்

 ஆ.மணவழகன், முனைவர் பட்ட ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

(வெள்ளிக் கருத்தரங்கம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, சூலை 25, 2003)


மனிதநேயம்

            மனிதநேயம் என்பதை, 'மனிதன் மனிதனை மதித்துச் செலுத்தும் அன்பு'-1 என்ற  க்ரியாவின் விளக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு அறிஞர் சிலர் ஆய்வர். இருந்தும், மனிதன் தன்னை ஒத்த பிற மனிதரிடத்துச் செலுத்தும் அன்போடு, மனிதர் அல்லாத பிற உயிர்களிடத்தும் காட்டும் அன்பு, பரிவு, கருணை ஆகியனவும் மனிதநேயமாகவே இவண் கருதப்படுகின்றன.

             ‘தொடர்பு பற்றாது இயல்பாக எல்லா உயிர்கள் மேலும் செல்வதாகிய கருணை’2  என்று அருளுடைமைக்கு விளக்கம் அளிக்கிறார் பரிமேலழகர். இவர் கூற்றை ஒப்புநோக்குவழி அருளுடைமையும் இங்கு மனிதநேயமாகவே கொள்ளப்படுகிறது.

             ‘மனிதன், மனிதனை மதித்துச் செலுத்தும் அன்பான மனிதநேயத்தினின்றும் உயர்ந்த நிலையினதாக ‘உயிரிரக்கம்’ அமைகிறது! மனிதநேயம் மனித உயிரிடத்துக் காட்டும் அன்பை மட்டுமே எண்ண, உயிரிரக்கம் மனித உயிர்க்குப் பல்லாற்றானும் துணைநிற்கும் விலங்குகள், தாவரங்களையும் மனித உயிருடன் ஒருங்கிணைத்துக் காண்பதால்,  ‘உயிரிரக்கம்’  என்பதே இங்குப் பின்பற்றப்படுகிறது’.3 என்று  உயிரிரக்கத்தையும், மனிதநேயத்தையும் வேறுபடுத்தி, மனிதநேயத்தினின்று உயிரிரக்கமே சிறந்தது என்று ‘சங்கத் தமிழியல்’ நூல் முன்வைக்கின்றது.

       எனினும் இவண், மனிதநேயம் என்பதை, மனிதனிடத்துக் காட்டும் நேயம் என்று கொள்ளாமல், ‘மனிதனிடத்துத் தோன்றும் நேயமாக’ கொண்டு ஆயப்படுகிறது. மேலும், உயிரிரக்கம், அருளுடைமை போன்றனவும் மனிதநேயத்தின் கூறாகவே கொள்ளப்படுகின்றன.  

       அன்பு போன்ற குணங்கள் அடிப்படையிலேயே அனைத்து உயிர்களிடத்தும் காணப்படும் ஒன்றாகும். ஒர் உயிர், அதன் இனத்து  உயிரிடம் அன்புகொண்டிருத்தல் இயற்கை. மனிதன் மனிதனை மதித்துச் செலுத்தும் அன்பும் இதன்பாற்படும். பிற உயிர்களிடத்தினின்று மனிதனை வேறுபடுத்திக்காட்டும்,

                        'ஆறறிவதுவே அவற்றொடு மனனே' (தொல். 1526)

என்ற தொல்காப்பியர் ஆய்வின் வழி இங்குச் சிந்திப்பதே சிறப்பாக அமையும். மனிதனைப் பிற உயிர்களிடத்தினின்று வேறுபடுத்திக் காட்டும் அப்பண்பின் வழி தோன்றும் செயல்களை முன்னிறுத்தியே மனிதநேயக் கூறுகள் வெளிப்படுகின்றன. அன்பு, பண்பு  போன்ற மற்ற செயல்பாடுகள் மனிதநேயத்திற்கு அடிப்படைக் காரணிகளாக அமைகின்றன.  'பரிதாபம்' என்பது இரக்கப்படுதலோடு நின்று விடுவது. 'கருணை' என்பது இரக்கப்படுதலோடு, வேண்டுவன செய்வது. ஆயினும், இந்த இரண்டு செயல்களுமே மனிதநேயத்தின் வெளிப்பாடே. எவ்வுயிர் இன்னலுறும் போதும் அவ்வுயிர் தன்னுயிரே போல் எண்ணி இரங்குதல், அவ்வுயிர் நலம் பெற வேண்டுதல்/வேண்டியன செய்தல் ஆகிய அனைத்துக் கூறுகளுமே மனித நேயத்தின்பாற்படுகின்றன. உயிர்களுக்கு ஏற்படும் மறைமுக பாதிப்புகளைத் தவிர்த்தல் பொருட்டு, உயிரற்ற பொருள்களிடத்துக் கொள்ளும் நேயமும் இங்கு மனிதநேயமாகவே அமைகின்றது. இதன் அடிப்படையிலேயே இக்கட்டுரை அமைக்கப்படுகிறது.

 ஆய்வுக் களம்

            இக்கட்டுரை, சங்கஇலக்கியத்தில் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான 'நற்றிணையை' ஆய்வுக்களமாகக் கொண்டுள்ளது.

 நோக்கம்

            பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் போன்றவற்றில் சிறந்திருந்த பழந்தமிழர், மனிதநேயம் மிக்கவர்களாகவும் வாழ்ந்திருந்தனர்  என்பதை, அக்காலத்தில் தோன்றிய இலக்கியமான  நற்றிணையைக் கொண்டு நிறுவுதலே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

 நற்றிணை

            சங்க இலக்கிய நூல்களான எட்டுத்தொகையில் முதலாவதாக வைத்துத் தொகுக்கப்பட்ட சிறப்பினைப் பெற்றது நற்றிணை. நல்+திணை=நற்றிணை என்ற  இதன் பெயரே இதன் சிறப்பை உணர்த்தி நிற்கிறது. அக இலக்கியமான நற்றிணை 175 புலவர் பெருமக்களால் எழுதப்பட்ட 400 பாடல்களைத் தன்னகத்தே கொண்டது. 9 அடி இதன் சிற்றெல்லையாகவும், 12 அடி இதன் பேரெல்லையாகவும் அமைகிறது. இதனைத் தொகுத்தவர்  பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி என்பார்.

 நற்றிணையில் மனித நேயம்

      நற்றிணையில் காணப்படும் மனிதநேயச் சிந்தனைகள், ஆள்பவர்க்கு வேண்டிய மனிதநேயச் சிந்தனை, தனிமனிதர் காட்டும் மனிதநேயச் சிந்தனை,  பொதுவான  மனிதநேயச் சிந்தனை என்ற மூன்று பகுதிகளாகக் கொண்டு ஆராயப்படுன்றன.

 அ. ஆள்பவர்க்கு வேண்டிய  மனித நேயம்

      தனி மனிதன் தன் நற்குணங்களில் இருந்து மாறுபடுவதால், சமுதாயத்தில் ஏற்படும் பாதிப்புகளை விட, ஓர் அரசு மனிதநேயச் செயல்களினின்று வேறுபடுவதால் ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகம். இக்கருத்தினை மனத்திற்கொண்டே, இங்கு ஆள்பவர்க்குச் சொல்லப்பட்ட மனிதநேயச் சிந்தனைகள் முதலில் வைக்கப்படுகின்றன.

            'முறைசெய்து   காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

          இறைஎன்று வைக்கப் படும்' (குறள்.388)

என்றார் வள்ளுவர். அப்படியாயின் முறையின்றி அரசாளும்  மன்னன்? இறை நிலைக்கு எதிர் நிலையாகவே கொள்ளப்படுவான் என்பது உட்குறிப்பு. இது போன்று நல்லாட்சியினை வழங்கும் மன்னனை குறிப்பிடும் இடத்து, நற்றிணை பாடல் அடிகள்,

            'கடன் அறி மன்னர் குடை நிழற் போலப்

          பெருந் தண்ணெற்ற மர நிழல்' (நற்.146:4-5)

என்று குறிப்பிடுகின்றன. உச்சி வெயிலில் நடந்து செல்வோர்க்கு வழியில் தென்பட்ட பெரிய மரத்தின் தண்ணிய நிழல், கடமை அறிந்து ஆட்சி செலுத்தும் மன்னனின் குடை நிழல் போல இருந்தது என்கின்றன இவ்வடிகள்.

            'உயர்ந்ததன் மேற்ற உள்ளுங் காலை' (தொல்.1224)

 என்ற உவமை குறித்த தொல்காப்பிய நூற்பா வழி அணுகும்போது,  கடனறிந்து ஆட்சி செலுத்தும் மன்னனின் செயல் மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. அதுவே சிறந்த மனிதநேயச் செயலாகவும் அமைகிறது.

            அரசிற்குப் பொருள் ஈட்டும் வழிகளில் ஒன்று 'வரிவிதித்தல்' என்பது. இந்த வரிவிதித்தல், மக்களின் வாழ்க்கையினைக் கணக்கிற் கொண்டு அமையவேண்டுமே அன்றி, அரசிற்கு வரும் வருவாயைக் கணக்கிற்  கொண்டு அமைந்து விடுதல் கூடாது. வருவாய் ஒன்றையே நோக்கமாகக் கொண்டால் அது மனிதநேயச் செயலாக  அமையாது. மக்களும் நல்வாழ்வு வாழமுடியாது.  இக்கருத்தையே, மக்கள், மரம் சாகும்படி அதன் மருந்தைப் பறிக்க மாட்டார்; தம் வலிமை முழுதும் கெடும்படி உயர்தவமே ஆயினும் செய்யார்; மன்னர் குடிமக்கள் வளம் கெடும்படி வரி வாங்கார் என்று,

          'மரம்சா மருந்தும் கொள்ளார், மாந்தர்;

          உரம் சாச் செய்யார், உயர்தவம்; வளம் கெடப்

          பொன்னும் கொள்ளார், மன்னர்' ( நற். 226:1-3)

என்ற நற்றிணையின் அடிகள் மனிதநேயத்தோடு சிந்திக்கின்றன.

 ஆ. தனிமனிதர் காட்டும் மனிதநேயம்

            அரசின் செயல்பாடுகள் வெளிப்படையான தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடியவை என்றால், தனிமனிதச் செயல்பாடுகள் சமுதாயத்தில் மறைமுகத் தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடியவை. 'கூரையில் கறையான் போல்' வெளியில் தெரியாது இதன் விளைவுகள். ஒரு சமுதாயத்தின் வளமையை, பெருமையைப் பறைசாற்றுவனவாக அமைபவை தனிமனித செயல்பாடுகளும் அவர்தம் பழக்க வழக்கங்களும் எனலாம். இவையே, இலக்கியப் பதிவுகளாகவும் அமைகின்றன. தன்னை முதன்மைப் படுத்தாது, பிற உயிரை முதன்மைப்படுத்தும் போதுதான் ஒருவன் மனிதநேயம் மிக்கவனாக மலர்கிறான். இளம்பெருவழுதி, இவ்வுலகம்  அழியாமல் உள்ளதற்கு,

            'தமக்கென முயலா நோன்தாள்,

          பிறர்க்கென முயலுநர் உண்மையானே' (புறம்.182:8-9)

என்று காரணம் கூறுவது இங்குச் சிந்திக்கத் தக்கது.  நற்றிணையின் பாடல் ஒன்று பிறர்க்கென வாழும் தலைவனின் பண்பினைக் குறிப்பிடும் போது ‘அருள் நெஞ்சம்’ கொண்டவன் என்று சிறப்பிக்கிறது.

             'பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு' (நற்.186:8)

என்பதால், பிறர்க்கென வாழ்பவர் அருள் நெஞ்சம் கொண்டவரர் என்பதும், அதுவே,  சிறந்த மனிதநேயம் என்பதும் புலனாகிறது.

             தனிமனிதச் செயல்பாடுகளே அன்றி, அவர்தம் ஒழுக்க நெறிகளும் மனிதநேயத்தின் வழி அமைதல் வேண்டும். அதுவே சமுதாய நலனுக்கும் உகந்ததாக அமையும். காதல், வீரம், மானம் என்று வாழ்ந்த ஒரு காலச்சூழலில், காதலின் வழி உடன்போக்கு என்பது பண்புக் கோணலாகக் கருதப்படாத ஒரு காலச்சூழலில், மனித நேயத்தின் வழி நின்ற ஒரு தலைவியின் செயல் இங்கு நோக்கத்தக்கது.  தலைவி, தலைவனுடன் உடன்போக்கிற்கு ஆயத்தமாகிறாள். ஒருவர் கண்ணிலும் படாமல் விடியற்காலையில் எழுகிறாள். வெளியில் செல்ல, தன் காற்சிலம்பு ஒலி எழுப்புமே என்றஞ்சி, அதனைக் கழற்றி பானையில் வைக்கிறாள்.  அவ்வேளையில், இச்சிலம்புகளைக் காணும்தோறும் எம் ஆயத்தார் என் நினைவால்  வருந்துவார்களே என்றெண்ணி, கண்ணீர் சிந்துகிறாள். உடன்போக்கைத் தவிர்க்கிறாள். இச்செயல் உறவுநிலையால் ஏற்படும் இயல்பான பாசமேயன்றி, எப்படி மனிதநேயமாகும்? எனத் தோன்றினாலும்,  யாரைப் பற்றியும், எதைப்பற்றியும் கவலைப்படாமல், தன்னலம்  ஒன்றையே தன்னகத்தில் கொண்டு  மற்றவரைத் தவிக்க விடுவோர் உள்ள இன்றைய சூழ்நிலையில், பெற்றோர்க்காக தன் வாழ்வை இழக்கத்துணிந்த இத்தலைவியின் செயல் மனித நேயமாகவே இங்குக்  கொள்ளப்படுகிறது.

            அரி அமை சிலம்பு கழீஇ, பல் மாண்

          -----------------------------------------

          நும்மொடு வரவு தான் அயரவும்,

          தன் வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே' ( நற்.12:4-10)

இத்தகைய செயல் ஒருவகையான வாழ்க்கைத் தியாகம் எனலாம். இதே போன்ற வாழ்க்கைத் தியாகச் செயல்கள் தலைவனிடத்தும் காணப்படுவது சிறப்பான ஒன்றாகும். தலைவனும் தலைவியும் உடன்போக்கு மேற்கொள்கின்றனர். இடையில் தலைவி களைப்புற்றாள். அவள் களைப்பு நீங்க இடைச்சுரத்தில் தங்கவைக்கிறான் தலைவன். அவ்வேளையில் அவ்விடம் கள்வர்கள் ஆயுதங்களுடன் எதிர்ப்படுகின்றனர். அஞ்சாமல் அவர்களை அடித்து விரட்டுகிறான் தலைவன். அதே வேளையில், தலைவியைத் தேடி அவளின் ஆயத்தார் அங்கு வருகின்றனர். ஆனால் தலைவனோ அவர்களை எதிர்கொள்ளாது, எதிர்க்க எண்ணாது, ஒளிந்து கொள்கிறான். தன் வாழ்வினும் தன்னை விரும்பியவளின் சுற்றத்தார் நல்வாழ்வினை எண்ணும் இத்தலைவனின் மனிதநேயப் பண்பு இவ்விடம் வெளிப்படுகிறது. தலைவனின் இச்செயலை,

            கிடின் என இடிக்கும் கோல் நொடி மறவர்

          வடி நவில் அம்பின் வினையர் அஞ்சாது

          அமரிடை உறுதர, நீக்கி நீர்

          எமரிடை உறுதர ஒளித்த காடே  (நற்.48:6-9)

என்னும் நற்றிணைத் தோழியின் கூற்றில் காண முடிகிறது. இதே போன்ற மற்றொரு தலைவனும், இடைச்சுரத்தில் தலைவியிடம் ஓய்வெடுக்கச் சொல்லி,

            அமர் வரின், அஞ்சேன், பெயர்க்குவென்

           நுமர் வரின், மறைகுவென் மா அயோளே (நற். 362:9-10)

என்று கூறுவதிலிருந்து, கள்வர்கள் வந்தால் அஞ்சாது எதிர்க்க எண்ணும் அவனது ஆண்மையையும், தலைவியின் ஆயத்தார் வந்தால் மறைந்து கொள்ள எண்ணும் அவனது மனிதநேயப் பண்பையும் காண முடிகிறது.

 விருந்துவரின் உவக்கம் பண்பு

            பழந்தமிழரிடம் காணப்பட்ட ஒப்பற்ற மனிதநேயப் பண்புகளில் ஒன்று விருந்தோம்பலாகும். அதிலும், ஆண்மகன்  வீட்டில் இல்லாத காலத்தும், மகளிர், நள்ளிரவிலும் விருந்து வந்தால், இன்முகத்துடன் வரவேற்று, வகையான உணவுகளைச் சமைத்துக்கொடுத்து உபசரித்த பண்பட்ட நேயத்தினைப் பழந்தமிழ் இலக்கியங்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன. நற்றிணையிலும் இத்தகைய மனிதநேயச் செயல்கள் காணக்கிடைக்கின்றன.

          மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்

          'உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே '(மணி.11:95-96)

என்று மணிமேகலை உணவுகொடுத்தலின் பெருமையை உலகிற்கு உணர்த்துகிறது. இரவு நேரத்தில் வந்த விருந்திற்கு,  இல்லை என்று சொல்லாது, இருப்பதைக் கொடாது, இரவு என்றும் பாராது, நெற்றி வியர்க்க, நெய்விட்டுச் சமைத்த ஊனோடு கலந்த உணவினை  வழங்கிய தலைவியை,

                                  எல்லி வந்த நல் இசை விருந்திற்கு,

          கிளர் இழை அரிவை நெய் துழ்ந்து அட்ட

          விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றி (நற்.41: 6-8)

என்ற நற்றிணை அடிகள் காட்டுகின்றன.

            பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

          தொகுத்தவற்றுள் எல்லாம் தலை (குறள். 322)

என்ற வள்ளுவனின் வாக்கு இங்கு ஒப்புநோக்கத்தக்கது.

            இதேபோல, இரவுநேரத்தில் விருந்து வந்தாலும் உவக்கும் தலைவியை,       

                                    'அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்' ( நற்.142: 1)

என்ற நற்றிணை அடியும், விருந்து வரவேண்டும் என்ற விருப்பத்தினைக் கொண்ட தலைவியை,

                                    'விருந்து அயர் விருப்பினள் திருந்து இழையோளே' ( நற்.361: 1)

என்ற நற்றிணையின் அடியும் காட்டுகின்றன.

 தோழி காட்டும் மனிதநேயம்

            சங்க இலக்கியங்களின் அகப்பாடல்களில் தோழியின் பங்கு மிகப்பெரியதாக அமைகிறது. தான் வேறு, தலைவி வேறு என்ற நிலையில் நீங்கி ,

                                    'நினக்கு யான் உயிர் பகுத்தன்ன மாண்பினேன்'(நற்.128:4)

என்ற ‘ஓருயிர் ஈருடல்’ நிலையினை இவர்களிடத்துக்  காணமுடிகிறது. தோழியின் எண்ணம், சொல், செயல் அனைத்துமே தலைவியின் நலம் பேணுவதாகவே அமைகின்றன. தோழி, தலைவியின் பால் காட்டும் அன்பு, இரக்கம், கருணை போன்றவை நட்பு என்ற உறவுநிலையால் வந்ததே ஆதலால், அது மனிதநேயமாகுமா? எனத்தோன்றினாலும், உறவுகளுக்குள்ளும் எதிர்பார்ப்புகள் அற்ற நிலையில் மேற்கொள்ளப்படும்  நற்செயல்கள் மனிதநேயமாகவே கொள்ளப்படுகின்றன.  இந்த வரையறையின் அடிப்படையில் நற்றிணையின் பல பாடல்கள் தோழியை மனிதநேயம் மிக்கவளாகக் காட்டியிருப்பினும்,  எல்லாவற்றினும் சிறந்ததாக ஒரு காட்சி அமைகிறது. தோழி,  தலைவியை தலைவனுடன் உடன்போக்கிற்குக் கொண்டு சேர்க்கிறாள். அப்பொழுது தலைவனிடம் ' தலைவி ¢ இளமையாக இருக்கும் இவ்வேளையில் அவளை நீ விரும்புகிறாய். அவள் நலன் பேணுகிறாய். இனி அவளுக்கு உன்னை விட்டால் வேறு துணையில்லை. இப்பொழுது காட்டும் இதே அன்பினை, அவள் நரை கூடி, கிழப்பருவம் எய்தி, உடல் தளர்வுற்ற  அவ்வேளையிலும் காட்டவேண்டும் ' என்று வேண்டுகிறாள். இதனை,

                                அண்ணாத்து ஏந்திய வன முலை தளரினும்,

          பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த

          நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்,

          நீத்தல் ஓம்புமதி     (நற்.10: 1-4)

என்ற நற்றிணை அடிகள் காட்டுகின்றன. அநாதை இல்லங்களும், முதியோர் இல்லங்களும் பெருகிவிட்ட இக்காலத்தில், இதுபோன்ற அரிய சிந்தனைகள் மனிதநேயத்திற்கு வலுவூட்டுவனவாக அமைகின்றன.

  எவ்வுயிரும் தன்னுயிரே போலல்

            எவ்வுயிராயினும் தன்னுயிரே போல எண்ணி இரங்குதலும் மனிதநேயப் பண்பாகவே கொள்ளப்படுகிறது.

                        எவ்வுயிர்க் காயினும் இரங்குதல் வேண்டும்’ (மணி.11:95-96) 

என்கிறது மணிமேகலை. எவ்வுயிரும் தன்னுயிரே போல எண்ணி இரங்குதலோடு,  எவ்வுயிர்க்கும் தீங்கு நேரா வண்ணம் காத்தலும், தீங்கு நேர்ந்துழி களைதலும் மனிதநேயத்தின் உயர்நிலையாம். இவைபோன்று மனிதநேயப் பண்புகளை நற்றிணையில் காணமுடிகிறது. தலைவன் தலைவியைப் பிரிந்து பொருள்தேடச் சென்றான். வெகுநாட்கள் பிரிந்திருந்து, வினைமுடிந்து, தலைவியைக் காணும் ஆவலில் தேரில் வந்துகொண்டிருக்கிறான். நெஞ்சத்தின் வேகத்திற்குத் தேர் ஈடுகொடுக்கவில்லையே என்று வருந்துவது மனித இயல்பு. ஆனால், இத்தலைவன் தான் செல்லும் விரைவில்,  வழியில் திரியும் நண்டுகளுக்கு ஊறு நேர்ந்துவிடக் கூடாதே என்றெண்ணி, தேரினை மெதுவாகச் செலுத்துகிறான். இது மிகச்சிறந்த மனிதநேயப் பண்பிற்கு, உயிரிரக்கத்திற்கு உதாரணமாக அமைகிறது. இதனை,

                     'ஆழி மருங்கின் அலவன் ஓம்பி

          வலவன் வள்பு ஆய்ந்து ஊர'  ( நற்.11: 7-8)

என்ற நற்றிணை  அடிகள்  காட்டுகின்றன.

            உடன்பிறந்தாரையே உதறித்தள்ளும் இன்றைய காலச்சூழலில், தான் வளர்த்த புன்னை மரத்தினைத் தன் 'உடன்பிறந்தாளாக' எண்ணும் உயரிய பண்பினை உடைய தலைவியை நற்றிணைப் பாடல் ஒன்று காட்டுகிறது.

                               விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,

          --------------------------------------------------------

          நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும் என்று,

          அன்னை கூறினள், புன்னையது நலனே ( நற்.172: 1-5)

இவ்வடிகளின் மூலம் , பழந்தமிழரின் இயற்கையோடு ஒன்றிய வாழ்வினையும், மரம் போன்று அஃறிணை உயிர்களிடத்தும் அன்புகொண்டு ஒழுகினர் என்பதையும் அறிய முடிகிறது. இப்பண்பு வேறு எச்சமுதாயத்தினின்றும் தமிழர்களை உயர்த்திக் காட்டுவதாக அமைகிறது. 'நும்மினும் சிறந்தது  நுவ்வை ஆகும்' என்ற அடியால், பெற்ற மகளை விட வளர்த்த மரத்தினை உயர்வாக எண்ணிய பழந்தமிழரின் பாங்கினைப் பார்க்கமுடிகிறது. மரம், செடி, கொடி, பயன் கருதி வளர்த்தல் என்பது வேறு; பாசம் கருதி வளர்த்தல் என்பது வேறு; பாசத்தைப் பகிர்ந்து வளர்த்த தலைவியை இப்பாடல் காட்டுகிறது.

       'ப்ளூ கிராஸ்' போன்ற அமைப்புகளெல்லாம் இன்று அதிகமாகப் பேசப்படுதலும், ஒருபுறம்   'பசுவதைத் தடுப்புச் சட்டம்'  இயற்றப்படுதலும்,

                    கறந்து குடிப்பாய்

                   கன்றிற்குவிட்ட பாலை;

                   அது நியாயம்!

                   இறந்த பசுவின்

                   தோலுரித்துப் பிழைத்தால் ...

                   அது அநியாயம்;

                   இது என்ன நியாயம்?

என்ற குமுறல் ஒருபுறமும் ஒலித்துக்கொண்டிருக்கும் இன்றைய காலநிலையில்,  நல்ல எருது நடைதளர்ந்து போனதால் அதனிடத்து வேலை வாங்காது, துன்புறுத்தாது,  புல்வெளியில் மேய விட்டுவிட்ட மனிதநேயச் செயலினை நற்றிணைக் காட்டுகிறது.

            'நல் எருது நடை வளம் வைத்தென, உழவர்

          புல்லுடைக் காவில் தொழில் விட்டாங்கு' (நற்.315: 4-5)

என்ற இவ்வடிகளின் வழி, ‘உயிரினங்களைக் காக்கிறோம்’ என்ற போலி விளம்பரத்துடன் தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ளும் இன்றைய சமூக சேவகர்களைப்(!) போலல்லாமல், பழந்தமிழர், இயற்கையிலே தங்களுள் மனிதநேயச் சிந்தனையை  கொண்டிருந்தனர் என்பது தெளிவு.

            மரங்கள், விலங்குகள் போன்றவற்றின் மீது இரக்கம் கொண்டிருந்ததைப் போலவே பழந்தமிழர் பறவைகளிடத்தும் இரக்கம் கொண்டிருந்தனர். பறவைகளுக்கும் கருணை காட்டினர். நிலத்தில் விளைந்த விளைச்சலை வீட்டில் சேர்க்கும் காலம் வந்தது. நல்ல வெண்ணெல் விளைந்திருந்தது. அதனை அரிந்து எடுக்க எண்ணிய உழவர்கள் 'தண்ணுமை' என்னும் கருவியை முழக்கி இசையை எழுப்பினர் என்ற குறிப்பினை நற்றிணையின்,

              வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ

             பழனப் பல் புள்இரிய (நற். 350: 1-2)

என்ற அடிகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், நெற்பயிரில்  சிறு குருவிகள் கூடுகட்டி வாழ்ந்திருக்கும். நெல்லை அரிந்தெடுக்கும் போது அக்குருவிகளுக்குத் தீங்கு நேரிடும். இசையை முழங்கி ஆராவாரம் செய்தால், அக்குருவிகள் தங்கள் கூட்டத்தோடு வேற்றிடம் பெயரும் என்ற   மனிதநேயச் சிந்தனையை உணரமுடிகிறது.

 இ. பொதுவான மனிதநேயச் சிந்தனை

            சமுதாய நோக்கில், பொதுவாக மக்களுக்கு வேண்டுவனவாக ஆங்காங்கே சில மனிதநேயச் சிந்தனைகளை நற்றிணை காட்டுகிறது. அவை பழமொழிகளின் அமைப்பில் காணப்படுகின்றன.

            எதிரியாயினும்  அவரின் பிரிவும் மனதினைக் கலங்கச் செய்யும் என்பதை,

                                    'பழகிய பகையும் பிரிவு இன்னாதே' ( நற்.108:6)

என்ற அடி காட்டுகிறது. எதிரியாயினும் அவருக்கும் இரக்கங்காட்டும் பழந்தமிழரின் பண்பை இவ்வடி உணர்த்துகிறது. தீயவர் பலர் தண்டிக்கப்படாவிட்டாலும், நல்லவர் ஒருவர் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பது மனிதநியதி. இந்நியதியைச்¢ சங்கத்தமிழர் நன்கு உணர்ந்திருந்ததாலேயே ,

                                    'பழி  பிறிதாகல் பண்புமார் அன்றே' ( நற்.117: 11)

என்று, பாவம் ஒருபுறம், பழி வேறுபுறம் சென்றுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். அப்படி நேர்ந்துவிடுதல் பண்பும் அல்ல என்பதை உணர்ந்ததோடு  உலகிற்கும் உணர்த்தினர். மேலும்,

                                தீமை கண்டோர் திறத்தும் பெரியோர்

          தாம் அறிந்து உணர்க  (நற்.116: 1-2)

என்பதால், தீமைகள் நடந்துவிட்ட போது, அவசரப்பட்டு ஒருமுடிவிற்கு வந்து  தண்டணை வழங்கிவிடுதல் முறையாக அமையாது. உண்மையை ஆய்ந்தறிந்தே, முடிவினைக் கூறவேண்டும் என்பதில் உலகிற்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தனர். நல்லவர் தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் மனிதநேயத்தோடு  சிந்தித்துச் செயல்பட்டுள்ளனர் பழந்தமிழர்.

            பிறர் உழைப்பில் உயிர் வாழாமல், தன் உழைப்பில், உழைக்க முடியாதவர்களையும் வாழ வைப்பது மிகச்சிறந்த  மனிதநேயச் செயலாகும். இதை விட இனிமையான செயல் வேறில்லை என்பதை நற்றிணையின்,

                        'தமது செய் வாழ்க்கையின் இனியது உண்டோ?' ( நற். 130: 5)

என்ற அடி உணர்த்துகிறது.

      சில சமயங்களில் மனிதநேயமற்ற செயல்போல் தோன்றுவனவும்¢, மனிதநேயச் செயலாகவே அமையும் சிலர் தேவையை அறிந்து வேட்டது கொடாமல், வேண்டியதைக் கொடுப்பது இதன்பாற்படும். பிணியுற்றோர், தன் உடலுக்குத் தீங்கானவற்றின்  மீதும் வேட்கையுற்றிருப்பது இயற்கை. ஆனால், அவ்வேளையில் அவர்களின் உடல்நலத்திற்கு உகந்ததை  அறிந்து கொடுப்பது மருத்துவனின் மனிதநேயப் பண்பாக அமையும்.  இதனை,

            ' அரும்பிணி உறுநர்க்கு, வேட்டது கொடாஅது,   

          மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல ' ( நற். 136: 2-3)

என்ற அடிகள் உணர்த்துகின்றன.

 உண்மைச் செல்வம்

            செல்வம் என்பது, ஒருவன் சேர்த்து வைத்திருக்கும் பொன்னையோ, பொருளையோ, இனிதாகப் பயணம் செய்ய வைத்திருக்கும் ஊர்திகளையோ, இனியவை செய்யக் காத்திருக்கும் வேலையாட்களையோ  பொறுத்து  அமைவதில்லை. நல்லவர்களின் செல்வம் என்பது, அவரைச் சேர்ந்தோரின் துன்பங்கண்டு களையும் உயர்ந்த பண்பேயாகும் என்ற இவ்வரிய மனிதநேயச் சிந்தனையை,

                               நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்

          செல்வம் அன்று; தன் செய் வினைப் பயனே,

          சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர்

          புன்கண் அஞ்சும் பண்பின்

          மென் கட் செல்வம் செல்வம் என்பதுவே (நற்.210:5-9)

என்ற நற்றிணை அடிகள் உணர்த்துகின்றன.

முடிவு

        மனிதநேயம் என்பது பிறர்க்கு சிறுதுன்பம்  நேர்ந்தபோதும், தன் நலனைக் கருதாது விரைந்து சென்று, அத்துன்பம் களைய முனைவதாகும்.

                               'கண்ணுறு விழுமம் கைபோல் உதவி' (நற்.216:3)

என்ற நற்றி அடி உரைப்பதுபோல,  கண்ணிற்கு ஏதாவது துன்பம் என்றால், கை யோசிப்பதில்லை, விரைந்து சென்று துயர் நீக்கும். மனிதநேயம் என்பதும் இதைப் போன்றதே. தனக்கு ஏற்படும் நன்மை, தீமைகளைக் கருதாது, எதிர் இருப்போரை/இருப்பதை நன்மை ஒன்றையே கருத்தாகக் கொண்டது. அவர்தம் தீமை களைய முனைவது.

            மனிதநேயப் பண்புகள் என்பது,  நாம்  அரிதின்  முயன்று உருவாக்க வேண்டிய ஒன்றல்ல,

                     'ஆன்றோர் செல் நெறி வழா அச்

                    சான்றோன் ஆதல் நற்கு அறிந்தனை தெளிமே' (நற்.233: 8-9)

என்ற அடிகளின் கருத்தைப்போல, நல்லோர் காட்டிய நல்வழிகளில் வாழ்ந்தாலே, மனிதநேயப் பண்புகள் மலர்ந்து மக்களிடையே மணம் பரப்பும் என்பது தெளிவு. வள்ளுவரின்,

            ‘மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

          பழித்தது ஒழித்து விடின்’ (குறள்.280)

என்ற முடிவினை ஒப்பு நோக்கல் இங்குச் சிறப்பாக அமையும்.

 தொகுப்பு:

       1. அன்பு, இரக்கம் , கருணை முதலிய மனிதனின் அடிப்படைப் பண்புகளிலிருந்து தோன்றி  வளர்வதே மனிதநேயம்.

           2. மனிதன் மனிதனிடத்துச் செலுத்தும் அன்போடு, பிற உயிர்களிடத்தும் காட்டும் அன்பு, இரக்கம், கருணை போன்றவையும் மனிதநேயமாகவே கொள்ளப்படுகின்றன.

    3. சில மனிதநேயச் செயல்கள் உறவுநிலை என்ற அடிப்படையில் எழுந்ததாகக் கருதப்படினும், எதிர்ப்பார்ப்புகள் அற்ற  நிலையில் செய்யப்படும் இவை போன்ற செயல்களும் இங்கு மனிதநேயத்தின்பால் வைக்கப்படுகின்றன.

            4. எவ்வுயிர்க்கும்  மனதால், மொழியால், செயலால் நல்லன ஆற்றுதல் என்னும் 

உயர்பண்பே  மனிதநேயத்தின் முழுமையெனக் கொள்ளப்படுகிறது.

 

             சோதனைக் குழாயில்

            சொந்தங்களை உண்டாக்கினோம்!

            போதனைகள் கேட்க-கணிப்

            பொறிகளைப் படைத்தோம்¢!

            குளோனிங்கால்

            கோபுரத்தை அடைந்தோம்!

            இணையதளத்தால்

            இமயத்தைத் தொட்டோம்!

            நாடுவிட்டு நாடு மாறினோம்!

            மதம் விட்டு மதம் மாறினோம்!

            மனிதனாக இருந்தும்

            நாம் மனிதநேயம் மறந்தோம்! (ஆ.மணவழகன்)

என்ற நிலையினை மாற்றி, அல்லன தவித்து, நல்லன செய்து நாம் மனிதநேயம் மலரச்செய்வோம்.          

 அடிக்குறிப்பு

            1.க்ரியாவின் தற்கால தமிழ் அகராதி, தமிழ்-தமிழ்-ஆங்கிலம், முதல் பதிப்பு 1992

            2. குறள். அருளுடைமை விளக்கம், பிப்ரவரி 2001, பூம்புகார் பதிப்பகம், சென்னை.

            3. ச. சிவகாமி, சங்கத்தமிழியல், மாதவி பதிப்பகம், சென்னை-14

முதன்மை நூல்கள்

   1.நற்றிணை, முதல் பதிப்பு 1999, புலவர் நா. இராமையா பிள்ளை, வர்த்தமானன்    பதிப்பகம், தி.நகர், சென்னை-17

   2. நற்றிணை மூலமும் உரையும், வித்துவான் H. வேங்கடராமன்,         மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.ச நூல்நிலையம், பெசன்ட்நகர், சென்னை -          90