செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

கொங்கு வேளாண் சடங்குகள்

 முனைவர் ஆ. மணவழகன், தமிழ்த்துறைத் தலைவர், அறிவியல் (ம) மானுடவியல் புலம், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர் 603 203.

 (கொங்கு வேளாண்மை வழக்காறுகள், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை,        நவம்பர்.12,13, 2009)

 

            சேலம் மாவட்டம் கொங்குநாட்டின் ஒரு பகுதியாக பண்டைய நாட்களில் இருந்து வந்துள்ளது. அதற்கு முன்னர் அதியமான் ஆட்சிப் பகுதிகளில் ஒன்றாக இருந்தது.  சேலம் மாவட்டத்தின் வரலாறு பழமையானது. இங்கு, புதிய கற்கால மனிதர் பயன்படுத்திய கோடாரிகள், சுத்திகள், பானைகள், தேய்ப்புக் கற்கள், வளையல்கள் போன்றவை சேர்வராயன், கல்ராயன், வத்தலமலை, மேலகிரி, குட்டிராயன் மலை முதலிய பகுதிகளில் கிடைத்திருக்கின்றன. எண்ணற்ற நடுகற்கள் கிடைத்திருக்கின்றன. இம்மாவட்டம் அதியமான்கள், சோழர், கன்னடர், நாயக்கர், திப்புசுல்தான், ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.

             இம்மாவட்டத்தில் உள்ள மலையைச் சேரன் ஆண்டதால் சேர்வராயன் மலை ஆயிற்று. அது போல  ‘சேரலம்’ என்பது ‘சேலம்’ ஆயிற்று என்றும் கூறுவர். ஏத்தாப்பூர் செப்பேடு இவ்வூரைச் “சாலிய சேரமண்டலம்” எனக் குறிப்பிடுகிறது.  சேரலம் என்னும் பெயரே காலப்போக்கில் சேலம் எனத் திரிந்து வழங்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் இங்கு வேளாண்மை செய்யப்பட்டு வருகிறது. நெல், கரும்பு, பருப்பு வகைகள், வாழை, பருத்தி, மரவள்ளிக் கிழங்கு, தென்னை, மல்லிகை, ரோஜா, மாம்பழம், பிற பழ வகைகள், காப்பி, பாக்கு, நிலக்கடலை, எள், வெற்றிலை போன்றவை விளைவிக்கப்படுகின்றன.

             முன்பு கொங்கு மண்டலத்தின் கிழக்குப் பகுதியாகவும் தற்போது சேலம் மாவட்டத்தின் கிழக்கு, தென்-கிழக்கு எல்லைகளாகவும் உள்ள ஆத்தூர், கெங்கவல்லி வட்டங்களில் காணப்படும் வேளாண் சடங்குகள் பழமையின் நீட்சியாக விளங்குகின்றன.  மலைசூழ்ந்த கிராமங்களை உள்ளடக்கிய இப்பகுதிகளில் ஆதிகாலம் தொட்டு வேளாண்மையும், அத்தொழில் சார்ந்த நம்பிக்கைகளும், சடங்குகளும்  ஒன்றோடொன்று இணைந்தே காணப்படுகின்றன. இப்பகுதி வேளாண்தொழிலில் நேரடியாகப் பார்த்த சடங்குகள் மற்றும் இப்பகுதி விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட சடங்கு சார்ந்த தகவல்கள் இங்குத் தொகுத்தளிக்கப்படுகின்றன.

 பொன்னேர் அல்லது நல்லேர்

            பொன்னேர் பூட்டுதல் என்ற ஒன்று வட தமிழகம் முழுவதும் பரவலாகக் காணப்படும் வேளாண் சடங்காக அறியப்படுகிறது (பொன்னேர்- பருவ காலத்தில் நல்ல நாளில் முதன்முதலாக உழும் கலப்பை). சேலம் மாவட்ட பகுதிகளில் இது நல்லேர் பூட்டுதல் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. ஆடிமாதத்தில் கோடைமழை பொழிந்ததும் பூட்டப்படும் முதல் ஏர் பொன்னேர் எனப்படுகிறது (சிலர் சித்திரை மாதம் என்கின்றனர்). பழங்காலத்தில் விவசாயிகள் அனைவரும் நன்னாளில் ஒரே நேரத்தில் அவரவர் நிலத்தில் ஏர்பூட்டி பொன்னேர் பூட்டி உழுதனர். இப்பொழுது இச்சடங்கு பெயரளவில் மட்டுமே உள்ளது.

             நிகழ்த்து முறை

      ஏர் பூட்டுவதற்கு முன்னர் அரிசியும் வெல்லமும் கலந்து அனைவருக்கும் கொடுக்கப்படுகிறது. நிலத்தின் சனி மூலையிலிருந்தே (வடகிழக்கு மூலை) அனைத்து நிகழ்வுகளும் தொடங்கப்படுகின்றன. வயலின் கிழக்கு-மேற்காக மூன்று சுற்றுகளும், வடக்கு-தெற்காக மூன்று சுற்றுகளும் உழப்பட்டு, ஏர் நிறுத்தப்படுகிறது. பின்னர் அவரவர்  தேவைக்கும் நிலத்தின் தன்மைக்கும் ஏற்ப உகந்த நாட்களில் முறையாக முழு நிலமும் உழப்படுகிறது.

 நெல்லும் - சடங்கும்

            தமிழர் தம் வாழ்வோடும், வாழ்வியற் சடங்குகளோடும் நெருங்கிய தொடர்புடையது நெல். நெல்லுக்கும் சடங்குக்குமான உறவு  நாற்று விடுதலிலேயே தொடங்கி விடுகிறது.

 வெள்ளி விதைப்பு

            வெள்ளி விதைப்பு வியாழன் அறுப்பு’ என்பது இப்பகுதிகளில் வழங்கப்படும் உழவுசார் அனுபவ மொழி.  வெள்ளிக்கிழமை நாற்று விடுதல் நல்ல பலனைத் தரும் என்கின்றனர். மேலும், ‘ஆடி நாற்று அறுபது நாளைக்கு’ என்ற மொழியாட்சியும் வழங்குகிறது. ஆடி மாதத்தில் விடப்படும் நாற்று அறுபது நாட்கள் வரை கிளைபிரியாமல், எடுத்து நட ஏதுவாக இருக்கும் என்றும், மற்ற மாதங்களில் நாற்று விட்டால் முப்பது நாட்களுக்குள் பிடுங்கி நட்டுவிட வேண்டுமென்றும், இல்லையேல் பயிர் நாற்றங்காலிலேயே கிளைத்து, கதிர் விடத் தொடங்கிவிடும் என்றும் கூறுகின்றனர். பயிர் நாற்றங்காலில் கிளைவிட்டால் நடவிற்கு உதவாது. அப்படியே பிடுங்கி நட்டாலும் தளைத்து வளராது. மகசூலும் இருக்காது.

             நாற்று விட பக்குவமான நிலம் தேர்வு செய்யப்படுகிறது. நல்ல நாளில் உழப்பட்டு, மேல்நோக்கு நாள் பார்த்து ஊறவைத்து முளைகட்டிய நெல் விதைக்கப்படுகிறது. நெல் விதைக்குமுன் சனிமூலையில் சாணியால் பிடித்த பிள்ளையார் வைத்து, அதன் உச்சியில் அருகம்புல் செருகப்படுகிறது. அதைச் சுற்றிலும் மலர்களும் வைக்கப்படுகின்றன. நல்லநேரம் பார்த்து, முளைவிட்ட நெல்மணிகள் பிள்ளையாரைச் சுற்றி தூவப்படுகின்றன. அதன் பின்னரே நாற்றங்காலில் நெல் விதைக்கப்படுகிறது. நெல் விதைப்பிற்கேற்ற பதத்தில் இல்லையென்றால், நல்ல நாள், நேரம் பார்த்து,  பிள்ளையார் வைத்து, சிறிது நெல் மட்டும் விதைக்கப்படுகிறது. பின்னர் விதைநெல் பதத்திற்கு வந்தவுடன் பிறிதொருநாள் முழு நாற்றங்காலிலும் விதைக்கப்படுகிறது.

 கிணற்றில் மிதக்கும் நாற்று

            உழுதல்,  விதைத்தல், நடுதல், அறுத்தல் என அனைத்து செயல்களுமே வயலின் சனி மூலையிலிருந்தே தொடங்கப்படுகின்றன. நடவுசெய்தலும் அவ்வாறே. நாற்று நடுவதற்கு முன்னர் நாற்று முடிச்சில் ஒன்றோ அல்லது நாற்றில் சிறிதளவு எடுத்து முடிச்சாக முடிந்தோ கிணற்று நீரில் போடும் சடங்கு காணப்படுகிறது. கிணற்றில் மிதக்கும் நாற்று வாடாமல் இருப்பது போல நிலத்தில் பயிறும் வாடாமல் இருக்கவே இச்சடங்கு என்று காரணம் கூறுகின்றனர். ஆனால், நிலத்தில் நடப்படும் பயிர்களுக்கு ஏதாவது சிறு பாதிப்பு ஏற்பட்டால் கிணற்றில் வாடாமல் மிதக்கும் பயிரைப் நடவுக்குப் பயன்படுத்திக்கொள்ள நாற்றங்கால் சேமிக்கும் இந்நிகழ்வு நடந்திருக்கலாம் என்பதை யூகிக்க முடிகிறது.  சனிமூலையில் தொடங்கப்படும் நாற்று நடவு, பிள்ளையார் மூலையில் முடிக்கப்படுகிறது(தென்மேற்கு). நாற்று நட்டு முடித்ததும் பெண்கள் குலவை ஒலி எழுப்புகின்றனர்.

 இனிப்போடு தொடங்கும் அறுப்பு

            நடவு தொடங்கி முடித்த திசைகளிலேயே அறுப்பும் தொடங்கி முடிக்கப்படுகிறது. நெல் அறுப்பு தொடங்குமுன், சனி மூலையில் சிறிது அறுத்து அடித்து,  உலக்கையால் குத்தி, அரிசி பிரித்து, அரிசியில் வெல்லமும்  தேங்காயும் கலந்து அனைவருக்கும் வழங்கப்படுகிறது. அதன் பின்னரே முழு அறுப்பு தொடங்குகிறது. தொடக்கத்தில் அரிசியின் முற்றல் பதம் அறிய இவ்வகைச் செயல்பாடு நடந்திருக்க வேண்டும். பின்னாளில் அதுவே சடங்காக மாறிவிட்டமையைக் காணமுடிகிறது.

             நெல் அடித்தலில்

            நெற்கட்டுகள் களத்தை அடைந்ததும் இரண்டொரு நாள் நெல்லின் தன்மைக்கு ஏற்ப களத்திலேயே குவித்து வைக்கப்படுகின்றன.  பின்னர்,  நெற்கட்டின் மீது அகலமான கல்லை வைத்து, சூரியனை வணங்கி,  வடக்குப் புறமாகத் திரும்பி அரி பிரித்து (அரி-நெற்கட்டின் சிறு சிறு பகுப்பு) அடிக்கப்படுகிறது. நெல் அடித்து முடித்ததும் அதே போல சூரிய வணக்கம் நடைபெறுகிறது.

 இலாபம்... வளர... மூன்று...

    களத்தில் அடித்துக் குவிக்கப்பட்ட நெல்லை அளத்தலிலும் சில சடங்குகள் காணப்படுகின்றன. இங்கும் பிள்ளையார் முதன்மை பெறுகிறார்.   நெற்குவியலின் சனி மூலையில் சாணிப் பிள்ளையார் பிடித்துவைக்கப்படுகிறது. அதன் தலையில் அருகம்புல் செருகப்படுகிறது. நெற்குவியலின் தெற்குத் திசையிலிருந்து வடக்கு நோக்கி அளக்கப்படுகிறது. அளவை தொடங்கியதும் ‘இலாபம், வளர, மூன்று’ என்று மூன்று வள்ளங்கள்(வள்ளம்-நான்கு படி கொள்ளளவு / அளவைப் பொருள்) அளக்கப்பட்டு, பிள்ளையாரிடத்தில் தனியாகக் கொட்டப்படுகிறது. அதன் பின்னரே முறையான அளவை தொடங்குகிறது. மேலும், முதல் மூன்று வள்ள நெல்லையும் நெற்குவியலின் வலப்புறமாகச் சுற்றி வந்து பிள்ளையாரிடத்துக் கொட்டுகின்றனர்.  மேலும்,  நெல் அளந்து முடித்ததும் வள்ளத்தை வெறுமனே வைக்காமல், நான்கைந்து  நெல் மணிகளை அதில் போட்டு வைக்கின்றனர்.

 எறியும் வெல்லக்கட்டி

      நாற்று விடுதலில் தொடங்கும் வேளாண் சடங்குகள் வைக்கோல் போர் போடுதல் வரையிலும் நீள்கின்றன. போர் போட்டு முடித்ததும், போரின் நான்கு பக்கங்களிலும் வேப்பிலையைச் செருகி வைக்கின்றனர். அதோடு, போரின் மேலிருந்தபடி போர் போட்டவர் வெல்லத்தைச் சுறு துண்டுகளாக்கி நான்கு  திசைகளிலும் எறிகின்றார். பின்னரே போரை விட்டு இறங்குகின்றார். காரணம் அறியப்படா சடங்கில் ஒன்றாக இதுவும் இன்றளவும் நிகழ்த்தப்படுகிறது.

 தமிழர் திருநாளில் - வேளாண் சடங்குகள்

     தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் வேளாண் சடங்குகள் பலவற்றின் தொகுப்பாகவும், தொடர்நிகழ்வுகளாகவும் அமைவதைக் காணலாம். நிலம், கால்நடை, பயிர் வகைகள், வேளாண் பயன்பாட்டுப் பொருட்கள் என அனைத்தோடும் தொடர்புடைய சடங்குகளைப் பொங்கல் திருநாள் கொண்டுள்ளது.

       குறிப்பாகப் போகிப்பண்டிகையின் மறுநாள் விடியற்காலையில் ‘காடு வளைத்தல்’ என்ற ஒரு சடங்கு நிகழ்த்தப்படுகிறது. இது பெரும்பாலும் இவ்வட்டாரத்தின் வன்னியர் இன மக்களிடையே காணப்படும் சடங்காக அறியப்படுகிறது. முதல்நாள் இரவு மாரியம்மனுக்கு வைத்துப் படைத்த வேப்பிலை, பூலாப்பூ, ஆவாரங் கொத்து போன்றவற்றை, மறுநாள் சூரியன் உதிப்பதற்கு முன்பு எடுத்துச் சென்று, தம் நிலத்தின் நான்கு எல்லைகளிலும் வைக்கின்றனர். இதற்கு ‘காடு வளைப்பு’ என்று பெயர். நிலத்திற்கு பத்திரம், பட்டா என்று எவையும் இல்லாத தொடக்க காலத்தில், வேளாண் மக்கள் தங்கள் நிலங்களின் எல்லைகளை ஆண்டுக்கு ஒருமுறை உறுதிப்படுத்திக்கொள்ள இம்முறை  கையாளப்பட்டு,  பின்னாளில் இது சடங்காக மாறியுள்ளதை அறியமுடிகிறது.  நிலம் இல்லாதவர்களும் தங்கள் வீடுகளின் மேற்கூரைல் மேற்கண்ட காடுவளைத்தல் பொருட்களைச் செருகி வைக்கின்றனர்.

        மாட்டுப்பொங்கலன்று நிலத்தில் விளையும் விளைச்சலோடு, வேளாண் பயன்பாட்டுக் கருவிகளும் பூசையில் வைக்கப்படுகின்றன. மாடு ஓட்டுவதற்கான தடிகூட புதிதாக வெட்டப்பட்டு, வண்ணம் பூசப்பட்டு பூசையில் வைக்கப்படுகிறது. வாசல் சாணியால் மெழுகப்பட்டு, கோலமிடப்படுகிறது. கோலத்தின் மீது சாணியால் நான்கு சிறுசிறு அறைகளைக் கொண்ட சிறிய தொட்டி கட்டப்படுகிறது. தொட்டி பாலால் நிரப்பப்படுகிறது. தொட்டியின் சனிமூலையில் மஞ்சளை அரைத்துச் செய்ய பிள்ளையாரும் மற்ற மூலைகளில் சாணிப்பிள்ளையாரும் வைக்கப்படுகிறது. தொட்டிப்பாலில் பூக்கள் தூவப்படுகின்றன. பொங்கல் பூசை முடிந்ததும், தொட்டிக்கு முன்னால் உலக்கை கிடத்தப்பட்டு, மாட்டை உலக்கையைத் தாண்டச் செய்து, தொட்டியை மிதிக்க வைக்கின்றனர். நாய் போன்ற விலங்குகள் வாய் வைத்துவிடாதபடி தொட்டி பாதுகாப்பாக மூடி வைக்கப்படுகிறது. மறுநாள் கரிநாள் அன்று அனைத்திற்கும் விடுமுறை. சாணிகூட எடுப்பது கிடையாது. கரிநாளுக்கு மறுநாள் சாணித் தொட்டியும் பூசையில் வைக்கப்பட்ட தழை போன்ற மக்கும் பொருட்களும்  எருகுழியில் கொட்டப்படுகின்றன.  தொட்டிச் சடங்கிற்கான காரணம் அறியப்படவில்லை.

 பிற சடங்குகள்

        பயிர் செய்தல் தொடர்பான சடங்குகளோடு மரம் தொடர்பான சடங்குகள் சிலவும் இவ்வட்டாரங்களில் காணப்படுகின்றன. தென்னைமரம் முதல் பாளையை ஈனும்போது பொங்கல் வைத்து மரத்தை வழிபடும் சடங்கு சில இடங்களில் காணப்படுகிறது. அதேபோல, மா, தென்னை போன்றவற்றில்  முதலில் காய்க்கும் காய்கள் கோயில்களிலும், கோயில் திருவிழாக்களின் போது தேர்களிலும் கட்டிவிடப்படுகின்றன. 

       ஆண்டுகள் பல ஆகியும் காய்க்காத மரங்களைக் காய்க்க வைக்க செய்யப்படும் சடங்கைச் சில பகுதிகளில் காணமுடிகிறது.  அதாவது, காய்க்காத மரத்தை வெட்டிவிட வேண்டும் என்று உரக்கச் சொல்லிக்கொண்டு ஒருவர் தம் கையில் அரிவாளுடன் மரத்தை வெட்டச் செல்கிறார் (பாவனை); அரிவாளை ஓங்கி ஓங்கி காயம் ஏற்படாதவண்ணம்  மரத்தின் மீது வைக்கவும் செய்கிறார். அருகிருக்கும் இன்னொருவரோ ‘ஐயோ! மரத்தை வெட்டிவிடாதீர்கள், இனி அது ஒழுங்காகக் காய்க்கும், விட்டுவிடுங்கள்’ என்று வெட்ட வருபவரைத் தடுக்கிறார். சரி, இந்தப் பருவத்திலும் காய்க்கவில்லை என்றால் வெட்டிவிடுவேன், இப்போது நீங்கள் சொல்வதால் விடுகிறேன் என்று வெட்ட வந்தவர் கூறி, ஓங்கிய அரிவாளை கீழேப் போடுகிறார். இதனால், வெட்டிவிடுவார்களோ என்று அச்சமடைந்து, மரம் காய்க்கத் தொடங்கும் என்பது நம்பிக்கை. சடங்குகளும் நம்பிக்கைகளும் அவரவர் வாழ்வியல் அனுபவத்தைப் பொறுத்து அமைகின்றன. இசைக்கு அதிக காய்களை ஈனும் வாழையை அறிவியல் காட்டும் போது, அச்சத்தில் காய்க்கத் தொடங்கும் மரங்களையும் மறுப்பதற்கு இல்லை.

       அதேபோல, கார்த்திகை மாதத்தில் எரு மேட்டில் (எருக்குழி) அகல் விளக்கு ஏற்றி வைத்தலும், சுடலை கொளுத்தும்போது அதில் மிஞ்சும் எரிந்த விறகினை விளைநிலத்தின் நடுவே நட்டு வைக்கும் பழக்கமும் காணப்படுகிறது. அவ்வாறு நட்டு வைத்தால் அவ்வாண்டு அதிக விளைச்சல் இருக்கும் என்பது நம்பிக்கை.

       சேலம் மாவட்டத்தில் பழமையின் நீட்சியாக வேளாண் சடங்குகள் பல நிகழ்த்தப்பட்டாலும், பலவற்றிற்கான காரணங்களை அறியமுடியவில்லை. சிலவற்றின் காரணங்கள் திரிந்துள்ளதாகத் தோன்றுகிறது. வேளாண் சடங்குகள் முழுமையான ஆய்விற்கு உட்படுத்தபட வேண்டியவை என்பது மட்டும் தெளிவு.

     நவீன வேளாண் கருவிகளான  உழவு எந்திரங்கள் போன்றவை வந்தபிறகு பொன்னோர் பூட்டுதலை வாய்வழிச்செய்தியாகக் கேட்டலன்றி எங்கே காண்பது? ஆழ்துளைக் கிணறுகள் ஆங்காங்கே எறும்புப் புற்றுகளாய் வேர்விட்டு நீர் உரிஞ்சி நிற்க,     ‘நாற்றில் சிறிதளவு கிணற்றில் போட்டு வைக்கும்’ வேளாண் சடங்கை எங்குத் தேடுவது? இத்தலைமுறைக்குச் இவை செவிவழிச் செய்தி, அடுத்தத் தலைமுறைக்கு இதுவும் இல்லை. இவ்வகைப் பதிவுகளும், இவைகுறித்தான ஆய்வுகளுமே தமிழர் பண்பாட்டை அடையாளப்படுத்துவன.

*****

 தமிழியல்

www.thamizhiyal.com