புதன், 19 ஆகஸ்ட், 2020

ஏறு தழுவுதல் – தமிழர் பண்பாடு


 முனைவர் ஆ.மணவழகன், இணைப் பேராசிரியர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை - 600113. நவம்பர் 23, 2016.

 

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்

விண்ணோடும் உடுக்களோடும்

மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த

தமிழுடன் பிறந்தோம் நாங்கள்

 

என்பார் பாவேந்தர் பாரதிதாசன். அண்டத்தின் கருக்கள் உருவான போதே உருவானவை தமிழினமும் மொழியும் என்பது இவர்போன்ற ஆன்றோர் வாக்கு. உலக உயிர்களுள்  மூத்த இனமாம் தமிழினத்திற்கெனப் பல சிறப்புகள் உண்டு. அவற்றுள் கலையும் பண்பாடும் தனிச் சிறப்பு. பழங்காலத்துக் கலைகளுள் முதன்மை பெறுவது ஏறுதழுவுதல் எனும் வீரக் கலை. 

            மாடுகளில் ஆண்மையுடையது எருது. இது பழங்கால முல்லை நிலத்து ஆயர்களின் பெருஞ்செல்வம். மதம் கொண்ட யானையையும் கடும் புலியையும் எதிர்கொண்டு தாக்கும் வலிமையுடையது. வினையின் சிறப்பால் இது கொல்லேறு என்று போற்றப்படும். இவ்வெருதுகளை, வானிடத்து திங்கள் போலவும் திருமாலிடத்துள்ள சங்கு போலவும் அழகிய நெற்றிசுட்டியையுடைய கரிய நிறமுடைய காரிகள்; கரிய மேகம் சூழும் மலையிடத்து வீழ்கின்ற அருவியைப் போல அழகிய வெள்ளைக் கால்களையுடைய காரிகள்; பலராமன் மார்பில் இருக்கும் மாலையைப் போல சிவந்து நீண்ட கொடி மறுவினை உடைய வெள்ளைகள்; விண்மீனுடன் விளங்கும் செவ்வானம் போல அழகிய வெள்ளைப் புள்ளிகளையுடைய சிவந்த நிறத்தனவாகிய சேய்கள்; சிவபெருமான் மிடற்றின்கண் தோன்றும் கருமைபோல கரிய கறையினையுடை கழுத்தையும், உயர்ந்து வளர்ந்த திமிலினையும் உடைய கபில நிறத்தனவாகிய குரால்கள், தெளிவாகத் தோன்றும் சிவந்த சிறு புள்ளிகளையுடைய வெள்ளைகள் எனப் பலவாறு பழந்தமிழ் இலக்கியங்களில் அடையாளப்படுத்தப்படுகின்றன. 

            கொல்லேறு என்றாலும் அதன் கோட்டிற்குக் காளையர் அஞ்சுவதில்லை. முல்லை நிலத்து ஆயர் பெண்ணை மணம்முடிப்பதற்காக ஏறுதழுவும் பண்பாடு பண்டைத் தமிழரிடையே இருந்தது. காளையர் அந்நிகழ்வில் விருப்பமுடன் பங்கேற்றனர். தான் விரும்பிய பெண்ணை மணந்து கொள்ளவும், தன் வீரத்தை வெளிப்படுத்தவும், புகழ்பெறவும் தனக்குக் கிட்டிய ஓர் அரிய வாய்ப்பாக ஏறுதழுவும் இவ்விழாவைக் கருதினர். எனவே கொல்லேற்றின் கோடு கிழித்து குடல் சரிவதோ, உயிர் விடுவதோ அவர்களுக்குப் பொருட்டல்ல.

                                 கொல் ஏறு சாட இருந்தார்க்கு எம் பல் இருங்

கூந்தல் அணை கொடுப்பேம் யாம் (கலி.101:41-42) 

என்று, கொல்லும் இயல்புடைய காளையை அடக்குபவர்க்குத்தான் எம் மகளைக் கொடுப்போம் என்பதில் ஆயர்களும் உறுதிகொண்டிருந்தனர். முல்லைநிலப் பெண்களும், கொல்லேற்றின் கோடஞ்சாது, அதனைத் தழுவி அடக்கும் வீரமுள்ள ஆடவனையே மணக்க விரும்பி ஏறுதழுவலைப் பரண்மீதிருந்து காண்பர்(கலி.103:6-9). அவ்வாறு பார்த்துக்கொண்டிருக்கும் ஆயமகளின் கூந்தலில் வந்து விழுந்த மாலையைத் தெய்வத்தின் செயலென்று நம்பினர்(107:31:33).

ஏறு தழுவும் வீர விழா நிகழ்வின் காட்சியை,

            எழுந்தது துகள்

          ஏற்றனர் மார்பு

          கவிழ்ந்தன மருப்பு

          கலங்கினர் பலர்     (கலி.102:21-24) 

என்று கண்முன் காட்டுகிறது கலித்தொகை.

            காளையை அடக்கிய காதலனின் கைப்பிடிக்கும் ஆய மகளின் திருமணம் சங்க இலக்கியமாம் கலித்தொகையில் காணப்படும் தனிச் சிறப்பாகும். ஏற்றினைத் தழுவிய ஆடவனுக்கே தலைமகளைத் தமர் கொடை நேர்வர்(கலி.104:73-76). இல்லின் முற்றத்தில் திரையிட்டு(கலி.115:19-20), மணல் தாழப் பரப்பி, இல்லத்தில் செம்மண் பூசி, பெண் எருமையின் கொம்பினை நட்டு வழிபாடாற்றி ஆயமகளின் திருமணம் நடைபெற்றது. 

                                    தரு மணல் தாழப் பெய்து இல் பூவல் ஊட்டி

                                    எருமைப் பெடையொடு எமர் ஈங்கு அயரும்

                                    பெரு மணம்                                       (கலி.114:12-14)

தம் துணையோடு பூக்களில் மது அருந்தும் வண்டுகள் அஞ்சியோடுமே என்றெண்ணித் தன் தேரில் ஒலிக்கும் மணி நாவினை இழுத்துக் கட்டிய தலைவனையும்,  தன் குரல் கேட்டால் இணைமான் துணை பிரியுமே என்றஞ்சி கணவனை எழுப்பத் தயங்கும் தலைவியையும், மரத்தையும் உறவாகப் பார்த்த மாந்தரையும் கொண்டதே பழந்தமிழ்ச் சமூகம். ஏறுதழுவும் வீரர்கள் தாம் குத்துப்பட்டாலும் காளைகளைத் துன்புறுத்தியதாகப் பதிவுகள் இல்லை. காளைகள் துன்புறுத்தப்படுகின்றன எனக் காரணம் காட்டி, ஏறுதழுவலை இன்று எடுத்தெரிவது இனப் புறக்கணிப்பு என்பதைத் தவிர வேறென்னவாக இருந்துவிட முடியும்.  

 

நான்

உண்பதை

உடுத்துவதை

பார்ப்பதை

படிப்பதை

சிரிப்பதை

சிந்திப்பதை

விதைப்பதை

விளையாடுவதை

யார்யாரோ தீர்மானிக்கிறார்கள்

சொல்லிக்கொள்கிறேன்

நான் ‘தமிழனென்று’.