முனைவர் ஆ.மணவழகன், தமிழ்த்துறைத் தலைவர், அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர். 603203.
(உலகத் தமிழ்க் கல்வி இயக்கம், பத்தாம் கருத்தரங்கு, தமிழூர், திசம்பர் 29,30 – 2007)
ஒரு சமுதாயம் குறைந்த அளவு அடிப்படைத்
தேவைகளில் தன்னிறைவு அடைந்துள்ளது என்பது,
அச்சமுதாயம் தமக்குள் நிறைவேற்றிக்கொண்ட உணவு, உடை, உறையுளின் தேவையைப் பொறுத்தே
மதிப்பிடப்படுகிறது. எச்சமூகமாயினும், ஒவ்வொரு மனிதனுக்கும் நிரந்தர வருவாய், நிலையான
இருப்பிடம், தேவையான உடை என்பன தவிர்க்க இயலாதனவாகின்றன. ‘ஒரு நாட்டின் வறுமையைக் குறிக்கும்
காரணிகளுள் முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவையாக, பயன்பாட்டில் உள்ள நிலத்தின் அளவு,
வீட்டின் தன்மை, சராசரியாக ஒரு நபர் அணியும் ஆடை’ என்பவை சுட்டப்படுகின்றன (திட்டம்,
மே 2004, ப.37). இங்கு, நிலத்தின் அளவு என்பது, உணவுத் தேவையின் நிறைவிற்கான காரணியாகச்
சுட்டப்படுகிறது. எனவே, ஒருநாட்டின் வறுமையை ஒழிக்க, இம்மூன்றின் தேவைகளில் தன்நிறைவு அடைவது இன்றியமையாததாகிறது.
உணவின் தேவை
அடிப்படைத் தேவைகளுள் உணவின் தேவை முதலாவதாக
முன்னிறுத்தப்படுகிறது. உணவின் தேவை வெறும் பசியாறுதல் என்பதோடு நின்றுவிடாமல், நாட்டின்
பொருளாதாரத்தையும் பாதிக்கும் மிகமுக்கிய காரணிகளுள் முதலாவதாகும். ஆகவே, சத்தான உணவையும்,
சமச்சீரான உணவையும் நாட்டில் அனைவருக்கும் எட்டச்செய்தல் ஒரு சமூகத் தலைமையின் அடிப்படைக்
கடமையாகிறது. ‘உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராது இயல்வது நாடு’(குறள், 734) என்பார் வள்ளுவரும்.
இதில், பசி என்பது, பிணி, பகை என்ற மற்ற காரணிகளுக்குக் காரணமாவது பெறப்படும். ‘வேளாண்மை
தவறி, ஏழ்மையும் பசிப்பிணியும் பெரிய அளவில் தொடர்ந்தது என்றால் தற்போது நாட்டில்
100 மாவட்டங்களில் காணப்படும் நக்சலிசம் மேலும் பரவி விடும் என்று எச்சரிக்கின்றனர்
இன்றைய சமூக ஆர்வலர் (திட்டம், ப.19, ஏப்ரல் 2007)
உணவுத் தேவைக்காகத் தம் வாழ்நாட்களில்
பெரும்பகுதியைச் செலவிடுதலைக் குறைத்துக்கொள்ளும் வாய்ப்புள்ள எந்தவொரு சமூகத்திலும்
பொருளாதார வளர்ச்சி என்பது விரைவில் மேன்மையடையும். ‘நாடென்ப நாடா வளத்தன நாடல்ல, நாட
வளம்தரும் நாடு’ (குறள்.739) என்று, வள்ளுவர் நல்லநாட்டிற்கு இலக்கணம் வகுப்பார். தொல்காப்பியரும்
கருப்பொருளைப் பட்டியலிடும்போது ‘தெய்வம் உணாவே மாமரம் புள் பறை’ (தொல். 964) என்று, தெய்வத்திற்கு அடுத்த நிலையில் உணவை வைத்திருப்பதோடு,
‘மெய்தெரி வகையின் எண்வகை உணவின், செய்தியும் வரையார்’ (தொல். 1579) என்று உணவின் வகைகளையும்
சுட்டுவார். ‘அனைவருக்கும் உணவு என்கிற ஒரு நிலை எந்தவொரு நாட்டிலும் வளவாழ்வுக்கு
ஒரு முக்கியக் காரணி ஆகும். இதை உண்மையான வளர்ச்சியடைந்த நாடுகளுமே அலட்சியப்படுத்த
இயலாது. இந்தியா போன்ற மக்கள் தொகைமிகுந்ததோர் நாட்டில் வானிலைத் தடுமாற்றங்களையும்
ஏனைய இயற்கைச் சீற்றங்களையும் பொருட்படுத்தாது, இயன்ற வகையில் மக்களுக்கு உணவு வழங்கும்
பணியை இடைவிடாமல் பேணிக் காப்பதே பெருங்கடமை’ என்கிறார் அ.ப.ஜெ. அப்துல்கலாமும் (இந்தியா 2020, ப.122).
எவ்வகையில் நோக்கினும், ஒரு நாட்டின் அல்லது
ஒரு சமூகத்தின் வளவாழ்வு, தன்னிறைவு பெற்ற வாழ்வு என்பது, அச்சமூகம் தன் உணவுத் தேவையை
நிறைவேற்றிக்கொள்ள மேற்கொள்ளும் திட்டமிடல், வழிவகை, செயல்பாடு, தொழில்நுட்பப் பயன்பாடு
போன்றவற்றை உள்ளடக்கிய துறைசார் ‘மேலாண்மை’யைப் பொறுத்தே அமைகிறது எனலாம். ‘பயிர் மேலாண்மையை
பொருத்தவரை உழவியல், மண்ணியல், நண்ணுயிரியல், சுற்றுச்சூழலியல், பயிர் வினையியல், நீர்
நுட்பவியல் போன்றவை தொடர்பான தொழில்நுட்பங்களை’ வேளாண் பல்கலைக் கழகம் உருவாக்கி, நிலைப்படுத்தி உழவர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது
(திட்டம், செப்டம்பர் 2006, ப.50,). இவ்வகையில், பழந்தமிழர் உணவின் தேவையை நிறைவேற்றுதலிலும்,
வேளாண் உற்பத்தியைப் பெருக்குதலிலும் எவ்வகைச் செயல்பாட்டினை மேற்கொண்டனர் என்பதைக்
காண்பதாக, ‘சங்க இலக்கியத்தில் வேளாண் மேலாண்மை’ என்ற இக்கட்டுரை அமைகிறது.
வேளாண் குடியைக்
காத்தல்
‘வேளாண்துறை வளர்ச்சி மட்டும் சரியாக
இருந்தால், இந்தியாவின் வளர்ச்சிப் பாதை மிகவும் பாதுகாப்பாக இருக்கும்’ (திட்டம்,
ஏப்ரல் 2007, ப.12, ) என்கின்றனர் இன்றைய சமூக ஆர்வலர். ஒரு நாட்டின் வளமான நிலைக்கும்,
சிறந்த ஆட்சிமுறைக்கும், வீரர்கள் போர்க்களத்தில் வெற்றியை ஈட்டி வருதற்கும் அடிப்படையாக
அமைவது உழுது விளைவித்த நெல்லின் பயனே. ஆதலால்,
ஏரைக் காப்பவரின் குடியைக் காப்பதே நல்லரசின் கடமையாகும் என்பதைப் பழந்தமிழ்ப் புலவர்கள்
மன்னர்களுக்கு உணர்த்தினர் (புறம். 35). இதனையே வள்ளுவரும்,
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை (குறள்.1031)
என்கிறார்.
இவ்வகைத் தலைமைச் சிறப்பு வாய்ந்த வேளாண்மைத்
தொழிலின் இன்றியமையாமையைப் பழந்தமிழிர் தாமும் உணர்ந்தனர், உலகுக்கும் உணர்த்தினர்.
தாமும் உணர்ந்திருந்தனர். உணர்ந்ததன் பயனாய் அத்தொழிலில் பல தொழில்நுட்பங்களைக் கையாண்டு
வேளாண் உற்பத்திப் பெருக்கத்திற்கு வழிவகுத்தனர்.
இயற்கை மூலதனங்களைக் காத்தலோடு, வேளாண் தொழிலில் பலவகை நுட்பங்களையும் கையாண்டு உற்பத்திப்
பெருக்கத்திற்கு வழிவகுத்தனர்.
மழைவளம் காத்தல்
மழைநீரே வேளாண்மையின் அணிவேராக அமைவதைப்
பழந்தமிழர் நன்கு உணர்ந்திருந்தனர். பருவத்திற்கேற்ற மழை, அதன் தன்மையில் மாறுபடாமல்
பொழிந்தால் வேளைண்மை வளர்ச்சி என்பது குன்றாமல் இருக்கும். பழந்தமிழ் இலக்கியங்களின்
சில இடங்களில் நிலங்களின் வறட்சிநிலை சுட்டப்பட்டாலும், மழைப்பொழிவும், மழை வளமும்
பரவலாகக் காட்சிப்படுத்தப்படுகின்றன. புதுவௌ¢ளமும், காட்டாறும் வருணிக்கப்படுகின்றன.
பருவத்தே மாறாத மழைப்பொழிவால் ஆண்டின் குறிப்பிட்ட
நாளில் புதுப்புனலாடுதல் ஒரு முக்கிய விழாவாக
நடத்தப்பட்டது.
‘நீரின்று
அமையாது யாக்கைக்கு எல்லாம்’(புறம்.18:18) என்று நீரின் தேவையை வலியுறுத்துவார்
குடபுலவியனார். ‘நீரின்று அமையா உலகம் போல’
(நற்.1:6) என்று உவமையாக்குவார் கபிலர். உலகத்தில் நிகழும் தொழில்களுள்
ஒன்றேனும் கெடாமல் இருக்க, உழும் தொழிலுக்குரிய கலப்பைகளும் பயன்பட, பருவத்தே மழை பெய்ய
வேண்டும் என்பார் சங்கப் புலவர் (அகம்.41:4-6). அதேபோல, ‘உணவெனப் படுவது நிலத்தொடு நீரே’ (புறம்.18:4) என்பதையும் உலகிற்கு உணர்த்தினர்.
- மழைவளம்
பெருக்கும் வழிகள்
மழை வளத்தைப் பெருக்க உதவும் வழிகளுள்
முதன்மையானது இயற்கை வளங்களாகிய மலைவளத்தையும், வனங்களையும் காத்தலும், அதோடு, நீர்நிலைகளை ஆங்காங்கே ஏற்படுத்தி நீர்ச்
சுழற்சிக்கு வழிவகுத்தலுமாகும். அடுத்ததாக,
செயற்கை வளங்களை உண்டாக்குதல். இதில், மரங்களை வளர்த்து, இயற்கைச் சமநிலையைப் பேணுதல்
குறிப்பிடத்தக்கது. இவ்வறிவியல் உண்மையைப் பழந்தமிழர் உணர்ந்திருந்தனர். அதனால், மரங்களைக்
காக்கவும், மரங்களை மக்களைவிட உயர்வானதாக உணரவும், சாலையோரங்களில் மரங்களை வளர்க்கவும் செய்தனர்.
தம் மகளைவிடச் சிறந்ததாகப் புன்னை மரத்தினைக் கருதிய தாயினை நற்றிணை காட்டுகிறது
(நற்.172:1-5). மன்னன் பிறநாட்டின் மீது போர்த்தொடுத்துச் செல்லுங்கால், ‘அந்நாட்டில்
உள்ள விளைநிலங்களைக் கவர்ந்தாலும், ஊர்களை எரியூட்டினாலும், எதிரிகளை அழித்தாலும்,
அந்நாட்டில் உள்ள மரங்களை மட்டும் அழிக்காது விடுக’ என்று அறிவுறுத்துகிறார் பழந்தமிழ்ப்
புலவரான காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் (புறம்.57:5-11). அவ்வகையில் வளர்க்கப்பட்ட
மரங்கள், ‘கால மன்றியும் மரம்பயம் பகரும்’ (புறம்.116:13) தன்மையதாய் விளங்கின. சாலையோரங்களில்
வைத்த மரங்கள் வழிப்போவோருக்கு நிழல்கொடுத்ததோடு, அதில் காய்த்த, முற்றிய, இனிய கனிகள்
உணவாகவும் உதவின (பதி.60:5-7). மேலும்,
வழிகளைச் செம்மைப்படுத்தி, அவற்றின் இருமருங்கிலும் அசோகு (செயலை) மரங்களையும், மூங்கிலையும்
(கழை) நட்டு வளர்த்தனர் (மலைபடு.158,161).
நீர் ஆதாரங்களைப்
பெருக்குதல் மற்றும் முறைப்படுத்துதல்
‘நீர்வள மேலாண்மை கடைபிடிக்கும் பண்பு
நம்மிடையே இல்லாததால் நீர்வளங்கள் இங்கு வீணாக்கப்படுகிறது. ஒருபுறம் வறட்சியையும்
மறுபுறம் வௌ¢ளப் பெருக்கையும் ஒவ்வொரு ஆண்டும் நாடு எதிர் நோக்கியுள்ளது. மத்திய அரசு
வறட்சி மற்றும் வௌ¢ள நிவாரணப் பணிகளுக்காக நாட்டின் மொத்த வருவாயில் பெருந்தொகையை ஒதுக்க
வேண்டியுள்ளது. நமது நாட்டின் பொருளாதாரப் பின்னடைவுக்கு இதுவுமொரு காரணமாக் அமைவது
இன்று சுட்டப்படுகிறது (திட்டம், டிசம்பர் 2005, ப.27).
‘நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு முதல¦டு
செய்வதுடன், நீரை சேமிக்கவும், தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளில் செயற்கை முறையில்
நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்’ (திட்டம், ப.03,
ஏப்ரல் 2007) என்பது இன்றைய நீர் மேலாண்மைத் திட்டமாகும். இச்செயல்பாடுகளும், கருத்துருவாக்கங்களும்
பழந்தமிழரிடையே இருந்ததைப் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. இவ்வகைச்செயல்பாடுகள் வேளாண்
மேலாண்மையின் முக்கிய கூறுகளாயின.
இவ்வுலகம் தன்நிலை திரியாமல் இருக்க,
நீர்ப்பதத்தோடு கூடிய மண் இன்றியமையாததென்பதைப் பழந்தமிழர் உணர்ந்திருந்தனர். உயிர்கள்
வாழ உணவு எவ்வளவு இன்றியமையாத் தேவையோ அதைப்போல, இந்நிலம் வளமாக இருக்க நீர் இன்றியமையாத
மூலதனமாகும் என்பதை உணர்த்தினர். இதனை,
நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப் படுவது நிலத்தோடு நீரே (புறம்.18:18-21)
என்று
வலியுறுத்தினர். மேலும், இவ்வகையான சிறப்பு வாய்ந்த நீரினையும், நிலத்தையும் ஆங்காங்கே
நீர்நிலைகளை ஏற்படுத்துவதன் மூலம் ஒன்றாகக் கலக்கச் செய்பவரே, இவ்வுலகத்தில் உடலையும்
உயிரையும் படைத்தவர் என்ற பெருமையைப் பெறுவர் என்பதனை,
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி
னோரே
(புறம்.18:22,23)
என்ற
அடிகள் சுட்டுகின்றன.
இவ்வகை அறிவுறுத்தலால், நாட்டில் தேவைப்படும்
இடங்களனைத்தும் நீர்நிலைகளால் நிரம்பியிருந்தன என்பதை இலக்கியங்கள் சுட்டுகின்றன. மடு,
குளம் (பெரும்பாண்.288-89, மதுரை.710-11, குறிஞ்சி.63, மலைபடு.47, 213,
திருமுருகு.224, பொருநர்.240, மதுரை.244-6),
குட்டம் (பெரும்பாண்.269-71), கேணி (சிறுபாண்.172) என்று பலபெயர்களுடனும்,
பல தன்மையுடனும் கூடிய, பல்வேறு பயன்பாட்டிற்கான நீர்நிலைகள் ஆங்காங்கே உருவாக்கப்பட்டன.
பாசனத்திற்கான
நீர் நிலைகள்
- நீர்த்தேக்கம்
ஓடிவரும்
மழைநீரினைத் தேக்கிவைத்து வேளாண்மைக்குப் பயன்படுத்த அறையும், பொறையும் அமைந்த பகுதிகளை
இணைத்து, வளைந்த வடிவிலான நீர்த்தேக்கத்தினைக் அமைத்தனர். இதனை,
அறையும் பொறையும் மணந்த தலைய
எண்நாள் திங்கள் அனைய
கொடுங்கரை தெண்ணீர்ச்
சிறுகுளம் ---------- (புறம்.118:1-3)
என்பதில்
அறிய முடிகிறது. இதில், பாறைகளையும், சிறிய குவடுகளையும் இணைத்துக் கட்டப்பட்ட, எட்டாம்
நாள் தோன்றும் பிறை நிலவைப் போன்று வளைந்த கரையையுடைய குளம் சுட்டப்படுகிறது. மேலும்,
வேட்டச் சிறாஅர் சேட்புலம் படராது
படமடைக் கொண்ட குறுந்தாள்
உடும்பின்
(புறம்.326:4,5)
என்பதில்,
நீர் வெளியேறும் வழிகளுடன் கூடிய அணைக்கட்டுப் பகுதியும், அணையில் காணப்பட்ட இடுக்குகளில்,
சிறுவர்கள் உடும்பு பிடித்த காட்சியும் விளக்கப்படுகிறது.
- புதவு
மற்றும் மடுகு
அணைகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளில்
தேக்கி வைத்த நீர், புதவின் வழியே திறக்கப்பட்டு, அமைக்கப்பட்ட கால்வாய்களின் வழியாக
வேளாண்மைக்குப் பயன்படுத்தப்பட்டது. இதனை,
புனல் புதவின் மிழலையொடு (புறம்.24:18-19)
என்ற
அடி காட்டுகிறது. நீர் வெளியேற்றும் வாயில்களில் பாசனத்திற்காகத் திறந்துவிட்ட நீரின்
ஓசையை, ‘இழுமென வொலிக்கும் புனலம் புதவில்’(புறம்.176:5)
என்ற அடி காட்டுகிறது. அதேபோல இதன் தொடர்ச்சியாக,
அணைகளிலிருந்து நீர் வெளியேற்றும் வாயிலில் பூம்பொய்கை அமைந்திருந்ததையும், புனல்வாயிலில்
பாசனத்திற்கு நீர் வெளியேற்றப்பட்டதையும் (பதி.13:1-3; 27:9), குளம் முதலியவற்றில்
நீர் புகும் வாயில் அமைக்கப்பட்டிருந்ததையும் (மலைபடு.449, அகம்.237:14) சங்க இலக்கியங்கள்
காட்டுகின்றன.
மேலும், அணைகளில் வழிந்தோட அமைக்கப்பட்ட
போக்கு மடையினையும் , அதில் வழிந்தோடும் நீரின் ஓசையினையும் (புறம்.24:19, புறம்.
176:5) புறநானூறு காட்டுகிறது. அதோடு, மதகில் நீர் எப்போதும் அழுத்தம் கொடுத்துக்கொண்டிருந்ததை,
உள்ளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன்
நிறைக்குளப் புதவின்
மகிழ்ந்தனென் ஆகி
(புறம்.376:19-20)
என்ற
அடிகள் சுட்டுகின்றன.
- நீர்நிலைப்
பாதுகாப்பு
ஒரு நாட்டின் நீர்நிலைகள் என்பவை அந்நாட்டின்
உயிர் நாடியாக விளங்குகின்றன. அவ்வகை நீர்நிலைகளை உருவாக்கினால் மட்டும் போதாது, அவற்றை
இயற்கைச் சீற்றங்களிலிருந்தும், எதிரிகளிடமிருந்தும், விலங்குகளிடமிருந்தும் பாதுகாத்தல்
வேண்டும். நீர்நிலைகளை உருவாக்குதலும், அவற்றைக் காத்தலும் நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ற
செயலாக அமைகிறது. அவ்வகையில், பழங்காலத்தில், இயற்கை சீற்றத்திடமிருந்து நீர்நிலைகளைக்
காக்க, காவலர் அமர்த்தப்பட்டனர்(புறம்.15:9-10).
கயம் என்பது குளத்தையும் ஏரியையும் குறிப்பதாகும்.
இந்நீர்நிலை பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும்
குடிநீரின் தேவைக்காக உருவாக்கப்பட்டதாகும். பொதுமக்களின் குடிநீர்த்தேவையினை நிறைவு
செய்யும் இவை, போர்க் காலங்களில் எதிரிகளால் அழிவுக்கு உட்பட்டன. யானைகளை விட்டு இந்நீர்நிலைகளை
அழித்தல் என்பது பண்டை போர் முறைகளில் ஒன்றாக அறியப்படுகிறது. ஆகவே, இவ்வகை நீர்நிலைகளுக்குப்
பாதுகாப்பு தேவையாகியது. இதனால், பண்டைத் தமிழர் இவைகளுக்குப் பாதுகாப்பு அமைத்தனர் என்பது பெறப்படுகிறது (புறம்.15:9-10).
‘இந்தியாவின் மொத்த சாகுபடி நிலமானது
455 மில்லியன் ஏக்கராகும். ஆனால் இதில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே பாசனவசதி பெற்றுள்ளது
(திட்டம், ப.41, ஏப்ரல் 2007¢) என்ற இன்றைய நிலை இங்குக் குறிப்பிடத்தக்கது. மேலும்,
மொத்த நிலப்பரப்பில் 15 விழுக்காடு நிலமானது, தரிசு மற்றும் புறம்போக்கு நிலமாக உள்ளது.
மொத்த நீர்ப்பாசன வசதிகொண்ட நிலமானது 40 விழுக்காடு மட்டுமே உள்ளது. இதன் காரணத்தால்
வேளாண் வளர்ச்சியானது 10வது ஐந்தாண்டு திட்டத்தில் 2.06 விழுக்காட்டிலிருந்து 1.2 விழுக்காடாக
குறைந்து காணப்படுகிறது (திட்டம், ப.41, ஏப்ரல் 2007¢), என்பதும், ‘தரிசு நிலமானது
1950-ல் 17.65 லட்ச எக்டராக இருந்தது. தற்பொழுது 2.35 லட்ச எக்டராக உயர்ந்துள்ளது’
(திட்டம், ஏப்ரல் 2007, ப.43) என்பதும் இங்குச் சுட்டத்தக்கது. இதன்வழி, பண்டைத் தமிழரின்
நீர்மேலாண்மை உத்திகள் இன்றும் கருத்தில் கொள்ளத்தக்கவையாக அமைகின்றன என்பது பெறப்படும்.
மண் வளம்
மண் வளத்தின் தன்மையைப் பாதுகாப்பதில்
மழைவளத்தின் பங்கு அளவுகோலாகிறது. இதனால், ‘வானம்
வாய்க்க மண்வளம் பெருகுக’ (மணி.19:151) என்று வாழ்த்தும் ஒலி பழந்தமிழகத்தில் கேட்கிறது.
‘நாடென்ப நாடா வளத்தன’ (குறள்.739) என்று
நாட்டிற்கு இலக்கணம் வகுப்பார் வள்ளுவர். மக்கள் தம்மை வருத்தி தம் தேவைகளை நிறைவேற்றிக்
கொள்ளும் அளவில் உள்ள நாடு சிறந்த நாடாகக் கருத்தப்படமாட்டாது. நாடா வளத்திற்கு அந்நாட்டின்
மண்வளம் முக்கியப் பங்காற்றுகிறது. ‘நிலம்பயம்
பொழிய’ (பதி.69:13) மண்ணின் வளம் அமைதல் வேண்டும். ‘கால மன்றியுங் கரும்பறுத் தொழியா’ (பதி.30:14) என்பதாக, எக்காலத்திற்கும்
ஈடுகொடுக்கும் அவ்வண்ணமாக அதனைக் காத்தல்
வேண்டும்.
நிலமும் - நீரும், உடலும் - உயிரும் போன்றதாகச்
சுட்டப்பட்டது. நிலத்தின் வளத்தைப் பாதுகாக்க ஆங்காங்கே நீர்நிலைகளை அமைத்தனர். விளைநிலங்களின்
இடையிடையே சிறுசிறு குளங்களை ஏற்படுத்தி, மண்ணின் வளத்தைப் பேணினர் (குறு.8:1,2). இதனால்
விளைநிலங்கள்¢ தன்மையில் மாறுபடாது, வேளாண் வளத்தில் குன்றாது விளங்கின. இவ்வகை வளம்
குன்றா நிலமானது, ‘பல்வளம் பகர்பூட்டும் பயனிலமாகத்’(கலி.20:1) திகழ்ந்தது. பயிர்கள் பாம்பின்
சூல்போன்று பருத்து விளைந்து பயன் நல்க ஏதுவாயின(குறு.35:2-3). வளமற்ற வன்புலத்தை விடவும்
நீர் வளமிக்க மென்புலம் ஒரு நாட்டின் வளப்பத்திற்குக் காரணமாய் இருந்தது. அதோடு, என்றும்
புதிய புதிய வருவாய்கள் வரத்தக்க வகையிலும் நாட்டின் வேளாண்துறை வளம் பெற்றிருந்தது.
இவ்வளநாடு, ‘மென்புலவைப்பின் நல்நாடு’
(புறம்.209:6) என்றும், ‘யாணர் நல்நாடு’
(புறம்.212:6) என்றும் போற்றப்படுகிறது.
மேலும், பண்டைத் தமிழர், மண்வளப் பாதுகாப்பு
நுட்பத்தினால், ஒரு பெண்யானைப் படுத்துறங்கும் சிறிய இடத்தில் ஏழு ஆண் யானைகள் உண்ணத்
தக்க விளைபொருளை உற்பத்தி செய்யும் ஆற்றலையும், நுட்பத்தினையும் பெற்றிருந்தனர்(புறம்.40).
சில வித்துகளை அகல இட்டு அதிக விளைச்சலைப் பெறும் அளவில் மண்வளத்தைப் பேணினர். இதனை,
‘சில வித்து அகல இட்டென பல விளைந்து’
(நற்.209:3), ‘சிற்சில வித்திப் பற்பல விளைந்து’
(நற்.328:2-3), ‘வேலி ஆயிரம் விளையுட்டாக’(பொருநர்.246-7)
என்ற அடிகள் காட்டுகின்ற.
வேளாண் உற்பத்தி
பெருக்கம்
‘இந்தியாவின் மக்கள் தொகை 2050ஆம் ஆண்டில்
160 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய நிலையில் அனைத்து மக்களுக்கும்
உணவளிக்க, நாட்டின் வருடாந்திர உணவு தானிய உற்பத்தி 4.5 கோடி மெட்ரிக் டன்னாக அதிகரிக்க
வேண்டும்’(திட்டம், பிப்ரவரி 2004, ப.27) என்று, இன்றைய தேவை சுட்டப்படுகிறது. உணவு உற்பத்தியில் இவ்வளவு பெரிய இலக்கை எட்ட வேண்டுமானால்,
அதற்கான தொலைநோக்குத் திட்டங்களை உணவு உற்பத்தித் துறையில் செயல்படுத்தியாக வேண்டியுள்ளது.
அதேவேளையில், பழந்தமிழகத்தில் உணவின் தேவைக்கேற்ப உற்பத்தியைப் பெருக்க, அச்சமூகம்
பலவகைச் செயல்திட்டங்களை முன்னெடுத்துச் சென்றுள்ளதென்பது இலக்கியங்கள் வழி அறியமுடிகிறது.
- விளை
நிலம் விரிவாக்கத் திட்டம்
உணவுப் பொருளின் உற்பத்தியைப் பெருக்க, புதர்களையும், கரம்புகளையும், காடுகளையும் அழித்து, விளைநிலமாக பண்படுத்தி, உணவுத் தேவையை நிறைவு செய்ய வழிவகுத்தனர்¢. அவ்வகை நிலங்களில் மானாவாரி(வன்புலம்) பயிரிடுமுறை சிறந்த பயனைத் தந்தது. உணவுத் தேவையை ஈடுசெய்ய இத்திட்டம் பேருதவியாக அமைந்தது. அவ்விதம், புதிய தினைக்கொல்லையை உண்டாக்கும் பொழுது எழும் புகையினை, ‘இதைமுயல் புனவன் புகைநிழல் கடுக்கும்’(அகம்.140:11) என்ற அடி காட்டுகிறது. அதேபோல,
காடுகொன்று நாடாக்கிக்
குளந்தொட்டு வளம்பெருக்கி (பட்டினப்.283-288)
என்பதில்,
பயிரிடுவதற்கு ஏதுவாகக் காடுகளைச் சீர்படுத்தி,
நீர்நிலைகளை ஏற்படுத்தி, உணவு உற்பத்திப் பெருக்கத்திற்கு வித்திட்டது தெரியவருகிறது. இதேபோல, சந்தன மரக்காட்டினை எரித்து, தினைக் கொல்லையாக்கியதையும்
(அகம்.388:3-4), யா மரக்காட்டினை அழித்து செந்தினைகளை விளைவித்ததையும்(குறு.198:1-2),
பிறமரங்களைக் கொன்று கானவன் பயிர்விளைவித்து விளைச்சலைப் பெருக்கியதையும் (குறு.214:1-2) அறியமுடிகிறது.
மேலும், வெட்டிச்சுட்ட கொல்லை நிலத்துக்
குறவனால் துண்டாக்கப்பட்ட கரித் துண்டுகளையும்(புறம்.231:1-2), காட்டைத் திருத்தி,
தினைப் பயிரிட்டு, அப்பயிர் விளைந்து அறுவடைக்குக் காத்திருக்கும் காட்சியையும்(அகம்.192,
குறு.141,142), பெருங்கற்களை உடைய பக்க மலையைத் திருத்தி, உழுத இடத்தில் கரும்பைப்
போன்று திரண்டு அழகுடைய கதிரையுடைய தினை விளைந்து
நின்ற காட்சியையும் (அகம்.302; 368:1-3; குறு.198; 291; ), ஆயர் வெட்டித் திருத்திய
பழங்காட்டில் உழுத புழுதியில், இடும்முறைப்படி நிரப்பிய விதை முளைத்த பசுமையான இலையுடைய
வரகினையும் (நற்.121:1-3; 266:1-2), அவ்வகைப் புதுக்கொல்லையில் விளைந்த வரகினது குத்திய
அரிசியுடன் புற்றீசல் கலந்து சமைத்த இனிய புளிப்புடைய சோற்றை, இடையர்கள் மேய்ச்சல்
நிலத்திற்கு எடுத்துச் சென்றதையும்(அகம்.394:3-6) இலக்கியங்கள் காட்டுகின்றன. இவ்வகைப்
மானாவாரி பயிரிடுமுறையால் உணவுத் தேவையில் நிறைவு ஏற்பட்டதை, ‘தொய்யாது வித்திய துளர்படு துடவை’ (மலைபடு.123)
என்பதிலும், ‘சுவல்விளை நெல்லின்’(மலைபடு.436)
என்பதிலும் அறியமுடிகிறது. அதேவளை, இன்றைய நிலையில், ‘விவசாயிகளின் முன்னேற்றத்துகாக
குறிப்பாக மானாவாரி தரிசு நில வேளாண்மையில், இன்னும் ஏராளமாக செய்ய வேண்டியுள்ளது என்பதை
நான் ஒப்புக் கொள்கிறேன்’ (திட்டம், செப்டம்பர் 2006, ப.19) என்ற, பாரதப் பிரதமர் மன்மோகன்சிங்கின் ஒப்புதல் இங்குச் சுட்டத்தக்கது.
வேளாண் தொழிலில் நுட்பங்கள்:
- உழுதலில்
நுட்பம்
முதலாவதாக நிலத்தினை ஆழமாகவும், மண்
மேல்-கீழ் புரளும்படியும் பல முறை நன்கு உழுவர். உழுது, உடனே பயிர்செய்யாமல், நிலத்தினைக்
காயவிடுவர்(ஆறப்போடுதல்); அதனால் அப்புழுதியே எருவாக மாறும் என்பார் வள்ளுவர் (குறள்.1037). அவ்வாறு உழுது காயவிட்ட நிலத்திற்குப் பிடி எருவும்
வேண்டாம் என்கிறார். அதாவது, புழுதி மண் நான்கின்
ஒருபங்காகும்படி உழுது காயவிட்டால், அப்புழுதியே பயிருக்கு நல்ல எருவாகும் என்பது இயற்கை
வேளாண் அறிவியலாகும். இதனையே,
------ ----- ------ ------ உறுபெயல்
தண்துளிக்கு ஏற்ற பலஉழு
செஞ்சேய
மண்போல் நெகிழ்ந்து (அகம்.26:23-25)
என்ற
அடிகளும் குறிப்பிடுகின்றன. அதாவது, மிக்க பெயலை உடைய நிலத்தைப் பலமுறை உழுதலால், அந்நிலம்
நெகிழ்ந்து வேளாண்மைக்கு ஏற்றதாய் அமைதல் இங்குச் சுட்டப்படுகிறது. அதேபோல, பூமி நெகிழும்படி
பலமுறை உழுது விதைத்ததை,
பூமி மயங்கப் பலவுழுது வித்தி (புறம். 120:2-3)
என்ற
அடியும் சுட்டுகிறது. இதில், ஈரநிலமாயினும் பலசால் உழுவதால் புழுதி உண்டாகும். அவ்வாறான
நிலத்தில் எரு இடாமலே நன்கு விளையும் என்ற
நுட்பத்தையே, ‘பூமி மயங்கப் பல உழுது’
என்கிறார். அதேபோல, ‘பலகாலும் உழுதலால் பயன்படும்
நிலம்போல’(ஐங்குறு.14 ) என்பதில், பலமுறை உழுதலால் மண்ணின் தன்மை மேம்படும் என்ற நுட்பத்தினை அறியமுடிகிறது. ‘களைகளை அடியோடு அழிக்க ஆழ உழுவதும் சிறந்த முறையாகும்.
கோடை உழவு செய்வது ஒரு சிறந்த உழவு முறைக் களைக்கட்டுப்பாடு ஆகும். இவ்வாறான மழை பெய்த
தகுந்த-பதமான நிலத்தில் உழவு செய்யும்போது இந்தக் களைச்செடிகள் நீக்கம் பெறுகின்றன.
கோடையிலே உழவு மேற்கொண்ட செய்திகளைச் சங்க இலக்கியங்களே சான்றாக நமக்குக் காட்டுகின்றன’
(இந்திய அறிவியல் தொழில்நுட்பம், ப.34) என்கின்றனர் இன்றைய வேளாண் அறிஞர்களும்.
அதேபோல,
----- ----- ----- ----- நாஞ்சில்
உடுப்பு முக முழுக் கொழு
மூழ்க ஊன்றி
(பெரும்பாண்.199,200)
என்பதில்,
கொழு முழுகும் அளவில் ஆழமாக உழவேண்டும் என்பதும் சுட்டப்படுகிறது. இவ்வாறு உழுதலால் இவர்கள். ‘செஞ்சால் உழவர்’ (பெரும்பாண்.196) என்று
அழைக்கப்பட்டனர். இவர்கள், இவ்வாறு உழுதலில் நுட்பத்தினைச் செயல்படுத்தி அதிக விளைச்சல்
பெற்றதை,
ஊன் கிழித்தன்ன செஞ்சுவல் நெடுஞ்சால்
வித்திய மருங்கின் விதைபல
நாறி
(அகம்.194:4,5)
என்ற
அடிகள் சுட்டுகின்றன.
- எரு
இடுதல் மற்றும் களையெடுத்தல்
பண்டைக் காலத்தில் வேளாண் மக்கள் கால்நடைகளின்
கழிவாகிய தொழு உரமும் இலைதழைகளாகிய தழையுரமும் பயன்படுத்துவதை மரபாகக் கொண்டிருந்தனர்.
நிலவளத்திற்கும் பயன் வளத்திற்கும் அவை ஏற்றவையாய் இருந்தன (இந்திய அறிவியல் தொழில்நுட்பம்,
ப.35). எரு இடுதல் என்பதில், இயற்கை முறை எருவினைப் பயன்படுத்தியமை தெரியவருகிறது.
‘தாது எரு மறுகின்’(நற்.345:3; புறம்.33:11;
215:2; 311:3), ‘இரும்புனிற்று எருமைப் பெருஞ்
செவிக் குழவி, பைந்தாது எருவின்’ (நற். 271:1-2), ‘தாதெரு மறுகு’ (நற்.343:3) ‘தாது எரு மறுகின் மூதூர்’ (அகம்.165:4),
‘தாது எருமறுத்த கழிஅழி மன்றத்து’ (பதி.13:17),
‘தாது எருத் ததைந்த’ (மலைபடு.531), ‘இடு முள் வேலி எருப் படு வரைப்பின்’ (பெரும்பாண்.154)
என்பவற்றில் குப்பைக் கூளங்களே எருவாகப் பயன்பட்டமை அறியப்படுகிறது. எருக்களைக் கொட்டி
வைப்பதற்கென்று விடப்பட்ட இடங்களில் அவற்றைச் சேர்த்து வைப்பர். இது ‘தாதெரு மன்றம்’ (கலி.108:60) எனப்படுகிறது.
அதேபோல, களைகால் கழீஇய பெரும்புன வரகின்
(அகம்.194:9) என்று களையெடத்தலின் தேவையை அகநானுறு சுட்டுகிறது. இதனையே, பைங்கூழ் களை கட்டதனொடு நேர் (குறள்.556) என்பார்
வள்ளுவரும்.
- கலப்பு
மற்றும் சுழற்சி முறை வேளாண்மை
மண்ணின் வளம் பேணுதலுக்கும், வேளாண்
விளைச்சலின் பெருக்கத்திற்கும் கலப்பு முறை வேளாண்மையும், சுழற்சி முறை வேளாண்மையும்
இன்று அறிவுறுத்தப்படுகிறது. இவ்விரண்டின் பயன்பாட்டையும் பழந்தமிழர், தம் பட்டறிவால்
அறிந்திருந்தனர் என்பது சங்க இலக்கியங்கள் வழிப் பெறப்படுகிறது. ‘பொதுவாகத் தனிப்பயிர் ஒன்றினை மட்டும் சாகுபடி
செய்வதைவிட ஊடுபயிருடன் சாகுபடி செய்வது சிறந்ததாகும். இந்தகைய ஊடுபயிர் முறை அக்காலத்தே
பயன்பாட்டில் இருந்ததை இலக்கியங்கள் காட்டுகின்றன’ (இந்திய அறிவியல் தொழில்நுட்பம்,
ப.34). வன்புலமாகிய மேட்டுநிலத்தின் பயிராகிய தினையில் ஊடுபயிராக வெண்சிறுகடுகும்,
அவரையும் விதைத்தனர். அதேபோல, மென்புலமாகிய நன்செய் நிலத்தில் சுழற்சி முறை வேளாண்மையாக
நெல்லின் அறுவடைக்குப் பின் உழுந்து பயிரிட்டனர்.
மூங்கில் நெல் விளைந்து, கொய்யும் பதத்தை எட்டிய பிறகு, அந்நிலத்தில் உழாமலே விதைத்த
வெண்சிறுகடுகுச் செடிகளின் போதுகளைக் கோதி ஒழுங்குபடுத்துவர் என்பதை,
அவல் பதம் கொண்டன அம் பொதித் தோரை
தொய்யாது
வித்திய துளர் படு துடவை
ஐயவி
அமன்ற வெண் காற் செறுவில் (மலைபடு.121-123)
என்ற
பாடலடிகள் காட்டுகின்றன. தினைக்கதிர்களைக்
கொய்த பின்னர்த் தட்டை(தாள்) மட்டும் உள்ள வயலில் அவரையை விதைப்பர். அவரை தினையரி தாளில்
படர்ந்து காய்க்கும். இதனை,
சிறுதினை கொய்த இருவி வெண்கால்
காய்த்த அவரைப் படுகிளி
கடியும் (ஐங்குறு.286:1-2)
என்ற
அடிகள் விளக்குகின்றன. அதேபோல, சுழற்சி முறையில் நெல் மற்றும் தினை போன்றவற்றிக்கு
அடுத்து உழுந்து பயிரிடப்பட்டதையும், தடியைப் பயன்படுத்தி அடித்து, உழுந்துப் பருப்பைப்
பிரித்தெடுத்ததையும்,
பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தின்
ஊழ்ப்படு முதுகாய் உழையினம்
கவரும்
(குறு.68:1-2)
எனவும்,
உழுந்துடைக் கழுந்திற் கரும்புடைப் பணைத்தோள்(குறு.384:1)
எனவும்
இலக்கியம் சுட்டுகிறது. மேலும், ‘இரும்பனிப் பருவத்து மயிர்க்காய் உழுந்து’
(நற்.899:5) என்பதால், உழுந்து முன்பனிப் பருவத்தில் முதிர்வன என்பது அறியப்படுகிறது.
இதன்வழி பருவத்திற்கேற்ற பயிர்களை, சுழற்சி முறையில் பயிரிடும் வேளாண் நுட்பம் பெறப்படுகிறது.
இன்று, இதனை, ‘வேளாண் துறை வளர்ச்சிக்கு 11வது ஐந்தாண்டு திட்ட வரைவு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள
மற்றொரு அம்சம் மாற்றுப் பயிர் சாகுபடியாகும்’ (திட்டம், ப.13 செப்டம்பர் 2006) என்று
வலியுறுத்துகின்றனர் வேளாண் அறிஞர்.
வேளாண் தொழிற்கருவிகள்
- உழு
கருவிகள்
வேளாண்மைப் பயன்பாட்டுக் கருவிகளுள் முக்கியமானது ‘கலப்பை’ எனப்பட்டது.
‘உழவர் நிலத்தைப் பண்படுத்த உபயோகிக்கும் கருவி. இது, நிலத்திலுள்ள உறுதியான மண்ணினைக் கீழ் மேலாகக் கலப்பது’
என்று கலப்பைக்கு விளக்கம் அளிக்கிறது அபிதான சிந்தாமணி(ப.365). இவ்வகைக் கருவியை உருவாக்கவும்,
பயன்படுத்தவும் பழந்தமிழர் கற்றிருந்தனர். பழந்தமிழ் இலக்கியத்தில் இக்கருவி ‘ஏர்’ என்றும், ‘நாஞ்சில்’ (அகம்.26:23) என்றும் வழங்கப்படுகிறது. அதேபோல, கலப்பையின் உறுப்பாகிய ‘கொழு’ (அகம்.26:24) இலக்கியத்தில் இடம்பெறுகின்றது.
பெருமழை பெய்து, நன்கு இருள் புலர்ந்த
விடியற் காலையில், ‘ஏர்களால்’ இடம் உண்டாக உழப்பெற்ற பெரிய வடுவையும், கீழ் மேலாகப்
புரண்ட புழுதியையும் உடைய செம்மண் நிலத்தில், ஊனைக் கிழித்தது போன்ற செம்மையான அம்மேட்டு
நிலத்தைப் பிளந்து சென்ற நீண்ட படைச் சாலிலே, பல விதையை உழவர் விதைத்தனர்(அகம்.194:1-5).
அதேபோல், புன்செய் நிலங்களை உழுது, பயிர் செய்யும் வலிய கையையுடைய உழவர், சிறந்த பல
கடாக்களை அவற்றின் கழுத்தில் கட்டப்பட்ட மணிகள் ஒலிக்கும்படி பூட்டி, கலப்பையால் உழுதனர்(பதி.58:17).
மேலும், குடியிருப்பு நிறைந்த உணவையுடைய
உழவர் செவ்விய காலாக நிலத்தை உழுவர். அதற்காக, அவர் வீட்டின் வாயிலிலேயே எருதுகளை நுகத்தில்
(நுகத்தடி - கலப்பையின் உறுப்பு) பூட்டுவர். பூட்டிச் சென்று, பெண் யானையின் வாயைப்
போன்று வளைந்த வடிவையுடைய கலப்பையின்(நாஞ்சில்) உடும்பு முகம் போன்ற கொழு முழுவதும் மறையும்படி ஆழ உழுவர். இதனை,
குடி நிறை வல்சிச் செஞ் சால் உழவர்
நடை நவில் பெரும் பகடு
புதவில் பூட்டி
பிடி வாய் அன்ன மடி வாய்
நாஞ்சில்
உடுப்பு முகமுழுக்கொழு
மூழ்க ஊன்றி
(பெரும்பாண்.197-200)
என்ற
அடிகள் சுட்டுகின்றன. கலப்பையை ‘கொழுவல்சி’(141)
என்கிறது மதுரைக் காஞ்சி. இதில், வேளாண் உழு கருவியான கலப்பை, கலப்பையின் உறுப்பாகிய
கொழு ஆகியற்றின் வடிவமும் பயனும் சுட்டப்படுகின்றன.
- கட்டிகளைக் களையும் கருவி
கார்காலத்தில் பெய்த மழையின் ஈரம் உலர்வதற்குள்
நிலத்தைப் பலமுறை உழுவர். அவ்வாறு உழும்பொழுது, நன்செய் நிலமாயின் கட்டிகளைக் களைய/உடைக்க
‘தளம்பு’ என்ற கருவியைப் பயன்படுத்தினர். இதனை,
மலங்குமிளிர் செறுவில் தளம்புதடிந் திட்ட
பழன வாளை (புறம்.61:3-4)
என்ற
அடிகள் காட்டுகின்றன. வாளைமீன்கள் தளம்பிடை மாட்டி வெட்டுப்பட்டன என்ற குறிப்பிலிருந்து,
‘தளம்பு’ என்பது இரும்பினால் தகடுகளாக
வடிவமைக்கப்பட்ட வேளாண்கருவி என்பது தெரியவருகிறது.
- களை
எடுக்கும் கருவிகள்
நிலத்தைப்
பண்படுத்திப் பலமுறை உழுது, விதைத்த பயிரை ஒழுங்கு செய்வதற்கும், களையெடுப்பதற்கும் பல கிளைகளையுடைய கலப்பையைப் பயன்படுத்தினர். இதனை,
பூமி மயங்கப் பலவுழுது வித்திப்
பல்லி ஆடிய பல்கிளைச்
செவ்விக்
களைகால் கழாலின் தோடுஒலிபு நந்தி (புறம்.
120:2-3)
என்ற
அடிகள் சுட்டுகின்றன. அதேபோல, களைகளைக் களையப் பயன்படும் ‘துளர்’
என்ற கருவியை, ‘தொடுப்பு எறிந்து உழுத துளர் படு துடவை’(பெரும்பாண்.201)என்பதில் அறியமுடிகிறது.
இதில், கலப்பையால் உழுது விதைத்த விளைநிலத்தில் தோன்றிய களைகளைக் ‘கொட்டால்’ களையப்பட்ட
தோட்டம் சுட்டப்படுகிறது. இதேபோல, ‘தொய்யாது
வித்திய துளர்படு துடவை’ (மலைபடு.122)என்பதில், வன்நிலத்தில் களைக் கொட்டால் அடிவரைந்து
கொத்தும் கொல்லை இடம்பெறுகிறது.
- வேளாண்மைத்
துறையில் எந்திரப் பயன்பாடு
நீரினைத் தேக்கி வைத்தல், நிலத்தைப்
பண்படுத்துதல், பல்வித வித்துக்களைப் பயன்படுத்துதல், சிறிய கருவிகளைப் பயன்பாடு என்பதோடு,
விளைபொருள்களாகிய உற்பத்திப் பொருள்களிலிருந்து இரண்டாம்நிலை உருவாக்கப் பொருள்களைப்¢
பிரித்தெடுக்க எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. அவ்வகையில், விளைபொருளாகிய கரும்பிலிருந்து
தேவையான இரண்டாம் நிலை பொருளாகிய கரும்புச் சாற்றினைப் பிரித்தெடுக்க ‘கரும்புபிழி
எந்திரம்’ உருவாக்கப்பட்டது.
இவ்வெந்திரம் ஆண் யானை முழங்கும் முழக்கத்திற்கு
மாறாக ஒலித்ததை, ‘கரும்பின் எந்திரம் களிற்றெதிர் பிளிற்றும்’(ஐங்குறு. 55:1) என்றும், எந்திரத்தின் மிக்கொலியை, ‘கரும்பின் எந்திரம் கட்பி
னோதை’( மதுரைக்.258) என்றும் இலக்கியங்கள் சுட்டுகின்றன. மருதநிலத்து நீர் நிலைகளில் உள்ள வாளை மீன்கள் துள்ளிப் பாயும்
அளவிற்கு ஒலி எழுப்பிய கரும்பு பிழி எந்திரத்தை,
கரும்பின் எந்திரம் சிலைப்பின் அயலது
இருஞ்சுவல் வாளை பிறழும் (புறம்.322:7-8)
என்ற
அடிகளில் அறியமுடிகிறது.
அதேபோல, கரும்புச் சாறு பிழியும் எந்திரத்திலிருந்து
சாலுக்குக் கருப்பஞ்சாற்றை எடுத்துச் செல்லும் தூம்பு சாறு ஓடுதலால் நனைந்து கெடுதலை,
‘தீம்பிழி எந்திரம் பத்தல் வருந்த’(பதி.19:23) என்ற அடியும், யானைகள் கலங்கிக் கதறியதைப் போல் ஆலைகள் ஆரவாரிக்கும்
மாறாத ஓசையை உடைய கொட்டிலில், கரும்புச் சாற்றைக் கட்டிகளாகக் காய்ச்சுவதால் தோன்றும்
புகையை,
கணஞ்சால் வேழங் கதழ்வுற் றாஅங்கு
எந்திரஞ் சிலைக்குந் துஞ்சாக் கம்பலை
விசய மடூஉம் புகைசூழ் ஆலை ( பெரும்பாண்.260-262)
என்ற
அடிகளும் காட்டுகின்றன. அதேபோல, பசிய கரும்பைப் பிழிந்து, பாகை அடும் கொட்டிலில் காய்ச்சுதலை,
கார்க்கரும்பின் கமழாலைத்
தீத்தெறுவிற் கவின்வாடி (பட்டினப்.9-10)
என்ற
அடிகள் உரைக்கின்றன.
மேலும், கரும்பு ஆலையில் சென்று, பயனுற
அசைந்த கரும்பினையும், மழை பெய்வதைப் போல் கருப்பஞ் சாற்றை மிகவும் பெய்யும் கருப்பாலைகளில்,
விரைந்து கோல்களின் கணுக்களை எந்திரம் பிழிவதால்
அந்தக்கரும்பினின்று எழும் ஆராவாரத்தை, ‘ஆலைக்
கலமருந் தீங்கழைக் கரும்பு’(மலைபடு.119)என்பதிலும்,
மழை கண்டன்ன ஆலைதொறும் ஞெரேரெனக்
கழை கண் உடைக்கும் கரும்பின் ஏத்தமும் (மலைபடு.340-341)
என்பதிலும்
அறியமுடிகிறது. இதேபோல, ஊர்களின் தோற்றப் பொலிவானது, கரும்பாலைப் புகையினால் பரப்பப்
பெற்று, இருண்ட மேகம் சூழ்ந்த பெருமலை போலத் தோன்றியதை,
பொங்கழி ஆலைப் புகையொடும் பரந்து
மங்குல் வானத்து மலையில் தோன்றும் (சிலம்பு.10:151,152)
என்று
சுட்டுகிறார் புலவர். இச்சான்றுகளின் வழி, கரும்பு பிழி எந்திரம் பெரிதாக ஒலிக்கும்
தன்மையுடையதாகவும், இடைவிடாமல் இயங்கும் ஆற்றல் கொண்டதாகவும், அதிகப்படியான கரும்புகளைப்
பிழிந்தெடுக்கும் வன்மை வாய்ந்ததாகவும் உருவாக்கப்பட்டிருந்த தொழில்நுட்பம் பெறப்படுகிறது.
- விலங்குப்
பொறிகள்
விளை பயிர்களை விலங்குகளிடமிருந்து காக்கவும், ஊன்
உணவுகளைப் பெறவும், விலங்குகளை வீழ்த்தவும், பிடிக்கவும் விலங்குப் பொறிகளை உருவாக்கினர்.
விலங்குகளின் தன்மைக்கேற்ப பொறிகளின் செயல் திறனும், வடிவமைப்பும் மாறுபட்டது. அதேபோன்று, பறவை போன்றவற்றிலிருந்து
விளைச்சலைக் காக்க, சிறிய அளவிலான கைக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
- பெரிய
பொறிகள்
எய்யும் முள் போன்ற பருத்த மயிருடைய பிடரியைக்
கொண்டதும், சிறிய கண்களைக் கொண்டதுமான, நிலத்தில் மேயும் முள்ளம்பன்றி உயர்ந்த மலையையடுத்த
பரந்த தினைப்புனம் நோக்கி வரும்போது, அதனைப் பிடிக்க வைக்கப்பட்ட பெரிய துவாரத்தினை
உடைய எந்திரத்தை நற்றிணை காட்டுகிறது(98:1-4). தினைப் புனத்தை அழித்து விடுவதால், பன்றிகட்கு
அஞ்சி, அவை வரும் வழியில் வைக்கப்பட்ட எந்திரப் பொறியை மலைபடுகடாம்(193-195) சுட்டுகிறது.
அதே போல, தினையை உண்ணும் பன்றி அஞ்சி ஓடும்படி,
புனத்திற்குரியவன் சிறிய பொறியாக இணைத்திருந்த ‘பெருங்கல் அடாஅர்’ என்னும் எந்திரத்தில்
ஔ¢ளிய நிறமுள்ள வலிய புலி அகப்பட்ட காட்சியை,
தினை உண் கேழல் இரிய புனவன்
சிறு பொறி மாட்டிய பெருங்
கல் அடாஅர்
ஒண் கேழ் வயப் புலி படூஉம் (நற்.119:1-3)
என்பதில்
அறியமுடிகிறது. இதில், வலிமை மிகுந்த புலி
மாட்டும் என்பதால் எந்திரத்தின் தொழில்நுட்பமும், செயல்திறமும் விளங்கும்.
- சிறிய
கருவிகள்
மலைப் பக்கத்தே கட்டின பரண்மீது ஏறித்
தழலும் தட்டையுமாகிய கிளிகளைக் கடியும் கருவிகளைக் கையிலே வாங்கிக் கிளிகளை ஓட்டினர்(குறிஞ்சி.41-44).
தலைவி, வேங்கை மாலை சூடி, ஆயத்துடன் அழகுற நடந்து தழலினைச் சுற்றியும் தட்டையினைத்
தட்டியும் தினைப்புனம் காத்தாள் (அகம்.188:1-13). தழலும் தட்டையுமாகிய கிளிகடிகருவிகளைத்
தந்தும், தழையாடையைக் கொடுத்தும் இப்பொருள்கள் உனக்கு ஏற்படையன என்று புனைந்துரைகளைக்
கூறி தலைவியின் ஆய்நலத்தைத் தலைவன் கொள்ளை கொண்டான் (குறு.223:4-7) என்பன போன்ற குறிப்புகளிலிருந்து
வேளாண்மைத் துறையில் பாதுகாப்புக் கருவிகளாகத் தழலும், தட்டையும் விளங்கியமை தெரிகிறது.
இவை விலங்குப் பொறிகளைப் போலல்லாது, சிறிய வடிவில் கையால் இயக்கும் தன்மையில் வடிவமைக்கப்பட்டன.
மேற்கண்ட சங்க இலக்கியச் சான்றுகளின் வழி,
பழந்தமிழர் அடிப்படைத் தேவைகளுள் முதலாவதான உணவின் தேவைக்கு, அதனைச் சார்ந்த வேளாண்
தொழிலைச் சிறந்த முறையில் பயன்படுத்தினர் என்பது தெளிவாகிறது. மேலும், வேளாண் குடியைக்
காத்தல், இயற்கை மூலதனங்களைக் காத்தல் மற்றும் பெருக்குதல் (மழை, மண், மலை, வனம்),
செயற்கை வளங்களை உண்டாக்குதல் (நீர் நிலைகள், மண், மரம்), வேளாண் விளைநிலங்களின் விரிவாக்கம்,
பயிரிடுதலில் பலவகை நுட்பம் (மானாவாரி, ஊடுபயிர், பல்விதை பயன்பாடு, எரு இடுதல், களை
எடுத்தல், பயிர் பாதுகாப்பு) தொழில்சார் தொழில்நுட்பம் (பலவிதை கருவிகள் மற்றும் எந்திரங்களின்
பயன்பாடு) என்று வேளாண் மேலாண்மையில் அவர்கள் சிறந்து விளங்கியதும் இதன் வழி அறியப்படுகிறது.
‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ என்பது
உழவின் பெருமையை உலகுக்கு சொல்ல மூத்தோர்கள் உதிர்த்த முதுமொழியாகும். ஆனால் உலகம் பசியாற உழவன் சேற்றில் இறங்க வேண்டும்
என்றிருந்த நிலைமாறி உழவனே உணவுக்கு அல்லாடும் நிலைமையும், பட்ட கடனை அடைக்க வழியின்றி
தற்கொலை செய்துகொள்ளும் நிலையும்தான் நாட்டில் பல மாநிலங்களில் நிலவுகிறது’ (திட்டம்,
ப.12 செப்டம்பர் 2006) என்ற இன்றைய நிலையில், பழந்தமிழர் வேளைண் மேலாண்மைச் செயல்பாடுகளைக்
கருத்தில் கொள்ளவேண்டிய இன்றைய தேவை இதன்வழி உணரப்படுகிறது
பயன்பாட்டு
நூல்கள்:
1.அகநானூறு,(மூன்று
தொகுதிகள்), உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை, 1990.
2.இந்திய
அறிவியல் தொழில்நுட்பம், கிருட்டினமூர்த்தி, சா.,இராமசுந்தரம்,(பதிப்), அனைத்திந்திய
அறிவியல் தமிழ்க் கழகம், தஞ்சாவூர், 2006.
3.இந்தியா
2020, அப்துல் கலாம், ஏ.பி.ஜெ., உடன் ராஜன், ய.சு., நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
சென்னை, நான்காம் பதிப்பு, 2002.
4.ஐங்குறுநூறு
உரையுடன், சோமசுந்தரனார், பொ.வே., (பதிப்), கழக வெளியீடு, சென்னை, 1972.
5.கலித்தொகை
உரையுடன், நச்சினார்க்கினியருரையும், சோமசுந்தரனார்,பொ.வே., விளக்கவுரையும், கழக வெளியீடு,
சென்னை, நான்காம் பதிப்பு, 1973.
6.குறுந்தொகை
மூலமும் உரையும், சாமிநாதையர், உ.வே.,(உரை), உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை,
மூன்றாம் பதிப்பு, 2000.
7.சிலப்பதிகாரம்,
வேங்கடசாமி நாட்டார், ந.மு., (உரை), கழக வெளியீடு, சென்னை, 1928.
8.திட்டம்
(மாத இதழ்), சாஸ்திரி பவன், சென்னை. (மே 2004; டிசம்பர் 2005; செப்டம்பர் 2006; ஏப்ரல்
2007)
9.திருக்குறள்,
பரிமேலழகர் உரை, பூம்புகார் பதிப்பகம், சென்னை, எட்டாம் பதிப்பு, 2001.
10.தொல்காப்பியம்,
பொருளதிகாரம் (அகத்திணையியல், புறத்திணையியல்), நச்சினார்க்கினியர் உரை, கழக வெளியீடு,
சென்னை, இரண்டாம் பதிப்பு, 1955.
11.நற்றிணை
மூலமும் உரையும், வேங்கடராமன், எச்., மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.ச. நூல்நிலையம், சென்னை, 1990.
12.பத்துப்பாட்டு
மூலமும் உரையும், இரண்டாம் தொகுதி, சோமசுந்தரனார், பொ.வே., (பதிப்), கழக வெளியீடு,
சென்னை, ம.ப., 1973.
13.பத்துப்பாட்டு
மூலமும் உரையும், முதல் தொகுதி, சோமசுந்தரனார், பொ.வே., (பதிப்), கழக வெளியீடு, சென்னை,
ம.ப.,1973.
14.பதிற்றுப்பத்து,
நாராயண வேலுப்பிள்ளை, வித்துவான் எம்.,(உரை),
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்,
சென்னை, 1981.
15.புறநானூறு
மூலமும் உரையும், சாமிநாதையர், உ.வே.,(பதிப்),
சென்னை, ம.ப. 1971.
16.மணிமேகலை,
சோமசுந்தரனார், பொ.வே., (உரை), கழக வெளியீடு, சென்னை, 1975