செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

அகநானூற்றில் நெய்தல் திணை வாழ்வியல் இடர்ப்பாடுகள்

 முனைவர் ஆ.மணவழகன், உதவிப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை 600 113.

(பன்னாட்டு கருத்தரங்கம், எத்திராஜ் மகளிர் கல்லூரி, 9 டிசம்பர் 2011)

    மக்களின் வாழ்வியலானது, அவர்கள் சார்ந்து வாழும் நிலத்தின் தன்மையை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்படுகிறது. உணவு – உடை - உறையுள் போன்ற அடிப்படைத் தேவைகளின் தன்மைகள் மற்றும் நிறைவுகள், பண்பாட்டு விழுமியங்கள், நாகரிக வளர்ச்சிகள், புதிய கண்டுபிடிப்புகள், பல்துறை அறிவின் தேட்டங்கள் போன்றவையாவும் அவர்கள் சார்ந்துள்ள நிலத்தின் தன்மைக்கேற்பவே அமைகின்றன. அதனாலேயே முதல் பொருள்களாக ‘நிலத்தையும் பொழுதையும்’(தொல்.பொருள்.அகத்.4) சுட்டுகிறார் தொல்காப்பியர். தமிழகத்தில் நிலம்சார் வாழ்வியல் என்பது இன்றும் அறுபடாத தொடர்ச்சியைக் கொண்டதாகவே உள்ளது. குறிப்பாக, நெய்தல் திணைசார்ந்த வாழ்வியலைச் சுட்டலாம். நெய்தல் திணையானது,  வாழ்க்கை முறைகளிலும் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகளிலும் இன்றும் மாற்றத்துக்கு உட்படாத ஒன்றாகவே விளங்குகிறது. அவ்வகையில், அகநானூற்றின்வழி நெய்தல் திணை வாழ்வியலில் அம்மக்கள் எதிர்கொண்ட இடர்ப்பாடுகளைச் சுட்டுவதாக இக்கட்டுரை அமைகிறது.

நெய்தல் நில வாழ்வியல்

     கடலும் கடலைச் சார்ந்தும் அமைவது நெய்தல் திணை வாழ்க்கை. ஐந்திணைகளைச் சுட்டும் தொல்காப்பியர், ‘நடுவண் ஐந்திணை நடுவணது ஒழியப், படுதிரை வையம் பாத்திய பண்பே’ (தொல்.பொருள்.அகத்.2) என்பார். இதில் நடுவண் திணையாகிய பாலை நீங்களாகக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நான்கின் அடிப்படையில் கடலால் சூழப்பட்ட இவ்வுலகைப் பகுத்துக்கொண்டனர் என்கிறார். கடலால் சூழப்பட்ட உலகம் என்பதன்வழி, உலகின் அதிகப் பரப்பளவினைக் கொண்டது நெய்தல் திணை என்பதும், மக்கள் அதிகம் சார்ந்துள்ளதும் நெய்தல் திணை வாழ்வியலையே என்பதும் புலப்படும். நெய்தல் திணை மக்கள் ‘வேந்தனை’ தெய்வமாகக் கொண்டவர்கள் (தொல்.பொருள்.அகத்.5); இத்திணை ஆண்டு முழுவதும் தொழிற்படும் சூழலைக் கொண்டிருப்பதால் பெரும்பொழுது ஆறும் இதற்கு உரியதாகிறது; சிறுபொழுது தொழில் முடித்து திரும்பி வருகிற ‘எற்பாடு’(தொல்.பொருள்.அகத்.8) ஆகும். நெய்தல் நில ஊர்கள் பட்டினம், பாக்கம், சேரி, சிறுகுடி என வழங்கப்படுகின்றன. நெய்தல் நில மக்களின் தொழில்களாக மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல், வளையறுத்தல்(சங்கு வளையல்), முத்தெடுத்தல், உணங்கல் மீன் தயாரித்தல், கடல் வணிகத்தில் ஈடுபடுதல் போன்றவை காணப்படுகின்றன. மீன்பிடித்தலும் உப்பு விளைவித்தலும் முதன்மைத் தொழில்களாகும். இவற்றிலும் மீன் பிடித்தலே இவர்களின் அடையாளத் தொழில் என்பதை, ‘பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்’ (அகம்.140:1) என்ற அடைமொழி காட்டுகிறது.

வாழ்வியல் இடர்ப்பாடுகள்

    அடிப்படைத் தேவைகளாகிய உணவு, உடை, உறையுள் ஆகியவற்றிற்காகவும், முதன்மைத் தொழில்களாகிய மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல் போன்றவற்றிலும் அதன் சார்பு தொழில்களான பண்டமாற்றுதல், வணிகம் செய்தல் போன்றவற்றிலும் நெய்தல் திணை மக்கள் எதிர்கொண்ட இடர்ப்பாடுகள் மிகுதியாகும். ஆடவரின் நிலையில்லாத வாழ்க்கைச் சூழலில் அவர்களைச் சார்ந்து வாழ்ந்த மகளிரின் நிலையும் துன்பம் மிகுந்ததாகவே இருந்தது. இதன் காரணமாகவே, நெய்தல் நிலத்திற்கான உரிப்பொருளாக ‘இரங்கலும் இரங்கல் நிமித்தமும்’(தொல்.பொருள்.அகத்.14) என்பதைச் சுட்டுகிறார் தொல்காப்பியர். அகநானூற்றுப் பாடல்கள்வழி, இம்மக்கள் எதிர்கொண்ட இடர்ப்பாடுகளை 1. இயற்கையால் ஏற்படும் இடர்ப்பாடுகள், 2. உயிரினங்களால் ஏற்படும் இடர்ப்பாடுகள், 3. மனிதர்களால் ஏற்படும் இடர்ப்பாடுகள், 4. நில அமைப்பால் ஏற்படும் இடர்ப்பாடுகள் என நான்கு வகைகளாகப் பகுத்துக்காண முடிகிறது. 

  1. இயற்கையால் ஏற்படும் இடர்ப்பாடுகள்

         பரதவர்களுடைய வாழ்க்கை இயற்கையோடு இயைந்தது என்பதாலும், இவர்களின் தொழிற்களமாகக் கடலும் கடலைச் சார்ந்த பகுதியும் விளங்குவதாலும் இயற்கையின் ஒவ்வொரு சிறு மாற்றமும் இவர்களின் அன்றாட வாழ்க்கையை நேரடிப் பாதிப்பிற்குள்ளாக்குகிறது. கடலின் சீற்றம், காற்றின் நிலை, பருவநிலை மாற்றம், புயல், மழை, வெயில் என அனைத்து நிலைகளிலும் இவர்கள் வாழ்க்கைப் போராட்டம் நடத்த வேண்டியவர்களாக உள்ளனர்.

 காற்றின் நிலை மாறுபடுதல்

காற்றின் தன்மையறிந்து, அதன் திசை ஓட்டத்தை அறிந்து, அதற்கேற்ப நாவாய்களை இயக்கி, கடற்கரையில் உள்ள மாட விளக்குகளையே இடமறியும் அடையாளங்களாக்கி, கடலையே தம் தொழிற்களமாகக் கொண்டவர்கள் பரதவர்கள் (அகம்.255:1-6). இச்சூழலில், காற்று தேவையான அளவு வீசாவிட்டாலும், இயல்பு மாறி கடுமையாக வீசினாலும் கடற்தொழில் பாதிக்கப்படும். இவ்வகையான கடற்காற்றின் சீற்றத்தால் தொழில்முடக்கம் ஏற்படுவதை அகநானூறு காட்டுகிறது. கீழைக்காற்று பலமாக வீசுவதால் மீன்பிடிக்கச் சென்ற கலம் உடைந்துவிடுகிறது; வலைகளும் கடலில் மூழ்கிவிடுகின்றன. அதனால் வேலையின்மையும், தொழில்முடக்கமும் ஏற்படுகின்றன. முடங்கிய தொழிலை மீண்டும் தொடங்க, மேடான பகுதிகளில் அமர்ந்து புது வலைகளைப் பின்னிக்கொண்டிருக்கின்றனர் பரதவர்கள் (அகம்.10:8-13). காற்று சீற்றத்துடன் அடித்ததாலே தொழில்முடக்கம் ஏற்பட்டது போலவே, தேவையான அளவு காற்று வீசாததாலும் தொழில்முடக்கம் ஏற்பட்ட நிலையையும் காணமுடிகிறது. நாவாய்களை ஓட்டிச் செல்வதற்குக் காற்றின் வேகம் தகுந்த அளவில் தேவை. அப்போதுதான் பாய்விரித்து, காற்றின் போக்கில் கலத்தைச் செலுத்த முடியும். ஆனால், தகுந்த காற்று வீசாததால் தொழிலுக்குச் செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது (பாடல் 50:1). இவ்வகை இடர்ப்பாடுகளால், வேலையற்ற நாட்களும், அதனால் வருமான இழப்பும், கலம், வலை போன்றவை சிதைவுற்று பொருளாதார நட்டமும் எற்பட்டதை அறியமுடிகிறது.

    இதுபோலவே, குறிப்பிட்ட பருவக்காலங்களில் கடலில் தொழில்வழங்கா நிலையும் சுட்டப்பட்டுள்ளது. இச்சூழலை, மலைநிறங்கிளர, வண்டினம் மலர்பாய்ந்து ஊத, குருகினம் ஒலிப்ப, அலவன் அளைவயின்செறிய, ‘திரைபாடு அவிய, திமில் தொழில் மறப்ப’ (அகம்.260:1-10) என்கிறது அகநானூறு. மேலும், மீன்வேட்டைக்குச் செல்லாததாலே வெறிச்சோடிக்கிடக்கும் கடற்கரைப் பரப்பும், அதனால், கடற்சிறு காக்கை தன் துணையோடு பசிப்பிணியால் வாடும் நிலையும் (அகம்.170:10-12) காணப்படுகிறது.

கடல் சீற்றம்

    கடற்தொழிலை மேற்கொள்பவருக்கு இன்றும் பெருத்த இடையூறாக இருப்பது கடல் சீற்றமாகும். கடல் சீற்றங்கொண்டு அலைகள் விரைந்தடிக்கும் காலங்களில் கடலில் படகுகளைச் செலுத்த வாய்ப்பின்றி, தொழிற்பட முடியாத சூழல் ஏற்படுகிறது. அகநானூற்றில், கடற்கரை ஓரத்திலிருக்கும் புன்னை மரங்களில் அமர்ந்துள்ள நாரைகள் முதலான பறவைகள் அஞ்சி, நடுங்கி ஓடும்படி கடல் அலையானது மிகுந்த சீற்றத்துடன் எழுந்து, கரைமீது மோதி ஆர்ப்பரிக்கின்ற நிலை காட்டப்படுகிறது (அகம்.190:7-9). மேலும், கடலில் அலை அடித்துக்கொண்டே இருப்பதையும், பரதவர் தம் வலிமை முழுவதும் செலுத்தி திமிலோட்டி, வருந்தி மீன் பிடித்து வருகின்ற நிலையும் காணப்படுகிறது (அகம்.320:1-2).

     விடியற்காலையில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று ‘எற்பாடு’ என்று வழங்கப்படுகிற மாலையில் கரைதிரும்புதல் மீனவத் தொழிலின் இயல்பு. ஆயினும், தொழில்நிமித்தம் காரணமாக அலைகள் வீசுகின்ற கடலிலே, இரவிலே, திமிலில் கட்டிய விளக்கொளியைப் பயன்படுத்தி மீன் பிடிக்கும் பரதவர்களின் இடர்ப்பாடு மிகுந்த வாழ்க்கை பதிவாகியுள்ளது (அகம்.100:6, 240:5). இவ்வகை வாழ்க்கை முறையே பரதவரின் மரபுவழிச் செல்வம் என்பதால், ஆபத்தான இத்தொழிலையும் தம் மகன்களுக்குப் பழக்கிவிடுகின்றனர் தந்தையர் (அகம்.140:5-6).

  1. உயிரினங்களால் ஏற்படும் இடர்ப்பாடுகள்

கடல் சுறாக்கள்

பரதவர் தொழிற்படு சூழலில் இயற்கையோடு மட்டுமல்லாது கடல்வாழ் உயிரினங்களாலும் பலவிதமான ஆபத்துகளைச் சந்திக்க நேரிடுகிறது. கூர்மையான கொம்புகளையுடைய வேட்டை சுறாக்கள் திரிகின்ற கடற்பரப்பில் தம் தொழிலை மேற்கொள்ள வேண்டியிருந்தது. இதனை, ‘கோட்டுமீன் வழங்கும் வேட்டமடி பரப்பின்’ (பாடல்.170:12) என்கிறது அகநானூறு. இவ்வகையான கொடிய சுறாக்கள் மீன்பிடித் தொழிலுக்குச் செல்லும் பரதவர்களுடைய வலைகளைத் தம் கூரிய கோடுகளால் கிழித்து அழித்துவிடுகின்றன. அவ்வாறு கிழித்து வீணடிக்கப்பட்டு, தொழிலுக்குப் பயன்படாதுபோன வலைகள் பரதவரின் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள தாழைகளின் மேல் கிடக்கின்றன (அகம்.340:20-23). இதனால் தொழில் முடக்கமும், பொருளாதார நட்டமும் ஏற்பட்டதை அறியமுடிகிறது. இறால் மீனால் தாக்கப்பட்டு புண்பட்ட பரதவரைக் குறுந்தொகையும் காட்டுகிறது (குறு.பா.269:3-4). இவ்வகை ஆபத்துகள் நிறைந்ததாலே மீன்பிடித் தொழில் ‘கொடுந்தொழில்’ எனப்பட்டது. கொடுந்தொழில் என்பதற்குக் கொலைத்தொழில் (மீன்களைக் கொல்லுதல்) என்று பொருள்கொள்வர். ஆனால், ஆபத்தான தொழில் என்பதே பொருத்தம்.

    கடற்பரப்பில் ஆபத்தை விளைவிக்கும்  சுறாக்கூட்டத்தை நீக்கி, அவற்றின் கண்களில் படாமல் நீரில் மூழ்கி, வலம்புரிச் சங்கினை எடுத்துவரும் மிக ஆபத்தான தொழிலிலும் பரதவர் ஈடுபட்டனர். இவ்வகையான ஆபத்துகளிலிருந்து நீங்கிக் கரைசேரும் பரதவர்களைக் கரையிலிருப்போர் மகிழ்ச்சிப் பெருக்கால், இசை முழங்கி, ஆரவாரித்து வரவேற்கின்றனர். வலம்புரி எடுப்போரை, ‘இலங்கிரும் பரப்பின் எறிசுறா நீக்கி, வலம்புரி மூழ்கிய வான்றிமிற் பரதவர்’ (அகம்.350:10-11)  என்கிறது அகநானூறு.

வணிகக் கப்பலைத் தாக்கும் சுறாக்கள்

சுறாக்களால் மீன்பிடித் தொழில், முத்தெடுக்கும் தொழில் போன்றவைப் பாதிக்கப்படுவதோடு, கடல் வணிகமும் பாதிப்பிற்குள்ளாகிறது. வெளிநாட்டு வணிகத்தில ஈடுபட்ட கலன்களைத் தாக்கி சிதைக்கும் பெருங்கூட்டமான சுறாக்களை அகநானூறு காட்டுகிறது. இதனை, தித்தன் என்பான் பாணரைப் புரந்த பெரிய புகழினன்; சினம் மிக்க படையினன்; அவனது ஒலிக்கும் நீர்ப்பரப்பையுடைய கானலம் பெருந்துறைப்பட்டினத்தில் பொன்னைக் கொண்டு வரும் மரக்கலம் சிதையுமாறு தாக்கும் சுறாமீன் கூட்டம் (பா. 152:6-8) என்பதில் அறியமுடிகிறது.

  1. மனிதர்களால் ஏற்படும் இடர்ப்பாடுகள்

         தொழில்முறை முரண்பாடுகள்

    ஒவ்வொரு திணைக்குமான தொழில்களும் பிற திணைசார் தொழில்களிலிருந்து செயல்படும் விதத்தாலும், தொழிலின் தன்மையாலும் முற்றிலும் வேறுபடுகின்றன. இதனால், சிற்சில நேரங்களில் திணைசார் மக்களிடையே தொழில்முறை முரண்பாடுகளும் போர்களும் ஏற்படும் சூழல் உருவாகிறது. நெய்தல் திணையை அடுத்து அமைவது மருதத் திணை. நெய்தல் திணையின் தொழில்களுக்கும் மருதத் திணையின் தொழில்களுக்கும் செயல்முறையில் வேறுபாடு இருப்பதால் ஒருவரின் தொழில் மற்றவரின் தொழிலைப்  பாதிக்கிறது.  வேளாண் மக்கள் உழுது விளைவிப்பது நெல் என்றால், பரதவர் உழாமல் விளைவிப்பது உப்பு [உழாஅது செய்த வெண்க லுப்பு (அகம்.140:2)]. இவ்விரு திணைசார் மக்களுக்கும் தொழில்முறையில் ஏற்பட்ட பூசலை அகநானூறு காட்டுகிறது. வேளாண் நிலத்தில் அறுவடை செய்யும் காலத்தில், அகன்ற களத்தில் வைக்கோல் போர்வைப் பிரித்து கடாவிட்டு, பின்னர் காற்று நன்றாக வீசிகின்ற பொழுதில் நெற்பொலியைத் தூற்றுகின்றனர். அவ்வாறு தூற்றுதலாலே காற்றினால் பறந்துபோன துரும்புகளும், தூசிகளும் அருகிலுள்ள நெய்தல் நிலத்தின் உப்புப் பாத்திகள் மறையும்படி பரவுகின்றன. இதனால், உணவுக்கு இனிமை தருகின்ற உப்புச் சிதைதலால் சினங்கொண்ட பரதவர்கள் கழனி உழவரோடு பகைத்து எதிர்த்துச் சண்டையிடும் நிலை உருவாகிறது. பின்னர் அங்கிருக்கும் வேளாண் சான்றோர்கள் அச்சண்டையை விடுவித்து பரதவர்களை அமைதிப்படுத்துகின்றனர் (அகம்.366:1-11). இந்நிலை, பரதவர் தொழிலில் பிற திணை மனிதர்களால் ஏற்படும் இடர்ப்பாடுகளையும், இழப்பையும் காட்டுகிறது.

பெண்களுக்கு ஏற்படும் இடர்ப்பாடுகள்      

    மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல் போன்றவை நெய்தல் நிலத்து ஆடவர் தொழிலாயினும், அவற்றைப் பண்டமாற்றுதலிலும், வணிகம் செய்தலிலும், உணங்கல் மீன் உற்பத்தி போன்றவற்றிலும் பரதவப் பெண்களே ஈடுபடுகின்றனர். இவ்வகைத் தொழில்களில் ஈடுபடும் இவர்களுக்கு,  நெய்தல் நிலத்து ஆடவர்களாலும் பிற நிலத்து ஆடவர்களாலும் இடையூறுகள் ஏற்படுகின்றன. உப்பு விற்கப்போகும் உமணப் பெண்ணுக்குப் பிற நிலத்து ஆடவர்களால் இன்னல்கள் ஏற்படுவதை அகநானூறு காட்டுகிறது. இதில், உமணக் கூட்டத்தோடு நெடுந்தொலைவு பயணித்து, ஊர்ஊராக, தெருத்தெருவாகச் சென்று, வருந்தி, ‘உப்புக்கு நெல்லை ஈடாகக் கொடுத்து வாங்குவீர் உளீரோ’ எனக் கூவி உப்பு விற்கிறாள் உமணப் பெண் ஒருத்தி. அவளை இடைமறிக்கும் ஆடவன் ஒருவன், ‘நீ சுமந்துவரும் உப்பு இருக்கட்டும், உன் உடம்பில் ஒட்டியிருக்கும் உப்பின் விலையைக் கூறு வாங்குகிறேன்’ என்று எள்ளல் செய்யும் கொடுமை காட்டப்பட்டுள்ளது (அகம்.390:8-12).

    மேலும், உமணப் பெண்கள் உப்பு விற்கச் செல்லும் வழிகள் மிகவும் சீர்மையற்றவையாக, ஆபத்து நிறைந்தவையாக உள்ளன (அகம்.140:2-5). அதேபோல, வணிகர்கள் செல்லும் வழிகளின் கொடுமையைக் குறிப்பிடுமிடத்து, வழிப்பறிக் கொள்ளையர்கள், சுமை மிக்க கழுதைகளின் நீண்ட நிரைகளைப் பின்பற்றி வரும் வணிகர்களை வெட்டி, அவர்களின் தலைகளைத் துண்டித்து, தம் வெற்றிக்கு அறிகுறியாய் மெல்லத் துடியை முழக்கி, அவரவர் கொள்ள வேண்டிய முறையில் பிரித்துக்கொள்ளும் வறிய கொல்லையையும் தினைப்புனங்களையும் உடைய வழிகள் (அகம்89:10-16) என்று காட்டுகிறது அகநானூறு. மேலும், வழிபறி செய்வதற்குப் பொருள்கள் எதுவும் இல்லையென்றாலும், வழிப்போக்கரின் உயிரைப் போக்கிவிடுகிற கள்வர்களின் இரக்கமற்ற கொடுஞ் செயலையும்(அகம்.109:11-15), வழிப்போக்கர்கள் எவரேனும் வருகிறார்களா என்று வழிபார்த்திருக்கும் கள்வர்களின் நிலையையும் (அகம்.127:16-18), கள்வர்களின் தொல்லையால் மக்கள் அனைவரும் ஊரைவிட்டு வேற்றிடம் பெயர்ந்துவிட்ட அவலத்தையும் (அகம்.167:7-10) அகநானூற்றில் காணமுடிகிறது. இவையாவும் பரதவர்கள் வாழ்க்கையில் மனிதர்களால் ஏற்பட்ட இடர்ப்பாடுகளாக உள்ளன.

  1. நில அமைப்பால் ஏற்படும் இடர்ப்பாடுகள்

         கடற்கரையும், கழிவாய் முகத் துவாரங்களும் நிறைந்த பகுதியே நெய்தல் நில வாழ்விடம் என்பதால், மருதம், முல்லை போன்ற திணைகளின் சுற்றுச்சூழலுக்கும், நெய்தல் நிலச் சுற்றுச் சூழலுக்கும் பெருத்த வேறுபாடு காணப்படுகிறது. கடற்காற்று எப்போதும் வீசிக்கொண்டிருப்பதால் தொழிற்படு இடங்களில் உயர்ந்த குடியிருப்புகளை அமைக்க முடியாத நிலை, கடல் அலைகளின் சீற்றத்தால் குடியிருப்புகள் அடிக்கடி நீரால் சூழப்படுதல், கழிவாய் துவாரங்களில் வாழும் ஆபத்தான உயிர்களால் துன்பம் ஏற்படுதல், மணற் பரந்த தெருக்கள், நீர் சூழ்ந்த ஊர்கள், பாதைவசதி இன்மை போன்றவை நெய்தல் நில அமைப்பால் ஏற்படும் இடர்ப்பாடுகளாக உள்ளன.

 குடியிருப்புகளின் அவல நிலை

    பரதவர்களின் குடியிருப்புகள் தன்னிறைவு அற்றவையாகவே காணப்படுகின்றன. நிலவே விளக்காக, வீடுகள் புல்லால் வேயப்பட்டதாக, தெருக்கள் மணல்கள் நிறைந்ததாக, காண்பவர் இது ஓர் ஊர் என்று எண்ண முடியாத அளவிற்குச் சிறுமையுடையதாக, நீரால் சூழப்பட்டதாக, துன்பம் மிக உடையதாக இருக்கும் பரதவர் இருப்பை அகநானூறு காட்டுகிறது (அகம்.200:1-4). அகன்ற வாயில்களைக் கொண்டிருந்தால் கடற்காற்றால் வீடு களையப்படும் என்பதால், சிறிய வாயில்களைக் கொண்ட சிறு குடில்களாக அவை இருந்தன (‘குறியிறைக் குரம்பைக் கொலவெம் பரதவர்’). இதனால் அவர்கள் ‘சிறுகுடி பரதவர்’ என்ற அடைமொழியால் அழைக்கப்பட்டனர்.

    அதேபோல, குடியிருப்பை ஒட்டியுள்ள நீர்நிலைகளில் முதலை, சுறா போன்ற கொடிய உயிரினங்கள் வாழ்ந்ததால் அவைகளால் இத்திணை மக்களுக்கும் அவர்களின் வளர்ப்பு விலங்குகளுக்கும் ஆபத்துகள் ஏற்பட்டன(அகம்.50). மேலும், ஊரைச் சுற்றிலும் நீர் நிறைந்து போக்குவரத்து முதலான எந்த அடிப்படை வசதியுமின்றிக் காணப்பட்ட பரதவர் குடியிருப்புகளை. ‘பெருநீர் வேலியெஞ் சிறுநல் லூரே’ (அகம்.310:17) என்பதில் அறியமுடிகிறது.

    மேற்கண்ட அகநானூற்றுச் சான்றுகளின் வழி திணைசார் வாழ்வியலில் பரதவர்களுக்கு ஏற்பட்ட இடர்ப்பாடுகள் அறியப்பட்டன. அதேவேளை, மீனவர்களின் வாழ்க்கையானது இன்றும் இடர்ப்பாடுகளும் துன்பங்களும் நிறைந்ததாகவே தொடர்கின்றது. காற்று, கடற்சீற்றம், இயற்கை மாறுபாடு, கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றால் ஏற்படும் துன்பங்களைக் காட்டிலும் அண்டை நாட்டினரான சிங்களவர்களாலும் சிங்களப் படையினராலும் தமிழக மீனவர்களுக்கு ஏற்படும்  இன்னல்களும் கொடுமைகளும் உயிரிழப்புகளும் அதிகம் என்பதை நாளிட்ட செய்திகள் காட்டுகின்றன. ஆண்டாண்டு காலமாகத் தொடரும் மீனவ மக்களின் இவ்வகைத் துன்பங்களைக் களைய  மாநில மற்றும் நடுவண் அரசுகள் விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

*****

Dr.A. Manavazhahan, Assistant Professor, Sociology, art & Culture, International Institute of Tamil Studies, Chennai.

தமிழியல் 

www.thamizhiyal.com