முனைவர்
ஆ.மணவழகன், இணைப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி
நிறுவனம், சென்னை.
(தினமணி, சூலை
29, 2017)
‘உற்றுழி உதவியும்
உறுபொருள் கொடுத்தும், பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே’ என்று
பாண்டியன் நெடுஞ்செழியனும் ‘யாதானும் நாடாமால்
ஊராமால் என்ஒருவன், சாந்துணையும் கல்லாதவாறு’ என்று வள்ளுவரும் ‘கற்கை நன்றே கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்று ஔவையாரும்
கல்வியின் தேவையையும் சிறப்பையும் வலியுறுத்துவர். தமிழ்ச் சமூகத்தில் தொன்றுதொட்டு
போற்றப்படும் சிறந்த செல்வமாக கல்வி விளங்கி வருகிறது.
அண்மைக்காலச் சமூகச் செல்நெறிகள் கல்வியை
அனைத்திற்குமான அடிப்படை மூலதனமாகக் கட்டமைத்துள்ளன. மனவளமும் அறிவு வளமும் கல்வியால் ஆகும் என்ற நிலை
மாறி, பொருளியலும் அதன்வழி இன்பமுமே கல்வியால் ஆகும் என்ற நிலை தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.
இன்று, கல்வி ஒரு வேட்டைச் சமூகத்தின் முக்கிய தேடல் பொருளாக மக்கள் மனத்தில் குடிகொண்டுள்ளது.
இச்சூழலில், வல்லுநர்கள் பலரை அழைத்து பள்ளிப் பாடத்திட்ட உருவாக்கம் தொடர்பான கருத்துகளை
அரசு கேட்டுள்ளது. பாடத்திட்ட உருவாக்கத்தில் அரசும் வல்லுநர் குழுவும் கருத்தில் கொள்ளவேண்டியவை
பல உள்ளன.
பழந்தமிழ்ச் சமூகம் என்றாலே காதல், வீரம்,
உடன்போக்கு என்பதான புரிதலையே இன்றைய இளந்தலைமுறையினர் கொண்டுள்ளனர். இளந்தலைமுறையினர்
மட்டுமல்ல சங்கத் தமிழை அதன் துறைகளோடு உள்வாங்காத யாவருக்குமான புரிதலும் இதுவே. தமிழ்ச்
சமூகம் எதை விதைத்ததோ அதை அறுவடை செய்யவில்லை என்பது உண்மையில் முரண்பாடே.
அறுவை சிகிச்சை மருத்துவம் நம்மிடையே இருந்ததா என்றால்
இல்லை, அது மேலைநாட்டு வரவு என்கிறான் மாணவன். நீர் மேலாண்மை உத்திகளும் நெசவுத் தொழில்நுட்பங்களும்
கட்டுமான நுட்பங்களும் எங்கிருந்தோ வந்தவை என்பதே அவனுடைய அசைக்கமுடியா நம்பிக்கையாக
உள்ளது. அது மாணவன் தவறு அல்ல, அவனுக்குச்
தமிழ்ச் சமூகத்தின் பெரும் அறிவு மரபை அறிமுகம் செய்யாது விட்ட நம் தவறு.
ஐம்பூதங்களின் தன்மைகள் பற்றியும் உலகத்தின்
தோற்றம் பற்றியும் தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் பேசுகின்றன. கோள்நிலைகளைக்
கொண்டு உலக நிகழ்வுகளை முன்னுணர்ந்த நுட்பத்தைச் சங்கச் சான்றோர் உணர்த்துகின்றனர்.
விண்மீன்களும் கோள்களும் தத்தமக்குரிய இடத்தே நிற்க, மழை தப்பாது பொழிந்ததை பதிற்றுப்பத்துப்
பதிவு செய்கிறது. அண்டவெளியிலே குறிப்பிட்ட
உயரத்துக்கு மேலே காற்று இருப்பதில்லை என்ற வானியல் உண்மையைப் புறநானூறு அறிவிக்கிறது.
இந்த இயற்கை அறிவியலையும் முன்னோர் அறிவையும் இளந்தலைமுறைக்கு கொண்டுசேர்க்காமல் போனது
யார் தவறு?
தாவரங்களுக்கு உயிரும் ஓர் அறிவும் உண்டு
என்று முதன்முதலாக அறிவித்த தொல்காப்பியரின் தாவரவியல் கண்டுபிடிப்பை இன்னும் எத்தனை
ஆண்டுகளுக்கு மறைத்து வைத்திருக்கப் போகிறோம்? ’நோய் மருங்கு அறிநர்’ என்று மருத்துவனை
விளிக்கும் தொல்காப்பியம் தொடங்கி, இயற்கை மருத்துவம், இசை மருத்துவம், நுண்மருத்துவம்,
அறுவை மருத்துவம், மனவள மருத்துவம் என நீளும் பண்டைத் தமிழனின் மருத்துவ அறிவை இப்போது
விட்டால் வேறு எப்போது மாணவனுக்கு அறிமுகப்படுத்துவது?
‘சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்’ என்று ஏர்க்குடிகளின் இன்றியமையாமையைச் சுட்டியதோடு,
நிலத்தினை ஆழமாகவும், மண் மேல்-கீழ் புரளும்படி பலமுறை நன்கு உழுதலும், நிலத்தை ஆறப்போடுதலும்
மண்ணையே எருவாக்கும் நுட்பங்கள் என்று வள்ளுவரும், பூமி மயங்க பலமுறை உழுது விதைக்கவேண்டும்
என்று புறநானூறும், கொழு முழுகும் அளவிற்கு ஆழமாக உழவேண்டும் என்று பெரும்பாணாற்றுப்படையும்
வேளாண்மை நுட்பங்களை வலியுறுத்துகின்றன.
மண்ணையும் நீரையும் ஒன்றிணைப்போர் உடலையும்
உயிரையும் படைத்தவராவார் என்ற புறநானூற்றுச் சான்றோனின் நீர் மேலாண்மைச் சிந்தனை உலகம்
வியக்கக்கூடியது. ஓடிவரும் மழைநீரைத் தேக்கிவைத்து வேளாண்மைக்குப் பயன்படுத்த பாறைகளையும்
சிறிய குவடுகளையும் இணைத்து, எட்டாம்நாள் பிறைநிலவைப் போன்ற வடிவத்தில் கட்டப்பட்ட
தடுப்பணையை இலக்கியம் காட்டுகிறது. நீர்த்தேக்க கட்டுமான நுட்பத்தில் வளைந்த வடிவிலான
தடுப்பணை என்பது தமிழன் உலகிற்கு வழங்கிய கட்டுமான நுட்பமாகும்.
பழந்தமிழர் கட்டுமான நுட்பத்தில் நீர்நிலைகளோடு குடியிருப்புகளின்
வடிவமைப்புகளும் நுண்மை வாய்ந்தவை. பலமாடிக் கட்டடங்களையும் பருவநிலைக்கு ஏற்ப உறையும்
தளங்களையும் நெடுநல்வாடை, சிலப்பதிகாரம் முதலான இலக்கியங்கள் கண்முன் நிறுத்துகின்றன.
குடியிருப்புகளில் சுருங்கைத் தூம்பு எனப்படும் கழிவுநீர் போக்குக் குழாய்களும் அமைக்கப்பட்டிருந்தது
தமிழரின் மரபுத் தொழில்நுட்பத்திற்கும் நாகரிகத்திற்கும் சான்று.
பட்டிலும் பருத்தியிலும் நெய்யப்பட்ட உடைகள்
நூலிழைகளின் இடைவெளியை அறிய முடியாத நுட்பத்திலும், பல வண்ணங்களிலும், பூ வேலைப்பாடுகள்
நிறைந்தும், பாம்பின் தோல், பாலாடை, மூங்கிலின் உள்தோல், அருவியின் சாரல் எனப் பல்வேறு
தன்மைகளில் மிக்கத் தொழில்நுட்பங்களோடு வடிவமைக்கப்பட்டிருந்ததைத் தமிழின் செவ்விலக்கியங்கள்
காட்டுகின்றன. சிறல் எனும் மீன்கொத்திப் பறவை நீரில் மூழ்கி மேலெழும்போது அதன் அலகில்
மீன் மாட்டி இருபுறமும் தொங்குவதைப் போல, மார்பில் வெட்டுப்பட்ட வீரனின் காயத்தைத்
தைக்கும் ஊசியின் தோற்றம் இருப்பதாகப் பதிற்றுப்பத்து பழந்தமிழரின் அறுவை சிகிச்சை
மருத்துவ நுட்பத்தைப் படம்பிடிக்கிறது.
பண்டை இலக்கியங்களில் பொதிந்துகிடக்கிற
தமிழரின் மரபு அறிவு நுட்பங்கள் அனைத்தும் யாருக்காக? இளங்கலையிலும் முதுகலையிலும்
தமிழை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்து தமிழியல் ஆய்வில் ஈடுபடுவோருக்கு மட்டுந்தானா?
இத்தனை ஆண்டுகளாக அப்படியொரு நிலையில்தான் நம் பாடத்திட்டம் இயங்குகிறது என்பது வேதனையான
உண்மை. தமிழரின் அறச்சிந்தனைகளை, மரபு அறிவு நுட்பங்களை, வாழ்வியல் விழுமியங்களை, மரபுக்
கலைகளைப் பள்ளி மாணவர்களுக்கும் கொண்டு சேர்ப்பதும், அறிமுகம் செய்வதும் நம் கடமையல்லவா?
செவ்விலக்கியங்களில் ஒரு தொகுப்பான பதினெண்
கீழ்க்கணக்கு நூல்கள் அக்காலப் பாடத்திட்ட உருவாக்கமே. அத்தொகுப்பில் தமிழரின் அறம்-அறிவியல்-சமூகம்
என அனைத்துக் கூறுகளும் பொதிந்துள்ளன. இவற்றிலிருந்து
தேவையானவற்றைச் சாறுபிழிந்து மாணவனுக்குக் கொடுக்க முடியும். ‘வடக்குத் திசையோடு, கோணத்
திசைகளிலும் தலைவைத்துப் படுக்கக்கூடாது’, ‘இரவில் மரங்களின் அடியில் படுத்துறங்கக்
கூடாது’, ‘இனிப்புச் சுவையுள்ள உணவை முதலிலும், கசப்புச் சுவையுள்ள உணவை இறுதியிலும்,
மற்ற சுவையுள்ள உணவுகளை இடையிலும் உண்ணுதல் வேண்டும்’ என்பன போன்ற மாணவர்களுக்கான வாழ்வியல்
அடிப்படைகளைக் கீழ்க்கணக்கு நூல்கள் மிக நுட்பமாகப் பதிவுசெய்துள்ளன. குறிப்பாக, வாழ்வியல்
நெருக்கடிகளை எதார்த்தமாக எதிர்கொள்ளத் தேவையான அத்தனைக் கூறுகளையும் நம் இலக்கியங்கள்
நிரம்பவே கொண்டுள்ளன. தொடக்கப் பள்ளி பாடத்திலிருந்தே இவற்றை முறைப்படுத்தி வழங்க முடியும்.
உலகின் தொன்மை இனமாம் தமிழினத்தின் தோற்றமும்
வரலாறும், செம்மொழியாம் தமிழின் சிறப்புகள், மரபு இலக்கியங்களில் காணலாகும் அறச் சிந்தனைகள்,
மனிதநேயக் கூறுகள், உளவியல் சிந்தனைகள், மரபு அறிவியல் நுட்பங்கள், பல்துறை மேலாண்மை,
கலைப் பண்பாட்டுக் கூறுகள், ஆட்சித்திறன் போன்ற விழுமியங்களைப் பாடத்திட்டத்தில் இடம்பெறச்
செய்தல் வேண்டும். செய்திகளின் தன்மைகள், மாணவர்களின் வயது மற்றும் புரிந்துணரும் ஆற்றல்
போன்றவற்றிற்கேற்ப மேற்கண்டவற்றை நிரல்படுத்த முடியும். மேலும், இவற்றை எளிய வடிவிலும்
படக்கதைகளாகவும் சுவைபட வழங்க முடியும். தேர்வுகளை எதிர்கொள்ளும் பாடத்திட்டத்தோடு
வாழ்வியலை எதிர்கொள்ளும் பாடத்திட்டமும் வேண்டும் என்பதே நம் விழைவு. மனவளமும் அறிவு
வளமும் ஒருங்கே பெற்ற இளைய சமூகத்தை உருவாக்க அதுவே வழிவகுக்கும்.
*****