செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

பல்லூடகப் பயன்பாட்டில் தமிழ்ப் பாடத்திட்டம் - ஆக்கமும் பயனும்

முனைவர் ஆ. மணவழகன், தமிழ்த்துறைத் தலைவர், அறிவியல் (ம) மானுடவியல் புலம், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர் 603 203.

 (உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை, ஜூன் 23-27, 2010.)

 

எந்த ஒரு மொழியின் புற வடிவமும்  அதன் அகப் பொருண்மைகளும் காலந்தோறும் மாற்றத்திற்கு உட்பட்டே வருகின்றன. இம்மாற்றத்தில் அம்மொழி பேசுவோர் கையாளும் தொழில்நுட்பங்களும், புதிய கண்டுபிடிப்புகளும் பெரும்பங்கு வகிக்கின்றன. தொழில்நுட்பங்களுக்கு இயைந்து, அதனோடு சேர்ந்து தம்மையும் தகவமைத்துக்கொள்ளாத எந்தவொரு மொழியும் காலப்போக்கில் மக்கள் பயன்பாட்டிலிருந்து அந்நியப்படுத்தப்படும் சூழலுக்கு ஆளாகிறது. உலகின் எந்த மொழியும் இதற்கு விதிவிலக்கல்ல.  அதேவேளையில், தமிழோடு தோன்றிய அல்லது சம காலத்தில் புழங்கிய எத்தனையோ மொழிகள் இன்று பயன்பாடு அற்றுப்போக அல்லது வேறு ஒன்றாகத் திரிந்துபோக, தமிழ் மட்டுமே காலத்தைப் புறந்தள்ளி என்றும் சீரிளமையோடுத் திகழ்கிறது.  இதற்கு, தமிழ் நவீன கண்டுபிடிப்புகளைத் தன்னுள்ளே ஏற்று அதற்குத் தக தன்னைத் தகவமைத்துக்கொண்டதோடு, தானும் அவற்றோடு சேர்ந்து வளர்ந்ததே முதன்மைக் காரணம் எனலாம்.

 ஓலைச் சுவடிகளின் வழியாகப் பயணித்த தமிழ், இன்று கணினிவழித் தன் பயணத்தை இனிதே மேற்கொண்டு வருகிறது. இடைப்பட்ட காலகட்டங்களில் தமிழ் மொழியின் அகப்-புற வடிவங்கள் பல்வேறு மாறுதலுக்கு உட்பட்டே வந்திருக்கின்றன. இலக்கியப் பொருண்மைகளும் காலத்திற்கும் தேவைக்கும் ஏற்ப தம்மை மீள் ஆய்விற்கு உட்படுத்தியே வளர்ந்திருக்கின்றன/வளர்கின்றன. சங்க இலக்கியம் தொடங்கி, அற இலக்கியம், காப்பியம், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியம், உரைநடை இலக்கியம் என்று பல வடிவங்களோடு சூழலுக்கு ஏற்ப தம்மை வெளிப்படுத்திக் கொண்டது தமிழ். இந்நிலையில், சென்ற நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி தமிழ் மொழியின்  அகப்பொருண்மைகளைப் புதுக்கவிதை, சிறுகதை, புதினம், கட்டுரை போன்ற இலக்கிய வடிவங்கள் ஆட்கொண்டு வருகின்றன. நவீன இலக்கிய வடிவங்களான இவற்றில் தமிழ் தன் பயணத்தைத் தொடர்கிறது. மேலும், இவ்வடிவங்கள் அச்சுவடிவில் மட்டுமின்றி, கணினிப் போன்ற தொழில்நுட்பங்களையும் தங்களுக்குச் சாதகமாக்கியுள்ளன. எளிய வடிவில் மொழியை, மொழியின் இலக்கியங்களைப் பரவலாக்க, பாதுகாக்க, அனைவருக்கும் எட்டச்செய்ய இத்தொழில்நுட்பப் பயன்பாடு பெரிதும் தேவையாக உள்ளது. அவ்வகையில், பாடத்திட்டத் தமிழைப் பல்லூடகப் பயன்பாட்டில்  வடித்துக் கொடுத்தலும், தமிழின் இலக்கிய வடிவங்களை (சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரை) பல்லூடகத்தின் வழி எளிதாக்கி, அனைவருக்கும் எட்டச்செய்தலும் இன்றைய முக்கியத் தேவைகளாக உள்ளன. காட்சி வடிவிலும், அசைவூட்டங்களுடனும் (Animation)  உருவாக்கப்படும் இவ்வகைக் கணினித்தமிழ் காலத்தை வென்றதாக, நீண்டகாலப் பயனைக்கொண்டதாக அமையும் என்பது உறுதி.

 இந்நோக்கங்களின் அடிப்படையில், சொல்லோவியம், காந்தள், உயிரோவியம் என்ற மூன்று  தமிழ்ப் பல்லூடகத் தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றின் ஆக்கம், அமைப்பு, பயன்பாடு குறித்து இக்கட்டுரை விளக்குகிறது.

 சொல்லோவியம்

             சொல்லோவியம் என்பது சிறுவர்களுக்கான ‘படவிளக்க அகராதி’(Picture Dictionary). தமிழின் அன்றாடப் பயன்பாட்டுச் சொற்களை எழுத்து, சொல், படம், படவிளக்கம், சொற்பயன்பாடு என்ற வகையில் இது அறிமுகப்படுத்துகிறது.

 அமைப்பு

 தமிழ்ச் சொற்களை வெறும் சொற்களாக மட்டும் அறிமுகப்படுத்தாமல், சிறுவர்கள் விரும்பி கற்கும் வகையில், மனதில் பதியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பல்லூடகத் தொகுப்பு இது. இதில் அகர வரிசையின் அடிப்படையில், பெயர் மற்றும் வினைச் சொற்கள் 300 இடம்பெற்றுள்ளன.

சொல் (பெயர், வினை) – இணையான ஆங்கிலச்சொல் – விளக்கம் - சொற்பயன்பாடு (கவிதை வடிவம்) – சொல்லிற்கு ஏற்ற படம் – ஒலி வடிவம்

என்ற அமைப்பில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

 

பெயர்

             எழுத்துகளின் அகர வரிசையின் அடிப்படையில், ஒவ்வொரு எழுத்திற்குமான சில பயன்பாட்டுப் பெயர்ச்சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சொல்லுக்கும் இணையான ஆங்கிலச் சொல், சொல்லுக்கான விளக்கம், சொற்பயன்பாட்டுக் கவிதை, சொல்லுக்கான படம் ஆகியன கொடுக்கப்பட்டுள்ளன.

 


 வினை

பெயர்ச்சொற்களைப் போன்றே அகர வரிசையின் அடிப்படையில் ஒவ்வொரு எழுத்திற்குமான சில வினைச்சொற்கள் படவிளக்கத்தோடு கொடுக்கப்பட்டுள்ளன..  

 


 பயன்பாடு

 இந்திய மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழ்க் குழந்தைகளுக்கு எளிய முறையில் தமிழ் எழுத்துகள், சொற்கள், சொற்பொருள் ஆகியவற்றை அறிமுகப்படுத்த, பயிற்றுவிக்க இத்தொகுப்பு பெரிதும் பயன்படும். குறிப்பாக, பொருட்களை(உருவம்) நேரடியாகப் பார்த்து அவற்றைப் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பினைப் பெறாத தமிழ்க் குழந்தைகள் இத்தொகுப்பின் மூலம் பெரிதும் பயன்பெறுவர். இது ஒரு முன் உருவாக்கத் திட்டம். இதில் சொற்பயன்பாட்டைத் தேவைக்கு ஏற்ப அதிகப்படுத்திக்கொள்ளலாம். மழலையர் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி மாணவர்களுக்கு ஏற்ற வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்க ‘ப்ளாஷ்’ பல்லூடகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

   காந்தள்   

            தமிழ் மொழிக்கான ‘மின்கையேடு’ (e-guide for Tamil) காந்தள் எனப்படும் பல்லூடகத் தொகுப்பு. இதுவும் ‘ப்ளாஷ்’ பல்லூடகத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பின் முகப்புப் பக்கத்தில் அறிமுகம், இலக்கியம், இலக்கணம், பிற என்ற நான்கு முதன்மை இணைப்புகள்(link) கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இணைப்பின் வழியாகத் திறக்கப்படும் பக்கங்களிலும் உள்ளீடுகளுக்கு (Content) ஏற்ப பல துணை இணைப்புகள் கொடுக்கப்பட்டு, தகவல்கள் விளக்கப்பட்டுள்ளன.

 


 அமைப்பு

 

v  முதன்மை இணைப்புகளுள் ஒன்றான ‘அறிமுகம்’ என்ற இணைப்பில் இப்பல்லூடகத்திற்கான அறிமுகத்தோடு, தமிழ் மொழி வரலாறு, தமிழ் மொழி பேசுவோர் பற்றிய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

v  ‘இலக்கியம்’ என்ற முதன்மை இணைப்பில், சங்க இலக்கியம், காப்பியம், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியம், தற்கால இலக்கியம் ஆகியவை தனித்தனி துணை இணைப்புகளின் வழி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

v  ‘இலக்கணம்’ என்ற இணைப்பு, தமிழின் ஐந்திலக்கணங்களான எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பவற்றிற்கான தனித்தனி இணைப்புகளைக் கொண்டுள்ளது. இவற்றின் வழி தமிழின் ஐந்திலக்கணங்கள் பற்றிய குறிப்புகள் எளிய விளக்கத்தோடும் எடுத்துக்காட்டுகளோடும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

v  முதன்மை இணைப்பில் நான்காவதாக உள்ள ‘பிற’ என்ற இணைப்பானது,  தமிழின் சிறப்புகள், தமிழரின் சிறப்புகள் ஆகியவற்றை உணர்த்தும் வகையில், தமிழர் அளவை முறைகள், தமிழர் எண்கள், ஆயக் கலைகள், கிழமைகள், மாதங்கள் போன்றவற்றிற்கான தனித்தனி துணை இணைப்புகளைக் கொண்டுள்ளது.



 பயன்பாடு

             தமிழின் எழுத்துகளைப் படிக்கத் தெரிந்த ஒருவர், அடுத்த நிலையில், தமிழைத் தவறின்றி எழுதுவதற்கான, சொற்றொடர்களை அமைப்பதற்கான அடிப்படை இலக்கணங்களை அறிந்துகொள்ளவும், தமிழ் மொழியின் வரலாறு பற்றியும், அதன் சிறப்பு பற்றியும் அறிமுகப்படுத்திக்கொள்ளவும் இத்தொகுப்பு பெரிதும் உதவும். படவிளக்க அகராதியைத் தமிழ் எழுத்துகளை, வார்த்தைகளைப் பயில்வதற்கான முதல் நிலையாகக் (நிலை–I) கொண்டால் அதன் இரண்டாம் நிலை (நிலை-II) அனிச்சம் எனப்படும் இப்பல்லூடகத் தொகுப்பு. இது தமிழ் படிக்கத் தெரிந்த ஒருவருக்கு தமிழின் இலக்கியம் மற்றும் அடிப்படை இலக்கணத்தை அறிமுகப்படுத்துகிறது. மேலும், தமிழர்களுக்கே உரித்தான அடையாளங்களான தமிழ் எண்கள், தமிழர் அளவு முறைகள், ஆயக் கலைகள் போன்ற சில கூறுகளையும் கொண்டுள்ளது இதன் சிறப்பு. பள்ளிக்கல்வியில் இடைநிலை மாணவர்களுக்கு இத்தொகுப்பு மிகவும் பயனுள்ள ஒன்று.

 உயிரோவியம்

 உயிரோவியம் என்னும் இத்தொகுப்பு பழந்தமிழர் வாழ்வினை சங்க இலக்கியம் கொண்டு விளக்கும் சங்க இலக்கியக் காட்சிகளாகும். பழந்தமிழரின் புறவாழ்வு வீரம், கொடை, விருந்தோம்பல், நட்பு என்று விரிந்து செல்வது. அகவாழ்வு அன்பால் கட்டமைக்கப்பட்டது. சங்க காலத்தில் அகமும் புறமும் இரு கண்களெனப் போற்றப்பட்டன. அகவாழ்வு களவு, கற்பு என்ற இரு நிலைகளைக் கொண்டது. தமிழர்களின் இவ்வகை அகப் புற வாழ்வினை சங்க இலக்கியப் பாடல்களைக் கொண்டு காட்சிகளாக்குகிறது இத்தொகுப்பு.

அமைப்பு

இதில், அகப்-புறப் பொருண்மைகளுக்கும் அதன் உட்பகுப்புகளுக்கும் ஏற்ப தேர்ந்தெடுக்கப்பட்ட சங்க இலக்கியக் பாடல்கள் காட்சிகளாக்கப்பட்டுள்ளன. காட்சிக்கேற்ற மூலப் பாடல், கவிதை வடிவில் விளக்கம், பாடல் பொருண்மையை விளக்கும் ஓவியம் என்ற அமைப்பில் இது உள்ளது (சங்க இலக்கியப் பாடல் – விளக்கம் – ஓவியம் – தொடர்புடைய பிற செய்திகள்). மேலும் இதில், தமிழரின் அகவாழ்வு மற்றும் புற வாழ்வை விளக்கக்கூடிய வகையில், இருபது இருபது பாடல்களாக மொத்தம் நாற்பது பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

அகம்

அகம் என்ற பகுப்பு களவு, கற்பு என்ற இருவகைப் பிரிவுகளையும், அதில் சுமார் 20 எடுத்துக்காட்டுப் பாடல்களையும் கொண்டது.

 களவு

அகப்பகுதியின் ஒரு கூறான களவு என்பது, முதல் சந்திப்பு, செம்புலப் பெயல் நீர், உச்சிவெயிலில் உருகும் வெண்ணை, துயரத்தில் துணை நிற்போன், காணாததால் கலக்கம், வரைவு கடாவுதல், காத்திருந்து கண்ணீர் மல்கி, அறத்தொடு நிற்றல், வரைபொருள் பிரிவு, உடன் போக்கு, தோழியின் உள்ளம், செவிலி தேடுதல், கண்டோர் கூற்று  ஆகிய தனித்தனித் தலைப்புகளைக் கொண்டுள்ளது. இவற்றின்வழிப் பழந்தமிழரின் களவு வாழ்க்கை நிகழ்ச்சிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  

 


கற்பு

அகப்பகுதியின் மற்றொரு கூறான கற்பு என்பது, அறியா பெண்ணும் அகமகிழ்ந்த செவிலியும், வினையே ஆடவர்க்கு உயிரே, தனிமையில் தலைவி, கார்காலம் கண்டு கலங்குதல், தலைவியின் வருத்தத்திற்குக் காரணம், வந்தான் தலைவன், பாகனுக்கு நன்றி  ஆகிய தனித்தனித் தலைப்புகளைக் கொண்டுள்ளது. இவற்றின்கீழ் பழந்தமிழரின் கற்பு வாழ்வியல் நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

புறம்

‘புறம்’ என்பது தனிப்பகுதி. இதில், தமிழுக்கு மரியாதை, உயிர் சிறிது!மானமோ பெரிது, விருந்தோம்பல், கொடை, வஞ்சினம் கூறுதல், நட்புக்கு மரியாதை, இலக்கியத்தில் பெண்கள், குழந்தையே செல்வம், கல்வியின் பெருமை, அறிவுறுத்தல், நிலையாமை – ஆகிய தனித்தனித் தலைப்புகளின் கீழ் பதினேழு எடுத்துக்காட்டுப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றின்வழி பழந்தமிழரின் புறவாழ்க்கையின் பல்வேறு சிறப்புக்கூறுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



            பயன்பாடு

          பழந்தமிழரின் அகப்புற வாழ்க்கையின் மேன்மையைத் தமிழ் மாணவர்களுக்கும் உலகத் தமிழர்க்கும் உணர்த்துவதாக இத்தொகுப்பு உள்ளது. சங்க இலக்கியத்தை இவ்வகை எளிய முறையில் அறிமுகப்படுத்துவதன் மூலம், சங்க இலக்கியங்களின் சிறப்புகளை இளைய தலைமுறைக்கு உணர்த்தவும், அவ்விலக்கியங்களின் மீதான நாட்டத்தை அதிகப்படுத்தி அவற்றை அவர்கள் விரும்பிப் படிக்கச் செய்யவும் இத்தொகுப்பு வழிவகுக்கிறது. மேலும், கல்விப் புலங்களில் சங்க இலக்கியப் பாடத்திட்டங்களை மாணவர் விரும்பும் வண்ணம் அமைத்துக்கொடுக்க இத்தொகுப்பு முன்னோடித்திட்டமாக அமையும்.   

*****

தமிழியல்

www.thamizhiyal.com