திங்கள், 17 ஆகஸ்ட், 2020

திருமணம் செல்வக்கேசவராய முதலியார் - படைப்புத்திறன்

 ஆ.மணவழகன், முனைவர் பட்ட ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

(தமிழறிஞர் வரிசை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சூலை, 2004)

செல்வக்கேசவராய முதலியார்

            செல்வக்கேசவராய முதலியார் 1864-ஆம் ஆண்டு சேசவ சுப்பராய முதலியார் - பாக்கியம்  அம்மையாருக்கு மகனாகப் பிறந்தார். பச்சையப்பன் கல்லூரி மாணவர். முதன் முதல் எம்.ஏ., தமிழ்ப்  பயின்றவர். அக்கல்லூரியிலேயே தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். மாணவர்களுக்குத் தமிழ்பற்றினை உண்டாக்கியதோடு தமிழ் இலக்கண-இலக்கியங்களை எளிதில் மாணவர்கள் கற்க வேண்டும் என்ற நோக்கில், அதற்கான வழிவகைகளைச் செய்தவர். சீரிய சொற்பெருக்காளர். சிறந்த உரைநடையாளர். தேர்ந்த கட்டுரையாளர். தொடக்கத்தில் தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு வளமூட்டி வழிகாட்டியவர். சிறந்த ஆராய்ச்சியாளர். தம் கருத்தைத் தக்க சான்றுகாட்டி நிறுவும் வள்ளமையாளர்.

            ‘தமிழ் நூல்களில் எத்தனை விழுக்காடு வடசொற்கள் விரவியுள்ளன என கணக்கெடுத்து, திருக்குறளில் அதிகாரத்திற்கு ஓரிரு சொற்களே; நாலடியாரில் ஐந்து பாடல்களுக்கு ஒரு சொல்; கல்லாடத்தில் பாட்டுக்கு ஐந்து சொற்கள் கலந்துள’1 என்கிறார். இவரின் தமிழ் இலக்கியப் புலமையும், தமிழ்மொழி ஈடுபாடும் இதில் விளங்கும்.

படைத்த நூல்கள்

            செல்வக்கேசவராயர் படைத்த நூல்களாக தமிழ், தமிழ் வியாசங்கள், வியாசமஞ்சரி, திருவள்ளுவர், கண்ணகி கதை, அக்பர், அபிநவக் கதைகள், ராபின்சன் குரூசோ, மாதவ கோவிந்த ரானடே, பஞ்சலட்சணம், கலிங்கத்துப்பரணி உரைநடை ஆகியவை இனங்காணப்படுகின்றன.

            ஆசாரக்கோவை, முதுமொழிக்காஞ்சி, பழமொழி, குசேலபாக்கியானம், அரிச்சந்திர புராணம் ஆகியவை இவர் பதிப்பித்த நூல்களாகத் தெரியவருகின்றன.

 படைப்புத்திறன் -  பயன்பட்ட நூல்கள்

            செல்வக்கேசவராய முதலியார் படைத்த நூல்களில் கிடைத்த நூல்களான திருவள்ளுவர், அக்பர், கண்ணகி கதை, கலிங்கத்துப் பரணி உரைநடை, வியாசமஞ்சரி,   பஞ்சலட்சணம் என்ற படைப்புகளின் வழி அவர்தம் படைப்புத் திறன் இக்கட்டுரையில் வெளிக்கொணரப்படுகிறது.

            செல்வக்கேசவராய முதலியாரின் நூல்கள் பார்வைக்கு அரிதான நிலையில், அவர் கைப்பிரதியாகப் பயன்படுத்திய படைப்புகளை, அவரின்வழித்தோன்றல்களின் வழிப் பெற்று, பாதுகாத்து வைத்திருப்பதோடு, இக்கட்டுரைக்கான குறிப்புகள் எடுக்க  கொடுத்துதவிய ‘மறைமலை அடிகள் நூலகத்தார்க்கு’ நன்றி நவில்வது இவண் கடமையாகிறது.  

 கட்டுரை அமைப்பு

            ‘செல்வக்கேசவராய முதலியார் - படைப்புத்திறன்’ என்ற இக்கட்டுரையானது, அவர் படைத்த நூல்களுள் ஆறு நூல்களைக் கொண்டு படைப்புத் திறனை வெளிக்காட்டுவதாக அமைகிறது. அதற்கேற்ப, படைப்புகளை ஆய்வு நோக்கில் அமைக்கும் போக்கு, நூலின் சிறப்புகளை வெளிக்கொணரும் பாங்கு, தக்க ஆதாரங்களோடு மறுக்கும் பண்பு, நிறைகுறை காணும் தன்மை, கையாளும் உத்திமுறைகள், பன்னூல் பயிற்சியும் பன்மொழிப் புலமையும் என்ற தலைப்புகளின் கீழ் அவர்தம் படைப்புத்திறனை வெளிக்காட்டி, தொகுப்பு என்பதோடு கட்டுரை நிறைவுசெய்யப்பட்டுகிறது.

 நூல்கள் அறிமுகம்

            திருவள்ளுவர்

            கட்டுரை அமைப்பில்           திருக்குறளின் சிறப்பை வெளிக்கொணர்வதோடு, திருவள்ளுவர் காலத்தையும், நூற்திறத்தையும், வள்ளுவர் நோக்கத்தையும், திருக்குறள் அமைப்பையும் ஆய்வதாக இந்நூல் அமைந்துள்ளது.

 கலிங்கத்துப் பரணி

            குலோத்துங்கச்சோழன் தன் மந்திரியான கருணாகரத் தொண்டைமானைக் கொண்டு கலிங்கதேசத்தை வெற்றிகொள்ள, ஜயங்கொண்டார் அவ்வெற்றியைச் சிறப்பித்துப் பாடிய பரணிப்பிரபந்தத்தை வசநடையில் சுருக்கி எழுதப்பட்டுள்ளது.

 வியாசமஞ்சரி

             சிறுவர் சிறுமியருக்கு உபயோகமாகத் திமிரி சபாபதி முதலியார் என்பவர் சென்ற நூற்றாண்டின் இடையில் சில வியாசங்களை எளிய நடையில் எழுதி அச்சிட்ட நற்புத்திப்போதம் என்னும் இந்நூலை அடியொற்றி பல புதிய போதனைகளையும் சேர்த்து எழுதப்பட்டுள்ளது. இதில், காலையில் எழுதல், கடவுளைத் தொழுதல், உலாவப்போதல், கல்வி கற்றல், சினேகஞ்செய்தல், பணஞ்சம்பாதித்தல், கல்யாணஞ்செய்துகொள்ளுதல் போன்ற தலைப்புகள் இடம்பெற்றுள்ளன. ஜனவிநோதினியிலிருந்து ஐந்து கட்டுரைகள் எடுத்துத் திருத்தியெழுதியும், புதிப்பித்தும் பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அவை, கைத்தொழில்-மனிதர்க்குள்ள பரஸ்பரசம்பந்தம்-காலதாமதம்-சம்பாஷணை-உழைப்பின் சிறப்பு என்பன. சில வழக்குத் தொடர்மொழிகள் அகராதியாக இரண்டாவது பின்னிணைப்பாய்ச் சேர்க்கப்பட்டுள்ளன.

  கண்ணகி சரித்திரம்

            கண்ணகியின் வரலாற்றைச் சிலப்பதிகாரத்தை ஆதாரமாகக் கொண்டு உரைநடை வடிவில் எளிமையாக உரைக்கப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் எடுத்துக்காட்டு நிகழ்ச்சியாக வரும் சில சம்பவங்கள் கண்ணகி சரித்திரத்தில் கதை போக்கிலேய இடம்பெறச் செய்யப்பட்டுள்ளன.

 அக்பர்

இந்நூலானது, அக்பரின் சரித்திரத்தை உரைப்பது. இந்நூல் முற்றிலும் கால அடிப்படையில் அக்பரின் வரலாற்றைக் கூறுவதாக அமையாமல் நிகழ்ச்சிகளின் தொகுப்பாக அமைந்துள்ளதால் , படிப்பவர் ஆர்வத்தைத் தூண்டுவதாக உள்ளது.

 பஞ்சலட்சணம்

             இந்நூல் தமிழின் ஐந்திலக்கணங்களான எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பனவற்றைக் கூறும் இலக்கணக் கையேடாக அமைந்துள்ளது. ‘எழுத்திலக்கணத்தையும் சொல்லிலக்கணத்தையும் கற்பிக்கத்தக்க முறையாக நன்னூல் சூத்திரங்களை வகைப்படுத்தித் தொகுப்பது இவ்விலக்கணச் சுருக்கத்தின் நோக்கம்’ என்ற இந்நூலில் முகவுரையிலிருந்தே இந்நூலின் தன்மையை அறியலாம். எழுத்தையும், சொல்லையும் சூத்திரத்தோடு விளக்கி, மற்ற இலக்கணங்களான பொருள், யாப்பு, அணி என்பனவற்றைச்  சூத்திரங்காட்டாமல் உரைநடையாக அமைத்துச் செல்கிறது இந்நூல்.

 தமிழ்ப் பற்று

            செல்வக்கேசவராய முதலியார் சிறந்த தமிழ்ப்பற்றாளராக விளங்குகிறார். தமிழ் இலக்கியங்களில் எவ்வெவற்றில் எத்தனை எத்தனை வடசொற்கள் கலந்துள்ளன  என்று பட்டியலிட்டுக் காட்டுவதிலிருந்தே இவ்வுணண்மையை உணரலாம். திருவள்ளுவரைப் பற்றிக் கூறுமுகத்தான் ‘தமிழ்க்குக் கதியாவார் இருவர் எனச் சில புலவர் புகல்வதுண்டு, கதி என்பதில் கஃகானைக் கம்பநாட்டாழ்வாருக்கும், திஃகானைத் திருவள்ளுவருக்கும், ஞாபக சூத்திரமாகக் கொள்ளல் வேண்டும்’-2 என்கிறார். இதில் அவர்தம் தமிழ்ப்பற்றும், தமிழிலக்கியப் படைப்பாளர்கள் மீதுள்ள பற்றும் வெளிப்படுகிறது.

             ‘எவ்விதத்திலாவது பிள்ளைகள் எளிதில் இலக்கணங் கற்றுத் தமிழைப் போற்றுதல் வேண்டுமென்பதே இந்நூலை அச்சிடுதலான விருப்பம்’- 3  என்று,  தமிழ் மொழியிலான ஈடுபாட்டினை எவ்வகையிலாவது  பிள்ளைகள் மனதில் ஏற்படுத்த வேண்டும் என்ற ஆதங்கத்தினைத்  தனது பஞ்சலட்சணம் நூல் முகவுரையில்  வெளிப்படுத்துவதிலிருந்தும்,

மேலும், ‘தமிழர்க்கு உதவியாகத் தமிழ் வல்லவர்கள் செய்வது ஒரு தலையான பல வேலைகள் ஏற்பட்டுவருகின்றன. அது செய்யாத வரையில் அவர்கள் பாஷாபிமானமும் தேசாபிமானமும் இல்லாதவர்களென்று பழிக்கப்படுவர். இப்பழியை ஒழிக்கும் பொருட்டுத் தமிழிலக்கிய விலக்கணங்களை மாணவர்கள் எளிதிலறிந்து பயின்று புலமை நிரம்பும்படி செய்வது இயற்றமிழாசிரியர்களைப் பொறுத்த கடமை. இக்கடமையைக் கடைபோகச் செலுத்துமாறு தமது அறிவாற்றலாலும் அனுபவ சித்தியாலும் தோன்றுகின்ற முறைகளை இவர்கள் மேலு மேலும் பின்பற்றுவாராக. இது செய்யாவிடின் இவர்கள் கூலிக்கு மாரடிப்பவரே யாவர்’-4 என்பதிலிருந்தும் இவரின் தமிழ்ப்பற்றினை அறியலாம். மேலும், தமிழின் இனிமையும், பெருமையும், சிறப்பும், வனப்பும், வளமும் எல்லோருக்கும் எளிய முறையில் எட்ட வேண்டும் என்ற இவரின் விருப்பமும் இதில் வெளிப்படுவதைக் காணமுடிகிறது.

            பஞ்சலட்சணம் நூலில் வடசொல் பற்றிக் கூறுமிடத்து, வடமொழியில் இருந்து தமிழில் வந்து வழங்கும் சொற்களைப் பட்டியலிட்டுக் காட்டுவதோடு, அவற்றிற்குப் பொருத்தமானத் தமிழ்ச்சொற்களையும் வழங்குகிறார். இதில் சுமார் 175 வடமொழிச் சொற்களுக்குப் பொருத்தமானத் தமிழ்ச் சொற்களையும் கொடுத்துள்ளார். சௌக்கியம் என்ற சொல்லிற்கு மட்டும் பொருத்தம் காணாமல் விடுகிறார்.  மேலும், சில  வடமொழிச் சொற்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்களைக் கொடுத்துள்ளார். காட்டாக, சேஷம் என்பதற்கு மிச்சம், எச்சம் என்ற இரண்டு சொற்களையும், பரிசம் என்பதற்குத்¢ தொடுதல், ஊறு என்ற இரண்டு சொற்களையும்,  சேதம் என்பதற்குக் கேடு, நட்டம், பிரிவு -5 என்ற மூன்று சொற்களையும் பொருத்தம் காணுகிறார்.

            தமிழில் படைக்கப்படும் படைப்புகளில் பெரும்பாலும் வடசொற்களைத் தவிர்த்தலே சிறப்பு என்பது இவரின்  கருத்து. அப்படிப்பட்ட இலக்கியங்களே சிறந்தவை என்கிறார். இதனை, கலிங்கத்துப் பரணியின் சிறப்பைப் பற்றிக் கூறுமிடத்து  ‘உலகவழக்கான சிலசொற்களையும் தொடர்களையும் இடைப் பெய்தும், இவர் வாக்கானது சொற்கட்டுத்தளராமல் இருக்கின்றது. வடசொல்வழக்கு அருகியிருப்பதும், இந்நூலின் சிறப்பியல்புகளில் ஒன்று’-6 என்கிறார். தமிழ்ப் படைப்பாளர்கள் பிறமொழிக் கலப்பைத் தவிர்த்தல் நலம் என்ற இவரின் தமிழ்ப்பற்றை இது தெளிவாக்குகிறது.

 படைப்புத் திறன்

படைப்புகளை ஆய்வு நோக்கில் அமைக்கும் போக்கு

            செல்வக்கேசவராய முதலியாரின் படைப்புகள் பெரும்பாலும் ஆய்வு நோக்கில் அமைந்துள்ளன. தம் கருத்தைப் பலவகையினும் சான்றுகாட்டி நிறுவும் தன்மையினை இவர் படைப்பில் காணமுடிகிறது.

            இவர் படைப்புகளில் கால ஆய்வுகள், பெயர்க்காரண ஆய்வுகள், இட ஆய்வுகள், கதாபாத்திர ஆய்வுகள், படைப்பாளர் சமயம் பற்றிய ஆய்வுகள், பாடபேத ஆய்வுகள், நிறை குறை ஆய்வுகள் போன்றன நிகழ்த்தப்பட்டுள்ளன.  இவர்தம் படைப்புகள் மூல நூலைத் தழுவியதாக இருப்பின், மூலநூலாசிரியனின்  கருத்தில் இருந்து கூடியமட்டும் பிறழாமல் தம் கருத்தை அமைத்துச் செல்கிறார்.  ‘கவிவாணர் பாட்டிலமைத்த பழம் பொருளை அறிவதரிதாகலின், நூலை ஓதுகின்றவர்களும், நூற்கு உரை காண்கின்றவர்களும், இயன்றமட்டில், அவ்வந்நூலாசிரியருடைய கருத்தை உய்த்துணர்தல் வேண்டும். அங்கனமன்றி இவர் தத்தம் மதத்தை நூலிலேற்றி யுரைத்தலும், நூல் தம் மதத்துக்கு இடங்கொடாவிடின் வலிந்தும் நலிந்தும் பொருள் கோடலும், பாடபேதம் பண்ணுதலும், அவமேயான காரியங்களாம்.’-7 என்ற இவரின் வாதத்தின் அடிப்படையிலேயே இவர்தம் படைப்புகளும் அமைந்துள்ளமை நோக்கத்தக்கது.

 கால ஆய்வு

            திருக்குறளின் காலம் பற்றி கூற வந்த செல்வக்கேசவராயர், ‘திருவள்ளுவமாலையில் பாயிரங் கூறிய புலவர்களனைவரும் ஏகக்காலத்தில் இருந்தவருமல்லர். புறநானூறு முதலானவற்றின் சார்பைக் கொண்டு ஆராயுமிடத்தில், பதின்மர் பன்னிருவர் ஏகக்காலத்தவராக இருத்தல்கூடும் என்பது தெளியப்படுகின்றது. எங்ஙனமாயினும், சங்கப் புலவர்கள் ஓரோர் காலத்தில் திருக்குறட்குக் கூறிய பாயிரத்தைப் பின் எவரோ ஒருவர் திருவள்ளுவ மாலையாகத் தொகுத்தனர் என்பதே தேற்றம்.

            திருக்குறளும் தொல்காப்பியமும் ஆகிய இரண்டுமே சிதைவுறாமல் இப்பொழுது வழங்கும் நூல்கள் எல்லாவற்றினும் முற்பட்டனவாம்.’-8 என்கிறார். திருக்குறள் பழந்தமிழ் நூல்கள் அனைத்திலும் காலத்தால் முந்தியது என்பதே செல்வக்கேசவராயரின் முடிவாகும்.

            மேலும், திருக்குறளைப் பற்றிக் கூறுமிடத்து, ‘இந்நூல் ஏறக்குறைய இப்பொழுது எஞ்சிநிற்கும் இலக்கியங்கள் எல்லாவற்றினும் முற்பட்டதாகக் காண்கின்றது. எங்ஙனமாயினும், இதற்கு முன்னே இன்னோரன்ன நூல் தமிழில் இருந்ததாகக்கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. வடமொழியில் உள்ள மிருதிகளும் வருண சமயச்சார்புடனே நியாயப்பிரமாணங்களை அவ்வக் காலத்துக் கேற்றபடி கூறிய நூல்களாயின. நாம் கண்ட கேட்ட பிற தேயங்களிலும், இவ்வகையான நூல் யாதொன்றும் இருப்பதாக இதுகாறும் கேட்டிலோம். ஆகவே, இஃது இணையில்லாத நூலாயிற்று. நூற்பாகுபாடுகளும் நூற்போக்கும் நுதலிய பொருளும் நமதாசிரியர் தமது கல்விகேள்விகளினாற்றலால் தாமே தமது புந்தியில் புதுவதாகக் கூர்ந் துய்த்தறிந்துரைத்தனவா மாதலின், இவ்வாசிரியரும் இணையில்லாதவராயினார்.’-9 என்றும்,

            ‘மதியூகிகளான சில தமிழாசிரியருடைய தற்கால வாராய்ச்சியாலும், சிலம்பதிகாரம் மணிமேகலை யென்னும் பெருங்காப்பியங்களிற் கிடைக்கலான ஆதரவுகளாலும், பிறவற்றாலும், திருவள்ளுவர், ஏறக்குறையச் சாலிவாகன சகாப்தத்தின் தொடக்கத்தில், அதாவது, கி.பி. முதனூற்றாண்டில் இருந்தவரென்பது துணியப்படுகின்றது. அதனினும் முற்பட்டவர் எனத் துணிந்துரைத்தற்கான ஆதாரங்கள் அகப்படவில்லை. எங்ஙனமாயினும் இன்றளவும் நின்று நிலவுதலான தமது நூலை, வள்ளுவனார் வரையறுத்து வகைப்படுத்திக்கொண்டு, ‘செய்யுந்தொழிலெல்லாம் சீர்தூக்கிப் பார்க்கில் நெய்யுந் தொழிலுக்கு நிகரில்லை’ யென்று, மயிலைமா நகரிலே உதரநிமித்தமாகத் தமது தறியின் மேல் தலைகுனிந்து சீலை நெய்யா நிற்கையில், மத்திய காலமும் உதயமாயிற்றில்லை; துருக்கருடைய மகம்மதிய மதம் தோன்றிற்று மில்லை. கிறிஸ்துவ மதம் அப்போதுதான் முளை கிளம்பிக்கொண்டிருந்தது. இந்தியாவிலும், சைவம் அத்துவிதம் வைணவம் என்னும் சமயபேதங்களுக்குரிய சமாசாரியர்கள் எல்லாரும், வள்ளுவனார்க்கு நெடுங்காலம் பிற்பட்டு அவதரித்தவர்கள்.’-10 என்ற முடிவாலும் திருக்குறள் தோன்றிய காலம், திருக்குறள் பெருமை, திருவள்ளுவர் அருமை அனைத்தையும் ஒருங்கே சுட்டுகிறார்.

            பரணி இலக்கிய காலம் பற்றிக் கூறும் பொழுது, ‘தொல்காப்பியத்தில் இதற்கிலக்கண மின்மையால், இது பிற்காலத்தில் படைத்துக்கொண்ட ஒருவகைப் பிரபந்தம் போலும். ‘-11 என்றும், கலிங்கபோர் நடந்த காலத்தை வரையறுக்கும் முகத்தான், ‘I குலோத்துங்கச் சோழன் கி.பி. 1070 - முதல் 1118 வரையில் அரசியல் நடத்தினதாகச் சாசனவாசிரியர்கள் தலைக்கட்டியிருக்கின்றனர். அரசு செய்யத் தொடங்கினதுமுதல் இருபதாண்டளவில்செய்த சிலாசாசனங்கள் யாதொன்றிலும் கலிங்கத்துவென்றி குறித்திலது. இருபத்தாறாம் ஆண்டிலேசெய்த சாசனங்களில் கலிங்கதேசத்தை மீண்டும் வென்றசெய்தி குறித்திருக்கின்றது. ஆகவே கலிங்கத்தை முதலில் வென்றது 1090-ம் ஆண்டுக்கு இப்பாலாக இருத்தல்வேண்டும். ஆகவே இந்தப்பிரபந்தத்தின் காலம் கி.பி. பதினொராவது நூற்றாண்டின் கடைசி காலமே என்பது துணிவு’-12  என்ற  முடிவிற்கு இடங்கொடுக்கிறார்.

             இவ்வாறு செல்வக்கேசவராய முதலியார் படைத்த நூல்களில் அந்நூலைப் பற்றிய கால ஆராய்ச்சியும் தவறாமல் இடம்பெற்று முழுமையான தகவலுக்கு வழிகாட்டுவதாய்¢ அமைவதோடு,  நூல் மற்றும் கதை நிகழ்ச்சி பற்றிய கால தெளிவையும் படிப்போர்க்குத் தெளிவிப்பதாய் அமைந்துள்ளன.

 நூலாசிரியன் பற்றிய ஆய்வு

            சிறந்த படைப்புகளை  உரிமை கொண்டாவதென்பது உலக இயற்கை. அதிலும் திருக்குறள் போன்றதொரு உலக பொதுமொழியை அவரவர் உரிமைகொண்டாட எண்ணுவதில் வியப்பேதுமில்லை.  திருவள்ளுவர் எச்சமயத்தவர் என்ற கேள்விக்கு அவரவர் அவரவர் சமயத்திற்கு ஏற்ப இயந்து போகும் கருத்துகளை முன்னிறுத்தி உரிமைகொண்டாடியுள்ளனர்.        செல்வக்கேசவராய முதலியாரோ, ‘திருவள்ளுவரை ஆருகத சமயியென்று சிலரும் சைவ சமயியென்று பலரும் வாதிப்பர். ஆயினும், வைதிகா சாரங்களை மேற்கொண்டு நிற்கும் திருக்குறட் கருத்தை நோக்க அவரை ஆருகதரென்று சாதிக்கப் போந்த நியாயம் காண்கிலம்’-13  என்கிறார்.

            அத்தோடு,  ‘இத்திருக்குறளை இயற்றியருளிய ஆசிரியர் இன்ன சமயத்தினர் என்று  துணிந்துரைப்பது இயலாது. இவர் எச்சமயத்தின ராயினு மாக.

ஐந்தவித்தா னாற்றல் அகல்விசும்பு ளார்கோமா

னிந்திரனே சாலுங் கரி

என்றும்,

            மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்

          பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்

என்றும்,

            அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியா

          நின்றது மன்னவன் கோல்

என்றும்,

                                 இயல்புளி கோலோச்சு மன்னவ னாட்ட

          பெயலும் விளையுளும் தொக்கு

என்றும்,

            முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி

          ஒல்லாது வானம் பெயல்

 என்றும்,

            ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூன்மறப்பர்

          காவலன் காவா னெனின்

என்றும் வருவனவற்றால் இவர் பொதுப்பட ஷிந்துமதத் துக்குட்பட்டவர் என்பது துணிவு. ஆயினும் முதற்பாலில் முதற்குறளில் விஷ்ணுவுக்குரிய பகவந்நாமத்தை உரைத்தமையாலும், இரண்டாவது பாலில்

            மடியிலா மன்னவ னெய்தும் அடியளந்தான்

          தாஅய தெல்லா மொருங்கு

என நிலங்கடந்த நெடுமுடி யண்ணலைக் குறித்தமையாலும், மூன்றாவது பாலில்

            தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்

          தாமரைக் கண்ணா னுலகு

எனப் பரமபதத்தைக் குறித்தமையாலும், வள்ளுவர் வைணவர் என்பார் வைணவர். ‘அகாரார்த்தோ விஷ்ணு’ என்ற கருத்தை ‘அகரமுதல வெழுத்தெல்லாம்’ எனத்  தழுவி யிருப்பதும் வள்ளுவர் வைணவர் என்பதை வலியுறுத்துமென்பர்.

            குறுமுனிவன் முத்தமிழும் என்குறளும் நங்கை

          சிறுமுனிவன் வாய்மொழியின் சேய்

என்று திருவள்ளுவரே கூறினதாகக் கூறும் ஒரு தனிப் பாடலையும் ஆதாரங்காட்டுகின்றனர்.

            ஊரவர் கௌவை பெருவிட் டன்னைசொன் னீர்படுத்து

என்னும் 43-வது திருவாய்மொழியின் நாலாவது பாசுரமும்

            ஊரவர் கௌவை யெருவாக அன்னைசொல்

          நீராக நீளுமிந் நோய்

என்னும் குறளும்,

            கண்டுகேட் டுற்றுமோந் துண்டுழது மைங்கருவி

          கண்ட வின்பந் தெரிவரிய வளவில்லாச் சிற்றின்பம்

          ஒண்டொடியா டிருமகளு நீயுமே நிலாநிற்ப

          என்னுந் திருவாய் மொழியும்

 

          கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனு

          மெண்டொடி கண்ணே யுள

என்னும் குறளும், ஒன்றை யொன்று அடியொற்றிக் கொண்டாற்போலே யிருப்பதும், வள்ளுவர் வைணவர் என்னும் வைணவர்க் குற்ற சான்றாம். ‘எண் குணத்தான் தாளை வணங்காத்தலை’ என்றது சிவபரமாதலால் சைவர்கள் வள்ளுவரைச் சைவர் என்பர். துறவறவியலில் ஞானம் கூறும் பகுதிகள் சைவசித்தாந்தக் கருத்துக்களை ஒத்திருப்பதும் தங்களுக்கு ஆதாரம் என்பர். ‘மலர்மிசையேகினான்’ என்றதனாலும்

            அவிசொரிந்த தாயிரம் வேட்டலின் ஒன்றன்

          உயிர்செகுத் துண்ணாமை நன்று

 

என்றதனாலும், ‘பூமேனடந்தான்’  என்னும் பெயரை உட்கொண்டு ‘மலர்மிசையேகினான்’ என்றதனாலும், ஜைநர்கள் வள்ளுவரை ஜைநர் எனக் கூறிக்கொள்வர். ‘மலர்மிசை யேகினான்’, ‘வேண்டுதல் வேண்டாமையிலான்’ ‘பொறிவாயிலைந் தவித்தான்’ என்னும் புத்த தேவனது பெயர்களை எடுத்தோதிக் கடவுள் வாழ்த்துக் கூறுதலாலும் புத்ததேவன் விதந்து கூறிய அருளறத்தினை வள்ளுவர் மிகுத்துக் கூறுதலாலும், பௌத்த பிடகத்தில் பிக்ஷீக்களுக்கென்ற விதித்த விரதங்களையே துறவறவியலில் துறவிகட்கு விதித்தமையாலும், வள்ளுவர் பௌத்தரெனக் கொள்வதற்கும் இடமுண்டு என்கிறார். ஜி.யூ. போப்பையர் ‘எங்கள் ஏசுநாதர் மலைமேற் செய்த ஹிதோபதேசத்தின் பிரதிசப்தமாகும் இத்திருக்குறள்’ என்பர். ‘எல்லா நூல்களினும் நல்லன எடுத்து எல்லார்க்கும் பொதுப்படக் கூறுதல் இவர்க்கியல்பு’ என்றார் பரிமேலழகர். எவரெவ ரெத்திறத்தர் அவரவரக்கு அவ்வத்திறத்தவராய்த் தோன்றும் இவர் சர்வ சமய சமரசவாதி எனல் சால்புடைத்து’ -14 என்பதே  செல்வக்கேசவராயரின் கருத்தாக அமைகிறது.

            இவற்றோடு திருவள்ளுவர் பிறப்பு, வாழ்ந்த இடம், குடும்ப வாழ்க்கை, தொழில் பற்றியச் செய்திகளையும் பல குறிப்புகளில் இருந்தும் கண்ணபரம்பரைக் கதைகளிலிருந்தும் எடுத்தியம்பி த்ம நூலுக்குச் சிறப்புச் சேர்க்கிறார்.

 இட ஆய்வு

            செல்வக்கேசவராய முதலியாரின் படைப்புகள் பெரும்பாலும், எடுத்துக்கொண்ட நூலின் எல்லாவகையான கூறுகளையும் ஆய்வு செய்து காணும் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. அவ்வகையிலேயே  தம் நூல்களான கலிங்கத்துப் பரணி, கண்ணகி சரித்திரம் இரண்டிலும்  நிகழ்ச்சி நடந்த இடத்தினைப் பற்றிய ஆய்விலும் இறங்குகிறார்.

       கலிங்கத்துப்பரணியைப் பற்றிக் கூறுமிடத்து, ‘கலிங்கநாட்டில் பெற்ற வெற்றித்திறத்தைக் கூறுவதாகலின், இந்தப் பிரபந்தம் கலிங்கத்துப்பரணி எனப் பெயர் பெற்றது. கலிங்கமானது, இப்போது வடஸர்க்கார் என்னும் பிரதேசத்தில் கோதாவரி நதிக்கு அப்பாற்பட்டது. தற்காலத்தும் விசாகப்பட்டணத்துக்கருகில் உள்ளதோர் நகரம் கலிங்கப்பட்டணம் என வழங்குவது இதனை நன்கு வற்புறுத்தும். கலிங்கராசனை வெற்றி கொள்ளுமாறு செல்லும் சோழனுடைய படையானது சில ஆறுகளைக் கடந்து செல்வதாக இந்நூலில் கூறியிருக்கின்ற வர்ணனையினாலும் இதனை உணர்தலாகும். பண்டை நாளின் இந்திய ராச்சியங்களை வரையறுத்துக் காட்டும் பூகோள படங்களாலும் இதனை உணர்தலாகும்.’-15 என்று கலிங்கத்துப் பரணி போர் நடந்த இடத்தைப் பற்றி ஆய்ந்து தம் முடிவினை முன்வைக்கிறார்.

        இதே போல, தம் நூலான கண்ணகி சரித்தரத்தின் பின்னிணைப்பாக, கண்ணகி வானவூர்தியில் வானுலகம் சென்றதாக சொல்லப்படும் இடம் எது? என்பதற்குப் பலரும் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகளைப் கொடுத்திருப்பதோடு, சேலம் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடே சேரன் செங்குட்டுவனை மலைவாழ் மக்கள்¢ சந்தித்து  கண்ணகி வானுலகு சென்ற அதிசயத்தைக்  கூறிய  இடம்  -16 என்ற தம் முடிவினையும் தெளிவுபடுத்துகிறார்.

 கதைமாந்தர் பற்றிய ஆய்வு

            செல்வக்கேசவராய முதலியார் தம்நூல்களில், கதை நடந்த காலத்தையும், இடத்தையும் ஆய்விற்கு எடுத்துக்கொண்டது போலவே, கதைமாந்தர்   பற்றிய ஆய்வையும் மேற்கொண்டுள்ளார். ஒரு பெயரினைக் கொண்ட பலருள்ளும் யார்காலத்து நிகழ்ச்சி இது? என்பதன் தடுமாற்றத்தை இவ்வாய்வு தடைசெய்வதாய் அமைந்து படிப்போர்க்குப் பயனளிக்கிறது எனலாம்.

       இவ்வகையில், செல்வக்கேசவராயிரின் குலோத்துங்கன் பற்றிய ஆய்வையும், கருணாகரன் பற்றிய ஆய்வையும் குறிப்பிடலாம்.

குலோத்துங்கள் பற்றிக் கூறுமிடத்து, ‘ இந்தப் பிரபந்தத்தின் காலம் கி.பி. பதினொராவது நூற்றாண்டின் கடைசி காலமே என்பது தெளிவு. இந்த I குலோத்துங்கச்சோழன் விக்கிரமசோழனுடைய தந்தை. விக்கிரமசோழனுலாவில்,

                   சேலைத் துரந்த சிலையைக் கடிந்திருகால்

                   சாலைக் களமறுத்த தண்டினான் - மேலைக்

                   கடல்கொண்டு கொங்கணமுங் கன்னடமும் கைக்கொண்

                   டடல்கொண் டமரா டரச - ருடலை

                   இறக்கி வடவரையே எல்லையாய்த் தொல்லை

                   மறக்கலியும் கங்கமு மாற்றி - அறத்திகிரி

                   வாரித் திகிரி வலமாக வந்தளிக்கும்

                   ஆரிற்  பொலிதோன் அபயற்குப் - பார்விளங்கத்

                   தோன்றிய கோன் விக்கிரம சோழன்

என வருகின்றது. விக்கிரமசோழன் கி.பி. 1118-முதல் 1132 வரையில் அரசாண்டதாக சாசனவிற்பனர்கள் முடிவுசெய்திருத்தலால், கலிங்கத்துப்பரணிகொண்டவன் I குலோத்துங்கனே என்பது பெறப்படும்.-17 என்ற அடையாளத்தைக் காட்டுகிறார்.

             இதே போல, குலோத்துங்கனின் படைத்தலைவன் கருணாகரனைப் பற்றிக் கூறுமிடத்து‘ குலோத்துங்கனுக்குக் கலிங்கத்தை வென்று கொண்டவன் கருணாகரன் என்பவன். அவன் வண்டைநகரரசன். தொண்டைமான் என்னும் பட்டம்பெற்றவன். அவனைப் படிக்காசு புலவர்,

                        பண்டையோர் நாளையி லோரேழ் கலிங்கப்

                             பரணிகொண்டு

                   செண்டையு மேருவில் தீட்டுவித் தோன்கழற்

                             செம்பியன்செய்

                   தொண்டைநன் னாடு புரக்கின்ற கோனந்தித்

                             தோன்றலெங்கள்

                   வண்டையர் கோனங் கருணாகரன் தொண்டை

                             மண்டலமே

என்று புகழ்ந்திருக்கிறார். செம்பொற்சிலை யெழுபதில்

                        அவிக்கா தரங்கூர் புனிதர்மகிழ்ந்

                             தருள்வன் னியரை யாம்புகழச்

                   செவிக்க ரமுத மெனக்கேட்டுச்

                             சிந்தை யுவந்து சீர்தூக்கிப்

                   புவிக்கா யிரம்பொன் னிறைநீக்கிப்

                             பொற்றன் டிகைபூ டணத்தோடும்

                   கவிக்கா யிரம்பொன் பரிசளித்தான்

                             கருணாகரத் தொண்டை வன்னியனே

என்று கம்பர் புகழ்ந்திருக்கிறார். சிலையெழுபது கம்பர் பாடியதாயினும் ஆக, எவர் பாடியதாயினும் ஆக, கலிங்கத்தை வென்றுவந்தவன் வன்னியகுலதிலகம் என்பதும் இதனால் விளங்கும்’-18 என்ற உண்மையை உணர்த்துகிறார்.

 நூலில் சிறப்புகளை வெளிக்கொணரும் பாங்கு

            செல்வக்கேசவராயர் படைப்புகளைப் பொருத்த வரையில், தாம் எடுத்துக்கொண்ட படைப்புகளின் முழு தன்மைகளையும்¢ வெளிக்கொணரும் பொருட்டு தேவையான அத்துனை கூறுகளையும் கையாண்டுள்ளார். அப்படைப்புக்குத் தொடர்பான செய்திகள், நிகழ்ச்சிகள், கட்டுரைகள், விவாதங்கள், பிற நூற்செய்திகள், வரலாற்றுக் குறிப்புகள், அறியப்படாத உண்மைகள் என்ற அனைத்தையும் சேர்த்து, அந்நூலைப் பற்றிய முழுப்பார்வைக்கு வழி வகுப்பது இவர்தம் பண்பாக உள்ளது.

            திருக்குறளின் சிறப்பு பற்றிக் கூறுமிடத்து, ‘பெண்பாலினர் தாம் அழகு மிக்குடையராயினும் அணிகலனணியும் அவாவுடையவர்கள். கவிவாணர்களும் தாம் உரைக்கும் பொருள் அழகுடையதாயினும் அதனை அணியமைத்தே கூறுவர்.

            அணியிலாக் கவிதை பணியிலா வனிதை

என்றார் அகத்தியரும். நமதாசிரியரும் அங்கங்கே சிற்சில அணிகளை அமைத்துவைத்தனர்’-19 என்று தொடங்கி, திருக்குறளில் பயின்றுவந்துள்ள

சொற்பின் வருநிலை, பொருட்பின்வருநிலை , பிறிதுமொழிதல், இலக்கணை, உடம்பொடுபுணர்த்தல், உருவகம், ஏகதேச வுருவகம் போன்ற அணிகளை ஆதாரக் குறள்களோடு எடுத்துக்கொடுக்கிறார். அவ்வளவோடு, வள்ளுவர் பயன்படுத்திருக்கும் சிறந்த உவமைகளைச் சுட்டியும் சிறப்பு செய்கிறார்.

            ‘புலவர்கள் கல்வி கேள்விகளின் சிறப்பும் பிரபஞ்ச வியாபாரமும் பிரகிர்தி ஞானமும், அவர்கள் தங்கள் நூலில் நுதலும் பொருள்களை விளக்கும்படி காட்டும் உவமானங்களாலே நன்கு விளங்கும். சாதாரணமான சம்பாஷணையில் தானும் அவர்வர்கள் எடுத்துக் காட்டும் உவமானங்களால், அவரவர்களுடைய யோக்கியதை இனத்தியல்பு தொழிற்றிறம் மதியூகம் மனப் போக்கு முதலான சில பாவங்களெல்லாம் நன்கறியக் கூடும் அன்றோ. கதிரவன் நுழைந்து பாராத இடத்தையும் கவிகள் கண்டறிவர் எனத் தெலுங்கரில் ஒரு பழமொழி உண்டு. ஒரு சம்பந்தமும் இல்லாத பொருள்களுக்கு ஒற்றுமைநயங் கற்பித்து உவமானங் கொள்ளுதல் சிறந்த கவிராயர்களுக்கு இயல்பாக இருக்கின்றது. தலைமயிருக்கும் ஒருவன் நிலைமைக்கும் என்ன சம்பந்தம் உண்டு? ஆயினும் நுனித்தறிவார்க்கு ஒற்றுமை புலப்படும்.-20

                       

                  தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர்

                   நிலையி னிழிந்தக் கடை

 

என்பது தொடங்கி, ஆமைக்கும் அடக்கத்துக்கும், அனிச்சமலருக்கும் அதிதிக்கும், நிழலுக்கும் தீமையின் பயனுக்கும் காட்டப்பட்ட உவமைச் சிறப்புகளைக் காட்டாக முன் வைத்துத் திருக்குறளின் சிறப்பையும் வள்ளுவர் பெருமையும் சுட்டி குறள் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறார்.

            இதைப் போலவே கலிங்கத்துப்பரணி நூலைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது,  ‘கடைதிறப்பில் சிருங்காரரசமும், இந்திரசாலத்தில் அற்புதரசமும், போரில் வீரரசமும், களம்பாடியதில் ஆசியரசமும் அமைந்திருக்கின்றன. வெற்றியைக்கேட்ட களிப்பின் மிகுதியாலும், அரசன்மீதுள்ள ஆர்வத்தின் மிகுதியாலும், இவ்வாசிரியர், நூலின் நடையை மொத்தத்தில் குதிரைப்பாய்ச்சலாகக்கொண்டு செல்கிறார். நூலின் பகுதிகளுக்கேற்பவும், அவ்வப்பகுதியின் சுவைக்கேற்பவும், நடையானது மல்லகதியும் மயூரகதியும் வானரகதியும் விடபகதியும் வியாக்கிரகதியுமாக வேறுபட்டுச் செல்கின்றது. பின்வருநிலை உவமை தற்குறிப்பேற்றம் தன்மைநவிற்சி என்னும் அணிகள் அங்கங்ஙே அழகுசெய்கின்றன.’-21 என்ற நூற்சிறப்பின் பண்புகளை வெளிப்படுத்துகிறார்.

            ஒரு நூலின் முழுமையான சிறப்பை வெளிக்கொணர அந்நூலை அந்நூலின்¢ கருத்தோடு  ஒப்புடைய பிரிதொரு நூலோடு ஒப்பிட்டுப் பார்ப்பதே சிறந்த முறையாகும். இவ்வகையான போக்கையும் கையாண்டுள்ளார் ஆசிரியர்.  திருக்குறளின் சிறப்பைக் கூறவந்த செல்வகேசவராயர், அதன் சிறிய உருவத்தின் சிறப்பை முதலில் ஒப்பு நோக்கி உயர்வு படுத்துகிறார். இதற்காக  திருக்குறளின் கருத்தோடு ஒப்புமை உடைய நாலடியாரின் சில செய்யுட்களை எடுத்துக் குறளோடு பொருத்திப் பார்க்கிறார். இந்நோக்கில்,

            ‘நமதாசிரியர் இந்நூலை ஏனைப்பாக்களாற் கூறாது குறட்பாக்களாற் கூற எடுத்துக்கொண்டதனால், சுருங்கச்சொல்லல்-விளங்கவைத்தல்-நவின்றோர்க்கினிமை-நன்மொழி புணர்த்தல் முதலான அழகுகள் இந்நூலில் இனிதாக அமைவனவாயின.’

            நாலடியாரில்,

                   பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்

                   வரிசை வரிசையா நந்தும் - வரிசையால்

                   வானூர் மதியம்போல் வைகலுந் தேயுமே

                   தானே சிறியார் தொடர்பு

 எனப் பெரியாரோடு பெரியார் கொள்ளும் நட்பு, பிறை மதி வளர்வதுபோல நாட்குநாள் வளரும்; இழிஞரோடு இழிஞர் கொள்ளும் நட்பு, நிறைமதி தேய்வதுபோல நாட்கு நாள் தேய்ந்துவிடும் என்பதனை, வள்ளுவர்

          நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்

          பின்னீர பேதமையார் நட்பு

என ஒரு குறளில் சுருங்கச் சொல்லியிருக்கின்றனர். என்கிறார். இதைப் போன்ற இன்னும் சில நாலடியார் செய்யுட்களையும் குறள்களையும் ஒப்பு நோக்குகிறார். ஒப்புநோக்கலின் முடிவில், ‘ஒரு பொருளையே ஓதும் இரண்டு நூலை ஒப்பிட்டுப் பார்க்குமிடத்தே அவ்வந்நூலின் திறம் விளங்குமாதலின், இங்ஙனம் நாலடியையும் குறளையும் ஒப்பிட்டுப் பார்த்தோம். ஒப்பிட்ட ஒவ்வொரு பொருளையும் நமது குறளே சுருங்கச்சொல்வதா யிராநின்றது.’-22 என்று  குறளின் சிறப்பை முன்வைக்கிறார்.

 நுட்பமான செய்திகள்

            ஒரு நூலில் சிறப்பிற்கு அந்நூலில் நுவலும் செய்திகளோடு பின்னிணைப்புகளும், ஆங்காங்கே செருகிச் செல்லும் சில நுட்பமான செய்திகளும் காரணமாகின்றன. இத்தன்மையை செவ்வக்கேசவராய முதலியாரின் திருவள்ளுவர், கலிங்கத்துப்பரணி உரைநடை, அக்பர், கண்ணகி சரித்திரம் போன்ற நூல்களில் காணமுடிகிறது. இவ்வகையில் கலிங்கத்துப் பரணியில் சயங்கொண்டார் பற்றிய  செய்தியையும், கருணாகரத்தொண்டைமான் யார் என்பதைப் பற்றிய நுட்பமான செய்தியனையும் ஆசிரியர் கொடுத்துள்ளமை படிப்போர்க்குத் தெளிவைக் கொடுப்பதாய் அமைந்துள்ளது.

            செயங்கொண்டாரைப் பற்றிக் குறிப்பிடும் இடத்து,       ‘இது சயங்கொண்டார் என்னும் புலவர் பாடியது. ‘வெண்பாவிற் புகழேந்தி பரணிக்கோ சயங்கொண்டான்’ எனப் புகழப்பெற்றவர் இவரே.

            இவர் சோழனுடைய வாயில் வித்துவான்களில் தலைவர். தென்னாட்டுப்புலவர் சிலர் போந்துபுரிந்த வாதப்போரில் வெற்றியடைந்ததனால் ‘சயங்கொண்டான்’ என்றொரு பட்டப்பெயர் பெற்றிருந்தார். கலிங்கரை வென்றசெய்தியை அறிந்தவுடனே சோழன் இப்புலவரை நோக்கி ‘யானும் சயங்கொண்டான் ஆயினேன்’ என்றான். உடனே இப்புலவர் ‘அங்ஙனமாயின் சயங்கொண்டான் சயங்கொண்டான்மீது பரணி புனைவான்’ என்றுரைத்தப்போய் இந்தப் பிரபந்தத்தை இயற்றிவந்து அரசன் அவையிலே அரங்கேற்றினார். அப்போது அரசன் தனது கருவூலத்தினின்றும் பொற்றேங்காய்களை வருவித்து வைத்துக் கொண்டு ஒவ்வொருதாழியின் முடிவிலும் ஒவ்வொருகாயாக உருட்டித்தந்து களிகூர்ந்தான். இங்ஙனம் ஒரு கன்னபரம்பரை வழங்கி வருகின்றது.’-23  என்ற செய்தினைச் சேர்க்கிறார்.

            எந்நூலைப் பற்றிய படைப்பாயினும்,  அந்நூலின் சிறப்புக் கூறுகளை எவ்வகையிலேனும் வெளிக்கொணர முயல்வது ஆசிரியரின் பண்பாக உள்ளதைக் காணமுடிகிறது. ‘சிலப்பதிகாரம் இந்திரவிழவூரெடுத்த காதையின் உரையில், அடியார்க்கு நல்லார் கலிங்கத்துப்பரணியில் நின்றும் சில தாழிசைகளை எடுத்துக்காட்டியிருக்கின்றனர். இதனால் இந்நூலின் பெருமையும் இவ்வாசிரியர் பெருமையும் நன்கு விளங்கும். மூவருலாவிலும் கண்டறியாத சில செய்திகள், இந்தநூலில் உரைத்திருக்கும் சோழருடைய இராசபாரம்பரியத்தில் குறித்திருக்கின்றன.’-24 என்று கலிங்கத்துப்பரணியின் சிறப்பை வெளிக்கொணர்வது இப்பண்பிற்கு ஒரு பதமாக அமைகிறது.

 தக்க சான்றுகளோடு மறுக்கும் பண்பு 

            செல்வக்கேசவராயர் தம் படைப்புகளில்,  உரையாசிரியர்கள், படைப்பாசிரியர்கள், ஆய்வாளர்கள் போன்றோரின் கருத்தோடு மாறுபடும் இடத்து, தக்க சான்றுகளோடு தம் கருத்தை நிலைநிறுத்தும் பாங்கினைப் பார்க்கமுடிகிறது. உதாரணத்திற்கு ஒன்றிரண்டைக் காணலாம்.

 தமிழ் நெடுங்கணக்குப் பற்றிய ஆய்வு

            செல்வக்கேசவராயர் தம்முடைய பஞ்சலட்சணம் நூலில் தமிழ் நெடுங்கணக்கின் வரலாறு என்ற தலைப்பில் நெடுங்கணக்கைப் பற்றிய ஆய்வில் இறங்குகிறார். இதில்

 ‘தமிழெழுத்துக்களும் கிரந்த எழுத்துக்களும் தேவநாகரியெழுத்துக்களிலிருந்தோ அதற்கு முந்திய அசோக மகாராஜனுடைய சிலா சாசன வெழுத்துக்களிலிருந்தோ உண்டானமை என்பதும், தென்னாடுகளில் பனையேடுகளில் எழுத்தாணிகொண்டெழுதும் வழக்கத்தால் அவை உருவு திரிந்தன என்பதும், சிலருடைய கொள்கை. மலையாளத்தில் உள்ள யூதரும் ஹியன் கிறிஸ்தியரும் பெற்றுள்ள ராஜ சாசனங்கள் தமிழ்மொழியில் எழுதியுள்ளன. அந்த சாசனங்களில் ஒன்று கி.பி 774 ஆண்டில் ஏற்பட்டது. தமிழ் நெடுங்கணக்கின் மிகப் பழமையான வரிவடிவில் அவை எழுதியிருக்கின்றன. அவற்றை வட்டெழுத்தென்பர் சாசனசர்ச்சை செய்வோர். அவ்வடிவு ஏறக்குறையை கி.பி. பத்தாவது நூற்றாண்டில் வழக்கிழந்ததாகக் காண்கிறது. அப்பால் ராஜசாசனங்களாகிய கல்வெட்டுகளைக் கோலெழுத்தென்பர் (கோல்-செங்கோல்)

            அகத்தியர் தமிழ்நாட்டில் புகுதற்கு முன்னரே தமிழில் இயல் இசை நாடகமான இலக்கிய விலக்கணங்கள் வழங்கியருந்ததனால், தமிழ் நெடுங்கணக்கு வேறு நெடுங்கணக்கினின்றும் பிறந்ததன் றென்பதே துணிவு. அதற்குப் போதிய சான்றுகள் உள்ளன. மிக்க வீரத்துடனே போர்புரிந் திறந்த வீரனது ஞாபக சின்னமாகக் கல் நடுதல் என்று முற்காலத்தில் தமிழ் நாட்டில் ஓர் ஐதீகம் உண்டு. அதாவது, கழல்வீரர் நீண்ட கல் ஒன்று கொண்டுவந்து அதனை மஞ்சன மாட்டி மடையும் மதுவும் மலரும் முதலியன கொடுத்து விழாநடத்திக் கல்லில் இறந்த வீரனது பெயரும் பீடும் எழுதி ஓரிடத்தில் நடுதலாம். இந்த ஐதீகத்தால் தமிழர் அசோகனுக்கு முந்தியே தமிழ் நெடுங்கணக்குடையார் என்பது விளங்கும்.

 கடைச்சங்கக்காலத்து நிகண்டாகிய திவாகரம்,

‘பெயரெழுத்து முடிவெழுத்து வடிவெழுத்துத் தன்மை

யெழுத்தென எழுத்தின் பெயரியம் பினரே’

என்றும், அக்காலத்து நிகண்டாகிய பிங்கலந்தையும்

            ‘வடிவுபெயர்  தன்மைமுடிவு  நான்கெழுத்தே’

என்றும் உரைக்கின்றன. அவற்றுள் வடிவெழுத்தென்பன பூர்வ எகிப்பியர் வழங்கியதுபோன்ற சித்திரக்குறிகள்.

            பெயரெழுத்தென்பன சீனர்போல ஒவ்வொரு பெயரை உணர்த்துதற்கு இட்டு வழங்கும் சங்கேதக் குறிகள்.

            தன்மையெழுத்தென்பன குணங்கள் சக்திகள் முதலியவற்றைக் குறித்தற்கு வழங்கிய அடையாளங்கள்.

            பூர்வ எகிப்தியர்கள் விவேகத்தைக் கண்ணும் எறும்பும், அறிவின்மையை ஈயும், நன்றியின்மையை விரியன் பாம்பும், வெற்றியைக் கருடனும், தந்திரத்தை நரியுமாகக் குறித்து வழங்கியது இதற்கு உதாரணம். முடிவெழுத்தென்பன வினை நிகழ்ச்சியை உணத்தும் வாக்கியங்களைக் குறிக்க வழங்கிய அறிகுறிகள். இரண்டு அல்லது பல பிராணிகளின் அவயவங்களை ஒன்றாகக் கலந்து ஓருருவம் அமைத்து ஒரு விஷயத்துக்கே குறியாக வழங்குவது எகிப்தியர் முறை.

             மேற்கூறியது போலவே யாப்பெருங்கல விருத்தியானது ‘உருவே யுணர்வே  ஒலியே தன்மையென’ மற்றோர் எழுத்துவகை காட்டி அவற்றுள்,

                               காணப்பட்ட உருவமெல்லாம்

          மாணக் காட்டும் வகைமை நாடி

          வழுவி லோவியன் கைவினை போல

          எழுதப் படுவது உருவெழுத் தாகும்’

என்றும்,

            கொண்டஓர் குறியால் கொண்ட வதனை

          உண்டென றுணர்வது உணர்வெழுத்தாகும்

என்றும்,

            இசைப்படு பள்ளின் எழாஅலொடு புணர்ந்து

          செவிப்புல னாவது ஒலியெழுத் தாகும்.

என்றும்,

            முதற்கா ரணமும் துணைக்கா ரணமும்

           துணைக்கா ரணத்தொடு தொடரிய உணர்வும்

           அவற்றொடு புணர்ந்த அகத்தெழு வளியின்

                                மிடற்றுப் பிறந் திசைப்பது தன்மை யெழுத்தே-25

என்று தமிழில் பல வகையான எழுத்துருக்கள் இருந்தன என்பதையும். தமிழ் நெடுங்கணக்கானது பிறவற்றிலிருந்து காலத்தால் முந்தியது என்பதையும் ஆதாரங்காட்டி பிறர் கருத்தை மறுக்கிறார்.

 பரிமேலழகர் கருத்துக்கு மாற்றுக் கருத்து

            திருக்குறளுக்குப் பரிமேலழகர் வடமொழியைத் தழுவி செய்தது என்று தமதுரையில் கூறும் சில இடங்களைச் செல்வக்கேசவராய முதலியார் மறுத்துரைக்கிறார். ‘அரசனீதியாவது காவலை நடாத்து முறைமை. அதனை அரசியல் , அங்கவியல், ஒழிபியல் என மூவகைப்படுத்துக் கூறுகின்றார் எனப் பொருட்பாலுக்குப் பாயிரமுரைத்து உரைகூறப் புகுகின்றனர் பரிமேலழகர். காமத்துப்பாலின் உரைப்பாயிரத்திலும், பரிமேலழகர், ‘இவர் பொருட் பாகுபாட்டினை அறம் பொருள் இன்பம் என வடநூல் வழக்குப்பற்றியோதுதலான்’ என்றும், ‘இனி, தமிழ் நூல்களோடும் பொருந்தப் புணர்ச்சியைக் களவென்றும் பிரிவைக் கற்பென்றும் பெரும்பான்மை பற்றி வகுத்து’ என்றும், உரைப்பாயிரத்தின் இறுதியில் ‘ஈண்டும் பிரிவினை வடநூன்மதம் பற்றி... நால்வகைத் தாக்கிக் கூறினார்’-26 என்றும் கூறுதலால், திருக்குறளுக்கு வடநூற் போக்கையே பின்பற்றி இவர் உரைகூறுவது தேற்றம்.’ என்று  பரிமேலழகரின் நிலையினை மேலும் சில சான்றுகளோடு கூறி, ஆனால், வள்ளுவர் கருத்தோ பரிமேலழகர் கருத்தன்று என்பதனை ஆதார விளக்கங்களைக் கொண்டு நிறுவுகிறார்.

 நிறை குறை காணும் தன்மை

     செல்வக்கேசவராயர் பேச எடுத்துக்கொள்ளும் இலக்கியத்தின் சிறப்புகளை எல்லாவகையினும் வெளிக்கொணர முயலும் அதே வேளையில், அவ்விலக்கியத்தில் காணப்படும் இடர்¢ப்பாடுகளையும் சுட்டிச்செல்ல தவறவில்லை. குறளைப் பற்றிக் கூறும்போது, ‘வள்ளுவர் ஒவ்வோ ரதிகாரத்தையும் பப்பத்துக் குறளாகக் கூறுவதென்று வரையறுத்துக் கொண்டதில் இரண்டு விதமான இடர்ப்பாடுண்டு. அதிகாரப்பட்ட பொருள் பத்துக்குறட்குத் குறைவதாயின், கூறியது கூறுதல் மற்றொன்று விரித்தல் மிகைபடக்கூறல் முதலான குற்றங்களுக்கு இடமுண்டாகும்; அன்றியும் விதிமுகத்தானும் மறைமுகத்தாலும் பல அதிகாரங்கள் கூறவேண்டுவது மாகும். கடவுள்வாழ்த்து அதிகாரப் பட்ட விடத்தில், நீடுவாழ்வார் இன்னார் என்பது இரண்டு குறளால் உணர்த்தினார். அவ்விரண்டு குறளையும் ஒன்றாக இணைத்திருக்கலாம்.

            அறவாழி யந்தணன்றாள் சேர்ந்தார்க் கல்லாற்

          பிறவாழி நீந்த லரிது

என்ற குறளையும்

          பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தார்

          இறைவனடி சேரா தார்

என்ற குறளையும் ஒரு முடிபாக முடிப்பது நன்றாகும். இல்வாழ்க்கை அதிகாரப்பட்ட இடத்தில், துறவறத்தினும் இல்லறம் ஏற்றமுடையது என்பதற்கு,

          அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற்

          போஒய்ப் பெறுவ தெவன்

என்றும்,        

          இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவ னென்பான்

          முயல்வாரு ளெல்லாந் தலை

என்றும்,        

        ஆற்றி னெழுக்கி யறனிழுக்கா வில்வாக்கை

        நோற்பாரி னோன்மை யுடைத்து

என்றும் மூன்று குறள் கூறினார். நட்பு அதிகாரப்பட்ட விடத்தில் கூறவேண்டுவன வெல்லாம் ஓரதிகாரத்தில் அடங்காமையால், அதனைப் பல வதிகாரங்களாக வகுத்துக்கொண்டார்.’-27 என்பன போன்ற இடர்ப்பாடுகளைச் சுட்டுகிறார்.

       மேலும், தம்முடைய பஞ்சலட்சணம் நூலில் தமிழ் நெடுங்கணக்கில் உள்ள நிறை குறைகளை ‘ தமிழ் நெடுங்கணக்கில் உள்ள மிகையும் குறையும்’ என்ற தலைப்பின் கீழ்ப் பட்டியலிட்டுக்காட்டுகிறார். இதில், ‘தமிழ் மொழிகளின் உச்சாரணத்துக்கு அவசியமான ஒலிகள் நாற்பது. வரி வடிவில் அவற்றைக் குறிப்பதற்கு உள்ள எழுத்துக்கள் முப்பத்தொன்றே. ஆகவே மற்ற ஒன்பதொலிகளுக்கும் ஒன்பது தனிவேறெழுத்துக்கள் இன்மை தமிழ் நெடுஙகணக்கிற்கு ஒரு குறையே என்னலாம். தமிழேயான சொற்களில் வல்லெழுத்துக்களை எடுத்தொலிப்பதற்கான குறிகள் இல்லை. இனமான மெல்லொற்றையும் சில இடையெழுத்தையும் அடுத்துவரும் வல்லினம் எடுத்தொலிப்பதே இயற்கையாதலால் அவ்விதமான குறிகள் வேண்டுவனவல்ல. மெல்லின இடையினங்களை அடுக்காமல் தனியாகவே க ச ப என்பவை புகுதல் வசித்தான் வருபவன் என்ற சொற்களிற்போல வேறு புதிய ஒலிகளாக உச்சரிக்கப்பெறும். உரிய எழுத்துக்களில்லாமை குறையே. இணையெழுத்தாகக் கொள்ளினும் எழுத்துப் போலியாகக் கொள்ளினும் ஐகார ஔகாரங்கள் மிகையே என்னலாம். ஐகார ஔகர ஔகாரங்களையும் அவை ஊர்ந்துவரும் உயிர்மெய்களையும் ஒழிப்பினும் தமிழ் இடர்ப்படாது. ங்-ங இரண்டு தவிர ஙகரவருக்கத்தில் மற்றையவெல்லாம் மிகையே.

       நகரமும் னகரமும் பிறப்பளவில் வெகுவாய் வேறுபடாமையாலும், இரண்டும் மெல்லினமே யாகையாலும், இவ்விரண்டும் வேண்டா, ஒன்றே அமையாதோ எனின், நகரம் தகரத்துக்கே இனமாய்த் தந்நகரமென்றும் னகரம் றகரத்துக்கினமாய் றன்னகரமென்றும் வழங்கப்படுவனவாயின; ளகரத்தோடு தகரமும் நகரத்தோடு றகரமும் மயங்குதலில்லை, ஒன்றே கொண்டால், முந்நூறு-முன்னூறு எந்நாடு-என்னாடு என்றும் தொடர்மொழிகளில் சந்தியிடர்ப்பாடு உண்டாகும்; பொருட்டெளிவுங்கெடும். ஆதலால் இரண்டும் வேண்டும் என்பதே விடை. இடையின ரகரம் வல்லின றகரம் ஆகிய இரண்டில் ஒன்றை ஒழித்து விடலாமே எனினும் இவ்வித இடர்ப்பாடுகளோடு தனிமொழிகளின் பொருண்மலைவும் உண்டாமாதலால் அங்ஙனம் ஒழிப்பது ஆகாது.

     ஹிந்துஸ்தானி-பாரஸீகம்-இங்க்ல¦ஷ் முதலான பாஷைகளிலிருந்து தமிழில் வந்துவழங்குதலான சொற்களை வரிவடிவில் அமைத்துக்காட்டத் தமிழ் நெடுங்கணக்கில் போதிய எழுத்துக்கள் இல்லை’-28 என்ற உண்மையைத் தெளிவுபடுத்துகிறார். 

கையாளும் உத்தி முறைகள்

       செல்வக்கேசவராய முதலியார் தம் படைப்புகளில் படிப்போரின் தெளிவிற்கும், மகிழ்விற்கும், சோர்வின்மைக்கும் ஏற்ப நடையை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. படிப்போர்க்கு வினா எழுப்புவதான இடங்களில் தானே வாசகனாக இருந்து அவைபோன்ற வினாக்களை  எழுப்பி அதற்கான பதில்களையும் தருவதாக தம் நடையை அமைத்துள்ளார். காட்டாக ,

            ‘வாய்மை யெனப்படுவ தியாதெனின், யாதொன்றும்

          தீமை யிலாத சொலல்

என்று, தமிழ்வேதமாகக் கொள்ளும் இந்நூலில், அறத்துப் பாலில், துறவறவியலில், வாய்மையை வற்புறுத்துமிடத்தில்,

            பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த

          நன்மை பயக்கு மெனின்

என இவ்வாசிரியர் எடுத்துரைத்தது ஏற்குமா?’-29 என்ற கேள்வியையும் கேட்டு, இல்லை இல்லை அப்படி எடுத்துரைத்துச் சரியே என்னும் வகையில் விளக்கத்தினையும் கொடுத்துள்ளமை¬யைச் சுட்டலாம்.

         மேலும், செல்வக்கேசவராயர் தம் நூல்களில் தேவையான இடங்களிலெல்லாம் பல வகையானப் பழமொழிகளை இடம்பெறச் செய்துள்ளார். இவரின் அக்பர் என்ற நூலில் இடையிடையே ஐம்பதுக்கும் மேற்பட்ட பழமொழிகள் இடம்பெற்றுள்ளன. மேலும்,  இவரின் வியாசமஞ்சரி நூலின் பின்னிணைப்பில் சுமார் 650 வழக்குத் தொடர்மொழிகளையும், சுமார் 1050 பழமொழிகளையும் அகரவரிசைப்படுத்திக் கொடுத்துள்ளார்.  அத்தோடு, ‘குடித்தனமோ துரைத்தனமோ?’ என்பன போன்ற சொற்றொடர்களையும் அங்கங்கே இட்டுச்சென்று தம் கருத்தோடு படிப்போரை ஒன்றச் செய்ய முயல்கிறார்.

            செல்வக்கேசவராயரின் அக்பர் என்ற நூல் ஒரு வரலாற்று நூலாக இருந்தாலும், பிற வரலாற்று நூல்களைப் போல கால அடிப்படையில் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் பட்டியலிட்டுப் படிப்போரை நெற்றிச்சுருங்க வைக்காமல், தேவையான இடங்களில் மட்டும் காலவிவரத்தினைக் கொடுத்து, பிற இடங்களை ஆச்சர்ய மூட்டும் நிகழ்ச்சிகளால் நிரப்பி படிப்போரை வியப்பில் ஆழ்த்துகிறார். அக்பர் பற்றிய இவரின் நூலுக்கு, அக்பரைப் பற்றி வெளிவந்த பிறநூல்களையும், பிறமொழி நூல்களையும், பல வகையான குறிப்புகளையும் கொண்டு அதிலிருந்து நிகழ்ச்சிகளைத் தேர்வு செய்துள்ளமையும், அக்பரின் வரலாற்றினை பாபரில் தொடங்கி சல¦மில் முடித்திருக்கும் போக்கும், இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் பற்றிய முழு பார்வைக்கு வழிவகுப்பதாக அமைந்துள்ளது. 

பன்னூல் பயிற்சியும் பன்மொழிப் புலமையும்

            செல்வக்கேசவராய முதலியாரின் படைப்புகளில் காட்டும் சான்றுகளையும், கொடுக்கும் பின்னிணைப்புகளையும், எடுத்துச்சொல்லும் கருத்துகளையும் கொண்டு அவர்தம் பன்மொழிப் புலமையையும், பன்னூல் பயிற்சியையும்  அறியமுடிகிறது. ஒரு நூலில் தாம் எடுத்துக்கொண்ட பொருளுக்குத் தொடர்பான செய்திகள் எவ்வெவ் வடிவத்தில்  வெளிவந்திருந்தாலும்  அத்துனையும் தம் பார்வையில் பதித்துள்ளார். தேவையான இடங்களில் அத்தகவல்களை இணைப்பதோடு, எஞ்சியதைப் பின்னிணைப்பால் நிரப்புகிறார். இவர் தம்முடைய திருவள்ளுவர் நூலில் திருக்குறளின் பெருமை பேசுமிடத்தில், ‘நாம் கண்ட கேட்ட பிற தேயங்களிலும், இவ்வகையான நூல் யாதொன்றும் இருப்பதாக இதுகாறும் கேட்டிலோம்’-30 என்பதிலிருந்து இவரின் பரந்து பட்ட மொழிப்புலமையையும், இலக்கிய நோக்கையும் அறியலாம். ஆங்கிலத்தில் வெளிவந்த கட்டுரைகளைப் பற்றிய செய்திகளைக் கொடுப்பதோடு, தெலுங்குப் பழமொழிகளையும் சேர்க்கிறார். திருக்குறளின் வைப்புமுறை போன்றவற்றை விளக்குமிடத்து, வட மொழியில் உள்ள இலக்கியச் செய்திகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். அதே வேளையில் அக்பரைப் பற்றி பாரசீக மொழி நூல்களில் உள்ள செய்திகளையும் கோடிட்டுக் காட்டத்தவறவில்லை. இவையாவும் ஆசிரியரின் பன்மொழிப் புலமைக்குச் சான்றாக அமைகின்றன.

            பஞ்சலட்சணம் நூலில் திசைச் சொற்களைப் பற்றிக் குறிப்பிடும் இடத்தில், சுமார் 60 அரபி சொற்களையும், 40 பாரசீக சொற்களையும், 90 இந்துஸ்தானி சொற்களையும், 10 போர்ட்யுகேசிய சொற்களையும், 90 ஆங்கில சொற்களையும்¢, இதரமானவை என்ற தலைப்பில் 10 சொற்களையும், மற்றும் 175 வடமொழிச் சொற்களோடு பொருத்தமான தமிழ்ச் சொற்களையும்-31 பட்டியலிட்டு தம்முடைய பன்மொழிப் புலமையை வெளிப்படுத்துகிறார்.

            திருவள்ளுவர் நூலின் பின்னிணைப்பில், அபிதான கோசம், திராவிடப் பிரகாசிகை,  சிறைசெய்காதை ;மணிமேகலை, நல்வழி, புலவர் புராணம், கல்லாடம், பரிபாடல் உரைச்சிறப்புப்பாயிரம், போன்றவற்றின் செய்திகளையும், மற்றும் உருத்திரசன்ம கண்ணர், கவிசாகரப் பெருந்தேவனார், நப்பாலத்தனார், மதுரைப் பாலாசிரியனார்,  கால்டுவெல், ஜி.யு. போப் போன்றோர்களின் திருக்குறள் பற்றிய சிந்தனைகளோடு (ஒரு) தனியன் என்ற குறிப்போடு பெயர் அறியப்படாதோர் கருத்துகளையும் இணைத்துள்ளார். இத்தன்மை இவரின் பரந்துபட்ட,  ஆழமான இலக்கிய புலமையைக் காட்டுவதாய் அமைகிறது. இதைப் போலவே ஒவ்வொரு நூலின் பின்னிணைப்பியையும் நிரைவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 தொகுப்பு

Ø செல்வக்கேசவராய முதலியார் படைப்புகள் பெரும்பாலும் மாணவர்களின் பயன்பாட்டினை முதன்மை நோக்காகக் கொண்டு, அவர்கள் தமிழின் இனிமையையும், எளிமையையும், இலக்கிய வளங்களையும், இலக்கண பொருள்களையும் எளிதில் அடைய வேண்டும் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன.

Ø  எளிமைத்தன்மையும், கட்டுரை அமைப்போடு கூடிய ஆய்வு பாங்கையும் இவரின்  ஒவ்வொரு படைப்பிலும் காணமுடிகிறது.

Ø  இவரின் கண்ணகி சரித்திரம், திருவள்ளுர், கலிங்கத்துப்பரணி போன்ற படைப்புகளில் இறுக்கமாய் உள்ள  இலக்கியங்களை இலகுவாய் வடிவமைத்துக் கொடுக்கும் திறன் காணப்படுகிறது. இத்தன்மை, மக்கள் மூல நூலைப் படிப்பதற்கான ஆர்வத்தைத் தூண்டுவதாய் அமைகிறது.

Ø  பஞ்சலட்சணம் என்ற நூல் தமிழின் ஐந்திலக்கணமான எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பனவற்றின் சாரத்தைப் பிழிந்துக் கொடுப்பதாய் அமைந்துள்ளது. இலக்கணம் என்றாலே எட்டிக்காயெனப் பார்க்கும் மாணவர்களின் பார்வையை இந்நூல் மாற்றுவதாய், இலக்கணம் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதாய்  அமைந்து, ஆசிரியரின் படைப்புத்திறனை வெளிக்காட்டுகிறது.

Ø  செல்வக்கேசவராயரின் ஒவ்வொரு படைப்பும் ஆய்வு நோக்கிலேயே அமைந்துள்ளது. நூலில் காலம் பற்றிய ஆய்வுகள், இடம் பற்றிய ஆய்வுகள், கதைமாந்தர் பற்றிய ஆய்வுகள், பாடபேத ஆய்வுகள், படைப்பாளர் சமயம் பற்றிய ஆய்வுகள், நிறை குறை பற்றிய ஆய்வுகள், ஆசிரியர் பற்றிய ஆய்வுகள், சொற்கள் பற்றிய ஆய்வுகள் போன்றன நிகழ்த்தப்பட்டுள்ளன. இவை ஆசிரியரின் ஆய்வு நோக்கோடு கூடிய படைப்புத்திறனைப் பறைசாற்றுகின்றன.

Ø  ஆசிரியரின் ஒவ்வொரு நூலும், அந்நூலுக்குத் தொடர்பான பிறவழிச் செய்திகளைப் கொண்டிருப்பதோடு, பின்னிணைப்பில் அந்நூல் கருத்துக்குத் தொடர்பான கட்டுரைகள், வெளிநாட்டார் குறிப்புகள், ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வு நூல்கள்¢, இதழ்வழிச் செய்திகள், பிறநூல் செய்திகளைக் கொண்டு முழுமையடைகிறது.

Ø  கருத்தில் மாறுபடும் இடங்களில், ஏற்றுக்கொள்ளக் சான்றுகளாலும், தக்க வாதங்களாலும் உரையாசிரியர்கள், ஆய்வாளர்கள், படைப்பாசிரியர்கள் போன்றோரின் கருத்துகளை மறுக்கும் திறனை இவர் படைப்புகளில் காணமுடிகிறது.

Ø  செல்வக்கேசவராயரின் மொழி நடையினையும், சான்றுகாட்டும் தன்மையையும், மொழி ஆளுமையையும் கொண்டு அவரின் தமிழ், வடமொழி, தெலுங்கு, ஆங்கிலம் போன்றவற்றில் உள்ள புலமையை உணரமுடிகிறது.

Ø  தமிழ்ப் படைப்புகளில் கூடிய வரையில் வடமொழிச் சொற்களைத் தவிர்த்தல் வேண்டும் என்ற இவர்தம் எண்ணம், இவரின் படைப்பிலும், வடமொழிச் சொற்களுக்குப் பொருத்தமான தமிழ்ச் சொற்களைப் பட்டியலிட்டுக் கொடுப்பதிலும் வெளிப்படுகிறது.

Ø  இலக்கியத்திற்கு உரையெழுதுவோர், நூலாசிரியனின் கருத்தைத் திரித்துக் கூறுதலோ, தன் கருத்தைத் திணித்துக் கூறுதலோ கூடாதென்பதை இவர்தம் கூற்றுகளும், படைப்பின் போக்குகளும் தெளிவாக்குகின்றன. இதனால் இவரின் வழிநூல்கள் முதல் நூலாசிரியரின் கருத்தில் வழுவாமல் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

Ø  நூற்பாக்களுக்கு விளக்கம் அளிக்கும் பொழுது தம் விளக்கத்தோடு, தேவையான இடங்களில் பிற உரையாசிரியரின் விளங்கங்களையும் இட்டுச் செல்லும் போக்கினை இவர் படைப்பில் காணமுடிகிறத.

Ø  அக்பர், கண்ணகி சரித்திரம், கலிங்கத்துப்பரணி உரைநடை, பஞ்சலட்சணம், வியாசமஞ்சரி ஆகியவை எளிமையை அடிப்படையாகக் கொண்டே படைக்கப்பட்டுள்ளன. இதன்வழி மூலநூல்களைப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதான இதன் முதன்மை நோக்கம் வெற்றிப்பெற்றதாகவே கொள்ளலாம். பஞ்சலட்சணம் என்ற இவரின் இலக்கண நூலும் இலக்கணம் கற்போர்க்கு முதல் படியால் அமைந்துள்ளமை போற்றுதற்குரியது.

Ø குறளைப் போலவே செல்வக்கேசவராயரின் படைப்புகளும் சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் தன்மையைப் பெற்றுள்ளமை ஆசிரியரின் படைப்புத் திறனின் வெற்றி எனக்கொள்ளலாம்.

******

 அடிக்குறிப்புகள்

1.         தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம்

2.         திருவள்ளுர் ப.7     

3.         பஞ்சலட்சணம். புதிய பதிப்பின் முகவுரை

4.         பஞ்சலட்சணம். புதிய பதிப்பின்    முகவுரை

5.         பஞ்சலட்சணம் பக் 31-34      

6.         கலிங்கத்துப் பரணி பக்.8-9      

7.         திருவள்ளுர் ப.22

8.         திருவள்ளுவர் பக்.16-17   

9.         திருவள்ளுவர் ப.42  

10.       திருவள்ளுவர் ப. 10

11.       கலிங்கத்துப் பரணி ப.7      

12        .கலிங்கத்துப்பரணி ப.9      

13.       திருவள்ளுவர் ப.60

14.       திருவள்ளுவர்  பக். 57-58

15.       கலிங்கத்துப்பரணி ப.6         

16.       கண்ணகி சரித்திரம் பக்.82-85

17.       கலிங்கத்துப்பரணி  9-10  

 18.      கலிங்கத்துப்பரணி பக்.13-14

19.       திருவள்ளுவர் ப.50  

20.       திருவள்ளுவர் ப.54   

21.       கலிங்கத்துப்பரணி  ப.8

22.       திருவள்ளுவர் ப. 44-45       

23.       கலிங்கத்துப்பரணி  பக். 7-8    

24        கலிங்கத்துப்பரணி  ப.8

25.       பஞ்சலட்சணம் பக். 16-17     

26.       திருவள்ளுவர் பக்.22-26

27.       திருவள்ளுவர் பக்.43-44

28.       பஞ்சலட்சணம் ப.16    

29.       திருவள்ளுவர் ப.35

30.       திருவள்ளுவர் ப.42  

31.       பஞ்சலட்சணம் பக்.26-34

 முதன்மைச் சான்றுகள்

1. திருவள்ளுவர், தி. செல்வக்கேசவராய முதலியார், திருநெல்வேலி, தென்னிந்திய      சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,1920

2.  ஞ்சலட்சணம், தி. செல்வக்கேசவராய முதலியார் , கி.க.அ. அங்கத்தார்        அச்சுக்கூடம், சென்னை,1921

3. செயங்கொண்டார் கலிங்கத்துப் பரணி கதா சங்கிரகம், தி. செல்வக்கேசவராய            முதலியார், திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,1928

4.  தமிழ் வியாசமஞ்சரி (நற்புத்தி போதம்) , தி, செல்வகேசவராய முதலியார், PRINTED AT THE MADRAS DIOCESAN PRESS, VEPERY,1921

5.  அக்பர், தி. செல்வக்கேசவராய முதலியார், கி.க.அ. சங்கத்தாரின் அச்சுக்கூடம், சென்னை, 1931கண்ணகி சரித்திரம், தி. செல்வக்கேசவராய முதலியார்,        திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட் ,             1947

துணைமைச் சான்றுகள்   

     தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம். பேராசிரியர் ம. ச. விமலானந்தம், ஐந்திணைப் பதிப்பகம், சென்னை