வியாழன், 13 ஆகஸ்ட், 2020

தொல்காப்பியத் தெளிவுரை - ச.வே.சுப்பிரமணியன்

. மணவழகன், முனைவர் பட்ட ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. திசம்பர், 2004.

முனைவர் .வே.சுப்பிரமணியன் எழுதிய 'தொல்காப்பியம் தெளிவுரை' என்ற நூலானதுமணிவாசகர் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளதுமே, 23, 1998-ஆம் ஆண்டு வெளிவந்த இந்நூல், சனவரி 2003-இல் ஐந்தாம் பதிப்பினை எட்டியுள்ளது. இந்நூலினை மதிப்பீட்டு நோக்கில்  காண்பதாக இக்கட்டுரை அமைகிறது.

நூல்

முனைவர் தமிழண்ணலின் அணிந்துரையுடன் கூடியதொல்காப்பியம் தெளிவுரைநூற்பா முதற்குறிப்பு அகராதி உட்பட சுமார் 640 பக்கங்களைக் கொண்டுள்ளது. கையடக்க அளவினதான வடிவினைக் கொண்டது. பக்கங்களின் இடதில் நூற்பாவும் வலதில் தெளிவுரையும் கொடுக்கப்பட்டுள்ளது. நூலின் விலை ரூ.30.

உரையாசிரியர் தன்மை

பழந்தமிழ் நூல்களைப் பதிப்பிக்கவும், உரைகாணவும், தெளிவுரை எழுதவும் முனைவோருக்கு அவ்வகையான நூல்களில் முழுஈடுபாடும், அந்நூல்களைப் பற்றிய நன்மதிப்பும், ஆர்வமும் இருந்தாலன்றிபதிப்போ, உரையோ, தெளிவுரையோ செம்மையுறாது. மேலும், அந்நூலைப் படிப்போர் உள்ளத்தில் நூலைப் பற்றிய உயர்வை, நூலைக் கற்கும் ஆர்வத்தை  ஏற்படுத்த முடியாது. அவ்வகையில், .வே.சுப்பிரமணியம் சங்க இலக்கியங்களையும், தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்றவற்றையும் எப்போதும் உயர்வாகப் போற்றி வருபவர். சிலம்பையும், தொல்காப்பியத்தையும் இரு கண்களெனக் கருதுபவர். ஒவ்வொரு தமிழர் இல்லத்திலும்  இவ்விரண்டும் இருத்தல் வேண்டும் என்பதிலும், ஒவ்வொரு தமிழனும்  இவற்றின் பெருமையை உணர்ந்திருத்தல் வேண்டும் என்பதிலும் நாட்டம் கொண்டவர்அதற்கான வழிவகைகளையும் சிந்தித்து, செயல்படுத்தி  வருபவர். அவரின்  ‘தொல்காப்பியம்- தெளிவுரைஇவ்வகை முயற்சிகளுள் ஒன்று எனலாம்.

நூல் பெருமை சுட்டல்

நூலுக்கு உரைகாண்போர் தாம் எடுத்துக்கொண்ட நூலின் பெருமையினை, தன்மையினை வெளிப்படுத்துவது நூலுக்குச் செய்யும் சிறப்பாகும். தொல்காப்பியத்தின் பழமையைப், பெருமையைக் கூறுமிடத்து ஆசிரியர்,  'தொல்காப்பியம் என்ற சொல் நூலைக் குறிக்கும் போது ஒரு சொல் நீர்மைத்து. பொருளை விளக்கும் போது அதைத் தொல்+காப்பு+இயம் என்று முச்சொற்களாகப் பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். பழமையைத் தொன்மையைக் காத்து இயம்புவது என்று பொருள் பெறும். தமிழரின் தொன்மையைப் பழமையைக் காத்து இயம்பும் நூல்என்று குறிப்பிடுகிறார். இது அவரின் தொல்காப்பிய ஈடுபாட்டை உணர்த்தி நிற்கிறதுமேலும், 'தொல்காப்பியம் மனிதப் பண்பாட்டின் விதையாகவும், உலகப் பொது நூலாகவும், அதை ஆழ்ந்து நுணுகிப் பார்க்கும்போது தோன்றுகிறது' என்கிறார். இக்கருத்து தொல்காப்பியத்தை ஒரு குறுகிய எல்லைக்குள் சுருக்காது, உலகப் பொது நோக்கில் காண வேண்டும் என்ற  ஆசிரியரின் தொலைநோக்கை வெளிக்காட்டி நிற்கிறது.

தொல்காப்பியப் பழமை பற்றிக் கூறும் ஆசிரியர், 'தொல்காப்பியம் தோன்றிய காலத்தில் இந்திய மொழிகளிலோ, ஏன், உலக மொழிகளிலோ அது போன்ற ஒரு நூல் தோன்றியதில்லை' என்கிறார். மேலும், 'தமிழ் இலக்கியம் தொல்காப்பிய காலத்துக்கு முன் குறைந்தது  ஐந்தாயிரம் ஆண்டுகளாவது முழுநிலை பெற்று வளம் பெற்றிருக்க வேண்டும்' என்பது இவரின் கருத்து. இக்கருத்து ஆசிரியரின் தொல்காப்பிய மேன்மையையும், சங்க இலக்கியத் தொன்மையையும், ஆசிரியரின் கால ஆய்வு பற்றிய சிந்தனையையும்  வெளிக்காட்டுகிறது.

தொல்காப்பிய இலக்கண வளம் பற்றிக் கூறுமிடத்து, 'இலக்கணங்கள் பலவகைப்படும். விளக்கவியல் இலக்கணம், வரலாற்றிலக்கணம், விதிகள் கூறும் இலக்கணம், மாற்றிலக்கணம், மரபிலக்கணம் போன்று. இவை அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது தொல்காப்பியம். மொழிக்கு இலக்கணம் வேறு; வாழ்வுக்கு இலக்கணம் வேறு; இரண்டையும் இணைத்துப் பேசுகிறது தொல்காப்பியம்' என்பதைச் சுட்டுகிறார்.

தொல்காப்பியத் தொலைநோக்கு

ஒரு மொழியின் இலக்கணக் கட்டமைப்பு பெரும்பான்மை அம்மொழிக்கு மட்டும் பொருந்துவது இயல்பு. மொழிக்கு மட்டும் இலக்கணம் என்றில்லாமல், அம்மொழி பேசும் மக்களின் வாழ்க்கைக்கும் இலக்கணம் கூறும் தொல்காப்பியத்தை, தமிழ் மொழி பேசுவோர் மட்டுமின்றி, உலக சமூகத்திற்கும் பொருத்திப் பார்ப்பது சிறப்பு. இத்தன்மை இலக்கணத்தின் வளமையை, தொலைநோக்குத் தன்மையை, பழந்தமிழரின் பண்பட்ட வாழ்வினைப் பறைசாற்றுவதாக அமைகிறது. இவ்வகையில், தொல்காப்பியத்தில் சுட்டும் சில கூறுகள் தமிழர்க்கு மட்டும் உரியதல்ல. தொல்காப்பியத்தில் ஐம்பது விழுக்காட்டிற்கு மேல் உலகப் பொதுப் பார்வைதான் என்கிறார் ஆசிரியர். இதற்கு ஒரு சான்றாக,

'கல்வி தறுகண் இசைமை கொடைஎனச்

சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே'

என்பதைச் சுட்டுகிறார். மனிதகுலத்துக்குப் பெருமிதம் ஏற்படுவதற்கு அடிப்படையானவை கற்ற கல்வி, எதற்கும் அஞ்சாத பண்பாகிய தறுகண், எல்லா நிலைகளாலும் வருகின்ற புகழ், கொடுத்தலாகிய தன்மை. இவை நான்காலும் பெருமிதம் ஏற்படுவது உலக மனிதர்க்குப் பொருந்தும். இது தமிழன் பார்த்த உலகப் பார்வை என்கிறார்.

கருப்பொருளுக்கு இவர் கொடுக்கும் விளக்கம் குறிப்பிடத்தக்கது. இதுபற்றிக் குறிப்பிடும் பொழுது, 'இன்று உலகில் பல விலங்கினங்கள், பறவை இனங்கள் மறைந்து வருகின்றன. அவற்றிற்கு அடிப்படை சுற்றுப்புறச் சூழலே. சுற்றுப்புறச் சூழல் கல்வியைத் தருவதுதான் கருப்பொருள்கள்' என்ற இவரின் கண்ணோட்டம் சிந்திக்கத்தக்கது, சிறப்பு வாய்ந்தது.

தெளிவுரையின் போக்கு

நூற்பாக்களுக்குத் தெளிவுரை எழுதும் இடத்து, கையடக்கப் பதிப்பாயினும்முடிந்த அளவு எல்லா இடங்களிலும் சான்றுகள்என்ற பதிப்பின் நோக்கத்தை நிறைவு செய்திருப்பது சிறப்பிற்குரியது. ஒரு நூற்பாவிற்கு தெளிவுரை எழுதுமிடத்து , அவ்விளக்கத்திற்கு வலுசேர்க்கும், அல்லது அந்நூற்பாவோடு தொடர்புடைய பிற நூற்பா இருப்பின், அந்நூற்பாக்களின் எண்களைத் தெளிவுரையில்  கொடுத்திருப்பது நன்மை பயப்பதாக உள்ளது.

நூலின் முகப்புதொல்காப்பியம்-அறிமுகம்என்ற தலைப்பில் தொல்காப்பியப் பெருமை, பழமை, உலகநோக்கு என்பவற்றையும் தொல்காப்பிய அமைப்பினையும் அறிமுகப்படுத்துவதாக அமைகிறது. மேலும், ஒவ்வொரு அதிகாரம் மற்றும் ஒவ்வொரு இயலின்  தொடக்கத்திலும், அவ்வதிகாரம் மற்றும் இயலைப் பற்றிய சிறு அறிமுகத்தை முன்வைக்கிறது. இவ்வமைப்பு படிப்போர்க்கு தெளிவைக் கொடுப்பதாக இருக்கிறது.

ஆய்வு நோக்கு

தொல்காப்பியர் என்பது இயற்பெயரா? புனைப்பெயரா? என்ற ஆய்வில் ஈடுபடும்  ஆசிரியர், 'காப்பியக் குடியில் தொல்காப்பியர் தோன்றினாலும், பழமையைக் காத்து இயம்புவதற்காகப் புனைபெயராகத்தான் தமக்குத் 'தொல்காப்பியன்' எனப்பெயர் வைத்துக் கொண்டார். சிறப்புப் பாயிரத்தில் அதனால்தான் 'தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி' எனக் குறிப்பிடுகிறார். தொல்காப்பியன் எனத் தன் பெயரைத் தோற்றுவித்துக் கொண்டு என்பது பொருள்' எனத் தம் ஆய்வுக் கருத்தை முன் வைக்கிறார்.

உரையாசிரியர்களின் கருத்தோடு மாறுபடும் இடத்து, அவ்வகை நூற்பாக்களின் தெளிவுரையில் தம் கருத்தைச் சுட்டுவதோடு, மேலும் இந்நூற்பா ஆய்விற்கு உரியது  என்று ஆய்வாளரின் சிந்தனைக்கும் விடுவது ஆசிரியரின் தொல்காப்பியப்  புலமையையும்  தெளிவுரையின் சிறப்பையும் புலப்படுத்துவதாக அமைகிறது.

மகன் வினை கிளப்பின் முதனிலை இயற்றே

என்ற நூற்பாவிற்குத் தெளிவுரை கொடுக்குமிடத்து, மகன் வினை என்பது மகன் எதிர்ப்பு என்று கருதி மகன் தாய்க்கலாம் என உரையாசிரியர் சான்று காட்டுவார். அது பொருத்தமாகத் தோன்றவில்லை. இங்கு முதனிலை இயற்றே என்பது வல்லெழுத்து மிகும் என்பது. இந்நூற்பா பற்றி இன்னும் சிந்திக்க வேண்டும் என்கிறார். இதைப்  போலவே, மற்றொரு நூற்பாவிற்கு விளக்கமளிக்குமிடத்து, இந்நூற்பா இன்னும் ஆராயப் பெறுதல் வேண்டும் என்கிறார். ஆய்வில் இன்னும் பல பொருள்கள் தோன்றும் என்பது ஆசிரியர் கருத்து.

சில நூற்பாக்களுக்கு வழங்கும் தெளிவுரையில், உரையாசிரியர்களிடையே மாறுபட்ட கருத்து இருப்பின் அவற்றையும் சுட்டிச் செல்கிறார். ஒன்பது+பத்து =தொண்ணூறு ஆவதற்கு வரும் நூற்பாவினை விளக்குமிடத்து, நூற்பாவின் விளக்கத்தோடு பழைய  வடிவம் தொண்டு+பத்து=தொண்பது என்பது பாவாணர் கருத்து என்று காட்டுகிறார்.

மதிப்பீடு

பத்தாவது வகுப்புப் படித்தவர்களும் தொல்காப்பியத்தைப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற இப்பதிப்பின் அடிப்படை நோக்கமானது  சிறிய, எளிய தெளிவுரையால் நிறைவேற்றப் பட்டுள்ளமையை அறிய முடிகிறது.

நூலின் அமைப்பானது பிற பதிப்புகளில் இருந்து மாறுபட்டு, மு..வின் திருக்குறள் பதிப்பினைப் போன்று கையடக்கப் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளமை புதிய, போற்றுதற்குரிய, நூலினை எல்லோரையும் பயன்படுத்தச்  செய்வதற்கான முயற்சியாகும்.

நூலின் இடப்புறம் நூற்பாவும் , வலப்புறம் தெளிவுரையும் கொடுத்திருப்பதோடு, வரிசை அடிப்படையில் நூற்பாவிற்கும் தெளிவுரைக்கும் எண்கள் இடப்பட்டுள்ளமை படிப்போர்க்கு எளிமையும் தெளிவையும் கொடுப்பதாக அமைகிறது.

முடிந்த அளவு எல்லா இடங்களிலும் சான்றுகள் தரப்பெற்றுள்ளன. எனினும் தேவையான சில நூற்பாக்களுக்குச் சான்றுகள் இல்லாமை சிறு குறையே என்பதை மதிப்பீட்டு  நோக்கில் உணரமுடிகிறது.

எளிமையும், விளக்கமும் கருதி நூற்பாக்களின் பொருண்மையடிப்படையில் துணைத் தலைப்புகள் இடப்பட்டுள்ளமை சிறப்பு.

மாணவர்களின் மயக்கத்தைப் போக்கி, எளிதில் படித்துப் புரிந்துகொள்ளும் பொருட்டு நூற்பா அடிகள் சொல் பிரித்துக் கொடுக்கப்பட்டிருப்பது பயனிப்பதாக உள்ளது.

நூற்பாவிற்கு தெளிவுரை வழங்கும் இடத்து, அந்நூற்பாவோடு தொடர்புடைய அல்லது அந்நூற்பாவிற்கு மேலும் விளக்கம் அளிக்கக்கூடிய வேறு நூற்பாக்கள் இருப்பின் அவற்றின் எண்கள் தெளிவுரையில் கொடுக்கப்பட்டுள்ளன. இத்தன்மை படிப்பவர்களின் நேர சிக்கனத்திற்கும்,   ஆய்வு அடிப்பிடையிலும்  பயனளிப்பதாக அமைகிறது.

தெளிவுரையானது நூற்பாவின் தன்மைக்கேற்ப, சில இடங்களில் பதவுரையாகவும், சில இடங்களில் பொழிப்புரையாகவும், சில இடங்களில் விளக்கவுரையாகவும், சில இடங்களில் திறனாய்வாகவும் அமைந்துள்ளது.

ஆய்வு நோக்கத்திற்கு இப்பதிப்பு ஏற்றதல்ல என்றபோதிலும், உடனடி தரவு காண்பதற்குநூற்பா தேடலுக்கு ஏற்புடையதாக, கையடக்க அமைப்பில் உடன் எடுத்துச் செல்ல ஏதுவாக வடிவமைத்திருப்பது  இதன் சிறப்பு.