திங்கள், 17 ஆகஸ்ட், 2020

அறிவியல் தமிழ் ஆய்வுகள்

 முனைவர் ஆ.மணவழகன், தமிழ்த்துறைத் தலைவர், அறிவியல் (ம) மானிடவியல் புலம், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்.

(தமிழாய்வு - கடந்த காலமும் வருங்காலமும், முதல் பன்னாட்டுக் கருத்தரங்கம், சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ் மொழித்துறை, பிப்ரவரி 14-15, 2007)

 

            கலை, இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம் எதுவாயினும், அதன் பயன் நிறைவு என்பது,  சராசரி மனிதனை அது சென்றடைவதைப் பொறுத்தே அமைகிறது.  சராசரி மனிதனை எளிதில் சென்றடையாத எந்தவொரு கலை, இலக்கியமாயினும், அறிவியல், தொழில்நுட்பமாயினும் அதனால் யாதொரு பயனும் இல்லை. சராசரி மனிதனைச் சென்றடைதல் என்பதில் ‘வெளிக்காட்டு உத்திமுறை’ (Way of Presentation) முக்கியப் பங்காற்றுகிறது. வெளிக்காட்டு உத்திமுறையில், கையாளப்படும் ஊடகம், வழங்கும் வடிவம் என்பவற்றோடு மொழி ஆளுகையின் தேவையும் குறிப்பிடத்தக்கதாக அமைகிறது.  குறிப்பாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிற்கும் சாராசரி மனிதனுக்குமிடையேயான இடைவெளியைக் குறைப்பதில், அவரவர் தாய்மொழி முதன்மை இடத்தைப் பெறுகிறது. ‘மக்கள் உருவாக்கிய மொழி அவர்களது கருத்துகளைத் தெளிவுபடுத்தும் வண்ணம் வளர்ச்சியடைவது அவர்களது முயற்சியைப் பொறுத்து அமையும்’ (அறிவியல் தமிழாக்கம், ப.1)  என்ற கருத்து இங்குச் சுட்டத்தக்கது. எனவே, அறிவியல், தொழில்நுட்பத்தை ஆதாரமாகக் கொண்டு இயங்கும் இன்றைய உலக சூழலில், அவரவர், அவரவர் மொழியில் அதனைக் கைகொள்வது போலவே, தமிழரும் தமிழால் அறிவியல் கருத்துகளைக் கைகொள்ள முனைவது காலத்தின் தேவையாகிறது. அதுவே பயன்பாட்டு நிறைவிற்கு வழி வகுக்கிறது. அறிவியல் கருத்துகளை மொழிபெயர்த்தல் என்ற நிலையிலிருந்து, தமிழிலேயே அறிவியல் படைப்புகளை உருவாக்குதல் என்பது காலத்தேவையாகிறது.

            ஓர் இனம், தலைமுறை தலைமுறையாகக் கண்ட வளர்ச்சிகளின் சாரம் முழுவதையும் வரும் தலைமுறைக்குத் தனது மொழியின் வாயிலாகத்தான் விட்டுச் செல்கிறது. தற்காலம் வரையிலான அறிவு வளர்ச்சி முழுமையையும் தன்னுள் கொண்டு, நாளைய தலைமுறைக்கு அதை வழங்கும் ஆற்றல் ஓர் இனத்தவரின் மொழிக்கு இல்லையெனின் அந்த நாகரிகம் வளர்ச்சி குன்றி, வாழ்விழந்து விடும். நாள்தோறும் மிகுகின்ற வேகத்துடன் வளரும் கல்வியறிவை, நம் மொழியின் துணையாகவல்லது, மற்றொரு மொழியின் துணைகொண்டு, நாமும் பெற்று, அதன்வழியே நமது அடுத்த தலைமுறைக்கும் விட்டுச் செல்கிறோம். இதன் விளைவுகள் நமது நாகரிகமும், பண்பாடும் நசிவதற்குக் காரணமாகிவிடலாம்’ (அறிவியல் தமிழ், வா.செ. குழந்தைசாமி, ப.17) என்பதை வெறும் செய்தியாக நோக்காமல், எச்சரிக்கையாக நோக்குதல் தமிழின, மொழி வளர்ச்சியில் முக்கியத் தேவையாகிறது.

            அறிவியல் வளர்ச்சியின் ஓட்டத்தில்,  நாமும் நம்மை இணைத்துக் கொள்ளுதலும், முன்னேறுதலும் காலத்தின் கட்டாயமாகும். அதற்கு அருந்துணையாக அமையவல்ல தாய்மொழியாகிய தமிழை அறிவியல் மொழியாக வலுவோடு வளர்க்கவேண்டியது இன்றியமையாத் தேவையாகும்.  மேலும், ‘பாதுகாப்பு வேறு; வளர்ச்சி வேறு.  வளர்ச்சிக்குப் பாதுகாப்புத் தேவை. ஆனால், பாதுகாப்பே வளர்ச்சியாகிவிடாது. வேளாண்மைக்கு வேலி தேவைப்படலாம். ஆனால், வேலியே வேளாண்மையாகி விடுவதில்லை. ஒரு இனத்திற்கும் மொழிக்கும் வளர்ச்சியே பாதுகாப்பு  (அறிவியல் தமிழ், வா.செ. குழந்தைசாமி, ப.16) என்ற கருத்தின் அடிப்படையில், இன்றைய சூழலில் தமிழின் வளர்ச்சி என்பதும், தமிழரின் வளர்ச்சி என்பதும் அறிவியல் தமிழின் வளர்ச்சியைச் சார்ந்தே அமையும் என்பது  தெளிவு. எனவே, அறிவியல் தமிழை வளர்ப்பதும், வளப்படுத்துவதும் காலத்தின் கட்டாயமாகிறது.

அறிவியல் தமிழ்

            அறிவியல் தமிழ் என்பது, அறிவியல் துறை சார்ந்த கருத்துகளை அறிவியல் மொழியில் விளக்கும் இயற்றமிழ்  வகை என்பர் (வளரும் தமிழ், ப.162). மேலும் இதனை, தமிழைப் பயிற்று மொழியாக ஏற்றுக்கொண்ட பின் எழும் சில சிக்கல்களைக் களைந்து, பயிலும் கலையில் ஒருவர் முறையே ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சியின் விளைவே அறிவியல் தமிழ். பல துறைகளில் அறிவைப் பெற விழையும் தமிழரின் அறிவுப் பசியைத் தணிக்க எழுந்த பலதுறை நூல்களுள் அமைகின்ற ஒரு வழக்கை அறிவியல் தமிழ் எனலாம் (வளரும் தமிழ், ப.163) என்றும் விளக்குவர். தமிழில் உள்ள அறிவியல் கருத்துகளை வெளிக்கொணர்தல் அறிவியல் தமிழில் ஒருவகை செயலாக்கம் என்றாலும், அறிவியல், தொழில்நுட்பங்களை தமிழில் படைத்தளித்தலே ‘அறிவியல் தமிழாக’ சுட்டப்படுகிறது. இங்கு, மொழிக்கு இரண்டாம் இடமும், அறிவியலுக்கு முதன்மை இடமும் வழங்கப்படுகிறது.

            முயற்சியை வளர்த்து மனிதனைச் செயலுக்குத் தூண்டுவதாய் அறிவியல் சிந்தனை அமைகிறது. இது காலநிலைக்கேற்ற வளர்ச்சி, வளர்ச்சிக்கான மாற்றங்கள், மாற்றங்களுக்கான அணுகுமுறை இவற்றை வழங்குவதோடு, சமுதாயத்தின் தேவையை நிறைவு செய்யும் பணியையும் தூண்டுகிறது (வளரும் தமிழ், ப.162). இவ்வளர்ச்சிகளையும், மாற்றங்களையும், அணுகுமுறைகளையும்  சராசரி மனிதர்க்கும் புரியும் எளிய தமிழில் வெளிப்படுத்துவது ‘அறிவியல் தமிழாகிறது.

தாய்மொழியும் அறிவியல் மொழியும்

            அறிவியலின் வளர்ச்சி என்பதும், தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு என்பதும் தோன்றும் இடங்களால் வேறுபடலாம். ஆனால், அவற்றின் பயன் உலக நோக்கை முன்னிறுத்தியது.  அறிவியலை ஆணிவேராகக் கொண்டு இயங்கும் இன்றைய உலக சூழலில், அறிவியலின் பயனையும், தொழில்நுட்பத்தின் திறனையும் ஒருவர் எளிதில் பெற, அவரின் தாய் மொழியில் அவை வழங்கப்படுதல் வேண்டும்.             உலகமயமாக்கலின் இன்றைய சூழலில், மக்கள் வளமும், நுகர்வோரும் நிறைந்த இந்தியா போன்ற நாடுகள் வெற்றுச் சந்தைகளாக மாறிவரும் இன்றைய சூழலில், அவ்வகைக் கண்டுபிடிப்புகள் பற்றிய அறிவை அவரவர் தாய்மொழியில் கைகொள்ளுதல்  அறிவியல் யுகத்தில் நம்மை இணைப்பதாகிறது. மேலும், அறிவியல், தொழில்நுட்பம் பற்றிய மாயையை உடைப்பதாகவும், சராசரி மனிதனுக்கும் தொழில்நுட்பத்திற்குமான இடைவெளியைக் குறைப்பதாகவும்  இது இஅமைகிறது.

            இக்கருத்தை, ‘உலகின் பல்வேறு பாகங்களிலும் அந்தந்த நாட்டுக்கு இன்றியமையாத அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் கண்டுபிடிப்புகள் உருவாகி வருகின்றன. அதுவே உலகின் பல்வேறு பாகங்களுக்கும் பயன்படக் கூடிய கண்டுபிடிப்புகளாகவும் வளர்ச்சியும், மாற்றமும் பெற்று வருகின்ற, இந்தப் புதுமைகளை, மக்கள் அறிந்து, புரிந்து தன் வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும். அதுவே அறிவியல் வளர்ச்சியின் உண்மையான பயன் ஆகும்’ (இந்திய அறிவியல் தொழில்நுட்பம், ப.233) என்றும்,  புதிய புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான செயல்விளக்கமும், பயன்பாடும் மக்களைச் சென்றடைய மொழி ஓர் ஊடகமாகப் பயன்படுகிறது. இவ்வூடகம் ஒருவரின் தாய் மொழியாக இருக்கும் நிலையில் கருத்துப் பரிமாற்றம் மேலும் சிறப்பானதாகவும், தெளிவானதாவும் எளிமையானதாகவும் அமையும் என்பது திண்ணம் (வளரும் தமிழ், பதிப்புரை) என்றும் வலியுறுத்துவர். ஒரு மொழியின் அகவளர்ச்சி மற்றும் புறவளர்ச்சி என்ற இரு நிலைகளும், அம்மொழி ஏற்றுக்கொள்கின்ற பிறதுறை தொடர்புடைய கருத்துகளின் அடிப்படையில் அமையும் என்பதும்,  இன்று தமிழ் வளர்ச்சி என்பது அறிவியல் தமிழ் வளர்ச்சியை மையமாகக் கொண்டுள்ளது என்பதும் உணரத் தக்கது. மேலும், அறிவியல் தமிழுக்குப் புதிய துறை அன்று. நம் முன்னோர்கள் மருத்துவம், மனையியல், வானவியல், கணிதம், சோதிடவியல், உலோகவியல், பொறியியல்  போன்ற பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டிருந்ததையும் நாம் அறியவேண்டும்.

அறிவியல் கலைச்சொற்கள்

            அறிவியல் தமிழாக்கத்தில் ‘கலைச்சொல்லாக்கம்’ முக்கியப் பங்கினை வகிக்கிறது. குறிப்பிட்ட துறையிலுள்ள கருத்துகளுக்குரிய பொருளை விளக்கப்பயன்படும் சொல்லையே கலைச்சொல் என்று குறிப்பிடுகிறோம். சாதாரண வழக்கில் உள்ள சொற்களே அறிவியலில் சிறப்புப் பொருளைத் தரும்பொழுது கலைச்சொல்லாகிறது (அறிவியல் தமிழ், டி.பத்மனாபன், ப.2) மொழிபெயர்ப்பு, மொழியாக்கம், ஒலிபெயர்ப்பு என்ற மூன்று நிலைகளில் அமையும் கலைச்சொல்லாக்கத்தின் அடிப்படையிலேயே அறிவியல் தமிழாக்கத்தின் பயன் வெளிக்கொணரப்படுகிறது. ‘கருத்துக்களை வரையறைக்குட்பட்டு, துல்லியமாக வெளியிடுவதே அறிவியலின் சிறப்புப் பண்பு. இதற்குத் துணைபுரிவது அந்தந்த அறிவியல் துறையில்  பயன்படும் கலைச்சொற்களே(அறிவியல் தமிழ், டி. பத்மனாபன், ப.2).

            முறையான கலைச்சொல்லாக்கப்பப்பணி 20ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. இராஜாஜி, வெங்கடசுப்பையருடன் சேர்ந்து சேலத்தில் 1916இல் ‘தமிழ் சாஸ்திர பரிபாஷைச் சங்கத்தாரின் பத்திரிகையைத் தோற்றுவித்தார். கலைச் சொல்லாக்கப் பணியில், முதல் கூட்டு முயற்சியாக இதைச் சொல்லலாம் (அறிவியல் தமிழ்,                     வா.செ. குழந்தைசாமி, ப.77-78). இவ்வாறு தொடங்கப்பட்ட கலைச்சொல்லாக்கப்பணி,  இன்று அரசாலும், தனியாராலும் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அறிவியல் தமிழின் வளர்நிலையான கணினித் தமிழில், கணினி கலைச்சொற்களை ஐம்பதாயிரத்திற்கும் மேல் உருவாக்கியுள்ள மணவை முஸ்தபாவின் பணி இங்குக் குறிப்பிடத்தக்கது. அண்ணா பல்கலைக் கழகத்தில் இயங்கும் வளர்தமிழ் மன்றமும் கணினி கலைச்சொல் அகராதி ஒன்றினை வெளியிட்டுள்ளது. பதிப்பகங்கள் சிலவும் இப்பணியில் ஈடுபட்டுள்ளமை அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பதாய் உள்ளது. கணினிக் கலைச்சொல் அகராதி போல, பிற அறிவியல் துறைகளுக்கும் இதுபோன்ற கலைச்சொல் அகராதிகளை உருவாக்குதல் அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு அடிப்படைத் தேவையாகிறது.

அறிவியல் தமிழ் அறிஞர்கள்

            அந்தந்த துறைசார்ந்த அறிஞர்கள் மட்டுமே அவ்வவ்துறைக்கான அறிவியல் தமிழ் கட்டுரைகளை வடித்தல் வேண்டும் என்ற சிலரின் கூற்று ‘அறிவியல் தமிழ் களத்தில்’ ஏற்புடையதாக இல்லை. துறைசார் வல்லுநர்களுக்கு அத்துறைசார் அறிவு வாய்க்கப்பெற்றும் மொழிநடை கைவரப்பெறவில்லையெனின் அவரிடத்திலிருந்துப் பெறப்படும் கருத்து பயன்நிறைவைத் தராமல் போகலாம். பிறதுறை வல்லுநர்கள் சிலர் தமிழ்ப் படைப்பிலக்கியத்தில் சிறந்து விளங்குதல்போல, மொழிநடை வாய்க்கப்பெற்ற தமிழரிஞர்களும், ஆய்வாளர்களும் தகுந்த ஆதாரத்தோடும், ஏற்றுக்கொள்ளப்பட்ட, பண்படுத்தப்பட்ட கலைச் சொற்களின் பயன்பாட்டோடும், துறைசார் அறிவோடும் உருவாக்கப்படும் அறிவியல் தமிழ் படைப்புகள் பயன் நிறைவைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்¬லை. அதே வேளையில் ‘அறிவியல் ஈடுபாடே இல்லாத ஒருவர் பொருளுக்காகத் துணுக்குகளை எவ்வித பிரக்ஞையுமின்றித் தொகுத்தும், தமிழ்ப்பற்று இன்றி அறிவியல் பலதுறைக் கட்டுரைகளை எந்திரமாக மொழிபெயர்த்தும் நூல் எழுதுவது அறிவியல் தமிழுக்கு அணி சேர்க்காது’ (அறிவியலும் இலக்கியமும் - சில மதிப்பீடுகள், ப. 18)  என்ற உண்மையை மறுத்தற்கில்லை.

அறிவியல் சொற்களை உருவாக்குவதில் அறிவியலில் ஈடுபாடும், தேர்ச்சியும் பெற்றிருப்பதும், தமிழ்மொழி அமைப்பிலும், நடையிலும்  தேர்ச்சிப் பெற்றிருப்பதும் தேவையாகிறது. எனவே, அறிவியல் தமிழ் படைப்பில் அறிவியல் அறிஞர்கள் மற்றும் தமிழறிஞர்களின் கூட்டு முயற்சி இங்கு வலியுறுத்தப்படுகிறது. அறிவியல் தமிழாக்கத்தில் தமிழறிஞர்களை நாடுதல் தேவையற்றது என்ற சிலரின் கூற்றும், செயலும் அறிவியல் தமிழ் வளர்ச்சியில் தேக்கத்தை விளைவிக்கும் என்பதை உணரவேண்டும்.

அறிவியல் தமிழாக்கம்

            அறிவியல் தமிழாக்கம் என்பதில், அறிவியல் தமிழில் கட்டுரைகளும் நூல்களும் வெறும் மொழிபெயர்ப்புகளாக வெளிவந்துகொண்டிருந்த நிலை மாறி, தமிழிலேயே அறிவியல் படைப்புகளை உருவாக்கும் பரவலான நிலையை இன்று காணமுடிகிறது.  ‘தமிழில் அறிவியல் எழுதுவோரைக் காட்டிலும், அறிவியல் பற்றி எழுதுவோரும், பேசுவோரும் பெருகிவிட்டனர். அதனாலேயே இத்தருணத்தில் தமிழகத்தின் பல்துறை அறிவியல், பொறியியல், பேராசிரியர்கள் தம்தம் துறைசார் அறிவியல் ஆய்வுகளைத் தமிழில் வழங்க முன் வந்திருப்பது பாராட்டுக்குரியது’ (அறிவியலும் இலக்கியமும், சில மதிப்பீடுகள், ப.24).

அறிவியல் தமிழாக்கம் என்பதற்கான ஒரு முறையான வரையறை இதுவரை இல்லை. பலரும் தங்களுக்கான நடையில், தங்களின் துறைசார் அறிவினைக் கொண்டு அறிவியல் தமிழாக்கத்தினைச் செய்து வருகின்றனர். அதேவேளை, அறிவியல் தமிழாக்கத்தினை ஒரு வரையறைக்குள் கொண்டுவருதலும் ஏற்புடையதாகப்படவில்லை. அறிவியல் தமிழ் என்பது, பல்துறைத் தொகுப்பாக விளங்குதலே இதற்குக் காரணம் எனலாம். மேலும், ‘கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை போன்ற அறிவியல் துறைகட்கும் தனிநடை உண்டு. சொல்லமைப்பு உண்டு; மரபு உண்டு. எனவே அறிவியல் நூல்களைத் தமிழில் எழுதுவது என்பது தமிழில் இலக்கியம் படைப்பதாகும். அதற்கான இலக்கணம் உருவாக வேண்டும். பாரம்பரியம் வளரவேண்டும். இவை பல நூல்கள் வெளிவருவதன் மூலம்தான், வெளிவந்த பின்தான் உருவாக இயலும் (அறிவியல் தமிழ், வா.செ. குழந்தைசாமி, ப.61) என்ற கருத்து இங்கு எண்ணத்தக்கது.

ஆயினும், அறிவியல் தமிழாக்க முயற்சிகளில் சில தன்மைகளை அறிஞர்கள் சுட்டுகின்றனர். அறிவியல் தமிழ்ப் படைப்புகளில், ஆகவே, எனவே, எனின், பின்பு - போன்ற சலிப்புச் சொற்களை மீண்டும் மூண்டும் பயன்படுத்தக் கூடாது (அறிவியல் தமிழ்,             டி.பத்மனாபன், ப.37). ‘அறிவியலைச் சுமந்து வரும் தமிழாகிய அறிவியல் தமிழுக்கு கலைச் சொல்லாக்கம் (Technical word) முதன்மையானது. அடுத்து, அதன் உள்ளடக்கம் (Contents), மூன்றாவது பொருள் விளக்க நடை (Style)(அறிவியலும் இலக்கியமும் - சில மதிப்பீடுகள்,  ப.14) இவற்றில் கவனம் செலுத்த வலியுறுத்தப்படுகிறது.

அறிவியல் தமிழை, அறிவியல் செய்திக் குறிப்புகள், அறிவியல் தகவல் கட்டுரைகள், தொழில்நுட்ப ஆய்வுரைகள் என்ற வடிவில் குறிப்பிட்ட பொருண்மையை உள்ளடக்கியும்,  அறிவியல் நூல்கள் என்ற வடிவில், ஒன்றுக்கு மேற்பட்ட பொருண்மைகளை உள்ளடக்கியும் வழங்கலாம்.  ஆனால், இவை ஒவ்வொன்றிற்குமான வெளிப்பாட்டு உத்தி முறைகளில்  வேறுபாடு இருத்தலை அறியவேண்டும். மேலும், செய்தி சென்றடையும் பயனாளரைப் பொருத்தும், அதாவது, சராசரி மனிதர், ஆர்வலர், ஆய்வாளர், அறிஞர் என்ற நிலையிலும்  அறிவியல் தமிழாக்கப் படைப்புகளை வேறுபடுத்தி வழங்குதல் பயனிறைவிற்கு வழிவகுக்கும். 

அறிவியல் தமிழ் வளர்க்கும் இதழ்கள் மற்றும் அமைப்புகள்

முதல் அறிவியல் இதழ் 1831ஆம் ஆண்டு வெளிவந்த ‘தமிழ்மேகசின்’ என்ற தமிழ்மாத இதழ், இது தமிழில் அறிவியல் கருத்துகளை வெளியிட முடியும் என்ற நம்பிக்கை வலுப்பெற உதவியது (வளரும் தமிழ், ப.42). 1933இல் தொடங்கப்பட்ட ‘தமிழ்க்கடல்’ என்ற இதழ் தன் நோக்கத்தை கீழ்க்கண்டவாறு வெளியிட்டது. இவ்விதழ், ‘பூமிசாஸ்திரம், வானசாஸ்திரம், தாவரசாஸ்திரம், ராஸாயனசாஸ்திரம், பௌதீகசாஸ்திரம் முதலியவற்றை மக்களுக்கு சொல்லும்’ என்று குறிப்பிட்டது (வளரும் தமிழ், அணிந்துரை). அறிவியல் தமிழை முதன்மை நோக்கமாக கொண்ட இதழாக இது அறியப்படுகிறது. தற்போது,   கலைக்கதிர், யுனஸ்கோ கூரியர், அமுதசுரபி,  செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், தமிழ்க்கலை, தமிழ்ப்பொழில், கலைமகள், தாமரை, மஞ்சரி போன்ற இதழ்கள் பொது பொருண்மையில் அறிவியல் தமிழிற்கு வாய்ப்பளித்து வளர்த்து வருகின்றன. இவையல்லாமல், இளம் விஞ்ஞானி, மருத்துவமலர், சித்த மருத்துவம், மருத்துவர், கால்நடைக் கதிர், வளரும் வேளாண்மை, நவீன வேளாண்மை, நிலவளம், மூலிகை மணி, ஆரோக்கியம், தமிழ்க் கம்யூட்டர் முதலிய இதழ்கள் அறிவியல் துறைகளைத் தனித்தனியாகக் கொண்டுள்ளன.

இதேபோல, ‘களஞ்சியம்’ இதழ்  அண்ணா பல்கலைக்கழக  வளர்தமிழ் மன்றத்தின் மூலமும், ‘துளி’ இதழ், தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் தமிழ்த்துறை மூலமும், ‘அறிவியல் பலகணி’ (மொழி அறிவியல் ஆய்வேடு)  இதழ், தொல் அறிவியல் துறை மூலமும் வெளிவந்து அறிவியல் தமிழ்ப்பணி ஆற்றுகின்றன. தமிழ்ப் பல்கலைக் கழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும்,  ‘அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம்’ என்ற அமைப்பு அறிவியல் தமிழ் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிவருதல் குறிப்பிடத்தக்கது. இவ்வமைப்பு, 1988 முதல் 2006 வரை தொடர்ச்சியாக அறிவியல் தமிழ் கருத்தரங்குகளை நடத்தி, சுமார் 25 நூல்களை வெளியிட்டுள்ளது அறிவியல் தமிழ் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைகிறது. மேலும், ‘பொறியியல் தொழில்நுட்பம்’(1993¢), ‘மருத்துவ அறிவியல் வளர்ச்சி’ (1994), ‘சுற்றுச் சூழல் பாதுகாப்பு’(1995), ‘தகவல் தொடர்பியல்’ (1999), ‘வேளாண் அறிவியல் வளர்ச்சி’ (2000), ‘கல்வி நுட்பவியல்’ (2001), ‘உயிர் தொழில் நுட்பவியல்’ (2002), ‘இணையத் தமிழ்’(2003) ஆகிய சிறப்பு பொருண்மைகளில் கருத்தரங்குகளை நடத்தி நூலாக வெளியிட்டுள்ளது சுட்டத்தக்கது.

அறிவியல் தமிழும் எதிர்காலவியலும்

இன்று அறிவியலும், தொழில்நுட்பமும் வாழ்க்கை முறையில் இரண்டறக் கலந்து விட்டன. இந்தத் துறைகள் சார்ந்த செய்திகளை அனைவருக்கும் எட்டச் செய்ய, அவற்றின் பயனை அனைவரும் அறிய, நுகர அறிவியல் தமிழ் விரைந்து வளரவேண்டியுள்ளது. ‘அறிவியல், தொழில்நுட்பத்துறைகள் நம் பண்பாட்டின் கூறாக அமைய வேண்டும். அன்றாட வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக இருக்க வேண்டும். வேற்றுமொழி சார்ந்ததாகவும், பொதுமக்களின் பண்பாட்டுக்கும், அன்றாட வாழ்வியலுக்கும் சற்றே புறப்பானதாகவும் இருக்கும் வரை அறிவியலுக்கும், தொழில்நுட்பத்திற்கும் பயன் இருக்காது (இந்திய அறிவியல் தொழில்நுட்பம், ப.236-37). எனவே, இத்துறையில் விரைந்து செயலாற்றுதல் தமிழின் எதிர்காலத்திற்கும், தமிழரின் எதிர்காலத்திற்கும் வளமூட்டுவதாக அமையும். 

            நமது நாட்டில் அறிவியல் அறிஞர்கள் இருக்கிறார்கள். அறிவியல் கல்வி இருக்கிறது. அறிவியல் ஆய்வுகள் நடைபெறுகின்றன. அறிவியல் ஆய்வு நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால், இவை நமது மொழியில் இல்லை(அறிவியல் தமிழ், வா.செ. குழந்தைசாமி, ப.58) என்ற நிலை தற்போது மெல்ல மாறிவருதலைக் காணமுடிகிறது. அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழக கருத்தரங்குகளில் மட்டும் சுமார் நானூற்றிற்கும் மேற்பட்ட அறிவியல் துறை சார்ந்த அறிஞர்கள் தமிழில் அறிவியலை எழுதுமளவிற்கு ஊக்கப்படுத்தப்பட்டுள்ளதை அறியமுடிகிறது. வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சி, அதனால் ஏற்படும் அரசியல் சமூக மாற்றங்கள் ஆகியவை இலக்கியங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டன. அதனால் தமிழ் ஆய்வு எல்லைகள் விரிந்துவிட்டன. இலக்கண இலக்கியங்களை மட்டும் ஆய்வு எல்லைகளாகக் கொண்டிருந்த நிலைமாறி பிறதுறைகளையும் தன் வயப்படுத்திக் கொண்டது தமிழ்மொழி. எனவே, தமிழ் அறிஞர்களும் பிறதுறை அறிஞர்களும் இணைந்தே அறிவியல் தமிழ் ஆய்வுகளை வளர்த்தெடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

            அறிவியல் தமிழைப் பரப்பும் வழிகள்

            அறிவியல் தமிழைப் பரப்பும் வழிகளாக கீழ்க்கண்டவை இனங்காணப்படுகின்றன

1.         கட்டுரைகள், குறிப்புரைகள், கருத்துச் சித்திரங்கள், புகைப்படங்கள் உதவியுடன் இதழ், நூல் வழி அறிவியலைக் பரப்புதல். இம்முறையில் வாசகர் தகவல்களைப் படித்து மனத்தில் பதித்துக் கொள்ளவேண்டும்.

2.         வானொலி, மேடைப் பிரசங்கங்கள் வழி அறிவியலைப் பரப்புதல். இது நேயர் கேட்டுப் பயனுற உகந்த வழி

3.         தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் வழி நிகழ்ச்சிகளைக் கண்டும் கேட்டும் துய்த்து பயனுற உணரச் செய்தல்

4.         செய்முறை விளக்க (Demonstration) முகமைகள் மூலம் வகுப்புகள் நடத்தியும், செயல்பாடு மாதிரிகள் (Working Models) இயக்கியும் அறிவியல் பொது நலன்களைப் பரப்புவதாகும்.

5.         படிப்பறிவேயற்றவர்களுக்காக - கார்டூன் ஓவியம், ஊமை நிழற்படங்கள் பயன்படுத்துதல். மேலும், அவர்களுக்குப் புரியும் வகையில் தெருக்கூத்து, பாவைக்கூத்து, வல்லிப்பாட்டு, நாடோடி கானம் போன்ற எளிய நாட்டுப்புறக் கலைகளும் அறவியல் பரவ அரியதோர் ஊடகமாகும்.

            மேற்கண்ட ஐந்து வகைகளிலும், முதல்வகையே அதிக பயனை விளைவிப்பதாக அறியப்படுகிறது. படிக்க, பாதுகாக்க, ஆய்வு மேற்கொள்ள என்ற நிலையில் இது முதன்மைப்படுத்தப்படுகிறது.  அவற்றிற்கு ஊக்கமளிக்கவேண்டியுள்ளது.

பயன் நிறைவிற்கு

            அறிவியல் தமிழின் வளர்ச்சிக்கும், அதன் பயன் அனைவரையும் சென்றடையவும் கீழ்க்கண்ட கருத்துகள் முன்மொழியப்படுகின்றன.    

  • கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும், தனியாகவும் நடத்தப்படும் கருத்தங்குகளில் வழங்கப்படும் அறிவியல் தமிழ் படைப்புகளை, முறையாக தொகுத்து வழங்குதல். அவை, எளிதில் ஓரிடத்தில் கிடைக்க வழிவகை செய்தல்
  • தனியாரால் உருவாக்கப்பட்டிருக்கும் பல்துறை கலைச்சொற்களையும் ஒழுங்குபடுத்தி தொகுத்தல்
  • துறைசார் கலைச்சொற்களை முறைப்படுத்தி வழங்க வல்லுநர் குழுவினை அமைத்தல்
  • பண்படுத்தப்பட்ட, உறுதிப்படுத்தப்பட்ட கலைச்சொற்களை படைப்பாளர்கள் பயன்படுத்த வரையறுத்தல்.
  • அறிவியல் அறிஞர்கள் - தமிழ் அறிஞர்கள் இவர்களுக்கிடையேயான ஒருகிணைப்பை ஏற்படுத்துதல்
  • ஒவ்வொரு துறைக்குமான அறிவியல் தமிழ் குழுவினை ஏற்படுத்துதலோடு, இவற்றின் ஒருங்கிணைப்பு குழு ஒன்றிணையும் அமைத்தல்
  • அறிவியல் தமிழின் பயன் எல்லோரையும் சென்றடையும் வகையில், பல்லூடகத்தின் வழி விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
  • பட்ட வகுப்பில் அறிவியல் தமிழை அறிமுகப்படுத்துதல்

*****

பயன் நூல்கள்

அறிவியல் தமிழ், பதிப். ச. இராமநாதன், இராம. சுந்தரம், கரந்தைத் தமிழ்ச் சங்கம், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், 1995.

அறிவியல் தமிழ், வா.செ. குழந்தைசாமி, பாரதி பதிப்பகம், சென்னை, 1986.

அறிவியல் தமிழ், பதிப். டி.பத்மனாபன், க.மணி, கலைக்கதிர், கோயம்புத்தூர், 2000.

அறிவியல் தமிழ் ஊடகங்கள், பதிப். சா.கிருட்டினமூர்த்தி, ஆ. தசரதன், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம், தஞ்சாவூர், 2004.

அறிவியல் தமிழ் வளர்ச்சி, பதிப். சா. கிருட்டினமூர்த்தி, சா. உதயசூரியன், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம், தஞ்சாவூர், 1999.

அறிவியல் தமிழாக்கம், பதிப். இராம. சுந்தரம், இரா. சபேசன், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம், தஞ்சாவூர், 1997.

அறிவியல் தமிழியல், நெல்லை சு. முத்து, விஜயா பதிப்பகம், சென்னை, 1993.

அறிவியல் தமிழியல் கோவை I & II,  பதிப். க.ப. அறவாணன். ந. சுகுமாரன், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1998.

அறிவியல் தொழில்நுட்ப வரலாறு, ஜே. தர்மராஜ், டென்சி பப்ளிகேஷன்ஸ், இரண்டாம் பதிப்பு, 1998.

அறிவியல் பார்வை, பதிப். டி.பத்மனாபன், க.மணி, கலைக்கதிர், கோயம்புத்தூர், 2001.

அறிவியலும் இலக்கியமும்-சில மதிப்பீடுகள், நெல்லை சு.முத்து, சேகர் பதிப்பகம், சென்னை, 2003.

இந்திய அறிவியல் தொழில்நுட்பம், பதிப். சா. கிருட்டினமூர்த்தி, இராமசுந்தரம், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம், தஞ்சாவூர், 2006.

காலந்தோறும் அறிவியல் தொழில்நுட்பம், பதிப். இரா. சுந்தரம், சா. கிருட்டினமூர்த்தி, அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம், தஞ்சாவூர், 1998.

தமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்,  தொகுப். சிராஜ் உன்னிசா நாசர் மற்றும் பலர், வானதி பதிப்பகம், சென்னை, 2003.

தமிழ்வழி அறிவியல் கல்வி, ஜெயகிருஷ்ணன், காவ்யா பதிப்பகம், சென்னை, 2003.

தமிழ் வளர்ச்சியில் இதழ்கள், பதிப். சா.கிருட்டினமூர்த்தி மற்றும் பலர், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம், தஞ்சாவூர், 2005.

தமிழியலின் எதிர்காலவியல், பாகம் 3, தொகுப். வ.ஜெயதேவன் மற்றும் பலர், கலைஞன் பதிப்பகம், சென்னை, 2006.

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம், மணவை முஸ்தபா, மணவை பப்ளிகேஷன், சென்னை, 1997.

பல்துறைத் தமிழ், பதிப். இராம. சுந்தரம், மற்றும் பலர், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம், தஞ்சாவூர், 2003.

பிறதுறைத் தமிழியல்,  பதிப். இரா. காசிராசன் மற்றும் பலர், ஞாலத்தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம், மதுரை, 2004.

வளர் தமிழ் ஆய்வு I & II, பதிப். சி. மைக்கேல் சரோஜினி பாய் மற்றும் பலர், வளர் தமிழ் ஆய்வு மன்றம், திண்டுக்கல், 2004.

வளரும் தமிழ், பதிப். சா. கிருட்டினமூர்த்தி மற்றும் பலர், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம், தஞ்சாவூர், 2003.

 

www.thamizhiyal.com

Dr.A.Manavazhahan