சனி, 21 டிசம்பர், 2019

தமிழ்க் கற்றல் கற்பித்தலில் சவால்களும் தீர்வுகளும்






சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், 'தமிழ்க் கற்றல் கற்பித்தலில் சவால்களும் தீர்வுகளும்' என்ற தலைப்பிலான பயிலரங்கம் 27.09.2019 அன்று நடைபெற்றது. இப்பயிலரங்கில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சமூகவியல், கலை மற்றும் பண்பாட்டுப்புலப் பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள்
'தமிழியல் பயிற்றுதலில் வரலாறும் பண்பாடும்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

பழமலய் படைப்புலகம்









விழுப்புரம் - 06.10.2019

மக்கள் கவிஞர் பழமலய் படைப்புலகம் குறித்த ஒருநாள் கருத்தரங்கம் 06.10.2019 அன்று விழுப்புரத்தில்  நடைபெற்றது. நிகழ்வில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இணைப் பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள், 'பழமலய் படைப்புகளில் விழுமியங்கள்' என்ற தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார்.

பன்னாட்டுப் பரப்பில் தமிழிலக்கியச் செல்நெறிகள்- பன்னாட்டுத் தமிழ் மாநாடு





சென்னை, 13.10.2019

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் தமிழ்ப் பட்டறை இலக்கியப் பேரவையும் இணைந்து நடத்திய பன்னாட்டுப் பரப்பில் தமிழிலக்கியச் செல்நெறிகள் என்ற பொருண்மையிலான ’பன்னாட்டுத் தமிழ் மாநாடு’ 13.10.2019 அன்று சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது. நிகழ்விற்குத் தமிழ்ப் பட்டறை இலக்கியப் பேரவையின் நிறுவனர் திரு. சேக்கிழார் அப்பாசாமி அவர்கள் தலைமை தாங்கினார். கவிஞர் மீனா திருப்பதி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின சமூகவியல், கலை மற்றும் பண்பாட்டுப் புலத்தின் இணைப்பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள் தொடக்கவுரை ஆற்றி மாநாட்டினைத் தொடங்கிவைத்தார்

கவிஞர் த.பழமலய் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது











சென்னை, 13.10.2019.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் தமிழ்ப் பட்டறை இலக்கியப் பேரவையும் இணைந்து நடத்திய *பன்னாட்டுப் பரப்பில் தமிழிலக்கியச் செல்நெறிகள்* என்ற பொருண்மையிலான ’பன்னாட்டுத் தமிழ் மாநாடு’ 13.10.2019 அன்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது. நிகழ்விற்குத் தமிழ்ப் பட்டறை இலக்கியப் பேரவையின் நிறுவனர் திரு. சேக்கிழார் அப்பாசாமி அவர்கள் தலைமை தாங்கினார். கவிஞர் மீனா திருப்பதி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, தொடக்கவுரை நிகழ்த்தி மாநாட்டினைத் தொடங்கிவைத்தார் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இணைப்பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள். மாநாட்டில் தமிழகம், புதுச்சேரி, டென்மார்க், இலங்கை, சிங்கப்பூர், குவைத், மொரீசியசு, பிரான்சு ஆகிய பகுதிகளிலிருந்து வந்திருந்த ஆய்வாளர்கள் இலக்கியச் செல்நெறிகள் குறித்துச் சிறப்பாக எடுத்துரைத்தனர். மதிய அமர்வில் சுமார் நூறு கவிஞர்கள் பங்கேற்று கவிபாடிய கவியரங்கம் நடைபெற்றது. மாநாட்டின் ஒரு பகுதியாக, தமிழ்ப் பட்டறையின் சார்பில் எட்டு நூல்கள் வெளியிடப்பட்டன. நூல்களைத் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு க.பாண்டியராசன் அவர்களும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்களும் வெளியிட்டனர். நிகழ்வில், மக்கள் கவிஞர் த.பழமலய் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிச் சிறப்புச் செய்தார் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள்.

முனைவர் ஆ.மணவழகன் அவர்களுக்கு நற்றமிழ்க் காவலர் விருது


13.10.2019, சென்னை.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும், தமிழ்ப் பட்டறை இலக்கியப் பேரவையும் இணைந்து நிகழ்த்திய பன்னாட்டுத் தமிழ் மாநாட்டில்,  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்களுக்கு 13.10.2019 அன்று 'நற்றமிழ்க் காவலர்' என்ற  விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. இவ்விருதினை, தமிழ் வளர்ச்சி, பண்பாடு மட்டும் தொல்லியல் துறை அமைச்சர் திரு கா.பாண்டியராசன் அவர்கள் வழங்கினார்.


தமிழர் ஒப்பனைக் கலைகள் - ஆ.மணவழகன்

தமிழர் ஒப்பனைக் கலைகள்
- முனைவர் ஆ.மணவழகன்




சிலப்பதிகாரத்தில் காட்டப்படும் மாதவியின் ஒப்பனைத் திறன் இன்றைக்கும் உலகம் கண்டு வியக்கக்கூடியது. 

பத்துவகை மூலிகைப் பொருட்கள், ஐந்து வகை நறுமணப் பொருட்கள், முப்பத்தியிரண்டு வகை நீராடு மணப் பொருட்களினாலும் ஊறிய நல்ல நீரிலே, வாசனைமிக்க நெய் பூசிய, தன் மணம் மகழும் கரிய கூந்தலை நலம்பெறுமாறு தேய்த்துக் கழுவி நீராடினாள். நீராடியபின், தன் கூந்தலை மணம் மிகுந்த புகைக் காட்டி ஈரம் உலர்த்தினாள். கூந்தலை ஐந்து பகுதிகளாகப் பிரித்து, கத்தூரியின் குழம்பினைத் தடவினாள். 

தன் சிறிய அடிகளிலே செம்பஞ்சுக் குழம்பினைப் பூசினாள். கால்களின் மெல்லிய விரல்களிலே மகரவாய் மோதிரம், பீலி, காலாழி போன்ற அணிகளை அணிந்தாள். காலுக்குப் பொருத்தமான பரியகம், நூபுரம், பாடகம், சதங்கை, அரியகம் முதலான அணிகலன்களை அணிந்துகொண்டாள். திரண்ட தொடைகளுக்கு குறங்குசெறி என்னும் அணியை அணிந்தாள். 

அளவில் பெரிய முத்துக்கள் முப்பத்தியிரண்டால் கோவையாகத் தொடுக்கப்பட்ட விசிரிகை என்னும் அணியினை, தன் இடையை அலங்கரித்த, பூ வேலைப்பாடு செய்த நீலப் பட்டாடையின் மீது மேகலையாக அணிந்தாள். அழகான கண்டிகையோடு பின்னிக் கட்டிய தூய மணிகள் சேர்த்துக் கோர்த்த முத்து வளையைத் தன் தோளுக்கு அணிந்தாள். 

மாணிக்க மணிகளுடன், வயிரங்கள் பதித்துவைத்த சித்திர வேலைப்பாடமைந்த சூடகம், செம்பொன்னால் ஆன வளையல்கள், நவமணி வளையல்கள், சங்கு வளையல்கள், பவகை பவழ வளையல்கள் ஆகியவற்றை மெல்லிய மயிரினை உடைய தன் முன்கைகளில் பொருந்துமாறு அணிந்தாள். வாளை மீனின் பிளந்த வாயைப் போன்ற வாயகன்ற முடக்கு மோதிரம், செந்நிற ஓளிவீசும் மாணிக்கம், கிளர்மணி மோதிரம், சுற்றிலும் ஒளிபரப்பும் மரகதத் தாள்செறி ஆகியவற்றைக் காந்தள் மலர் போன்ற தன் மெல்லிய விரல்கள் முழுவதும் மறைக்கும்படி அணிந்தாள். 

வீரச்சங்கிலி, நுண்ணியத் தொடர் சங்கிலி, பூணப்படும் சரடு, புனைவேலைகள் அமைந்த சவடி, சரப்பளி போன்ற அணிகளை கழுத்திலே கிடந்த முத்து ஆரத்துடன் அணிந்தாள். சங்கிலிகள் முழுவதையும் ஒன்றாய் இணைத்துப் பூட்டிய கொக்கி ஒன்றில் இருந்து பின்புறமாய் சரிந்து தொங்கிய, அழகிய தூய மணிகளால் செய்யப்பட்ட கோவை அவள் கழுத்தை மறைத்துக் கிடந்தது. 

இந்திர நீலத்துடன் இடையிடையே சந்திரபாணி என்னும் வயிரங்கள் பதித்துக் கட்டப்பட்ட, குதம்பை என்னும் அணியை இரு காதுகளிலும் அழகுற அணிந்தாள். சிறந்த வேலைப்பாடு அமைந்த வலம்புரிசங்கு, தொய்யகம், புல்லகம் இவற்றைத் தன் கரிய நீண்ட கூந்தலில் அழகுற அணிந்து கொண்டாள் என்று மாதவியின் வாயிலாகத் தமிழரின் ஒப்பனைக் கலைத்திறனை அதன் நுட்பங்களோடு அழகுற காட்சிப்படுத்துகிறார் இளங்கோவடிகள். 


தமிழர் மரபு அறிவியல்: ஆவணமாக்கலும் மீட்டுருவாக்கமும்

கேரளப் பல்கலைக்கழகத்தின் *மனோன்மணியம் சுந்தரனார் திராவிடப் பண்பாட்டு மையம்* 14.12.2019 அன்று நிகழ்த்திய தேசியப் பயிலரங்கில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள் பங்கேற்று, 'தமிழர் மரபு அறிவியல்: ஆவணமாக்கலும் மீட்டுருவாக்கமும்' என்று தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.






புத்திலக்கியங்களில் தமிழ்ச் சமூக விழுமியங்கள் - தேசியக் கருத்தரங்கம்




தமிழ்நாடு அரசு நிதிநல்கையுடன்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்
சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலமும்
 ஐவனம் - தமிழியல் ஆய்வு நடுவமும்
இணைந்து நிகழ்த்தும்

தேசியக் கருத்தரங்கம்

“புத்திலக்கியங்களில் தமிழ்ச் சமூக விழுமியங்கள்”

                                              திருவள்ளுவராண்டு  2050, மார்கழி 02                                                                     
   திசம்பர்  18, 2019 புதன்கிழமை


ஒருங்கிணைப்பு
முனைவர் ஆ.மணவழகன்
இணைப் பேராசிரியர்
சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தரமணி, சென்னை-600113.




                                                                                                     

புத்திலக்கியங்களில் தமிழ்ச் சமூக விழுமியங்கள்


புத்திலக்கியங்களில் தமிழ்ச் சமூக விழுமியங்கள்
தேசியக் கருத்தரங்கம்
18.12.2019




            தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சமூகவியல், கலை மற்றும் பண்பாட்டுப் புலமும், தமிழியல் ஆய்வு நடுவமும் இணைந்து நடத்திய ’புத்திலக்கியங்களில் தமிழ்ச் சமூக விழுமியங்கள்’ என்ற தேசியக் கருத்தரங்கம் சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நேற்று நடைபெற்றது. நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் நிகழ்விற்குத் தலைமை தாங்கினார். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள் நோக்கவுரை வழங்கினார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் நாட்டுப்புறவியல் தலைவர் முனைவர் ஆறு.இராமநாதன் அவர்கள் மாநாட்டுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல்களை வெளியிட்டு தொடக்கவுரை ஆற்றினார். கருத்தரங்க நிறைவுவிழாவில் கவிஞர் ஆண்டார் பிரியதர்சினி அவர்கள் நிறைவுரை ஆற்றி ஆய்வாளர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கினார்.

       நோக்கவுரை வழங்கிய முனைவர் ஆ.மணவழகன் அவர்கள், உலகின் மிகப் பழமையான இனக்குழுக்கள், தம்மைச் செழுமை படுத்திக்கொள்ள காலந்தோறும் பலவிதக் கற்பிதங்களை உருவாக்கியுள்ளன. அவை நெறிப்படுத்துதல், தற்காத்துக்கொள்ளுதல், தக்கவைத்துக் கொள்ளுதல், தனித்துக்காட்டல் போன்றவற்றை நோக்கங்களாகக் கொண்டவை.  சமகால தேவையின் அடிப்படையில் உருவாக்கப்படும் இவ்விதக் கற்பிதங்கள் கால ஓட்டத்தில் எதிர்நிலை விளைவுகளையும் ஏற்படுத்தலாம். ஆனால், யுகங்கள் பல கடந்தும் மனித  வாழ்வியலைச் செழுமைபடுத்தும் சிந்தனைகள் விழுமியங்களாக எஞ்சி நிற்கின்றன. காலத்திற்கும், பட்டறிவிற்கும் ஏற்ப இவை கோட்பாடுகளாகவும், வரையறைகளாகவும் உருவம்பெறுகின்றன. சுருங்கக் கூறின், ஒரு பண்பட்ட, தொன்மையான இனக்குழு எவற்றைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று போராடுகிறதோ, எவற்றை இழந்துவிட்டதாக வருந்துகிறதோ அவ்வகை நடத்தைகள் அல்லது கற்பிதங்களே விழுமியங்களாகின்றன.

            பொதுவாக விழுமியங்கள் குறித்த நம் தேடல்களும் மரபு இலக்கியங்களைக் களமாகக் கொண்டே அமைகின்றன. தமிழ்ச் சமூக விழுமியங்களைத் தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் பதிவுசெய்துள்ளன. விருந்தோம்பல், கொடை, வீரம், மானம், வடக்கிருத்தல், ஈகை, அன்பு, உயிரிரக்கம், அறநெறி போன்ற உயர் பண்பு நெறிகளைச் சுட்டும் இலக்கியங்களாக அவை இருக்கின்றன. ஆயினும், ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகால தமிழ்ச் சமூக விழுமியங்களைப் புதின இலக்கியங்களிலும், ஒரு நூற்றாண்டு கால தமிழ்ச் சமூக விழுமியங்களைப் புதுக்கவிதை, சிறுகதை இலக்கிய வடிவங்களிலும் கண்டறியமுடியும் என்கிற கருதுகோள்களை முன்வைத்தே இக்கருத்தரங்கம் நிகழ்த்தப்படுவதாகக் குறிப்பிட்டார்.

       தொடக்கவுரையாற்றிய முனைவர் ஆறு. இராமநாதன் அவர்கள் தமது உரையில், உலகில் மனித இனக்குழுக்கள் ஒவ்வொன்றும் தனக்கெனத் தனித்த அடையாளங்களைக் கொண்டுள்ளன. அனைத்திற்கும் பொதுவாக விழுமியங்கள் என்ற ஒன்றை நாம் வரையறுப்பது கடினம். ஒரு இனக்குழுவில் கொண்டாடப்படும் ஒரு பண்பு அல்லது நெறி பிற இனக்குழுவிற்குப் பொருந்தாமல் போகலாம். ஆநிரை கவர்தலைச் சங்கச் சமூகம் விழுமியமாகக் கொண்டாடியது. தற்போது இல்லையென்றாலும் அண்மைக்காலம் வரியிலும் தமிழகத்தின் சில பகுதிகளில் ஆநிரை திருட்டு என்பது சில இனக்குழுக்களின் வழக்கத்தில் இருந்தது. அச்செயலை அக்குழுக்கள் வழுவாகக் கருதவில்லை. அப்படி பார்க்கிறபோது தமிழ்ச் சமூகத்திற்கென ஒட்டமொத்த விழுமியங்கள் எவை என்ற கேள்வியும், தமிழ்ச் சமூகத்திற்கே உரிய சிறப்புக் கூறுகள் எவை என்ற கேள்வியும் எழுகின்றன. இவற்றை நாம் புத்திலக்கியப் படைப்புகளில்தான் தேடியாக வேண்டும். அந்த வகையில் இந்த கருத்தரங்கு மிகத் தேவையான ஒன்றாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.   

       நிறைவுரையாற்றிய கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினி அவர்கள், மக்களின் வாழ்வியலைப் உள்ளபடி பதிவு செய்யும் இலக்கியங்களாக இன்றைய நவீன இலக்கியங்கள் உள்ளன. தமிழ்ச் சமூகத்தின் உண்மையான முகத்தை இங்குதான் நாம் காணமுடியும். மேலும், தமிழ்நாட்டிலிருந்து வரும் படைப்புகளை மட்டும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாது, வேலை நிமித்தல் வெளிநாடுகளுக்குச் சென்று அங்கிருக்கும் சூழலை நம் சூழலோடு ஒப்பிட்டு எழுதும் படைப்புகளையும் நாம் பார்க்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.   

 இந்நிகழ்வில், தமிழ்நாடு மட்டுமல்லாமல், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் பங்கேற்கிறார்கள். புதின இலக்கியம், சிறுகதை இலக்கியம், நாவல் இலக்கியம் என்று மூன்று பிரிவுகளில் ஏழு அமர்வுகளாக ஆய்வரங்கம் நிகழ்த்தப்பட்டது. கருத்தரங்க ஆய்வுக் கட்டுரைகள் இரண்டு நூற்தொகுதிகளாக வெளியிடப்பட்டன.           

ஆ.மணவழகன்