- முனைவர் ஆ.மணவழகன்
சிலப்பதிகாரத்தில் காட்டப்படும் மாதவியின் ஒப்பனைத் திறன் இன்றைக்கும் உலகம் கண்டு வியக்கக்கூடியது.
பத்துவகை மூலிகைப் பொருட்கள், ஐந்து வகை நறுமணப் பொருட்கள், முப்பத்தியிரண்டு வகை நீராடு மணப் பொருட்களினாலும் ஊறிய நல்ல நீரிலே, வாசனைமிக்க நெய் பூசிய, தன் மணம் மகழும் கரிய கூந்தலை நலம்பெறுமாறு தேய்த்துக் கழுவி நீராடினாள். நீராடியபின், தன் கூந்தலை மணம் மிகுந்த புகைக் காட்டி ஈரம் உலர்த்தினாள். கூந்தலை ஐந்து பகுதிகளாகப் பிரித்து, கத்தூரியின் குழம்பினைத் தடவினாள்.
தன் சிறிய அடிகளிலே செம்பஞ்சுக் குழம்பினைப் பூசினாள். கால்களின் மெல்லிய விரல்களிலே மகரவாய் மோதிரம், பீலி, காலாழி போன்ற அணிகளை அணிந்தாள். காலுக்குப் பொருத்தமான பரியகம், நூபுரம், பாடகம், சதங்கை, அரியகம் முதலான அணிகலன்களை அணிந்துகொண்டாள். திரண்ட தொடைகளுக்கு குறங்குசெறி என்னும் அணியை அணிந்தாள்.
அளவில் பெரிய முத்துக்கள் முப்பத்தியிரண்டால் கோவையாகத் தொடுக்கப்பட்ட விசிரிகை என்னும் அணியினை, தன் இடையை அலங்கரித்த, பூ வேலைப்பாடு செய்த நீலப் பட்டாடையின் மீது மேகலையாக அணிந்தாள். அழகான கண்டிகையோடு பின்னிக் கட்டிய தூய மணிகள் சேர்த்துக் கோர்த்த முத்து வளையைத் தன் தோளுக்கு அணிந்தாள்.
மாணிக்க மணிகளுடன், வயிரங்கள் பதித்துவைத்த சித்திர வேலைப்பாடமைந்த சூடகம், செம்பொன்னால் ஆன வளையல்கள், நவமணி வளையல்கள், சங்கு வளையல்கள், பவகை பவழ வளையல்கள் ஆகியவற்றை மெல்லிய மயிரினை உடைய தன் முன்கைகளில் பொருந்துமாறு அணிந்தாள். வாளை மீனின் பிளந்த வாயைப் போன்ற வாயகன்ற முடக்கு மோதிரம், செந்நிற ஓளிவீசும் மாணிக்கம், கிளர்மணி மோதிரம், சுற்றிலும் ஒளிபரப்பும் மரகதத் தாள்செறி ஆகியவற்றைக் காந்தள் மலர் போன்ற தன் மெல்லிய விரல்கள் முழுவதும் மறைக்கும்படி அணிந்தாள்.
வீரச்சங்கிலி, நுண்ணியத் தொடர் சங்கிலி, பூணப்படும் சரடு, புனைவேலைகள் அமைந்த சவடி, சரப்பளி போன்ற அணிகளை கழுத்திலே கிடந்த முத்து ஆரத்துடன் அணிந்தாள். சங்கிலிகள் முழுவதையும் ஒன்றாய் இணைத்துப் பூட்டிய கொக்கி ஒன்றில் இருந்து பின்புறமாய் சரிந்து தொங்கிய, அழகிய தூய மணிகளால் செய்யப்பட்ட கோவை அவள் கழுத்தை மறைத்துக் கிடந்தது.
இந்திர நீலத்துடன் இடையிடையே சந்திரபாணி என்னும் வயிரங்கள் பதித்துக் கட்டப்பட்ட, குதம்பை என்னும் அணியை இரு காதுகளிலும் அழகுற அணிந்தாள். சிறந்த வேலைப்பாடு அமைந்த வலம்புரிசங்கு, தொய்யகம், புல்லகம் இவற்றைத் தன் கரிய நீண்ட கூந்தலில் அழகுற அணிந்து கொண்டாள் என்று மாதவியின் வாயிலாகத் தமிழரின் ஒப்பனைக் கலைத்திறனை அதன் நுட்பங்களோடு அழகுற காட்சிப்படுத்துகிறார் இளங்கோவடிகள்.