சனி, 21 டிசம்பர், 2019

கவிஞர் த.பழமலய் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது











சென்னை, 13.10.2019.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் தமிழ்ப் பட்டறை இலக்கியப் பேரவையும் இணைந்து நடத்திய *பன்னாட்டுப் பரப்பில் தமிழிலக்கியச் செல்நெறிகள்* என்ற பொருண்மையிலான ’பன்னாட்டுத் தமிழ் மாநாடு’ 13.10.2019 அன்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது. நிகழ்விற்குத் தமிழ்ப் பட்டறை இலக்கியப் பேரவையின் நிறுவனர் திரு. சேக்கிழார் அப்பாசாமி அவர்கள் தலைமை தாங்கினார். கவிஞர் மீனா திருப்பதி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, தொடக்கவுரை நிகழ்த்தி மாநாட்டினைத் தொடங்கிவைத்தார் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இணைப்பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள். மாநாட்டில் தமிழகம், புதுச்சேரி, டென்மார்க், இலங்கை, சிங்கப்பூர், குவைத், மொரீசியசு, பிரான்சு ஆகிய பகுதிகளிலிருந்து வந்திருந்த ஆய்வாளர்கள் இலக்கியச் செல்நெறிகள் குறித்துச் சிறப்பாக எடுத்துரைத்தனர். மதிய அமர்வில் சுமார் நூறு கவிஞர்கள் பங்கேற்று கவிபாடிய கவியரங்கம் நடைபெற்றது. மாநாட்டின் ஒரு பகுதியாக, தமிழ்ப் பட்டறையின் சார்பில் எட்டு நூல்கள் வெளியிடப்பட்டன. நூல்களைத் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு க.பாண்டியராசன் அவர்களும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்களும் வெளியிட்டனர். நிகழ்வில், மக்கள் கவிஞர் த.பழமலய் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிச் சிறப்புச் செய்தார் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள்.