வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம் - Ancient Tamil's Art Gallery

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம்




பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம்
‘பழந்தமிழரின் சிறப்புகளையெல்லாம் நாட்டுக்கு எடுத்துக்காட்டும் வகையில் சுடுமண் சிற்பம், சுதை சிற்பம் மற்றும் மரம், கல், உலோகம் ஆகியவற்றைக் கொண்டும், படிமங்களாக வடிவமைத்த கலைப்பொருட்களைக் கொண்டும் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்படும்’ என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்தார்கள். அதன்படி, பணிகள் நிறைவுற்று பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம் 01.03.2016 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.



காட்சிப் பொருண்மைகள்

இக்காட்சிக் கூடத்தின் அரங்குகளில் பழந்தமிழரின் வாழ்வியல் சிறப்புகள், பண்பாட்டு விழுமியங்கள், அறிவு நுட்பங்கள், கலைக் கூறுகள், தொழில்நுட்பத் திறன்கள், அரசியல் மேலாண்மை போன்றவற்றை பொதுமக்களுக்கும் பள்ளி-கல்லூரி-ஆய்வு மாணவர்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் வெளிநாட்டினருக்கும் எடுத்துக்காட்டும் விதமாக ஓவியங்கள், நிழற்படங்கள், மரச்சிற்பங்கள், உலோகச் சிற்பங்கள், கற்சிற்பங்கள், சுடுமண் சிற்பங்கள், தோல் கருவிகள், சுதை வடிவங்கள், புடைப்புச் சிற்பங்கள்  போன்றவை எழில்மிகு கலை நயத்துடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

காட்சிக்கூட அரங்குகள்
            தொல்காப்பியர் அரங்கு
            திருவள்ளுவர் அரங்கு
            கபிலர் அரங்கு
            ஔவையார் அரங்கு
            இளங்கோவடிகள் அரங்கு
            கம்பர் அரங்கு
            தமிழ்த்தாய் ஊடக அரங்கு

தொல்காப்பியர் அரங்கு




            தொல்காப்பியர் அரங்கில் தமிழரின் கலைநுட்பங்கள் சிறப்பிடம் பெறுகின்றன. எழில்மிகு கதவு, ஒரே சிற்பத்தின் இருபுறங்களிலும் ஆடலரசியான மாதவி மற்றும் துறவறம் பூண்ட மணிமேகலையின் தோற்றங்கள், எழில்மிகு வடிவமைப்பில் அன்னம், காளை, மரத்தூண்கள், கற்றூண்கள், கற்சங்கிலி, கல்லாலான வசந்த மண்டபம், யானை-காளை இணைந்த வடிவம்,  உலோகத்தாலான தமிழ்த்தாய், கபிலர், ஔவையார், தொல்காப்பியர் சிலைகள், மரத்தாலான நடராசர் சிற்பம் போன்றவையும் பழந்தமிழர் வாழ்வியலைப் படம்பிடிக்கும் பல்வேறு ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன.

திருவள்ளுவர் அரங்கு


          திருவள்ளுவர் அரங்கில், பழந்தமிழரின் உலோகவியல் நுட்பம், மருத்துவ நுட்பம், நெசவுத் தொழில்நுட்பம், போரியல் நுட்பம், நீர் மேலாண்மை, வேளாண் மேலாண்மை, மண்பாண்டத் தொழில்நுட்பம், பண்டைக்கால கல்விமுறை,  ஆகியற்றை எடுத்தியம்பும் ஓவியங்கள், மாதிரி வடிவங்கள், நிழற்படங்கள், கற்சிற்பங்கள், மரச்சிற்பங்கள், உலோகச் சிற்பங்கள், பல்வேறு போர்க்கருவிகள் ஆகியன இடம்பெற்றுள்ளன.

கபிலர் அரங்கு

          கபிலர் அரங்கில், தமிழர் குடும்ப அமைப்பு முறை, பல்வேறு வகையான இல்லப் புழங்குபொருட்கள், ஐந்திணை வாழ்வியல் காட்சிகள், சுடுமண் சிற்பங்கள், இசைக் கருவிகள், தமிழர் அளவைகள், கற்சிற்பங்கள், இலக்கியப் பறவைகளின் வடிவங்கள் போன்றன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஔவையார் அரங்கு


          ஔவையார் அரங்கில், பண்டை அரசர்களின் அறம்-வீரம்-நீதிவழுவாமை-போர்முறை-கொடை போன்ற உயர் பண்புகளும், கோட்டை, அரண்மனை, கோயில்கள், பண்டைய நகரமைப்பு, கல்லணை போன்ற கட்டுமான நுட்பங்களும், மகளிர் வீரம், புறப்புண் நாணுதல், வஞ்சினம் மொழிதல், வடக்கிருத்தல் போன்ற பண்பாட்டுச் சிறப்புகளும் கலைநயத்துடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


இளங்கோவடிகள் அரங்கு

          இளங்கோவடிகள் அரங்கில், பண்டைத் தமிழரின் வெளிநாட்டு வணிகம், வணிக வீதி அமைப்பு, கப்பல் கட்டுமான நுட்பம் போன்றவற்றின் ஓவியங்களும் கலங்கரை விளக்கம், நெசவுக் கருவிகள், நாவாய் போன்ற மாதிரி வடிவங்களும் உலோகக் கருவிகள், வேளாண்மை நுட்பம், நீர் மேலாண்மை  போன்றவற்றின் நிழற்படங்களும் இடம்பெற்றுள்ளன.

கம்பர் அரங்கு

          கம்பர் அரங்கில் பல்வேறு வகையான இசைக்கருவிகள், தமிழகப் பழங்குடிகளின் அரிதான புழங்குபொருட்கள், பல்வேறு சடங்கியில் நிகழ்வுகளின் நிழற்படங்கள், பல்வேறுவகை நாட்டுப்புறக் கலைசார் பொருட்கள், தெருக்கூத்துக் கலைப் பொருட்கள், தமிழினத்தின் தொன்மை, அறிவு நுட்பம் போன்றவற்றை உணர்த்தும் தொல்லியல் கண்டுபிடிப்புகள் போன்றன இடம்பெற்றுள்ளன.

தமிழ்த்தாய் ஊடக அரங்கு

காட்சிக்கூடத்தில் சுமார் 2,300 சதுர அடியில், 56 இருக்கைகள் கொண்ட, நவீனத் தொழில்நுட்பங்களுடன் கூடிய திரையரங்கு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் காட்சிக்கூடத்தைப் பார்வையிடுவதற்கு முன்பாக, பழந்தமிழர் வாழ்வியல், பழந்தமிழர் மருத்துவம், தமிழர் நீர்மேலாண்மை, ஆட்சித்திறன், பழந்தமிழர் போரியல் போன்ற குறும்படங்கள் இத்திரையரங்கில் திரையிட்டுக் காண்பிக்கப்படும்.

சிறப்புகள்

மரபு சிறப்புகளுடன் கூடிய அழகிய நுழைவாயிலுடன், காட்சிக்கூடக் கலைப்பொருள்களின் எழில்மிகு தோற்றத்தை எப்புறத்திலிருந்தும் முழுமையாகக் காணும் வகையிலான ஒளிமிகு மின்விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. தேவையான பொருண்மைகள் முப்பரிமாணத் தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

இக்காட்சிக்கூடம், பழந்தமிழரின் வாழ்வியல் நுட்பங்களைப் பார்வையாளர்கள் கண்டு இன்புறும் வகையிலும், தமிழர் பெருமைகளை உலகோர் உணரும் வகையிலும், இலக்கிய மற்றும் தொல்லியல் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு வகையிலான கலைநுட்பத்துடன்  வடிவமைக்கப்பட்டுள்ளது.

இணையம்
www.pvkk.org

தொடர்புக்கு:

முனைவர் ஆ.மணவழகன்
பொறுப்பாளர்
பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம்
இணைப் பேராசிரியர்
சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தரமணி, சென்னை-600113.

புதன், 3 ஆகஸ்ட், 2016

பதினெண்கீழ்க்கணக்கில் அறிவுத் துறைகளும் மரபுநுட்பங்களும்


பதினெண்கீழ்க்கணக்கில் அறிவுத் துறைகளும் மரபு நுட்பங்களும்
ஆய்வு நூல்,  ஆசிரியர் :முனைவர் ஆ.மணவழகன், 
வெளியீடு : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. 2015
 (தமிழ்நாடு அரசின் சிறந்த ஆய்வு நூலுக்கான பரிசு பெற்றது)


அணிந்துரை 

முனைவர் கோ.விசயராகவன், இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. 

சங்க இலக்கியங்கள், தமிழ்ச் சமூகத்தின் தொன்மை, பண்பாடு,  வாழ்வியல் போன்றவற்றை உலகிற்கு உணர்த்துகின்றன.   தமிழ்ச் சமூகம்  அறிந்து வைத்திருந்த பல்வேறு அறிவு நுட்பங்களுக்கும் இவ்விலக்கியங்களே முதன்மைச் சான்றுகளாகவும் விளங்குகின்றன.   இவ்வுண்மைகளை, இலக்கியங்கள் தொடர்பாக பல்வேறு கோணங்களில் வெளிவந்துகொண்டிருக்கும் ஆய்வுகள் மேலும் மேலும் உறுதிப்படுத்துகின்றன.

அவ்வகையில், சங்க இலக்கியங்களின் தொடர்ச்சியாக அமைந்துள்ள கீழ்க்கணக்கு தொடர்பான ஆய்வு நூலாக ‘பதினெண்கீழ்க்கணக்கில் அறிவுத் துறைகளும் மரபு நுட்பங்களும்’ என்ற இந்நூல் அமைந்துள்ளது. உலகப் பொதுமறையாம் திருக்குறள் தவிர்த்து, ஏனைய கீழ்க்கணக்கு நூல்கள் தொடர்பாக வெளிவந்துள்ள ஆய்வுகள் பெரும்பாலும் அறக்கோட்பாட்டு நோக்கிலேயே அணுகப்பட்டுள்ளன. இச்சூழலில் இந்நூல், சங்கம் மருவிய கால நூல்களில் காணப்படுகிற பழந்தமிழரின் மரபு அறிவுப் பதிவுகளை  மிக நுட்பமாக வெளிப்படுத்துகிறது.

இந்நூலில், வேளாண் அறிவும் மரபு நுட்பங்களும், மருத்துவ நுட்பங்களும் உடல்நல மேலாண்மையும், வானியல் அறிவும் நீர் மேலாண்மையும், கட்டடக்கலை நுட்பங்களும் பயன்பாட்டுப் பொருள்களும், உயிரியல் அறிவும் சூழலியல் மேலாண்மையும்,  உலோகவியல் நுட்பங்களும் கருவிகளும், அரசியல் மேலாண்மையும் ஆளுமைப் பண்பும், சட்டவியல் அணுகுமுறைகள் என்ற பெருந்தலைப்புகளில் தமிழர் அறிந்திருந்த பல்வேறு துறைகளும் மரபு நுட்பங்களும் தக்க சான்றுகளோடு விளக்கப்பட்டுள்ளன.   இதன்வழி,  சங்கம் மருவிய காலத்தில் பல்வேறு அறிவுத் துறைகள் சிறந்திருந்ததையும், அத்துறைகளில் பல்வேறு நுட்பங்கள் கையாளப்பட்டதையும் நூலாசிரியர் முனைவர் ஆ.மணவழகன் வெளிப்படுத்தியுள்ளார்.   தமிழர்களின் மரபு நுட்பங்களை மீட்டுருவாக்கம் செய்ய சிறந்த தரவு நூலாக இது அமைவதோடு, ‘சங்கம் மருவிய காலம் இருண்ட காலம்’ என்ற பொதுவான கூற்றையும் உடைக்கிறது.

முனைவர் ஆ.மணவழகன் அவர்கள், பழந்தமிழ் இலக்கியங்களைச் சமூகவியல் நோக்கில் அணுகுவதோடு,  அக்காலச் சமூகத்தின் மரபு நுட்பங்களையும் மேலாண்மைச் சிந்தனைகளையும் வெளிக்கொண்டுவரும் அரிய முயற்சியில்   தொடர்ந்து  ஈடுபட்டு வருபவர். அந்த வகையில், ‘பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் அறிவுத் துறைகளும் மரபு நுட்பங்களும்’ எனும் தலைப்பில் ஆய்வுத் திட்டம் மேற்கொண்டு, அதனை நூலாக வடித்துள்ள  நூலாசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்களுக்கு  எனது பாராட்டுகள்.

தமிழ்நாடும் தமிழ் மொழியும் தழைத்திடப் பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிற  மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ் வளர்ச்சிக்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளர்ச்சிக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருவதோடு, தம் தனிப்பட்ட அக்கறையைக் காட்டிவரும்பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவருமாகிய  மாண்புமிகு கே.சி. வீரமணி அவர்களுக்கும், தமிழ் வளர்ச்சியில் எங்களை வழிநடத்திவரும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் முனைவர்  மூ. இராசாராம்  இ.ஆ.ப. அவர்களுக்கும் எம் இனிய நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

நூல் வடிவமைப்பு செய்த திருமதி சௌசல்யா அவர்களுக்கும் நூலினை அச்சிட்டுத் தந்த ஏ.கே.எல். அச்சகத்தாருக்கும் எனது பாராட்டுகள்.

*****

நூலறிமுகம்

பிறப்பில் அனைத்து உயிர்களும் ஒன்றாயினும், மரபுச் சிறப்பும் வரலாற்றுப் பெருமையும் அனைத்து உயிர்களுக்கும் ஒன்றாதல் இல்லை. மனித இனத்தில் இவ்வகை மரபுச் சிறப்புகளையும் வரலாற்றுப் பெருமைகளையும் கொண்ட இனமாகத் தமிழினம் திகழ்கிறது.  வெற்றுப் பெருமை என்று இதனைப் புறந்தள்ளிவிட இயலாது.  மேலைநாட்டார், ஐம்பது ஆண்டுகள் பழமைவாய்ந்த கட்டடங்களையெல்லாம்  மரபுச் சின்னங்களாகப் போற்றுகிறபோது, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழஞ்சிறப்புகளைக்கூட நாம் எண்ணிப் பார்ப்பதில்லை; போற்றுவதில்லை; பாதுகாப்பதில்லை. பழமையைப் போற்றுபவர்களாக, அவற்றிலிருந்து பாடம் கற்பவர்களாக, மரபு நுட்பங்களை மீட்டுருவாக்கம் செய்து இயற்கையைக் காப்பவர்களாக, இளைய சமூகத்திற்கு அவற்றைக் கற்றுக்கொடுப்பவர்களாக  இருந்திருந்தால் ‘வெற்றுப் பெருமை பேசுபவர்கள்’ என்ற வீண் தூற்றல் நம்மீது விழுந்திருக்காது.

            பழந்தமிழர்களின் இயற்கையோடு இயைந்த அறிவியலையும், மரபு நுட்பங்களையும் வெளிக்கொணர்ந்து அடையாளப்படுத்தும்மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியின் சிறுகூறே  இந்நூல். பதினெண்கீழ்க்கணக்கில் இடம்பெற்றுள்ள வேளாண்மை, வானியல், நீர் மேலாண்மை, தாவரவியல், விலங்கியல், பறவையியல், பூச்சியியல், மருத்துவம், உடல்நலமேலாண்மை, கட்டடவியல், உலோகவியல், அரசியல், சட்டவியல் எனப் பல அறிவுத் துறைகளையும் அவற்றில் பொதிந்துள்ள பல்வேறு மரபு நுட்பங்களையும் சான்றுகளோடு இந்நூல்   விளக்கிச் செல்கிறது.

            அறச் செய்திகளே  அதிகம் என்ற பொதுக்கருத்தால் அடையாளப்படுத்தப்பட்ட பதினெண்கீழ்க்கணக்கு  நூல்களில், சங்க இலக்கியங்களுக்கு இணையாக அறிவுசார் கருத்துகளும் மரபு நுட்பங்களும் இடம்பெற்றுள்ளன என்ற கருதுகோளை முன்வைத்து, அதன் மெய்ம்மைத் தன்மையை விளக்கமுறை அணுகுமுறையில் இந்நூல் நிறுவுகிறது.   எளிமையும் தேவையும்  கருதி, பாடலடிகள் சில இடங்களில் பதம் பிரித்தும் சில இடங்களில் பதம் பிரிக்காமலும் கொடுக்கப்பட்டுள்ளன.


பழந்தமிழர் தொழில்நுட்பம்’ என்ற என்னுடைய முந்தைய நூல், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுவரும் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடத்தின் பொருண்மைகளுக்கும் காட்சிகளுக்கும் தரவு நூலாக அமைந்தது குறித்து மிகுந்த மகிழ்ச்சி. அந்நூலுக்குச் சங்க இலக்கியங்களே ஆய்வுக் களமாக  அமைந்த நிலையில், தற்போது வெளிவரும் இந்நூலுக்குப் பதினெண்கீழ்கணக்கு நூல்கள் முழுவதும் ஆய்வுக் களமாக  அமைகின்றன. இரு நூல்களிலும் இடம்பெற்றுள்ள அறிவியல் மற்றும் மரபு நுட்பச் செய்திகளை ஒருங்கிணைத்து, முறைப்படுத்தினால் பழந்தமிழரின் அறிவுசார் வாழ்வியல் சிறப்புகளை முழுமையாக அடையாளப்படுத்த  முடியும்.