உலகத்
தமிழாராய்ச்சி நிறுவனம்
பழந்தமிழர்
வாழ்வியல் காட்சிக்கூடம்
‘பழந்தமிழரின் சிறப்புகளையெல்லாம் நாட்டுக்கு எடுத்துக்காட்டும் வகையில் சுடுமண்
சிற்பம், சுதை சிற்பம் மற்றும் மரம், கல், உலோகம் ஆகியவற்றைக் கொண்டும், படிமங்களாக
வடிவமைத்த கலைப்பொருட்களைக் கொண்டும் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம் சென்னை உலகத்
தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்படும்’ என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்தார்கள்.
அதன்படி, பணிகள் நிறைவுற்று பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம் 01.03.2016 அன்று மாண்புமிகு
தமிழ்நாடு முதல்வர் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.
காட்சிப் பொருண்மைகள்
இக்காட்சிக் கூடத்தின் அரங்குகளில் பழந்தமிழரின் வாழ்வியல் சிறப்புகள், பண்பாட்டு விழுமியங்கள்,
அறிவு நுட்பங்கள், கலைக் கூறுகள், தொழில்நுட்பத் திறன்கள், அரசியல் மேலாண்மை போன்றவற்றை
பொதுமக்களுக்கும் பள்ளி-கல்லூரி-ஆய்வு மாணவர்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் வெளிநாட்டினருக்கும் எடுத்துக்காட்டும்
விதமாக ஓவியங்கள், நிழற்படங்கள், மரச்சிற்பங்கள், உலோகச் சிற்பங்கள், கற்சிற்பங்கள்,
சுடுமண் சிற்பங்கள், தோல் கருவிகள், சுதை வடிவங்கள், புடைப்புச் சிற்பங்கள் போன்றவை எழில்மிகு கலை நயத்துடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
காட்சிக்கூட அரங்குகள்
தொல்காப்பியர் அரங்கு
திருவள்ளுவர் அரங்கு
கபிலர் அரங்கு
ஔவையார் அரங்கு
இளங்கோவடிகள் அரங்கு
கம்பர் அரங்கு
தமிழ்த்தாய் ஊடக அரங்கு
தொல்காப்பியர் அரங்கில் தமிழரின் கலைநுட்பங்கள் சிறப்பிடம் பெறுகின்றன.
எழில்மிகு கதவு, ஒரே சிற்பத்தின் இருபுறங்களிலும் ஆடலரசியான மாதவி மற்றும் துறவறம்
பூண்ட மணிமேகலையின் தோற்றங்கள், எழில்மிகு வடிவமைப்பில் அன்னம், காளை, மரத்தூண்கள்,
கற்றூண்கள், கற்சங்கிலி, கல்லாலான வசந்த மண்டபம், யானை-காளை இணைந்த வடிவம், உலோகத்தாலான தமிழ்த்தாய், கபிலர், ஔவையார், தொல்காப்பியர்
சிலைகள், மரத்தாலான நடராசர் சிற்பம் போன்றவையும் பழந்தமிழர் வாழ்வியலைப் படம்பிடிக்கும்
பல்வேறு ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன.
திருவள்ளுவர் அரங்கில், பழந்தமிழரின் உலோகவியல் நுட்பம்,
மருத்துவ நுட்பம், நெசவுத் தொழில்நுட்பம், போரியல் நுட்பம், நீர் மேலாண்மை, வேளாண்
மேலாண்மை, மண்பாண்டத் தொழில்நுட்பம், பண்டைக்கால கல்விமுறை, ஆகியற்றை எடுத்தியம்பும் ஓவியங்கள், மாதிரி வடிவங்கள்,
நிழற்படங்கள், கற்சிற்பங்கள், மரச்சிற்பங்கள், உலோகச் சிற்பங்கள், பல்வேறு போர்க்கருவிகள்
ஆகியன இடம்பெற்றுள்ளன.
கபிலர் அரங்கில், தமிழர் குடும்ப அமைப்பு முறை, பல்வேறு
வகையான இல்லப் புழங்குபொருட்கள், ஐந்திணை வாழ்வியல் காட்சிகள், சுடுமண் சிற்பங்கள்,
இசைக் கருவிகள், தமிழர் அளவைகள், கற்சிற்பங்கள், இலக்கியப் பறவைகளின் வடிவங்கள் போன்றன
காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஔவையார் அரங்கில், பண்டை அரசர்களின் அறம்-வீரம்-நீதிவழுவாமை-போர்முறை-கொடை
போன்ற உயர் பண்புகளும், கோட்டை, அரண்மனை, கோயில்கள், பண்டைய நகரமைப்பு, கல்லணை போன்ற
கட்டுமான நுட்பங்களும், மகளிர் வீரம், புறப்புண் நாணுதல், வஞ்சினம் மொழிதல், வடக்கிருத்தல்
போன்ற பண்பாட்டுச் சிறப்புகளும் கலைநயத்துடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இளங்கோவடிகள் அரங்கில், பண்டைத் தமிழரின் வெளிநாட்டு
வணிகம், வணிக வீதி அமைப்பு, கப்பல் கட்டுமான நுட்பம் போன்றவற்றின் ஓவியங்களும் கலங்கரை
விளக்கம், நெசவுக் கருவிகள், நாவாய் போன்ற மாதிரி வடிவங்களும் உலோகக் கருவிகள், வேளாண்மை
நுட்பம், நீர் மேலாண்மை போன்றவற்றின் நிழற்படங்களும்
இடம்பெற்றுள்ளன.
கம்பர் அரங்கில் பல்வேறு வகையான இசைக்கருவிகள், தமிழகப்
பழங்குடிகளின் அரிதான புழங்குபொருட்கள், பல்வேறு சடங்கியில் நிகழ்வுகளின் நிழற்படங்கள்,
பல்வேறுவகை நாட்டுப்புறக் கலைசார் பொருட்கள், தெருக்கூத்துக் கலைப் பொருட்கள், தமிழினத்தின்
தொன்மை, அறிவு நுட்பம் போன்றவற்றை உணர்த்தும் தொல்லியல் கண்டுபிடிப்புகள் போன்றன இடம்பெற்றுள்ளன.
காட்சிக்கூடத்தில் சுமார் 2,300 சதுர அடியில், 56 இருக்கைகள் கொண்ட, நவீனத் தொழில்நுட்பங்களுடன்
கூடிய திரையரங்கு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் காட்சிக்கூடத்தைப்
பார்வையிடுவதற்கு முன்பாக, பழந்தமிழர் வாழ்வியல், பழந்தமிழர் மருத்துவம், தமிழர் நீர்மேலாண்மை,
ஆட்சித்திறன், பழந்தமிழர் போரியல் போன்ற குறும்படங்கள் இத்திரையரங்கில் திரையிட்டுக்
காண்பிக்கப்படும்.
மரபு சிறப்புகளுடன் கூடிய அழகிய நுழைவாயிலுடன், காட்சிக்கூடக் கலைப்பொருள்களின்
எழில்மிகு தோற்றத்தை எப்புறத்திலிருந்தும் முழுமையாகக் காணும் வகையிலான ஒளிமிகு மின்விளக்குகளும்
பொருத்தப்பட்டுள்ளன. தேவையான பொருண்மைகள் முப்பரிமாணத் தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.
இக்காட்சிக்கூடம், பழந்தமிழரின் வாழ்வியல் நுட்பங்களைப் பார்வையாளர்கள் கண்டு
இன்புறும் வகையிலும், தமிழர் பெருமைகளை உலகோர் உணரும் வகையிலும், இலக்கிய மற்றும் தொல்லியல்
சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு வகையிலான கலைநுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இணையம்
www.pvkk.org
முனைவர் ஆ.மணவழகன்
பொறுப்பாளர்
பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம்
இணைப் பேராசிரியர்
சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தரமணி, சென்னை-600113.
இணையம்
www.pvkk.org
தொடர்புக்கு:
பொறுப்பாளர்
பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம்
இணைப் பேராசிரியர்
சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தரமணி, சென்னை-600113.