நூல்
-
கூடாகும் சுள்ளிகள் (கவிதைத்
தொகுப்பு)
ஆசிரியர் - கவிஞர் ஆ. மணவழகன் (Dr.A.Manavazhahan)
வெளியீடு - அய்யனார் பதிப்பகம்,
சென்னை-88. 2010
மணவழகன் கவிதைகள் குறித்து
கூட்டின் அடிவயிற்றில் மெத்தென்ற
சிறு பஞ்சு மீது...
கவிஞர் இரா.பச்சியப்பன்
கண்காணாத தூரத்தில்
பிழைக்கும்படியான நெடுங்காலம் கடந்த பின்பொழுதொன்றில்,
பால்ய நண்பனோ ஊர்க்காரனோ எதிர்ப்படும்பொழுது மனசின்
அடியாழத்திலிருந்து அப்படியேன் அலையெழும்புகிறது? கரங்கள்
பற்றும் தருணத்தில் துளிர்க்கும் கண்ணீரைச் சட்டென்று ஒதுக்கிவிட முடிகிறதா என்ன?
தனக்குப் பிடித்தமான ஒன்றை எதிர்பாராத கணத்தில் காண நேர்கிறபோது
அவ்வளவு எளிதில் முகம் திருப்பிக்கொள்ள இயலுமா என்ன?
சென்னைக்கு வந்த புதிதில்
மாநிலக்கல்லூரியின் பின்புறத்தில் வௌவால்கள் நிறைந்த அந்த ஆலமரத்தை அடிக்கடி போய்
ஆச்சர்யம் மீதுற பார்த்திருக்கிறேன். ஊரில் இலுப்பைத் தோப்பில் அப்படித்தான் வௌவால்கள்
கொத்துக்கொத்தாய்க் கனிந்திருக்கும். மூங்கில் புதர் வேலியாய் அமைந்த அந்தத்
தோப்பில் கங்கையம்மன் அகண்ட கண்களோடு வௌவால்கள் பறப்பதை,
விளையாடுவதைப் பார்த்துக்கொண்டே இருப்பாள். வௌவால்களின் முகம்
அசப்பில் குழந்தையின் முகம்போலவே தோன்றும். நெடுங்காலத்திற்குப் பிறகு சென்னையில்
நுணா மரத்தைப் பார்க்கிறபோதும் அப்படித்தான் நிற்கத் தோன்றியது. கம்மம்பூக்களின்
வாடையும், நுணாப் பூக்களின் வாசனையும் தொலைத்த வாழ்வில்
எங்காவது அவை தட்டுப்பட்டால் வேறென்னதான் செய்வது?
கவிதைகூட அப்படித்தான் போல.
மெல்லிய இசையாய் நமக்குள் தங்கிவிட்ட ஒரு பொழுதை, காலம் ஆற்றிய பெரும் தழும்பை, மழைக்காலத்தில் பழகிய
நீச்சலை, நேருக்கு நேர் நின்று ஊழ் துப்பிய எச்சிலை என
ஏதேனும் ஒன்றை ஒவ்வொரு கவிதையும் சொல்லிக்கொண்டே இருக்கிறது. கவிதை பறவைகள் போல.
அவை நம்மைப் பொருட்படுத்துவதேயில்லை. அதன் அலகில் இருக்கும் சுள்ளிகளோ, இரையோ நம்மிடமிருந்து யாசித்துப் பெறாதவை. நமக்குப் போல இல்லை. அதற்கென்று
எல்லையற்ற வானமும் சிறுகிளையும் வாய்த்திருக்கிறது. பறவைகள்போல கவிதை
செய்கிறவர்கள் பாக்கிவான்கள். நள்ளிரவொன்றில் குழல்விளக்கு வெளிச்சத்தில் நண்பர்
மணவழகன் கவிதைகளை வாசிக்கிறபோது பறவைகளும் வௌவால்களும் நிறைந்த தோப்பில்
நுழைவதுபோலவே உணர்ந்தேன். சருகு மூடிய குளமும் நாவல் மரத்தின் கிளையொன்றிலிருந்து
சட்டெனப் பாய்ந்து மீனைக் கொத்தியபடி மறுபடி கிளையமர்ந்து தலைசிலிர்ப்பும்
மீன்கொத்தியும், பெரிய மூக்கு விடைக்கும்படி நோக்கும்
கங்கையம்மனும் நெடுநாளைக்குப் பிறகு சந்தித்த ஆச்சர்யம்தான்.
சிறியதும் பெரியதுமான
சற்றேரக்குறைய எழுபது கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. எஸ்.ஆர்.எம்.கல்லூரியில்
பணிபுரிந்த தொடக்க காலத்திலிருந்து என்னுடன் அவர் மனமுவந்து பழகிவந்திருக்கிறார்.
சங்க இலக்கியங்களை வாசித்திருக்கிற, ஆய்ந்திருக்கிற
அவரின் ஆழம் நம்மை தூரவே நிறுத்திவைத்து வியக்க வைக்கும். இடையில் முளைக்கும்
சிறுபுதரை அழித்து, எழுப்பி வைத்திருக்கிற தயக்க வேலியினை
மிதித்துவந்து அவரின் நட்பு வட்டத்தில் நம்மை இணைத்துக் கொண்டதற்கு அவருக்குள்
இருக்கிற படைப்பாளி ஒரு பெரும் காரணமாக இருந்திருக்கலாம். இணையத்தில்
வெகுகாலமாய்க் கவிதைகள் எழுதிவந்திருக்கிறார். இணையத்தில் அவரின் வாசகர் வட்டம்
மிகப்பெரிது.
இளம் ஆய்வாளருக்கான செம்மொழி
விருதினைப் பெற்றிருக்கும் ஒருவருக்குள் இன்னும் அந்தக் கம்மங்கொல்லை குருவிகள்
பறக்க,
காற்றிலாடும் கொல்லை வனப்பு கூடியிருப்பது மிகுந்த ஆச்சர்யம்தான்.
தனியார் கல்லூரியின் வேலைப்பளுக் கிடையில் இத்தனை சாத்தியங்களைக் கொண்டிருப்பது
சாதாரணமானதல்ல.
இந்தத் தொகுப்பினை வசதிக்காக மூன்று வகையாகப்
பகுத்துக்கொள்ளலாம். உருகி உருகிக் காதலிக்கும் நெஞ்சத்தின் உணர்வுகள்;
இழப்பின் காயத்தின்வழி கசியும் துளிகள்; தனக்கான
அரசியலை முழங்கும் பதாகைகள் எனப் பெரும்பான்மையான கவிதைகளை ‘உத்தி’
பிரித்துக்கொள்ளலாம். நெற்கட்டை
அரி அரியாக வைப்பதில் ஓர் அழகு
மட்டுமல்ல ஓர் அவசியமும் இருக்கிறது. ஒரே பக்கம் கதிர்வைத்துக் கட்டுக்
கட்டமுடியாது. சின்னச்சின்ன கட்டாக்கி கட்டுப்போர் போடுவது ஒருவகை. பென்னைப்
பென்னையாய் வைக்கோல் சுமைகட்டி வைக்கோல் போர் போடுவது ஒருவகை. முன்னதில்
தனித்தனியாக எடுக்கவேண்டிய அவசியம் இருப்பதுபோலவே பின்னதில் பின்னிக்கொண்டிருக்க
வேண்டிய அவசியமும் இருக்கிறது. கவிதையைச் சொல்லியிருக்கிற உத்தியும் அதாவது,
கட்டியிருக்கிற பாங்கும் அதனை வரிசைக்கிரமாய்த் தொடுத்திருக்கிற
பாங்கும் மிக நுட்பமானது.
சாக்கடை
நாற்றத்தோடு கழிவுநீர் ஊற்றுகள்
அலங்காரத்திற்கு
மட்டும் அணிவகுக்கும்
பறவைகள்
அமர்ந்தறியா செயற்கை மரங்கள்
முளைக்காத
தானியங்கள்
விதை
கொடுக்காத கனிகள்
உயிரில்லா
முட்டைகள்
தாய்
தந்தை உறவறியா
குளோனிங்
குழந்தைகள்
எனச் சொல்லுகிற ஒரு ஒழுங்குமுறை. மனதுக்குள் இசை
அலையைச் சீராக எழுப்பி கரையில் வந்து அடிப்பதுபோல் கடைசியில் மனிதக் கொடூரத்தின்
முகத்தை எழுதுகிற எழுத்து லாவகம் அடுத்து இப்படிச் செல்கிறது...
ஆணிவேரில்
வெந்நீர் ஊற்றும்
அறிவியல்
வளர்ச்சிகள்
ஆடுகளை
மலையில் விட்டு
அருகிருக்கும்
கொல்லையில் கதிரொடித்து
பால்
பருவக் கம்பைப் பக்குவமாய்
நெருப்பிலிட்டு
கொங்கு
ஊதி தாத்தா கொடுத்த
இளங்கம்பின்
சுவைக்கு
ஈடு
இது என்று
எதைக்காட்டி
ஒப்புமை சொல்வேன்
பச்சைக்
கம்பு தின்றதே இல்லை
ஆதங்கப்பட்ட
தோழிக்கு
பல மைல் வெயில் கடந்து வந்தவனுக்குச் சட்டென்று
ஒரு புங்கை நிழல் கிடைப்பதுமாதிரி, கொடுமை
வாழ்வை அடுக்கிச் சொல்லிவிட்டு ஒரு கம்மங்கதிரில் இழந்த வாழ்வின் ருசியைச்
சொல்லியிருக்கிற நேர்த்தி சாதாரணமானதல்ல. இங்கே வருகிற ஆடுமேய்த்தலும், கம்மங்கதிரைச் சுட்டுத்திண்ணலும் அதைமட்டுமேயா உணர்த்தி நிற்கின்றன?
பறவை அமர்ந்தறியா செயற்கை மரங்களெனச் சொல்லுகிறபோது மரங்களை மட்டுமா
சுட்டுகிறது? வரிசையாய்க் கடக்கும் நமது நாட்கள் கூட
மரங்கள்தானே. நமது நாட்களில் ஒரு கணம் பறவை அமர்வதுபோன்ற அனுபவம் நேர்ந்ததுண்டா?
நமது மரங்கள் எதற்காகவோ வானுயர்ந்து நிற்கின்றன. அதுதரும் நிழல்
ஒன்றுதானா வேரோடி நிற்பதற்கான காரணம். இதே போன்றதொரு இழப்பின் வலி சொல்லும்
மற்றொரு அற்புதமான கவிதை ‘இக்கரைக்கு அக்கரை’. ‘வீடு சுமந்து அலைபவன்’ கவிதை தமிழர்களின் அவல
வாழ்வினையும் சேர்த்தே சொல்லுகிற கவிதை.
இருந்தது
இல்லாமல் போகும்போதும்
இருப்பு
இடம்மாறிப் போகும்போதும்தான்
உரைக்கிறது
ஏதிலிகளின்
வலி
தன்னனுபவத்தில் சிறகு விரித்து பெரும்
ஜனசமூகத்தின் நெடுங்காலத் துயர வரலாற்றோடு கைகோர்த்து நிற்கிறது இக்கவிதை.
இத்தொகுப்பு காதல் கவிதைகளால் மேலும்
அழகாகிவிடுகிறது. காலகாலமாய் ஓடும் ஜீவநதியின் அடிமடியில் உருண்டு விளையாடும்
கூழாங் கற்களின் மினுமினுப்பில் இருக்கிறது நீரின் காதல். ‘உதிர்ந்த சிறகு’ என்ற கவிதையில் இப்படி வருகிறது:
பெரும்
பயணத்திலும் பேருந்து ஓட்டத்திலும்
கண்ணில்படும்
பலகையின் பெயரைக்
கண்டு மனம்
பதைபதைக்கும் - அவள்
வாழ்க்கைப்
பட்டது இவ்வூரோ?...
ஓடுகிற ஓட்டத்தில் கண்ணில் அடிக்கும் முள்ளாய்
அந்த ஊர்ப்பெயர். தூலம் உளுத்து ஒருபக்கமாய்ச் சாய்ந்த கூரை ஒழுகி
ஓதமேறிக்கிடக்கும் மண்சுவராய் மனம். மழைக்காலத்தின் நள்ளிரவொன்றில் குடும்பமே
அலறுவதுபோல ஏதோ ஒரு பொழுதில் அந்த ஊர்வழியே கடக்கிறபோது நினைவுகளின் அலறலை என்ன
செய்துவிட முடியும். ஒரு கவிதை எழுதுவது தவிர.
எந்திரமாய்க்
கை குலுக்கி / என்றும் போல்
புன்னகைத்துப்
பிரிந்த / அந்தக் கடைசி நிமிடம்...
இப்படி நிறைய இடங்களைச் சொல்லலாம். காதல் கவிதை
எழுதும்போது எந்தச் சவாலும் எழுந்து நிற்கவில்லை. சண்டையில் தோற்றுப்போனவனின்
தூங்காத இரவுகள் போலவே அவஸ்தைப்படுத்துகிற வார்த்தைகளால் நெய்யப்பட்டிருக்கின்றன.
அரசியல் கவிதைகள்
வனைதலில் தமிழர்களின் குருதியே முதன்மையாகிறது. இழந்த மண்ணிலிருந்து சிந்திய
ரத்தம் கொண்டு ஆத்திரங்கொண்டு எழுத்தைச் சுற்றி வெறிகொண்ட கைகள் விரல்
நுணுக்கத்தில் எழும்பி வந்தவை அவை. முடிகிற இடத்தில் சரியாக அறுத்து மாலை வெயிலில்
காயவைத்துத் தட்டித்தட்டி சூளையிலிட்டதை மனம் தட்டிப்பார்க்க திசைகள் அதிர்கின்றன.
‘பொய்த்தேவு’ கவிதையில் வெளிப்படையாகவே
தனது அரசியலைச் சொல்கிறார் கவிஞர். அதற்கான வரலாற்று நியாயங்களையும் வாசகனுக்குத் தெளிவுபடுத்துகிறார். பத்துக்
கோடிக்கும் மேலாக வாழ்கிற ஓர் இனம் தமது ஒரு பகுதி மக்கள் துடிக்கத்துடிக்கச்
சாகிறபோது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததே எதனால்? காஷ்மீரிகளைப்
போல தனித்த தேசிய இறைமை கொண்ட இனமாக, கவிஞர் சொல்லில்
சொன்னால் நான் தமிழன் என்கிற ஒரு தெளிவு இல்லாததுதானே காரணம். இந்த இனம்
நினைத்திருந்தால் ஓர் அரசியல் நிர்ப்பந்தத்தை உருவாக்கிப் பேரழிவிலிருந்து
காப்பாற்றி இருக்காதா என்ன?
‘மே 2009’ கவிதை மிக நுட்பமாக இந்த அரசியலைப் பேசுகிறது. கையாலாகாதனத்தின் முன்பு
நமது எல்லாப் பெருமிதங்களும் பல்லிளித்துக்கொண்டு நிற்பதை இக்கவிதை
எடுத்துக்காட்டுகிறது. ‘பிரபாகரன்’ கவிதை
நம்பிக்கைப் புள்ளியிலிருந்து எழுந்ததாக இருக்கிறது.
இது மிளகாய்த் தோட்டத்தில் முதல் ‘வெப்பு’ போல. உள்ளே நுழைந்து பழமெடுக்கும்போது
பூவும் பிஞ்சும் உதிராமல் நடக்கப் பழகும் நளினம் வேண்டும். நாற்று நட்டதிலிருந்து
பார்த்தால் முதல் வெப்பு நெடுங்காலம் கடந்ததாய்த் தோன்றும். ஆனால் அவை
நேர்த்தியானவை. பழுதில்லாதவை. அடுத்த ‘வெப்பு’ மிக விரைவில் வரும் என்று எதிர்பார்க்கலாம். அடுத்த தொகுப்பை இதைவிட
நேர்த்தியாகக் கொண்டுவருவார் என்பதற்கு இத்தொகுப்பு ஓர் உதாரணம். ஏனெனில் தமிழ்
வாழ்வு என்ற வற்றாத கிணறு இவர் மனசில் உண்டு.
மைனாக்களும் தவிட்டுக் குருவிகளும் ஆந்தைகளும்
வௌவால்களுமெனப் பறவைக்காடாய் இருந்த அந்த இலுப்பைத் தோப்பை விழுங்க
சுற்றியிருந்தவர்களுக்குப் பேராசை வந்தது. வெங்கோடை இரவுப் பொழுதொன்றில் மூங்கில்
புதர் தீப்பற்றியதாய்ப் பேச்செழுந்தது. கொள்ளிவாய் பிசாசின் வேலையென்று வேடிக்கை
பார்த்தனர். குஞ்சுகள் கருகும் நிணவாடையும் புகையும் ஊரைச் சூழ,
இலுப்பைத் தோப்பின் பெருமைமிகு வரலாற்றைத் திண்ணைதோறும்
வாய்வலிக்கப் பேசினர். பறவைகளின் அலறல் ஓய்ந்த மாலையொன்றில் எரிந்த விறகுகளை
ஆளாளுக்குச் சுமந்துவந்தனர். வரப்புகள் எல்லை மாறின. பஞ்சாயத்தின் தீர்மானங்கள்
மாறின. கங்காதேவி மொசைக் பதித்த சிறு கோயிலில் பளபளக்க அருள் பாலிக்கிறாள். கங்கா
நகர் என்று அறிவிப்புப் பலகையொன்று வழிகாட்டுகிறது. வௌவால்களையும் குருவிகளையும்
இலுப்பை மரங்களையும் மனதில் சுமந்து பித்தேறித் திரிபவர்கள் கவிதை
எழுதிக்கொண்டிருக்கிறார்கள். சடைமுடி குலுங்க மந்திரம் ஜெபிக்க ரத்தப் பலியிட்டு
நிணச்சோறிறைத்து ஏவிய இந்த ரத்தக்கவிதைக் காட்டேறி பழிவாங்க மாட்டாளா? செய்வாள்.