(தமிழ்நாடு
அரசின் சிறந்த ஆய்வு நூலுக்கான பரிசு பெற்றது)
நூலறிமுகம்
பழந்தமிழ் இலக்கியங்கள் பரந்து விரிந்த ஆழ்கடலாக நம்முன் காட்சியளிக்கின்றன. அக்கடல் சிலரை அன்போடு அரவணைக்கிறது; சிலரைப் பயமுறுத்துகிறது. அது எப்போதும் வியப்பிற்குரியதாகவே இருக்கிறது.
அந்த ஆழ்கடலுள் விலைமதிப்பற்ற பலவித நன்மணிகள் புதைந்து கிடக்கின்றன. ஆர்வமும் விருப்பமும் கொண்டோர் அவற்றைத் தேடி காலந்தோறும் அக்கடலில் நீந்திக்கொண்டே இருக்கின்றனர்; மூழ்கிமூழ்கி முயற்சித்துக்கொண்டே இருக்கின்றனர். அவர்களின் முயற்சிக்கேற்ப அறிவுச் செல்வங்களோடு கரை சேர்க்கிறது அலை. ஆழம் கண்டு அஞ்சுவோர் சிலர், ‘என்ன இருக்கிறது இதில்’? என்று குறைகூறி, கடலையும் நீந்துபவரையும் வெறுப்போடு பார்த்துச் செல்கின்றனர். இலக்கியக் கடல், அவர்களுக்கும் சேர்த்தே கருத்து மணிகளை விதைத்து வைத்திருக்கிறது.
கடலில் நீந்தவில்லை என்றாலும் கால்களை நனைத்துப் பார்த்தவன் என்கிற மகிழ்ச்சி எனக்குள் எப்போதும் உண்டு. கடலையும் அதன் அருமையையும் எனக்கு அறிமுகப் படுத்தியவர்களே அந்தப் பெருமையை எனக்கு வழங்கியோர். அவர்கள் எப்போதும் என் நன்றிக்கு உரியோர்.
பழந்தமிழ் இலக்கியத்தில் இது எனது நான்காவது நூல். இந்நூல், செவ்வியல் இலக்கியங்களாக அடையாளப்படுத்தப்பட்ட பழந்தமிழ் நூல்களை ஆய்வுக் களமாகக் கொண்ட பத்து ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்புநூல். அறம், அறிவியல், சமூகம், சமயம், மருத்துவம், மனிதவளம், ஆளுமைத் திறன் எனப் பலவித நுண்பொருண்மைகளைக் கொண்டது. இக் கட்டுரைகள் முடிவைச் சுட்டுவன அல்ல. மேலும் ஆய்விற்கு வித்திடுவன.
சிலரால்தான் சில நற்செயல்கள் நடந்தேறும். அந்தவகையில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அண்மைகாலச் செயல்பாடுகளுக்குச் சொந்தக்காரர் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள். ஆராய்ச்சிப் பணி, அலுவலகப் பணி, மேம்பாட்டுப் பணி என அனைத்திலும் ஒருங்கே கவனம் செலுத்துகிற பன்முக ஆளுமைக்குச் சொந்தக்காரர். இந்நூல் அவரால்தான் வெளிவருகிறது. அவருக்கு என் நன்றியை நவில்கிறேன்.
‘மாதத்திற்கு ஓர் ஆய்வுக் கட்டுரை; ஆண்டிற்கு ஓர் ஆய்வு நூல். இதனை எப்போதும் மனத்தில் வைத்து ஆய்வு செய்யவேண்டும்’ என்று காணுந்தோறும் அறிவுரை கூறுவார் முதுபெரும் தமிழறிஞர் முனைவர் ச.வே.சுப்பிரமணியன் அவர்கள். அவரின் சிந்தனையை முறையாகச் செயல்படுத்த முடியவில்லை என்றாலும், என் நூல்கள் வெளிவருகிற போதெல்லாம் அவரின் அறிவுறுத்தலை எண்ணுகிறேன். அதேபோல், பேசுகிற போதெல்லாம் என் ஆய்வுப் பணிகள் குறித்து கேட்டறிந்து, விரைந்து செய்யுங்கள் என்று ஊக்கப்படுத்தி வருகிற என்னுடைய பேராசிரியர் முனைவர் அன்னிதாமசு அவர்களையும் நன்றியோடு நினைக்கிறேன்.
அன்புடன்,
ஆ. மணவழகன், பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை - 113.