சனி, 9 ஏப்ரல், 2011

கவிஞர் ஆ.மணவழகன் கவிதைகள் - 4


கனவு சுமந்த கூடு


கடைக்கால் எடுக்கையில்
ஒதுக்கிவிட்ட வேப்பங்கன்று
தளிர் விரித்து
கிளை தாங்கி
நிழல் பரப்பி
கூடு சுமக்கும் மரமாய்
கனவு இல்லமோ
இன்னும்
கடைக்காலாய்



பிறர்தர வாரா


ஒப்புசாண் மலை மீது
பீடியைப் பற்றவைத்துக் காட்டினான்

கோனான் சிவக்குமார்

இரத்தினம் கிணற்றில்
புறா பிடிக்கும் அவசரத்தில்
புகையிலையின் மகத்துவம்(!?) சுட்டினான்
பால்ய நண்பன் பாண்டியன்


நாத்தம் பாக்காம குடிச்சிடு
ஒத்தை மரத்துக் கள் உடம்புக்கு நல்லது
எடுத்து வைத்தார்கள்
சிறிய கோப்பையில் அப்பாவும்
பெரிய சொம்பில் மாமாவும்


பீர் மட்டுந்தான் நல்லதாம்
காட்டுக்கோட்டை கல்லூரிக் காலத்தில்
வாங்கிவந்தார்கள்
சேட்டும் குமரேசனும் ராஜேசும்


தேசியக் கல்லூரியில்
வில்ஸ் வெண்சுருட்டை
விரலிடுக்கில் வைக்கும்
லாவகம் சொன்னான்
மாப்ள காளிமுத்து


கஞ்சா என்னவெல்லாம் செய்யும்
வகுப்பெடுத்தான்
அகால மரணமடைந்த ஆருயிர் நண்பன்


பாக்கியநாதன்
இதப் பழிக்கக்கூடாது சார்
குழந்தை மாதிரி ஒண்ணுமே பண்ணாது
இராணுவ ரம்மை சோடாவில் கலந்து கொடுத்தார்
பசுமைக் கவிஞர்


எதா இருந்தாலும் இதுக்கு உட்டதுதான்
சாமிக்கு வாங்கி வைத்த சாராயத்தை
நாக்கில் வைத்துப் பார்க்கச் சொன்னான்
தையல் கடை செல்வம்


முழு பான்பராக்கையும்
ஒரே வாயில் போட முடியுமா?
பந்தயம் கட்டித் தோற்றான்
திருச்சி நண்பன் சங்கர்

எல்லா எழவையுந்தான் பார்த்தாச்சு
எதிலேயும் ஒரு ---ம் இல்லை


பழகியாச்சு விடமாட்டேங்குது
பொய்சொல்லாதே
உன் மனைவி விதவையாவது பற்றி
உன் குடும்பம் நடுத்தெருவில் நிற்பது பற்றி
எந்த அரசுக்கும்
இங்குக் கவலையில்லை

வீடு சுமந்து அலைபவன்

சிறகு முளைக்குமுன்பே
பறக்கத் தொடங்கியாயிற்று


சைதாப்பேட்டை
மேட்டுப்பாளையம்
சானடோரியம்
இப்போது ஆதம்பாக்கம்


முதலில் கைப்பை
அடுத்து தானி
பின் குட்டியானை
இப்போது 407


வீட்டைச் சுமந்து திரிந்தாயிற்று
வேலையும் வேலை நிமித்தமும்
எங்கள் ஆறாம் திணை


வரலாறுகளை வரப்பில் சுமந்திருக்கும்
வளமான மண்
வாழ்க்கையை வாய்க்காலில் நிறைத்திருக்கும்
வற்றாத கிணறு


சோகத்தை விதைத்ததால்
இன்பத்தையே விளைவிக்கும் இல்லம்


குளோரின் கலக்காத குடிநீர்
குப்பைகளைச் சுமக்காத காற்று
எல்லாமும்தான் இருக்கிறது ஊரில்


இருந்துமென்ன---
இருந்தது இல்லாமல் போகும்போதும்
இருப்பு இடம் மாறிப் போகும்போதும்தான்
உறைக்கிறது


ஏதிலிகளின் வலி


திங்கள், 4 ஏப்ரல், 2011

கவிஞர் ஆ.மணவழகன் கவிதைகள் - 3


முரண்

பூச்சூடி
பொட்டு வைத்து
ஆடை உடுத்தி
அலங்காரம் செய்த
அழகு பொம்மையோடு
அம்மணக் குழந்தை
எங்கள் தேசம்


வெள்ள நிவாரணம்

ஒரு சோடி வேட்டி சேலை
மூன்று லிட்டர் மண்ணெண்ணெய்
ஐந்து கிலோ அரிசி
இரண்டாயிரம் ரொக்கம்
மாற்றாக
மனித உயிர்கள் பல
மனிதப் போலி

பலப்பல முகங்கள்
பலப்பல நிறங்கள்
உலக நாகரிகத்தை
உடலில் சுமக்கும் அதிசயங்கள்
பார்த்தால் பேசினால்
அனைவரும் மனிதரே
பழகிப்பார்
பத்தில் ஒன்பது பதர்கள்

 மாக்கள்
 வைக்கோல் கன்றுக்கு
மடிசுரக்கும் பசு
கட்சித் தொண்டன் 

அதிசயம்

ஆயிரம் தாஜ்மகால் அதிசயம்
ஒற்றைச் சித்தனின் உயிர்த்தவம்
தூக்கணாங்கூடு
சிறுமை

பிழைப்பில் கூடியது எறும்பு
இறப்பில் கூடியது மனிதம்
ஆறறிவுச் சிறுமை


ஒட்டடை
ஐயோ
துடைத்து விடாதே
ஒட்டடை அல்ல வீடு
சுவரில் சிலந்தி

ஐயோ பாவம்

நடுங்கி இருக்குமோ குளிரில்
புல்லின் நுனியில்
பனித்துளி
சுவடுகள்

நீ நடக்கும் பாதைகளில்
உன் பாதச்சுவடுகளைப்
பாதுகாத்து வை
உன் மரணம்
சாதனையாகும் பொழுது
அதுவும்
சரித்திரமாகும்




ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

உதிரும் இலை - நூல் மதிப்புரை


இருத்தலும் வாழ்தலும் - அதன் வலிகளோடு
ஆ. மணவழகன்

சைதாப்பேட்டை தொடர்வண்டி நிறுத்தத்தில் தொடங்கி, தாம்பரம் நிலையம் வருவதற்குள் படித்து முடித்துவிட்ட ஒரு கவிதைத் தொகுப்பு. ‘இக்கவிதைகள் சில வருடங்களுக்கு முன்பாகவே வந்திருக்க வேண்டும்’ என்ற பொன்.அனுர வின் பதிப்புரையோடும், ‘முனுசாமியின் கவிதைமொழி அழுத்தமானது’ என்ற கனிமொழியின் அணிந்துரையோடும், ‘சரியான அரசியல் புரிதலையும், அழகியல் உணர்வையும் பெற்றிருக்கும் யாழினி முனுசாமியின் கவிதைகள்’ என்ற  பா. இரவிக்குமாரின் ஆய்வுரையோடும் வெளிவந்திருக்கும் தொகுப்பு இது.  கவிஞர் யாழினி முனுசாமியின்  முதல் கவிதைத் தொகுப்பாக இது அறியப்படுகிறது. ஆனால், மொழி ஆளுகையும், கவிதை நடையும்  கவிதையோடு அவருக்கிருக்கும் நெடுநாளைய உறவை உறுதிசெய்கின்றன.

உனது அசைவுகளில்
                 நிரம்பியிருக்கிறது
                 எனக்கான மகிழ்ச்சி

என, குழந்தைக்கான கொஞ்சலோடு தொடங்குகிறது (குழந்தைக்கான கவிதையாகத்தான் இருக்கவேண்டும்) கவிதைப்பயணம். முதல் கவிதை குழந்தைக்கு அடுத்த கவிதை மனைவிக்கு (பனிக்கட்டி வைப்பு ) என்று வகைப்பிரித்தாலும், நவீன ஊடகத்தின் தாக்கம், இயற்கைவளம்  அழிவு, கிராம சூழல், காதல், வறுமை, முதிர்கன்னிகள், கல்வி நிலையங்களின் நிலை, இயற்கை பேரழிவு,  நாகரிக தேடல், நகர வாழ்க்கையில் நிறைவு நிறைவின்மை, உறவுகள், ஊணமுற்றோர் என, பலதரப்பட்ட சமூக காரணிகளும், சிக்கல்களும் இவர்தம் கவிதைகளில் கருப்பொருள்களாகின்றன.

                மழைக்காலங்களில்
                இடிந்துவிழும் வீடுகளைக் கொண்டது
                எங்கள் சிற்றூர்
                இந்தப் பெருமழையில்
                 யார் வீடோ

என இரங்குதலில், நகரத்தில் உடலால் மட்டுமே வாழும் தன்மையைக் கவிஞர் காட்டுகிறார்.

                போனவருடம்
                புதுப்பாவாடையைத் தூக்கிச் செருகி
                மிளகாய்ப்பட்டாசு வெடித்த சிறுமி
               இவ்வருடம்
               தலை தீபாவளிக்கு வருவதைக் கண்டு
               உள்ளுக்குள் முனகுகிறாள்
                பிருந்தா அக்காவின் அம்மா

என்ற முதிர்கன்னிகள் பற்றிய பதிவுகளாகட்டும்,

               சாணி வாரிக்கொட்டினாலும்
               ஊசிப்போன பின்தான் கொடுப்பாள்
              ஆண்டச்சி
              அடிச்சத்தம்/
              அழுகைச் சத்தம்தான்
              இங்கு வெடிச்சத்தம்
              எவன் செத்தாலென்ன
             வறுமை மட்டும் மார்கண்டேயனாக இருந்துகொண்டு?

என்ற வறுமை, சமூக ஏற்றத்தாழ்வு பற்றிய பதிவுகளாகட்டும், இவரின்  எளிய மொழி நடை கவிதைக்கு பலம் சேர்த்திருப்பது உண்மை.

பச்சை முடி செழித்த மலை/  கல்குவாரி முதலைகளால்/ மெல்ல மெல்ல விழுங்கப்பட்டு /ஊனமாய்க் காட்சியளிக்கிறது

என, இயற்கை அழிவினைப் காட்சிப்படுத்தும் கவிஞர்,

           கொள்ளையர்களுக்குத்
           தன் உறுப்புகளைக் களவுகொடுத்து
           பலவீனமாய் மெலிந்திருக்கும்
           ஏழையைப் போல்

என, ஏழைக்கு அம்மலையை ஒப்புமை படுத்துகிறார். அதோடு, ‘எரிமலைகளை / யாரும் நெருங்குவதில்லை’ எனத் தன் தீர்வையும் முன்வைக்கிறார்.

            கத்துதல்
            முட்டுதல்
            உழுதல்
           இனப்பெருக்கம் செய்தல்
           இப்படி அனைத்தம்சமும் உண்டு
          ஆனாலும் ஏனோ
          கறுப்பு மாடுகள் எளிதில் விலைபோவதில்லை

என்பதாக, தன் சமூக அரசியல் புரிதலையும் ஆங்காங்கே தெளித்துவிட்டுச் செல்லவும் கவிஞர் தவறவில்லை.

தான் வாழும் சூழலை அதன் இருப்போடும், இருமாப்போடும், வார்த்தைகளை மறைக்காத இசையின் இனிமையோடு பதிவு செய்தல் கவிதையின் வெற்றியாக அமைகிறது. கவிஞரின், கல்வி நிலைங்கள் பற்றிய கவிதையிலும், இன்னும் சிலவற்றிலும் இத்தன்மை வெளிப்பட்டு நிற்பதைக் காணமுடிகிறது. வலிந்து மேற்கொள்ளும் உவமைகளுக்கும், உருவகங்களுக்கும் இங்கு வேலையற்றுதான் போகின்றன.

               பாட்டியைக் கொடும்மைக்காரி என்ற அம்மா
                உணரவில்லை
               தானும் அவளாகவே
              மாறிவிட்டிருப்பதை

என்பதில், உறவுநிலைச் சிக்கல்களையும்,

              குடித்துத் தீர்த்திருந்தது
               குடி உன்னை
              இப்போதெல்லாம்
              குடித்து விழுந்துகிடப்பவரைக் கண்டால்
              பதைக்கிறது மனம்

என்பதில், குடியால் ஏற்பட்ட தன் குடும்ப பாதிப்பையும் பதிவுசெய்கிறார். கவிதை தோன்றும் காரணிகளுள் ‘இழப்பு’ என்பது முதன்மை பெறுகிறது. ஆம்,

                   இழந்துவிட்டதன் மீதுதான்
                   ஆசை அதிகரிக்கிறது
                   எப்போதும்
                   நேற்று அப்பா
                   இன்று நீ

என்கிறார் கவிஞர். ‘சுயம்’ நம்மை ஆற்றுப்படுத்துவது, அறியவைப்பது ஆயினும், துன்பத்தில் ஆழ்த்துவதும் அதுவே.

             மாலை மட்டும் மாற்றிக்கொள்வோமென்றேன்
            தமிழ்ப்பெண்ணின் அடையாளம் தாலி யென்றீர்கள்
            சீர் கொடுப்பது எனக்கு விலைகொடுப்பதென்றேன்
            பெற்றோரின் கடமையென்றீர்கள்
           ஒரு புரட்சித் தினத்தில்
           எளிமையாய் முடிக்கலாமென்றபோது
           ‘எங்களுக்கு கௌரவமிருக்கிறது’ என்றீர்கள்’
           எப்படியோ
           ஐந்து பைசா வட்டிக்கு வாங்கி
           ஒலிம்பிக் கார்ட்ஸ்
           புது மண்டபம்
           கச்சேரியென
           ஒரு சுபதினத்தில்
           ஊர்மெச்ச முடித்தாயிற்று
          வட்டி கட்டுவதில் திணருகிறது வாழ்க்கை

சமூகத்தின் மிக மிக்கிய காரணி மனிதன் என்றாலும்,  தனி மனிதனே சமூகம் அல்ல என்பது தெளிவு. இங்கு சமூகத்திற்காக சுயத்தை இழத்தலும், துன்பத்தில் வீழ்தலும் இயல்பாகிறது. அதவே கவிதையாகிறது.

            நத்தையாய் நகரும்
           அரசுப் பேருந்து
           எப்போது சென்று சேருமோ?
          தூரம் கடந்துவந்து மிரட்டுகிறது
          அதிகாரத்தின் குரல்
         ஒரு நிமிடம் தாமதித்தாலும்
          கரைந்து போகக்கூடும்
         என் குடும்பத்தின் ஒருநாள் உணவு

         என்பதில், மாத ஊழியனின் வாழ்வியல் நெருக்கடிகளும்,  முதலாளித் துவத்துக்குத் தம்மை  உயர்த்திக்கொண்டுவிட்ட அதிகார வர்கத்தின் போக்கும் கவிதைக் கருவாகின்றன.

மனைவிக்கு மரியாதை செய்வதாய் (‘பெண்ணியம் பேசுவதாய்...’ என்றும் கொள்ளலாம்) அந்தரங்கம் பேசும் இடத்தையும் ( தூக்கம் தளும்பும் உன்னை... - ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்றும் இதனைக் கொள்ளலாம்) , நகரத்தின் பற்றுதலுக்கான காரணத்தை வலிந்து திணிக்கும் இடத்தையும் (காக்கை குருவி ...) தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இருத்தலை அதன் இயல்போடு பதிவுசெய்திருக்கும் இக்கவிதைகள் காலம் தாழ்த்தி வெளிவந்தாலும், செறிவையும், சீர்மையையும் இழந்துவிடவில்லை.   எதார்த்தங்கள், எளியமொழி நடையின் கைகோர்ப்போடு வலம் வருகின்றன. இவை தனிமனிதன்  சார்ந்த பதிவுகளாயினும், நிகழ்கால சமூகத்தின் முகத்தை அதன் உன்னதத்தோடும் ஊணத்தோடும் எதிரொளிக்கின்றன.


                         உதிரும் இலைகள் குறித்து
                        எந்தக் கவலையுமில்லை
                        துளிர்த்துக்கொண்டேயிருக்கின்றன
                       புதிய புதிய தளிர்கள்

நூல் - உதிரும் இலை
ஆசிரியர் - யாழினி முனுசாமி
வெளியீடு - மித்ர ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ், சென்னை



பழந்தமிழர் தொழில்நுட்பம் - ஆய்வு நூல்


                  

பழந்தமிழர் தொழில்நுட்பம்
முனைவர் ஆ.மணவழகன்
அய்யனார் பதிப்பகம், சென்னை. மு.ப.2010


பழந்தமிழர் தொழில்நுட்பம் - நூல் குறித்து
முனைவர் கோ. பாக்யவதி
          எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் 



    முனைவர் ஆ. மணவழகன் இயற்றிய ‘பழந்தமிழர் தொழில்நுட்பம்’ என்னும் நூல், மக்கள் வாழ்வியல் கூறுகளை வெளிப்படுத்தும் ஊடகங் களாகத் திகழும் பழந்தமிழ் இலக்கியங்களின் வழி பழந்தமிழர் தொழில்நுட்பங்களை வெளிக்கொணரும் ஆய்வு நூல்.

                 பல்துறை அறிவு தமிழருக்கேயுரிய சிறப்பு. பிரபஞ்சத்தின் உட்கூறுகளாகிய ஐம்பூதங்களைத் தம் ஆராய்ச்சித் திறன் வாயிலாக அறிந்து கொண்ட தமிழர்கள் அவற்றை மனிதகுல ஆக்கத்திற்குப் பயன்படுத்திக் கொண்டனர். அவ்வகையில், வானியல், நிலவியல், நீர் மேலாண்மை, பொறியியல், மருத்துவம், நெசுவு, கட்டுமானம், தோல்பொருள், கப்பல் கட்டுமானம், உலோகம் எனப் பல்வேறு நிலைகளில் காணப்படும் பழந்தமிழரின் தொழில்நுட்பங்கள் இந்நூலில் விரித்துரைக்கப்படுகின்றன. இவ்வகைத் தொழில்நுட்பங்களை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற பழந்தமிழ் இலக்கியங்களின் பதிவுகளிலிருந்து தொகுத்தும் வகைப்படுத்தியும் நாளது வரையிலான வளர்ச்சியோடு ஒப்புமைப் படுத்தியும்  விளக்கியுள்ளார் ஆசிரியர்.

                பண்டைத் தமிழரின் வேளாண் தொழில்நுட்பத்தில் நீர் மேலாண்மை, ஊடுபயிர், சுழற்சி முறை பயிர், தழை, எரு உரங்கள் பற்றிய விவரங்களையும்; நீர்மேலாண்மை தொழில்நுட்பதில் அணைகள், நீருண் துறைகள், நீர் இறைப்புக் கருவிகள் பற்றிய தகவல்களையும் இந்நூலிருந்து அறிந்து கொள்ளலாம். உள்நாட்டு வணிகம் குறித்த தகவல்களைப் புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களின் தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன. வெளிநாட்டு வணிகத்தில் நறுமணப் பொருட்கள், ஆடைகள் ஏற்றுமதி சிறப்பாக இருந்ததையும் அரேபியர்கள் இடைத்தரகர்களாகச் செயல்பட்டு ஏராளமான பொருள் ஈட்டியதையும் ஆசிரியர் சுட்டியுள்ளார்.

                பொறியியல் தொழில்நுட்பத்தில் கட்டுமானம், எந்திரங்களின் உற்பத்தி போன்றவற்றையும், நெசவுத் தொழில்நுட்பத்தில் பருத்தி, பட்டு, தோல் ஆடைகளின் தரம், உறுதி, வேலைப்பாடு போன்றவற்றின் சிறப்பினையும் அறிந்து கொள்ளலாம். சுருங்கை எனப்படும் கழிவுநீர்க் கால்வாய்களை மக்கள் அக்காலத்திலேயே பயன்படுத்திய திறன் போற்றுதற்குரியது.

                இதுபோன்ற பழந்தமிழரின் பல்துறைத் தொழில்நுட்பங்களை அழிவில்லாத இலக்கியங்கள் மூலம் புலப்படுத்தும் இந்நூல், இன்றைய தொழில் வளர்ச்சியில் எத்துறையாக இருப்பினும் நம் முன்னோர்கள் வகுத்து வைத்த பாதையில்தாம் நாம் பயணிக்கின்றோம் என்ற உண்மையை இளைய தலைமுறையினருக்கு உணர்த்தும் வகையில் எழுதப்பட்டிருப்பது சிறப்பு.



நூல் - பழந்தமிழர் தொழில்நுட்பம்
ஆசிரியர் - ஆ. மணவழகன்
வெளியீடு - அ ய்யனார் பதிப்பகம், சென்னை
ஆண்டு - 2010

நூல் பெற - 9789016815

சங்க இலக்கியத்தில் மேலாண்மை - ஆய்வு நூல் குறித்து


சங்க இலக்கியத்தில் மேலாண்மை
ஆ.மணவழகன்
காவ்யா பதிப்பகம், சென்னை. மு.ப. 2007.


சங்க இலக்கியத்தில் மேலாண்மை நூல் குறித்து
 க.ஜெயந்தி
உதவிப் பேராசிரியர், சிந்தி கல்லூரி, சென்னை.

         தமிழையும் தமிழரையும் இழிவுபடுத்தும் வகையான கருத்துகள் தமிழரிடையேயும் பரவலாகக் காணப்படும் இன்றைய சூழலில், தமிழ் மொழியின் வளத்தையும்; தமிழ் இலக்கியங்கள் மக்களின் வாழ்வை அறிய உதவும் ஆவணங்களாகத் திகழ்வதையும்; தமிழ் இலக்கிய வகைகள் காலமாற்றத்திற்கேற்ப வளர்ந்துவரும் நிலையையும் சான்றுகளோடு வெளிப்படுத்துகிறது  ‘சங்க இலக்கியத்தில் மேலாண்மை’ என்ற இந்நூல்.   சமகாலச் சிக்கலைக் கருத்தில் கொண்டு, அதன் அடிப்படையில் பதினொரு கட்டுரைகளின் பொருண்மைகளைத் தேர்வு செய்து நூலினை வெளியிட்டுள்ள ஆசிரியரின் முயற்சி முதற்கண் பாராட்டத்தக்கது.

    காலத்தின் அடிப்படையில் உள்ளடக்கம் அமைக்கப்பட்டுள்ளது. பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல், தொழில்சார் மேலாண்மை(3), இருபதாம் நூற்றாண்டுப் படைப்புகள் குறித்த ஆய்வுகள்(5), அறிவியல் தமிழ் ஆய்வுகள்(1), இணைய தமிழ்(2) என்று நாளது வரையான தமிழ் இலக்கிய வளர்ச்சிப் படிநிலைகள், தமிழ் ஆய்வின் வளர்ச்சி ஆகியவற்றை எடுத்துக்காட்டும் வகையில் தலைப்புகள்இடம்பெற்றுள்ளன.

      முதல் மூன்று கட்டுரைகள் சங்க இலக்கியங்கள், திருக்குறள், இரட்டைக் காப்பியங்கள் ஆகிய பழந்தமிழ் நூல்களைக் களங்களாகக் கொண்டமைந்துள்ளன. இக்கால கட்டுமானத் தொழில்நுட்பம், வேளாண் மேலாண்மை, நீர் மேலாண்மை ஆகியவற்றில் பயன்பாட்டில் இருக்கும் தொழில்நுட்பங்களுக்குப் பழந்தமிழர்தம் தொழில்நுட்பங்களே அடிப்படையாக இருக்கின்றன என்பதை இக்கட்டுரைகள் தக்க சான்றுகளோடு உலகிற்கு உணர்த்துகின்றன       

          அவ்வகையில் அமைந்துள்ள ‘பழந்தமிழர் கட்டுமான நுட்பங்களும் பயன்பாட்டுப்பொருள்களும்’ என்ற முதல் கட்டுரை, பழந்தமிழர் கட்டுமானத் தொழில்நுட்பம் தொடர்பாகக் கொண்டிருந்த தெளிந்த அறிவை வெளிப்படுத்துகிறது. குடியிருப்பில் பல்வகை நுட்பங்கள், பருவநிலைக்கு ஏற்ற தளங்கள், மாடங்கள், நகர்ப்புறக் கட்டமைப்பு, பெருநகரங்களின் கட்டமைப்பு, சுகாதார வசதிகளின் கட்டமைப்பு, பொது இருப்பிடங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள், பாதுகாப்பு அரண்கள், இஞ்சி, செம்புப் புரிசை,  எந்திரம் பொருந்திய அரண்கள், கலங்கரை விளக்கம் ஆகியன பற்றிய பதிவுகள் வழி அக்காலத்தில் காணப்பட்ட சிறந்த கட்டுமானத் தொழில்நுட்பம்; அரைமண், பூச்சு மண் மற்றும் சுண்ணம், இட்டிகை (செங்கல்), ஓடுகள் மற்றும் உலோகத் தகடுகள், கருங்கல், பளிங்குக் கற்கள் ஆகிய கட்டுமானப் பொருட்கள் பயன்பாட்டில் இருந்தமை ஆகிய செய்திகள் இக்கட்டுரையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

              மக்களின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றான உணவுத் தேவையை நிறைவு செய்துவரும் உழவர் நலனில் அரசு கவனம் செலுத்தத் தவறியதால், அவர்கள் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தளப்படுவது இக்கால வரலாறு. இதற்கு நேர்மாறாக, வேளாண் குடியைக் காத்தல் என்பதைப் பழந்தமிழர் தம் தலையாய கடமையாகக் கொண்டிருந்தனர் என்பதை ‘சங்க இலக்கியத்தில் மேலாண்மை’ என்ற இரண்டாவது கட்டுரையில் ஆய்வாளர் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், பழந்தமிழர் இயற்கை வளங்களைக் காத்தல், அவற்றை மேம்படுத்துதல், விளைநிலங்களை விரிவாக்கம் செய்தல், பயிரிடுதலில் பல நுட்பங்களைக் கையாள்தல், (மானாவாரி, ஊடுபயிர், பல்விதைப் பயன்பாடு, எரு இடுதல், களை பறித்தல், பயிர்ப்பாதுகாப்பு); தொழில்சார் தொழில்நுட்பம் (பல விதைக்கருவிகள், எந்திரங்களின் பயன்பாடு) என்று பழந்தமிழர் உணவுத் தேவையில் தன்னிறைவு காணுதற்பொருட்டுத் வேளாண் தொழில்சார் மேலாண்மையைக் கையாண்டுள்ளனர்  என்பதை இக்கட்டுரையில் தகுந்த சான்றுகள் வழி எடுத்துக்காட்டியதுடன், இன்றைய நிலையோடு ஒப்பிட்டு, உழவர் நல மேம்பாடு காலத்தின் தேவையாக இருப்பதையும் ஆசிரியர் உணர்த்துகிறார்.

      மக்கள் நல மேம்பாடு குறித்த சிந்தனைகள் குறைந்து, தன்னலம் மேலோங்கி வரும் இன்றைய சூழலில், நீர் நிலைகளைப் பாதுகாத்தல் குறித்த சிந்தனை மறைந்து வருவதற்கு நமது நாட்டில் காணப்படும் மாசுற்ற / பராமரிக்கப்படாத நீர்நிலைகள் சான்றுகளாக உள்ளன. இவ்வாறன்றி, இயற்கைச் சீற்றங்களிலிருந்தும், எதிரிகள் மற்றும் விலங்குகளிடமிருந்தும் பழந்தமிழர் நீர்நிலைகளைப் பாதுகாத்துள்ளனர் என்பதை ‘சங்க இலக்கியத்தில் நீர் மேலாண்மை’ கட்டுரையில் ‘காப்புடை கயம்’ என்ற புறநானூற்றுச் சான்று வழி வெளிப்படுத்தியுள்ளார். இவைதவிர, பழந்தமிழர் நீர்நிலைகளின் தேவையை உணர்ந்திருந்தமை; நீர்த்தடுப்பு/நீர்ச்சேமிப்பு, பாசனத்திற்கான நீர்நிலைகள் (நீத்தேக்கம், புதவு மற்றும் மடுகு), குடிநீர்த் தேவைக்கான நீர்நிலைகள் (நீருண்துறை, கூவல்) ஆகியன அமைந்திருந்தமை ஆகிய செய்திகளைச் சுட்டிக்காட்டி, இன்று நீர்நிலைகள் பராமரிப்பில் அரசும் மக்களும் கவனமின்றி இருப்பதைச் சிந்திக்கச் செய்கிறார்.

             ‘செல்வக் கேசவராய முதலியார் படைப்புத்திறன்’ என்ற நான்காவது கட்டுரை, செல்வக்கேசவராய முதலியாரின் தமிழ் இலக்கியப் புலமையையும், தமிழ்மொழி ஈடுபாட்டையும், ஆய்வுப் பார்வையையும் அறிந்துகொள்வதற்குத் துணைசெய்யும் வகையிலான ஆழமான ஆய்வாக உள்ளது. ஆய்வில் ஈடுபடுவோர்க்கு வழிகாட்டுவதாக அமையும் செல்வக் கேசவராயரின் பன்முக ஆய்வுத் திறனை வெளிக்கொணர்ந்து, இளம் ஆய்வாளர்களுக்கு வழிகாட்டுவதாக அமைந்துள்ளது இக்கட்டுரை.

      வாழ்க்கைக்கு ஏற்றம் தரும் வகையான கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுதலால், வளமான சிந்தனையும், செயல்திறனும் உடைய இளைய சமுதாயம் உருவாகும்; நாடு, வளர்ச்சிப் பாதையில் செல்ல ஏதுவாகும். இவ்வகையில் அமைந்துள்ள ‘பாரதி கல்வியியல் தொலைநோக்கு’ என்ற ஐந்தாவது கட்டுரை, ‘பாரதியின் பல்வேறு சிந்தனைத் தளங்களுக்கிடையே அவரின் கல்வியியல் சிந்தனை ஒரு திட்டமிட்ட வரையறைக்குள் முழுமை பெற்றிருப்பதையும், அவ்வரையறைக்கு இன்றைக்கும் நாளைக்குமான கல்வியியல் தொலைநோக்கு பொதிந்திருப்பதையும்’ (ப.72) வெளிக்கொணர்கிறது.  அதேபோல, ‘கவிதைத் தடத்தில் க.நா.சு’, ‘காசி ஆனந்தன் கவிதைகளில் மொழி-இனம்-நாடு’, ‘புதுக்கவிதைகளில் மண்ணும் மக்களும்’, ‘இணையத் தமிழ் இலக்கியம்’ ஆகிய கட்டுரைகள் இருபதாம், இருப்பத்தோராம் நூற்றாண்டுக் கவிதை வகைகளை ஆய்வு செய்கின்றன.

 மண்ணின் மைந்தர்களின் உணர்வுப் பதிவுகளாக வெளிவந்துகொண்டிருக்கும் ‘மண் சார்ந்த கவிதைகள்’ எனும் புதுக்கவிதை வகையின் தோற்றம், வளர்ச்சி பற்றிய அறிமுகத்துடன், அவ்வகைக் கவிதைகள் குறித்த ஆய்வாகவும் ‘புதுக்கவிதைகளில் மண்ணும் மக்களும்’ கட்டுரை அமைந்துள்ளது. ‘இவ்வகைக் கவிதைகள், கிராமத்தின் இயல்பைச் சுட்டுவதோடு, கிராமம் பற்றிய உயர் மாயையை உடைப்பனவாகவும் அமைகின்றன. இருந்ததைச் சுட்டி, இன்று இருப்பதை ஆதங்கத்தோடு பதிவு செய்கின்றன’ (ப.122) என்ற ஆய்வு முடிவும் இவண் சுட்டத்தக்கது.

 அறிவியல் தமிழ்த் துறையில் வெளிவந்துள்ள ஆய்வுகளின் ஆவணமாக ‘அறிவியல் தமிழ் ஆய்வுகள்’ கட்டுரை திகழ்கிறது.  உலகத் தமிழரை ஒன்றிணைக்கும் இணையத் தமிழின் வளர்ச்சியை ‘இணையத் தமிழ் இலக்கியம்’, ‘இணையத்தமிழும் எதிர்காலவியலும்’ ஆகிய கட்டுரைகள் இயம்புகின்றன. இணையத்திலும் இணையற்று விளங்கும் தமிழின் ஆட்சியை இணைய தமிழ், தமிழ் இணைய பக்கங்கள், தமிழ் இணைய இதழ்கள், தனியார் பக்கங்கள்/வலைப்பூக்கள், வெளிப்பாட்டு உத்திமுறை, கணினி மொழிநடை ஆகிய தலைப்புகளின் விவரித்துள்ளதோடு, பயன்பாட்டு நிறைவு-நிறைவின்மை, அதில் உள்ள தடைகள் ஆகியவற்றையும் சுட்டி, தீர்வுகள் குறித்த சிந்தனைகளையும் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
* பின்னிணைப்பாக 143 தமிழ் இணைய பக்க முகவரிகளை முயன்று தொகுத்து அளித்துள்ளமையும், பயன்நூல் பட்டியலும் ஆய்வாளரின் கடும் உழைப்பிற்குக் கூடுதல் சான்றுகளாக அமைந்துள்ளன.

ழூ கள நூல்களில் உள்ள கருத்துகளோடு, ஒவ்வொரு துறை சார்ந்த செய்திகளையும், முடிவுகளையும் உரிய இடங்களில் மேற்கோள் காட்டி, சிக்கல்களுக்கான தீர்வுகளையும் ஆய்வாளர் இக்கட்டுரைகளில் முன்வைத்துள்ளார். இதனால், கருத்துச் செறிவு, ஆய்வியல் நெறிமுறை ஆகிய இரு வகையிலும் ஆய்வாளர்களுக்கு வழிகாட்டும் வகையில்  கட்டுரைகள் விளங்குகின்றன.

* மேலாண்மைத் துறையில் தமிழர் பழங்காலந்தொட்டே சிறந்து விளங்குகின்றனர் என்பதைச் சுட்டும் வகையில், இணையம் வரையான செய்திகளை, கருத்துகளை உள்ளடக்கமாக கொண்ட இந்நூலுக்கு ‘சங்க இலக்கியத்தில் மேலாண்மை’ என்ற தலைப்பு அளித்துள்ளமை பொருத்தமாக உள்ளது.

* உழவர்க்குப் பழந்தமிழர் அளித்திருந்த சிறப்பிடத்தைச் சுட்டும் வகையிலும், இக்காலத்தில் அவர்கள் இழிநிலையில் இருப்பதை உணர்த்தும் வகையிலும் அட்டையில் உழவரை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

               எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் நூலாசிரியரின் முதல் நூலான ‘பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வை’ என்ற நூலை தொடர்ந்து இந்நூல் வெளிவந்துள்ளது. இவ்வரிசையில் மேலும் பல அரிய துறைகள் சார்ந்த, காலத்திற்கு ஏற்ற ஆய்வுகளை முனைவர்  ஆ. மணவழகன் அவர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்; ‘புதிய தளிர்களை இனம் கண்டு, முறைப்படுத்தி, வளப்படுத்தல், அவற்றிற்கு அடிப்படையான மூலங்களைக் கண்டறிந்து, அவற்றை உலகிற்கு வழங்கும் (புகுமுன்...) அவர்தம் முயற்சி மேலும் தொடர வாழ்த்துகள்.


நூல் - சங்க இலக்கியத்தில் மேலாண்மை
ஆசிரியர் - ஆ. மணவழகன்
வெளியீடு - காவ்யா பதிப்பகம், சென்னை
ஆண்டு - 2007

மணவழகன் கவிதைகள் - 2

வாழ்க்கை வணிகன்



பாருங்க சார்
தெய்வப் புலவர் வள்ளுவர்
எழுதியது சார்
வாழ்க்கைக்குத் தேவையான
வழிகளைச் சொல்வது சார்
மூன்று பெரும்பகுப்புகள்
நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்கள்
ஆயிரத்து முந்நூற்று முப்பது
குறள்களைக் கொண்டது சார்
வெளியில் வாங்கினா
இருபத்தி ஐந்து ரூபா சார்
கம்பெனி விளம்பரத்துக்காக
வெறும் பத்து ரூபா சார்
------ ------- ------ ---- -----
தொடர்வண்டிச் சிறுவன்
மலிவு விலையில் விற்றுச் செல்கிறான்
திருக்குறளோடு வாழ்க்கையையும்


*****


நகரியம்
சாக்கடை நாற்றத்தோடு
கழிவுநீர் ஊற்றுகள்
அலங்காரத்திற்கு மட்டும் அணிவகுக்கும்
பறவைகள் அமர்ந்தறியா
செயற்கை மரங்கள்


முளைக்காத தானியங்கள்
விதை கொடுக்காத கனிகள்
உயிரில்லா முட்டைகள்
தாய் தந்தை உறவறியா
குளோனிங் குழந்தைகள்
ஆணிவேரில் வெந்நீர் ஊற்றும்
அறிவியல் வளர்ச்சிகள்


ஆடுகளை மலையில் விட்டு
அருகிருக்கும் கொல்லையில் கதிரொடித்து
பால் பருவக் கம்பைப் பக்குவமாய் நெருப்பிலிட்டு
கொங்கு ஊதித் தாத்தா கொடுத்த
இளங்கம்பின் சுவைக்கு
ஈடு இது என்று
எதைக் காட்டி ஒப்புமை சொல்வேன்


பச்சைக் கம்பு தின்றதே இல்லை
ஆதங்கப்பட்ட தோழிக்கு


*****


இக்கரைக்கு அக்கரை


புளிக்குழம்போடு
அரைத்த கேழ்வரகின்
ஆவிபறக்கும் உருண்டை


இளம் முருங்கைக்கீரைக் கூட்டோடு
இடித்துச் சமைத்த கம்பஞ் சோறு

நாட்டுப் புளிச்சை கடைசலோடு
புதுச் சோளச்சோற்றுக் கவளம்


இம்முறையேனும் கெங்கவல்லி சென்றதும்
ஆக்கித்தரச்சொல்லி
அம்மாவிடம் கேட்கவேண்டும்
ஊர் கிளம்ப ஒருவாரம் முன்பே
நாக்கு நங்கூரம் போடும்


ஏளனப் பார்வைக்கு இலக்காகும்
உயிர்க்கொல்லிப் பொடிகளால் உருவான
மசாலா குழம்பும்
உயிர்ச்சத்து உறிஞ்சப்பட்ட
கடையரிசிச் சோறும்


புள்ளைங்க வந்தா மட்டுந்தான்
நல்ல சோறு சாப்பிட முடியுது
அப்பா சான்றிதழ் தருவார் , ஊரில்
எனக்காகச் சமைக்கப்பட்ட
கடை அரிசிச் சோற்றுக்கும்
உயிர்க்கொல்லி பொடிகளால் உருவான
அதே மசாலா குழம்புக்கும்


இரைப்பையைத் தொடாமலேயே செரிக்கும்
தொண்டைக்குழியில் உருட்டி வைத்த
என் களி கம்பஞ்சோற்று ஆசை

*****

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

மணவழகன் கவிதைகள் - 1


அவர்கள் நாசமாய்ப் போக


புலிகளைக் காட்டி
மனிதர்களை
வேட்டையாடினார்கள்
காந்தியைப் பெற்றவர்களும்
புத்தரை ஏற்றவர்களும்

*****


மே 2009


முள்ளிவாய்க்கால்
கரையும் காற்றும் சொல்லும்
அவர்கள்
வீரத்தையும் தியாகத்தையும்
அண்ணா நினைவிடமும்
அருகிருக்கும் கடலும் சொல்லும்
எங்கள்
துரோகத்தையும்
கையாலாகாத தனத்தையும்


*****

பிரபாகரன்


ஆயிரம் ஆண்டுகளுக்கு
ஒருமுறை பூக்கும்
அபூர்வ மலர் நீ
இரு நூற்றாண்டின்
ஈடு இணையில்லா
ஒற்றை அதிசயம் நீ


இராஜராஜன், செங்குட்டுவன்
நெடுஞ்செழியன் ஒட்டுமொத்த
உருவம் நீ


எதிரிக்கு அடங்கிப்போகாது
என்றும் அணைந்துபோகாது
உலகத் தமிழனின் உயிர் மூச்சு நீ


உலகுக்குப் புதிரானவன்
உறவுக்குக் கதிரானவன்
தமிழின் கொடை நீ
தமிழனின் படை நீ


கரையான்களாலும் கருணாக்களாலும்
அரிக்க முடியா விருட்சம் நீ
வீரம் செறிந்த விதை நீ


கடல்நீரைக் கால்வாய்
குடித்துவிடாது
வருவாய்
தமிழின் அகம் நீ
அகத்தில் புறம் நீ

*****



செவ்வாய், 29 மார்ச், 2011

பழந்தமிழக மகளிர் தொழில்முனைவோர்

பழந்தமிழக மகளிர் தொழில்முனைவோர்
முனைவர் ஆ. மணவழகன்

        அடிப்படைத் தேவைகளில் தன்னிறைவை எட்டிய ஒரு சமூகம், அவ்வகை நிறைவுகளை ஆதாரமாகக் கொண்டு, சமூக மேம்பாடு, பொருளாதார முன்னேற்றம் போன்ற பலவழிகளிலும் தம்மை நிலைப்படுத்திக்கொள்ள முனைதல் இயல்பு. சமூக மேம்பாடு, பொருளாதார முன்னேற்றம் என்பவை, தொழில்துறை வளர்ச்சியை மையமாகக் கொண்டவை. மேலும், உள்நாட்டு இயற்கை மூலதனங்கள், பிற நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் மூலப்பொருட்கள், தொழில்நுட்ப அறிவு ஆகியவை தொழிற்துறை வளர்ச்சிக்கான காரணிகளாக அமைகின்றன. எப்படியாயினும், ஒரு சமூகத்தின், நாட்டின் வளர்ச்சிக்கும் வல்லமைத் தன்மைக்கும் தொழில்துறை வளர்ச்சியில் கவனம் செலுத்துதல் இன்றியமையாததாக இன்றைக்கும் வலியுறுத்தப்படுகிறது. 


             கிராமப்புற மற்றும் வேளாண்மைத் தொழிலையே பெரும்பாலும் நம்பியுள்ள இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஏழ்மையை அகற்றி, மக்கள் அனைவருக்கும் போதுமான முறையில் உணவினைக் கிடைக்கச் செய்து, தேசம் வலுப்பெற, பயிர்த் தொழில் மற்றும் கால்நடை வளர்ப்பு, மீன்வளம், வனம் சார்ந்த வேளாண்மை, வேளாண்மை சார்ந்த வணிகம் ஆகிய துறைகளில் விரைந்து வளர்ச்சி அடைய வேண்டும் என்பது இன்றைய சமூகத் தொலைநோக்காக முன்னிறுத்தப்படுகிறது. அதேவேளையில், இவ்வகைச் செயல்பாடுகளில் பழந்தமிழகம் கருத்தைச் செலுத்தியதையும் வளர்ச்சி பெற்றிருந்ததையும் பழந்தமிழ் இலக்கியச் சான்றுகள் உணர்த்துகின்றன. அவ்வகைச் செயல்பாடுகளில் மகளிரின் பங்களிப்பு எவ்வகையில் இருந்தது என்பதை வெளிக்கொணர்தல் மகளிர் தொழில் முனைவோர் பெருகியுள்ள இன்றையச் சூழலில் தேவையாகிறது. மேலும், பொருளாதார வளர்ச்சியின் தொடக்க உத்வேகம் வேளாண்துறையின் மூலமும், அதன் தொடர்வளர்ச்சி தொழில்துறையைப் பொறுத்தும் அமைவதாகக் கணிக்கப்படுகிறது. ஆகவே, இவ்விரு துறைகளுக்கும் பழந்தமிழகம் கொடுத்த முக்கியத்துவத்தையும் அத்துறைகளில் மகளிர் பங்களிப்புகளையும் நோக்குதல் இன்றியமையாததாகிறது.

 வேளாண் உற்பத்தி மற்றும் வேளாண் வணிகத்தில் மகளிர்

உணவு உற்பத்தி

             வேளாண் தொழிலில் முக்கிய உற்பத்திப் பொருள் உணவு. அடிப்படைத் தேவைகளுள் முதன்மையானதான இவ்வுணவு மேலாண்மையில், உணவுப் பொருட்களின் உற்பத்தி – பாதுகாப்பு –பெருக்கம் – பரவலாக்கம் - உணவு வணிகம் என்ற அனைத்து நிலைகளிலும் பழந்தமிழக மகளிரின் தொழில்முறைச் செயல்பாடுகள் குறிப்பிடத்தக்கன. உணவு உற்பத்தியில், நாற்றுநடுதல் (பெரும்பாண்.211-12) தொடங்கி, களை எடுத்தல்(பதி.19), பயிரைக் காத்தல் (புறம்.344), அறுவடை செய்தல் (அகம்.116; மதுரைக்.110), தானியங்களைப் பதப்படுத்துதல் (பட்டினப்.22,23) போன்ற முக்கிய தொழில்களில் பெண்கள் ஈடுபட்டனர். இச்செயல்பாடுகள் மூலதனத்தைப் பெருக்கியதோடு பொருளாதார மேம்பாட்டிற்கும் வழிவகை செய்வதாக அமைந்தன. 


பயிர்ப்பாதுகாப்பு

              வேளாண்தொழிலில் பயிர்ப்பாதுகாப்பு என்பது முக்கியப் பணியாகும். விளையுளின் முழுப்பயனையும் அடைய பயிர்களை நன்கு பராமரித்தால் மட்டும் போதாது, அறுவடைக்குத் தயாரான பயிர்களை விலங்குகள், பறவைகள் போன்றவற்றிடமிருந்துக் காத்தல் இன்றியமையாதது. இவ்வகையில், பயிர்ப் பாதுகாப்புத் தொழிலைப் பழந்தமிழக மகளிர் மேற்கொண்டனர். மலையும் மலைசார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலத்தின் முக்கிய விளைபொருள் தினையாகும். தினைக்கதிர்கள் முற்றி அறுவடைக்குரிய பருவத்தில் கதிர்களைப் பறவைகள் உண்ண வரும். அங்ஙனம் பறவைகளால் தீங்கு ஏற்படாதவாறு குறிஞ்சி நிலத்து இளமகளிர் தினைப்புனத்தைக் காவல் காப்பர். இச் செய்தியைக் குறிப்பிடும் பல இடங்கள் பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. மலையிடத்திலுள்ள சிறிய தினைப்புனத்தை நாடிவரும் சிவந்த வாயையுடைய பசுங்கிளிகளின் கூட்டத்தை ஓட்டும் பொருட்டு, தலைவியைக் கிளிகடி கருவியாகிய தட்டையை எடுத்துக் கொண்டு அத்தினைப் புனத்திற்குச் செல்க என்று தலைவியின் அன்னை அனுப்பி வைக்கிறாள்(நற். 134:3-8;நற்.306:1-3). அதேபோல, பஞ்சுநுனி போன்ற தலையையுடைய, அப்பொழுதீன்ற தினைக்கதிர்களெல்லாம் பால் நிறைந்து முற்றித் தலைசாய்த்தன. அவற்றை உண்ணத்தகுமெனக் கருதிய சிவந்த வாயையுடைய பசிய கிளிகள் அக்கதிர்களைக் கொய்து கொண்டு போகக் கூட்டங் கூட்டமாக வரத் தொடங்கின. எனவே, நீ அங்கே சென்று கிளி ஓட்டும் தட்டையைக் கொண்டு ஒலி எழுப்புக என்று மகளிடம் கூறுகிறார் நற்றிணையில் ஒரு தந்தை (நற்.206:1-6).


               அவ்வாறு அனுப்பப்பட்ட மகளிர், மலைப் பக்கத்தே கட்டின பரண்மீது ஏறி, தழலும் தட்டையுமாகிய கிளிகளைக் கடியும் கருவிகளைக் கையிலே வாங்கிக் கிளிகளை ஓட்டினர்(குறிஞ்சி.41-44). வேங்கை மாலை சூடி, ஆயத்துடன் அழகுற நடந்து தழலினைச் சுற்றியும் தட்டையினைத் தட்டியும் தினைப்புனம் காத்தனர்(அகம்.188:1-13;.118;242; குறு.217:1-2; நற்.22:1; 57:8-9; 102:8-9; 128:6; ஐங்குறு.281). 


உணவுத் தேட்டம்

               வேளாண் தொழிலில் ஈடுபட்டு உணவுத் தேவையை நிறைவுசெய்துகொள்ளும் இயற்கைச்சூழல் இல்லாத திணைப்பகுதி மக்கள், தங்கள் உணவுத் தேவைக்கு வேளாண்மை அல்லாத பிற உணவு மூலதனத்தைத் தேடவேண்டியிருந்தது. அத்தேட்டத்தை, உணவுத்தேவையை நிறைவுசெய்யும் முக்கியத் தொழிலாக நோக்கவேண்டியுள்ளது. காட்டாக, பாலைநிலத்தில் வாழ்ந்தவர் எயிற்றியர். இந்நிலத்துப் பெண்களான எயின மகளிர், உளிபோலும் வாயையுடைய பாரைகளாலே கரிய கரம்பு நிலத்தைக் குத்திக் கிளறிப் புழுதியைத் தோண்டி நுண்ணிய புல்லரிசிகளைச் சேர்ப்பர். பின் அப்புல்லரிசியை விளா மரங்களின் நிழலையுடைய தம்வீட்டு முற்றத்தே தோண்டப்பட்ட நிலவுரலிலே இட்டு, சிறிய வலிய உலக்கையால் குற்றி எடுப்பர்(பெரும்.88:97). இவ்வாறு, பெண்களின் தேட்டத்தால் கிடைத்த புல்லரிசியும் ஆண்களின் வேட்டையால் கிடைத்த ஊணும் எயினர்களின் உணவுத் தேவையை நிறைவு செய்ததை அறிய முடிகிறது. 


உணவுப் பரவலாக்கம்

             நாட்டில் உணவு உற்பத்தி போதுமான அளவில் இருந்தாலும், உணவுப் பொருள் முடக்கம் என்பது நாட்டின் ஒருபகுதி மக்களைப் பசிப்பிணியில் ஆழ்த்திவிடுகிறது. அதனால், உணவுப் பொருள் பரவலாக்கம் ‘அனைவருக்கும் உணவு’ என்ற இலக்கை எட்ட வழிவகுப்பதாக அமைகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகள் வளர்ந்துள்ள இன்றைய நிலையிலும், உணவுப் பொருள் முடக்கம் என்பது வறுமையின் ஒரு முக்கியக் காரணியாகச் சுட்டப்படுகிறது. அதே வேளையில், உணவுப் பொருள் பரவலாக்கத்திற்குச் சில குறிப்பிடத்தகுந்த செயல்பாடுகளைப் பழந்தமிழகம் கொண்டிருந்ததை அவர்தம் இலக்கியப் பதிவுகள் காட்டுகின்றன.

                 பண்டைக் காலத்தில் காசுகள் புழக்கத்தில் இருந்தும், வாணிகம் பெரும்பாலும் பண்டமாற்று முறையிலேயே நடைபெற்றது. உணவுப்பொருட்களும் இவ்வகை பண்டமாற்று முறையிலேயே பரவலாக்கப்பட்டன. திணைசார் உணவுப்பொருட்கள் பண்டமாற்றில் சிறப்பிடம் பெற்றன. எல்லாவகை நில மக்களும் எல்லாவகை உணவுப்பொருட்களுக்கும் நுகர்வோராய் அமைய இம்முறை ஏதுவாகியது. குறிப்பாக, இவ்வகை உணவுப் பரவலாக்கத்தில் பழந்தமிழக மகளிர் தொழில்முனைவோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. பரதவர் மற்றும் ஆயர் குடியில், ஆடவர் உணவுப்பொருட்கள் உற்பத்தியிலும் மகளிர் அதைச் சார்ந்த வாணிகத்திலும் ஈடுபட்டு வந்துள்ளமை தெளிவாகிறது. பரதவ இன மகளிர் மீன், உணங்கல் மீன் போன்றவற்றைப் பண்டமாற்றுவதில் முன்னிற்கின்றனர். ஆயர் இன மகளிர் பால்படு பொருட்களின் விற்பனையிலும் அவற்றைச் சார்ந்த பொருளாதார ஈட்டலிலும் முன்னிலை பெறுகின்றனர். 

                     அதேபோல, பால், தயிர் மற்றும் மோருக்குத் தானியமும்(குறு.221:3,4; பெரும்பாண்.155-165; புறம்.33:1-8), மீனுக்கும் இறைச்சிக்கும் வெண்நெல்லும்(நற்.239:3; அகம்.60:4; 340:14; ஐங்குறு.48:1-3; புறம்.33:1-8; 343:1,2; ஐங்குறு.47,47,49,), மான் தசைக்குத் தயிரும்(புறம்.33:1-6), பாலுக்குக் கூழமும் (குறு.221:3-4), நெய்க்கு எருமையோடு கன்றும்(பெரும்பாண்.162-65), தேன் மற்றும் கிழங்கிற்கு மீன்நெய் மற்றும் நறவும்(பொருநர்.214-217), கரும்பு மற்றும் அவலுக்கு மான்தசை மற்றும் கள்ளும்(பொருநர்.214-217), யானை வெண்கோட்டிற்கு உணவும் நறவும்(அகம்.61:9-10), மீன், கருவாடு போன்றவற்றிற்குக் கிழங்குகளும், ஊன் மற்றும் மது வகைகளும் (பொருநர்.215-217), கள்ளிற்கு ஆநிரையும் விலைகூறப்பெற்றன. மேலும், காட்டில் வாழும் வேட்டுவர் கொண்டுவரும் ஊனும், முல்லை நிலத்துப் பெண்டிர் கொண்டுவரும் தயிரும், மருத நில நெல்லுக்குப் பண்டமாற்றப்பட்டன (புறம்.33:1-6). இவ்வகையில், உணவு வணிகத்தில் மகளிர் தொழில் முனைவோர் தங்கள் இல்லத் தேவைகளை நிறைவு செய்துகொண்டதோடு சமூகப் பொருளாதாரத்தையும் மேம்படுத்தியது தெரியவருகிறது. 


கடல் சார் தொழில் முனைவோர்

                கடலும் கடல்சார்ந்த நிலப்பகுதியும் நெய்தல் நிலம் எனப்பட்டது. இப்பகுதியில் வாழ்ந்த பரதவ மக்கள் கடலில் கலம் செலுத்தி மீன் பிடித்தலைத் தம் தொழிலாகக் கொண்டவர். கடல்படு பொருட்களுள் மீனும், உப்பும் பரதவ மகளிர் தொழில்முனைவோருக்கு முக்கிய வணிகப் பொருட்களாயின.

மீன் பிடித்தலும் விற்றலும்

               பரதவர் பிடித்து வரும் மீன்களைப் பரதவகுலப் பெண்டிர் ஊருக்குள் எடுத்துச் சென்று விற்றுவிட்டு அதற்கு ஈடாகத் தமக்குத் தேவையான பிற பொருட்களைப் பெற்று வந்தனர். இதனை, 

ஓங்குதிரைப் பரப்பின் வாங்குவிசைக் கொளீஇ
-----------------------------------------------------------------------
விழவு அயர் மறுகின் விலையெனப் பருகும் (அகம்.320:1-4)


என்பதில் அறியலாம். பாண்மகள், நள்ளிரவில் சென்று பிடித்துத் தன் தமையன்மார் விடியலில் கொணர்ந்த திரண்ட கோடுகளை உடைய வாளை மீன்களுக்கு ஈடாக, நெடிய கொடிகள் பறக்கும் கள் மிக்க தெருவில் பழைய செந்நெல்லை வாங்க மறுத்துக் கழங்கு போன்ற பெரிய முத்துகளையும் அணிகலன்களையும் பெற்று வந்ததையும்(அகம்.126:7-12), வரால் மீன் கொண்டு வந்த வட்டி நிறைய இல்லக்கிழந்திகளிடம் பழைய நெல்லையும் (ஐங்.48:11-3), அரிகாலில் விதைத்துப் பெறும் பயறினையும் (ஐங்.47:1-3) பெற்று வந்ததையும் அறியமுடிகிறது.


இவற்றோடு, பரத ஆண்கள் பிடித்து வரும் மீன்களை வணிகப்படுத்தியதோடு, பெண்களே மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டதும் தெரியவருகிறது. கயிற்றையுடைய தூண்டிற்கோலால் மீன்களைப் பிடித்த பாணர் மகளை, 

                             நாண்கொள்நுண் கோலின் மீன்கொள் பாண்மகள்
தான்புனல் அடைகரைப் படுத்த வராஅல் (216:1,2)

என்று காட்டுகிறது அகநானூறு.

உணங்கல் மீன் உற்பத்தி

                பரதவ ஆண்கள் பிடித்து வந்த மீன்களுள் விற்றது போக எஞ்சியவற்றையும், விற்பனைக்குரிய காலங்கடந்து பிடித்தவற்றையும் பரதவ மகளிர் உப்பிட்டு உலர வைத்து உணங்கல் மீன் தயாரிப்பர். வருவாயைப் பெருக்கிய தொழிலுள் இதுவும் குறிப்பிடத்தக்கது. இத்தொழிலையும், தொழில்நுட்பத்தையும் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. கடற்கரை மணலில் மீன்கள் உலர்த்தப்பட்டிருந்தன(அகம்.300:1-2). பரதவர் பிடித்து வந்த மீன்களும் இருங்கழியில் முகந்து வந்த இறால்களும் நிலவொளி போலும் எக்கர் மணலில் நன்றாக உலர்ந்து, பாக்கம் எங்கிலும் புலால் நாற்றம் பரவி வீசியது(குறு.320:1-4). பரதவ மகளிர் நிணம் மிகுந்த பெரிய மீன்களைத் துண்டங்களாகத் துணித்து உப்பிட்டு, வெண்மணல் பரப்பில் அவற்றைப் பரப்பி வெயிலில் உலர்த்தி, பறவைகள் அவற்றைக் கவராமல் காவல் காத்தனர். இதனை,

உரவுக்கடல் உழந்த பெருவலைப் பரதவர்
மிகுமீன் உணக்கிய புதுமணல் ஆங்கண் (நற்.63:1-2)

என்பதிலும்,

நிணச்சுறா அறுத்த உணக்கல் வேண்டி
இனப்புள் ஒப்பும்
(நற்.45:6-7)

என்பதிலும் அறியலாம்.

உப்பு வணிகம்

              எந்தத் திணையைச் சார்ந்த மக்களாயினும் அவர்களின் அன்றாடத் தேவைகளுள் முதன்மையானது உப்பு. அதனால், நெய்தல் நில மகளிர் உப்பு வணிகத்தில் சிறப்புடன் ஈடுபட்டனர். உப்பு வணிகர் உமணர் எனப்பட்டனர். உவர் நிலத்தில் விளைவித்த உப்பினை வண்டிகளில் ஏற்றிச் சென்று மற்ற இடங்களில் வாழும் மக்களிடத்தே விற்பர். உமணர்கள் தங்கள் குடும்பத்தோடு கூட்டங்கூட்டமாக உப்பு விற்கச் சென்றனர். உப்பு வண்டிகளை உமணப் பெண்களே ஓட்டிச் சென்றனர். ஊருக்குள் சென்றதும் உப்பு விலை கூறி விற்பர். உப்பிற்கு ஈடாக பிற பொருட்கள் மாறு கொள்ளப்பட்டன (பெரும்பாண்.56-65; நற்.183; அகம்.60:4; 140:7-8; 390:8-9; குறு.269:5-6; பெரும்பாண்.164-165; மலைபடு.413; பட்டினப்.28-30). உப்பிற்கு ஈடாக நெல்லைக் கோரும் உமணப் பெண்களை,

உமணர் காதல் மடமகள்
---------------------------------------
சேரி விலைமாறு கூறலின் (அக.140:5-8)

என்பதிலும்,

நெல்லும் உப்பும் நேரே ஊரீர்
கொள்ளீரோவெனச் சேரிதொறும் நுவலும் (அக.390:8-9)

என்பதிலும் காணலாம்.

உடை உற்பத்தியில் மகளிர்

            பழந்தமிழக மகளிர் உடை உற்பத்திக்கானத் தொழில்நுட்பத்தினைக் கற்று அத்தொழிலில் ஈடுபட்டனர். கணவனைப் பிரிந்த பெண்கள், தனியே இருக்கும் பெண்கள் உட்பட இல்லிருப்போர், தங்கள் குடும்பத்திற்குத் தேவையான பொருளாதாரத்தை ஈட்ட, நெசவுத் தொழிலை வீட்டிலிருந்தே மேற்கொண்டனர். இத்தொழிலில் ஈடுபட்ட மகளிர் ‘பருத்திப் பெண்டிர்’ என வழங்கப்படுகின்றனர். இவ்வகைப் பருத்திப் பெண்டிர் செய்த நூலாலான பனுவலை, ‘பருத்திப் பெண்டின் பனுவ லன்ன’(புறம்.125: 1) என்று உவமையாக்குவார் புலவர். ஆடை நெய்யப் பயன்படும் பருத்தியை வில்லாலடித்து அதிலுள்ள கொட்டையும், கோதும் நீக்கித் தூய்மை செய்ததை, எஃகுறு பஞ்சிற் றாகி (நற்.247:), வில்லெறி பஞ்சி (நற்.299:7) என்ற குறிப்புகள் காட்டுகின்றன. அதேபோல, பருத்தியை எடுத்துவந்து, அதிலிருக்கும் தூசு, செற்றை ஆகியவற்றை நீக்கும் பணியில் இரவிலும் விளக்கொளி வைத்து ஈடுபட்டிருந்த பருத்திப் பெண்டிரை,

சிறையும் செற்றையும் புடையுந ளெழுந்த பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்து (புறம்.326:4-5)

என்ற பாடலடிகள் காட்டுகின்றன.

உடை - பராமரிப்புத் தொழில்

                பழந்தமிழர் உடைகளை உற்பத்தி செய்ததோடு, அவ்வுடைகளைப் பராமரிக்கும் நுட்பத்தினையும் பெற்றிருந்தனர். உடைகள் நன்றாக வெளுத்து உடுக்கப்பட்டன. ஆடை வெளுக்கும் தொழிலில் ஈடுபட்டோர் ‘காழிகர்’ (அகம்.89:7-9,17) என அழைக்கப்பட்டனர். இவர்கள், உடையை ‘உவர்மண்’ கொண்டு வெளுத்தனர். உடைவெளுக்கும் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் ‘புலத்தியர்’ எனப்பட்டனர்(புறம்.311). உடை- அடிப்படைத் தேவை என்பதும், உடையில் தூண்மை மிகவும் வலியுறுத்தப்பட்டதும் இத்தொழில் செய்வோரின் தேவையை அதிகப்படுத்தியது. 

                     உடை வெளுத்தலோடு, அவற்றிற்குக் கஞ்சி தோய்த்து மெருகூட்டுதல் பல இடங்களில் சுட்டப்படுகிறது. அன்னச் சேவலின் மயிரைப்போன்ற வெண்ணிறக் கஞ்சியினைப் புலைத்தி பயன்படுத்தினாள்(அகம்.34:11,12). அழகிய உடைகளின் கரைகளிலே பொருந்திய அழுக்குகளை அகற்றுவதற்காக, தனது கூரிய நகமுடைய பசை சேர்ந்த விரலாலே நெருடி உடைகளை நன்னிறம் அடையச் செய்ததையும், கஞ்சியிலே தோய்த்தெடுத்து, முதல் ஒலிப்பினை ஒலித்த பின்னர், குளிர்ந்த குளத்திலே முறுக்கிய பருத்தி உடைகளைப் போட்டு, பகன்றை மலரைப் போன்ற வெண்ணிறமாக்கியதையும் காணமுடிகிறது(அகம்.387:5-7). மேலும், உடைகள் குளத்து நீரிலே கஞ்சியிடப்பட்டு தோய்க்கப்பட்டு அடித்துத் வெளுக்கப்பட்டன(குறு.330). அதேபோல, கூத்தியர் ஆடுகின்ற விழாவின் ஒலியையுடைய மூதூரிலே, உடைகளை ஒலிப்பவள், இரவிலே தோய்த்த சோற்றின் கஞ்சியிட்டுப் புலர்த்திய சிறிய பூத்தொழிலையுடைய உடைகள் காட்டப்படுகின்றன(நற்.90:1-5). புலத்தி துணி வெளுக்கின்ற இடம் ‘துறை’ எனப்பட்டது(கலி72). உடைகளில் உள்ள அழுக்கினை உவர்நீர் நன்கு நீக்கும் என்பதால், அவ்வகை களர்ப்படு கூவல்களில் புலத்தி நாளும் உடைகளை வெளுத்தாள்(புறம்.311). ஆனால், இவ்வகைத் தொழிலில் பொருளாதார ஈட்டல் என்பது அறியப்படவில்லை. 

கால்நடை வளர்ப்பு

                வேளாண்மைத் தொழிலின் துணைத்தொழிலாகக் கால்நடை வளர்ப்பு அமைகிறது. பண்டைத்தமிழர் கால்நடைகளின் பயனை நன்கு உணர்ந்திருந்தனர். சமுதாயப் பொருளாதார வலிமையைத் தீர்மானிக்கும் காரணிகளுள் ஒன்றாகக் கால்நடைகளின் எண்ணிக்கை அமைந்திருந்தது. (பண்டைத்தமிழில் ‘மாடு’ என்னும் சொல்லே செல்வம் என்பதைக் குறித்திருக்கிறது [Early Indian coins and currency system. P.14, S.K. Mait] ). நாட்டில் செல்வவளம் பெருக, கால்நடை வளம் பெருகவேண்டும் என்று தலைவி வாழ்த்தியதை, ‘புலரி விடியல் பகடுபல வாழ்த்தி’(புறம். 385:2) என்றும், ‘பால்பல ஊறுக! பகடுபல சிறக்க’ (ஐங்குறு.3:2) என்றும் இலக்கியங்கள் காட்டும். கால்நடை வளர்ப்புத் தொழிலில் பால்கறத்தல் முதல், பால்படு பொருட்களை வணிகமாக்கி பொருளாதாரத்தை மேம்படுத்துதல் வரை அனைத்து நிலைகளிலும் மகளிர் தொழில் முனைவோரே முன்னிலை பெறுகின்றனர். 

                    ஆநிரைகளிலிருந்து மாமிசம், பால், தயிர், வெண்ணெய் போன்ற வணிகப் பொருட்கள் பெறப்பட்டன. பால், தயிர், வெண்ணெய், நெய், மோர் போன்றவற்றின் விற்பனையில் ஆயர் மகளிர் ஈடுபட்டனர். இவர்கள், இரவில் பாலுக்குச் சிறிய உறையை ஊற்றிவைப்பர் (புறம்.276:4,5); விடியற்காலையில் தயிரினைக் கடைந்து மோராக்கி விற்கச் செல்வர் (பெரும்பாண்.229; பெரும்பாண்.155:60). ஆய்மகள் மோற்விற்று அதற்கு ஈடாகப் பிறபொருட்களைப் பெற்றுத் தன் சுற்றத்தாரை உண்பித்தாள் (பெரும்பாண்.165:66). அதோடு, அவள் தான் விற்கும் நெய்க்கு ஈடாகப் பொன்னைப் பெறாமல், நன்கு பால் கொடுக்கும் பசுக்களையும், எருமைகளையும் வாங்கித் தனது தொழில் மூலதனத்தைப் பெருக்கிக் கொண்டாள். இதனை, 

நெல்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்
எருமை நல்லான் கருநாகு பெறூஉம் (169:70)

என்கிறது பெரும்பாணாற்றுப்படை.

கள் உற்பத்தி மற்றும் வணிகம்

                   கள்ளானது அரித்து எடுக்கப்படுவதால் அரியல் எனப்பட்டது. அதனைக் காய்ச்சி விற்கும் பெண்கள் ‘அரியல் பெண்டிர்’ எனப்பட்டனர் (பண்டைத் தமிழர் தொழில்கள், ப.298). வணிகத்திற்காக கள் காய்ச்சிய பழந்தமிழக மகளிரை, கள்ளடு மகளிர் (339-40) என்கிறது பெரும்பாணாற்றுப்படை. பரதவ மகளிர் மது உற்பத்தியில் ஈடுபட்டதைச் சிறுபாணாற்றுப்படையும் காட்டுகிறது. இதில், கடலில் அடித்து வரப்பட்ட பெரிய அகில் மரத்தினை விறகாக்கி, பெரிய தோள்களையும் வேல் போன்ற கண்களையுமுடைய நுளைமகள் கள் தயாரித்ததாகச் சுட்டப்படுகிறது(சிறுபாண்.154-59). அகநானூற்றுப் பாடலொன்று போர் வீரர்களுக்குக் கள்ளினைக் கொடுக்கும் பெண்ணைக் காட்டுகிறது. இவள் பானையில் கள்ளினைச் சுமந்துச் சென்று வீரர்களுக்கு வழங்குகிறாள்(157;1-4). இதன்வழி பழந்தமிழக மகளிருள் ஒரு பிரிவினர் கள் உற்பத்தியிலும் வணிகத்திலும் ஈடுபட்டு வந்தது தெரியவருகிறது. கள் திணைசார் பொருள்களுக்கு மாறுகொள்ளப்பட்டதைப் பல இடங்களில் காணமுடிகிறது. 

பிற சிறுதொழில் முனைவோர்

                  உணவு உற்பத்தி, வணிகம், கால்நடை வளர்ப்பு போன்ற பெருந்தொழில்களில் ஈடுபட்ட மகளிரோடு, கோழி வளர்ப்பு, பூ விற்றல், பண்ணியம் விற்றல் (பலகாரம்) போன்ற சிறுதொழில் முனையும் மகளிரையும் பழந்தமிழ் இலக்கியங்கள் காட்டுகின்றன. மனைகளில் கோழி முதலிய பறவைகளை வளர்த்த பெண்களை அகநானூறு(227), பெரும்பாணாற்றுப்படை(293) போன்றவற்றில் காணமுடிகிறது. 

                    மருத நிலத்துப் பெண்கள் பூ விற்கும் தொழிலில் ஈடுபட்டனர் (நற். 97:6-9). இவர்கள், அவ்வப் பருவங்களில் மலரும் வண்டுமொய்க்கும் புது மலர்களைத் தெருக்கள் தோறும் திரிந்து விற்றனர்(நற்.97:6-9; 118:8-11). கையில் பாதிரி, பித்திகை, குருக்கத்தி போன்ற மலர்களைத் தாங்கிய அகன்ற வட்டிலை ஏந்தியிருந்தனர்(நற்.97:6-9). மலர்மாலைகளும் பின்னினர்(சிறுபாண்.54; மதுரைக்.511-518). அதேபோல, கார் காலத்தில் மலரும் குருக்கத்தி, சிறுசண்பகம் முதலான மலர்களைக் கடகப் பெட்டியில் வைத்துக் கையிலெடுத்துக் கொண்டு விலைக்குக் கொள்ளீரோ எனக் கூறிச் சென்று வணிகம் செய்தனர்(நற்.97;6-9). தெருக்களில் மட்டுமல்லாது இல்லங்கள் தோறும் சென்றும் பூக்களை விற்றனர் (நற்.293:2-6).

               பழந்தமிழகத்து முது பெண்டீரும் தங்களால் இயன்ற சிறு வணிகத்தில் ஈடுபட்டுத் தங்கள் வாழ்வை மேம்படுத்திக்கொண்டதை அறிய முடிகிறது. இவர்கள், மலர் விற்பனை, பண்ணியம் விற்பனை போன்றவற்றில் ஈடுபட்டனர். இவர்கள், பல்வேறு வகையான செப்புகளில் கண்டோர் விரும்பும் திண்பண்டங்களை மணமிக்க மலர்களோடே ஏந்திச் சென்று இல்லந்தோறும் சிறுவணிகம் செய்தனர் (மதுரைக்.409) என்பதை அறியமுடிகிறது. 

சான்றுகளின் முடிவாக

 மேற்கண்ட பழந்தமிழ் இலக்கியக் குறிப்புகளின் வழி, பழந்தமிழக மகளிர் அடிப்படைத் தேவைகளின் நிறைவிற்கும் பொருளாதார மேம்பாடிற்கும் முக்கியப் பங்காற்றினர் என்பது தெளிவாகிறது. 

 இவ்வகைச் செயல்பாடுகளை இல்லத் தலைவனோடு இணைந்தும் தனித்து நின்றும் மேற்கொண்டனர் என்பதும் அறியப்படுகிறது. 

 மகளிர் பெருந்தொழில் முனைவோராக, உணவுத் தேட்டம், உணவு உற்பத்தி, உணவுப் பரவலாக்கம், உடை உற்பத்தி, மீன் பிடித்தல், மீன் கொள்முதல், உணங்கு மீன் உற்பத்தி, உப்பு உற்பத்தி மற்றும் வணிகம், கள் உற்பத்தி மற்றும் வணிகம் போன்றவற்றில் ஈடுபட்டோரை இனங்காண முடிகிறது.

 சிறுதொழில் முனைவோராக, கோழி வளர்ப்பு, மலர் வணிகம், பண்ணியம் விற்றல், சுண்ணம் தாயாரித்தல் மற்றும் விற்றல் போன்றவற்றில் ஈடுபட்டோரை பாகுபடுத்த முடிகிறது. 

 இதன் வழி, பழந்தமிழக மகளிர் தொழில்முனைவோர் தங்கள் குடும்பத் தேவைகளை நிறைவுசெய்து சுற்றத்தைக் காத்ததோடு, சமூகப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றினர் என்பது தெளிவாகிறது. 

(குறிப்பு - 2010 - உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் வழங்கப்பட்ட கட்டுரை)

தமிழில் ஆராய்ச்சி

தமிழில் ஆராய்ச்சி
ஆ. மணவழகன்

         மனிதன் தன்     தேவைகளைத் தானே நிறைவு செய்துகொள்ள முனையும் முதல் கணத்திலேயே அவனுடைய ஆராய்ச்சி அறிவும் செயல்படத் தொடங்கிவிடுகிறது. உலகின் மிகத் தொன்மையான இனத்துள் ஒன்றாகச் சுட்டப்படும் தமிழினத்திற்கும் இது பொருந்தும். அவ்வகையில், தமிழர் மொழியும், உலகின் மிகப் பழமையான மொழிகளுள் இடையறுத லின்றி வாழும் ஒரே மொழியுமான தமிழ் மொழியில் காணக்கிடைக்கும் பண்டை நூல்களுள் ஆராய்ச்சிகளும் அவற்றிற்கான கூறுகளும் நிறைந்துள்ளன. அவற்றை இன்றும் வெளிவந்துகொண்டிருக்கும் ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

              12ஆம் நூற்றாண்டில் தோன்றிய உரைநடை இலக்கியங்களில் பழந்தமிழரின் பல்வேறு அறிவுநுட்பங்கள் உரையாசிரியர்களால் ஆங்காங்கே எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.. ஓலைச் சுவடிகளாகக் கிடைத்த பழந்தமிழ் நூல்கள் பதிப்புகளாக பெருமளவு அச்சேறிய 19,20ஆம் நூற்றாண்டுகளுக்குப் பின்னர், அவை தொடர்பான ஆய்வுகளும், கருத்தரங்குகளும்,சொற்பொழிவுகளும் பல்வேறு தரப்பினரால்முனைப்புடன் நிகழ்த்தப்பட்டு. நூல்களாக வெளியிடப்பட்டன. மேலும், தமிழில் ஆராய்ச்சி என்பது காலந்தோறும் பல்வேறு கோணங்களிலும் வளர்ச்சிபெற்று வந்துள்ளமையைக் காணமுடிகிறது. அவ்வகையில், 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைத் தமிழாய்வுகளுக்கான ‘மறுமலர்ச்சி காலம்’ எனலாம். இக் காலகட்டத்தில் தமிழில் புதிய புதிய துறைகளும், அத்துறைகள் தொடர்பான ஆய்வுகளும் பெருமளவு தோன்றி பல்வேறு பரிமாணங்களோடு வளர்ந்து வருகின்றன. தமிழில் இன்றளவும் வெளிவந்து கொண்டிருக்கும் ஆய்வுகள் மொழிக்கும், அறிவுக்கும் சிறப்பு சேர்க்கும் வண்ணம் அமைந்துள்ளன.

தமிழ் ஆய்வுக் களங்கள்

           இலக்கியம், இலக்கணம் என்ற தொடக்க நிலை ஆய்வுகளிலிருந்து, 20-21ஆம் நூற்றாண்டுகளில் தமிழ் ‘ஆய்வுக்களம்’ பல நிலைகளிலும் மாறுபட்ட, புதிய போக்குகளைக் கொண்டு விளங்குகிறது.

           மொழி, பண்பாடு, மொழியியல், ஒப்பிலக்கியம், திறனாய்வு, மரபுவழி கலைகள், தமிழிசை, தொல்லியல், நாட்டுப்புறவியல், பண்பாட்டு மானுடவியல், படைப்பிலக்கியம், நாணயவியல், அரசியல், சமூக வரலாறு, சமயத் தமிழ், எழுத்து முறைகள், அகராதியியல், மெய்யியல், கல்வெட்டியல், சுவடியியல், சோதிடவியல், நாடகவியல், ஊடகவியல், மொழிபெயர்ப்பு, கலைச் சொல்லாக்கம், எதிர்காலவியல், வானியல், புவியமைப்பியல், உடலியல், உயிரியல், நீரியல், மரபுசார் வேளாண் அறிவியல், மண்ணறிவியல், கட்டுமானக் கலை, தமிழ் மருத்துவம், தலித்தியம், பெண்ணியம், பின்நவீனத்துவம், விளிம்புநிலை மக்கள் இலக்கியம், மண்சார்ந்த இலக்கியம், மொழிக்கல்வி, மரபுவழி அறிவியல், மொழிசார் இயக்கங்கள், சூழலியல், நுண்கலைகள், ஆவணத் தமிழ், அறிவியல் தமிழ், மேலாண்மை, தொலைநோக்கு, கணினித் தமிழ் போன்ற பல தளங்களில் தமிழ் ஆராய்ச்சி தன் போக்கைப் பலகிளைகளாக விரிவுபடுத்தியுள்ளது. குறிப்பாக, இவற்றுள் பல களங்களில் தமிழ் படித்த ஆய்வாளர்கள் மட்டுமன்றி, தமிழறிந்த பிறதுறை வல்லுநர்களும் தங்கள் பங்களிப்பை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

            அண்மைக்காலமாக வளர்ச்சியுற்றுவரும் இப்போக்கு, தமிழ்மொழியில் பிறதுறை ஆக்கங்களும், ஆய்வுகளும் மிகுதியாக வெளிவரவும் வளரவும் வழிவகை செய்துள்ளது. இவற்றுள்ளும், ‘அறிவியல் தமிழ்’ புதிய ஆய்வாளர்களுக்கும், பிறதுறை வல்லுநர்களுக்கும் பெரிதும் இடமளிக்கும் ‘தமிழ் ஆய்வுக்’ களமாக முகிழ்ந்துள்ளது. ‘அறிவியல் தமிழ்’ பல துறைகளோடு தொடர்புடையதாலும், தமிழின் எதிர்கால நலனில் பெரும் பங்காற்றவல்லதாலும் அதன் தன்மையும் தேவையும் குறித்து இங்குத் தனியே நோக்கப்படுகிறது.

அறிவியல் தமிழ்

          அறிவியல் தமிழ் என்பது, அறிவியல் துறை சார்ந்த கருத்துகளை அறிவியல் மொழியில் விளக்கும் இயற்றமிழ் வகை என்பர் (வளரும் தமிழ், ப.162). மேலும் இதனை, பல துறைகளில் அறிவைப் பெற விழையும் தமிழரின் அறிவுப் பசியைத் தணிக்க எழுந்த பலதுறை நூல்களுள் அமைகின்ற ஒரு வழக்கை அறிவியல் தமிழ் எனலாம் (வளரும் தமிழ், ப.163) என்றும் விளக்குவர். தமிழில் உள்ள அறிவியல் கருத்துகளை வெளிக்கொணர்தல் அறிவியல் தமிழில் ஒருவகை செயலாக்கம் என்றாலும், அறிவியல், தொழில்நுட்பங்களைத் தமிழில் படைத்தளித்தலே ‘அறிவியல் தமிழாக’ சுட்டப்படுகிறது. இங்கு, மொழிக்கு இரண்டாம் இடமும், அறிவியலுக்கு முதன்மை இடமும் வழங்கப்படுகிறது.

தாய்மொழியும் அறிவியல் மொழியும்
           அறிவியலின் வளர்ச்சி என்பதும், தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு என்பதும் தோன்றும் இடங்களால் வேறுபடலாம். ஆனால், அவற்றின் பயன் உலக பொதுநோக்கை முன்னிறுத்துவது. அறிவியலை ஆணிவேராகக் கொண்டு இயங்கும் இன்றைய உலகச் சூழலில், அறிவியலின் பயனையும், தொழில்நுட்பத்தின் திறனையும் ஒருவர் எளிதில் பெற, அவரின் தாய் மொழியில் அவை வழங்கப்படுதல் வேண்டும்.

          உலகமயமாக்கலின் இன்றைய சூழலில், மக்கள்வளமும், நுகர்வோரும் நிறைந்த இந்தியா போன்ற நாடுகள் வெற்றுச் சந்தைகளாக மாறிவரும் இன்றைய நிலையில், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் பற்றிய அறிவை அவரவர் தாய்மொழியில் கைக்கொள்ளுதல் அறிவியல் யுகத்தில் நம்மையும் இணைத்துக்கொள்ள ஏதுவாகிறது. மேலும், அறிவியல், தொழில்நுட்பம் பற்றிய மாயையை உடைப்பதாகவும், சராசரி மனிதனுக்கும் தொழில்நுட்பத்திற்குமான இடைவெளியைக் குறைப்பதாகவும் இது அமைகிறது. இக்கருத்தை, ‘உலகின் பல்வேறு பாகங்களிலும் அந்தந்த நாட்டுக்கு இன்றியமையாத அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் கண்டுபிடிப்புகள் உருவாகி வருகின்றன. இந்தப் புதுமைகளை, மக்கள் அறிந்து, புரிந்து தன் வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும். அதுவே அறிவியல் வளர்ச்சியின் உண்மையான பயன் ஆகும்’ (இந்திய அறிவியல் தொழில்நுட்பம், ப.233) என்ற அறிஞர் கூற்று உறுதிப்படுத்துகிறது.

           மேலும், ‘புதிய புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான செயல்விளக்கமும், பயன்பாடும் மக்களைச் சென்றடைய மொழி ஓர் ஊடகமாகப் பயன்படுகிறது. இவ்வூடகம் ஒருவரின் தாய்மொழியாக இருக்கும் நிலையில் கருத்துப் பரிமாற்றம் மேலும் சிறப்பானதாகவும், தெளிவானதாவும், எளிமையானதாகவும் அமையும் என்பது திண்ணம்’ (வளரும் தமிழ், பதிப்புரை) என்றும் சுட்டப்படுகிறது. இக்கருத்து, தாய்மொழி வழி அறிவியல் வளர்ச்சியின் தேவையை வலியுறுத்துகிறது. அதேவேளை, அறிவியல் என்பது தமிழுக்குப் புதிய துறை அன்று. நம் முன்னோர்கள் மருத்துவம், மனையியல், வானவியல், கணிதம், சோதிடவியல், உலோகவியல், பொறியியல், உயிரியல் போன்ற பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டிருந்ததும் அவற்றைத் தம் இலக்கியங்களில் பதிவு செய்துவைத்திருப்பதும் இங்குச் சுட்டத்தக்கது.

அறிவியல் கலைச்சொற்கள்

           அறிவியல் தமிழாக்கத்தில் ‘கலைச்சொல்லாக்கம்’ முக்கியப் பங்கினை வகிக்கிறது. குறிப்பிட்ட துறையிலுள்ள கருத்துகளுக்கான பொருளை விளக்கப் பயன்படும் சொல்லையே கலைச்சொல் என்று குறிப்பிடுகிறோம். ‘சாதாரண வழக்கில் உள்ள சொற்களே அறிவியலில் சிறப்புப் பொருளைத் தரும்பொழுது கலைச் சொல்லாகிறது’ (அறிவியல் தமிழ், டி.பத்மனாபன், ப.2). மொழிபெயர்ப்பு, மொழியாக்கம், ஒலிபெயர்ப்பு என்ற மூன்று நிலைகளில் அமையும் கலைச்சொல்லாக்கத்தின் அடிப்படையிலேயே அறிவியல் தமிழாக்கத்தின் பயன் வெளிக்கொணரப்படுகிறது. கருத்துகளை வரையறையோடும் துல்லியமாகவும் வெளியிடத் துணைபுரிபவை அந்தந்தத் துறைசார்ந்த கலைச்சொற்களே. அவ்வகைக் கலைச்சொற்களை உருவாக்கும் பணிகள் அரசு நிறுவனங்களாலும் (தமிழ் வளர்ச்சித் துறையின் ‘கலைச்சொற் அகராதி’ போன்றவை), பல துறைகளைச் சார்ந்த தமிழ் ஆர்வலர்களாலும் (மணவை முஸ்தபாவின் ‘கணினி கலைச்சொல் அகராதி’ போன்றவை) தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அறிவியல் தமிழாக்கம்

அறிவியல் தமிழாக்கம் என்பதில், அறிவியல் தமிழில் கட்டுரைகளும் நூல்களும் வெறும் மொழிபெயர்ப்புகளாக வெளிவந்துகொண்டிருந்த நிலை மாறி, தமிழிலேயே அறிவியல் படைப்புகளை உருவாக்கும் பரவலான நிலையை இன்று காணமுடிகிறது. ‘தமிழில் அறிவியல் எழுதுவோரைக் காட்டிலும், அறிவியல் பற்றி எழுதுவோரும், பேசுவோரும் பெருகிவிட்டனர். அதனாலேயே இத்தருணத்தில் தமிழகத்தின் பல்துறை அறிவியல், பொறியியல் பேராசிரியர்கள் தம்தம் துறைசார் அறிவியல் ஆய்வுகளைத் தமிழில் வழங்க முன் வந்திருப்பது பாராட்டுக்குரியது’ (அறிவியலும் இலக்கியமும், சில மதிப்பீடுகள், ப.24) என்ற இன்றைய நிலை இங்குச் சுட்டத்தக்கது. அரசின் உந்துதல் என்பதைவிட தனிமனித முயற்சிகள் இப்பணியில் பெரும்பங்கு வகிக்கின்றன.

அறிவியல் தமிழ் வளர்க்கும் இதழ்கள் மற்றும் அமைப்புகள்

          முதல் அறிவியல் இதழ் 1831ஆம் ஆண்டு வெளிவந்த ‘தமிழ்மேகசின்’ என்ற தமிழ்மாத இதழாகும். இது தமிழில் அறிவியல் கருத்துகளை வெளியிட முடியும் என்ற நம்பிக்கை வலுப்பெற உதவியது. 1933இல் தொடங்கப்பட்ட ‘தமிழ்க்கடல்’ என்ற இதழ் தன் நோக்கத்தைக் கீழ்க்கண்டவாறு வெளியிட்டது. இவ்விதழ், ‘பூமிசாஸ்திரம், வானசாஸ்திரம், தாவரசாஸ்திரம், ரஸாயனசாஸ்திரம், பௌதீகசாஸ்திரம் முதலியவற்றை மக்களுக்குச் சொல்லும்’ என்று குறிப்பிட்டது. அறிவியல் தமிழை முதன்மை நோக்கமாகக் கொண்ட இதழாக இது அறியப்படுகிறது. தற்போது, சுற்றுச்சூழல், கலைக்கதிர், யுனஸ்கோ கூரியர், அமுதசுரபி, செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், தமிழ்க்கலை, தமிழ்ப்பொழில், கலைமகள், தாமரை, மஞ்சரி போன்ற இதழ்கள் பொதுப் பொருண்மையில் அறிவியல் தமிழிற்கு வாய்ப்பளித்து வளர்த்து வருகின்றன. இவையல்லாமல், இளம் விஞ்ஞானி, மருத்துவமலர், சித்த மருத்துவம், மருத்துவர், கால்நடைக் கதிர், வளரும் வேளாண்மை, நவீன வேளாண்மை, நிலவளம், மூலிகை மணி, ஆரோக்கியம், தமிழ்க் கம்யூட்டர் போன்ற இதழ்கள் அறிவியல் துறைகளைத் தனித்தனியாகக் கொண்டுள்ளன.

          இதேபோல, ‘களஞ்சியம்’ இதழ் அண்ணாபல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் மூலமும், ‘துளி’ இதழ், தமிழ்ப்பல்கலைக்கழக அறிவியல் தமிழ்த்துறை மூலமும், ‘அறிவியல் பலகணி’ (மொழி அறிவியல் ஆய்வேடு) இதழ், தொல் அறிவியல் துறை மூலமும் வெளிவந்து அறிவியல் தமிழ்ப்பணி ஆற்றுகின்றன. தமிழ்ப் பல்கலைக்கழகத்தை மையமாகக்கொண்டு இயங்கும், ‘அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம்’ என்ற அமைப்பு அறிவியல் தமிழ் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிவருதல் குறிப்பிடத்தக்கது. இவ்வமைப்பு, 1988 முதல் தொடர்ச்சியாக அறிவியல் தமிழ்க் கருத்தரங்குகளை நடத்தி, அவற்றை நூல்களாக வெளியிட்டு வருகிறது. மேலும் இவ்வமைப்பு, ‘பொறியியல் தொழில்நுட்பம்’(1993), ‘மருத்துவ அறிவியல் வளர்ச்சி’(1994), ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு’(1995), ‘தகவல் தொடர்பியல்’ (1999), ‘வேளாண் அறிவியல் வளர்ச்சி’(2000), ‘கல்வி நுட்பவியல்’ (2001), ‘உயிர் தொழில் நுட்பவியல்’ (2002), ‘இணையத் தமிழ்’ (2003) ஆகிய சிறப்பு பொருண்மைகளில் கருத்தரங்குகளை நடத்தி நூலாக வெளியிட்டுள்ளது சுட்டத்தக்கது.

          இவையல்லாமல், தமிழ் இணையப் பக்கங்கள் பலவும் அறிவியல் தமிழ் வளர்ச்சியில் ஆர்வம்காட்டி வருகின்றன. மருத்துவம், பல்துறை அறிவியல் போன்றவற்றிற்கும், கணினித் தொழில்நுட்பம், புதிய மென்பொருள்கள் கண்டுபிடிப்பு மற்றும் பயன்பாடு, தமிழ் எழுத்துருக்கள் பயன்பாடு மற்றும் எழுத்துரு மாற்றிகள் போன்றவற்றிற்கென்றும் எண்ணற்ற இணையப் பக்கங்கள் உள்ளன. இவை தமிழின் ஆராய்ச்சி வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிவதாய் அமைகின்றன. இணையத்தில் காணப்படும் ‘மின் நூலக’ பணிகளும் (நூலகம்.காம், சென்னை லைப்ரரி.காம் போன்றவை), நூல்கள் சேமிப்புத் திட்டப்பணிகளும்(மதுரை திட்டப்பணிபோன்றவை)உலகெங்கிலுமுள்ள தமிழ் ஆராய்ச்சியாளர் களுக்குப் பெரிதும் பயனுள்ளவையாக உள்ளன.

பயன் நூல்கள்

அறிவியல் தமிழ், டி.பத்மநாமன். க.மணி, கலைக்கதிர், கோயம்புத்தூர், 2000.
அறிவியல் தமிழ் ஊடகங்கள், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், தஞ்சை, 2004.
அறிவியல் தமிழ் வளர்ச்சி, அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், தஞ்சை, 1999.
அறிவியல் தொழில்நுட்ப வரலாறு, ஜே.தர்மராஜ், டென்சி பதிப்பகம், 1998.
அறிவியலும் இலக்கியமும்-சில மதிப்பீடுகள், நெல்லை சு.முத்து, சேகர் பதிப்பகம், சென்னை, 2003.
இந்திய அறிவியல் தொழில்நுட்பம், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், தஞ்சை, 1998.
சங்க இலக்கியத்தில் மேலாண்மை, ஆ.மணவழகன், காவ்யா பதிப்பகம், சென்னை, 2007.
பல்துறைத் தமிழ், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், தஞ்சை, 2003.
பழந்தமிழர் தொழில்நுட்பம், ஆ.மணவழகன், அய்யனார் பதிப்பகம், சென்னை, 2010.
பிறதுறைத் தமிழியல், ஞாலத்தமிழ் பண்பாட்டு ஆய்வு மன்றம், மதுரை, 2004.
வளரும் தமிழ், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், தஞ்சை, 2003.

கூடாகும் சுள்ளிகள் கவிதைத் தொகுப்பு - நூல் மதிப்புரை

கூடாகும் சுள்ளிகள்  கவிதைத் தொகுப்பு - நூல் மதிப்புரை

முனைவர் து. ஜானகி
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

              
         மனதை வருடும் மயிலிறகாய் மணவழகன் கவிதைகள். கவிதைத் தேரில் அமர்ந்து கிராமம் முதல் நகரம் வரை நெடும்பயணம் சென்று மக்களின் பண்பாடு அறிந்த மன நிறைவு.

     கவிதைகள் ஒவ்வொன்றும் இயல்பான நடையில் மானுடத்தின் அனுபவமாய் வெளிப்படுகின்றன. வாசித்தபின் யோசிக்கத் தூண்டும் கவிதைகள் பல. அவற்றில் ஒன்று ‘வெள்ள நிவாரணம்’.

ஒரு சோடி வேட்டி சேலை
மூன்று லிட்டர் மண்ணெண்ணெய்
ஐந்து கிலோ அரிசி
இரண்டாயிரம் ரொக்கம்
மாற்றாக
மனித உயிர்கள் பல

 ஒருபுறம் அறிவியல் வளர்ச்சி, மறுபுறம் மனிதமன வீழ்ச்சி என சமுதாய முரண்களையும் சாடியிருக்கிறார்.

சோதனைக் குழாயில் 
 சொந்தங்களை உண்டாக்கினோம்

சாதனைகள் புரிய – கணினிச் 
 சாதனங்களைப் படைத்தோம்

இணையத்தால் இமயத்தைத் தொட்டோம் 
 குளோனிங்கால் கோபுரத்தை அடைந்தோம் 

 கண்டம் தாண்டினோம் – பல
அண்டம் கண்டோம்
வானம் அளந்தோம் – புதிய

கோளம் கண்டோம் 
 நாடுவிட்டு நாடு மாறினோம்
மதம் விட்டு மதம் மாறினோம்

ஆனால்
மனிதராக மாற மட்டும் 
 மறந்தோம்

அவசர உலகில் மனிதன் பல சிக்கல்களைத் தாண்டி வளரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இச்சிக்கல்கள் தீர ‘படி படி’ எனப் பல வாழ்க்கைப் படிமுறைகளை மனத்திற்குள் பதியம்போட வைக்கிறார்.

மானுடம் படி அது தழைக்க
மனிதநேயம் படி
சோதனைகள் தடையல்ல
சான்றோர் சாதனைகள் படி

 இன்றைய மாணவர்கள் படிப்புக் காலத்தின் பொழுதே தன் வகுப்பு ஆசிரியர்களின் பெயர் தெரியாமலேயே படிப்பை முடித்துவிட்டுச் செல்கின்றனர். இச்சூழலுக்கு விதிவிலக்காக, ஆசிரியர்களுக்குக் குருதட்சிணையாக, தமிழ் மற்றும் தமிழ் ஆசிரியர்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது இவரின் ‘இழப்பு’ என்ற கவிதை. மணவழகன், நல் மாணாக்கன்; ஆசான்களின் ஆளுமை பட்டியில் நல் ஆசான்; மாணாக்கருக்கு நல்வழிகாட்டி.

இக்கால காதலையும், காதலர்களின் மனநிலையையும் ‘அழைப்பிதழ்’, ‘மனசு’ போன்றவற்றின் வழி படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

        என்னுள் துளிர்த்து
     என்னுள் பூத்து
என்னுள் காய்த்து
என்னுள் கனிந்து
என்னுள்ளே முடிந்துபோன
இரகசிய விருட்சம்
நீ

என்று இழந்த காதலைப் பேசுகிறது ‘இகரசியம்’ கவிதை.

‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்பதை இக்காலச் சூழலுக்கேற்ப விளக்கி, நாசுக்காக அம்பலப்படுத்தியுள்ளார் அரசியல் அவலத்தை.

‘கூடாகும் சுள்ளிகள்’ தலைப்பு மிக அருமையான பாடம் மனிதருக்கு. சிறுசிறு சுள்ளிகளைச் சேகரித்து அழகிய கூடுகளாக்குகின்றன பறவை இனம். இவற்றைப் போலவே கவிஞரும் ஆங்காங்கே கண்ட காட்சிகளைக் கவிதைக்கூடாரமாக்கித் தந்துள்ளார் நம் மனம் இளைப்பாற. கவிதைகளுக்கு அணிகலன்களாய் கோட்டோவியங்கள்.

மொத்தத்தில் இவர் கவிதை முத்துகளான மானுடவியலை ‘வாழ்க்கை வணிகனில்’ தொடுத்து, நடப்பியலை ‘நட்பியலிலும்’, காதலியலை ‘இரகசியத்திலும்’ தத்துவவியலை ‘உள்ளம் செதுக்கும் உளிகளிலும்’ ஆசிரியவியலை ‘இழப்பிலும்’ பொதுவியலை ‘வேண்டுதலுடன்’ முடித்து மாலையாக்கித் தந்துள்ளமை சிறப்பு.

‘நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு’

எனும் வள்ளுவப் பெருந்தகையின் சொல்லிற்கு ஏற்ப இப்பண்புடையாளரின் நட்பு தொடரவும் இவரின் ஆழமான தேடல் விரிவடையவும் வளரவும் வாழ்த்துக்கள்.