நிகழ்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிகழ்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 27 ஜனவரி, 2025

இந்தோனேசியாவில் தமிழ்ப் பயிற்சிப் பள்ளித் தொடக்கம்

 

இந்தோனேசியாவில் தமிழ்ப் பயிற்சிப் பள்ளியை முனைவர் ஆ.மணவழகன் தொடங்கி வைத்தார்

இந்தோனேசியாவில் தமிழ்ப் பயிற்சிப் பள்ளித் தொடக்கம்

          உலகத் தமிழ்ச் சிறகத்தின் இரண்டாமாண்டு கலை இலக்கிய வரலாற்று விழா இந்தோனேசியாவில் மேடான் நகரில் ஆகத்து 9,10,11 ஆகிய நாட்களில் சிறப்பாக நடைபெற்றது. இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, புரூணை, இலங்கை, நார்வே, நெதர்லாந்து, அமேரிக்கா, பிரான்சு முதலான பல்வேறு நாடுகளில் வாழும் தமிழன்பர்களும் இந்தோனேசியாவில் வாழும் தமிழர்களும் திரளாக கலந்துகொண்டனர்.



          நிகழ்வின் முதல் நாளான ஆகஸ்ட் 9ஆம் நாள் இந்தோனேசியாவின் மேடான் நகரில் கிட்டத்தட்ட 60 வருடங்கள் பள்ளியாக இயங்கிவந்த குருபக்தி மையத்தில் உலகத் தமிழ்ச் சிறகத்தின் சார்பில் தமிழ்ப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இப்பயிற்சிப் பள்ளியை முனைவர் ஆ. மணவழகன் (இணைப் பேராசிரியர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பொறுப்பாளர் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம், சென்னை) அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இவ்விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட இன்றைய தலைமுறை தமிழ் குழந்தைகள் கலந்து கொண்டனர். இனி ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து தமிழ் வகுப்புகள் நடைபெறும். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் உலகத் தமிழ்ச் சிறகம் அமைப்பின் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக அமையும்.

         இந்த விழாவிற்குப் புதுவைப் பொதுப்பணித் துறை அமைச்சர் மாண்புமிகு க.இலட்சுமி நாராயணன் அவர்களும், இந்திய மேனாள் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு எஸ்.ஆர்.பார்த்திபன் அவர்களும், இந்திய மேனாள் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இரா. செந்தில் அவர்களும், தமிழ் நாடு காங்கிரசு கட்சியின் துணைத் தலைவர் திருமிகு இராம. சுகந்தன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

\

   இந்தோனேசியத் தமிழர்களான மேனாள் தூதரக அதிகாரியான திரு.சிவாஜிராஜா, மருத்துவர் அசோகன், திரு. சுபேந்திரன், திரு. மதியழகன், திரு. செல்வராஜா போன்றோர் உலகத் தமிழ்ச் சிறகத்தின் செயல்பாடுகளுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர்.

மொழியியல் கண்காட்சி தொடக்கவிழா

 



சென்னை, பெரும்பூரில் உள்ள கே.ஆர்.எம் பொதுப்பள்ளியில் மாணவர்கள் ஏற்பாடு செய்த மொழியியல் கண்காட்சி 12.07.2024 அன்று நடைபெற்றது. மொழியியல் கண்காட்சியைத் தொடங்கிவைத்து, தமிழ்மொழியின் தொன்மையும் சிறப்பும் குறித்து சிறப்புரை வழங்கினார் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சமூகவியல், கலை மற்றும் பண்பாட்டுப் புலத்தின் பேராசிரியரும் நிறுவனத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரும் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடப் பொறுப்பாளருமான முனைவர் ஆ.மணவழகன் அவர்கள். முன்னதாக மொழிசார்ந்த பல்வேறு திறன் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும்  வழங்கப்பட்டன. 



பேராசிரியர் ஆ.மணவழகன் அவர்களுக்கு அறிவுக் களஞ்சியம் விருது


அறிவுக் களஞ்சியம் விருதுபெறும் முனைவர் ஆ.மணவழகன்

அறிவுக் களஞ்சியம் விருது - 2025

சென்னைப் பல்கலைக்கழகம், துவாரகதாஸ் கோவர்த்தனதாஸ் வைணவக் கல்லூரி, மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து
64ஆம் முப்பெரும் விழாவினை 24.01.2025 அன்று நடத்தின.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்தப் பெருவிழாவில், பல்வேறு துறை சார்ந்த ஆளுமைகளுக்கான வாழ்நாள் சாதனை விருதுகள் வழங்குதல், சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான
18ஆம் அறிவு களஞ்சியம் விருதுப் போட்டிகளின் பரிசளிப்பு, 64ஆம் அறிவியல் பூங்கா இதழ் வெளியீடு ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன‌.
விழாவில், பன்முகத் தன்மைகளோடு கூடிய தமிழ்ப் பணிகளைப் பாராட்டி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இணைப் பேராசிரியரும் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடத்தின் பொறுப்பாளரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலருமான #முனைவர் ஆ.மணவழகன் அவர்களுக்கு "அறிவுக் களஞ்சியம் விருது" வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
இந்த விருதினை மாண்புமிகு நீதியரசர் முனைவர் வள்ளிநாயகம், (நீதிபதி லோக் அதாலத் , உயர்நீதிமன்றம், சென்னை) அவர்களும், மாண்புமிகு நீதியரசர் முனைவர் தமிழ்வாணன் (தலைவர், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம்) அவர்களும் வழங்கினர்.
மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் கலைமாமணி முனைவர் சேயோன், சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கூட்டுநர் குழு உறுப்பினர் பேராசிரியர் எஸ். ஆம்ஸ்ட்ராங், சென்னைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் ஏழுமலை, டிஜி வைணவக் கல்லூரியின் முதல்வர் முனைவர் சந்தோஷ் பாபு, மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் இணைச்செயலாளர் முனைவர் முத்துவேலு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் சங்கப் பலகை துறைத் தலைவர் முனைவர் சங்கரநாராயணன் நிகழ்வினை ஒருங்கிணைப்புச் செய்தார்.



புதன், 6 நவம்பர், 2024

பாரதி இளங்கவிஞர் விருது

 

பாரதி இளங்கவிஞர் விருது - போட்டி

11.01.2024

 "மகாகவி பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் நாள் அரசின் சார்பில் இனி ஆண்டுதோறும் #மகாகவி_நாளாகக் கடைப்பிடிக்கப்படும். இதனையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப் போட்டிகள் நடத்தி, தலா ஒரு மாணவன், மாணவிக்குப் #பாரதி_இளம்_கவிஞர் விருதும் தலா ஒரு இலட்சம் பரிசு தொகையும் வழங்கப்படும்"

- என்ற, சிறந்த திட்டம் ஒன்றினைத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

 


இத்திட்டத்தின்படி, சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான 'பாரதி இளங்கவிஞர் விருது' போட்டி சைதாப்பேட்டையில் உள்ள கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் 11.01.2024 அன்று நடைபெற்றது.

 


இப்போட்டிக்கு நடுவர்களாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் கவிஞர் ஆ.மணவழகன், பெரும்பாக்கம் அரசு கல்லூரியின் பேராசிரியர் கவிஞர் பச்சியப்பன், நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் இரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்வினை, கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர் சேகர் அவர்கள் ஒருங்கிணைத்தார்.


 சென்னை மண்டலத்திலுள்ள 30க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து வந்திருந்த இளம் கவிஞர்கள் தங்கள் கவித்திறமையை வெளிப்படுத்தினர்.

 


செவ்வாய், 5 நவம்பர், 2024

தமிழரும் மேலாண்மையும் - சிறப்புரை - முனைவர் ஆ.மணவழகன்

 தமிழரும் மேலாண்மையும் 

சிறப்புரை - முனைவர் ஆ.மணவழகன்

22.03.2024


வடசென்னை பகுதியில் பரந்த வளாகத்தில் அமைந்துள்ளது #பாரதி_மகளிர்_கல்லூரி (தன்னாட்சி).
அப்பகுதி மாணவியர் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தோரும் இங்குப் பயில்கின்றனர். தமிழியலில் இளங்கலைத் தொடங்கி முனைவர் பட்டம் வரைப் பயில இங்கு வாய்ப்புகள் உள்ளன. பெண் பிள்ளைகளுக்கு இதுவொரு வேடந்தாங்கல்.



22.03.24 அன்று இக்கல்லூரில் #முத்தமிழ்_விழா நிகழ்த்தப்பட்டது. இவ்விழாவில்
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள், #தமிழரும்_மேலாண்மையும் என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார்.

குறிப்பாக, பழந்தமிழருடைய மேலாண்மைச் செயல்பாடுகளில் மகளிரின் பங்களிப்பு குறித்து எடுத்துரைத்தார். உரையை, மாணவியர் மிகுந்த ஆர்வமுடன் கேட்டனர். நிகழ்வின் இறுதியின் மாணவியர் பலரும் அவர்கள் பகுதியில் காணப்படும் தொன்மையான நீர்மேலாண்மைத் திட்டங்கள், தொல்பொருள் களங்கள் போன்றவை குறித்து ஆர்வமுடன் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்விற்குத் தலைமையேற்ற முதல்வர் முனைவர் கே.கிளாடிஸ் அவர்கள், "தமிழ் இலக்கியங்களில் மேலாண்மை குறித்து இத்தனை செய்திகளும் சிந்தனைகளும் திட்டங்களும் இருக்கின்றன என்பதை அறிந்து மிகவும் வியந்து போனேன்; நாம் எவ்வளவு இழந்திருக்கிறோம் என்பதை இன்றைக்குத்தான் தெரிந்து கொண்டேன். இது குறித்து தொடர்ந்து ஆய்வுகளும் திட்டங்களும் வெளிவந்து கொண்டே இருக்க வேண்டும். எங்கள் மாணவியரையும் இவ்வகையில் ஊக்குவிக்க முயற்சி செய்வோம்" என்றார்.


நிகழ்வினைத் தமிழ்த்துறையின் தலைவர் கவிஞர் முனைவர் ப.கல்பனா அவர்களின் தலைமையிலான தமிழ்த்துறை சிறந்த முறையில் ஒருங்கிணைப்புச் செய்திருந்தது.




சனி, 21 டிசம்பர், 2019

தமிழ்க் கற்றல் கற்பித்தலில் சவால்களும் தீர்வுகளும்






சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், 'தமிழ்க் கற்றல் கற்பித்தலில் சவால்களும் தீர்வுகளும்' என்ற தலைப்பிலான பயிலரங்கம் 27.09.2019 அன்று நடைபெற்றது. இப்பயிலரங்கில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சமூகவியல், கலை மற்றும் பண்பாட்டுப்புலப் பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள்
'தமிழியல் பயிற்றுதலில் வரலாறும் பண்பாடும்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

பழமலய் படைப்புலகம்









விழுப்புரம் - 06.10.2019

மக்கள் கவிஞர் பழமலய் படைப்புலகம் குறித்த ஒருநாள் கருத்தரங்கம் 06.10.2019 அன்று விழுப்புரத்தில்  நடைபெற்றது. நிகழ்வில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இணைப் பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள், 'பழமலய் படைப்புகளில் விழுமியங்கள்' என்ற தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார்.

பன்னாட்டுப் பரப்பில் தமிழிலக்கியச் செல்நெறிகள்- பன்னாட்டுத் தமிழ் மாநாடு





சென்னை, 13.10.2019

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் தமிழ்ப் பட்டறை இலக்கியப் பேரவையும் இணைந்து நடத்திய பன்னாட்டுப் பரப்பில் தமிழிலக்கியச் செல்நெறிகள் என்ற பொருண்மையிலான ’பன்னாட்டுத் தமிழ் மாநாடு’ 13.10.2019 அன்று சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது. நிகழ்விற்குத் தமிழ்ப் பட்டறை இலக்கியப் பேரவையின் நிறுவனர் திரு. சேக்கிழார் அப்பாசாமி அவர்கள் தலைமை தாங்கினார். கவிஞர் மீனா திருப்பதி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின சமூகவியல், கலை மற்றும் பண்பாட்டுப் புலத்தின் இணைப்பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள் தொடக்கவுரை ஆற்றி மாநாட்டினைத் தொடங்கிவைத்தார்

கவிஞர் த.பழமலய் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது











சென்னை, 13.10.2019.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் தமிழ்ப் பட்டறை இலக்கியப் பேரவையும் இணைந்து நடத்திய *பன்னாட்டுப் பரப்பில் தமிழிலக்கியச் செல்நெறிகள்* என்ற பொருண்மையிலான ’பன்னாட்டுத் தமிழ் மாநாடு’ 13.10.2019 அன்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது. நிகழ்விற்குத் தமிழ்ப் பட்டறை இலக்கியப் பேரவையின் நிறுவனர் திரு. சேக்கிழார் அப்பாசாமி அவர்கள் தலைமை தாங்கினார். கவிஞர் மீனா திருப்பதி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, தொடக்கவுரை நிகழ்த்தி மாநாட்டினைத் தொடங்கிவைத்தார் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இணைப்பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள். மாநாட்டில் தமிழகம், புதுச்சேரி, டென்மார்க், இலங்கை, சிங்கப்பூர், குவைத், மொரீசியசு, பிரான்சு ஆகிய பகுதிகளிலிருந்து வந்திருந்த ஆய்வாளர்கள் இலக்கியச் செல்நெறிகள் குறித்துச் சிறப்பாக எடுத்துரைத்தனர். மதிய அமர்வில் சுமார் நூறு கவிஞர்கள் பங்கேற்று கவிபாடிய கவியரங்கம் நடைபெற்றது. மாநாட்டின் ஒரு பகுதியாக, தமிழ்ப் பட்டறையின் சார்பில் எட்டு நூல்கள் வெளியிடப்பட்டன. நூல்களைத் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு க.பாண்டியராசன் அவர்களும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்களும் வெளியிட்டனர். நிகழ்வில், மக்கள் கவிஞர் த.பழமலய் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிச் சிறப்புச் செய்தார் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள்.

முனைவர் ஆ.மணவழகன் அவர்களுக்கு நற்றமிழ்க் காவலர் விருது


13.10.2019, சென்னை.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும், தமிழ்ப் பட்டறை இலக்கியப் பேரவையும் இணைந்து நிகழ்த்திய பன்னாட்டுத் தமிழ் மாநாட்டில்,  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்களுக்கு 13.10.2019 அன்று 'நற்றமிழ்க் காவலர்' என்ற  விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. இவ்விருதினை, தமிழ் வளர்ச்சி, பண்பாடு மட்டும் தொல்லியல் துறை அமைச்சர் திரு கா.பாண்டியராசன் அவர்கள் வழங்கினார்.


தமிழர் மரபு அறிவியல்: ஆவணமாக்கலும் மீட்டுருவாக்கமும்

கேரளப் பல்கலைக்கழகத்தின் *மனோன்மணியம் சுந்தரனார் திராவிடப் பண்பாட்டு மையம்* 14.12.2019 அன்று நிகழ்த்திய தேசியப் பயிலரங்கில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள் பங்கேற்று, 'தமிழர் மரபு அறிவியல்: ஆவணமாக்கலும் மீட்டுருவாக்கமும்' என்று தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.






புத்திலக்கியங்களில் தமிழ்ச் சமூக விழுமியங்கள் - தேசியக் கருத்தரங்கம்




தமிழ்நாடு அரசு நிதிநல்கையுடன்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்
சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலமும்
 ஐவனம் - தமிழியல் ஆய்வு நடுவமும்
இணைந்து நிகழ்த்தும்

தேசியக் கருத்தரங்கம்

“புத்திலக்கியங்களில் தமிழ்ச் சமூக விழுமியங்கள்”

                                              திருவள்ளுவராண்டு  2050, மார்கழி 02                                                                     
   திசம்பர்  18, 2019 புதன்கிழமை


ஒருங்கிணைப்பு
முனைவர் ஆ.மணவழகன்
இணைப் பேராசிரியர்
சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தரமணி, சென்னை-600113.




                                                                                                     

புத்திலக்கியங்களில் தமிழ்ச் சமூக விழுமியங்கள்


புத்திலக்கியங்களில் தமிழ்ச் சமூக விழுமியங்கள்
தேசியக் கருத்தரங்கம்
18.12.2019




            தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சமூகவியல், கலை மற்றும் பண்பாட்டுப் புலமும், தமிழியல் ஆய்வு நடுவமும் இணைந்து நடத்திய ’புத்திலக்கியங்களில் தமிழ்ச் சமூக விழுமியங்கள்’ என்ற தேசியக் கருத்தரங்கம் சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நேற்று நடைபெற்றது. நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் நிகழ்விற்குத் தலைமை தாங்கினார். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள் நோக்கவுரை வழங்கினார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் நாட்டுப்புறவியல் தலைவர் முனைவர் ஆறு.இராமநாதன் அவர்கள் மாநாட்டுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல்களை வெளியிட்டு தொடக்கவுரை ஆற்றினார். கருத்தரங்க நிறைவுவிழாவில் கவிஞர் ஆண்டார் பிரியதர்சினி அவர்கள் நிறைவுரை ஆற்றி ஆய்வாளர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கினார்.

       நோக்கவுரை வழங்கிய முனைவர் ஆ.மணவழகன் அவர்கள், உலகின் மிகப் பழமையான இனக்குழுக்கள், தம்மைச் செழுமை படுத்திக்கொள்ள காலந்தோறும் பலவிதக் கற்பிதங்களை உருவாக்கியுள்ளன. அவை நெறிப்படுத்துதல், தற்காத்துக்கொள்ளுதல், தக்கவைத்துக் கொள்ளுதல், தனித்துக்காட்டல் போன்றவற்றை நோக்கங்களாகக் கொண்டவை.  சமகால தேவையின் அடிப்படையில் உருவாக்கப்படும் இவ்விதக் கற்பிதங்கள் கால ஓட்டத்தில் எதிர்நிலை விளைவுகளையும் ஏற்படுத்தலாம். ஆனால், யுகங்கள் பல கடந்தும் மனித  வாழ்வியலைச் செழுமைபடுத்தும் சிந்தனைகள் விழுமியங்களாக எஞ்சி நிற்கின்றன. காலத்திற்கும், பட்டறிவிற்கும் ஏற்ப இவை கோட்பாடுகளாகவும், வரையறைகளாகவும் உருவம்பெறுகின்றன. சுருங்கக் கூறின், ஒரு பண்பட்ட, தொன்மையான இனக்குழு எவற்றைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று போராடுகிறதோ, எவற்றை இழந்துவிட்டதாக வருந்துகிறதோ அவ்வகை நடத்தைகள் அல்லது கற்பிதங்களே விழுமியங்களாகின்றன.

            பொதுவாக விழுமியங்கள் குறித்த நம் தேடல்களும் மரபு இலக்கியங்களைக் களமாகக் கொண்டே அமைகின்றன. தமிழ்ச் சமூக விழுமியங்களைத் தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் பதிவுசெய்துள்ளன. விருந்தோம்பல், கொடை, வீரம், மானம், வடக்கிருத்தல், ஈகை, அன்பு, உயிரிரக்கம், அறநெறி போன்ற உயர் பண்பு நெறிகளைச் சுட்டும் இலக்கியங்களாக அவை இருக்கின்றன. ஆயினும், ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகால தமிழ்ச் சமூக விழுமியங்களைப் புதின இலக்கியங்களிலும், ஒரு நூற்றாண்டு கால தமிழ்ச் சமூக விழுமியங்களைப் புதுக்கவிதை, சிறுகதை இலக்கிய வடிவங்களிலும் கண்டறியமுடியும் என்கிற கருதுகோள்களை முன்வைத்தே இக்கருத்தரங்கம் நிகழ்த்தப்படுவதாகக் குறிப்பிட்டார்.

       தொடக்கவுரையாற்றிய முனைவர் ஆறு. இராமநாதன் அவர்கள் தமது உரையில், உலகில் மனித இனக்குழுக்கள் ஒவ்வொன்றும் தனக்கெனத் தனித்த அடையாளங்களைக் கொண்டுள்ளன. அனைத்திற்கும் பொதுவாக விழுமியங்கள் என்ற ஒன்றை நாம் வரையறுப்பது கடினம். ஒரு இனக்குழுவில் கொண்டாடப்படும் ஒரு பண்பு அல்லது நெறி பிற இனக்குழுவிற்குப் பொருந்தாமல் போகலாம். ஆநிரை கவர்தலைச் சங்கச் சமூகம் விழுமியமாகக் கொண்டாடியது. தற்போது இல்லையென்றாலும் அண்மைக்காலம் வரியிலும் தமிழகத்தின் சில பகுதிகளில் ஆநிரை திருட்டு என்பது சில இனக்குழுக்களின் வழக்கத்தில் இருந்தது. அச்செயலை அக்குழுக்கள் வழுவாகக் கருதவில்லை. அப்படி பார்க்கிறபோது தமிழ்ச் சமூகத்திற்கென ஒட்டமொத்த விழுமியங்கள் எவை என்ற கேள்வியும், தமிழ்ச் சமூகத்திற்கே உரிய சிறப்புக் கூறுகள் எவை என்ற கேள்வியும் எழுகின்றன. இவற்றை நாம் புத்திலக்கியப் படைப்புகளில்தான் தேடியாக வேண்டும். அந்த வகையில் இந்த கருத்தரங்கு மிகத் தேவையான ஒன்றாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.   

       நிறைவுரையாற்றிய கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினி அவர்கள், மக்களின் வாழ்வியலைப் உள்ளபடி பதிவு செய்யும் இலக்கியங்களாக இன்றைய நவீன இலக்கியங்கள் உள்ளன. தமிழ்ச் சமூகத்தின் உண்மையான முகத்தை இங்குதான் நாம் காணமுடியும். மேலும், தமிழ்நாட்டிலிருந்து வரும் படைப்புகளை மட்டும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாது, வேலை நிமித்தல் வெளிநாடுகளுக்குச் சென்று அங்கிருக்கும் சூழலை நம் சூழலோடு ஒப்பிட்டு எழுதும் படைப்புகளையும் நாம் பார்க்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.   

 இந்நிகழ்வில், தமிழ்நாடு மட்டுமல்லாமல், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் பங்கேற்கிறார்கள். புதின இலக்கியம், சிறுகதை இலக்கியம், நாவல் இலக்கியம் என்று மூன்று பிரிவுகளில் ஏழு அமர்வுகளாக ஆய்வரங்கம் நிகழ்த்தப்பட்டது. கருத்தரங்க ஆய்வுக் கட்டுரைகள் இரண்டு நூற்தொகுதிகளாக வெளியிடப்பட்டன.           

ஆ.மணவழகன்




புதன், 7 மார்ச், 2018

வயநாரம் - வாதநாரம் - வாதநாராயணம் மரம் - ஆ.மணவழகன்


வயநாரம் - வாதநாரம் - வாதநாராயணன் மரம்

வீட்டுக்குப் பின்புறம் வரிசைகட்டி நிற்கும்!
ஊஞ்சல் கட்டி ஆடவும் உச்சியேறி ஒலி எழுப்பவும்
கிளைகள் பரப்பி காத்திருக்கும்!
ஏறவும் இறங்கவும் தொங்கவும் குதிக்கவுமாக
எங்களுக்கு அது ஒரு விளையாட்டுப் பூங்கா!
கொடாப்பில் குடியிருக்கும் குட்டிகளுக்கும்
பட்டியில் கட்டியிருக்கும் ஆடுகளுக்கும்
இதன் தழையே பிடித்தமான தீனி!
சூட்டுக் கடுப்பிற்கும் நகச் சுத்திக்கும்
பெயர்சொல்லா இதன் இலையே நன் மருத்து!
நாற்றங்காலுக்கும் நடவு வயலுக்கும்
நல்ல தழையுரம் வேம்பும் இதுவுமே!
ஒன்னா மண்ணா கிடந்து
ஒதுங்கிப்போன உறவுகளுள் இதுவும் ஒன்று!
வெங்கடேசன் அருளால் கொண்டுவந்து நட்டாயிற்று
உறவுகள் ஒதுக்கினாலும்
ஒதுங்க நிழல் கொடுக்கும் வாதநாரம் !

(மருந்திற்காகப் பல நாட்களாகச் சென்னை முழுவதும் தேடியும் கிடைக்காமல் போன வாதநார மரத்தை, கிராமத்தில் கண்டறிந்து அதன் கிளைகளோடு வந்த தலைமைச் செயலகச் சுற்றுலாத் துறை நண்பர் திரு. வெங்கடேசன் அவர்கள் என்னிடத்திலும் ஒன்றைக் கொடுத்தார். அது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று நடப்பட்டது(7.2.18). நன்றி - விநாயகம், விசயன்.) - முனைவர் ஆ.மணவழகன் (Dr.A.Manavazhahan)


வேட்கையில் எரியும் பெருங்காடு - கவிதைநூல் அறிமுகம்


சென்னை, கவிக்கோ அரங்கில் கவிஞர் பச்சியப்பன், கவிஞர் ப.இரவிக்குமார், கவிஞர் ப.கல்பனா ஆகியோரின் கவிதைகள் உள்ளிட்ட ஐந்து நூல்களின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது (9.2.18).  நிகழ்வில்  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். 

உடன், நூலாசிரியர்களோடு எழுத்தாளர் பேரா.பாரதிபுத்திரன் கல்கி இதழாசிரியர் கவிஞர் அமிர்தம் சூர்யா, பேரா. முனைவர் க.பஞ்சாங்கம், கலைவிமர்சகர் இந்திரன், கவிஞர் ஹாஜாகனி, எழுத்தாளர் சுந்தரபுத்தன், கவிஞர் நாகரத்தினம் கிருஷ்ணா, கவிஞர் தமிழ் மணவாளன் உள்ளிட்டோர்.


வாழ்த்துரை இணைப்பு - 
https://youtu.be/fzVarNotQto