ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

உதிரும் இலை - நூல் மதிப்புரை


இருத்தலும் வாழ்தலும் - அதன் வலிகளோடு
ஆ. மணவழகன்

சைதாப்பேட்டை தொடர்வண்டி நிறுத்தத்தில் தொடங்கி, தாம்பரம் நிலையம் வருவதற்குள் படித்து முடித்துவிட்ட ஒரு கவிதைத் தொகுப்பு. ‘இக்கவிதைகள் சில வருடங்களுக்கு முன்பாகவே வந்திருக்க வேண்டும்’ என்ற பொன்.அனுர வின் பதிப்புரையோடும், ‘முனுசாமியின் கவிதைமொழி அழுத்தமானது’ என்ற கனிமொழியின் அணிந்துரையோடும், ‘சரியான அரசியல் புரிதலையும், அழகியல் உணர்வையும் பெற்றிருக்கும் யாழினி முனுசாமியின் கவிதைகள்’ என்ற  பா. இரவிக்குமாரின் ஆய்வுரையோடும் வெளிவந்திருக்கும் தொகுப்பு இது.  கவிஞர் யாழினி முனுசாமியின்  முதல் கவிதைத் தொகுப்பாக இது அறியப்படுகிறது. ஆனால், மொழி ஆளுகையும், கவிதை நடையும்  கவிதையோடு அவருக்கிருக்கும் நெடுநாளைய உறவை உறுதிசெய்கின்றன.

உனது அசைவுகளில்
                 நிரம்பியிருக்கிறது
                 எனக்கான மகிழ்ச்சி

என, குழந்தைக்கான கொஞ்சலோடு தொடங்குகிறது (குழந்தைக்கான கவிதையாகத்தான் இருக்கவேண்டும்) கவிதைப்பயணம். முதல் கவிதை குழந்தைக்கு அடுத்த கவிதை மனைவிக்கு (பனிக்கட்டி வைப்பு ) என்று வகைப்பிரித்தாலும், நவீன ஊடகத்தின் தாக்கம், இயற்கைவளம்  அழிவு, கிராம சூழல், காதல், வறுமை, முதிர்கன்னிகள், கல்வி நிலையங்களின் நிலை, இயற்கை பேரழிவு,  நாகரிக தேடல், நகர வாழ்க்கையில் நிறைவு நிறைவின்மை, உறவுகள், ஊணமுற்றோர் என, பலதரப்பட்ட சமூக காரணிகளும், சிக்கல்களும் இவர்தம் கவிதைகளில் கருப்பொருள்களாகின்றன.

                மழைக்காலங்களில்
                இடிந்துவிழும் வீடுகளைக் கொண்டது
                எங்கள் சிற்றூர்
                இந்தப் பெருமழையில்
                 யார் வீடோ

என இரங்குதலில், நகரத்தில் உடலால் மட்டுமே வாழும் தன்மையைக் கவிஞர் காட்டுகிறார்.

                போனவருடம்
                புதுப்பாவாடையைத் தூக்கிச் செருகி
                மிளகாய்ப்பட்டாசு வெடித்த சிறுமி
               இவ்வருடம்
               தலை தீபாவளிக்கு வருவதைக் கண்டு
               உள்ளுக்குள் முனகுகிறாள்
                பிருந்தா அக்காவின் அம்மா

என்ற முதிர்கன்னிகள் பற்றிய பதிவுகளாகட்டும்,

               சாணி வாரிக்கொட்டினாலும்
               ஊசிப்போன பின்தான் கொடுப்பாள்
              ஆண்டச்சி
              அடிச்சத்தம்/
              அழுகைச் சத்தம்தான்
              இங்கு வெடிச்சத்தம்
              எவன் செத்தாலென்ன
             வறுமை மட்டும் மார்கண்டேயனாக இருந்துகொண்டு?

என்ற வறுமை, சமூக ஏற்றத்தாழ்வு பற்றிய பதிவுகளாகட்டும், இவரின்  எளிய மொழி நடை கவிதைக்கு பலம் சேர்த்திருப்பது உண்மை.

பச்சை முடி செழித்த மலை/  கல்குவாரி முதலைகளால்/ மெல்ல மெல்ல விழுங்கப்பட்டு /ஊனமாய்க் காட்சியளிக்கிறது

என, இயற்கை அழிவினைப் காட்சிப்படுத்தும் கவிஞர்,

           கொள்ளையர்களுக்குத்
           தன் உறுப்புகளைக் களவுகொடுத்து
           பலவீனமாய் மெலிந்திருக்கும்
           ஏழையைப் போல்

என, ஏழைக்கு அம்மலையை ஒப்புமை படுத்துகிறார். அதோடு, ‘எரிமலைகளை / யாரும் நெருங்குவதில்லை’ எனத் தன் தீர்வையும் முன்வைக்கிறார்.

            கத்துதல்
            முட்டுதல்
            உழுதல்
           இனப்பெருக்கம் செய்தல்
           இப்படி அனைத்தம்சமும் உண்டு
          ஆனாலும் ஏனோ
          கறுப்பு மாடுகள் எளிதில் விலைபோவதில்லை

என்பதாக, தன் சமூக அரசியல் புரிதலையும் ஆங்காங்கே தெளித்துவிட்டுச் செல்லவும் கவிஞர் தவறவில்லை.

தான் வாழும் சூழலை அதன் இருப்போடும், இருமாப்போடும், வார்த்தைகளை மறைக்காத இசையின் இனிமையோடு பதிவு செய்தல் கவிதையின் வெற்றியாக அமைகிறது. கவிஞரின், கல்வி நிலைங்கள் பற்றிய கவிதையிலும், இன்னும் சிலவற்றிலும் இத்தன்மை வெளிப்பட்டு நிற்பதைக் காணமுடிகிறது. வலிந்து மேற்கொள்ளும் உவமைகளுக்கும், உருவகங்களுக்கும் இங்கு வேலையற்றுதான் போகின்றன.

               பாட்டியைக் கொடும்மைக்காரி என்ற அம்மா
                உணரவில்லை
               தானும் அவளாகவே
              மாறிவிட்டிருப்பதை

என்பதில், உறவுநிலைச் சிக்கல்களையும்,

              குடித்துத் தீர்த்திருந்தது
               குடி உன்னை
              இப்போதெல்லாம்
              குடித்து விழுந்துகிடப்பவரைக் கண்டால்
              பதைக்கிறது மனம்

என்பதில், குடியால் ஏற்பட்ட தன் குடும்ப பாதிப்பையும் பதிவுசெய்கிறார். கவிதை தோன்றும் காரணிகளுள் ‘இழப்பு’ என்பது முதன்மை பெறுகிறது. ஆம்,

                   இழந்துவிட்டதன் மீதுதான்
                   ஆசை அதிகரிக்கிறது
                   எப்போதும்
                   நேற்று அப்பா
                   இன்று நீ

என்கிறார் கவிஞர். ‘சுயம்’ நம்மை ஆற்றுப்படுத்துவது, அறியவைப்பது ஆயினும், துன்பத்தில் ஆழ்த்துவதும் அதுவே.

             மாலை மட்டும் மாற்றிக்கொள்வோமென்றேன்
            தமிழ்ப்பெண்ணின் அடையாளம் தாலி யென்றீர்கள்
            சீர் கொடுப்பது எனக்கு விலைகொடுப்பதென்றேன்
            பெற்றோரின் கடமையென்றீர்கள்
           ஒரு புரட்சித் தினத்தில்
           எளிமையாய் முடிக்கலாமென்றபோது
           ‘எங்களுக்கு கௌரவமிருக்கிறது’ என்றீர்கள்’
           எப்படியோ
           ஐந்து பைசா வட்டிக்கு வாங்கி
           ஒலிம்பிக் கார்ட்ஸ்
           புது மண்டபம்
           கச்சேரியென
           ஒரு சுபதினத்தில்
           ஊர்மெச்ச முடித்தாயிற்று
          வட்டி கட்டுவதில் திணருகிறது வாழ்க்கை

சமூகத்தின் மிக மிக்கிய காரணி மனிதன் என்றாலும்,  தனி மனிதனே சமூகம் அல்ல என்பது தெளிவு. இங்கு சமூகத்திற்காக சுயத்தை இழத்தலும், துன்பத்தில் வீழ்தலும் இயல்பாகிறது. அதவே கவிதையாகிறது.

            நத்தையாய் நகரும்
           அரசுப் பேருந்து
           எப்போது சென்று சேருமோ?
          தூரம் கடந்துவந்து மிரட்டுகிறது
          அதிகாரத்தின் குரல்
         ஒரு நிமிடம் தாமதித்தாலும்
          கரைந்து போகக்கூடும்
         என் குடும்பத்தின் ஒருநாள் உணவு

         என்பதில், மாத ஊழியனின் வாழ்வியல் நெருக்கடிகளும்,  முதலாளித் துவத்துக்குத் தம்மை  உயர்த்திக்கொண்டுவிட்ட அதிகார வர்கத்தின் போக்கும் கவிதைக் கருவாகின்றன.

மனைவிக்கு மரியாதை செய்வதாய் (‘பெண்ணியம் பேசுவதாய்...’ என்றும் கொள்ளலாம்) அந்தரங்கம் பேசும் இடத்தையும் ( தூக்கம் தளும்பும் உன்னை... - ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்றும் இதனைக் கொள்ளலாம்) , நகரத்தின் பற்றுதலுக்கான காரணத்தை வலிந்து திணிக்கும் இடத்தையும் (காக்கை குருவி ...) தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இருத்தலை அதன் இயல்போடு பதிவுசெய்திருக்கும் இக்கவிதைகள் காலம் தாழ்த்தி வெளிவந்தாலும், செறிவையும், சீர்மையையும் இழந்துவிடவில்லை.   எதார்த்தங்கள், எளியமொழி நடையின் கைகோர்ப்போடு வலம் வருகின்றன. இவை தனிமனிதன்  சார்ந்த பதிவுகளாயினும், நிகழ்கால சமூகத்தின் முகத்தை அதன் உன்னதத்தோடும் ஊணத்தோடும் எதிரொளிக்கின்றன.


                         உதிரும் இலைகள் குறித்து
                        எந்தக் கவலையுமில்லை
                        துளிர்த்துக்கொண்டேயிருக்கின்றன
                       புதிய புதிய தளிர்கள்

நூல் - உதிரும் இலை
ஆசிரியர் - யாழினி முனுசாமி
வெளியீடு - மித்ர ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ், சென்னை



கருத்துகள் இல்லை: