புதன், 28 டிசம்பர், 2016

தமிழர் திருநாள் / பொங்கல் / உழவர் திருநாள் / தைத் திருநாள்




மறந்துபோன மரபு விழாக்கள்
பொங்கல் / உழவர் திருநாள் / தமிழர் திருநாள்
முனைவர் ஆ.மணவழகன்
இணைப் பேராசிரியர்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
tamilmano77@gmail.com


            இயற்கையோடு இயைந்த வாழ்வு தமிழருடையது. வாழ்வு கொடுத்து வளமளிக்கும்  இயற்கையைக் காத்தனர்.      உலக உயிர்களுக்கெல்லாம் மூலமான ஞாயிறையும் திங்களையும் மழையையும் போற்றினர். மரங்களையும் தெய்வங்களாக எண்ணி இயற்கையோடு இணைந்தனர்.

            உலக மாந்தரினம் பலவும் ஆடையின்றி அரைமனிதராக அலைந்து திரிந்த வாழ்வியல் சூழலில், மானிட வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் அடிப்படையாம் வேளாண்மையைக் கண்டறிந்து, அதில் மேலாண்மை செய்தவர்கள் தமிழர்கள். வேளாண் தொழிலோடும் உழவோடும் தொடர்புடைய கதிரவனையும், மழையையும், மாடுகளையும் தமிழர் கொண்டாடினர். அவற்றிற்கு விழாக்கள் கண்டு நெஞ்சம் நிறைந்தனர். ஆம், வளமைக்கும் நன்றிக்குமான விழாவான தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் பழமையும் சிறப்பும் தனித்துவமும் மிக்கது.  

            தைப் பொங்கல், தமிழர் திருநாள், அறுவடைத் திருநாள், உழவர் திருநாள்  எனப் பலவாறு அழைக்கப்படும் பொங்கல் விழாவானது, நான்கு நாட்கள் கொண்டாடப்படும் தொடர் நிகழ்வாகும்.  முதல் நாள் போகி, அடுத்த நாள் கதிரவன் பொங்கல், மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல், நான்காம் நாள் காணும் பொங்கல் அல்லது கரிநாள்.

            மார்கழி இறுதி நாள் போகி (போக்கி). ஆடிப்பட்ட வேளாண்மை மார்கழியில் களம் கண்டு, திங்கள் இறுதியில் வீடு சேர்த்தலின் விழாக்கோலமே இப்போகி. பழையன கழிதல் என்பதற்கேற்ப இல்லத்தைத் தூய்மைப்படுத்துதல், வெள்ளையடித்தல், செம்மண் பட்டை தீட்டுதல் போன்றன இதன் முன் நிகழ்வுகளாகும். வேளாண் குடிகளின் வாழ்வியல் சடங்குகள் பலவும் இந்நாளில் நிகழ்த்தப் பெறுகின்றன. இந்நாளில் முன்னோர் வழிபாடும் மேற்கொள்ளப்படுகிறது. புது வருவாயான அரிசியில் மாவிடித்து விளக்கேற்றுவர். போகி நாள் இரவில் இறைவழிபாடு செய்யப்பட்ட பூசைப் பொருட்களைக் கொண்டு மறுநாள் விடியற்காலையில் காடு வளைத்தல் என்ற சடங்கு மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, முதல்நாள் இரவில் பூசையில் வைக்கப்பட்ட மா, வேம்பு, பூளா பூ (பூளை)  ஆகியவற்றின் கொத்துகளைத் தனக்கு உரிமையாக உள்ள விளைநிலத்தின் நான்கு எல்லைகளிலும் இட்டு, தனக்கான அத்துகளை உழவர் உறுதிசெய்வர்.  

            இரண்டாம் நாள் கதிரவன் பொங்கல். தைத் திங்களின் முதல் நாளிது. செங்கதிரோன் வெளித்தோன்றும் முன்பே அடுப்பு மூட்டி, புதுப் பானை உலையில் புத்தரிசிப் பொங்கல் வைப்பர். காலைக் கதிரவன் வெளித்தோன்றும்போது பொங்கல் பொங்கவேண்டுமென்பது மரபு.  கதிரவன் வெளித்தோன்றும்போது குலவையிட்டு, பொங்கலோ பொங்கலென ஓசை எழுப்பி, இசை முழக்கி, ஆர்ப்பரித்து கதிரவனுக்கு நன்றி நவிலும் இயற்கை வழிபாடிது. அரசி மாக்கோலம், கரும்புத் தூண்களில் மஞ்சள் –வேம்பு – மாவிலை – பூளை பூத்தோரணம் என இல்லங்கள் தோறும் அலங்காரம் அணிவகுக்கும்.

            மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல். உலக உருவாக்கத்திற்கு மூலமான இயற்கைக்கு நன்றி சொன்ன தமிழன், உயிர்களின் வாழ்விற்கு அடிப்படையான வேளாண் தொழிலில் துணைநிற்கும் விலங்குகளுக்கு நன்றி நவிலும் நன்னாளே இந்நாள். உழவனின் வாழ்வியல் மூலதனம் எருது. உழவனுக்கு எது வாய்க்கிறதோ இல்லையோ தொழிலுக்குத் துணையாக எருதுகள் வாய்க்க வேண்டும். நல்ல எருதுகள் வாய்க்கப்பெற்ற உழவன் பேறு பெற்றவன்.  மாட்டுப் பொங்கல் நாளில் எருதுகளையும் பசுக்களையும் குளிப்பாட்டி, உடலில் வண்ணப் பொடிகளால் அணிசெய்வர். கொம்புகள் சீவி, வண்ணம் தீட்டி அழகுபடுத்துவர். புதுக் கயிறு மாற்றி, சலங்கை கட்டி, மாலையிட்டு களிப்பர்.



            மாட்டுப் பொங்கல் நாளில், சாணத்தால் சிறு தொட்டிகள் நான்கு கட்டி, ஒன்பது கோள்களைக் குறிக்கும் வகையில் அதன் ஒவ்வொரு முனையிலும் சாணி பிள்ளையார் வைப்பர். ஒரு முனையில் மட்டும் மஞ்சள் பிள்ளையார் அலங்கரிக்கும். சிறு தொட்டிகள் பசும் பாலால் நிரப்பப்பட்டு, பாலில் மலர்களும், துளசியும், அருகம் புல்லும் தூவப்படும். தொட்டிகளின் தலைப்பகுதியில் உழவுக் கருவிகள், உலக்கை, அலங்கரிக்கப்பட்ட தடி, கதிர் அரிவாள், களைகொட்டு, மண்வெட்டி, கரும்பு, மஞ்சள், பூளா பூ (பூளை), ஆவாரம் பூ போன்றவை பயன்பாட்டு நோக்கிலும் வளமை நோக்கிலும் வைக்கப்படும். பொங்கல் சமைத்து, அது பொங்குகிற போது பொங்கலோ பொங்கலென குலவையிடுவர்.
           
            சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல்  ஆகிவற்றைப் படையல் செய்து வழிபட்டு, அதனை வெல்லம், வாழைப்பழத்துடன் கலந்து மாடுகளுக்கு ஊட்டி மகிழ்வர்.  ஊட்டும்பொழுதும் பொங்கலோ பொங்கலென முழங்குதல் மரபு. சிறுபிள்ளைகள் சிறுபறை இசைத்து  மகிழ்வர். ஊரில், அலங்கரிக்கப்பட்ட எருதுகளின் உலாவும் நிகழ்த்தப்பெறும்.

            நான்காம் நாள் காணும் பொங்கல். இதனை உழவர்கள் தங்களுக்கான ஓய்வு நாளாக, விளையாட்டுகளால் மகிழ்ந்திருக்கும் நாளாகக் கொள்கின்றனர். உறவினரோடும் நண்பரோடும் விழாக்களைக் கண்டு மகிழ்வர். கட்டிளங் காளையர் காளையடுக்கும் ஏறு தழுவுதல் எனும் வீர விளையாட்டு இந்நாளில் நிகழ்த்தப்பெறும்.  

நகரமயமாதலில் உழவு மாடுகள் இல்லை; உழு கருவிகள் இல்லை; புதுநெல் வரவு இல்லை; புதுப்பானைப் பொங்கல் இல்லை; உறவுகள் உடன் இல்லை; ஏறு தழுவுதல் எதுவும் இல்லை. அடுக்குமாடிக் குடியிருப்பொன்றின் சமையலறையில் மின்சார அடுப்பேற்றி, உயர் அழுத்தச் சமையல் கலனில் (குக்கர்) பொங்கல் வைத்துக்கொண்டிருக்கிறாள் என் மனையாள். தொலைக்காட்சியில் நடிகைகள் பல்லிளிக்கும் பொங்கல் கேளிக்கை நிகழ்ச்சிகளை வெறித்தபடி, எம் பிள்ளைகளுக்கு ஊட்டிக்கொண்டிருக்கிறேன் என் பாட்டன் பாட்டி இயற்கையோடு இயைந்து வாழ்ந்துவிட்டுப் போன பாங்கை.  

            அகத்தியமும் தொல்காப்பியமும்
            மேல்கணக்கும் கீழ்க்கணக்கும்
            பெருங் காப்பியமும்  சிறு காப்பியமும்
            பக்தி இலக்கியமும் பல்துறை நுட்பங்களும்
            சித்தர் இலக்கியமும் சிற்றிலக்கியமும்
            கொன்றெரித்து

            தமிழ்ப் பெருமையும் தன்மானமும்
            வீரமும் விவேகமும்
            அறிவும் அரசியலும்
            ஆற்றலும் ஆளுமையும் என
            அனைத்தையும்
            செரித்துத் தொலைத்த எம்மக்கள்...
            இன்று
            இலவசங்களில் ஏமாந்தவற்றைப் போகியாகத்
            தெருவெங்கும் எரித்துக்கொண்டிருக்கின்றனர்

            பாலை நிலத்துக் கொற்றவைமுன்
            துடி இசைத்துக் கூத்தாடிய வீரனைப்போல
            நகரத்து வீதியெங்கும்
            சிறுபறை முழக்கி
            எக்காளமிட்டுச் செல்கின்றனர்
            எம் சிறுவர்கள்.
                                                                                        ஆ.மணவழகன்
tamilmano77@gmail.com

ஏறு தழுவுதல் – தமிழர்ப் பண்பாடு




ஏறு தழுவுதல் – தமிழர் பண்பாடு

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த
தமிழுடன் பிறந்தோம் நாங்கள்

என்பார் பாவேந்தர் பாரதிதாசன். அண்டத்தின் கருக்கள் உருவான போதே உருவானவை தமிழினமும் மொழியும் என்பது இவர்போன்ற ஆன்றோர் வாக்கு. உலக உயிர்களுள்  மூத்த இனமாம் தமிழினத்திற்கெனப் பல சிறப்புகள் உண்டு. அவற்றுள் கலையும் பண்பாடும் தனிச் சிறப்பு. பழங்காலத்துக் கலைகளுள் முதன்மை பெறுவது ஏறுதழுவுதல் எனும் வீரக் கலை.

            மாடுகளில் ஆண்மையுடையது எருது. இது பழங்கால முல்லை நிலத்து ஆயர்களின் பெருஞ்செல்வம். மதம் கொண்ட யானையையும் கடும் புலியையும் எதிர்கொண்டு தாக்கும் வலிமையுடையது. வினையின் சிறப்பால் இது கொல்லேறு என்று போற்றப்படும். இவ்வெருதுகளை, வானிடத்து திங்கள் போலவும் திருமாலிடத்துள்ள சங்கு போலவும் அழகிய நெற்றிசுட்டியையுடைய கரிய நிறமுடைய காரிகள்; கரிய மேகம் சூழும் மலையிடத்து வீழ்கின்ற அருவியைப் போல அழகிய வெள்ளைக் கால்களையுடைய காரிகள்; பலராமன் மார்பில் இருக்கும் மாலையைப் போல சிவந்து நீண்ட கொடி மறுவினை உடைய வெள்ளைகள்; விண்மீனுடன் விளங்கும் செவ்வானம் போல அழகிய வெள்ளைப் புள்ளிகளையுடைய சிவந்த நிறத்தனவாகிய சேய்கள்; சிவபெருமான் மிடற்றின்கண் தோன்றும் கருமைபோல கரிய கறையினையுடை கழுத்தையும், உயர்ந்து வளர்ந்த திமிலினையும் உடைய கபில நிறத்தனவாகிய குரால்கள், தெளிவாகத் தோன்றும் சிவந்த சிறு புள்ளிகளையுடைய வெள்ளைகள் எனப் பலவாறு பழந்தமிழ் இலக்கியங்களில் அடையாளப்படுத்தப்படுகின்றன.

            கொல்லேறு என்றாலும் அதன் கோட்டிற்குக் காளையர் அஞ்சுவதில்லை. முல்லை நிலத்து ஆயர் பெண்ணை மணம்முடிப்பதற்காக ஏறுதழுவும் பண்பாடு பண்டைத் தமிழரிடையே இருந்தது. காளையர் அந்நிகழ்வில் விருப்பமுடன் பங்கேற்றனர். தான் விரும்பிய பெண்ணை மணந்து கொள்ளவும், தன் வீரத்தை வெளிப்படுத்தவும், புகழ்பெறவும் தனக்குக் கிட்டிய ஓர் அரிய வாய்ப்பாக ஏறுதழுவும் இவ்விழாவைக் கருதினர். எனவே கொல்லேற்றின் கோடு கிழித்து குடல் சரிவதோ, உயிர் விடுவதோ அவர்களுக்குப் பொருட்டல்ல.

கொல் ஏறு சாட இருந்தார்க்கு எம் பல் இருங்
கூந்தல் அணை கொடுப்பேம் யாம் (கலி.101:41-42)

என்று, கொல்லும் இயல்புடைய காளையை அடக்குபவர்க்குத்தான் எம் மகளைக் கொடுப்போம் என்பதில் ஆயர்களும் உறுதிகொண்டிருந்தனர். முல்லைநிலப் பெண்களும், கொல்லேற்றின் கோடஞ்சாது, அதனைத் தழுவி அடக்கும் வீரமுள்ள ஆடவனையே மணக்க விரும்பி ஏறுதழுவலைப் பரண்மீதிருந்து காண்பர்(கலி.103:6-9). அவ்வாறு பார்த்துக்கொண்டிருக்கும் ஆயமகளின் கூந்தலில் வந்து விழுந்த மாலையைத் தெய்வத்தின் செயலென்று நம்பினர்(107:31:33).
ஏறு தழுவும் வீர விழா நிகழ்வின் காட்சியை,
            எழுந்தது துகள்
            ஏற்றனர் மார்பு
            கவிழ்ந்தன மருப்பு
            கலங்கினர் பலர்        (கலி.102:21-24)

என்று கண்முன் காட்டுகிறது கலித்தொகை.
            காளையை அடக்கிய காதலனின் கைப்பிடிக்கும் ஆய மகளின் திருமணம் சங்க இலக்கியமாம் கலித்தொகையில் காணப்படும் தனிச் சிறப்பாகும். ஏற்றினைத் தழுவிய ஆடவனுக்கே தலைமகளைத் தமர் கொடை நேர்வர்(கலி.104:73-76). இல்லின் முற்றத்தில் திரையிட்டு(கலி.115:19-20), மணல் தாழப் பரப்பி, இல்லத்தில் செம்மண் பூசி, பெண் எருமையின் கொம்பினை நட்டு வழிபாடாற்றி ஆயமகளின் திருமணம் நடைபெற்றது.

                                    தரு மணல் தாழப் பெய்து இல் பூவல் ஊட்டி
                                    எருமைப் பெடையொடு எமர் ஈங்கு அயரும்
                                    பெரு மணம்                                       (கலி.114:12-14)
தம் துணையோடு பூக்களில் மது அருந்தும் வண்டுகள் அஞ்சியோடுமே என்றெண்ணித் தன் தேரில் ஒலிக்கும் மணி நாவினை இழுத்துக் கட்டிய தலைவனையும்,  தன் குரல் கேட்டால் இணைமான் துணை பிரியுமே என்றஞ்சி கணவனை எழுப்பத் தயங்கும் தலைவியையும், மரத்தையும் உறவாகப் பார்த்த மாந்தரையும் கொண்டதே பழந்தமிழ்ச் சமூகம். ஏறுதழுவும் வீரர்கள் தாம் குத்துப்பட்டாலும் காளைகளைத் துன்புறுத்தியதாகப் பதிவுகள் இல்லை. காளைகள் துன்புறுத்தப்படுகின்றன எனக் காரணம் காட்டி, ஏறுதழுவலை இன்று எடுத்தெறிவது இனப் புறக்கணிப்பு என்பதைத் தவிர வேறென்னவாக இருந்துவிட முடியும்.  
நான்
உண்பதை
உடுத்துவதை
பார்ப்பதை
படிப்பதை
சிரிப்பதை
சிந்திப்பதை
விதைப்பதை
விளையாடுவதை
யார்யாரோ தீர்மானிக்கிறார்கள்
சொல்லிக்கொள்கிறேன்
நான் ‘தமிழனென்று’.

                                                                        முனைவர் ஆ.மணவழகன்
                                                                        இணைப் பேராசிரியர்
                                                                        பொறுப்பாளர்
                                                                        பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம்
                                                                        உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
                                                                        தரமணி, சென்னை 600113.

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம் - Ancient Tamil's Art Gallery

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம்




பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம்
‘பழந்தமிழரின் சிறப்புகளையெல்லாம் நாட்டுக்கு எடுத்துக்காட்டும் வகையில் சுடுமண் சிற்பம், சுதை சிற்பம் மற்றும் மரம், கல், உலோகம் ஆகியவற்றைக் கொண்டும், படிமங்களாக வடிவமைத்த கலைப்பொருட்களைக் கொண்டும் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்படும்’ என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்தார்கள். அதன்படி, பணிகள் நிறைவுற்று பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம் 01.03.2016 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.



காட்சிப் பொருண்மைகள்

இக்காட்சிக் கூடத்தின் அரங்குகளில் பழந்தமிழரின் வாழ்வியல் சிறப்புகள், பண்பாட்டு விழுமியங்கள், அறிவு நுட்பங்கள், கலைக் கூறுகள், தொழில்நுட்பத் திறன்கள், அரசியல் மேலாண்மை போன்றவற்றை பொதுமக்களுக்கும் பள்ளி-கல்லூரி-ஆய்வு மாணவர்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் வெளிநாட்டினருக்கும் எடுத்துக்காட்டும் விதமாக ஓவியங்கள், நிழற்படங்கள், மரச்சிற்பங்கள், உலோகச் சிற்பங்கள், கற்சிற்பங்கள், சுடுமண் சிற்பங்கள், தோல் கருவிகள், சுதை வடிவங்கள், புடைப்புச் சிற்பங்கள்  போன்றவை எழில்மிகு கலை நயத்துடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

காட்சிக்கூட அரங்குகள்
            தொல்காப்பியர் அரங்கு
            திருவள்ளுவர் அரங்கு
            கபிலர் அரங்கு
            ஔவையார் அரங்கு
            இளங்கோவடிகள் அரங்கு
            கம்பர் அரங்கு
            தமிழ்த்தாய் ஊடக அரங்கு

தொல்காப்பியர் அரங்கு




            தொல்காப்பியர் அரங்கில் தமிழரின் கலைநுட்பங்கள் சிறப்பிடம் பெறுகின்றன. எழில்மிகு கதவு, ஒரே சிற்பத்தின் இருபுறங்களிலும் ஆடலரசியான மாதவி மற்றும் துறவறம் பூண்ட மணிமேகலையின் தோற்றங்கள், எழில்மிகு வடிவமைப்பில் அன்னம், காளை, மரத்தூண்கள், கற்றூண்கள், கற்சங்கிலி, கல்லாலான வசந்த மண்டபம், யானை-காளை இணைந்த வடிவம்,  உலோகத்தாலான தமிழ்த்தாய், கபிலர், ஔவையார், தொல்காப்பியர் சிலைகள், மரத்தாலான நடராசர் சிற்பம் போன்றவையும் பழந்தமிழர் வாழ்வியலைப் படம்பிடிக்கும் பல்வேறு ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன.

திருவள்ளுவர் அரங்கு


          திருவள்ளுவர் அரங்கில், பழந்தமிழரின் உலோகவியல் நுட்பம், மருத்துவ நுட்பம், நெசவுத் தொழில்நுட்பம், போரியல் நுட்பம், நீர் மேலாண்மை, வேளாண் மேலாண்மை, மண்பாண்டத் தொழில்நுட்பம், பண்டைக்கால கல்விமுறை,  ஆகியற்றை எடுத்தியம்பும் ஓவியங்கள், மாதிரி வடிவங்கள், நிழற்படங்கள், கற்சிற்பங்கள், மரச்சிற்பங்கள், உலோகச் சிற்பங்கள், பல்வேறு போர்க்கருவிகள் ஆகியன இடம்பெற்றுள்ளன.

கபிலர் அரங்கு

          கபிலர் அரங்கில், தமிழர் குடும்ப அமைப்பு முறை, பல்வேறு வகையான இல்லப் புழங்குபொருட்கள், ஐந்திணை வாழ்வியல் காட்சிகள், சுடுமண் சிற்பங்கள், இசைக் கருவிகள், தமிழர் அளவைகள், கற்சிற்பங்கள், இலக்கியப் பறவைகளின் வடிவங்கள் போன்றன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஔவையார் அரங்கு


          ஔவையார் அரங்கில், பண்டை அரசர்களின் அறம்-வீரம்-நீதிவழுவாமை-போர்முறை-கொடை போன்ற உயர் பண்புகளும், கோட்டை, அரண்மனை, கோயில்கள், பண்டைய நகரமைப்பு, கல்லணை போன்ற கட்டுமான நுட்பங்களும், மகளிர் வீரம், புறப்புண் நாணுதல், வஞ்சினம் மொழிதல், வடக்கிருத்தல் போன்ற பண்பாட்டுச் சிறப்புகளும் கலைநயத்துடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


இளங்கோவடிகள் அரங்கு

          இளங்கோவடிகள் அரங்கில், பண்டைத் தமிழரின் வெளிநாட்டு வணிகம், வணிக வீதி அமைப்பு, கப்பல் கட்டுமான நுட்பம் போன்றவற்றின் ஓவியங்களும் கலங்கரை விளக்கம், நெசவுக் கருவிகள், நாவாய் போன்ற மாதிரி வடிவங்களும் உலோகக் கருவிகள், வேளாண்மை நுட்பம், நீர் மேலாண்மை  போன்றவற்றின் நிழற்படங்களும் இடம்பெற்றுள்ளன.

கம்பர் அரங்கு

          கம்பர் அரங்கில் பல்வேறு வகையான இசைக்கருவிகள், தமிழகப் பழங்குடிகளின் அரிதான புழங்குபொருட்கள், பல்வேறு சடங்கியில் நிகழ்வுகளின் நிழற்படங்கள், பல்வேறுவகை நாட்டுப்புறக் கலைசார் பொருட்கள், தெருக்கூத்துக் கலைப் பொருட்கள், தமிழினத்தின் தொன்மை, அறிவு நுட்பம் போன்றவற்றை உணர்த்தும் தொல்லியல் கண்டுபிடிப்புகள் போன்றன இடம்பெற்றுள்ளன.

தமிழ்த்தாய் ஊடக அரங்கு

காட்சிக்கூடத்தில் சுமார் 2,300 சதுர அடியில், 56 இருக்கைகள் கொண்ட, நவீனத் தொழில்நுட்பங்களுடன் கூடிய திரையரங்கு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் காட்சிக்கூடத்தைப் பார்வையிடுவதற்கு முன்பாக, பழந்தமிழர் வாழ்வியல், பழந்தமிழர் மருத்துவம், தமிழர் நீர்மேலாண்மை, ஆட்சித்திறன், பழந்தமிழர் போரியல் போன்ற குறும்படங்கள் இத்திரையரங்கில் திரையிட்டுக் காண்பிக்கப்படும்.

சிறப்புகள்

மரபு சிறப்புகளுடன் கூடிய அழகிய நுழைவாயிலுடன், காட்சிக்கூடக் கலைப்பொருள்களின் எழில்மிகு தோற்றத்தை எப்புறத்திலிருந்தும் முழுமையாகக் காணும் வகையிலான ஒளிமிகு மின்விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. தேவையான பொருண்மைகள் முப்பரிமாணத் தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

இக்காட்சிக்கூடம், பழந்தமிழரின் வாழ்வியல் நுட்பங்களைப் பார்வையாளர்கள் கண்டு இன்புறும் வகையிலும், தமிழர் பெருமைகளை உலகோர் உணரும் வகையிலும், இலக்கிய மற்றும் தொல்லியல் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு வகையிலான கலைநுட்பத்துடன்  வடிவமைக்கப்பட்டுள்ளது.

இணையம்
www.pvkk.org

தொடர்புக்கு:

முனைவர் ஆ.மணவழகன்
பொறுப்பாளர்
பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம்
இணைப் பேராசிரியர்
சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தரமணி, சென்னை-600113.

புதன், 3 ஆகஸ்ட், 2016

பதினெண்கீழ்க்கணக்கில் அறிவுத் துறைகளும் மரபுநுட்பங்களும்


பதினெண்கீழ்க்கணக்கில் அறிவுத் துறைகளும் மரபு நுட்பங்களும்
ஆய்வு நூல்,  ஆசிரியர் :முனைவர் ஆ.மணவழகன், 
வெளியீடு : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. 2015
 (தமிழ்நாடு அரசின் சிறந்த ஆய்வு நூலுக்கான பரிசு பெற்றது)


அணிந்துரை 

முனைவர் கோ.விசயராகவன், இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. 

சங்க இலக்கியங்கள், தமிழ்ச் சமூகத்தின் தொன்மை, பண்பாடு,  வாழ்வியல் போன்றவற்றை உலகிற்கு உணர்த்துகின்றன.   தமிழ்ச் சமூகம்  அறிந்து வைத்திருந்த பல்வேறு அறிவு நுட்பங்களுக்கும் இவ்விலக்கியங்களே முதன்மைச் சான்றுகளாகவும் விளங்குகின்றன.   இவ்வுண்மைகளை, இலக்கியங்கள் தொடர்பாக பல்வேறு கோணங்களில் வெளிவந்துகொண்டிருக்கும் ஆய்வுகள் மேலும் மேலும் உறுதிப்படுத்துகின்றன.

அவ்வகையில், சங்க இலக்கியங்களின் தொடர்ச்சியாக அமைந்துள்ள கீழ்க்கணக்கு தொடர்பான ஆய்வு நூலாக ‘பதினெண்கீழ்க்கணக்கில் அறிவுத் துறைகளும் மரபு நுட்பங்களும்’ என்ற இந்நூல் அமைந்துள்ளது. உலகப் பொதுமறையாம் திருக்குறள் தவிர்த்து, ஏனைய கீழ்க்கணக்கு நூல்கள் தொடர்பாக வெளிவந்துள்ள ஆய்வுகள் பெரும்பாலும் அறக்கோட்பாட்டு நோக்கிலேயே அணுகப்பட்டுள்ளன. இச்சூழலில் இந்நூல், சங்கம் மருவிய கால நூல்களில் காணப்படுகிற பழந்தமிழரின் மரபு அறிவுப் பதிவுகளை  மிக நுட்பமாக வெளிப்படுத்துகிறது.

இந்நூலில், வேளாண் அறிவும் மரபு நுட்பங்களும், மருத்துவ நுட்பங்களும் உடல்நல மேலாண்மையும், வானியல் அறிவும் நீர் மேலாண்மையும், கட்டடக்கலை நுட்பங்களும் பயன்பாட்டுப் பொருள்களும், உயிரியல் அறிவும் சூழலியல் மேலாண்மையும்,  உலோகவியல் நுட்பங்களும் கருவிகளும், அரசியல் மேலாண்மையும் ஆளுமைப் பண்பும், சட்டவியல் அணுகுமுறைகள் என்ற பெருந்தலைப்புகளில் தமிழர் அறிந்திருந்த பல்வேறு துறைகளும் மரபு நுட்பங்களும் தக்க சான்றுகளோடு விளக்கப்பட்டுள்ளன.   இதன்வழி,  சங்கம் மருவிய காலத்தில் பல்வேறு அறிவுத் துறைகள் சிறந்திருந்ததையும், அத்துறைகளில் பல்வேறு நுட்பங்கள் கையாளப்பட்டதையும் நூலாசிரியர் முனைவர் ஆ.மணவழகன் வெளிப்படுத்தியுள்ளார்.   தமிழர்களின் மரபு நுட்பங்களை மீட்டுருவாக்கம் செய்ய சிறந்த தரவு நூலாக இது அமைவதோடு, ‘சங்கம் மருவிய காலம் இருண்ட காலம்’ என்ற பொதுவான கூற்றையும் உடைக்கிறது.

முனைவர் ஆ.மணவழகன் அவர்கள், பழந்தமிழ் இலக்கியங்களைச் சமூகவியல் நோக்கில் அணுகுவதோடு,  அக்காலச் சமூகத்தின் மரபு நுட்பங்களையும் மேலாண்மைச் சிந்தனைகளையும் வெளிக்கொண்டுவரும் அரிய முயற்சியில்   தொடர்ந்து  ஈடுபட்டு வருபவர். அந்த வகையில், ‘பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் அறிவுத் துறைகளும் மரபு நுட்பங்களும்’ எனும் தலைப்பில் ஆய்வுத் திட்டம் மேற்கொண்டு, அதனை நூலாக வடித்துள்ள  நூலாசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்களுக்கு  எனது பாராட்டுகள்.

தமிழ்நாடும் தமிழ் மொழியும் தழைத்திடப் பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிற  மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ் வளர்ச்சிக்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளர்ச்சிக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருவதோடு, தம் தனிப்பட்ட அக்கறையைக் காட்டிவரும்பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவருமாகிய  மாண்புமிகு கே.சி. வீரமணி அவர்களுக்கும், தமிழ் வளர்ச்சியில் எங்களை வழிநடத்திவரும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் முனைவர்  மூ. இராசாராம்  இ.ஆ.ப. அவர்களுக்கும் எம் இனிய நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

நூல் வடிவமைப்பு செய்த திருமதி சௌசல்யா அவர்களுக்கும் நூலினை அச்சிட்டுத் தந்த ஏ.கே.எல். அச்சகத்தாருக்கும் எனது பாராட்டுகள்.

*****

நூலறிமுகம்

பிறப்பில் அனைத்து உயிர்களும் ஒன்றாயினும், மரபுச் சிறப்பும் வரலாற்றுப் பெருமையும் அனைத்து உயிர்களுக்கும் ஒன்றாதல் இல்லை. மனித இனத்தில் இவ்வகை மரபுச் சிறப்புகளையும் வரலாற்றுப் பெருமைகளையும் கொண்ட இனமாகத் தமிழினம் திகழ்கிறது.  வெற்றுப் பெருமை என்று இதனைப் புறந்தள்ளிவிட இயலாது.  மேலைநாட்டார், ஐம்பது ஆண்டுகள் பழமைவாய்ந்த கட்டடங்களையெல்லாம்  மரபுச் சின்னங்களாகப் போற்றுகிறபோது, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழஞ்சிறப்புகளைக்கூட நாம் எண்ணிப் பார்ப்பதில்லை; போற்றுவதில்லை; பாதுகாப்பதில்லை. பழமையைப் போற்றுபவர்களாக, அவற்றிலிருந்து பாடம் கற்பவர்களாக, மரபு நுட்பங்களை மீட்டுருவாக்கம் செய்து இயற்கையைக் காப்பவர்களாக, இளைய சமூகத்திற்கு அவற்றைக் கற்றுக்கொடுப்பவர்களாக  இருந்திருந்தால் ‘வெற்றுப் பெருமை பேசுபவர்கள்’ என்ற வீண் தூற்றல் நம்மீது விழுந்திருக்காது.

            பழந்தமிழர்களின் இயற்கையோடு இயைந்த அறிவியலையும், மரபு நுட்பங்களையும் வெளிக்கொணர்ந்து அடையாளப்படுத்தும்மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியின் சிறுகூறே  இந்நூல். பதினெண்கீழ்க்கணக்கில் இடம்பெற்றுள்ள வேளாண்மை, வானியல், நீர் மேலாண்மை, தாவரவியல், விலங்கியல், பறவையியல், பூச்சியியல், மருத்துவம், உடல்நலமேலாண்மை, கட்டடவியல், உலோகவியல், அரசியல், சட்டவியல் எனப் பல அறிவுத் துறைகளையும் அவற்றில் பொதிந்துள்ள பல்வேறு மரபு நுட்பங்களையும் சான்றுகளோடு இந்நூல்   விளக்கிச் செல்கிறது.

            அறச் செய்திகளே  அதிகம் என்ற பொதுக்கருத்தால் அடையாளப்படுத்தப்பட்ட பதினெண்கீழ்க்கணக்கு  நூல்களில், சங்க இலக்கியங்களுக்கு இணையாக அறிவுசார் கருத்துகளும் மரபு நுட்பங்களும் இடம்பெற்றுள்ளன என்ற கருதுகோளை முன்வைத்து, அதன் மெய்ம்மைத் தன்மையை விளக்கமுறை அணுகுமுறையில் இந்நூல் நிறுவுகிறது.   எளிமையும் தேவையும்  கருதி, பாடலடிகள் சில இடங்களில் பதம் பிரித்தும் சில இடங்களில் பதம் பிரிக்காமலும் கொடுக்கப்பட்டுள்ளன.


பழந்தமிழர் தொழில்நுட்பம்’ என்ற என்னுடைய முந்தைய நூல், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுவரும் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடத்தின் பொருண்மைகளுக்கும் காட்சிகளுக்கும் தரவு நூலாக அமைந்தது குறித்து மிகுந்த மகிழ்ச்சி. அந்நூலுக்குச் சங்க இலக்கியங்களே ஆய்வுக் களமாக  அமைந்த நிலையில், தற்போது வெளிவரும் இந்நூலுக்குப் பதினெண்கீழ்கணக்கு நூல்கள் முழுவதும் ஆய்வுக் களமாக  அமைகின்றன. இரு நூல்களிலும் இடம்பெற்றுள்ள அறிவியல் மற்றும் மரபு நுட்பச் செய்திகளை ஒருங்கிணைத்து, முறைப்படுத்தினால் பழந்தமிழரின் அறிவுசார் வாழ்வியல் சிறப்புகளை முழுமையாக அடையாளப்படுத்த  முடியும்.