செவ்வாய், 29 மார்ச், 2011

கூடாகும் சுள்ளிகள் கவிதைத் தொகுப்பு - நூல் மதிப்புரை

கூடாகும் சுள்ளிகள்  கவிதைத் தொகுப்பு - நூல் மதிப்புரை

முனைவர் து. ஜானகி
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

              
         மனதை வருடும் மயிலிறகாய் மணவழகன் கவிதைகள். கவிதைத் தேரில் அமர்ந்து கிராமம் முதல் நகரம் வரை நெடும்பயணம் சென்று மக்களின் பண்பாடு அறிந்த மன நிறைவு.

     கவிதைகள் ஒவ்வொன்றும் இயல்பான நடையில் மானுடத்தின் அனுபவமாய் வெளிப்படுகின்றன. வாசித்தபின் யோசிக்கத் தூண்டும் கவிதைகள் பல. அவற்றில் ஒன்று ‘வெள்ள நிவாரணம்’.

ஒரு சோடி வேட்டி சேலை
மூன்று லிட்டர் மண்ணெண்ணெய்
ஐந்து கிலோ அரிசி
இரண்டாயிரம் ரொக்கம்
மாற்றாக
மனித உயிர்கள் பல

 ஒருபுறம் அறிவியல் வளர்ச்சி, மறுபுறம் மனிதமன வீழ்ச்சி என சமுதாய முரண்களையும் சாடியிருக்கிறார்.

சோதனைக் குழாயில் 
 சொந்தங்களை உண்டாக்கினோம்

சாதனைகள் புரிய – கணினிச் 
 சாதனங்களைப் படைத்தோம்

இணையத்தால் இமயத்தைத் தொட்டோம் 
 குளோனிங்கால் கோபுரத்தை அடைந்தோம் 

 கண்டம் தாண்டினோம் – பல
அண்டம் கண்டோம்
வானம் அளந்தோம் – புதிய

கோளம் கண்டோம் 
 நாடுவிட்டு நாடு மாறினோம்
மதம் விட்டு மதம் மாறினோம்

ஆனால்
மனிதராக மாற மட்டும் 
 மறந்தோம்

அவசர உலகில் மனிதன் பல சிக்கல்களைத் தாண்டி வளரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இச்சிக்கல்கள் தீர ‘படி படி’ எனப் பல வாழ்க்கைப் படிமுறைகளை மனத்திற்குள் பதியம்போட வைக்கிறார்.

மானுடம் படி அது தழைக்க
மனிதநேயம் படி
சோதனைகள் தடையல்ல
சான்றோர் சாதனைகள் படி

 இன்றைய மாணவர்கள் படிப்புக் காலத்தின் பொழுதே தன் வகுப்பு ஆசிரியர்களின் பெயர் தெரியாமலேயே படிப்பை முடித்துவிட்டுச் செல்கின்றனர். இச்சூழலுக்கு விதிவிலக்காக, ஆசிரியர்களுக்குக் குருதட்சிணையாக, தமிழ் மற்றும் தமிழ் ஆசிரியர்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது இவரின் ‘இழப்பு’ என்ற கவிதை. மணவழகன், நல் மாணாக்கன்; ஆசான்களின் ஆளுமை பட்டியில் நல் ஆசான்; மாணாக்கருக்கு நல்வழிகாட்டி.

இக்கால காதலையும், காதலர்களின் மனநிலையையும் ‘அழைப்பிதழ்’, ‘மனசு’ போன்றவற்றின் வழி படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

        என்னுள் துளிர்த்து
     என்னுள் பூத்து
என்னுள் காய்த்து
என்னுள் கனிந்து
என்னுள்ளே முடிந்துபோன
இரகசிய விருட்சம்
நீ

என்று இழந்த காதலைப் பேசுகிறது ‘இகரசியம்’ கவிதை.

‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்பதை இக்காலச் சூழலுக்கேற்ப விளக்கி, நாசுக்காக அம்பலப்படுத்தியுள்ளார் அரசியல் அவலத்தை.

‘கூடாகும் சுள்ளிகள்’ தலைப்பு மிக அருமையான பாடம் மனிதருக்கு. சிறுசிறு சுள்ளிகளைச் சேகரித்து அழகிய கூடுகளாக்குகின்றன பறவை இனம். இவற்றைப் போலவே கவிஞரும் ஆங்காங்கே கண்ட காட்சிகளைக் கவிதைக்கூடாரமாக்கித் தந்துள்ளார் நம் மனம் இளைப்பாற. கவிதைகளுக்கு அணிகலன்களாய் கோட்டோவியங்கள்.

மொத்தத்தில் இவர் கவிதை முத்துகளான மானுடவியலை ‘வாழ்க்கை வணிகனில்’ தொடுத்து, நடப்பியலை ‘நட்பியலிலும்’, காதலியலை ‘இரகசியத்திலும்’ தத்துவவியலை ‘உள்ளம் செதுக்கும் உளிகளிலும்’ ஆசிரியவியலை ‘இழப்பிலும்’ பொதுவியலை ‘வேண்டுதலுடன்’ முடித்து மாலையாக்கித் தந்துள்ளமை சிறப்பு.

‘நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு’

எனும் வள்ளுவப் பெருந்தகையின் சொல்லிற்கு ஏற்ப இப்பண்புடையாளரின் நட்பு தொடரவும் இவரின் ஆழமான தேடல் விரிவடையவும் வளரவும் வாழ்த்துக்கள்.



கருத்துகள் இல்லை: