ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011
தமிழ்ச் செவ்வியல் நூல்கள் - அறிமுகம்
வியாழன், 19 மே, 2011
கலைஞரிடம் விருதுத் தொகை பெற்ற முனைவர் ஆ.மணவழகன்
செம்மொழித் தமிழ் அறிவுத் திறத்திறத்திலும் நூற் புலமையிலும் சிறந்து விளங்கும் ஆய்வாளர்களுக்குக் குடியரசுத் தலைவரின் மூதறிஞர் விருதும், இளம் ஆய்வறிஞர் விருதும் ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று நடுவண் அரசு முதல் முதலாக அறிவிப்பு செய்திருந்தது. அதன்படி, முதல் அறிவிப்பில் 2005-2006, 2006-2007, 2007-2008 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான குடியரசுத் தலைவரின் மூதறிஞர் மற்றும் இளம் ஆய்வறிஞர் விருதுகள் அறிவிக்கப்பட்டன.
நடுவண் அரசின் இந்த அறிவிப்பின்படி, 2007-2008ஆம் ஆண்டிற்கான
குடியரசுத் தலைவரின் ‘இளம் ஆய்வறிஞர்’ விருது முனைவர் ஆ.மணவழகன் அவர்களுக்கு
அறிவிக்கப்பட்டது.
இந்த விருதானது சான்றிதழோடு, ஒரு இலட்ச ரூபாய்
பரிசுத் தொகையையும் உள்ளடக்கியது. 28.03.2010 அன்று சென்னையில் நடந்த விழாவில், மத்திய அரசு அறிவித்த செம்மொழித் தமிழின் இளம் அறிஞர் விருதுத்கான தொகை ரூபாய் ஒருலட்சத்தை, தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் அறிஞர் பெருமக்களுக்கு வழங்கி சிறப்புசெய்தார். படத்தில், முதல்வர் அவர்களிடமிருந்து காசோலை பெரும் ஆய்வறிஞர் முனைவர் ஆ. மணவழகன் அவர்கள்.
முனைவர் ஆ.மணவழகன் அவர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது
செம்மொழித் தமிழ் அறிவுத்
திறத்திறத்திலும் நூற் புலமையிலும் சிறந்து விளங்கும் ஆய்வாளர்களுக்குக் குடியரசுத்
தலைவரின் மூதறிஞர் விருதும், இளம் ஆய்வறிஞர் விருதும் ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று
நடுவண் அரசு முதல் முதலாக அறிவிப்பு செய்திருந்தது. அதன்படி, முதல் அறிவிப்பில் 2005-2006,
2006-2007, 2007-2008 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான குடியரசுத் தலைவரின் மூதறிஞர் மற்றும்
இளம் ஆய்வறிஞர் விருதுகள் அறிவிக்கப்பட்டன.
திங்கள், 25 ஏப்ரல், 2011
கவிஞர் ஆ மணவழகனின் கூடாகும் சுள்ளிகளை முன்வைத்து
வீட்டைக் கட்டிப்பார் கல்யாணத்தைச் செய்துபார் என்கிறது முதுமொழி. சுள்ளிகளைப் பொறுக்கியெடுத்துக் கூடுகட்டும் காகத்தின் வலியும் வலிமையும், தூக்கணாங்குருவியின் தொழில்நுட்பமும் அறிவியலும், சிலந்திப் பூச்சியின் ஓவியமும் அழகுணர்ச்சியும் அவை கட்டும் வீடுகளில் காணலாம். சுள்ளிகளைத் தேடியெடுத்து உயரமான மரக்கிளைகளின் நடுவில் கட்டும் காகத்தின் வீடு அடைமழை பெய்தாலும், ஆடி மாதக் காற்றில் அம்மி பறந்தாலும் ஆடாமலும் அசையாமலும் இருக்கும். அதிலிருந்து ஒரு சுள்ளிகூட கீழே விழுந்துவிடாது. அதேபோல், தூக்கணாங்குருவியின் தொழில்நுட்பம் பற்றி சங்க இலக்கியப் புலவர்களுக்குக்கூட வர்ணிக்க வார்த்தைகள் இன்றிப் போயிருக்கலாம். அந்தரத்தில் அழகான அடுக்குமாடி கட்டி அதிலொரு விளக்கு வைத்து ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் பறவையைப் பார்த்தால் அதிசயக்க முடியாமல் இருக்க முடியுமா?
ஆயிரம் தாஜ்மகால் அதிசயம்
ஒற்றைத் சித்தனின் உயிர்த்தவம்
தூக்கணாங்கூடு
என்று தூக்கணாங்குருவியின் கவித்திறத்தைக் கண்டு அதிசயத்தின் உச்சத்துக்கே சென்றிருக்கிறார் கவிஞர் ஆ.மணவழகன் அவர்கள்.
பட்டுப்புழுக்களே நீங்கள் பின்னிக்கொண்டிருப்பது
பட்டு இல்லை
நீங்கள் பின்னிக்கொண்டிருப்பது கவிதைகள்
உங்கள் கவிதைகள் எவ்வளவு மென்மையாக உள்ளன
எவ்வளவு வசீகரம், எவ்வளவு நேர்த்தி,
எவ்வளவு நுட்பம், எவ்வளவு...
உங்களை வர்ணிப்பதற்கு வார்த்தைகள்
கிடைக்கவில்லையே ஏன்?
--------------------------------------------
ஆகா உங்கள் கவிதைகள் இயல்பானவைதான்
ஆகா உங்கள் கவிதைகள் இயற்கையானவைதான்
நீங்கள் எழுப்பிக் கொண்டிருக்கும்
கலைநயமிக்க அரண்மனை
ஆகா உங்களுக்காக மட்டும்தான்!
(தமிழில் கு. சிதம்பரம்)
என்று சீனக் கவிஞர் குவோ மொடுவோ பட்டுப்பூச்சியின் கவித்திறத்தைக் கண்டு அதிசயத்ததை ஒப்புநோக்கினால் கவிஞருக்குள்ள பொதுத்தன்மையை அறிய முடிகிறது.
தேனீக்கள் முதல் பறவைகள்வரை தங்கள் வாழ்நாளில் தங்களுக்கான வீட்டைக் கட்டி அழகு பார்த்துவிடுகின்றன. ஆனால், மனிதர்களுக்கு வீடு என்பது இந்த நூற்றாண்டிலும் கனவாகவே உள்ளது. எலி வளையானாலும் தனி வளை வேண்டும் என்கிறது முதுமொழி. தனக்கென ஒரு வீடு கட்டுவதில் உள்ள நிகழ்கால சிக்கல்களை ‘கனவு சுமந்த வீடு’ என்ற கவிதை காட்டுகிறது.
கடைக்கால் எடுக்கையில்
ஒதுக்கிவிட்ட வேப்பங்கன்று
தளிர் தாங்கி
நிழல் பரப்பி
கூடு சுமக்கும் மரமாய்
கனவு இல்லமோ
இன்னும் கடைக்காலாய்
இன்று எத்தனையோ வீடுகள் கடைக்காலோடு நின்றுபோவதையும், தரைமட்டத்தோடு நின்றுபோவதையும் பார்க்கிறோம். இவ்வாறு கட்டிமுடிக்கப்படாமல் பாதியிலேயே நின்றுபோகும் வீடுகளைக் காணும்போதெல்லாம் வாடிவிடும் கவிஞரின் உள்ளம் இதன்மூலம் தெரிகிறது.
இவ்வாறு, பாதியிலே நின்ற வீட்டைத் தூக்கி நிறுத்த வங்கியில் நில அடமானம் வைத்து கடன்பெற்று கட்டிமுடித்தால், வட்டியோடு பணத்தை வைத்துவிட்டு வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்துகொள் என்று கடன் கொடுத்தவன் வீட்டைப் பூட்டிச் செல்லும் நிகழ்கால அவலத்தையும் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார் கவிஞர்.
காட்டின் பத்திரம் வைத்து
ஏர் மாடுகளைக் கலப்பையோடு விற்று
ஆசை ஆசையாய் வளர்த்த மரங்களையும்
அக்கா வளர்த்த ஐந்தாறு ஆடுகளையும்
அடிவிலைக்கு அம்போவென்று கொடுத்து
அடுத்த பருவத்திற்கு எடுத்து வைத்த
விதை நெல்லையும்
அம்மாவின் ஒற்றைக் கொடியையும் விற்று
வீடு கட்டினார் அப்பா
குடிபுகுமுன் ஓலை வந்தது
இம்முறையும் தவணை தவறினால்
வீடு தாழிடப்படும் என்று
இவ்வாறு ஆயிரம் சிரமங்களுக்கு ஆட்பட்டு கட்டி முடிக்கப்படும் வீடுகளுக்குக் குடிபோகுமுன் எண்ணற்ற சிக்கல்கள். மாநகராட்சிகள் ஒருபுறமும் இயற்கை சீற்றங்களான சுனாமி, பூகம்பம் போன்றவை மறுபுறமும் கனவு வீடுகளைக் குறிவைத்து அப்புறப்படுத்துகின்றன. ஒரே நிமிடத்தில் மாடிவீடுகளைத் தரைமட்டமாக்கி மீண்டும் நடுத்தெருவிற்குக் கொண்டுவந்து விரட்டிவிடுகின்றன. இதைக்கண்ட கவிஞர் ‘ஒட்டடை’ என்ற கவிதை மூலம் தனது கண்ணீரைக் கடலில் கலந்திருக்கிறார்.
ஐயோ
துடைத்துவிடாதே
ஒட்டடை அல்ல வீடு
சுவற்றில் சிலந்தி
நிகழ்கால மருத நிலத்து மக்களின் புற வாழ்க்கை இன்ப துன்பங்களைக் கண்ணாடி அணியாமலேயே கண்டுகொள்ளும் அளவிற்குத் தனது கவித்திறத்தாலும் கவிதை மொழியாலும் பூமி உருண்டையை இயக்கும் கடவுளைச் சாட்டையால் அடித்தது போன்று வாசகர்கள் உளத்தில் ஏற்படுத்தத் தவறவில்லை. அதேபோல,
----------------
என் முன்
கூட்டை இழந்த பறவையாய் நீ
உன்முன்
பறவையை இழந்த கூடாய் நான்
என, கூட்டை மையமாக வைத்து அக வாழ்க்கையின் அழகியலையும் தலைவன் தலைவியின் காதல் வாழ்க்கையையும் ‘பறவை இழந்த கூடு’ என்ற கவிதை மூலம் வெளிப்படுத்தியிருப்பதைக் காணலாம்.
சனி, 9 ஏப்ரல், 2011
கவிஞர் ஆ.மணவழகன் கவிதைகள் - 4
கடைக்கால் எடுக்கையில்
ஒதுக்கிவிட்ட வேப்பங்கன்று
தளிர் விரித்து
கிளை தாங்கி
நிழல் பரப்பி
கூடு சுமக்கும் மரமாய்
கனவு இல்லமோ
இன்னும்
கடைக்காலாய்
ஒப்புசாண் மலை மீது
பீடியைப் பற்றவைத்துக் காட்டினான்
கோனான் சிவக்குமார்
இரத்தினம் கிணற்றில்
புறா பிடிக்கும் அவசரத்தில்
புகையிலையின் மகத்துவம்(!?) சுட்டினான்
பால்ய நண்பன் பாண்டியன்
நாத்தம் பாக்காம குடிச்சிடு
ஒத்தை மரத்துக் கள் உடம்புக்கு நல்லது
எடுத்து வைத்தார்கள்
சிறிய கோப்பையில் அப்பாவும்
பெரிய சொம்பில் மாமாவும்
பீர் மட்டுந்தான் நல்லதாம்
காட்டுக்கோட்டை கல்லூரிக் காலத்தில்
வாங்கிவந்தார்கள்
சேட்டும் குமரேசனும் ராஜேசும்
தேசியக் கல்லூரியில்
வில்ஸ் வெண்சுருட்டை
விரலிடுக்கில் வைக்கும்
லாவகம் சொன்னான்
மாப்ள காளிமுத்து
கஞ்சா என்னவெல்லாம் செய்யும்
வகுப்பெடுத்தான்
அகால மரணமடைந்த ஆருயிர் நண்பன்
பாக்கியநாதன்
இதப் பழிக்கக்கூடாது சார்
குழந்தை மாதிரி ஒண்ணுமே பண்ணாது
இராணுவ ரம்மை சோடாவில் கலந்து கொடுத்தார்
பசுமைக் கவிஞர்
எதா இருந்தாலும் இதுக்கு உட்டதுதான்
சாமிக்கு வாங்கி வைத்த சாராயத்தை
நாக்கில் வைத்துப் பார்க்கச் சொன்னான்
தையல் கடை செல்வம்
முழு பான்பராக்கையும்
ஒரே வாயில் போட முடியுமா?
பந்தயம் கட்டித் தோற்றான்
திருச்சி நண்பன் சங்கர்
எல்லா எழவையுந்தான் பார்த்தாச்சு
எதிலேயும் ஒரு ---ம் இல்லை
பழகியாச்சு விடமாட்டேங்குது
பொய்சொல்லாதே
உன் மனைவி விதவையாவது பற்றி
உன் குடும்பம் நடுத்தெருவில் நிற்பது பற்றி
எந்த அரசுக்கும்
இங்குக் கவலையில்லை
சிறகு முளைக்குமுன்பே
பறக்கத் தொடங்கியாயிற்று
சைதாப்பேட்டை
மேட்டுப்பாளையம்
சானடோரியம்
இப்போது ஆதம்பாக்கம்
முதலில் கைப்பை
அடுத்து தானி
பின் குட்டியானை
இப்போது 407
வீட்டைச் சுமந்து திரிந்தாயிற்று
வேலையும் வேலை நிமித்தமும்
எங்கள் ஆறாம் திணை
வரலாறுகளை வரப்பில் சுமந்திருக்கும்
வளமான மண்
வாழ்க்கையை வாய்க்காலில் நிறைத்திருக்கும்
வற்றாத கிணறு
சோகத்தை விதைத்ததால்
இன்பத்தையே விளைவிக்கும் இல்லம்
குளோரின் கலக்காத குடிநீர்
குப்பைகளைச் சுமக்காத காற்று
எல்லாமும்தான் இருக்கிறது ஊரில்
இருந்துமென்ன---
இருந்தது இல்லாமல் போகும்போதும்
இருப்பு இடம் மாறிப் போகும்போதும்தான்
உறைக்கிறது
ஏதிலிகளின் வலி
திங்கள், 4 ஏப்ரல், 2011
கவிஞர் ஆ.மணவழகன் கவிதைகள் - 3
ஞாயிறு, 3 ஏப்ரல், 2011
உதிரும் இலை - நூல் மதிப்புரை
இருத்தலும் வாழ்தலும் - அதன் வலிகளோடு
சைதாப்பேட்டை தொடர்வண்டி நிறுத்தத்தில் தொடங்கி, தாம்பரம் நிலையம் வருவதற்குள் படித்து முடித்துவிட்ட ஒரு கவிதைத் தொகுப்பு. ‘இக்கவிதைகள் சில வருடங்களுக்கு முன்பாகவே வந்திருக்க வேண்டும்’ என்ற பொன்.அனுர வின் பதிப்புரையோடும், ‘முனுசாமியின் கவிதைமொழி அழுத்தமானது’ என்ற கனிமொழியின் அணிந்துரையோடும், ‘சரியான அரசியல் புரிதலையும், அழகியல் உணர்வையும் பெற்றிருக்கும் யாழினி முனுசாமியின் கவிதைகள்’ என்ற பா. இரவிக்குமாரின் ஆய்வுரையோடும் வெளிவந்திருக்கும் தொகுப்பு இது. கவிஞர் யாழினி முனுசாமியின் முதல் கவிதைத் தொகுப்பாக இது அறியப்படுகிறது. ஆனால், மொழி ஆளுகையும், கவிதை நடையும் கவிதையோடு அவருக்கிருக்கும் நெடுநாளைய உறவை உறுதிசெய்கின்றன.
உனது அசைவுகளில்
நிரம்பியிருக்கிறது
எனக்கான மகிழ்ச்சி
என, குழந்தைக்கான கொஞ்சலோடு தொடங்குகிறது (குழந்தைக்கான கவிதையாகத்தான் இருக்கவேண்டும்) கவிதைப்பயணம். முதல் கவிதை குழந்தைக்கு அடுத்த கவிதை மனைவிக்கு (பனிக்கட்டி வைப்பு ) என்று வகைப்பிரித்தாலும், நவீன ஊடகத்தின் தாக்கம், இயற்கைவளம் அழிவு, கிராம சூழல், காதல், வறுமை, முதிர்கன்னிகள், கல்வி நிலையங்களின் நிலை, இயற்கை பேரழிவு, நாகரிக தேடல், நகர வாழ்க்கையில் நிறைவு நிறைவின்மை, உறவுகள், ஊணமுற்றோர் என, பலதரப்பட்ட சமூக காரணிகளும், சிக்கல்களும் இவர்தம் கவிதைகளில் கருப்பொருள்களாகின்றன.
மழைக்காலங்களில்
இடிந்துவிழும் வீடுகளைக் கொண்டது
எங்கள் சிற்றூர்
இந்தப் பெருமழையில்
யார் வீடோ
என இரங்குதலில், நகரத்தில் உடலால் மட்டுமே வாழும் தன்மையைக் கவிஞர் காட்டுகிறார்.
போனவருடம்
புதுப்பாவாடையைத் தூக்கிச் செருகி
மிளகாய்ப்பட்டாசு வெடித்த சிறுமி
இவ்வருடம்
தலை தீபாவளிக்கு வருவதைக் கண்டு
உள்ளுக்குள் முனகுகிறாள்
பிருந்தா அக்காவின் அம்மா
என்ற முதிர்கன்னிகள் பற்றிய பதிவுகளாகட்டும்,
சாணி வாரிக்கொட்டினாலும்
ஊசிப்போன பின்தான் கொடுப்பாள்
ஆண்டச்சி
அடிச்சத்தம்/
அழுகைச் சத்தம்தான்
இங்கு வெடிச்சத்தம்
எவன் செத்தாலென்ன
வறுமை மட்டும் மார்கண்டேயனாக இருந்துகொண்டு?
என்ற வறுமை, சமூக ஏற்றத்தாழ்வு பற்றிய பதிவுகளாகட்டும், இவரின் எளிய மொழி நடை கவிதைக்கு பலம் சேர்த்திருப்பது உண்மை.
பச்சை முடி செழித்த மலை/ கல்குவாரி முதலைகளால்/ மெல்ல மெல்ல விழுங்கப்பட்டு /ஊனமாய்க் காட்சியளிக்கிறது
என, இயற்கை அழிவினைப் காட்சிப்படுத்தும் கவிஞர்,
கொள்ளையர்களுக்குத்
தன் உறுப்புகளைக் களவுகொடுத்து
பலவீனமாய் மெலிந்திருக்கும்
ஏழையைப் போல்
என, ஏழைக்கு அம்மலையை ஒப்புமை படுத்துகிறார். அதோடு, ‘எரிமலைகளை / யாரும் நெருங்குவதில்லை’ எனத் தன் தீர்வையும் முன்வைக்கிறார்.
கத்துதல்
முட்டுதல்
உழுதல்
இனப்பெருக்கம் செய்தல்
இப்படி அனைத்தம்சமும் உண்டு
ஆனாலும் ஏனோ
கறுப்பு மாடுகள் எளிதில் விலைபோவதில்லை
என்பதாக, தன் சமூக அரசியல் புரிதலையும் ஆங்காங்கே தெளித்துவிட்டுச் செல்லவும் கவிஞர் தவறவில்லை.
தான் வாழும் சூழலை அதன் இருப்போடும், இருமாப்போடும், வார்த்தைகளை மறைக்காத இசையின் இனிமையோடு பதிவு செய்தல் கவிதையின் வெற்றியாக அமைகிறது. கவிஞரின், கல்வி நிலைங்கள் பற்றிய கவிதையிலும், இன்னும் சிலவற்றிலும் இத்தன்மை வெளிப்பட்டு நிற்பதைக் காணமுடிகிறது. வலிந்து மேற்கொள்ளும் உவமைகளுக்கும், உருவகங்களுக்கும் இங்கு வேலையற்றுதான் போகின்றன.
பாட்டியைக் கொடும்மைக்காரி என்ற அம்மா
உணரவில்லை
தானும் அவளாகவே
மாறிவிட்டிருப்பதை
என்பதில், உறவுநிலைச் சிக்கல்களையும்,
குடித்துத் தீர்த்திருந்தது
குடி உன்னை
இப்போதெல்லாம்
குடித்து விழுந்துகிடப்பவரைக் கண்டால்
பதைக்கிறது மனம்
என்பதில், குடியால் ஏற்பட்ட தன் குடும்ப பாதிப்பையும் பதிவுசெய்கிறார். கவிதை தோன்றும் காரணிகளுள் ‘இழப்பு’ என்பது முதன்மை பெறுகிறது. ஆம்,
இழந்துவிட்டதன் மீதுதான்
ஆசை அதிகரிக்கிறது
எப்போதும்
நேற்று அப்பா
இன்று நீ
என்கிறார் கவிஞர். ‘சுயம்’ நம்மை ஆற்றுப்படுத்துவது, அறியவைப்பது ஆயினும், துன்பத்தில் ஆழ்த்துவதும் அதுவே.
மாலை மட்டும் மாற்றிக்கொள்வோமென்றேன்
தமிழ்ப்பெண்ணின் அடையாளம் தாலி யென்றீர்கள்
சீர் கொடுப்பது எனக்கு விலைகொடுப்பதென்றேன்
பெற்றோரின் கடமையென்றீர்கள்
ஒரு புரட்சித் தினத்தில்
எளிமையாய் முடிக்கலாமென்றபோது
‘எங்களுக்கு கௌரவமிருக்கிறது’ என்றீர்கள்’
எப்படியோ
ஐந்து பைசா வட்டிக்கு வாங்கி
ஒலிம்பிக் கார்ட்ஸ்
புது மண்டபம்
கச்சேரியென
ஒரு சுபதினத்தில்
ஊர்மெச்ச முடித்தாயிற்று
வட்டி கட்டுவதில் திணருகிறது வாழ்க்கை
சமூகத்தின் மிக மிக்கிய காரணி மனிதன் என்றாலும், தனி மனிதனே சமூகம் அல்ல என்பது தெளிவு. இங்கு சமூகத்திற்காக சுயத்தை இழத்தலும், துன்பத்தில் வீழ்தலும் இயல்பாகிறது. அதவே கவிதையாகிறது.
நத்தையாய் நகரும்
அரசுப் பேருந்து
எப்போது சென்று சேருமோ?
தூரம் கடந்துவந்து மிரட்டுகிறது
அதிகாரத்தின் குரல்
ஒரு நிமிடம் தாமதித்தாலும்
கரைந்து போகக்கூடும்
என் குடும்பத்தின் ஒருநாள் உணவு
என்பதில், மாத ஊழியனின் வாழ்வியல் நெருக்கடிகளும், முதலாளித் துவத்துக்குத் தம்மை உயர்த்திக்கொண்டுவிட்ட அதிகார வர்கத்தின் போக்கும் கவிதைக் கருவாகின்றன.
மனைவிக்கு மரியாதை செய்வதாய் (‘பெண்ணியம் பேசுவதாய்...’ என்றும் கொள்ளலாம்) அந்தரங்கம் பேசும் இடத்தையும் ( தூக்கம் தளும்பும் உன்னை... - ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்றும் இதனைக் கொள்ளலாம்) , நகரத்தின் பற்றுதலுக்கான காரணத்தை வலிந்து திணிக்கும் இடத்தையும் (காக்கை குருவி ...) தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இருத்தலை அதன் இயல்போடு பதிவுசெய்திருக்கும் இக்கவிதைகள் காலம் தாழ்த்தி வெளிவந்தாலும், செறிவையும், சீர்மையையும் இழந்துவிடவில்லை. எதார்த்தங்கள், எளியமொழி நடையின் கைகோர்ப்போடு வலம் வருகின்றன. இவை தனிமனிதன் சார்ந்த பதிவுகளாயினும், நிகழ்கால சமூகத்தின் முகத்தை அதன் உன்னதத்தோடும் ஊணத்தோடும் எதிரொளிக்கின்றன.
உதிரும் இலைகள் குறித்து
எந்தக் கவலையுமில்லை
துளிர்த்துக்கொண்டேயிருக்கின்றன
புதிய புதிய தளிர்கள்
நூல் - உதிரும் இலை
ஆசிரியர் - யாழினி முனுசாமி
வெளியீடு - மித்ர ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ், சென்னை
பழந்தமிழர் தொழில்நுட்பம் - ஆய்வு நூல்
சங்க இலக்கியத்தில் மேலாண்மை - ஆய்வு நூல் குறித்து
காலத்தின் அடிப்படையில் உள்ளடக்கம் அமைக்கப்பட்டுள்ளது. பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல், தொழில்சார் மேலாண்மை(3), இருபதாம் நூற்றாண்டுப் படைப்புகள் குறித்த ஆய்வுகள்(5), அறிவியல் தமிழ் ஆய்வுகள்(1), இணைய தமிழ்(2) என்று நாளது வரையான தமிழ் இலக்கிய வளர்ச்சிப் படிநிலைகள், தமிழ் ஆய்வின் வளர்ச்சி ஆகியவற்றை எடுத்துக்காட்டும் வகையில் தலைப்புகள்இடம்பெற்றுள்ளன.
முதல் மூன்று கட்டுரைகள் சங்க இலக்கியங்கள், திருக்குறள், இரட்டைக் காப்பியங்கள் ஆகிய பழந்தமிழ் நூல்களைக் களங்களாகக் கொண்டமைந்துள்ளன. இக்கால கட்டுமானத் தொழில்நுட்பம், வேளாண் மேலாண்மை, நீர் மேலாண்மை ஆகியவற்றில் பயன்பாட்டில் இருக்கும் தொழில்நுட்பங்களுக்குப் பழந்தமிழர்தம் தொழில்நுட்பங்களே அடிப்படையாக இருக்கின்றன என்பதை இக்கட்டுரைகள் தக்க சான்றுகளோடு உலகிற்கு உணர்த்துகின்றன.
அறிவியல் தமிழ்த் துறையில் வெளிவந்துள்ள ஆய்வுகளின் ஆவணமாக ‘அறிவியல் தமிழ் ஆய்வுகள்’ கட்டுரை திகழ்கிறது. உலகத் தமிழரை ஒன்றிணைக்கும் இணையத் தமிழின் வளர்ச்சியை ‘இணையத் தமிழ் இலக்கியம்’, ‘இணையத்தமிழும் எதிர்காலவியலும்’ ஆகிய கட்டுரைகள் இயம்புகின்றன. இணையத்திலும் இணையற்று விளங்கும் தமிழின் ஆட்சியை இணைய தமிழ், தமிழ் இணைய பக்கங்கள், தமிழ் இணைய இதழ்கள், தனியார் பக்கங்கள்/வலைப்பூக்கள், வெளிப்பாட்டு உத்திமுறை, கணினி மொழிநடை ஆகிய தலைப்புகளின் விவரித்துள்ளதோடு, பயன்பாட்டு நிறைவு-நிறைவின்மை, அதில் உள்ள தடைகள் ஆகியவற்றையும் சுட்டி, தீர்வுகள் குறித்த சிந்தனைகளையும் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் - ஆ. மணவழகன்
வெளியீடு - காவ்யா பதிப்பகம், சென்னை
ஆண்டு - 2007
மணவழகன் கவிதைகள் - 2
பாருங்க சார்
தெய்வப் புலவர் வள்ளுவர்
எழுதியது சார்
வாழ்க்கைக்குத் தேவையான
வழிகளைச் சொல்வது சார்
மூன்று பெரும்பகுப்புகள்
நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்கள்
ஆயிரத்து முந்நூற்று முப்பது
குறள்களைக் கொண்டது சார்
வெளியில் வாங்கினா
இருபத்தி ஐந்து ரூபா சார்
கம்பெனி விளம்பரத்துக்காக
வெறும் பத்து ரூபா சார்
------ ------- ------ ---- -----
தொடர்வண்டிச் சிறுவன்
மலிவு விலையில் விற்றுச் செல்கிறான்
திருக்குறளோடு வாழ்க்கையையும்
கழிவுநீர் ஊற்றுகள்
அலங்காரத்திற்கு மட்டும் அணிவகுக்கும்
பறவைகள் அமர்ந்தறியா
செயற்கை மரங்கள்
முளைக்காத தானியங்கள்
விதை கொடுக்காத கனிகள்
உயிரில்லா முட்டைகள்
தாய் தந்தை உறவறியா
குளோனிங் குழந்தைகள்
ஆணிவேரில் வெந்நீர் ஊற்றும்
அறிவியல் வளர்ச்சிகள்
ஆடுகளை மலையில் விட்டு
அருகிருக்கும் கொல்லையில் கதிரொடித்து
பால் பருவக் கம்பைப் பக்குவமாய் நெருப்பிலிட்டு
கொங்கு ஊதித் தாத்தா கொடுத்த
இளங்கம்பின் சுவைக்கு
ஈடு இது என்று
எதைக் காட்டி ஒப்புமை சொல்வேன்
பச்சைக் கம்பு தின்றதே இல்லை
ஆதங்கப்பட்ட தோழிக்கு
புளிக்குழம்போடு
அரைத்த கேழ்வரகின்
ஆவிபறக்கும் உருண்டை
இளம் முருங்கைக்கீரைக் கூட்டோடு
இடித்துச் சமைத்த கம்பஞ் சோறு
நாட்டுப் புளிச்சை கடைசலோடு
புதுச் சோளச்சோற்றுக் கவளம்
இம்முறையேனும் கெங்கவல்லி சென்றதும்
ஆக்கித்தரச்சொல்லி
அம்மாவிடம் கேட்கவேண்டும்
ஊர் கிளம்ப ஒருவாரம் முன்பே
நாக்கு நங்கூரம் போடும்
ஏளனப் பார்வைக்கு இலக்காகும்
உயிர்க்கொல்லிப் பொடிகளால் உருவான
மசாலா குழம்பும்
உயிர்ச்சத்து உறிஞ்சப்பட்ட
கடையரிசிச் சோறும்
புள்ளைங்க வந்தா மட்டுந்தான்
நல்ல சோறு சாப்பிட முடியுது
அப்பா சான்றிதழ் தருவார் , ஊரில்
எனக்காகச் சமைக்கப்பட்ட
கடை அரிசிச் சோற்றுக்கும்
உயிர்க்கொல்லி பொடிகளால் உருவான
அதே மசாலா குழம்புக்கும்
இரைப்பையைத் தொடாமலேயே செரிக்கும்
தொண்டைக்குழியில் உருட்டி வைத்த
என் களி கம்பஞ்சோற்று ஆசை
வெள்ளி, 1 ஏப்ரல், 2011
மணவழகன் கவிதைகள் - 1
புலிகளைக் காட்டி
மனிதர்களை
வேட்டையாடினார்கள்
காந்தியைப் பெற்றவர்களும்
புத்தரை ஏற்றவர்களும்
முள்ளிவாய்க்கால்
கரையும் காற்றும் சொல்லும்
அவர்கள்
வீரத்தையும் தியாகத்தையும்
அண்ணா நினைவிடமும்
அருகிருக்கும் கடலும் சொல்லும்
எங்கள்
துரோகத்தையும்
கையாலாகாத தனத்தையும்
பிரபாகரன்
ஆயிரம் ஆண்டுகளுக்கு
ஒருமுறை பூக்கும்
அபூர்வ மலர் நீ
இரு நூற்றாண்டின்
ஈடு இணையில்லா
ஒற்றை அதிசயம் நீ
இராஜராஜன், செங்குட்டுவன்
நெடுஞ்செழியன் ஒட்டுமொத்த
உருவம் நீ
எதிரிக்கு அடங்கிப்போகாது
என்றும் அணைந்துபோகாது
உலகத் தமிழனின் உயிர் மூச்சு நீ
உலகுக்குப் புதிரானவன்
உறவுக்குக் கதிரானவன்
தமிழின் கொடை நீ
தமிழனின் படை நீ
கரையான்களாலும் கருணாக்களாலும்
அரிக்க முடியா விருட்சம் நீ
வீரம் செறிந்த விதை நீ
கடல்நீரைக் கால்வாய்
குடித்துவிடாது
வருவாய்
தமிழின் அகம் நீ
அகத்தில் புறம் நீ