திங்கள், 25 ஏப்ரல், 2011

கவிஞர் ஆ மணவழகனின் கூடாகும் சுள்ளிகளை முன்வைத்து

மழைக்கு நனையும் குடை..


முனைவர் கு. சிதம்பரம்
உதவிப் பேராசிரியர்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

              வீட்டைக் கட்டிப்பார் கல்யாணத்தைச் செய்துபார் என்கிறது முதுமொழி. சுள்ளிகளைப் பொறுக்கியெடுத்துக் கூடுகட்டும் காகத்தின் வலியும் வலிமையும், தூக்கணாங்குருவியின் தொழில்நுட்பமும் அறிவியலும், சிலந்திப் பூச்சியின் ஓவியமும் அழகுணர்ச்சியும் அவை கட்டும் வீடுகளில் காணலாம். சுள்ளிகளைத் தேடியெடுத்து உயரமான மரக்கிளைகளின் நடுவில் கட்டும் காகத்தின் வீடு அடைமழை பெய்தாலும், ஆடி மாதக் காற்றில் அம்மி பறந்தாலும் ஆடாமலும் அசையாமலும் இருக்கும். அதிலிருந்து ஒரு சுள்ளிகூட கீழே விழுந்துவிடாது. அதேபோல், தூக்கணாங்குருவியின் தொழில்நுட்பம் பற்றி சங்க இலக்கியப் புலவர்களுக்குக்கூட வர்ணிக்க வார்த்தைகள் இன்றிப் போயிருக்கலாம். அந்தரத்தில் அழகான அடுக்குமாடி கட்டி அதிலொரு விளக்கு வைத்து ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் பறவையைப் பார்த்தால் அதிசயக்க முடியாமல் இருக்க முடியுமா?

                            ஆயிரம் தாஜ்மகால் அதிசயம்
                            ஒற்றைத் சித்தனின் உயிர்த்தவம்

                            தூக்கணாங்கூடு

என்று தூக்கணாங்குருவியின் கவித்திறத்தைக் கண்டு அதிசயத்தின் உச்சத்துக்கே சென்றிருக்கிறார் கவிஞர் ஆ.மணவழகன் அவர்கள்.

        பட்டுப்புழுக்களே நீங்கள் பின்னிக்கொண்டிருப்பது
       பட்டு இல்லை
       நீங்கள் பின்னிக்கொண்டிருப்பது கவிதைகள்
       உங்கள் கவிதைகள் எவ்வளவு மென்மையாக உள்ளன
      எவ்வளவு வசீகரம், எவ்வளவு நேர்த்தி,
      எவ்வளவு நுட்பம், எவ்வளவு...
      உங்களை வர்ணிப்பதற்கு வார்த்தைகள்
      கிடைக்கவில்லையே ஏன்?
      --------------------------------------------
      ஆகா உங்கள் கவிதைகள் இயல்பானவைதான்
      ஆகா உங்கள் கவிதைகள் இயற்கையானவைதான்
      நீங்கள் எழுப்பிக் கொண்டிருக்கும்
      கலைநயமிக்க அரண்மனை
     ஆகா உங்களுக்காக மட்டும்தான்!  
                                                   (தமிழில் கு. சிதம்பரம்)

என்று சீனக் கவிஞர் குவோ மொடுவோ பட்டுப்பூச்சியின் கவித்திறத்தைக் கண்டு அதிசயத்ததை ஒப்புநோக்கினால் கவிஞருக்குள்ள பொதுத்தன்மையை அறிய முடிகிறது.

          தேனீக்கள் முதல் பறவைகள்வரை தங்கள் வாழ்நாளில் தங்களுக்கான வீட்டைக் கட்டி அழகு பார்த்துவிடுகின்றன. ஆனால், மனிதர்களுக்கு வீடு என்பது இந்த நூற்றாண்டிலும் கனவாகவே உள்ளது. எலி வளையானாலும் தனி வளை வேண்டும் என்கிறது முதுமொழி. தனக்கென ஒரு வீடு கட்டுவதில் உள்ள நிகழ்கால சிக்கல்களை ‘கனவு சுமந்த வீடு’ என்ற கவிதை காட்டுகிறது.

                            கடைக்கால் எடுக்கையில்
                            ஒதுக்கிவிட்ட வேப்பங்கன்று
                            தளிர் தாங்கி
                            நிழல் பரப்பி
                            கூடு சுமக்கும் மரமாய்
                            கனவு இல்லமோ
                            இன்னும் கடைக்காலாய் 

இன்று எத்தனையோ வீடுகள் கடைக்காலோடு நின்றுபோவதையும், தரைமட்டத்தோடு நின்றுபோவதையும் பார்க்கிறோம். இவ்வாறு கட்டிமுடிக்கப்படாமல் பாதியிலேயே நின்றுபோகும் வீடுகளைக் காணும்போதெல்லாம் வாடிவிடும் கவிஞரின் உள்ளம் இதன்மூலம் தெரிகிறது.

                 இவ்வாறு, பாதியிலே நின்ற வீட்டைத் தூக்கி நிறுத்த வங்கியில் நில அடமானம் வைத்து கடன்பெற்று கட்டிமுடித்தால், வட்டியோடு பணத்தை வைத்துவிட்டு வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்துகொள் என்று கடன் கொடுத்தவன் வீட்டைப் பூட்டிச் செல்லும் நிகழ்கால அவலத்தையும் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார் கவிஞர்.

                          காட்டின் பத்திரம் வைத்து
                          ஏர் மாடுகளைக் கலப்பையோடு விற்று
                          ஆசை ஆசையாய் வளர்த்த மரங்களையும்
                          அக்கா வளர்த்த ஐந்தாறு ஆடுகளையும்
                          அடிவிலைக்கு அம்போவென்று கொடுத்து
                          அடுத்த பருவத்திற்கு எடுத்து வைத்த
                          விதை நெல்லையும்
                          அம்மாவின் ஒற்றைக் கொடியையும் விற்று
                          வீடு கட்டினார் அப்பா
                          குடிபுகுமுன் ஓலை வந்தது
                          இம்முறையும் தவணை தவறினால்
                          வீடு தாழிடப்படும் என்று

இவ்வாறு ஆயிரம் சிரமங்களுக்கு ஆட்பட்டு கட்டி முடிக்கப்படும் வீடுகளுக்குக் குடிபோகுமுன் எண்ணற்ற சிக்கல்கள். மாநகராட்சிகள் ஒருபுறமும் இயற்கை சீற்றங்களான சுனாமி, பூகம்பம் போன்றவை மறுபுறமும் கனவு வீடுகளைக் குறிவைத்து அப்புறப்படுத்துகின்றன. ஒரே நிமிடத்தில் மாடிவீடுகளைத் தரைமட்டமாக்கி மீண்டும் நடுத்தெருவிற்குக் கொண்டுவந்து விரட்டிவிடுகின்றன. இதைக்கண்ட கவிஞர் ‘ஒட்டடை’ என்ற கவிதை மூலம் தனது கண்ணீரைக் கடலில் கலந்திருக்கிறார்.

                            ஐயோ
                            துடைத்துவிடாதே
                            ஒட்டடை அல்ல வீடு

                            சுவற்றில் சிலந்தி


             நிகழ்கால மருத நிலத்து மக்களின் புற வாழ்க்கை இன்ப துன்பங்களைக் கண்ணாடி அணியாமலேயே கண்டுகொள்ளும் அளவிற்குத் தனது கவித்திறத்தாலும் கவிதை மொழியாலும் பூமி உருண்டையை இயக்கும் கடவுளைச் சாட்டையால் அடித்தது போன்று வாசகர்கள் உளத்தில் ஏற்படுத்தத் தவறவில்லை. அதேபோல,

                               ----------------
                               என் முன்
                               கூட்டை இழந்த பறவையாய் நீ
                               உன்முன்
                               பறவையை இழந்த கூடாய் நான்

என, கூட்டை மையமாக வைத்து அக வாழ்க்கையின் அழகியலையும் தலைவன் தலைவியின் காதல் வாழ்க்கையையும் ‘பறவை இழந்த கூடு’ என்ற கவிதை மூலம் வெளிப்படுத்தியிருப்பதைக் காணலாம்.


     கூடாகும் சுள்ளிகள் என்ற கவிதைத் தொகுப்பின் கவிதைகளில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் ஒரு கதைச் சொல்கிறது, மக்களின் வாழ்க்கையைச் சொல்கிறது.ஆட்டுக்குட்டிகளைப் பாதுகாக்கும் குடாப்புப்போல மக்களை பாதுகாக்கத் துடிக்கிறது கவிஞரின் மனம். மழைக்கு நனையும் குடைபோல இவரது கவிதைகள் சமூக அவலத்திற்கு நனைந்துகொண்டிருக்கின்றன.ஒவ்வொருவரும் படித்துப் பயன்பெறும் வகையில் பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டிய கவிதைகள் இவை.

நூல்          – கூடாகும் சுள்ளிகள் – கவிதைத் தொகுப்பு
ஆசிரியர்      - கவிஞர் ஆ.மணவழகன்
வெளியீடு     – அய்யனார் பதிப்பகம், சென்னை 88, 2010. 

கருத்துகள் இல்லை: