சனி, 2 மார்ச், 2024

RESEARCH AND PUBLICATION ETHICS, Dr.A.MANAVAZHAHAN

 

Research and Publication Ethics

Authors: Dr.A.Manavazhahan, S.Malathi

Publication:

Ayyanar Publication, 
32, Ramakrishnapuram, 
2nd St. Adambakkam, 
Chennai -600 088
Cell: 9789016815, 9080986069
Rs. 260

நூலறிமுகம்

முனைவர் ஆ.மணவழகன்
பேராசிரியர்
சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தரமணி, சென்னை - 600 113.

      ஆராய்ச்சியில் கருத்துத் திருட்டு என்பது தற்பொழுது பரவலாகப் பேசப்படுகிறது. ஆராய்ச்சிகளும் அதன் வெளியீடுகளும் மின்ணெண்மம் ஆக்கப்படாத சூழலில், கருத்துக் கவர்தல் அல்லது கருத்துத் திருட்டு என்பது கவனிக்கப்படாமல் இருந்தது அல்லது பெரிதுபடுத்தப்படாமல் இருந்தது. ஆனால், தற்போதைய சூழலில் ஓர் ஆய்வாளர் மேற்கொண்ட ஆய்வு பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டு, வாய்மொழித் தேர்வு நடைபெற்ற கணமே அந்த ஆய்வேடு பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதேபோல தற்போது, ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிடும் இதழ்களும் மின் இதழ்களாக, இணைய இதழ்களாக வெளிவரத் தொடங்கிவிட்டன. இச்சூழலில் ஒருவரின் ஆய்வேடோ அல்லது ஆய்வுக் கட்டுரையோ வெளிவந்த உடனேயே உலகின் எந்த மூலையில் இருந்தும் வேறொருவர் அதனைக் காணும் வழிவகை ஏற்பட்டுள்ளது. இவற்றை வெளியிடும் நிறுவனங்களும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல், திறந்த அணுகல் (Open Access) முறையில் பார்வையாளர் அதனைப் பயன்படுத்த அனுமதிக்கின்றன. எனவே, ஒருவர் மேற்கொண்ட ஆய்வுகளின் தன்மைகள், ஆய்வு நெறிமுறைகள், ஆய்வுப் போக்கு, முடிவுகள் போன்றவற்றை எளிதில் பிறர் அறிந்து கொள்ளமுடிகிறது. ஆகையால், இன்றையச் சூழலில் கருத்துத் திருட்டு என்பது எளிதில் கடந்துபோக முடியாத ஆய்வுப் பிறழ்வாக இருக்கிறது.

  பல்கலைக்கழகங்கள், ஓர் ஆய்வாளர் தன்னுடைய ஆய்வில் மற்றவர்களுடைய கருத்துகள், மூலங்கள் போன்றவற்றை எந்த அளவு பயன்படுத்தலாம் என்கிற நெறிமுறைகளை வகுத்துள்ளன. அந்த வரையறையை மீறுகிறபொழுது கருத்துத் திருட்டு என்ற அடிப்படையில் ஆய்வேடு மாற்றியமைக்கப் பணிக்கப்படுகிறது அல்லது அதன் ஏற்பளிப்பு நீக்கம் செய்யப்படுகிறது. அதோடு, நெறியாளரும் பல்கலைக்கழகம் வழங்கியுள்ள நெறியாளர் தகுதியை இழக்கிறார். அறிவியல், மருத்துவம் போன்ற துறைகளில் இந்த நடைமுறைகள் நீண்ட காலமாகவே மிகவும் கூர்மையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. அண்மைக் காலமாக இலக்கியம், கலைகள் முதலான துறைகளை உள்ளடக்கிய மானுடவியல் ஆய்வுகளிலும் இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. எனவே, ஆய்வு முன்னெடுப்பில் அறநெறிமுறைகளை மிகவும் கவனமுடன் பின்பற்றவேண்டிய கட்டாயம் ஆய்வாளர்களுக்குத் தற்போது ஏற்பட்டுள்ளது.

          தமிழியலில் இதுவரை வெளிவந்துள்ள முனைவர் மற்றும் இளம் முனைவர் பட்ட ஆய்வேடுகளைத் தொகுக்கிற பணியில் ஈடுபட்ட பொழுது தமிழாய்வுகளில் ஆய்வு அறநெறிமுறை மீறல்கள் பரவலாக இருப்பதை அறிய முடிந்தது. ஒரே பல்கலைக்கழகத்தின் வழி ஒரே தலைப்பில், ஒன்றுக்கும் மேற்பட்ட ஆய்வேடுகள் வெளிவந்துள்ளதைக் காண நேர்ந்தது. முறையான ஆய்வியல் நெறிமுறைகள் பின்பற்றப்படாததும் ஆய்வுப் பொருண்மைகள் திறந்த அணுகல் முறையில் மற்றவர்களைச் சென்றடைய வழிவகை இல்லாததும் இதற்கான முதன்மைக் காரணங்களாக இருக்கின்றன.  குறிப்பாக, தமிழ்மொழி ஆய்வுகளையும் ஆய்வுகளுக்கான மூலங்களையும் ஒருங்கிணைக்கும் ஏற்பளிக்கப்பட்ட ஓர் தரவுத்தளம் தமிழுக்கு இதுவரை இல்லை. அதாவது, வெப் ஆப் சயின்ஸ், ஸ்கோபஸ் போன்றவை  தமிழுக்கு இல்லை.

          அனைத்துவகை ஆய்வுகளையும் ஆய்வு மூலங்களையும் இணையத்தில் திறந்த அணுகல் முறையில் வெளியிடுகிற சூழலில் இதுபோன்ற குழப்பங்களும் ஆய்வுத் திருட்டுகளும் குறையும். எனினும், ஆய்வுகள் மேற்கொள்வதற்கான, ஆய்வு முடிவுகளை வெளியிடுவதற்கான நெறிமுறைகள் முறைப்படுத்தப் படுவதும் அவை, ஓர் ஆய்வாளரால் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்வதுமே ஆய்வுத் தரத்தை உயர்த்துவதற்கு வழிவகுக்கும். திறனாய்வு போக்குகளை அறிமுகப்படுத்திய மேலை நாடுகளும்கூட ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு நெறிமுறைகளைக் கால ஓட்டத்திற்கு ஏற்ப சீரமைத்து வருகின்றன என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

          தமிழைப் பொறுத்தவரையில், ‘படைப்புத் தமிழ்நெடிய வரலாற்றைக் கொண்டது; ஆனால், ‘ஆய்வுத் தமிழின்வரலாறு ஒரு நூற்றாண்டுக்கு உட்பட்டது. மேலும், ஆய்வுத் தமிழுக்குச் சில வரைமுறைகள் இருந்தாலும் ஆய்வு வெளியீடுகளுக்கு முறையான வரையறைகள் இல்லை; இருக்கும் சில நெறிமுறைகளும் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. இந்நிலையில், உலகளாவிய தமிழ் ஆய்வுகளின் போக்குகளையும் ஆய்வியலில் பின்பற்றவேண்டிய நெறிமுறைகளையும் வகுத்தளிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் போன்ற தமிழாய்வு நிறுவனங்களுக்கு உள்ளது. மேலும், தமிழில் ஆய்வுகளுக்கானத் தரவுத்தளங்களையும் ஆய்வு மூலங்களையும் உருவாக்க வேண்டிய கட்டாயத் தேவையும் தற்போது எழுந்துள்ளது. அறிவியலுக்கும் மருத்துவம், வணிகம் போன்ற பிற துறைகளுக்கும் உள்ளதைப்போல, ஏற்பளிக்கப்பட்ட இணையத் தரவுத்தளம் தமிழுக்கு இதுவரையில் இல்லை என்பது ஆய்வு ஓட்டத்தில் தொய்வே. எனவே வெப் ஆப் சயின்ஸ்(web of science) போல, ‘வெப் ஆப் தமிழ்  (web of tamil) உருவாக்கப்பட வேண்டியது தமிழியல் ஆய்வில் தற்போதைய முதன்மைத் தேவையாக இருக்கிறது.

          இந்நூல், ஆய்வுகள் மேற்கொள்வதற்கான நெறிமுறைகள், ஆய்வுகளை அறிக்கைகளாகவும் கட்டுரைகளாகவும் வெளியிடுவதற்கான அறங்கள், பதிப்பகங்கள், ஆய்வு இதழ்கள், இணைய இதழ்கள் போன்றவை பின்பற்றவேண்டிய நெறிமுறைகள் போன்றவற்றை இயம்புகிறது. ஆய்வுக் கட்டுரைகள் வடிவமைப்பு மற்றும் உள்ளடக்கம், ஆய்வுக் கட்டுரைகள் வெளியீட்டு நெறிமுறைகள், நெறிமுறைகளை முறைப்படுத்தும் எம்எல்ஏ  மற்றும் ஏபிஏ முறை போன்றவற்றைச் சான்றுகளோடு தெளிவுபடுத்துகிறது. கருத்துத் திருட்டு, அதன் விளைவுகள், தவிர்க்கும் முறைகள், வெளியீட்டு அறங்கள் போன்றவற்றை விளக்குகிறது. தரவுத்தளங்கள் குறித்தும் அதன் தேவைகள் குறித்தும் தமிழியலில் தரவுத் தளங்களையும் ஆய்வு மூலங்களையும் உருவாக்க வேண்டியதன் தேவை குறித்தும் வலியுறுத்துகிறது. 

          அறிவியல், மருத்துவம் போன்ற துறைகளில் பின்பற்றப்படும் நடைமுறைகளை முழுமையாக கலையியலுக்குப் பின்பற்றுவது கடினம். எனவே, அவற்றில் தேவையானவற்றைத் தேர்ந்தெடுத்து மொழி, இலக்கிய ஆய்வுகளுக்கானப் புதிய ஆய்வு மற்றும் வெளியீட்டு அறநெறிமுறைகளை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது. அவ்வகை நெறிமுறைகளை உருவாக்கி அதைப் பொதுமையாக்க வேண்டிய முயற்சியை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் முன்நின்று செயல்படுத்த வேண்டும் என்பது என் விழைவு.

          நிதிநல்கைக் குழுவின் அறிவுறுத்தலுக்கு இணங்க ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு அறநெறிமுறைகள் என்கிற புதிய பாடத்திட்டம் தற்போது பல்கலைக்கழகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்குத் தமிழிலோ, ஆங்கிலம் போன்ற பிற மொழிகளிலோ பாடத்திட்ட வடிவமைப்புகளுக்கு ஏற்ற முழுமையான பாடநூல் இதுவரையில் வெளிவரவில்லை. இணையத்தில் கிடைக்கின்ற சிற்சில தகவல்களின் அடிப்படையிலேயே பல்கலைக்கழகங்கள் பலவற்றிலும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ஆய்வு மாணவர்கள் முனைவர் பட்ட பகுதி1 தேர்வையும் எதிர்கொள்கின்றனர்.  இந்நிலையில் விரைவுத் தேவையின் அடிப்படையில் 2022ஆம் ஆண்டு ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு அறநெறிமுறைகள்என்ற இந்நூலினைக் கொண்டுவந்தோம். தற்போது, சீர்மை செய்யப்பட்ட பாடங்களோடும் தேவையான விரிவுபடுத்தப்பட்ட தகவல்களோடும் இந்த மறுபதிப்பு வெளிவருகிறது.

          தமிழ்ப் பணிகளுக்கு ஊக்கமளித்து, இந்நூலுக்கு சிறந்ததொரு அணிந்துரையை வழங்கியுள்ள, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனனத்தின் மேனாள் இயக்குநர் (கூ.பொ.)  முனைவர் ந.அருள் அர்களுக்கும் நூலாக்கத்தில் பெரிதும் துணைநின்ற ஆய்வாளர் திருமதி ச.மாலதி அவர்களுக்கும் நூல் சீர்மைக்கு உதவிய முனைவர் க.ஜெயந்தி, முனைவர் நயம்பு.அறிவுடைநம்பி ஆகியோருக்கும் என் நன்றி.

அன்புடன்,

ஆ.மணவழகன்


ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு அறநெறிமுறைகள்

பொருளடக்கம்


அலகு - ஒன்று : ஆராய்ச்சி மற்றும் அறநெறிமுறைகள் அறிமுகம்       

 o கல்வியியல் ஆராய்ச்சியின் பொருள்-பண்புகள்- நோக்கங்கள்

o கல்வியியல் ஆராய்ச்சியின் தேவையும் இன்றியமையாமையும் 

o      o  கல்வியியல் ஆராய்ச்சியின் வாய்ப்புகள்

o      o  அறநெறிமுறையின் பொருள் மற்றும் வகைகள்

o      o  கல்வியியல் அறநெறிமுறையின் தேவையும் இன்றியமையாமையும்

o      o  அறிவியல் மற்றும் ஆராய்ச்சி தொடர்பான அறநெறிமுறைகள்

 

அலகு - இரண்டு: கல்வியியல் ஆராய்ச்சியில் நெறிமுறை சிக்கல்களைக்                                            கவனித்தல்                                                      

o    o  ஆராய்ச்சியில் அறநெறிமுறையின் தேவை

o    o  ஆராய்ச்சியில் அறநெறிமுறை சிக்கல்கள்

o    o  ஆராய்ச்சியில் தவறான நடத்தை

o    o  கருத்துத் திருட்டு

o    o  கருத்துத் திருட்டின் வகைகள்

o    o  கருத்துத் திருட்டைக் கண்டறியும் நுட்பங்கள்

 

அலகு - மூன்று: வெளியீட்டு அறநெறிமுறைகள் மற்றும் திறந்த அணுகல்    
                                    வெளியீடுகள்                                                          

o    o  வெளியீட்டு அறநெறிமுறைகள் - வரையறை

o    o  வெளியீட்டு அறநெறிமுறையின் இன்றியமையாமை

o    o  வெளியீட்டு அறநெறிமுறைகள் மீறல்

o    o  பொதுவானப் படைப்பு உரிமங்கள் (சிசி)

o    o  திறந்த அணுகல் வெளியீடுகள் மற்றும் முன்னெடுப்புகள்

 

அலகு - நான்கு: இதழில் கட்டுரை எழுதுதல்                                  

o   ஆய்விதழ் கட்டுரைகளின் தன்மைகள்

o    o  ஆய்விதழ் கட்டுரைகளின் வகைகள்

o    o  ஆய்வுக் கட்டுரைகளின் தன்மைகளும் எழுதும் முறைகளும்

o    o  ஆய்வுக் கட்டுரையின் உள்ளடக்கங்கள்

o    o  நூற்பட்டியல் வழங்கும் முறை

o    o  நூற்பட்டியல் பக்க வடிவமைப்பு

 

அலகு - ஐந்து: தரவுத்தளங்கள் மற்றும் ஆராய்ச்சி அளவீடுகள்       

o   தரவுத்தளம் மற்றும் தரவுத்தளத்தின் உட்கூறுகள்

o     o  தரவுத்தளத்தின் வகைகள்

o    o  ஆய்வில் தரவுத்தளத்தின் பங்கு

o    o  தரவுத்தளத்தில் அட்டவணைப்படுத்தல்

o    o  மேற்கோள் தரவுத்தளங்கள்

o    o  அறிவியல் வலை - ஸ்கோபஸ் - கூகுள் ஸ்காலர்

o    o  ஆராய்ச்சி அளவீடுகள்

o    o  அட்டவணைப்படுத்தல்

o    o  மேற்கோள் மற்றும் குறிப்பிற்கான இணைய சேவைகள்

 

 நூல்கள் பெற:

முனைவர் ஆ.மணவழகன்

9789016815, 9080986069